நாங்குநேரி வாசஸ்ரீ் மரபுக் கவிதைகள்!
(கட்டளைக் கலித்துறை)
எழுத்து எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது. மொத்த எழுத்தெண்ணிக்கை 68. நிரையசையில் தொடங்குவதால் ஒவ்வொரு அடியிலும் ஒற்று நீங்கலாக 17 எழுத்துக்கள்.
அவனிவாழ் அவரும் இவரும்..
அவரா இவராய்? அவருமா இப்படி? என்றிடுவோர்
அவரும் இவரொடு வையகம் வாழ்பவர் என்றுணரார்வ்
அவரை அவராய் அறிந்து புரிந்தவர் நல்லுறவோர்
அவரை அறியாது அல்லவை கூறுவோர் புல்லராமே.
கட்டளைக் கலித்துறை
நேரசையில் தொடங்கும் பாடல்களில் ஒற்று நீங்கலாக அடிக்கு 16 எழுத்துக்கள். மொத்த எழுத்தெண்ணிக்கை 64, நிரையசையில் தொடங்கும் பாடல்களில் ஒற்று நீங்கலாக அடிக்கு 17 எழுத்துக்கள், மொத்த எழுத்தெண்ணிக்கை 68
பணிப்பெண் வராத நகர இல்லத்தின் காலைக் காட்சி
வாலைக் கதிர்பாய வான்தொடு மாடமும் நொந்திடுதே.
மாலை தருமம் மதியின் மயங்கு மதியதுவாய்
காலைப் பொழுதினில் காலுடன் சுற்றிடும் சக்கரமாய்
வேலைசெய் வாலையும் வந்திடாக் காரணம் ஆதலாலே!.
விடுத்த கதிரும் விரைவாய் நுழைந்தது வீட்டினுள்ளே
படுக்கையில் பாய்ந்தது பாலனைத் தொட்டு உசுப்பியதே.
தொடுத்தாள் வசைமொழி தாயுமே பாலன் எழும்பிடவே
கொடுத்துச் செவிதனைக் கேட்டிட எண்ணமில் தூங்கினானே.
ஆவியில் வெந்திட்ட இட்லியும் வாயிலில் வந்ததுவே!
பாவி விரைவாகப் பணம் கொடுவாங்கு என்றதுவே!
தாவி எழுந்தவன் தட்டிட சாம்பாரும் கொட்டியதே!
வாவி அதுபோல் விரிந்தது சிந்திட அஞ்சினானே!
அம்மாவும் மீதத்தை உண்டிடச் சொல்லியே சென்றபின்னே
சும்மா இலாது சுருட்டிய துண்டால் துடைத்தவனோ?
தம்மால் முடிந்ததை திட்டமாய்ச் செய்ததாய்த் தான்நினைத்து
கும்மாளத் தோடே குதித்தவன் ஓடினான் பல்துலக்க>
பல்லைத் துலக்கியே பாடிக் குளித்தவன் கத்தினானே.
முல்லைக் கொடியதோ முற்றம் விடுத்தெட்டிப் பார்த்ததுவே.
தொல்லை தினமுமே துண்டை எடுத்திட ஏன்மறதி
சொல்லை மனதுளே சொல்லி தனக்குளே திட்டினானே.
அப்பா அழைக்க அரண்டவன் பள்ளி கிளம்பிடவே
தப்பா மலேயவன் தன்பையில் நூல்கள் அடுக்கிடுவான்.
சப்பிய இட்லியைச் சட்டென வாயில் அடைத்தபின்னே
கப்பென வீட்டின் கதவினைப் பூட்டுவான் நம்வளவன்.
சாணம் நிகராய்ச் சரிந்த தரையும் விளங்கிடுமே
வேணி அவளுமே வேலைக்கு வரும் பொழுதுவரை
நாணம் இலாததாய் நாற்சுவர் ஏறிக் கரையுடைய
வேணி உலர்ந்தது போலே விளங்கிடும் காட்சியங்கே.
சொற்பொருள்: சாணம் – சந்தனக்கல், வேணி –
பணிப்பெண்ணின் பெயர், ஆறு
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.










பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









