- ஓவியர் புகழேந்தியின் ஓவியம். -

          

83 ஜூலை இனப்படுகொலை  இலங்கையின் வரலாற்றில் முக்கியமானதொரு  திருப்புமுனை. இலங்கையை  26 வருடங்கள் சமூக யுத்ததில் மூழ்கிப்போக வழி வகுத்த இனப்படுகொலையது.  போர் நாட்டுக்கு மிகப்பெரிய அழிவைத்தந்தது. இரு பக்கத்திலும் படையினர், விடுதலைப்போராளிகள் ஆயிரக்கணக்கில் உயிரிழந்தனர். பொதுமக்கள் இலட்சக்கணக்கில் உயிரிழந்தனர்.  இலங்கைத் தமிழர் பிரச்சினையை உபகண்ட, சர்வதேசப் பிரச்சினைகளிலொன்றாக உருமாற்றியது ஜூலை 83 படுகொலைகளே.  இதனை மறந்து விட்டால் மீண்டும் நாட்டில் இன்னுமொரு 'ஜூலை இனப்படுகொலை'  ஏற்படும் நிலை ஏற்படலாம். மீண்டும் நாடு யுத்தத்துக்குள் மூழ்கி விடலாம். 

அந்நிலை மீண்டும் ஏற்படக் கூடாதென்றால் நாட்டில் சகல இன மக்களும் சகல உரிமைகளுடனும் வாழும் நிலை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அனைத்தின மக்களும் எவ்வித அச்சமுமற்று, அன்புடன், இணைந்து வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும். இனங்களுக்கிடையில் சந்தேகங்களும் , அச்சமும் ஏற்படும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் நிறுத்தப்பட  வேண்டும். 

ஆம்! 83 ஜூலை இனப்படுகொலையை நாம் மீண்டும் மீண்டும் நினைவு கூர வேண்டும். நினைவு கூர்வோம். மீண்டுமொரு 83 ஜூலை இனப்படுகொலை போன்றதொரு நிகழ்வு  நிகழாதிருப்பதற்காக, புரியப்பட்ட   அநீதிக்கு நீதி கிடைப்பதற்காக, மீண்டும் மீண்டும் நினைவு கூர்வோம்.

இங்கு கடந்த ஆண்டுகளில் நான் எழுதிய 83 ஜூலை இனப்படுகொலை பற்றிய முகநூல்  நினைவுக்குறிப்புகளிலிருந்து சில குறிப்புகளை (சில எதிர்வினைகளையும்)   இணைத்திருக்கின்றேன்.  இவற்றில் நினைவு கூரப்படுபவையெல்லாம் ,  ஜூலை 83 பற்றி நினைக்கும்போதெல்லாம் என் நினைவில் தோன்றுபவை. உங்கள் நினைவுகளிலும்தாம்.


83 ஜூலை இனப்படுகொலை : சில கேள்விகளும், இழைக்கப்பட்ட அநீதியும் கிடைக்க வேண்டிய நீதியும்! (July 22, 2016 )

83 ஜூலை இனப்படுகொலை  என்றதும் முதலில் அனைவரினதும் நினைவினில் தோன்றுவது பொரளையில் இனவெறி மிகு காடையர்களால் நிர்வாணமாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட தமிழர் ஒருவரின் புகைப்படம்தான். 83 கறுப்பு ஜூலைக்கலவரத்தின் குறியீடாகவே இந்தப்புகைப்படத்தைக் கூறலாம். உண்மையில் இந்தப்புகைப்படத்தை எடுத்தவர் சிங்கள வழக்கறிஞரொருவர். இது பற்றி 'காலச்சுவடு' இதழில் மைக்கல் றொபேர்ட்ஸ் என்பவரால் எழுதப்பட்டுக் கவிஞர் சேரனால் தமிழாக்கம் செய்யப்பட்டு '1983 ஜூலை, இலங்கை இனப்படுகொலை எண்ணித் துணிந்தே எடுத்த படுகொலை' என்னும் தலைப்பில் வெளியான 83 கறுப்பு ஜூலை பற்றிய கட்டுரையில் இந்தப்புகைப்படத்தைப் பற்றிப்பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

"கொலைக்கு முன்பாக களிக்கூத்து.: பொறள்ளை சந்தி. அதிகாலை. 24.07.1983. இந்தப் படத்தை எடுத்தவர் சந்திரகுப்த அமரசிங்க. இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் 'அத்த' என்கிற நாளிதழில் பணியாற்றியவர் அவர். படத்தில் இருக்கும் தமிழர் கொல்லப்பட்டதை சந்திரகுப்த அமரசிங்க பின்னர் உறுதிப்படுத்தினார். கேளிக்கை உணர்வுடனேயே கொலையாளிகள் இயங்கியதாகச் சந்திரகுப்த அமரசிங்க என்னிடம் தெரிவித்தார்."

இந்தப்புகைப்படத்தைப்பார்க்கும்போதும் என் சிந்தையில் எழும் கேள்விகள் சில. 'இந்தத்தமிழர் நிர்வாணமாக்கப்பட்டு எரித்துக்கொல்லப்பட்டுள்ளார். நீதிக்காக வாதிடும் சிங்கள வழக்கறிஞரொருவர் அந்த மனிதர் எரித்துக்கொல்லப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னர் புகைப்படமெடுத்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியினரின் 'அத்த' நாளிதழிலும் பணியாற்றிய வழக்கறிஞர் ஒருவரால் எடுக்கப்பட்ட , எந்தவிதச்சந்தேகங்களுமற்ற புகைப்படம் இது. அந்த அப்பாவித்தமிழரைக் கொன்றவர்களை ஆதாரபூர்வமாக நிரூபிக்கும் ஆதாரம் இந்தப்புகைப்படம்.

இந்தப்புகைப்படத்திலுள்ள தமிழர் யார்? இந்தப்புகைப்படத்தை நிச்சயம் அவரது உறவினர்கள், குடும்பத்தவர்கள், நண்பர்கள் மற்றும் அவரை அறிந்தவர்கள் எனப்பலர் பார்த்திருப்பார்கள். அவர் யார்? அவரைப்பற்றி எங்காவது விபரங்கள் வெளியாகியுள்ளனவா? இந்தப்புகைப்படத்தில் சிறிது நேரத்தில் இனவெறிக்குப் பலியாகப்போகும் அந்தத்தமிழருக்கு முன்னால் ஆடிப்பாடியபடி காடையர்கள் சிலர் காணப்படுகின்றார்கள். அவர்களது உருவங்கள் அடையாளம் காணக்கூடிய அளவுக்கு நன்றாகவே தெரிகின்றது. அவர்களது நிலையென்ன?

இந்தப்புகைப்படத்தில் காணப்படும் தமிழருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். இவரைக்கொன்ற காடையர்கள் இனங்காணப்பட்டு தண்டனை பெற வேண்டும். இரண்டாம் உலக மகாயுத்தத்தில் யூதர்களைக்கொன்ற நாசி அதிகாரிகளை மேற்கு நாடுகளில் இன்னும் தேடித்தேடி வழக்குகள் போடுகின்றார்கள். அதைப்போல் இந்தப்புகைப்படத்தில் உள்ளவர்களையும் அரசு அடையாளம் கண்டு , கைது செய்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

தமிழ் அரசியல்வாதிகள், மானுட உரிமைக்காகப் போரிடும் அமைப்புகள் மனிதர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அனைத்துதமிழ் மக்களும் இந்த விடயத்தில் குரல் கொடுக்க வேண்டும். மானுட உரிமைகளுக்காகச் செயற்படும் சிங்கள மக்களும் , அமைப்புகளும், ஊடகங்களும், பொதுமக்களும் அந்த அப்பாவி மனிதருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.

தமிழரென்ற காரணத்தால் நிர்வாணமாக்கப்பட்டு எரியூட்டப்பெற்ற இந்த அப்பாவித்தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குரிய நீதி கிடைக்க வேண்டும்.

இனத்தின் பெயரால் இங்கே ஒருவர்
கூனிக் குறுகி அவமா னத்தால்
இருக்கும் காட்சி காணும் போதினில்
சிந்தையில் எழும் வினாக்கள் பற்பல.
யாரிவர்? எங்கி ருந்து வந்தார்?
குடும்பம் ஒன்றின் தலைவரா அல்லது
உறவுகள் அற்ற மானுடர் ஒருவரா?
இனவெறி மிகுந்து இங்கு வெறியுடன்
ஆடி நிற்கும் காடையர் முகங்கள்
மானுட அழிவின் பிரதி பலிப்பெ.
இந்த மனிதர் இங்கே தனிமையில்
நாணி, வாடி, ஒடிந்து கிடக்கின்றார்.
இவரை இவ்வித மழித்த மானுடர்
மானுட இனத்தின் அவமானச் சின்னங்கள்..
மானுட உரிமை ஆர்வலர் மற்றும்
அனைவரு மெழுவீர்! எழுவீர்! எழுந்து
நீதி கிடைத்திட ஒன்றெனத் திரள்வீர்!


83 ஜூலை இனப்படுகொலைச் சிந்தனைகள்: காணாமல் போன வேல்முருகன் & ராஜாராம். (ஜூலை 21. 2020)


எப்பொழுதும் 83 ஜூலைக் கலவரத்தையெண்ணியதும் இருவரின்  முகங்கள் என் நினைவுகளில் முதலில் தோன்றும். இருவருமே மொறட்டுவைப்பல்கலைக்கழகப் பொறியியல் பீடத்தைச் சேர்ந்தவர்கள். வேல் முருகன் பொறியியல் பீட மாணவன். ராஜாராம் பொறியியலாளராகப் பணி புரிந்துகொண்டிருந்தவர். இருவருமே 83 கலவரத்தில் காடையர்களால் படுகொலை செய்யப்பட்டவர்கள்.

வேல்முருகன்: உலகிலுள்ள நல்ல குணங்களையெல்லாம் குழைத்து வார்த்துச் செய்தால் அப்படியிருக்குமோ அவ்விதமான வதனம் இவருக்கு. தீய எண்ணங்களையே எண்ணாத நல்லவர்கள் என்று சிலரைப்பார்த்து எண்ணுவோமே அவ்விதமான முகவாகும்,  அப்பாவித்தனமான புன்னகையும் கூடிய தோற்றம் இவருடையது. இவருடன் நான் அதிகம் பழகியவனல்லன். ஆனால் படிப்பை முடித்துப் பணியாற்றிக்கொண்டிருந்த சமயம் வெள்ளவத்தையிலுள்ள அழகு என்பவரிடத்தில் உணவுண்ணச் செல்வது வழக்கம். கொழும்பில் பணியாற்றிய பலர் இவரிடம் மூன்று நேர உணவையும் உண்ணுவது வழக்கம். 6 ஐபிசி லேன் என்றால் எல்லோருக்கும் தெரியும். இவரிடம் பலரும் கணக்கு வைத்திருந்தார்கள். மாத முடிவில் பணத்தைக் கொடுக்கலாம். எந்த நேரம் சென்றாலும் சாப்பாட்டு ரெடியாகவிருக்கும், வயிறார உண்டுவிட்டுச் செல்லலாம். அவ்வப்போது மாலை நேரங்களில் அங்கு செல்கையில் நான் வேல்முருகனைக் காண்பது வழக்கம். அப்பொழுது அவர் பொறியியல் பீட மூன்றாம் வகுப்பு மாணவன் என்று நினைக்கின்றேன். அச்சமயங்களில் அவருடன் சிறிது நேரம் உரையாடுவதுண்டு. அவ்விதம் ஜுலைக் கலவரத்துக்குச் சில நாட்களின் முன்பும் அவரை அங்கு கண்டிருக்கின்றேன்.

கலவரத்தில் இவருக்கு நடந்தது என்ன? இரத்மலானை முகாமலிருந்து பம்பலப்பிட்டி அகதிகள் முகாமுக்கு வருவதற்காகக் காத்து நின்ற சமயம் இவரால்  பஸ்ஸில் ஏற முடியவில்லையென்றும், அப்பொழுது அங்கு வந்த காடையர் கும்பல் இவரை அருகிலிருந்த தேவாலயமொன்றுக்குள் துரத்திச் சென்றதாகவும், அங்கு இவர் உயிருடன் எரிக்கப்பட்டதாகவும், எதுவுமே எஞ்சவில்லையென்றும் கேள்விப்பட்டிருக்கின்றேன். மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் அவற்றைப் பகிர்ந்துகொள்ளவும்.

ராஜாராம் மலையகத்தைச் சேர்ந்தவர். பண்டாரவளை என்று நினைவு. நன்கு சிங்களம் தெரிந்தவர். ஆனால் அசல் தமிழர் என்று தெரியும் முகவாகு இவருக்கு. இவரைத் துரத்திச் சென்ற கும்பல் களுபோவிலை மருத்துவநிலையத்தில் கொன்றதாக அறிந்திருக்கின்றேன். அப்பொழுதுதான் நீண்ட காலமாகக் காதலித்த பெண்ணொருவரை மணந்திருந்தார். இவரையும் ஜூலைக் கலவரத்துக்கு முன்பாக பஸ்ஸொன்றில் சந்தித்து உரையாடியிருந்தேன். நான் இரண்டாம் வகுப்பு மாணவனாகப் படித்துக்கொண்டிருக்கையில் நான்  மேலும் சில  நண்பர்களுடன் , பல்கலைக் கழகத்துக்கண்மையில் வாடகைக்கிருந்த வீடோன்றில் எங்களுடன் இவரும் தங்கியிருந்தார். அதனால் இவரை நன்கு அறிவேன்.

 25.8.1983 வெளியான ஈழநாடு பத்திரிகையொன்றில் வெளியாகியிருந்த 'ஹலோ சுரேஷ்குமார்' என்னும் விளம்பரம் வேல்முருகனை மீண்டும் நினைவுக்கு கொண்டுவந்தது. அதில் பழனி என்பவர் நடேஸ்வரா முகாமிலிருந்து பருத்தித்துறை பஸ்ஸுல் வேல்முருகனைத் தேடிய சுரேஷ் என்பவரை விளித்து விளம்பரமொன்றினை இட்டிருந்தார். இதிலுள்ள வேல்முருகன் நான் குறிப்பிடும் வேல்முருகனாகத்தானிருக்க வேண்டும்.

நண்பர்களே,  உங்களில் யாரிடமாவது வேல்முருகன், ராஜாராம் ஆகியோரின் புகைப்படங்களிருப்பின் அவற்றை இங்கு  பகிர்ந்துகொள்ளுங்கள்.


பாம்புப்பிடாரனும், படம் விரித்தெடுத்தாடிய பாம்பும்!    (83 ஜூலை இனப்படுகொலை நினைவாக..)  (ஜூலை 24, 2023)


இன்றுதான் இலங்கைத்தீவு  
இந்து சமுத்திரத்தின் கண்ணீர்த்தீவானது. 
இந்து சமுத்திரத்தின் சொர்க்கம்
இன்றுதான்
இந்து சமுத்திரத்தின் நரகமானது.
இலங்கைத் தீவின் இருண்ட யுகம் உதித்த நாளும்
இன்றுதான்.
இலங்கைத் தமிழர்தம் 
இரத்தம் குடிக்கப்பட்ட நாள்.
இப்பாரின் திக்குகளெங்கும் அவரைப் பேர்
இடரால்  பெருமளவில் அகதிகளாக
இடம் பெயர வைத்தநாள்!
இன்னும் அந்தச் சில தின நினைவுகள்
இன்று நடந்ததுபோல் எம்
இதயத்தில் இருக்கின்றன.
இலங்கைத் தமிழர்தம் ]
அமைதிப்போரின்
அடுத்த கட்டமான
ஆயுதப்போர் பற்றியெரிய
அகில உலக, உபகண்ட பிரச்னையாக
அவதாரமெடுக்க வைத்த நாள்.
இதற்கெல்லாம் காரணம்
இவன். ஆனால்
இவனைப்பற்றி
அரசியல் அமைப்புகளோ,
ஆயுத அமைப்புகளோ
அரசியல் ஆய்வாளர்களோ
அதிகமாக விமர்சித்ததாக நான்
அவதானித்ததில்லை. நீங்கள்
அவதானித்துள்ளீர்களா?
அது ஏன் என்று நான்
அடிக்கடி சிந்திப்பதுண்டு.
அதில்தான் இருக்கிறதிவனின்
அரசியல் இராஜதந்திரம்.
அரவணைத்துத் தம் எதிரிகளை
அணுகுபவன் இவன்.
அவசியமேற்பட்டால் இவன்
அடிபணியவும் தவறுவதில்லை.
அதற்கு முக்கிய காரணம்
அக, புற அரசியல் நிலைமைகளை
அணுகி, ஆராய்ந்து 
அடுத்த கட்டத்துக்குத் தன் திட்டங்களை
எடுத்துச் செல்வதற்குத்தானே தவிர பிற
எதுவுமில்லை.
முகத்தில் குத்துவதுபோல்
முன் நிற்கும் எதிரியில் வயிற்றில் குத்துபவனென்று
அடிக்கடி தன்னைப்பற்றி பெருமைப்பட்டவன்.
அதனால்தான் அரசியலில் இவன் ஒரு குள்ள நரி.
இனவாதப்பாம்பை
இலங்கைத்தீவில் 
ஆடவிட்டு வேடிக்கை பார்த்த
அரவப் பிடாரன் இவன்.
இவன் ஆட்சியில் 
இரு தடவைகள் மிகப்பெரும்
இனக்கலவரங்கள் நிகழ்ந்தன.
பிரதமராகப் பதவிக்கு வந்தவுடனொன்று.
பின்னர் ஜனாதிபதியாக வந்தவுடன் மற்றொன்று.
பிரசித்தி பெற்ற தமிழர்தம் யாழ் நூலகத்தைப்
பற்றி எரிய வைத்தவர் இவன் கீழிருந்த அமைச்சர்கள்.
இனத்தீயால் இலங்கை 
இரண்டாவது தடவை பற்றியெரிந்தபோது
இவனது இனவாத அமைச்சர்களே
இனவாதக் குண்டர்களைக் களத்தில்
இறக்கி முன்னின்று நடத்தினர். 
இடர் விளைவித்தனர்.
இரத்த ஆற்றை
இலங்கை எங்கும் ஓட விட்டனர்.
இனவாதச் சட்டமான பயங்கரவாதச் சட்டத்தை
இவனே நாட்டில் சட்டமாக்கியவன்.
இன்றுவரை அதனை நீக்க முடியவில்லை.
இன்று கறுப்பு ஜூலையின் தொடக்க நாள்.
இவனை நினைக்காமல் 
இருண்ட அத்தினத்தை 
இன்றும் நினைக்க  முடிந்ததில்லை.
இளைஞனாக இவன் இருந்தபோது
இலங்கையில் 
இவன்  கண்டி பாதயாத்திரை நடத்தாமல்
இருந்திருந்தால்
இலங்கையில் ஒரு வேளை அமைதி
இருந்திருக்கக் கூடும்.
போரா? அமைதியா? என்றிவன்
போர்ப்பிரகடனம் செய்யாதிருந்தால் 
இவன் ஆட்சியின் முதற் கலவரத்தை
இவனால் முளையில் கிள்ளியெறிந்திருக்க முடியும்.
இரண்டாம் கலவரத்தையும்
இனவாத அரவத்தின் நச்சினை 
இவன் கக்காமல் வைத்திருந்தால்
இல்லாமல்  செய்திருக்க  முடியும். ஆனால்
இனவாதப் பாம்புப் பிடாரன் இவன்,
இனவாதப் பாம்பை 
ஆடவிட்டான். இலங்கையெங்கும் 
அதன் விடத்தைக் கக்க வைத்தான்.
இவன் மட்டும் ஆட்சியில் , அரசியலில்
இல்லாதிருந்தால்
இலங்கையின் வரலாறு எப்படியிருந்திருக்கும்?
இதயத்தில்  எண்ணிப்பார்க்கின்றேன்.
இவன் யார்? யார் இவன்?
இந்நேரம் இவன் யாரென்பதை உணர்ந்திருப்பீர்கள்.
இவன் ஆர்? ஜே .ஆர்!

எம் தலைமுறையைப் பொறுத்தவரை 1983 முக்கியமானதோர் ஆண்டு. குறிப்பாக ஜூலையில் நடைபெற்ற தமிழர்களுக்கெதிரான கொடிய இனப்படுகொலை இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஓர் அழிக்க முடியாத களங்கம். 

கறுப்பு ஜூலை இனப்படுகொலை  தமிழர்களை உலகின் நானா பக்கங்களுக்கும் அகதிகளாக ஓட வைத்தது.   தமிழர்களின் ஆயுதரீதியிலான விடுதலைப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியது. இக்கலவரம் ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களைக் குடித்தது.    தமிழர்களின் உடமைகளைச் சூறையாடியது. பல்வகை வன்முறைகளையும் தமிழர்கள் மேல் ஏவிவிட்டது. 

83 ஜூலை இனப்படுகொலைகளுக்கு  முக்கிய காரணம் அன்று ஆட்சியிலிருந்த அரசியலில் குள்ளநரி என வர்ணிக்கப்படும் ஜே.ஆரின் அணுகுமுறை. முன்பு பண்டா& செல்வா ஒப்பந்தத்தைக் கிழிப்பதற்காகக் கண்டிக்குப் பாத யாத்திரை சென்றவர் சகல நிறைவேற்று அதிகாரங்களையும் கொண்ட 'த(ர்)ம்மிஷ்ட்ட' ஜனாதிபதியாகியிருந்தார். அவரது அமைச்சர்களான சிறில் மத்தியூ, காமினி திசாநாயக்க போன்றவர்கள் அவரது ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் மீதான இனவாதச் செயற்பாடுகளை ஊக்குவித்தனர். 

யாழ் நூலகம் எரிக்கப்பட்டது ஜே.ஆரின் ஆட்சியில்தான். பயங்கரவாதத்தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு தமிழர்கள் மேல் பயங்கர வன்முறை ஏவிவிடப்பட்டது ஜே.ஆரின் ஆட்சியில்தான். 77, 81, 83 என்று தமிழர்கள் மீது இனக்கலவரங்கள் ஏவிவிடப்பட்டதும் ஜே.ஆரின் ஆட்சியில்தான். இவ்விதமான இனரீதியிலான படுகொலைகள்  ஏற்பட்டபோதெல்லாம் அவற்றை அடக்குவதற்குப் பதில் 'போரென்றால் போர். சமாதானமென்றால் சமாதானம்' என்று அவற்றை ஊதிப்பெரிதாக்கியவரும் ஜே.ஆர்.தான்.

தமிழர்கள் மேல் மட்டுமல்லாமல் தென்னிலங்கையிலும் தன் அரசியல் எதிரிகள் மீதும் தனது அடக்குமுறைகளை ஏவிவிட்டவர் ஜே.ஆர். சிறிமா அம்மையாரின் குடியுரிமையைப் பறித்தார். ஜே.வி.பி போன்ற இடதுசாரிக்கட்சிகளை 83 இனக்கலவரத்துக்குக் காரணமென்று பொய்க்காரணத்தை முன்வைத்துத் தடை செய்தார்.

ஜே.ஆரின் அணுகுமுறைதான் இந்தியாவையும் இலங்கை விவகாரத்தில் தலையிட வைத்து, உள்நாட்டுப் பிரச்சினையை உபகண்டப் பிரச்சினையாக, சர்வதேசப் பிரச்சினையாக உருவெடுக்க வைத்தது.  சிறைச்சாலையினுள் தமிழ் அரசியற் கைதிகள் கொன்று குவிக்கப்பட்டதும் ஜே.ஆரின் அரசின் காலகட்டத்தில்தான்.

இன்று இலங்கை எதிர்கொண்டுள்ள நிலைமைக்கெல்லாம் அடிப்படை அன்று ஜே.ஆர் விதைத்த இனவாத விதைதான். அதுதான் வளர்ந்து , கிளைவிட்டு, நாட்டை வங்குறோத்தாக்கியுள்ளது.

இன்று கறுப்பு ஜூலை 83யினை நினைவு கூரும் நாள். நாடெங்கும் தமிழர்கள் மேல் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட நாள். அந்நாள் அடைந்த அனுபவங்கள், கொழும்பு நகரெங்கும் உயிரைக் காப்பதற்காக ஓடிக்கொண்டிருந்த தமிழர்களின் தோற்றங்கள் பற்றிய நினைவுகள் பெருக்கெடுக்கின்றன. மறக்க முடியாத அனுபவங்கள். மீண்டுமொரு தடவை அத்தகைய வன்முறைகள் தமிழர்கள் மற்றும் சிறுபான்மை மக்கள்மீது ஏவிவிடப்படாதிருப்பதற்காக இலங்கையின் அனைத்து மக்களும் இக்கரிநாளை , இக்கரிநாளையடுத்து நாட்டில் ஏற்பட்ட சம்பவங்களை நினைவு கூர வேண்டும். நினைவு கூர்வோம். 

ஜூலை 83யினை நினைத்ததும் தமிழ் மக்கள் அடைந்த துயரங்களுடன் , அவற்றுக்கெல்லாம் பிரதான காரணமாக அக்காலகட்டத்தில் விளங்கிய ஜே.ஆரின் நினைவுகளும் தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை.

ஜே.ஆர் என்னும் தனி மனிதன் இச்சின்னஞ்சிறு தீவுக்கு ஏற்படுத்திய அழிவுகள் பற்றி இன்னும் முறையான ஆய்வுகள் ஆற்றப்படவில்லை. ஆற்றப்பட வேண்டிய தருணமிது. ஆற்றுவோம். அனைத்து மக்களும், ஒன்றிணைந்து சம உரிமையும் , மகிழ்ச்சியும் நிறைந்த பாதையில் நடைபோடுவதற்கு மிகவும் அவசியமது. அவரது அணுகுமுறையால் பாதிக்கப்பட்ட அனைவரதும்  நீதிக்கான போராட்டக் குரல் அதுவாகத்தானிருக்க முடியும்.


வரலாற்றுச் சுவடுகள்: மருத்துவர் சோமசுந்தரம் இராஜசுந்தரம் நினைவு நாள் ஜூலை 27 (83 வெலிக்கடைச்சிறைச்சாலைப் படுகொலை )  (ஜூலை 27, 2020)

83 ஜூலை இனப்படுகொலையின்போது நடைபெற்ற வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலையில் இரண்டாவது தடவையாகத் தமிழ்க் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட நாள் ஜூலை 27. இன்றுதான் மருத்துவர் இராஜசுந்தரம் படுகொலை செய்யப்பட்டார். 

இத்தருணத்தில் அவருடன் பழகிய நாட்களை எண்ணிப்பார்க்கின்றேன். குறுகிய காலமே பழகியிருந்தாலும் என்மீது மறக்க முடியாத தடங்களை பதித்த இலட்சிய புருசர் அவர். அவருடன் ஜீப்பில் நாவலர் பண்ணைக்குச் செல்கையில், அவரது இருப்பிடத்தில் , இறம்பைக்குள அநாதைகள் விடுதியில் நடந்த 'தமிழீழமும், சமயமும்' கருத்தரங்கில் உரையாடிய தருணங்களை நினைத்துப் பார்க்கின்றேன். அவரோர் இலட்சிய புருசர். அயராது அகதிகளின் புனர்வாழ்வுக்காக உழைத்தவர். 

மருத்துவர் இராஜசுந்தரம் 23.03.1943 சோமசுந்தரம் தம்பதிக்கு மூன்றாவது மகனாகப்பிறந்தவர். பெற்றோர் ஆசிரியர்கள். இவர் ஆரம்பத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரியில் படித்திருக்கின்றார். அப்பொழுது இளம் விவசாயிகள் சங்கத்தின் செயலாளராகவிருந்திருக்கின்றார்.  பின்னர் யாழ் இந்துக்கல்லூரியில் கல்வி கற்றார். அப்பொழுது சாரணர் படைத்தலைவராகவிருந்திருக்கின்றார். 1963இல் கொழும்பு மருத்துவக் கல்லூரியில் கல்வி கற்றார். இவர் ஒரு பதிவுசெய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளர் (ஆர்.எம்.பி). மனைவி சாந்தி காராளசிங்கம் மருத்துவர் (எம்.பி.பி.எஸ்). இவர் தனது மருத்துவக் கல்வி முடிந்ததும் லுனுகல, புசெல்லாவ ஆகிய இடங்களிலுள்ள மருத்துவ நிலையங்களில் பணியாற்றினார். தோட்டத்தொழிலாளர்களின் உடலாரோக்கியத்தைப் பேணுவதில் கவனம் செலுத்தினார். அக்காலகட்டத்தில் இந்தியத் தொழிலாளர் பேரவையில் அங்கத்தினராகவும் விளங்கியிருக்கின்றார். காந்தியம் அமைப்பில் இணைந்து பணியாற்றுவதற்கு முன்னரே அவர் மலையக மக்களுடன் இணைந்து பணிபுரிந்து வாழ்ந்திருக்கின்றார், அவர்கள்தம் நல்வாழ்வில் அக்கறை காட்டியுள்ளார் என்பதை அறிய முடிகின்றது. 

கட்டடக்கலைஞரும், நகர அமைப்பு வல்லுநருமான எஸ்.ஏ.டேவிட் (டேவிட் ஐயா) உருவாக்கிய காந்தியம் அமைப்பு செயலுருவாக்கம் பெற்றபோது அதில் இவருமிணைந்திருந்தார். காந்திய அமைப்பின் முக்கிய நோக்கங்கள்  பின்தங்கிய தமிழ் மக்களை வறுமை, அறியாமை மற்றும் நோய் ஆகிவற்றிலிருந்து காப்பாற்றுவதுதாம்.  77 இனக்கலவரத்தைத்தொடர்ந்து இடம் பெயர்ந்த சுமார் 40, 000 பேருக்குக் காந்தியம் நிவாரணம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளித்துள்ளதென்றால் அது பிரமிப்பைத்தருகின்றது. ஆனால் அதற்குக் காரணம் காந்தியத்தின் பொதுச் செயலாளராக அயராது இயங்கிய இராஜசுந்தரம் அவர்கள்தாம். மலையகத்திலிருந்து பாதிக்கப்பட்டு வந்த மலையக மக்களை வரவேற்று, அவர்களுக்கு இருக்க நிலம் கொடுத்து, நிலைக்க வசதிகள் செய்துகொடுத்த காந்தியம் அமைப்பின் பணி வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நற்பணி. 

எண்பத்து  மூன்றில் அவரும் , டேவிட்  ஐயாவும் இலங்கை அரசபடைகளால் கைது செய்யப்பட்டபோது அவர்கள் மீது சாட்டப்பெற்ற குற்றச்சாட்டுகள்:

1. தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் சந்ததியாரைச் சந்தித்தது. அது  பற்றிப் பொலிசுக்கு அறிவிக்காதது.
2. தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத் தலைவர் உமாமகேசுவரனைச் சந்தித்தது. அது பற்றிப் பொலிசுக்கு அறிவிக்காதது.
3. உமாமகேசுவரன், சந்ததியார் ஆகியோர் இந்தியா தப்பிச் செல்ல உதவியது.

இக்குற்றச்சாட்டுகளில் அவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டு , அவற்றுக்காக ஆயுட்காலச் சிறைத்தண்டனை பெற்று .வெலிக்கடைச் சிறைச்சாலையிலிருந்தவர்கள்.

அவர் வெலிக்கடைச்சிறைச்சாலையின் இளைஞர் பகுதியில் அடைக்கப்பட்டு இருந்தபோது சுமார் நாற்பது பேர்வரையிலான ஆயுததாரிகள் வந்து கதவை உடைத்திருக்கின்றார்கள். அப்பொழுது அவர்களிடம் சென்று உரையாடியவேளையில் வெளியில் இழுக்கப்பட்டு, இரும்பாயுதமொன்றால் தலையிலடிக்கப்பட்டுக்கொல்லப்பட்டார்.

மருத்துவர் இராஜசுந்தரத்தின் பணியும், வாழ்வும் மறக்கப்பட முடியாதவை. இலங்கைத்தமிழர் விடுதலைப்போராட்ட வரலாற்றில் முக்கியமான தடங்கள் அவை.

வெலிக்கடைச்சிறைச்சாலையில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ்க் கைதிகள் அனைவரையும் இந்நாளில் நினைவிலிருத்துவோம்.


1. 83 'ஜூலை' இலங்கை இனப்படுகொலை  நினைவுகள்.:  இந்தியா அனுப்பிய சிதம்பரம்! (July 22, 2018)

சிதம்பரம் கப்பலை கூகுளில் தேடிப்பார்த்தேன். கப்பலின் படம் வந்தது. இக்கப்பலைத்தான் இலங்கையின் 1983 இனப்படுகொலையையடுத்து இந்தியா கொழும்பில் தங்கியிருந்த அகதிகளை யாழப்பாணம் கூட்டிச்செல்வதற்காக அனுப்பியிருந்தது. இக்கப்பல் பல நினைவுகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தது. பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டப அகதிகள் முகாமில் ஆரம்பத்திலிருந்தே தொண்டர்களாக மொறட்டுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் சேவையாற்றினர். தர்மகுலராஜா அவர்களும் அவர்களிலொருவர். இவர் எனக்கு ஒரு வருட 'சீனியர்'. அவர்களில் நானுமொருவனாக இணைந்திருந்தேன். ஏற்கனவே இலங்கை அரசு வழங்கியிருந்த லங்கா ரத்னா போன்ற சரக்குக் கப்பல்களில் அகதிகள் பலரை அனுப்பி வைத்தோம்.

பின்னர் இறுதியாக சிதம்பரம் கப்பல் தமிழக அரசால் அனுப்பப்பட்டபோது , இரு வாரங்கள் கழிந்திருந்த நிலையில், நானும் யாழ்ப்பாணம் செல்வதற்கு முடிவு செய்தேன். என் வாழ்க்கையில் கட்டுமரங்களில் பயணித்திருக்கின்றேன்; படகுகளில் பயணித்திருக்கின்றேன்; ஆனால் கப்பலொன்றில் பயணித்தது அதுவே முதற் தடவை. கொழும்பிலிருந்து கிழக்கு மாகாணத்தைச் சுற்றிச் சென்ற கப்பலின் பணியாளர்களெல்லாரும் அகதிகளென்று மிகவும் அன்புடன் , பண்புடன் உதவியாகவிருந்தார்கள். கொழும்பில் கப்பலில் ஏறும்பொழுதும் வரிசையில் நின்று ஒவ்வொருவர் உடமைகளையும் வாங்கியுதவி ஏற்றினார்கள். நேற்றுத்தான் நடந்ததுபோல் இன்றும் நினைவிலிருக்கின்றது.

1977 இனப்படுகொலை நடைபெற்று மக்கள் அகதிகளாக யாழ்ப்பாணம் ஹாட்லிக் கல்லூரி அகதி முகாமுக்கு வந்துகொண்டிருந்தவேளையில் நண்பர்களுடன் மாலை நேரங்களில் சென்று வரும் அகதிகளுடன் அளவளாவி அவர்கள் கதைகளைக் கேட்டு உணர்ச்சி வசப்படுவதுண்டு. ஆனால் நானே என் சொந்த மண்ணில் அகதியாக கப்பலில் மீண்டும் வருவேனென்று அச்சமயத்தில் எண்ணியிருக்கவில்லை.

அகதிகளாக முகாமில் இருந்த சமயத்தில் என்னுடன் பணி நகர அதிகார சபையில் பணிபுரிந்த சிங்கள நண்பர்கள் சிலர் விடயமறிந்து எங்களை வந்து பார்த்தார்கள். தங்களுடன் வந்து பாதுகாப்புடன் தங்கலாமென்று அழைத்தார்கள். அப்போதிருந்த சூழலில் எம்மால் அவர்களுக்கும் பிரச்சினைகள் வரலாம்; நிலவிய சூழலில் எமக்கும் பாதுகாப்பில்லை. எனவே அகதிகள் முகாமில்இருப்பதே உசிதமாகப்பட்டது. அங்கேயே தங்கி விட்டோம். அவர்களின் பெயர்களைக் கூட மறந்து விட்டேன். ஆனால் பணியாற்றிய காலத்தில் எம்முடன் நன்கு அன்புடன் பழகிய நண்பர்கள் அவர்கள். அவ்விதம் அச்சூழலில் எம்மை வந்து பார்த்ததும் அழைத்ததும் முக்கிய விடயமாக அப்பொழுதும் சரி, இப்பொழுதும் சரி தோன்றுகின்றது.
 
83 கறுப்பு ஜூலை  எனக்கு நன்கு தெரிந்த சிலரைப் பலி வாங்கியிருக்கின்றது. அவர்களில் பொறியியலாளர் ராஜாராம் ஒருவர். மொறட்டுவைப் பல்கலைக்கழகக் காலகட்டத்தில் பல்கலைக்கழகத்து முன்பாக இருந்த தெருவொன்றில் சிங்கள் வீடோன்றில் வாடகைக்கு நண்பர்களுடன் வசித்தபோது எம்முடன் வசித்தவர்களிலொருவர். மலையகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு ஒரு காதலி இருந்தார்; ஆசிரியை என்றும், பெயர் ராஜேஸ்வரி என்றும் ராஜாராம் கூறியதாக நினைவு. நீண்ட காலமாகக் காத்திருந்து ராஜாராம் படிப்பை முடிந்து பணி புரிந்து கொண்டிருந்தபோதுதான் திருமணம் செய்தார். பல்கலைக்கழகப்படிப்பு முடிந்து பணி புரிந்துகொண்டிருந்த சமயத்தில் கலவரத்துக்குச் சில மாதங்களின் முன்பே அவரை வழியில் இ.போ.ச பஸ்ஸொன்றில் சந்தித்து உரையாடியிருந்தேன். யாருக்குமே தீங்கு செய்ய மனம் வராத அப்பாவி அவர். நன்கு சிங்களம் பேசக்கூடியவர். 83 கலவரத்தில் களுபோவிலை ஆஸ்பத்திரியில் ஏற்கனவே காயமுற்றிருந்து அனுமதிக்கப்பட்டிருந்த அவரைக் காடையர்கள் சென்று கொலை செய்ததாகப் பின்னர் அறிந்து துயருற்றேன்.

அடுத்தவர் வேல்முருகன். இவர் எங்களுக்கு 'யூனியர்'. கண்ணாடியும், சிரித்த முகமுமாக எப்பொழுதும் காணப்படுவார். மிகவும் சாந்தமானவர். கலவரக் காலத்தில் இவர் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் , பொறியியல் துறையில் இறுதியாண்டில் படித்துகொண்டிருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். வெள்ளவத்தையில் நாங்கள் அழகு என்பவரிடம் (இவர் ஒரு தமிழகத்தமிழர்) சென்று சாப்பிடுவதுண்டு. ஐ.பி.சி வீதியிலிருந்த வீடொன்றில் வசித்து வந்த அவரிடம் கொழும்பில் பலர் காலை, மதியம், மாலையென்று சென்று உணவு உண்பதுண்டு. கையிலை இல்லாவிட்டாலும் மாதா மாதம் அவருக்கு உணவுக்கான பணத்தைக் கொடுக்கலாம் என்னும் வசதியை அவர் அளித்திருந்ததால் அவருக்கு வாடிக்கையாளர்கள் பலரிருந்தனர். அங்கு அவ்வப்போது வந்து சாப்பிடுவர்களில் வேல் முருகனும் ஒருவர். அங்குதான் அவரை இறுதியாகச் சந்தித்திருந்தேன். பின்னர் 83 கலவரத்தில் இரத்மலானைப் பகுதியில் காடையர்களால் கிறித்தவ ஆலயமொன்றை நோக்கி அவர் துரத்திச் செல்லப்பட்டதாகவும், பின்னர் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டதாகவும் கேள்விப்பட்டேன். இறுதிவரை அவர் உடல் கிடைக்கவேயில்லையென்றும் கேள்விப்பட்டேன்.

இலங்கைத்தமிழர்களைப்பொறுத்தவரையில் 1983 இனக்கலவரம் அதுவரை நிலவி வந்த அரசியற் சூழலையே மாற்றி வைத்ததெனலாம். அதுவரை உள்நாட்டுப்பிரச்சினையாகவிருந்த இலங்கைத்தமிழர் பிரச்சினையை உபகண்ட பிரச்சினையாக , பின்னர் சரவதேசப் பிரச்சினைகளிலொன்றாக ஆக்கிய இனக்கலவரம் அது. மிகவும் துயரகரமான நினைவுகள் அவை. இவற்றை எனது நாவல்களான 'அமெரிக்கா' மற்றும் 'குடிவரவாளன்' ஆகியவற்றில் பதிவு செய்திருக்கின்றேன்.

முகநூல் எதிர்வினைகள்:

1. Pena Manoharan இராமானுஜமா சிதம்பரமா ? 1980 வரை தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையே பயணித்தது இராமானுஜம்.1975 இல் என் முதல் தமிழகப்பயணம் அதில்தான். 

2. Giritharan Navaratnam சிதம்பரம் கப்பலைத்தான் எம்ஜிஆர் அனுப்பியிருந்தார்.

3. Ramanitharan Kandiah சிதம்பரம் கப்பல் தலைமன்னாருக்கும் தமிழகத்துக்குமிடையே ஆட்கொண்டு பயணம் போய்வந்த கப்பல் என்று ஞாபகம்

4. Vijayaretthna Edwin லங்கா ரத்னா - லங்கா ராணி எது சரி

5. Giritharan Navaratnam // லங்கா ரத்னா - லங்கா ராணி எது சரி// லங்கா ராணி இலங்கையின் சரக்குக் கப்பல்களிலொன்று. 1977 கலவரத்தில் தமிழ் அகதிகளை ஏற்றுக்கொண்டு யாழ்ப்பாணம் சென்ற கப்பல். இதனை மையமாக வைத்தே அருளர் 'லங்கா ராணி' நாவலை எழுதினார்.'லங்கா ரத்னா' இன்னுமொரு சரக்குக் கப்பல். 1983 கலவரத்தில் அகதிகளை யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பாவிக்கப்பட்டது. 83 கலவரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்கள் அகதிகளை ஏற்றிச் செல்லப்பாவிக்கப்பட்டதாக நினைவு. எனக்கு லங்கா ரத்னா தான் நினைவிலுள்ளது. 77இல் பாவிக்கப்பட்ட லங்கா ராணியும் 83இலும் மீண்டும் பாவிக்கப்பட்டிருக்கலாம்....

6. Giritharan Navaratnam  83 கலவரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்கள் அகதிகளை ஏற்றிச் செல்லப்பாவிக்கப்பட்டதாக நினைவு. எனக்கு லங்கா ரத்னா தான் நினைவிலுள்ளது. 77இல் பாவிக்கப்பட்ட லங்கா ராணியும் 83இலும் மீண்டும் பாவிக்கப்பட்டிருக்கலாம்....

7. Vadakovay Varatha Rajan 83 கலவரத்தில் கண்டியில் இருந்தேன் .மறக்க முடியாத துயர நினைவுகள் அவை .83 , 77, எந்த கலவரத்துக்குமோ எந்த அரசாங்கமும் மன்னிப்பு கேடக்கவில்லை என்பதுதான் பெரும் ஆதங்கம்

8. Srirham Vignesh செய்தவன் மன்னிப்பு கேட்பானா....? கேட்டாலும், யாரும் நம்பமாட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாதா.....? என்ன நான் சொல்லுறது....

9.Giritharan Navaratnam Srirham Vignesh விக்கி அப்படிக் கூற முடியாது. பல நாடுகளில் அந்நாட்டுச் சிறுபான்மையினருக்கு ஒரு காலத்தில் புரியப்பட்ட அநீதிகளுக்காக , பிறிதொரு காலத்தில் 40, 50 வருடங்களுக்குப்பின்னர் கூட ஆளும் அரசுகள் மன்னிப்புக் கேட்டு , நஷ்ட ஈடும் வழங்கியுள்ளன. அண்மையில் கனடாவில் கூட இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஜப்பானியர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கெதிராகக் கனடிய அரசு பகிரங்க மன்னிப்புக் கேட்டது நினைவுக்கு வருகின்றது. இலங்கையில் அனைத்து இனங்களும் சம உரிமையுடன் வாழ வேண்டுமானால் , அவ்விதமானதொரு சூழலே அடிப்படையாகவிருக்கும். நம்புவோம்; நல்லது நடக்குமென்று.

10. Shan Nadarajah மறக்க முடியா வடு.

11. Srirham Vignesh சண்மு.... மேலே கிரி சொல்வதும் நியாயமானதே. தவறுகள் செய்வதும், மன்னிப்பு கேட்பதும், மனித இயல்புதான். அந்த மன்னிப்பின் பின்னணியில் விளையும் சமாதானம் நிரந்தரமானது என்பது, இலங்கைக்கு பொருத்தமானதா என்பதை, கடந்தகால வரலாற்றை பார்த்தால் தெரியும் அல்லவா (கிரி....தவறாக நினைக்க வேண்டாம்....) எனது பால்ய காலத்து பள்ளி நாட்களில், நான் ஆசிரியர்களாக மதித்ததே உமது தாயாரையும், சண்முவின் தந்தையாரையும் மட்டுந்தான். எத்தகைய கோபம் வந்தாலும், மாணவர்களின் மனது புண்படும் வார்த்தை சொல்லாத எனது ஆசான், பொன். நடராசாவை, 1977கலவரத்தில், களப்பலி ஆக்கியதை என் வாழ்நாளில் மறக்க முடியாது. நான் யாரையும் ஒதுக்கவுமில்லை....வெறுக்கவுமில்லை.. ஆனால், நம்புவதற்கு தயஙுகின்றேன். அஞ்சுகின்றேன்.

12. Jeeva Kumaran painful flashbacks

13. Anpu Kana மறக்கமுடியா

14. KS Sivakumaran The Black July of 1983 was a chilling event of unjustifiable crime against the minorities, especialy the Thamils from all parts of the country. My family an I sought refuge at the Sarawathi Hall and encountered a lot of difficulties. It is a story yet to be narrated by me. True may Sinhala friends came and consoled us just as the other friends.

15. KS Sivakumaran Thank you dear V N Giritharan.

16. Prince Manickam Giri I knew Rajaram and his wife. She came to Batticaloa fron Badulla as a widow with her family. They stayed with us and some other friends. They lost everything and came with the cloths they were wearing and nothing else. I think the other boy's sister studied with me in the Jaffna University. It was a planned murder by then President JR Jeyawardane I have experienced the atrocitoes by the Sinhalese thugs long before 1983 and 1977. I have so many stories to tell.. I think it is time to write all my experences in late 1960s and early 1970s. My father is an Indian Tamil. Mother is from Batticaloa . I was fluent in Sinhalese and yet because of my name i had to face so many bitter experiences. I always wanted to fight back but i was discouraged by my friends teachers and even by my parents saying " you are a Tamil.. you will not win them". That time there were no rebels... no LTTE
To be quite honest until i was 15 years oId, I never knew the difference between my mother's Tamil and my dad's Tamil and i did not even know that there were so many Tamils in the north and East who are well educated and up to now i do not know why they were silent about the sufferings of Indian Tamils. This is the reason I do not understand why everyone blame LTTE where as Tamils (mostly Indian Tamils ) were in trouble in the upcountry from the time they were brought in from South India by the British. My dad's parents came as teachers from Thoothukudy. Anyway... i will write my experience in the near future as i want to tell the sufferings of Indian Tamils and all the difficulties they have been facing even until now.. the sad part was Tamils from north and east and all the Tamil leaders did not come to their rescue...

17. Giritharan Navaratnam பிரின்ஸ், உங்களது இதயத்தைத் தொடும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி. துயரகரமான நாட்கள் அவை. உங்களது குடும்பப்பின்னணியில் அடைந்த அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டீர்கள். உங்களது அனுபவங்கள் அனைத்தையும் எழுதுங்கள். உங்கள் மனப்பாரத்தினைக் குறைப்பதுடன் அவை முக்கியமான பதிவு செய்யப்பட வேண்டிய ஆவணங்களாகவுமிருக்கும். ராஜாராமைப்பற்றிய உங்களது நினைவுகள் மீண்டும் ராஜாராம் பற்றிய நினைவுகளை ஓட வைத்து விட்டன.

18. Balasingam Balasooriyan 1983 ஆம் ஆண்டு யூலை இனவன்செயல்களுக்கு இரண்டே மாதங்களுக்கு முன்பாக, அதாவது மே மாதத்தில், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு எதிராகவும் இனவன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதற்கு பின்னணியில் அப்போதைய ஐ.தே.கட்சி சார்பு பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களே இருந்தார்கள். யூலை இனவன்செயல்களை நினைவு கொள்பவர்களிடையே, பேராதனைப் பல்கலைக்கழக இனவன்செயல்களையும் நினைவுபடுத்தவே இதனை எழுதியுள்ளேன். 1983 ஆம் ஆண்டு ஐ.தே.கட்சி அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக ரணில் விக்கிரமசிங்க இருந்தார். தற்போதைய பிரதமரான இவர், தான் கல்வி அமைச்சராக பதவி வகித்த காலத்தில் நிகழ்ந்த பேராதனைப் பல்கலைக்கழக இனவன்செயல்களுக்கு மன்னிப்புக்கோர முன்வருவாரா? ஐ.தே.கட்சியில் குறிப்பாக ரணிலுடன் கூடிக் குலாவிக் கொண்டிருக்கும் தமிழ் தேசியக்கூட்மைப்பு, ஐ.தே.கட்சி காலத்து சகல இனவன்செயல்களுக்கும் (1958, 1977, 1981-1983) மன்னிப்புகள் கோருமாறு ரணிலைக் கேட்டுக் கொள்வார்களா? 1983 ஆம் ஆண்டு யூலையில் பேராதனைப் பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்ததினால், அங்கே கல்வி கற்றுக்கொண்டிருந்த தமிழ் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய பெரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டது.

19. Vadakovay Varatha Rajan Balasingam Balasooriyan அந்த நிகழ்வு எனக்கு தெரியும் . அப்போ நான் கண்டி குண்டகசாலையில் இருந்தேன் .தம்பி பேராதனை பல்கலைக்கழக மாணவன் .அவரின் நிலையை அறிய முஸ்லீம் நண்பர் ஒருவர் என்னை கூடிக்கொண்டு கண்டி சென்றார் . நீங்கள் குறிப்பிட மாதிரி பல்கலைக்கழகம் மூடப்படாதிருந்தால் பாரிய இழப்புகள் நடந்திருக்கும் . நாம் குண்டசாலைல் இருந்து அகதிகளாக பேராதனை பல்கலைக்கழகத்திலேயே தங்க வைக்கப்பட்டிருந்தோம். அப்போ கண்டி முஸ்லீம் மக்கள் செய்த உதவிகள் மறக்கமுடியாதன . அப்போ செங்கடகல M. P (பெயர் ஞாபகம் வரவில்லை ) எம்மை வந்து பார்த்து ஆறுதல் சொன்ன ஞாபகம் வருகிறது .

20. Terrence Anthonipillai Shelton Ranarajah?

21. Vadakovay Varatha Rajan Terrence Anthonipillai அவரேதான் .நன்றி சதீக்

22. Thavam Myalvaganam Thavam கலவரங்கள் யுத்தங்கள் என பல துன்பியல் நிகழ்வுகள் தொடர்பாக இன்னும் ஏன் இவை தொடர்பான ஆராய்வுகள் விழிப்புணர்வுகள் எம் நாட்டில் இல்லாமல் போகின்றது இவை தோடர் கதையா இங்கு ஐனநாயகம் சட்டம் ஏன் இன்னும் அரைகுறையாக எல்லாம் எல்லா பிரயைகளும் சமன் அல்லாத நிலையும் ஏன் இன்னும் தொடர்கதையாக?

23. Prince Manickam விழிப்புணர்வு தேவைப்படும் சிங்கள மக்களுக்கு சிங்களத்தில் எழுதுவதற்கோ பேசுவதற்கோ யாருமில்லை... அப்படியே ஓரிருவர் துனிந்தாலும் அதை மக்களிடம் எடுத்து செல்ல ஊடகங்கள் தயாராக இல்லை.

24. Jeevan Prasad சிங்களத்தில் ஏகப்பட்ட கட்டுரைகள் வெளி வருகின்றன. ஜூலை கலவரத்தை உலகுக்கு கொண்டு சென்றதே ஒரு சிங்கள போட்டோ கிராபரின் புகைப்படம்தான். சிங்களம் படிக்கத் தெரியாதவர்களுக்கு ஜூலை பதிவுகளை காண முடியாது. https://www.youtube.com/watch?v=CARwFMsAKD8

25. Prince Manickam It is very sad that he is unable to mention the involvement of the Government of Sri Lanka at that time. In order to make a change someone should touch the heart of ordinary Sinhalese living in interior villages and make them realize that how Tamils have been systematically discriminated long before July 1983.. Tigers were not even in the picture when there were riots and massacres since 1956 to 1977

26. Jeevan Prasad He is talking about Black July

27. Prince Manickam Ajeevan Veer i understand clearly. But no where he mentioned the involvement of JR JEYAWARDENE

28. Jeevan Prasad Some of them never talk politics , they love people. we have to understand. Next video , they blame to the UNP Government

29. Thavam Myalvaganam Thavam

 அம்மாவும் நீயே அப்பாவும் நீயே!
அன்புடனே ஆதரிக்கும் தெய்வம் நீயே
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வம் நீயே
முருகா முருகா முருகா முருகா

தந்தை முகம் தாயின் முகம் கண்டறியோமே
மனம் சாந்தி தரும் இனிய சொல்ல கேட்டறியோமே
ஈயெரும்பும் உன் படைப்பில்
இனிமை காணுதே இதை அறியாயோ
முருகா உன் கருணை இல்லையே
முருகு முருகா முருகா முருகா

பூனை நாயும் கிளியும் கூட
மனிதர் மடியிலேயே
பெற்ற குழந்தை போல
நல் உறவாய் கூடி மகிழுதே

எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே
இதை அறியாயோ முருகா உன்
கருணை இல்லையே
முருகா முருகா முருகா முருகா

இனிய இரவு வணக்கம் அன்பு நட்புக்களே

30.Kopan Mahadeva இணையத்தள 'பதிவுகள்' ஆசிரியர் திரு கிரிதரன் நவரத்தினம் மேலே வெளியிட்டிருக்கும் கட்டுரை, ஜூலை இருபத்து மூன்று ஆகிய இன்று இலங்கையில் முப்பத்தைந்து ஆண்டுகளளின் முன் நடந்த கொடூர மான அரசியலால் தூண்டப்பட்ட மூவாயிரம் சொச்சம் தமிழர் படுகொலைகளை திரும்பவும் எம் கண்முன் தத்ரூபமாகக் கொண்டு வருகிறது. இன்று இங்கே திரு ஐ. தி. சம்பந்தனும் நானும் ஒரு வருடம் இரவு பகலாக 2008 இல் வேலைசெய்து 2009இல் என்னை ஆலோசகராகவும் அவரைத் தொகுப்பாசிரியராகவும் சொல்லி சுடரொளி வெளியீட்டுக் கழகத்தால் பிரபல்யப்படுத்தப்பட்ட நூலாகிய 'கறுப்பு ஜூலை'83: குற்றச்சாட்டு (Black July '83: Indictment) எனும் தமிழ்-ஆங்கில 480-பக்க நூலை (ISBN: 978-0-9555359-2-5) முகநூல் நண்பர்களுக்கு நினைவுகூரு வதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். வணக்கம். -- பேராசிரியர் கோபன் மகாதேவா, 23-07-2018.

31. Vasan Svs இக்கப்பல் பல வருடங்களுக்கு பின்னர் தீப்பிடித்து முற்றாகவே சேதமடைந்து விட்டதாக கேள்விப்பட்ட ஞாபகம்.

32. Paramalingam Jeyalingam மனதில் நீங்காத வடுவை ஏற்பாடுத்திய அனுபவம்

33. Rajalingam JeyaKanthan இந்தஇனக்கவரம் நடக்கையில் எனக்கு வயது பத்து ஆனால் இப்பவும் மறக்க முடியவில்லை அந்த அனுபவதகதை எனது தந்தை அனுபவித்தபடி உடமையிழந்து ஒரு மஞ்சள் துனிப்பையுடன் வந்து சேரந்தார் பருத்துறைக்கு அண்ணா உங்களின் ஆவணப்புத்தகம்(உங்களின் நேரடிச்சாட்சியாகபார்கிறேன்)அதை எங்கு இங்கு வாங்கலாம் ஜேர்மனியில்கிடைக்க வழி செய்வீர்களா?(நான் முள்ளிவாய்கால் அனுபவத்தை மே18வரை அனுபவித்தவன் இது எனக்கு அவசியமானது(தயவு செய்து உதவ முடியுமா???

34. Shanthy Jega நானும் எனது பெற்றோர் அண்ணா, தம்பி மஹாநம பாடசாலையிலிருந்து அதே கப்பலில் வந்து இறங்கி சுடச்சுட நடேஸ்வரா கல்லூரியில் சோறு சாப்பிட்டுப் பின்பு காலை நேரம் நந்தாவில் வீட்டில் கால்வைத்தோம்

35. Gv Venkatesan நல்ல நிலையில் வாழ்ந்து.... அகதிகளாகி.....1983..இல். மனம் துயரப்படாமல். மீண்டெழுந்த நண்பர்கள் ...உண்டா...??

36. Giritharan Navaratnam //1983..இல். மனம் துயரப்படாமல். மீண்டெழுநத நண்பர்கள் ...உண்டா// துயரப்பட்டு மீண்டெழுந்தவர்கள் இலட்சக்கணக்கில் உள்ளார்களே நண்பரே.

37. Pathmanathan Ranjani 83 இல் தே கப்பலில் வந்து இறங்கினேன்.

38. Visu Vara I also remember visiting to Saraswathy hall and bringing food there.

39. Giritharan Navaratnam நன்றி நண்பா! நினைவிலுள்ளது. பின்னர் கொட்டாஞ்சேனை இருப்பிடத்துக்குச் சென்றதும் நினைவிலுள்ளது


1983 அகதி அடையாள அட்டை: '83 ஜூலை இனப்படுகொலை'யின் அடையாளச்சின்னம்! (28.8.2014)

1983 இனப்படுகொலை  என் வாழ்க்கையை மட்டுமல்ல , இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் வாழ்க்கையினையும் தலை கீழாகப் புரட்டிப்போட்டது. அதுவரை உள்நாட்டுப் பிரச்சினையாகக் கருதப்பட்ட ஈழத்தமிழர்களின் பிரச்சினையை தென்னாசியப் பிரச்சினைகளிலொன்றாக மாற்றி வைத்த இனப்படுகொலை அது. முள்ளிவாய்க்காலில் 2009இல் முடிந்த யுத்தமோ, ஈழத்தமிழர்களின் பிரச்சினையைச் சர்வதேசப் பிரச்சினைகளிலொன்றாக மாற்றி வைத்ததெனலாம். 1983 இனப்படுகொலையில்  நான் நேரடியாகப் பாதிக்கப்பட்டவன். எனது  அனுபவங்களை 'அமெரிக்கா' சிறுநாவலில் ஓரளவும், 'குடிவரவாளன்' நாவலில் விரிவாகவும் பதிவு செய்துள்ளேன். இதுதவிர அக்காலகட்டத்து அனுபவங்களை மையமாக வைத்து 1983 என்றொரு தொடர் நாவலினையும் 'தாயகம் (கனடா)' சஞ்சிகையில் எழுதத்தொடங்கியிருந்தேன். 8  அத்தியாயங்கள் வெளியான நிலையில் சஞ்சிகையும் நின்று போய்விடவே நாவலும் நின்று விட்டது. பின்னொரு சமயம் அந்நாவலினை மீண்டுமொருமுறை புதிதாக எழுதுமெண்ணமுள்ளது. 

அப்போது பம்பலபிட்டி சரஸ்வதி மண்டப அகதி முகாமில் 26/7/1983 தொடக்கம் 8/8/1983 வரை தங்கியிருந்தேன். அங்கு தங்கியிருந்த காலகட்டத்தில்; ஏனைய மொறட்டுவைப் பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து அகதி முகாம் தொண்டர்களிலொருவனாக உதவி வந்தேன். இறுதியாகத் தமிழகத்திலிருந்து அப்பொழுது முதல்வராகவிருந்த எம்ஜிஆர் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட 'சிதம்பரம்' கப்பலில் யாழ்ப்பாணம் செல்லும் வரையில் அந்த முகாமில்தான் தங்கியிருந்தேன். அப்பொழுது மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் எனக்கு ஒரு வருட 'சீனிய'ராகக் கட்டடக்கலை பயின்றுகொண்டிருந்த தர்மகுலராஜாவும் ('தக்குரா'  அல்லது குலா என்றுதான் அவரை நாம் சுருக்கமாக அழைப்பது வழக்கம். தற்போது ஒட்டாவாவில் மின்பொறியியலாளராகப் பணி புரிந்துவருகின்றார்.) எங்களுடன் அம்முகாமில் தொண்டராக உதவி புரிந்துகொண்டிருந்தார். 

இங்குள்ள அடையாள அட்டை 'சிதம்பரம்' கப்பலில் யாழ்ப்பாணம் செல்வதற்கு முன் அகதி முகாமிலிருந்து பெறப்பட்ட அடையாள அட்டையாகும். நான் பணி புரிந்து கொண்டிருந்தது அரச திணைக்களமாதலால் தேவைப்படலாமென்று எடுத்துச் சென்ற அடையாள அட்டை. நாட்டை விட்டு நீங்கியபோது கையுடன் கொண்டு சென்ற அடையாள அட்டை. ஒரு பதிவுக்காக இங்கே.


1983 ஜூலைப்படுகொலை நினைவாக.... (July 21, 2015)

முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் சாட்சிகளாகத்திகழும் காணொளிகளை, புகைப்படங்களை எடுத்து வெளியுலகுக்குத் தந்தவர்கள் சிறிலங்காப்படையிலிருந்த சிங்களவர்கள்தாம். அதுபோல் 1983 இல் நடைபெற்ற தமிழர்களுக்கெதிராக நடைபெற்ற இனக்கலவரத்தை ஞாபகப்படுத்தும் குறியீடாக விளங்குவது பொரளையில் காடையர்கள் முன் நிர்வாணமாக்கப்பட்டுக்கொல்லப்பட்ட தமிழரின் புகைப்படம். ஆடிப்பாடிக்கொண்டிருக்கும் இரத்தவெறி பிடித்த காடையர்கள் முன் , நிர்வாணமாகக்கூனிக்குறுகி நிற்கும் அந்தத்தமிழரின் நிலை ஈழத்தமிழரின் நிலையை எடுத்தியம்பும் ஒரு குறியீடு. அந்தப் புகைப்படத்தினை எடுத்தவரும் ஒரு சிங்களவரே சந்திரகுப்த அமரசிங்க என்னும் பெயரினைக்கொண்ட அவர் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் 'அத்த' நாளிதழில் பணியாற்றிய பத்திரிகையாளர்களில் ஒருவர். 24.07.1983 அதிகாலையில் பொரளை சந்திக்கண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது.

1983 இனப்படுகொலையைப்பற்றிய நெஞ்சினை அதிர வைக்கும் கட்டுரையொன்றினை எழுதியவர் மைக்கல் றொபேர்ட்ஸ். இவரது கட்டுரை கவிஞர் சேரனின் மொழிபெயர்ப்பில் 'எண்ணித் துணிந்தே எடுத்த படுகொலை' என்னும் பெயரில் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டு காலச்சுவடு இதழில் வெளியானது. அக்கட்டுரையினை 'கறுப்பு ஜூலை நினைவாக முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

இந்தக்கட்டுரையில் சிங்கள வழக்கறிஞரான பாஸில் பெர்ணாண்டோவின் ஜூலைப்படுகொலை பற்றிய 'ஜூலை 1983: மேலும் ஒரு சம்பவம்' கவிதையினையும் கட்டுரையாளர் உள்ளடக்கியிருக்கின்றார். 83 ஜூலைப்படுகொலைபற்றி வெளிவந்த கவிதைகளில் மிகவும் முக்கியமான கவிதையாக இதனையே நான் கருதுகின்றேன். வாசிக்கும்போது நெஞ்சினை அதிர வைக்கும் கவிதை. இது பற்றிக் கட்டுரையாளர் பின்வருமாறு குறிப்பிடுவார்:

"1985இல் இந்தக் கவிதையை முதல்முறை வாசித்தபோது என்னுடைய எலும்புகள் உறைந்தன. கவிதையில் இடம்பெற்ற சம்பவங்கள் கற்பனையானவை என நான் நினைக்கவில்லை. கவிதை தருகிற துல்லியமான வர்ணனையும் விவரங்களும் நேரடிச் சாட்சியம் இன்றிச் சாத்தியப்பட்டிருக்காது. நேரில் பார்த்த ஒரு சிங்களவரின் சாட்சியம். வலியுடன் ஆனால், சிங்களவர் என்ற வகையில் பாதுகாப்பான நிலையிலிருந்து பார்த்த ஒரு நேரடிச் சாட்சியம். இந்தச் சம்பவத்தை பாஸில் ஃபெர்னாண்டோ நேரடியாகப் பார்க்கவில்லை. நேரில் பார்த்தவர் பாஸிலின் நண்பர் ஒருவர். நாரஹேன்பிட்டியாவில் இருக்கும் தொழில் திணைக்களத்துக்கு அருகே சம்பவம் நடந்தது. வேறு பல வன்முறைச் சம்பவங்களை அந்த வாரம் நேரடியாகப் பார்த்திருந்தமையால், உயிருடன் கொளுத்திய சம்பவங்கள் வெகு சாதாரணமாக இடம்பெற்றன என்கிறார் பாஸில் ஃபெர்னாண்டோ"

பாஸில் ஃபெர்னாண்டோவின் கவீதை கீழே:

ஜூலை 1983: மேலும் ஒரு சம்பவம் (தமிழில் கவிஞர் சேரன்)



இறந்தவர்களைப் புதைப்பது
ஒரு கலையாகவே வளர்ந்திருந்த எமது காலத்தில்
இந்த நிகழ்வு மட்டும் அழிய மறுத்து எஞ்சியிருப்பதற்குக்
காரணம் ஏதுமில்லை
சத்தியமாகச் சொல்கிறேன்:
நான் உணர்ச்சிபூர்வமானவன் அல்லன்
சித்தம் குழம்பியவனாகவும் ஒருபோதும் இருந்ததில்லை
உங்களைப் போலவே
நானும் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தயங்குபவன்
மேலும் அன்றாட வாழ்க்கையிலும்
நான் ஒரு யதார்த்தவாதி
எச்சரிக்கை உணர்வுள்ளவனும்கூட
மறந்துவிடு என்று அரசு ஆணையிட்டால்
உடனடியாகவே மறந்துவிடுகிறேன்
மறப்பதில் எனக்கிருக்கும் ஆற்றல் பற்றி எவருக்குமே ஐயமிருந்ததில்லை
என்னை ஒருவரும் குறை சொன்னதும் கிடையாது
எனினும் அந்தக் கும்பல் அந்தக் காரை
எப்படித் தடுத்து நிறுத்தியது என்பதை
இப்போதும் நான் நினைத்துப் பார்க்கிறேன்
காருக்குள் நாலு பேர்
பெற்றோர், நாலு அல்லது ஐந்து வயதில்
ஆணும் பெண்ணுமாய் இரு குழந்தைகள்
ஏனைய கார்களை எப்படித் தடுத்து நிறுத்தினரோ
அப்படித்தான் இந்தக் காரையும் தடுத்து நிறுத்தினார்கள்
எந்த வேறுபாடும் இல்லை
குதூகலம் கொப்பளிக்கின்ற மனநிலையில்
ஒரு சில கேள்விகள் செய்வதைப்
பிழையறச் செய்ய விரும்பும் கவனமாய் இருக்கலாம்
பிறகு செயலில் இறங்கினர் வழமைபோல
பெட்ரோல் ஊற்றுவது, பற்றவைப்பது போன்ற விடயங்கள்
ஆனால், திடீரென்று யாரோ ஒருவன்
காரின் கதவுகளைத் திறந்தான்
அழுது அடம்பிடித்துப் பெற்றோரைவிட்டு விலக மறுத்த
இரண்டு குழந்தைகளையும் வெளியே இழுத்தெடுத்தான்
குழந்தைகளின் உணர்வுகளைக் கவனத்தில் எடுக்காமல் இருப்பது
சில சமயங்களில் குழந்தைகளுக்கு நல்லது என
அவன் எண்ணியிருக்கக்கூடும்
துரிதமாக இயங்கிய இன்னொருவனோ தீக்குச்சியைக் கிழித்தான்
சூழவர எரிந்துகொண்டிருந்த பலவற்றோடு
இந்த நெருப்பும் சேர்ந்துகொண்டது
அருகே நின்று தமது சாகசங்களைப் பற்றிப்
பேச ஆரம்பித்தனர் கொஞ்சப் பேர்
கலைந்து போனார்கள் ஒரு சிலர்
காருக்குள் இருந்த இருவரும் என்ன எண்ணியிருப்பார்கள்
என்பதைப் பற்றி யார் கவலைப்பட்டார்கள்
சமாதான விரும்பிகளாக மக்கள்
தமது வீடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்தனர்
அப்போதுதான் திடீரென உள்ளேயிருந்தவர்
கார்க் கதவை உடைத்து வெளியே பாய்ந்தார்
சட்டையிலும் தலைமயிரிலும் ஏற்கனவே தீ பற்றிவிட்டிருந்தது
குனிந்தவர் தன் இரண்டு குழந்தைகளையும் வாரி எடுத்தார்
எங்கும் பாராமல் கவனமாகத் திட்டமிட்டு எடுத்த முடிவை
செயல்படுத்துவதுபோல உறுதியுடன் காருக்குள் திரும்பி ஏறினார்
கதவை மூடினார்
தனித்துவமான அந்த ஒலியை நான் கேட்டேன்
எரிந்தழிந்த கார் இப்போதும் தெருவோரம் கிடக்கிறது
ஏனையவற்றோடு இன்னும் சில நாட்களில்
மாநகர சபை அதனை அகற்றக்கூடும்
தலைநகரின் தூய்மையே ஆட்சியாளரின் தலையாய பணி.

1983 இனக்கலவரத்தில் அகப்பட்டவர்களில் நானுமொருவன். அதனை எனது 'குடிவரவாளன்' நாவலில் பதிவு செய்திருக்கின்றேன். 


கறுப்பு ஜூலை 1983 நினைவாக: ஒரு புகைப்படமும், ஒரு கவிதையும் , ஓர் ஓவியமும் மற்றும் ஒரு கட்டுரையும்! 
 

ஈழத்தமிழர்களின் வரலாற்றில் 1958, 1977, 1983 இனப்படுகொலைகள், 2009 நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பேரழிவுகள் எல்லாம் இரத்தக் கரை படிந்த அத்தியாயங்கள். இவற்றுகிடையிலும் அவ்வப்போது தமிழ் மக்கள் மீது இனரீதியிலான தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. படையினரின் தாக்குதல்கள் நடைபெற்றிருக்கின்றன. புகழ்பெற்ற யாழ் பொதுசன நூலகம் எரிபட்டிருக்கின்றது. இவற்றில் 1983 யூலையில் நடைபெற்ற இனக்கலவரமும், சிறைச்சாலைப் படுகொலைகளும் அதுவரை உள்நாட்டுப்பிரச்சினையாகக் கருதப்பட்ட ஈழத்தமிழர்களின் பிரச்சினையை உபகண்டப்பிரச்சினையாக, சர்வதேசப்பிரச்சினையாக மாற்றி வைத்தன. ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை வீறுகொள்ள வைத்தன. இலட்சக்கணக்கில் ஈழத்தமிழர்களை அகதிகளாக உலகின் பல நாடுகளையும் நோக்கிப்படையெடுக்க வைத்தன.

இக்கலவரத்தின் குறியீடாக இருக்கும் இந்தப்புகைப்படத்தைப் பார்க்கும் போதெல்லாம் நெஞ்சில் நெஞ்சில் இனம் புரியாத வேதனை பரவும். கூனிக்குறுகி அடிபணிந்து மரணத்தின் முன்னால் ஒடுங்கி நிற்கும் அந்தத்தமிழரின் நிலை ஓரினத்தின் நிலையினை வெளிப்படுத்தும் குறியீடு. கறுப்பு ஜூலையின் கோர முகத்தின் வெளிப்பாடு. இந்தப் புகைப்படத்தினை எடுத்தவர் ஒரு சிங்களவர். சந்திரகுப்த அமரசிங்க என்னும் பெயரினைக்கொண்ட அவர் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் 'அத்த' நாளிதழில் பணியாற்றிய பத்திரிகையாளர்களில் ஒருவர். 24.07.1983 அதிகாலையில் பொரளை சந்திக்கண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது.

ஜூலை இனப் படுகொலை நினைவாக ஓவியர் புகழேந்தி அவர்கள் வரைந்த ஓவியமும் 83 இனப்படுகொலை  பற்றியதொரு குறியீடே. அவரது 'போர் முகங்கள்' என்னும் தொகுப்பிலுள்ள "உயிராயும் பிணமாயும்" என்னும் தலைப்பைக்கொண்ட ஓவியமது.

1983 இனப்படுகொலையைப்பற்றி 'Visual Evidence I: Vitality, Value and Pitfall – Borella Junction, 24/25 July 1983' என்னும் கட்டுரையொன்றினை எழுதியிருக்கின்றார் மைக்கல் றொபேர்ட்ஸ் (Michael Roberts). இவர் 'துப்பாகி' என்னும் புகழ் மிக்க வலைப்பதிவொன்றினையும் வைத்துள்ளார். 

இவரது கறுப்பு ஜூலை 1983 பற்றிய கட்டுரையொன்று 'எண்ணித் துணிந்தே எடுத்த படுகொலை' என்னும் பெயரில் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுக் காலச்சுவடு இதழில் வெளியானது. இதனை மொழிபெயர்த்தவர் கவிஞர் சேரன். இந்தக்கட்டுரையில் சிங்கள வழக்கறிஞரான பாஸில் பெர்ணாண்டோவின் ஜூலைப்படுகொலை பற்றிய 'ஜூலை 1983: மேலும் ஒரு சம்பவம்' கவிதையினையும் கட்டுரையாளர் உள்ளடக்கியிருக்கின்றார். 83 ஜூலைப்படுகொலைபற்றி வெளிவந்த கவிதைகளில் மிகவும் முக்கியமான கவிதையாக இதனையே நான் கருதுகின்றேன். வாசிக்கும்போது நெஞ்சினை அதிர வைக்கும் கவிதை. இது பற்றிக் கட்டுரையாளர் பின்வருமாறு குறிப்பிடுவார்:

"1985இல் இந்தக் கவிதையை முதல்முறை வாசித்தபோது என்னுடைய எலும்புகள் உறைந்தன. கவிதையில் இடம்பெற்ற சம்பவங்கள் கற்பனையானவை என நான் நினைக்கவில்லை. கவிதை தருகிற துல்லியமான வர்ணனையும் விவரங்களும் நேரடிச் சாட்சியம் இன்றிச் சாத்தியப்பட்டிருக்காது. நேரில் பார்த்த ஒரு சிங்களவரின் சாட்சியம். வலியுடன் ஆனால், சிங்களவர் என்ற வகையில் பாதுகாப்பான நிலையிலிருந்து பார்த்த ஒரு நேரடிச் சாட்சியம். இந்தச் சம்பவத்தை பாஸில் ஃபெர்னாண்டோ நேரடியாகப் பார்க்கவில்லை. நேரில் பார்த்தவர் பாஸிலின் நண்பர் ஒருவர். நாரஹேன்பிட்டியாவில் இருக்கும் தொழில் திணைக்களத்துக்கு அருகே சம்பவம் நடந்தது. வேறு பல வன்முறைச் சம்பவங்களை அந்த வாரம் நேரடியாகப் பார்த்திருந்தமையால், உயிருடன் கொளுத்திய சம்பவங்கள் வெகு சாதாரணமாக இடம்பெற்றன என்கிறார் பாஸில் ஃபெர்னாண்டோ"

இக்கட்டுரையை எழுதியதற்காக ஈழத்தமிழர்கள் இவருக்கு நன்றி கூற வேண்டியது அவசியம். கறுப்பு ஜூலை 1983 பற்றிய சாட்சியங்கள் பலவற்றை வெளிப்படுத்தும் சாட்சியங்களிலொன்று எனவும் இக்கட்டுரையினைக் கூறலாம்.

ஈழத்தமிழர்களின் மீது கட்டவிழ்க்கப்பட்ட இனரீதியான படுகொலைகளின் களமாக விளங்கிய கறுப்பு ஜூலை 83 கலவரத்தின் குறியீட்டுப்புகைப்படத்தையும், கவிதையினையும் , மேற்படி கட்டுரையினையும் நமக்குத்தந்தவர்கள் அவ்வினத்தின் மனிதாபிமானம் மிக்க மானுடர்கள் என்பதையும் இத்தருணத்தில் நினைவு கொள்வது நல்லது.

இலங்கையின் மக்கள் அனைவரும் கடந்த காலத்தவறுகளிலிருந்து பாடங்கள் கற்க வேண்டும். அவ்வறிவின் அடிப்படையில் அனைத்தின , மொழி, மத மக்களும் , சட்டரீதியாகச் சகல உரிமைகளும் பெற்று வாழுமொரு சூழலை உருவாக்கிட வேண்டும். குறுகிய சுய, அரசியல் இலாபங்களுக்காக இனவாதத்தை, மொழிவாதத்தை, மதவாதத்தை ஊதிப்பெருக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுவதை அனைவரும், குறிப்பாக ஆட்சிக்கட்டிலிருக்கும் அரசுகள் , கட்சிகள் நிறுத்த வேண்டும்.

கடந்த காலத்தவறுகளிலிருந்து பாடங்கள் படிக்காவிட்டால், மீண்டும் அதே தவறுகளையே செய்து கொண்டிருந்தால், இலங்கைத்தீவு மீண்டும் கண்ணீர்த்தீவாக மாறுவதை யாராலுமே தடுக்க முடியாது.

இத்தருணத்தில் இதுவரை இலங்கையில் நடைபெற்ற இனரீதியிலான அடக்குமுறைகளின் விளைவாக நடைபெற்ற ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவோம். 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
 
வ.ந.கிரிதரன் பக்கம்
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். இது இலாப  நோக்கற்று இயங்கும் இதழ். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. It operates on a not-for-profit basis. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்