என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் முப்பத்தி எட்டு
எழுதுகோலைத் தயாரிப்பது மற்றும் மரம்அறுக்கும் ரம்பம் ஏற்பாடு செய்வது போன்றவை எங்களின் சக்திக்கு மீறிய செயலாக இருந்தது. உண்மையாகவே, ஒரு சிறைக் கைதி போன்றே தன்னைப்பாவித்துக் கொண்டு எழுதுகோலைக் கொண்டு சுவற்றில் எழுத்துக்களைப் பொறிக்கும் வேலை தனக்கும் மற்ற அனைத்தையும்விட மிகவும் சவாலான வேலையாக இருக்கும் என்று ஜிம்மும் கருதினான். ஆனால், அதைக் கண்டிப்பாகச் செய்துதான் ஆகவேண்டும் என்று டாம் உறுதியாகக் கூறிவிட்டான். தங்களுடைய பெருமை மிகுந்த குடும்பப் பெயருடன் சேர்த்து சில கருத்துக்களைச் சுவற்றில் பொறித்து வைக்காமல் எந்த ஒரு மாநிலக் கைதியின் சிறை நிகழ்வும் இருந்ததில்லை என்று டாம் கூறினான்.
"உதாரணத்துக்கு, சீமாட்டி ஜேன் க்ரே (இங்கிலாந்து நாட்டு உயர் குடிப்பெண் - முதலில் சிறையிலிடப்பட்டு பின் தூக்கிலிடப்பட்டாள்) அவர்களை எடுத்துக் கொள்ளலாம்," அவன் சொன்னான் "அல்லது பழைய நார்தும்பர்லாண்ட் நாட்டைச் சார்ந்த கில்ஃபோர்ட் டட்லி (ஜேன் க்ரேயின் கணவர் - அவரும் மனைவியுடன் சிறையிலடைக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்) என்பாரை எடுத்துக் கொள்வோம். ஏன், அவர்கள் அப்படிச் செய்யவில்லையா? இதில் என்ன கஷ்டம் இருக்கப் போகிறது? நாம் என்ன செய்ய முடியும்? இதை எப்படித் தவிர்க்க முடியும்? ஜிம்மும் அதே போன்றே தனது குடும்பப் பெருமை மற்றும் கூட சில விஷயங்களை பொறித்துத்தான் ஆக வேண்டும் . அவர்கள் எல்லாம் செய்தார்கள் அல்லவா!"
"ஆனால், மாஸ்டர் டாம்! எனக்குக் குடும்பப் பெருமை என்றெல்லாம் ஒன்றுமே இல்லை. இந்த கிழிந்த பழைய சட்டையைத் தவிர என்னிடம் வேறு ஒன்றும் இல்லை என்று உங்களுக்குத் தெரியும். அதிலும் நான் குறிப்பு எழுத வேண்டும்" ஜிம் பரிதாபமாகக் கூறினான்.
"அய்யோ, உனக்கு ஏன் புரிவதே இல்லை, ஜிம்! குடும்பப் பெருமை என்பது வேறு விஷயம். சட்டை பற்றிய விஷயம் இல்லை." டாம் கூறினான்.
"நல்லது," நான் கூறினேன் "ஜிம் சொல்வதும் ஒருவிதத்தில் சரியாகத்தான் இருக்கிறது. அவனுக்கு குடும்பப் பெருமை எழுத முடியாது. ஏனெனில், அப்படி ஒன்று அவனுக்குக் கிடையவே கிடையாது."
"சரி. சரி. எனக்குப் புரிகிறது" டாம் கூறினான், "ஆனால் இங்கிருந்து அவன் தப்பி வெளியே போவதற்குள், அவனுக்குக் கண்டிப்பாக ஒன்று நான் ஏற்படுத்திக் கொடுப்பேன் என்று உறுதியளிக்கிறேன். அவன் தக்கமுறையில்தான் சிறையை உடைத்துத் தப்பிப் போகவேண்டும். அவனின் தப்பிக்கும் செயலில் எந்தவிதமான குறைகளும் இருக்கக் கூடாது."
ஜிம்மும் நானும் உலோகங்களைக் கொண்டு மும்முரமாக எழுதுகோல் தயாரிக்க முனைந்தோம். பித்தளையால் ஒன்றை ஜிம் தயாரித்தான். ஒரு மேசைக் கரண்டியைக் கொண்டு நான் ஒன்று தயாரித்தேன். ஜிம்முக்குக் குடும்ப கௌரவம் தரும் ஒரு அடையாளம் கொடுப்பது பற்றி டாம் யோசித்துக் கொண்டிருந்தான். விரைவிலேயே அவனிடம் நிறைய யோசனைகள் உள்ளது என்றும் அதில் எதைப் பயன்படுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினான். ஆனால், எல்லாவற்றிலும் விட சிறந்த ஒன்று உள்ளது என்று கருதிய அவன் இவ்வாறு கூறினான்:
"நல்லது. ஒரு பெரிய கேடயத்தின் கீழ்பக்கம் அல்லது வலதுபுர டெக்ஸ்டர் பக்கத்தில் ஒரு வளைவு போட்டு ஒரு படம் போடலாம். படுத்திருக்கும் ஒரு நாயின் கூடவே ஒரு பெருக்கல் குறி போட்டு நாட்டின் குடிமகன்களுள் ஒருவன் என்று காட்டிக் கொள்ளலாம். பிணைந்திருக்கும் இரும்புச் சங்கிலிகள் போட்டு அடிமைத்தனத்தைக் குறிக்கும்படி வைக்கலாம். அத்துடன், கூடவே தலைகீழான v போன்ற அமைப்பையும் சேர்க்கலாம். மெல்லிய நீல நிறப் பகுதியில் வளைந்து ஓடும் கோடுகள் வரைந்து வைக்கலாம். அதனின் முக்கிய புள்ளிகள் வளைந்து ஓடும் உள்வெட்டுத் தடத்தில் அதிகம் பரந்து இருக்கும்படி வரையலாம். அதனுடன், தப்பி ஓடிய ஒரு நீக்ரோ தனது இடது பக்கத் தோளில் கறுப்புநிற இரும்புத் தண்டின் மேலே ஒரு தானியக்கட்டு சுமப்பதுடன், சில மனிதர்கள் துணைக்கு நிற்பது போன்ற படம் போடலாம். அந்த மனிதர்கள் நீயும் நானும்தான், ஹக்! இந்த மரபுச் சின்னத்தினிலுள்ளே "மகோரி பிரெட்டா மைனோர் ஓட்டோ" என்ற லத்தின் மொழி வாசகத்தை இணைக்கலாம். இந்த வாசகத்தை நான் ஒரு புத்தகத்திலிருந்து எடுத்தேன். அதன் பொருள் "அதிக அவசரம், குறைந்த வேகம்" என்பதேயாகும்."
"மிகவும் அருமை" நான் கூறினேன் "ஆனால் மற்ற அனைத்தும் எந்த அர்த்தத்தைக் குறிக்கிறது?"
"அது பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருக்க இப்போது நேரமில்லை," அவன் கூறினான், "உடனடியாக, நாளை என்பது ஒன்றுக்காக காத்திராமல் இப்போதே பள்ளம் தோண்ட ஆரம்பிக்க வேண்டும்."
"சரிதான். இருந்தாலும், அதில் உள்ள சில விஷயங்களையாவது எனக்கு விளக்கிக் கூறுவாயா? அதில் உள்ள பட்டையான குறுக்குக் கோடுகளுக்கு என்ன அர்த்தம்?" நான் கேட்டேன்
"பட்டைக் குறுக்குக் கோடுகள்? அந்த குறுக்குக் கோடுகள் ...............நல்லது. அது என்னவென்று தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் உனக்கில்லை. அதை எப்படி உருவாக்குவது என்று வேணுமானால் அதை வரையும்போது அவனுக்குச் செய்து காட்டுகிறேன்."
"அட, டாம்! இதையாவது கூறு. கேடயத்தின் இடப்புறத்தில் உள்ள அந்த இரும்புக் கடப்பாரை பற்றியாவது கூறு." நான் கெஞ்சிக் கேட்டேன்.
"ஓ, எனக்குத் தெரியாது. ஆனால், அது அவனுக்கு இருக்க வேண்டும். அப்படித்தான் அனைத்து உயர்குடிமக்களும் வைத்திருப்பார்கள்."
எதையாவது உங்களுக்கு விளக்கிக் கூற விருப்பமில்லையென்றால், இப்படித்தான் டாம் செய்வான். விளக்கம் தர மாட்டான். ஆனால், அதில் பெரிதாக எந்த வித்தியாசத்தையும் நீங்கள் உணர மாட்டீர்கள்.
குடும்பப் பெருமை அடையாளம் சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் அவன் செய்து முடித்த பிறகு, திட்டத்தின் கடைசிப் பகுதியை நன்கு செம்மைப்படுத்தலானான். ஜிம் பொறிக்க வேண்டிய துக்ககரமான விஷயங்களைத் தயார் செய்தான். அனைத்து சிறைக் கைதிகளையும் போலவே, ஜிம்மும் ஒன்று வைத்திருக்க வேண்டியது அவசியம் என்று டாம் கூறினான். பொறித்துவைக்க வேண்டிய பல்வேறு விதிகளை ஒரு தாளில் எழுதி முன் வைத்தான். பின்னர் அவற்றை எங்களுக்குப் படித்துக் காட்டலானான்.
அவையாவன பின்வருமாறு:
1. இங்கே, ஒரு சிறைப்பட்ட ஒரு இதயம் சிதைந்தது
2. இங்கே, தன் நண்பர்களாலும், உலகத்தாலும் வஞ்சிக்கப் பட்ட ஒரு அப்பாவிக்
கைதி தன் சோக வாழ்க்கையை வேதனையுடன் நடத்தினான்.
3. இங்கே, முப்பத்தியேழு வருட தனிமை வாழ்வில் வேதனையுற்றுத் துவண்ட
ஒரு ஆத்மா மடிந்தது.
4. இங்கே முப்பத்தியேழு வருட கொடுமையான சிறை வாழ்வுக்குப் பின்
வீடிழந்த, நண்பர்களை இழந்த ஒரு உயர்குடி வெளிநாட்டவன், உண்மையில்
பதினாலாம் லூயி மன்னரின் மகன் பூவுலகை விட்டு மறைந்தான்.
இவற்றை வாசிக்கும்போது டாமின் குரல் நடுங்கியது. உடைந்து போன அவன் அழ ஆரம்பித்தான். இவற்றை அவன் எழுதி முடித்த பின், அனைத்துமே உள்ளத்தைத் தொடும்படியாக இருந்ததால், அவற்றில் எதை அங்கே சுவற்றில் எழுதுவது என்று டாமினால் முடிவு செய்ய முடியவில்லை. இறுதியாக, அவை எல்லாவற்றையுமே சுவற்றில் ஜிம் எழுதி வைப்பது என்று டாம் முடிவு செய்தான். இந்த வாசகங்களை மரக்கட்டை சுவற்றில் ஆணியால் பொறித்து முடிக்க தனக்கு ஒரு வருடமாவது பிடிக்கும் என்று ஜிம் கூறினான். அத்துடன், தனக்கு அந்த எழுத்துக்களை எப்படி எழுதுவது என்றே தெரியாது என்றும் ஜிம் கூறினான். டாம் அவனுக்காக ஸ்டென்சில் போன்ற ஒன்றை தயார் செய்து கொடுப்பதாகவும், அதை வைத்து அதன் மேல் இருக்கும் வரி வடிவங்களை ஜிம் வரைந்தால் போதும் என்றும் டாம் கூறினான்.
"இப்படி நினைத்துக்கொள். இந்த மரக்கட்டைகள் ஒன்றுமே கிடையாது. உண்மையில் பாதாளச் சிறைகளில் மரக்கட்டைச் சுவர்கள் கிடையாது. நம்முடைய பொறிக்கும் காரியத்தை ஒரு கற்பாறையின் மேல் செதுக்குவது நல்லது. நாம் ஒரு பாறை பார்த்து எடுத்து வரவேண்டும்." வெகு விரைவிலேயே, டாம் இவ்வாறு கூறினான்.
பாறை இதை விடக்கேவலமாக இருக்கும் என்று ஜிம் கூறினான். பாறையில் ஒவ்வொரு எழுத்தையும் செதுக்க வெகு நீண்ட நேரம் பிடிக்கும் ஆதலால், அவன் அந்தச் சிறையிலிருந்து என்றுமே தப்பிக்க முடியாது என்று ஜிம் கூறினான். ஆனால் என்னை அவனுக்கு உதவி செய்ய அனுமதிக்கப் போவதாக டாம் கூறினான். பின்னர், ஜிம்மும், நானும் எப்படி எழுதுகோல்களைச் சரியாகக் கையாள்கிறோம் என்று டாம் பார்வையிட்டான். கடினமான உழைப்புடன் மிகுந்த சிரமத்தை எங்களுக்குக் கொடுக்கும் வேலையாக அது இருந்தது. அந்த வேலை என் கையிலுள்ள காயத்தை ஆறிவிட அனுமதிக்கவே இல்லை. எங்களின் வேலையில் எந்த முன்னேற்றமும் நாங்கள் காணவேயில்லை.
எனவே, "இதை எப்படிச் செய்வது என்று எனக்குத் தெரியும். குடும்பப் பெருமைச் சின்னம் மற்றும் சோக வாசகங்கள் பொறிக்கத் தேவையான ஒரு பாறை நமக்கு வேண்டும்.. ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்வீழ்த்துவது போல ஒரே பாறையில் இரண்டு விஷயங்களையும் செதுக்கிக் கொள்ளலாம். இந்த ஆலையின் கீழே நிறைய கற்பாறைகள் உள்ளன. அதைத் திருடுவோம். அதில் எல்லா விஷயங்களையும் பொறித்து வைப்போம். அத்துடன் எழுதுகோல்களையும், மரம் அறுக்கும் ரம்பத்தையும் அதன் மேல் வைத்து விடுவோம்." என்று டாம் கூறினான்.
அது ஒன்றும் மோசமான யோசனையில்லைதான். இருந்தாலும், அங்கே சிறியதாக எந்த பாறையும் காணப்படாததால், எப்படியாவது அதைச் சமாளிப்பது என்று முடிவு கட்டினோம். அப்போது இன்னும் நள்ளிரவு நேரம் ஆகவில்லை. எனவே, ஜிம்மை அங்கே வேலை செய்ய விட்டுவிட்டு, நாங்கள் ஆலையை நோக்கி நடந்தோம். ஒரு கற்பாறையைக் கண்டுபிடித்து அதை வீட்டுக்கு உருட்டிக் கொண்டுவந்தோம். ஆனால், அதுதான் உலகிலேயே மிகவும் கடினமான காரியம். எங்களின் முழுப் பலத்தையும் பிரயோகித்து, அது மீண்டும் நழுவி உருண்டு விடாமலிருக்க கடும் பிரயத்தனப்பட்டோம். ஒவ்வொரு முறையும் அது எங்களையே நசுக்கிக் கொன்றுவிடும் போல இருந்தது. நாங்கள் அதை கொண்டு வந்து சேர்ப்பதற்குள், எங்களில் யாரெனினும் ஒருவரை நசுக்கிக் கொன்று விடும் போல இருப்பதாக டாம் கூறினான்.
பாதித் தூரம் நகர்த்தி கொண்டு வந்து சேர்ப்பதற்குள், எங்களின் சக்தி முழுதும் கரைந்துபோய், வேர்வை மழையில் தெப்பமாக நாங்கள் நனைந்திருந்தோம். இனி இது எங்களுக்குச் சாத்தியப்படாது என்று உணர்ந்த நாங்கள், சென்று ஜிம்மை உதவிக்கு அழைத்து வருவது என்று முடிவு கட்டினோம். எனவே கட்டிலின் காலை ஒருபுறமாகத் தூக்கி, சங்கிலியை அங்கிருந்து இழுத்து நகர்த்தி ஜிம் வெளியே வந்தான். நீளமாகக் காலில் தொங்கும் சங்கிலியைத் தனது கழுத்தில் சுற்றிக் கொண்ட ஜிம் அந்த துவாரத்தின் வழியாக எங்களுடன் ஊர்ந்து வெளியே வந்து, பாறையை விட்டுவிட்டு வந்திருந்த கீழ் பகுதிக்கு வந்து சேர்ந்தான். ஜிம்மும் நானும் எங்களின் முழுப்பலத்தையும் கொண்டு அந்த பாறையைத் தள்ள முற்பட்டபோதும், அது கொஞ்சம் கூட அசையவேயில்லை. எங்களின் வேலையைக் கண்காணிக்கும் பணியில் டாம் இருந்தான். நான் பார்த்த வேறு எந்தச் சிறுவனையும் விட கண்காணிக்கும் பணியில் டாம் சிறந்து விளங்கினான் என்பது என் கருத்து. எல்லாவற்றையும் எப்படிச் செய்வது என்று அவனுக்குத் தெரிந்திருந்தது.
எப்படியோ நகர்த்திக் கொண்டு வந்தாலும், மனிதன் நுழையும் அளவு நாங்கள் துளையிட்ட பெரிய அந்த துவாரத்திற்குள் பாறாங்கல் நுழைய இடமில்லை. எனவே, மண்வெட்டியை எடுத்து ஜிம் அந்தப் பள்ளத்தை இன்னும் கொஞ்சம் பெரியதாகத் தோண்டினான். பின்னர் உள்ளே எடுத்துச் சென்ற அந்தக் கல்லில் ஆணியைக் கொண்டு டாம் வரைய ஆரம்பித்தான். டாம் வரைந்த கோடுகளின் மீது ஜிம் செதுக்க ஆரம்பித்தான். ஆணியை உளியாகவும், குப்பையில் கிடந்த ஒரு பெரிய இரும்புக்கட்டியை சுத்தியாகவும் கொண்டு அந்த வேலையை ஜிம் செய்தான். அங்கு எரிந்துகொண்டிருந்த மெழுகுவர்த்தி அணைந்து தீரும்வரை, டாம் ஜிம்முக்கு அனைத்து வேலையையும் சொல்லிக்கொடுத்தான். ஒரு கட்டத்தில், தூங்க செல்லும் நேரம் வந்துவிட்டதால், ஜிம் அந்த பெரிய பாறாங்கல்லை, தனது வைக்கோல் படுக்கையின் கீழ் மறைத்து வைத்தான். ஜிம்மின் கால் சங்கிலியை பழையபடியே கட்டில்காலுடன் மாட்டிவைக்க நாங்கள் அவனுக்கு உதவினோம். இப்போது நாங்கள் அனைவரும் தூங்கச் செல்லத் தாயாராகிவிட்டோம்.
ஆனால், எதையோ யோசித்த டாம், இவ்வாறு கூறினான், "இங்கே ஏதாவது சிலந்திகள் உள்ளதா, ஜிம்?"
"இல்லை சார். நல்ல வேளை! அவைகள் இங்கு இல்லை, மாஸ்டர் டாம்!"
"சரிதான். அப்போ நாங்கள் கொஞ்சம் கொண்டு வந்து உனக்குக் கொடுக்கிறோம்."
"ஐயோ, நீ நன்றாக இருப்பாய், ஐயனே! எனக்கு அவை எதுவும் வேண்டாம். அவைகளைக் கண்டால் எனக்கு மிகுந்த பயம். அவைகளுக்கு பதிலாகப் பாம்புகளைக் கூட நான் சகித்துக் கொள்வேன்."
ஒன்றிரண்டு நிமிடம் யோசித்த டாம் மீண்டும் கூறினான். "இது கூட நல்ல யோசனையாக உள்ளதே! இதுவும் விரைவில் நிறைவேற்றி வைக்கப்படும் என்று நான் உறுதி அளிக்கிறேன். கண்டிப்பாக அது செய்யப் படவேண்டும். அப்படிச் செய்தால்தான் இதற்கு முழு அர்த்தம் கிடைக்கும். ஆம். அது நல்ல ஒரு யோசனைதான். அதை நீ எங்கே வைத்துக் கொள்வாய்?"
"எதை வைத்துக் கொள்வது, மாஸ்டர் டாம்?"
"வேறு எதை, அந்தப் பாம்பைத்தான்."
"அடங்கொய்யாலே! மாஸ்டர் டாம்! ஏன் இப்படி? அப்படி ஒரு விஷப் பாம்பு இங்கே வந்தால், நான் என் தலையை அந்த மரக்கட்டைச் சுவரில் மோதிச் சிதைத்துக் கொள்வேன்."
"ஆனால், ஜிம்! நீ சிறிது காலம் இப்படியெல்லாம் பயப்படவே கூடாது. அதை நீ பழக்கப்படுத்திக் கொள்ள முடியும்."
"அதைப் பழக்கப்படுத்துவது!"
"ஆம். அது ரொம்பச் சுலபம். எல்லா விலங்குகளும் அன்புக்கும், செல்ல வளர்ப்புக்கும் கட்டுப்பட்டவை. யார் அவற்றை செல்லமாக வளர்க்கிறார்களோ, அவர்களை அவை காயப்படுத்த முனையாது. எல்லா புத்தகங்களிலும் இப்படித்தான் கூறப்பட்டுள்ளது. கொஞ்சம் முயற்சி செய்து பாரு. அதுதான் நான் உன்னைக் கேட்பது எல்லாம். இரண்டு மூன்று நாட்கள் முயற்சித்துப் பார். ஏன், நீ அவனிடம் காட்டும் அன்பினால், அவன் உன்னை மிகவும் நேசிக்க ஆரம்பித்து விடுவான். உன்னுடனே தூங்கிக் கொண்டு, உன்னை விட்டு ஒரு கண நேரமும் பிரிந்திருக்க மாட்டான். உன் கழுத்தைச் சுற்றிப் பின்னிக் கொண்டு அவன் தலையை உன் வாயில் வைத்து கொண்டு ஆனந்தமாயிருப்பான்.”
"மாஸ்டர் டாம். தயை கூர்ந்து அவ்வாறு பேசாதே. என்னால் அதைச் சகிக்க முடியவில்லை. அவன் தலையை என் வாயில் வைத்துக் கொள்வானா - அதும் செல்லமாக - ஹும்க் ? அப்படி அவனைச் செய்யச் சொல்லி நான் கேட்க அவன் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். அதுக்கும் மேல் என்ன, அவன் என்னுடன் தூங்குவது எனக்குத் தேவையே இல்லை."
"ஜிம்! முட்டாள்தனமாக பேசாதே. ஒரு சிறைக்கைதி கண்டிப்பாக ஒரு பேசாமடந்தை விலங்கு வைத்திருக்கவேண்டும். ஒரு விஷப்பாம்பை இதுவரை யாரும் வைத்திருக்கவில்லையெனில், ரொம்ப நல்லதாகப் போயிற்று. வேறு எந்த வகையிலும் நீ நினைத்துக் கூடப் பார்க்க முடியாத பெருமையை, முதன்முதலில் பாம்பைத் தன் செல்லப்பிராணியாக வளர்த்த விஷயத்தில் நீ அடைவாய்."
"ஆனால், மாஸ்டர் டாம்! எனக்கு அது போன்ற எந்த விதமான பெருமையும் தேவையில்லை. ஒரு விஷப் பாம்பு என் தாடையைக் கடித்துக் குதறிவிட்டால், அப்புறம் அதில் என்ன பெருமை வாழ்ந்து தொலைக்கப் போகிறது? வேண்டாம் சார்! எனக்கு அப்படி எந்தப் பெருமையும் வேண்டவே வேண்டாம்.”
"மடத்தனம்! ஏன் முயற்சிக்கவே மாட்டேன் என்கிறாய்? நீ முயற்சியாவது செய்ய வேண்டும் என நான் எண்ணுகிறேன். அப்படி அது சரிவரவில்லையென்றால், அதை நீ திரும்பவும் செய்ய வேண்டாம் என்கிறேன்."
"ஆனால் விஷப் பாம்பை எனது செல்லப் பிராணியாக மாற்றும் முயற்சியில், பாம்பு என்னைக் கடித்து விட்டால், கதையே முடிந்து விடும். மாஸ்டர் டாம். ஏதேனும் சரியான காரணம் கொண்ட ஒன்றை நீங்கள் சொன்னால், அதை நான் முயற்சிக்கத் தயங்கமாட்டேன். ஆனால் ஒரு விஷப் பாம்பை என்னிடம் பழக நீங்களும், ஹக்கும் சேர்ந்து எனக்காகக் கொண்டு வர முயற்சித்தால், கண்டிப்பாக இந்த இடத்தை விட்டு நான் சென்று விடுவேன். அது திண்ணம்."
"சரி, சரி. அத்தனை உறுதியாக நீ இருந்தால், அதை விட்டுவிடலாம். ஏதாவது நீர் பாம்பு போன்ற விஷமற்ற பாம்பைப் பிடித்து அதன் வாலில் சில பொத்தான்களைக் கட்டிவிட்டு, விஷப்பாம்பு போன்ற தோற்றத்தை உருவாக்கலாம். அது செய்யலாம் என்று நினைக்கிறேன்."
"அந்த மாதிரி பாம்புகளை என்னால் சகித்துக் கொள்ள முடியும், மாஸ்டர் டாம்! ஆனால், நாசமாய் போன அவைகள் எதுவும் இல்லாமலும் என்னால் இருக்க முடியும் என்று உங்களுக்கு நான் கூறுகிறேன். ஒரு சிறைக்கைதியை விடுவிக்க இத்தனை ஆர்ப்பாட்டம் ஏன் என்று எனக்குப் புரிந்து கொள்ளவே முடியவில்லை."
"நல்லது. இந்த விஷயத்தை முறைப்படி செய்ய நினைத்து இத்தனை முயற்சிகள் எடுக்கும்போது சில சமயம் இப்படித்தான் நடக்கும். இங்கே எலிகளாவது உள்ளதா?
"இல்லை சார். நான் எதுவும் இங்கே பார்த்ததில்லை."
"நல்லது. நாங்கள் சில எலிகளைப் பிடித்துக் கொண்டு வந்து விடுகிறோம்."
“மாஸ்டர் டாம்! எனக்கு எந்த எலியும் வேண்டாம். நான் பார்த்ததிலேயே, மிகுந்த தொல்லை தரக்கூடிய மோசமான உயிரினங்கள்தான் அவைகள். ஒரு மனிதனின் உடல் முழுதும் குடுகுடுவென ஓடி, அவன் தூங்க நினைக்கும் சமயம் அவனது காலைக் கடித்து வைத்துவிடும். வேண்டாம் சார். ஏதேனும் ஒன்று நான் வைத்துகொண்டுதான் ஆகவேண்டுமெனில், பேசாமல் விஷமற்ற அந்த நீர் பாம்புகளையே கொடுங்கள். ஆனால், எலிகளை எனக்குக் கொடுத்து விடாதீர்கள். அவைகளை வைத்துக் கொண்டு எனக்கு எந்த பிரயோசனமும் இல்லை.”
"ஆனால், ஜிம்! நீ அவைகளை வைத்துக் கொண்டுதானாகவேண்டும். அனைத்து சிறைக்கைதிகளும் வைத்திருந்தார்கள். இது பற்றி மேற்கொண்டு எந்தப் பிகுவும் செய்யாதே. கைதிகள் எப்போதுமே எலியுடன்தான் இருப்பார்கள். எலியுடன் வாழாத ஒரு கைதியைக் கூட மேற்கோள் காட்டமுடியாது. அவற்றிற்குப் பயிற்சி கொடுத்து, பழக்கி வைத்து, தந்திரங்களைச் சொல்லிக் கொடுத்து அவர்கள் வைத்திருந்ததால், அந்த எலிகள் ஒரு கட்டத்தில் பூச்சிகள் போல மனிதர்களுடன் கலந்து பழகும் தன்மை கொண்டவர்களாக மாறிவிடும். ஆனால், அவைகளுக்கு கீதம் நீ இசைத்துக் காட்டவேண்டும். சங்கீதம் போட்டுக் காண்பிக்க உன்னிடம் ஏதேனும் உள்ளதா?"
"ஒரு அழுக்கு சீப்பு, ஒரு துண்டுத்தாள் மற்றும் ஒரு ஊதுகுழல் போன்ற ஒரு கருவி இவை தவிர என்னிடம் வேறு ஒன்றுமில்லை. ஆனால், எலிகளுக்கு ஊதுகுழலிலிருந்து வரும் சங்கீதம் பிடிக்காது என்றே நான் கருதுகிறேன்."
"ஆம். அவைகளுக்குப் பிடிக்கும். அது எந்த மாதிரியான சங்கீதம் என்பது பற்றியெல்லாம் அவைகளுக்குக் கவலை இல்லை. புல்லாங்குழல் போன்ற ஊதுகுழல் கண்டிப்பாக எலிகளுக்கு நல்லது. சிறையில் இருக்கும் அனைத்து விலங்குகளுமே இசையை ரசிக்கும். மிகவும் அதிகமாக ரசிக்கும். அதிலும் சோக ராகம் மேலோங்கி நிற்கும் இசையை மிகவும் ரசிக்கும். நீ வைத்திருக்கும் ஊதுகுழல் கொண்டு வேறு எந்த இசையையும் வாசிக்க முடியாது. சோக ராகம் அவைகளை என்றுமே ஈர்த்து விடும் தன்மை கொண்டவை. ஏதோ கெட்டது நடந்துவிட்டது என்று நினைத்து எலிகள் தங்களின் வங்குகளில் இருந்து வெளியே வந்து பார்க்கும். ஆம். நீ இப்போது நன்கு தயாராகி விட்டாய். தூங்கும் முன் உன்னுடைய படுக்கையில் அமர்ந்து கொண்டும், அதிகாலை நீ படுக்கையிலிருந்து எழுந்திருக்கும் போதும், உன்னுடைய ஊதுகுழல் கொண்டு "கடைசித் தொடர்பும் அறுக்கப்பட்டது" என்ற பாடலை இசைக்கவேண்டும். இந்தப் பாடல் வேறெதையும் விட எலிகளைக் கவர்ந்து இழுத்து விடும். அவ்வாறு இசைக்கத் தொடங்கிய இரண்டு நிமிடங்களுக்குள், அனைத்து எலிகளும், பாம்புகளும், சிலந்திகளும் உன்னைப் பற்றி கவலை கொண்டு உன்னிடம் வரத்தொடங்கும். உன்னை சுற்றி அவைகள் கூட்டம் கூடி நன்கு நேரத்தைப் போக்கும்.
"ஆம், அவைகளுக்கு நன்கு பொழுது போகும்., மாஸ்டர் டாம்! ஆனால் என் நிலைமை என்னவாகும்? இதையெல்லாம் நான் பார்க்கையில், நான் நாசமாகத்தான் போகவேண்டும் என்று நினைக்கிறன். ஆனால், இதையெல்லாம் செய்ய வேண்டுமெனில், அதைச் செய்து தொலைக்கிறேன். இந்த உயிரினங்களின் ஆசையை நான் பூர்த்தி செய்வதன் மூலம், அங்கே வீட்டில் எந்தத் தொல்லையும் இருக்காது அல்லவா?"
இன்னும் ஏதேனும் சொல்ல மறந்து விட்டோமா என்ற பாவனையில் ஒரு நிமிடம் டாம் தயங்கினான்.
விரைவிலேயே, இவ்வாறு கூறினான் "ஓ! இன்னொரு விஷயம் நான் சொல்ல மறந்து விட்டேன். இங்கே நீ ஒரு பூச்செடி வளர்க்க முடியும் என்று நினைக்கிறாயா?"
"எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னால் முடியும் என்று நான் நினைக்கிறேன், மாஸ்டர் டாம்! ஆனால், உள்ளே ஒரே இருட்டாக இருக்கிறது. மேலும் பூக்கள் வளர்த்து எனக்கு ஒரு பலனும் இல்லை. அது ஒரு தொந்திரவுதான்."
"நல்லது. முயற்சி செய். மற்ற சில கைதிகள் இதைச் செய்திருக்கிறார்கள்."
"பூனையின் வால் போன்ற தோற்றத்திலிருக்கும் பெரிய முல்லீன் தண்டுச் செடிகள் இங்கே வளரும் என்று நான் கருதுகிறேன், மாஸ்டர் டாம்! ஆனால் அந்த செடி கொடுக்கும் கஷ்டங்களை எண்ணினால், அது வளர்க்கத் தகுதியான ஒன்றே அல்ல."
"அது தகுதி வாய்ந்ததுதான். சிறிய ஒரு செடியை நாங்கள் கொண்டு வந்து கொடுக்கிறோம். அதோ, அந்த மூலையில் வைத்து நீ வளர்த்து வரலாம். அதை முல்லீன் என்று அழைக்கவேண்டாம். அதன் பெயர் பிச்சோலா! சிறையில் இந்தச் செடி வளர்ந்தால், அதன் சரியான பெயர் அதுதான். உன்னுடைய கண்ணீரால் நீ அதற்கு நீர் ஊற்றலாம்."
"ஆனால் வசந்தகால நீரே என்னிடம் நிறைய இருக்கிறது, மாஸ்டர் டாம்!"
"வசந்த காலத் தண்ணீர் எல்லாம் அதற்கு நீ ஊற்றக்கூடாது. உன்னுடைய கண்ணீர் கொண்டே அதை வளர்க்க வேண்டும். அப்படித்தான் அவர்கள் எப்போதும் செய்வார்கள்."
"ஆனால், மாஸ்டர் டாம்! அப்படியானால் நான் இரண்டு முல்லீன்கள் - ஒன்று வசந்த கால நீரிலும், இன்னொன்று கண்ணீரிலும் என்று வளர்க்க ஆரம்பிக்கிறேன்."
"அதெல்லாம் கூடாது. கண்ணீர் மட்டுமே பயன்படுத்தி வளர்க்க வேண்டும்"
"அப்படிச் செய்தால். அது மடிந்து போய் விடும், மாஸ்டர் டாம்! கண்டிப்பாக அது பட்டுப் போய் விடும். நான் அதிகம் அழுவதே இல்லை."
தாக்கப்பட்டது போல டாம் உணர்ந்தான். கொஞ்ச நேரம் அவன் சிந்தித்துப் பார்த்தான். வெங்காயம் போன்ற ஏதேனும் ஒன்றை உபயோகித்தாவது கண்ணீரை வரவழைக்க ஜிம் முயற்சிக்க வேண்டும் என்று டாம் யோசனை கூறினான். அங்குள்ள நீக்ரோ அறைகளுக்குள் சென்று வெங்காயம் ஒன்றை எடுத்து அதை ரகசியமாக ஜிம்மின் காப்பிக்கோப்பையில் வைத்து அனுப்புவது என்று உறுதியளித்தான். காப்பியோடு கொஞ்சம் புகையிலையும் சேர்த்து அனுப்புவதைத் தானும் விரும்புவதாக ஜிம் கூறினான். டாம் கூறிய அனைத்து விஷயங்களையும் ஜிம் விமர்சனம் செய்தான். முல்லீன் செடிகள் வளர்த்துவது, ஊதுகுழல் இசைப்பது, எலிகள் வளர்ப்பது, பாம்புகளைப் பழக்கி செல்லப் பிராணியாக்குவது இன்னும் சிலந்தி போன்ற விஷயங்கள் மற்றும் எழுதுகோல் கொண்டு கல்லில் பொறிப்பது, குறிப்பு எழுதி வைப்பது போன்ற அனைத்து விஷயங்களையும் கடுமையாக விமர்சனம் செய்தான்.
இந்த விஷயங்கள் மொத்தமும், கைதியாய் இருக்கும் அவனுக்கு அவன் செய்த மற்ற எல்லாச் செயல்களையும் விடக் கடும் தொல்லை தரக் கூடியவை என்றும் கூறினான். மிகவும் பொறுமை இழந்த டாம், மற்ற கைதிகளை விட தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை அதிகம் பயன்படுத்தி ஜிம் தனக்கென ஒரு பெயர் வாங்கிக் கொள்ள முடியும் என்றும், ஜிம் ஒரு மடையனாக இருந்து அதைப் பாராட்டத் தவறி விடுவதையும் குறை கூறினான். அனைத்துச் சந்தர்ப்பங்களையும் ஜிம் நழுவ விட்டுவிட்டதாகக் கோபத்தில் கூறினான், எனவே, டாமிடம் மன்னிப்புக் கேட்ட ஜிம், இனி இது போல் நடக்க மாட்டேன் என்று உறுதியளித்தான். பின்னர் டாமும், நானும் எங்கள் படுக்கையறை நோக்கிச் சென்றோம்.
[ தொடரும் ]
- முனைவர் ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D. தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். -
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.