- என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்' -
அத்தியாயம் ஆறு
நல்லது. திரும்பவும் எனது கிழவன் பழையபடி முருங்கை மரம் ஏறி விட்டான். நீதிபதி தாட்சர் மீது அந்தப் பணத்திற்காக வழக்குப் போட்டான். நான் பள்ளிக்குச் செல்கிறேனா என்று என் பின்னால் வந்து உளவு பார்க்கவும் ஆரம்பித்தான். சில சமயங்களில் என்னைக் கைப்பிடியாகப் பிடித்து, கடுமையாக அடித்தான். ஆனால் நான் பள்ளிக்குச் செல்வதைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தேன். ஒன்று அவனைத் தவிர்த்து விடுவேன் அல்லது அவன் என்னைப் பிடிக்கமுடியாத அளவு வேகமாக ஓடி விடுவேன். உண்மையில் பள்ளிக்குச் செல்வது எனக்கு முன்பெல்லாம் பிடிக்காத ஒன்று. ஆனால் இப்போது பள்ளிக்குச் செல்வது என் அப்பாவை கடுப்பேத்தும் என்பதை உணர்ந்து தவறாமல் செல்ல ஆரம்பித்தேன்.
என் அப்பா போட்ட வழக்கோ மிகவும் மெதுவாக நடந்து கொண்டிருந்தது. அவர்கள் வழக்கு நடத்தும் செயல்முறையை ஆரம்பிப்பதாகவே தெரியவில்லை. எனவே, அவ்வப்போது நான் நீதிபதி தாட்சரிடம் இரண்டு அல்லது மூன்று டாலர்கள் கடன் வாங்கி என்னை அடிக்காமல் இருக்க அப்பாவுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொருமுறையும் அவனுக்குப் பணம் கிடைக்கும்போதும் கண் மண் தெரியாமல் குடிப்பது மட்டும் அல்லாது கலாட்டா செய்து ஊரையே இரண்டாக்குவான். அப்படி ஊரில் கலாட்டா செய்யும் ஒவ்வொரு முறையும், அவனைச் சிறையில் அடைப்பார்கள். இந்த மாதிரி ஒரு வாழ்கை முறை அந்த மனிதனுக்கு மிகவும் சரியாகப் பொருந்தியது - அவனது பாதையைப் பொறுத்த வரை அவனுக்கு சரியாகப் பட்டது போலும்..
அந்த விதவையின் வீட்டைசுற்றியே அப்பாவின் நடமாட்டம் அதிகமாக இருந்த காரணத்தால், அந்த விதவை கடும் எரிச்சலுடன் இவ்வாறு தொந்தரவு செய்தால் அவன் வாழ்க்கையை கடினமாக மாற்றிவிடப்போவதாக கடைசியாக அவரை எச்சரித்தாள். அது அவனை மிகவும் கடுப்படையச் செய்தது. ஹக் ஃபின்னுக்கு யார் உண்மையான பாதுகாவலர் என்று அவளுக்குக் காட்டப்போவதாகத் தெரிவித்தான். எனவே, ஒரு வசந்த கால நாளில் மறைந்திருந்து எனக்காகக் காத்திருந்து என்னைப் பிடித்துவிட்டான். என்னை இழுத்துக்கொண்டு ஒரு தோணியில் மேல் நோக்கி ஓடும் ஆற்றின் திசையில் மூன்று மைல்கள் கூட்டிச்சென்றான். அதன் பின் இல்லினோய் மாகாணத்தை நாங்கள் கடந்து சென்றோம். அடர்ந்த மரங்களால் மறைக்கப்பட்ட மரத்தினாலான தனித்திருக்கும் சிறிய குடிலுக்கு அழைத்துச் சென்றான். அப்படி ஒரு இடம் அங்கே உள்ளது முன்னமே அறிந்திருக்காத பட்சத்தில், நீங்கள் அதை ஒருபோதும் கண்டுபிடிக்கவே இயலாது.
எல்லா நேரமும் அப்பா என்னை தன்னுடனே இருத்தி வைத்துக்கொண்டான். எனவே, தப்பி ஓட எனக்கு வாய்ப்புக் கிட்டவே இல்லை. நாங்கள் அந்த பழைய சிற்றறையில் வசித்தோம். அவன் எப்போதும் அந்த அறையைப் பூட்டி அதன் சாவியை இரவு வேளைகளில் தனது தலைமாட்டில் வைத்துக்கொள்வான். அவனிடம் ஒரு துப்பாக்கியும் இருந்தது. எங்கேயோ அதை அவன் திருடி இருக்கக்கூடும் என்று நான் யூகித்திருந்தேன். வேட்டையாடவும், மீன் பிடிக்கவும் அதைப் பயன்படுத்தினோம். கொஞ்ச நாட்களுக்கு ஒரு முறையாவது என்னை அந்த அறையில் விட்டுப் பூட்டிவிட்டு தோணியை எடுத்து கீழ்த்திசை நோக்கி செலுத்தி அங்குள்ள கடையில் மீன் விற்று , மது வாங்கும் விளையாட்டுக்குச் சென்று விடுவான். நன்கு மூக்கு முட்டக்குடித்து விட்டு, கையிலும் மது பாட்டில் வாங்கி கொண்டு வந்து பழைய காலம் மாதிரியே பொறுப்பற்ற ஊதாரியாக வாழ்ந்து கொண்டிருந்தான், அந்த சமயங்களில் என்னைச் சரமாரியாக அடிப்பான், இதற்கிடையில் என் இருப்பிடத்தை எப்படியோ தெரிந்து கொண்ட அந்த விதவை ஒரு ஆள் மூலம் என்னை திருப்பிக் கொண்டு செல்ல முயற்சி செய்தாள். ஆயினும், அந்த ஆளை அப்பா கையில் இருந்த துப்பாக்கி கொண்டு ஓட அடித்துவிட்டான். அங்கே குடியமர்ந்து நீண்ட நாள் ஆகவில்லை எனினும், எனக்கு அந்த இடம் பழக்கமாகி விட்டது. என் அப்பாவிடம் அடி வாங்கும் பகுதியைத் தவிர மற்றபடி அந்த வாழ்க்கை எனக்குப் பிடித்துத்தான் போனது.
முழு நாளும் சோம்பேறித்தனமாக அலைந்து கொண்டு, புகைப் பிடித்தல், மீன்ப் பிடித்தல், மேலும் படிக்கவோ எழுதவோ ஏதும் இல்லாத அந்த வாழ்க்கை ஒரு வகையில் வேடிக்கையாகவும், அமைதியாகவும் இருந்தது. இரண்டு மாதங்களுக்கு மேல் கழிந்தபின், எனது உடைகள் அனைத்தும் கிழிந்தும் அழுக்கடைந்தும் போயின. அந்த விதவையின் வீட்டில் துணிகளைச் சலவை செய்து அணிவது, தட்டில் உணவு உண்பது, சரியான நேரத்தில் உறங்கச் சென்று, பின் எழுவது, பைபிளை வாசிப்பது, மிஸ். வாட்ஸனின் முழுநேர நச்சரிப்பைப் பொறுத்துக் கொள்வது என்பதை எல்லாம் ஏற்றுக்கொண்டு எப்படித்தான் இருந்தேனோ என்பது எனக்குப் புரியவே இல்லை. தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவது அந்த விதவைக்குப் பிடிக்காது என்பதால் அதை அறவே அங்கே நிறுத்தி விட்டேன். அப்பா அதைப்பற்றி எதுவும் கண்டுகொள்ளாததால் திரும்பவும் இங்கே அதை ஆரம்பித்துவிட்டேன். மொத்தத்தில், காடுகளில் தனித்து வசிப்பது மிகவும் சுலபமாக இருந்ததால், திரும்பிச் செல்ல நான் விரும்பவில்லை.
ஆனால் சில நாட்களுக்குப் பிறகு, அப்பா என்னை அடிப்பது மிகவும் அதிகமாகிக் கொண்டே சென்றது. என்னால் அடி தாங்க முடியவில்லை. என் உடல் முழுதும் ரத்த காயங்கள். என்னை உள்ளே வைத்துப் பூட்டி விட்டு அவன் வெளியே செல்லும் பழக்கமும் மிகவும் அதிகமாகி விட்டது. ஒருமுறை என்னை உள்ளே வைத்துப் பூட்டி விட்டு மூன்று நாட்களுக்கு அவன் வெளியே சென்று இருந்த போது நான் மோசமான தனிமையை உணர்ந்தேன். அவன் நீரில் மூழ்கி இறந்து போயிருப்பானோ என்று எண்ணினேன். அவ்வாறானால், நான் அந்த அறையை விட்டு வெளியே வரவே முடியாத நிலை ஏற்பட்டுவிடும். இந்த எண்ணம் என்னை கடும் பீதிக்குள்ளாக்கியது. அங்கிருந்து தப்பிக்க ஒருவாறு எனது மனதைத் தயார்படுத்திக் கொண்டேன். இதற்குமுன்பே பலமுறை அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்திருந்தாலும், ஒரு முறை கூட வழி கிடைக்கவில்லை. அங்குள்ள ஜன்னல் நாய் நுழையும் அளவு கூட பெரிதாக இல்லை. அடுப்பின் புகைபோக்கியோ நான் ஏற முடியாத அளவு குறுகலாக இருந்தது.
கதவுகளோ ஓக் மரத்தின் கடினமான திடப்பலகைகளால் ஆனது. அந்த இடத்தை ஒரு நூறு முறையாவது சுற்றிச் சுற்றிப் பார்த்திருப்பேன். அந்த ஒரு விஷயம் மட்டுமே என்னால் செய்ய முடிந்த ஒன்று. பொதுவாக அப்பா வெளியே செல்லும்போது மிகவும் ஜாக்கிரதையாக கத்தி அல்லது அது போன்ற பொருட்களை அந்த அறைக்குள் விட்டுச் செல்வதில்லை. ஆனால் இந்த முறை நான் ஒன்று கண்டுபிடித்தேன் - ஒரு பழைய துருப்பிடித்த கைப்பிடி இல்லாத மரம் அறுக்கும் ரம்பம். மேற்க் கூரையின் தடுப்பு இணைப்புக்கும், அதில் போடப்பட்டுள்ள நீண்ட மரப்பலகைகளுக்கும் இடையே அது இருந்தது. அந்த அறுக்கும் பகுதியின் மேல் நான் கொஞ்சம் கிரீஸ் போட்டு வேலை செய்ய ஆரம்பித்தேன். அறையின் கடைசி மூலையில், மேசையின் பின்னால் சிறு சிறு குறுகிய திறப்புகளினூடே உள்புகுந்து மெழுகுவர்த்தியை அணைக்கும் காற்றைத் தடுக்க குதிரையின் முதுகில் போடப்படும் பழைய கம்பளி ஒன்று ஆணி அடித்து மாட்டப்பட்டுள்ளது. நான் மேசையின் கீழே புகுந்து, அந்த கம்பளியை உயர்த்தி, மரச் சுவற்றின் கீழே உள்ள சிறு பிளவு போன்ற பகுதியை, நான் ஊர்ந்து வெளியே செல்லும் அளவு ஓட்டை செய்ய வேண்டி ரம்பத்தால் அறுக்க ஆரம்பித்தேன். அது வெகு நீண்ட நேரம் எடுத்தது. நான் அந்த வேலையை முடிக்கும் சமயம் அப்பாவின் துப்பாக்கி வேட்டுச்சத்தம் காட்டில் ஒலிப்பதை நான் கேட்டேன். உடனே என்னுடைய வேலையை மறைத்து, கம்பளியை பழையது போல கீழே இறக்கி விட்டு, அந்த ரம்பத்தையும் மறைத்து வைத்தேன். வெகு விரைவில் அப்பா உள்ளே நுழைந்தான்.
அப்பா நல்ல மனநிலையில் இல்லை. எப்படியெனில், அப்படிப்பட்ட சமயங்களில் அவன் தன்னைச் சாதாரணமாகக் காட்டிக் கொள்ள முயல்வான். அவன் அந்த ஊருக்குச் சென்றதாகவும், அங்கே எல்லாமே தலைகீழாக நடப்பதாகவும் கூறினான். வழக்கு மட்டும் ஆரம்பித்து விட்டால் வழக்கில் அப்பாவுக்காக வாதாடி வெற்றி பெற்று அந்தப் பணத்தை பெற்றுத்தரலாம் என்று அப்பாவின் வழக்கறிஞர் நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் நீதிபதி தாட்சர் எவ்வளவு நீண்ட காலம் அந்த வழக்கை இழுக்கலாம் என்று தெரிந்து வைத்திருந்தார் என்றும் அப்பா கூறினான். அது மட்டுமல்லாது, என்னை அப்பாவிடம் இருந்து பிரித்து சட்டப்படி எனக்கு பாதுகாவலாக அந்த விதவையை நியமிக்க இன்னொரு வழக்கு போடப்பட்டுள்ளதாகவும், இந்த முறை அந்த வழக்கு அவர்கள் பக்கமே தீர்ப்பாகும் என்று மக்கள் பேசிக்கொள்வதாகவும் அப்பா கூறினான்.
இது என்னை மிகுந்த அதிர்ச்சியிலாழ்த்தியது ஏனெனில் அந்த விதவையின் வீட்டிற்கு திரும்பிச் செல்வதை நான் விரும்பவில்லை. அங்கே என்னை கூண்டிலடைத்து, என்னை நல்வழிப்படுத்துகிறேன் என்று பெருமையாக அதைக் கூறிக்கொள்வார்கள். எனது கிழட்டு அப்பன் சூளுரைகளும், தரக்குறைவான வார்த்தைகளையும் கொண்டு எல்லாவற்றையும், யாரை எல்லாம் நினைத்து திட்டமுடியுமோ அவர்கள் எல்லோரையும் வாய்க்கு வந்தபடி வைது கொண்டிருந்தான். ஒருமுறை திட்டி முடித்து யாரேனும் விட்டுப்போய்விடக்கூடாதே என்ற எண்ணத்தில் மீண்டும் ஒரு முறை திரும்பவும் வசவு பாடினான். அதன் பின்னர், யார் யாரோ பெயர் தெரியாத (அவன் பேர் என்ன என்று கேட்டுக்கொண்டே) ஆட்களுக்கு எல்லாம் சபதம் உரைத்து தொடர்ந்து கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனையை தொடர்ந்து கொண்டிருந்தான்,
அந்த விதவை எப்படி எனக்கு பாதுகாவலன் ஆவாள் என்று பார்த்து விடுவதாகக்கூறினான். அப்படி நேர்ந்துவிட்டால், விடாமல் அவர்களைத் தொடர்ந்து
சென்று என்னை அவர்களிடம் இருந்து பிரித்து இழுத்துப் போய் ஆறு அல்லது ஏழு மைல்களுக்கப்பால் கொண்டு சென்று யாருக்கும் தெரியாத இடத்தில், அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டுத் தேடினாலும் கிடைக்காதவாறு தள்ளிவிடுவேன் என்று கூறினான். அது என்னை ஒரு நிமிடம் நடுங்க வைத்தாலும் அடுத்த கணமே சுதாரித்துக் கொண்டு அவன் அவ்வாறு செய்யும் வரை நான் இங்கே இருக்கப்போவதில்லை என்று தேற்றிக் கொண்டேன்.
டவுனில் இருந்து வாங்கித், தோணியில் வைத்திருந்த பொருட்களை எடுத்துவரச்சொல்லி கிழவன் பணித்தான். மக்காச்சோள உணவு சாக்குமூட்டை ஐம்பது பவுண்டு, உப்பு தடவப்பட்ட பன்றி இறைச்சி, கொஞ்சம் வெடிமருந்துகள், நான்கு கேலன் ஜாடி விஸ்கி, ஒரு பழைய புத்தகம், பொருட்களை சுற்றி வைக்க செய்தித்தாள்கள் மற்றும் கொஞ்சம் கயிறுகள் அங்கே இருந்தன. அந்தச் சுமைகளை எடுத்துக் கொண்டு சென்று அறையில் வைத்து விட்டு, திரும்பவும் அந்த வளைவில் அமர்ந்து ஓய்வெடுத்தேன். நான் அந்த இடத்தை விட்டு ஓடும்போது அந்த துப்பாக்கியையும், மீன்பிடிக்கத்தேவையான வலையையும் எடுத்துச் செல்லவேண்டும் என்று முடிவை சிறிது நேரம் சிந்தித்தபின் தீர்மானித்தேன். அப்படிச் சென்றபின் ஒரு இடத்திலேயே இருக்கக்கூடாது என்றும் நாட்டின் பல பகுதிகளை, அதுவும் இரவு நேரங்களில் சுற்றி வரவேண்டும், வேட்டையாடியும், மீன்பிடித்தும் வாழவேண்டும் என்று திட்டம் தீட்டினேன். என்னுடைய கிழட்டு அப்பா அல்லது அந்த விதவை இருவரும் என்னை ஒருபோதும் கண்டுபிடிக்க இயலாதவாறு நீண்ட தொலைவு செல்ல முடிவு கட்டினேன். அன்று இரவு அப்பா நன்கு குடித்துக் கிடக்கும்போது - கண்டிப்பாக அதைச் செய்வார் - அந்த அறையின் சுவரை அறுக்கும் வேலையைச் செய்து முடிக்கவேண்டும் என்று நிச்சயித்தேன். அங்கே வெகு நேரம் அமர்ந்து இவ்வாறு எண்ணிக்கொண்டிருக்கையில், எனது கிழட்டு அப்பா கூச்சலிட்டு என்னை அழைத்து நான் தூங்கி விட்டேனா அல்லது நீரில் மூழ்கி விட்டேனா என்று வினவும்வரை நேரம் சென்றதே தெரியாது இருந்தேன்.
தோணியிலிருந்து எல்லாப்பொருட்களையும் அறைக்குச் சென்று வைக்கும்போது இருட்ட ஆரம்பித்து விட்டது. நான் இரவு உணவு சமைக்கும் வேளை, அந்தக் கிழவன் இரண்டு மூன்று மிடறுகள் விஸ்கியை விழுங்கிக்கொண்டு திரும்பவும் தகாத வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்தான். முதல் நாள் நன்கு குடித்துவிட்டு, டவுனில் உள்ள பெரிய குழாயில் இரவைக் கழித்து வந்ததால் பார்க்க மிகவும் மோசமாகத் தென்பட்டான். நீங்கள் பார்த்தால் அவனை மனிதகுலத்தின் முதல் ஆண் ஆன பைபிளில் கூறப்படும் ஆடம் என்று கூட நினைக்கக்கூடும் ஏனெனில் அவன் உடலில் அந்த அளவுக்கு மண் ஒட்டி இருந்தது. எப்போது மது அருந்தினாலும், அரசாங்கத்தைத் தாக்காமல் இருக்க மாட்டான். இந்த முறை அவன் கூறியதாவது: “இதை ஒரு அரசாங்கம் என்று அழைக்கிறார்கள். அதைக் கொஞ்சம் காணுங்கள். ஒரு மனிதன் பல இடையூறுகளுக்கிடையில் சிரமப்பட்டு, செலவு செய்து அவன் மகனை வளர்த்தியபிறகு அவனைப் பிரிப்பதற்கு ஒரு சட்டம். அதுவும் அந்தப்பையன் கடைசியாக வளர்ந்து, வேலைக்குச் செல்வதற்குத் தயாராகி, அவன் அப்பாவிற்கு சேவை செய்வதால் அப்பா கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் எனும் சமயம், சட்டம் அவனைப் பிரித்து எடுத்துச் செல்லத்தயாராகிறது. இதற்குப்பெயர் அரசாங்கம். அது ஒன்றுமே கிடையாது . உண்மையில் சட்டம் அந்த கிழட்டுத் தாட்சருக்கு உதவி செய்து எனது சொத்தை நான் அடையவிடாமல் செய்கிறது. இந்த வீணான சட்டம் ஆறாயிரம் டாலர் மதிப்புள்ள ஒரு மனிதனை ஒரு சிறு அறைக்குள் அடைத்து பன்றிக்கு கூடப் பொருந்தாத உடையை அணியச் செய்திருக்கிறது. இதை ஒரு அரசாங்கம் என்று அழைக்கிறார்கள். இந்த மாதிரி ஒரு அரசாங்கத்தில் ஒரு மனிதனுக்கு எந்த உரிமையும் கிடையாது. சில சமயங்களில் இந்த நாட்டை விட்டு ஒரேடியாக சென்று விடவேண்டும் என்று நினைக்கிறேன், இதை அவர்களிடமும் நான் கூறினேன். அந்த நீதிபதி தாட்சரின் முகத்துக்கு நேராகவே இதைக் கூறினேன். நான் சொல்வதை நிறைய மக்கள் கேட்டு அதற்கு ஆமோதிக்கவும் செய்தனர். இரண்டு சென்ட் நாணயங்கள் கொடுத்தால் இந்த நாட்டை தூக்கி வீசிவிட்டு வெளியே செல்லவும், அதற்குப் பின் ஒரு போதும் திரும்ப அதன் அருகில் கூட வரமாட்டேன் என்றும் சொன்னேன். இதே வார்த்தைகளைத்தான் அங்கேயும் கூறினேன். அவர்கள் அனைவரையும் எனது தொப்பியைக் காணச்சொன்னேன். இதை தொப்பி என்று நீங்கள் கூறமுடியுமா? மேல்பகுதி உயர்ந்து போக, கீழ்ப்பகுதி தொங்கி எனது தாடை வரை நீளுகிறது. இது தொப்பியே அல்ல, ஏதோ அடுப்பின் மேல் உள்ள புகைபோக்கிக் குழாயின் உள்ளே எனது தலையைத் திணித்தாற்போன்று உள்ளது. கொஞ்சம் அதைப் பாருங்கள். நான் அவர்களிடம் கூறினேன். எனக்குச் சொந்தமானது மட்டும் எனக்கு கிடைத்திருந்தால், இந்த ஊரின் செல்வந்தர்களுள் ஒருவனான நான், என்ன ஒரு உயர்வான தொப்பி அணிந்திருக்கக் கூடும்!"
"ஓ. ஆமாம். இந்த அரசாங்கம் அருமையானது. மிகவும் அருமையானது. இதை மட்டும் கேளுங்கள். ஒஹையோவில் பார்க்க மிகவும் நேர்த்தியாக இருக்கும் நரைத்த தலையுடன் கூடிய சுதந்திரம் பெற்ற வயதான ஒரு நீக்ரோ இருந்தான். அவன் கருப்பு மற்றும் வெள்ளை இணைந்த நிறமுடையவன். பார்ப்பதற்குக் கொஞ்சம் வெள்ளைக்காரன் போலவே இருப்பதுடன் அவன் அணியும் வெள்ளைச் சொக்காய் நீங்கள் எங்குமே கண்டிருக்க முடியாதாது போலத் தோற்றம் அளிப்பதுடன் மிகவும் பளபளப்பான தொப்பியும் அணிந்திருப்பான். கையில் தங்கக் கடிகாரமும், வெள்ளித்தலை கொண்ட கைத்தடியும் வைத்திருப்பான். ஊரில் அவன் போல் அருமையான உடை அணிந்தார் யாரும் இல்லவே இல்லை. உங்களுக்குத் தெரியுமா, மற்றவர்கள் அவனைப்பற்றி என்ன கூறினார்கள் என்று? அவன் ஒரு கல்லூரிப்பேராசிரியர் என்றும் அவனுக்கு பல மொழிகள் தெரியும் என்றும் அவன் எல்லா விஷயங்களையும் அறிந்தவன் என்றும் கூறினார்கள்.
அதை விடக் கொடுமையான விஷயம், அவனுக்கு அவர்கள் மாகாணத்தில் ஓட்டுரிமை இருந்தது இன்று அவர்கள் என்னிடத்தில் இதைக் கூறியதுதான் என்னை மிகவும் எரிச்சல்ப்படுத்தியது. இந்த நாடு எங்கே செல்கிறது? என்னை நானே கேட்டுக் கொண்டேன். தேர்தல் நாளில் நான் அதிகம் குடித்து ஒட்டுப் போடச் செல்லமுடியாது கிடந்திராவிட்டால், எனது ஓட்டை நானே சரியாகச் செலுத்தி இருப்பேன். ஆனால் நமது நாட்டில் ஒரு மாகாணத்தில் ஒரு நீக்ரோ ஒட்டு போடமுடியும் என்று அவர்கள் கூறியதும், நான் அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டேன். இனி என் வாழ்நாள் முழுதும் நான் ஒட்டுப் போடப்போடுவதாகவே இல்லை என்று கூறினேன். இதே வார்த்தைகளை நான் கூறியதை அனைவரும் செவிமடுத்தார்கள். இந்த நாடு எக்கேடாவது கெட்டு ஒழியட்டும். எனக்கு அதைப்பற்றி எந்தக் கவலையும் இல்லை. அந்த நீக்ரோவின் தன்னம்பிக்கை நடத்தையை பார்க்கவேண்டுமே!. நான் மட்டும் என் வழியில் இருந்து அந்தப்புறமாக அவனைத் தள்ளி விடாவிடில், அவன் அந்த இடத்தை விட்டு இம்மியளவு கூட அசைந்திருக்க மாட்டான். ஏன் இந்த நீக்ரோவை ஏலத்தில் நிறுத்தி அடிமைத்தனத்தில் தள்ளவில்லை என்று. எல்லோரையும் நான் கேள்வி கேட்டேன். அவர்கள் அதற்கு என்ன பதில் கூறினார்கள் தெரியுமா? அவன் அந்த மாகாணத்தில் குறைந்தது ஆறு மாதமாவது வசித்தால்தான் அவனை அடிமையாக விற்க முடியும் என்றும் அவன் அங்கே வந்து ஆறு மாதம் ஆகவில்லை என்றும் கூறினார்கள். உங்களால் இதை நம்ப முடிகிறதா? ஆறு மாதம் ஒரு மாகாணத்தில் வசித்தால் மட்டுமே ஒரு சுதந்திர நீக்ரோவை விற்கமுடியும் என்று சொல்லுவது என்ன வகையான அரசாங்கம்? இங்கே ஒரு அரசாங்கம் தன்னை ஒரு அரசாங்கம் என்று அழைத்துக் கொண்டு, தான் ஒரு அரசாங்கம் என்று நினைத்துக் கொண்டு, அரசாங்கம் போல நடந்து கொண்டு, ஆனால் ஒரு வெள்ளை உடையில் சுதந்திரமாகத் திரியும் அயோக்கியத் திருட்டு நீக்ரோவை ஆறு மாதத்திற்கு முன்பே பிடித்து கைது செய்ய மறுக்கிறது.”
தான் நடக்கும் இடம் கூடத் தெரியாது இவ்வாறு அப்பா வசை பாடிக்கொண்டே சென்றதில் திடீரென்று உப்புக்கண்டம் போட்டு வைத்திருக்கும் பன்றி இறைச்சியை வைத்திருக்கும் அகன்ற பாத்திரத்தில் தலை குப்புற விழுந்து இரண்டு காலிலும் மூட்டுக்குக் கீழ் உள்ள பகுதியில் கீறல் ஏற்படுத்திக் கொண்டான். அதன் பின்னும் அந்த பாத்திரத்தில் கிடந்தபடியே, அரசாங்கத்தையும், நீக்ரோவையும் கேவலமாக வசை பாட ஆரம்பித்தா ன். தனது கால்ப்பகுதியைப் பிடித்தவாறே, ஒரு கால் மாற்றி இன்னொரு கால் என்ற பாணியில் நொண்டியடித்துக் கொண்டு அந்த அறையை சுற்றி வந்த அவன் கடைசியாக அந்த பாத்திரத்தை வேகமாக காலால் எட்டித் தள்ளினான். ஆனால் அது மீண்டும் ஒரு கேவலமான செய்கையாக மாறிவிட்டது. ஏனெனில், அவன் உதைத்த காலில்தான் பூட்ஸ் கிழித்து அவனின் கால் விரல்கள் வெளியே நீட்டிக்கொண்டிருந்தன. அதை உதைத்ததால் இவனின் கால்விரல்களுக்குத்தான் தாங்கமுடியாத வலியை கொடுத்திருக்கக் கூடும்.. மயிர்கூச்செரியும் ஒரு சப்தத்தை எழுப்பியவாறே, அங்கே அந்த அழுக்கில் விழுந்து, கால் விரல்களைப் பிடித்தபடியே உருண்டு கொண்டே முன்னை விட அதிகமாக இன்னும் ஆக்ரோஷமாக வசை பாடினான். பின் ஒரு சமயத்தில் அதை ஒத்துக்கொள்ளவும் செய்தான். அவனின் குடிகார நண்பர் சௌபெர்ரி ஹெகனை விட சிறப்பாக வசை பாடி, அந்த விஷயத்தில் தான் அவன் நண்பனை விட முன்னிற்பதாகவும் தற்பெருமை பாடினான். ஆனால் நான் அவன் மிகைப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்று புரிந்து கொண்டேன்.
இரவு உணவுக்குப் பின் ஒரு சாடி விஸ்கி குடித்து விட்டு தான் வேண்டிய மட்டும் குடித்து விட்டதாகவும், குடிப்பதனால் மூளையில் அதிர்வு ஏற்பட்டு மாயையும், நடுக்கமும் ஒருமுறை உருவாவானதாகத் தெரிவித்தான். அந்த வார்த்தையைத்தான் அவன் அடிக்கடி பயன்படுத்துவான். இன்னும் ஒரு மணிநேரத்தில் மேலும் அதிகம் குடித்து கண்மண் தெரியாது மட்டை ஆகிவிடுவான் என்று எனக்குத் தெரியும். ஒன்று அந்தச் சாவியைத் திருடி தப்புவதோ அல்லது அந்த மரச்சுவரை அறுத்து அந்த ஓட்டை வழியாக தப்புவதோ, எதுவாயினும், அதுவே எனக்குக் கிடைக்கப் போகும் மிக அரிய சந்தர்ப்பம். குடித்து மேலும் குடித்து , மென்மேலும் குடித்து, அதன் காரணமாக அவனுடைய போர்வைக்குள் மயங்கி வீழுந்தான். ஆனால் அதிர்ஷ்டம் என் பக்கம் இல்லை. ஏனெனில், நன்கு அசந்து தூங்குவதற்குப் பதிலாக சங்கடத்துடன் சுற்றிலும் உருண்டான். முனங்கி கொண்டே புலம்பியவாறு நீண்ட நேரம் படுக்கையில் புரண்டு கொண்டே இருந்ததால், அவன் தூங்கக் காத்திருந்த எனக்குத்தூக்கம் கண்களைத் தழுவியது. என்னை அறியாமலேயே, மெழுகுவர்த்தியைக் கூட அணைக்காமல் அசந்து தூங்கிவிட்டேன்.
எவ்வளவு நேரம் அவ்வாறு தூங்கி இருப்பேனோ தெரியாது, திடீரென்று சில்லிடும் கூக்குரல் கேட்டு திடுக்கிட்டுக் கண் விழித்தேன். அங்கே அப்பா ஒரு பைத்தியக்காரனைப்போல்எல்லாப்பக்கமும்திரும்பித்திரும்பிக் குதித்துக்கொண்டிருந்தான். கண்ணுக்குத் தென்படாத பாம்புகளை நோக்கி கத்திக்கொண்டிருந்த அவன், பாம்புகள் அவனின் கால்களின் மீது ஊர்வதாகக் கூறினான். அவனது கன்னத்தில் கடித்துவிட்டதாகக்கூடக் கூறினான். நாற்திசையிலும் சுற்றிப்பார்த்த எனக்கு பாம்புகள் எதுவும் தென்படவில்லை. "அவனைத் தூர வீசு! அவனைத் தூர வீசு ! அவன் எனது கழுத்தைக் கடிக்கிறான்." என்று கூச்சலிட்டவாறே அறை முழுதும் ஓடிக்கொண்டிருந்தான். அதீத அளவு பைத்தியமும் கொடூரமும் நிறைந்து வழியும் கண்களையுடைய எந்தவொரு மனிதனையும் நான் அதுவரை கண்டதில்லை. கூடிய விரைவில் மிகுந்த களைப்படைந்த அவன் மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கிக்கொண்டு கீழே விழுந்தான். பின்னர் மின்னலைப் போல் வெகு வேகமாக புரண்டு கொண்டு சுற்றியுள்ள பொருட்களை உதைத்துக் கொண்டும், முஷ்டிகளால் குத்திக்கொண்டும், காற்றில் உள்ள எதையோ கைகளைக் கொண்டு பிடிப்பது போலவும் பாவனை செய்து கொண்டு இருந்தான். தன்னை சாத்தான்கள் இறுக்கப்பிடித்து வைத்திருப்பதாகக் கூச்சலிட்டான். விரைவிலேயே, மோசமாக சோர்வடைந்த நிலையில் அறையின் ஒரு மூலையில் புலம்பிக்கொண்டே முடங்கினான். பின்னர் அப்படியே அசைவற்ற நிலையில் சப்தம் ஏதும் செய்யாது கிடந்தான். தூரத்தே காட்டினூடே ஆந்தைகளும் ஓநாய்களும் எழுப்பும் ஒலியைத் தவிர மற்ற அனைத்தும் நம்பமுடியாத மௌனத்தில் இருந்தன. ஆயினும், சீக்கிரமே தன் உடலைத் தூக்கி பாதிவரை எழுந்த அவன், தலையைக் கோழிபோல் ஒரு புறமாகத் தூக்கிப்பார்த்து, பாட்டும் பேச்சும் கலந்த பாணியில் பின்வருமாறு உளற ஆரம்பித்தான்.
அமெரிக்காவின் உள்நாட்டுப் புரட்சி சமயங்களில் மிகவும் பிரபலமான பாடல் மெட்டில் "டிரேம்ப், டிரேம்ப், டிரேம்ப்! இறந்தவர்கள்தான் அது. ஸ்டாம்ப் ஸ்டாம்ப் ஸ்டாம்ப். அவர்கள் என்னைத்தொடரந்து வருகிறார்கள். ஆனால் நான் செல்ல மாட்டேன். ஆக்! இதோ! அவர்கள் இங்கே! தொடாதே என்னை. உன் குளிர்க்கரங்களை என் மேலிருந்து எடு.! இந்த பாவப்பட்ட சாத்தானைத் தனியே விடு!" என்று பாட ஆரம்பித்தான். பிறகு தரையின் மீது நான்கு கால் பிராணி போலத் தவழ ஆரம்பித்து, தன்னைத் துரத்தும் மாயத்தோற்றத்தை தன்னை விட்டுவிடும்படி கெஞ்சிக் கேட்டுக்கொண்டான். தன்னைக் கம்பளியில் முழுதும் சுற்றிக் கொண்டு பழைய பைன் மரத்தாலான மேசையின் அடிப்புறம் பதுங்கிக் கொண்டு, தன்னை விட்டுவிடும்படி மீண்டும் கெஞ்சினான். பின்னர் அவன் கம்பளிக்குள் புகுந்துகொண்டு அழுவதை என்னால் கேட்க முடிந்தது.
இறுதியில் மேசையின் அடியில் இருந்து உருண்டு வெளிவந்து மீண்டும் குதித்தெழுந்து, பித்துப்பிடித்தவனைப்போன்று நின்றான். என்னைப் பார்த்துவிட்டு என்னருகில் வந்தான். சாவு தேவதை என்று என்னை அழைத்த அவன் தன் கையில் உள்ள பேனாக்கத்தியுடன் என்னை அந்த அறைக்குள் துரத்த ஆரம்பித்தான். நான் அவனைத் தொடர்ந்து வராதிருக்க என்னைக் கொல்லப்போவதாகவும் அவன் கூறினான். நான்தான் ஹக் எனவும் என்னைத்துரத்துவதை நிறுத்தும்படியும் நான் மன்றாடினேன். அவன் உச்ச ஸ்தாயில் கிரீச்சிட்டு சிரித்தபடி என்னை துரத்துவதைத் தொடர்ந்தான். நான் ஓடுவதை நிறுத்திவிட்டு திடீரென அவன் கரங்களுக்குள் புகுந்தேன். ஆனால் அவன் எனது இரண்டு தோள்களுக்கும் இடையில் உள்ள மேல்ச்சட்டையை இறுக்கிப்பிடித்துக் கொண்டான். நான் அவ்வளவுதான் முடிந்தேன் என ஒரு கணம் நினைத்தேன். ஆனால் மின்னல் போல் மேல்ச்சட்டையின் ஒரு கை வழியாக என்னை சடாரென விடுவித்துக் கொண்டதால் நான் காப்பாற்றப்பட்டேன். வெகு விரைவில், அவன் மீண்டும் களைப்படைந்து, மல்லாந்த நிலையில் கதவின் அருகே தரையின் மீது விழுந்தான். ஒரு நிமிடம் ஓய்வெடுத்துக் கொண்டு பின்னர் என்னைக் கொல்லப்போவதாகக் கூறினான். பேனாக்கத்தியை தனக்குக் கீழ் வைத்தபடி அமர்ந்த அவன், சிறிது நேரம் தூங்கி தனது ஆற்றலைச் சேகரித்து விட்டு பின்னர் தான் யார் என்று காட்டப்போவதாகக் கூறினான்.
கூடிய சீக்கிரமே அவன் நித்திரையில் ஆழ்ந்தான். அடியில் பிளவு கொண்டு வளைந்திருக்கும் நாற்காலியைச் சத்தம் ஏற்படுத்தாது வெளியே இழுத்து அதன் மீது பூனை போல் ஏறி துப்பாக்கியை எடுத்தேன். அதன் விசையை கீழ் இழுத்து அதில் குண்டுகள் இடப்பட்டிருக்கிறதா என்று உறுதி செய்துகொண்டேன். பின்னர் அதை டர்னிப் கிழங்குகளுக்கிடையில் அப்பாவைக் குறிபார்த்து இருப்பது போல் வைத்தேன். அதன் பின்னால் நான் அமர்ந்து கொண்டு அவன் விழித்தெழுவதற்காகக் காத்திருந்தேன். நேரம் நொண்டி ஆமையைப்போல் நகர்ந்தது. [தொடரும்]
மொழிபெயர்ப்பாளர் பற்றி...
- முனைவர் ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D. தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். -
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.