- என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்' -
அத்தியாயம் மூன்று
நல்லது. காலையில் எனது அழுக்கடைந்த உடையைக் கண்ட வயதான மிஸ். வாட்ஸன் எனக்கு அறிவுரை கூறினாள். எனினும் அதிகம் திட்டாமல், அழுக்குப் படிந்திருந்த எனது உடையில் இருந்த மண் மற்றும் திட்டான கறைகளை தேய்த்து விட்டாள். அவளின் சோகமான ஏமாற்றமடைந்த முகத்தைக்கண்டதும், கொஞ்ச நாளைக்காவது என்னால் முடிந்த அளவு இனி நான் ஒழுங்காக நடக்க வேண்டும் என எண்ணிக் கொண்டேன். பின்னர் மிஸ். வாட்சன் அறைக்குள் அழைத்துச் சென்று எனக்காகப்பிரார்த்தனை செய்தாள். ஆனால் அதனால் எந்த நற்பலனும் விளைந்ததாகத் தெரியவில்லை. தினந்தோறும் பிரார்த்தனை செய்யும்படி எனக்கு அறிவுறுத்தியதோடு, அப்படி நான் செய்தால் நான் வேண்டுவது எல்லாம் எனக்குக்கிடைக்கும் என்றும் கூறினாள். ஆனால் அது உண்மையல்ல. நான் முயற்சி செய்திருக்கிறேன். ஒருமுறை எனக்கு மீன்பிடிக்கத் தேவையான கம்பியும் அதில் உள்ள நீளக் கயிறும் கிடைத்திருந்தது. ஆனால் மீன்பிடிக்கும் கொக்கி இல்லையெனில் அவற்றால் என்ன பயன்? நானும் மூன்று அல்லது நான்கு முறை எனக்கு மீன்பிடிக்கும் கொக்கி தேவை என பிரார்த்தனை செய்தேன். ஆனால் அது நிறைவேறவில்லை. ஒரு நாள் நான் மிஸ். வாட்ஸனிடம் எனக்காக மீன் பிடிக்கும் கொக்கி வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்யச் சொன்னேன். ஆனால் அவள் என்னை ஒரு முட்டாள் என்று கூறினாள். ஏன் அவ்வாறு கூறினாள் என்ற காரணமும் அவள் கூறவில்லை. அப்படி அவள் கூறியதற்கான காரணம் எனக்கும் விளங்கவில்லை.
ஒரு சமயம் நான் வனத்தினூடே தனிமையில் அமர்ந்து வெகு நேரம் இது பற்றிச்சிந்தித்து இருக்கிறேன். அப்படி நாம் பிரார்த்தனை செய்து கேட்பது எல்லாம் நமக்கு கிடைக்கக்கூடுமானால், டீகன் வின் பன்றி மாமிசத்திற்காக தான் தொலைத்த பணத்தை வேண்டி அவன் ஒருபோதும் பிரார்த்தனை செய்யவில்லையா? அல்லது தன்னிடமிருந்து திருடப்பட்ட வெள்ளியிலான மூக்குப்பொடி டப்பாவை அந்த விதவையினால் ஏன் திரும்பப் பெற முடியவில்லை? அல்லது ஏன் மிஸ்.வாட்ஸன் இன்னும் குண்டாகிக்கொண்டே செல்ல வேண்டும் என்றெல்லாம் என்னை நானே கேட்டுக் கொண்டேன். இல்லை. அது உண்மை இல்லை. நான் தீர்மானித்துக் கொண்டேன். நான் சிந்தித்த இவ்விஷயத்தை அந்த விதவையிடம் கூறியபோது, பிரார்த்தனை மூலம் நமக்கு ஆன்மீகப்பரிசுகள் மட்டுமே கிடைக்கும் என்று கூறினாள். அது எனக்கு மிகவும் எட்டாத விஷயமாக இருந்தது. எனவே தன்னலம் விடுத்து தன்னை சுற்றியுள்ள மற்றவர்க்கு என்னால் எவ்வளவு நன்மை செய்ய முடியுமோ அப்படிச் செய்வதுதான் உண்மையான பரிசு என்று மேலும் விளக்கம் அளித்தாள். அதே "மற்றவர்கள்" என்பதில் மிஸ். வாட்ஸனும் அடக்கம் என்று நான் யூகித்தேன். வெளியே சென்று வனத்தில் அமர்ந்து நான் வெகு நேரம் மீண்டும் சிந்தித்தேன். ஆனாலும் பிறருக்கு நன்மை செய்தால் பிறருக்குத்தான் நன்மையே தவிர எனக்கு எந்த நன்மையையும் அதன் மூலம் கிடைக்கும் என்பதை நான் சிந்தித்துப் பார்க்கக் கூட இயலவில்லை. கடைசியாக இந்த மொத்த விஷயத்தையும் மறப்பது எனவும், இது பற்றி இனி கவலைப்படப்போவதில்லை எனவும் முடிவெடுத்தேன். சில சமயங்களில் அந்த விதவை என்னைத் தனியாக அழைத்து கடவுளைப்பற்றி பேசும் வேளையில் கடவுளைப்பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்ள மிகுந்த ஆர்வம் ஏற்படும். ஆனால், அது பற்றி மிஸ்.வாட்ஸன் பேசும்போது, அப்படி ஒரு விஷயத்தை மொத்தமாகத் தவிர்த்துவிடவேண்டும் போலத் தோன்றும் . இந்த விஷயத்தைப் பொறுத்தமட்டில் இரண்டு கடவுள்கள் உள்ளார்கள் என்று இறுதியாக நான் ஒரு முடிவுக்கு வந்தேன். அதில் ஒருவர் அந்த விதவையின் அன்புக்கு கணிசமாகக்கட்டுப்பட்டு உள்ளார் எனவும் இன்னொருவர் மிஸ்.வாட்ஸன்னால் மிகுந்த தொல்லைக்கு ஆளாகிறார் என்றும் புரிந்து கொண்டேன். நான் விதவையின் கடவுளைச் சார்ந்தவன் என்று மிகவும் ஆராய்ந்து பார்த்துக் கணித்தேன்., அதுவும் அந்தக்கடவுளுக்கு நான் தேவை என்ற பட்சத்தில் மட்டும்தான் நான் அவரைச் சார்ந்திருக்க முடியும். இவ்வளவு அறியாமையுடனும், காட்டுத்தனமாகவும் இருக்கும் என்னை எதற்காகக் கடவுள் தன்னிடம் சேர்த்துக்கொள்வார் என்பதையும் என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.
கடந்த ஒரு வருடமாக என் அப்பாவை யாருமே பார்க்கவில்லை. அது எனக்கு நல்ல சங்கதிதான் காரணம் நான் அவரைப் பார்க்கவே விரும்பவே இல்லை. அவர் எப்போதெல்லாம் அவர் குடிக்காமல் நிதானமாக இருக்கிறாரோ அப்போதெல்லாம் என்னைப்பிடித்து அடித்துக்கொண்டே இருப்பார். அவருக்குப் பயந்து அவர் வீட்டில் இருக்கும் வேளைகளில் நான் எப்போதுமே பக்கத்தில் உள்ள வனத்திற்குச் சென்று விடுவேன். இந்த முறை ஊருக்கு 12 மைல் தொலைவில் மேல்நோக்கி ஓடும் நதியினூடே நீரில் மூழ்கி இறந்ததால் மல்லாக்க மிதந்தவாறு அவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறினார்கள். அளவில் அந்த உடல் என் தந்தையைப் போலவே இருந்ததாகவும், கந்தல் ஆடைகளுடனும், என் தந்தையினது போன்றே நீண்ட தலைமுடி இருந்ததாகவும் அந்த ஊர் மக்கள் கூறினார்கள். நீண்ட நேரம் நீரிலேயே மிதந்து வந்ததால் முகம் மோசமாக மாறி ஊர் மக்களால் சரியாக அடையாளம் காண முடியவில்லை. அந்த உடலை வெளியே இழுத்து நதிக்கரையிலேயே எரித்து விட்டார்கள். ஆனால் அதில் ஒரு விசயம் என்னை மிகவும் சங்கடப்படுத்தியது. இறந்த மனிதர்கள் உடல் குப்புற இருக்கும் நிலையில்தான் மிதக்கும் தவிர மல்லாக்க மிதக்க வாய்ப்பு இல்லை என்பதை நான் கடைசியாக உணர்ந்தேன். எனவே அந்த உடல் எனது தந்தையினுடையது அல்ல எனவும் ஆணின் உடை அணிந்த ஒரு பெண்ணுடையதாக இருக்கலாம் எனவும் எனக்குப் புரிந்து விட்டது. இந்த விஷயம் மேலும் எனக்கு துன்பத்தைக் கொடுத்தது. நான் அவர் வரக்கூடாது என்று விருப்பப்பட்டாலும், என் அப்பா உயிரோடு இருக்கிறார் என்பதுடன் வெகு சீக்கிரம் வந்து நிற்பார் என்பதும் வருத்தம் தருவதாக இருந்தது.
அவ்வப்போது கொள்ளைக்காரன் விளையாட்டு சுமார் ஒரு மாதத்திற்கு விளையாடினோம். பின்னர், அதிலிருந்து நான் விலகி விட்டேன். உண்மையில் நாங்கள் எதையும் கொள்ளை அடிக்காது யாரையும் கொல்லாது இருந்ததினால் அனைத்துச் சிறுவர்களுமே அதிலிருந்து வெளியேறி விட்டனர். நாங்கள் நடிக்க மட்டுமே செய்தோம். மரத்திலிருந்து கீழே குதித்து பன்றிக்கூட்டங்களை மேய்க்கும் ஆண்களையும், சந்தைக்குக் காய்கறிகள் விற்கக் கொண்டு செல்லும் பெண்களையும் தாக்குவது போல் நடித்தோம். ஆனால் நாங்கள் யாரையும் காயப்படுத்தவில்லை. பன்றிகளை டாம் சாயர் "தங்கக்கட்டிகள்" என்றும் டர்னிப் காயை "ஜுலேரி" என்றும் பெயரிட்டான். திரும்ப நாங்கள் குகைக்குச் சென்றபிறகு என்னவெல்லாம் செய்தோம், எத்தனை மக்களைக் கொன்றோம் குறியிட்டோம் என்றெல்லாம் பேசிக்கொள்வோம். ஆனால் அதில் எந்த நல்லதும் இருந்ததாக எனக்குத் தோன்றவில்லை. ஒரு சமயம் டாம் ஒரு சிறுவனின் கையில் தீ பற்றிய ஒரு பந்தத்தைக் கொடுத்து குழுவை ஒன்று கூட்டுவதற்கான சமிக்ஞையாக ஊர் முழுதும் சுற்றி வரச்செய்தான்.
நாங்கள் அனைவரும் ஒன்றுகூடியபோது ஸ்பெயினில் இருந்து வந்த மொத்த வியாபாரிகளும் மற்றும் அரபு நாட்டுச் செல்வந்தர்களும் அடுத்தநாள் ஊருக்கு வரவிருப்பதாக அவனது ஒற்றர்கள் செய்தி கூறியதாக டாம் எங்களிடம் கூறினான். ஹாலோ குகை முகாமுக்கு அவர்கள் அனைவரும் 200 யானைகள், 600 ஒட்டகங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கழுதைகளில் வைர மூட்டைகளை ஏற்றிக் கொண்டு காவலுக்கு 400 வீரர்களுடன் சென்றுகொண்டிருப்பதாகத் தெரிவித்தான். நாங்கள் அனைவரும் பதுங்கித் தாக்குதல் - அவ்வாறே அவன் குறிப்பிட்டான் - நிகழ்த்தி அனைவரையும் கொன்று அந்தப் பொருட்களைக் கொள்ளையடிக்க வேண்டும் என்றான். நாங்கள் அனைவரும் எங்களின் வாள்களை நன்கு தீட்டியும், துப்பாக்கியில் குண்டு பொருத்தியும் தயாராக வைத்துக்கொள்ளக் கூறினான்.
உண்மையில் எங்களின் வாள்கள் என்பது மரப்பட்டைகளும் துப்பாக்கிகள் என்பதுவிளக்குமாத்துக்கட்டைகளும்தான். நீங்கள் அவற்றை எப்படிவேண்டுமானாலும் திருப்பித்திருப்பி பார்த்துக்கொள்ளலாம். ஆனால் கடைசியில் அவைகள் மரப்பட்டைகளும், விளக்குமாத்துக்கட்டைகளும்தான். அவ்வளவு பெரிய படை கொண்ட ஸ்பெயின் வணிகர்களையும், அரேபியர்களையும் கொல்லமுடியும் என்று நான் கொஞ்சம்கூட ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் எனக்கு அந்த யானைகளையும், ஒட்டகங்களையும் காண வெகு ஆசை. எனவே அடுத்த நாள் சனிக்கிழமை அன்று திட்டமிட்டபடியே அந்த பதுங்கித்தாக்குதலுக்கு நானும் சம்மதித்தேன். நாங்கள் அனைவரும் முடிவு செய்தபின், எல்லோரும் காட்டிலிருந்து வெளியேறி அந்த மலையை விட்டு வேகமாய் இறங்கினோம். ஆனால் அங்கே ஸ்பெயின் நாட்டவர்களோ அல்லது அரேபியர்களோ யாருமே இல்லை. யானைகளும் ஒட்டகமும் கூட இல்லை. அங்கே இருந்ததென்னவோ விடுமுறை நாளில் சுற்றுலா வந்த பள்ளிக்குழந்தைகள்தான். நாங்கள் மனம் உடைந்து போய் அந்தக் குழந்தைகளை ஹாலோ குகையை நோக்கித் துரத்தி அடித்தோம். கொஞ்சம் டோனட்ஸ் மற்றும் ஜாம் தவிர வேறு எதுவும் எங்களுக்கு மிஞ்சவில்லை. பென் ரோஜருக்கு கந்தல் துணியில் செய்யப்பட பொம்மையும், ஜோ ஹார்ப்பருக்கு கடவுள் துதிப்பாடல் புத்தகமும், பைபிளும் கிடைத்தது. ஆனால் அந்த ஆசிரியை எங்களை நோக்கி கோபத்துடன் ஓடி வருவதைக் கண்ணுற்றதும், அவற்றைக் கூட கீழே வீசிவிட்டு நாங்கள் தப்பி ஓட வேண்டியிருந்தது. நான் எந்த வைரத்தையும் அங்கே காணவில்லை. எனக்குத் தெரியும் இது பற்றி டாமுக்கு முன்பே தெரிந்திருக்கும் என்று.
ஆனால் டன் கணக்கில் வைரம், யானை ஒட்டகம் இத்யாதிகள் என்றெல்லாம் அவன் கூறியதை நான் ஏன் பார்க்க முடியவில்லை என்று அவனிடம் கேட்டேன். நான் மட்டும் டான்குவிசாட் என்ற புத்தகத்தைப் படித்திருந்தால், இத்தனை அறியாமையுடன் அவனை இந்தக் கேள்வி கேட்டிருக்க மாட்டேன் என்றான் அவன். அத்தனையும் மந்திரத்தால் நிகழ்ந்தது என்றும் அவன் சொன்னான். உண்மையில் நூற்றுக்கணக்கான வீரர்களும், யானைகளும், கணக்கிலடங்காப் பொக்கிஷங்களும் அங்கே இருந்தன என்றான் டாம்.
நம் எதிரிகள் மந்திரவாதிகள் ஆனதால் அனைத்து விஷயங்களையும் நொடிப்பொழுதில் விடுமுறைநாள் சுற்றுலா வந்த குழந்தைகள் கூட்டமாக மாற்றி விட்டதால், நாங்கள் அனைத்தையும் பார்க்க இயலவில்லை என்றும் அது கண்டு அந்த மந்திரவாதிகள் நகைத்தார்கள் என்றும் உரைத்தான். அப்படியானால் சரி, நாமும் அந்த மந்திரவாதிகளைத் தொடர்ந்து செல்வோம் என்று நான் கூறினேன். நீ ஒரு அடிமுட்டாள் என்று டாம் என்னைப்பார்த்து உரைத்தான்.
"ஏன்! ஒரு மந்திரவாதியால் பல பூதங்களை அழைக்கமுடியும்," அவன் சொன்னான், "அத்துடன் அவை ஜாக் ராபின்சன் என்று கூறி முடிப்பதற்குள் உன்னை துண்டு துண்டாகச் செதுக்கிவிடும். அவைகள் நீண்ட மரங்களைப்போன்ற உயரமும், பறந்து விரிந்த சர்ச் போன்ற பருமனும் கொண்டவை.”
"ஓ அப்படியா?" நான் கேட்டேன். "ஒருவேளை சில பூதங்களை நாமும் நமக்கென வைத்துக் கொண்டால், அவைகளை வைத்து அந்த பூதங்களை நம்மால் அடித்து நொறுக்கிவிட முடியும் இல்லையா?"
"அந்த பூதங்களை எவ்வாறு நம்மால் பெறமுடியும்?"
"எனக்குத் தெரியவில்லை. அந்த மந்திரவாதிகள் எப்படிப் பெற்றார்கள்?"
" நல்லது. அவர்கள் ஒரு பழங்கால விளக்கு அல்லது இரும்பு மோதிரம் இவற்றைத் தேய்க்கும்போது அந்த பூதங்கள் பெரிய இடிச்சப்தம், மின்னல்ஒளி, புகை மண்டலம் இவைகளூடே தோன்றும்.. அவர்களுக்குப் பணிக்கப்பட்ட எந்த வேலையையும் அவைகள் செய்ய வேண்டும். துப்பாக்கி குண்டுகளை சுடுவதற்காக அமைக்கப்பட்ட மிக உயர்ந்த கோபுரத்தை வேரோடு சாய்ப்பதானாலும் சரி, ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்பு நடத்தும் பள்ளி ஆசிரியை அல்லது எந்த மனிதனுக்கும் அடி கொடுப்பதானாலும் சரி, அவை ஒரு நொடி கூடத் தயங்காமல், செய்து முடிப்பவை."
"யார் அவைகளை அந்த வேலைகளைச் செய்யத் தூண்டுபவர்கள்?"
"யார் அந்த விளக்கினை அல்லது அந்த மோதிரத்தினைத் தேய்க்கிறார்களோ, அவரே அதன் எஜமான். அந்த எஜமான் பணிக்கும் வேலைகளை எல்லாம் அந்த பூதம் சிரமேற்கொண்டு செய்து முடிக்கும். ஒரு நாற்பது மைல் சுற்றளவில் ஒரு வைர மாளிகை கட்டி அதில் முழுக்க மெல்லும் கோந்து போன்ற மிட்டாயை நிரப்புவதானாலும், வேறு என்ன உனக்குத் தேவை, வேண்டுமானால் சீனப் பேரரசரின் மகளை உனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டினாலும், எதுவானாலும், காலை சூரிய உதயத்திற்குள் அந்த பூதங்கள் செய்து முடித்து விடும் . வேறு என்ன கூடுதலாக? உனக்கு எந்த இடத்தில் அந்த மாளிகை வேண்டுமோ, அங்கேயே அவை செய்து தரும்."
"நல்லது." நான் கூறினேன். "தங்களுக்காக என்று வைத்துக் கொள்ளாமல், பிறருக்காக இப்படி மாளிகைகளை அள்ளித்தரும் அவைகளை நான் முட்டாள்களின் கூட்டம் என்றே கருதுகிறேன். வேற என்ன? நான் மட்டும் அப்படிப்பட்ட ஒரு பூதமாக இருந்தால், என்னுடைய வேலையை விடுத்து விளக்கைத் தேய்த்தவரிடம் ஓடி வரும் முன் விளக்கைத்தேய்ப்பவரை கொண்டுபோய், பலமுறை போரில் சிதைக்கப்பட்ட பழங்காலத்து ஜெரிக்கோ நகரத்தில் தூக்கிப் போடுவேன்.”
"நீ பேசியதை நீயே கவனி. ஹக் ஃபின்!" உனக்கு வேண்டுமோ வேண்டாமோ, அவர் விளக்கைத் தேய்த்தவுடன் அவரிடம் நீ ஓடி வரவேண்டும்."
"ஹா! நீண்ட மரத்தின் உயரத்தையும், சர்ச் போன்ற அகலத்தையும் கொண்ட நானா? அதுவும் சரி. கண்டிப்பாக அவர் விளக்கைத் தேய்த்தவுடன் நான் வருவேன். ஆனால் அவரை இந்த நாட்டிலேயே மிக உயரமான மரத்தை ஏறும்படி செய்து விடுவேன்."
"ஸ்ஸ்ஸ். உன்னிடம் பேசிப் பயனில்லை. ஹக்ஃபின்! உனக்கு எதுவுமே தெரியவில்லை. நீ ஒரு சரியான வடிகட்டிய முட்டாள்."
இது பற்றி நான் இரண்டு மூன்று நாட்கள் சிந்தித்துப் பார்த்தேன். அதன் பின்னர் அதைப்பற்றிப் பரிசோதித்து விடத்தீர்மானித்து, ஒரு பழங்கால விளக்கையும், ஒரு இரும்பு மோதிரத்தையும் பெற்று, வனத்தினூடே சென்று அவற்றைத் தேய்த்தேன், தேய்த்தேன், வெயிலில் வேர்த்து வடியும் ஒரு இந்தியன் போல வேர்த்து வழியும்வரை தேய்த்தேன். பூதம் வந்து கோட்டை கட்டினால் அதை விற்று காசாக்கி விடலாம் என்ற கணக்குப் போட்டேன். ஆனால் எந்தப்பயனும் இல்லை. எந்த ஒரு பூதமும் வெளிவரவில்லை. பூதங்களைப்பற்றிய கதையெல்லாம் டாம் சாயரின் கட்டுக்கதைகளுள் ஒன்று என்ற முடிவுக்கு நான் வந்தேன். அவன் அந்த அரேபியர்களையும், யானைகளையும் பெரிதும் நம்பிக்கொண்டிருந்தான் என்று முடிவு கட்டினேன். ஆனால் ..எனக்கு இதைவிட அதிகம் தெரியும். ஞாயிறு பள்ளிகளில் படிக்கும் சரக்கு போன்றேதான் இந்த விஷயமும் நிஜமாக இருப்பதாகத் தோற்றம் அளித்தது. [தொடரும்]
மொழிபெயர்ப்பாளர் பற்றி...
- முனைவர் ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D. தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். -
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.