அயோத்தி பாபர் மசூதி தீர்ப்பு வெளியான அன்று பரபரப்பாக இருந்தது. அன்றுதான் டாக்காவின் பிரபலமான டாக்கீஸ்வரியம்மன் கோவிலுக்குச் செல்வதற்கு ஏற்பாடாகியிருந்தது.உலகம் முழுவதும் இருந்து இந்துக்கள் வழிபடும் கோவில் அது. ஊர் பெயருடன் சேர்த்து அந்த அம்மன் பெயர் வழங்கப்படுகிறது. டாக்கீஸ்வரி டாக்காவின் ஈஸ்வரி . 1971ல் ரமண காளி கோவிலொன்று பிரசித்தியாக இருந்ததை வங்க தேசவிடுதலைப் போரில் பாக்கிஸ்தான் ராணுவம் முழுமையாக அழித்த பின்பு இந்துக்களின் மிக முக்கியமான கோவிலாகியது. அப்போது பாக்கிஸ்தான் ராணுவத்தால் இக்கோவிலும் சிதைக்கப்பட்டது. முக்கிய பாகங்கள் ராணுவத்தளவாடங்கள் நிறுத்தவும் ஆயுதசேமிப்புக்கும் பயன்படுத்தப்பட்டன. தலைமை பூசாரி உட்பட பலர் கொல்லப்பட்டனர். ஆனால் 800 வருடப் பழமை வாய்ந்த ஈஸ்வரி அம்மன் சிலை காப்பாற்றப்பட்டது. 11ம் நூற்றாண்டில் பலால் சென் என்ற அரசனால் கட்டப்பட்டப் பழமையானது இது. 1988ல் இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்ட பின்பு டாக்கீஸ்வரி கோவிலின் முன்பு பாக்கிஸ்தான் கொடி ஏற்றப்படுவதும் சம்பிரதாயஙகளும் கடைபிடிக்கப்படுகின்றன. ஈஸ்வரி அம்மன் கழுத்திலிருந்து விழுந்த நகையால் இக் கோவில் பிரசித்தி பெற்றதாகக் கதை உண்டு.
டாக்காவின் உணவில் டாக்கா கபாப்பும், பக்கர் காளியும், பிரியாணியும் முக்கியமானவை. பக்கர்காளி காலை உணவு. ரசகுல்லா, குலோப்ஜமுன் உட்பட ஏகப்பட்ட இனிப்பு வகைகள். “மச்சே பாடே பெங்காலி “ என்கிறார்கள். வங்கதேசத்தவனை அரிசியும், மீனும்., மட்டனும் வளர்த்திருக்கின்றன.பாலுக்குத் தட்டுப்பாடு. ஒரு லிட்டர் 60 ரூபாய்க்கு விற்கிறார்கள். எல்லாவற்றிலும் இனிப்பு சேர்க்கிறார்கள். “ நக்சி பித்தாஸ் “ என்ற அரிசியில் செய்த இனிப்பு கலந்த புட்டொன்றை ஒரு வயதானவள் தெருவில் விற்றுக் கொண்டிருந்ததை வாங்கிச் சாப்பிட்டோம். “ இது கல்யாணத்தின் போது மணமகளுக்கு விசேசமாக செய்து தருவது. இதைச் சாப்பிடுவது பாக்கியம். “ வயதானவள் இதைச் சொல்லும் போது புதுமண்பெண் போல முகம் சிவந்து விட்டது. புஸ்டியான இளம் பெண்கள் மத்தியில் நன்கு திடமாகவே அவள் இருந்தாள். “ நல்லா சாப்புடுவாங்க எங்க ஆளுக. பஞ்சோ பண்சோனர் தேஸ் – 5 விதமான உணவைச் சாப்பிடுபவர்கள் தேசம். “
” செரி ஏழைக்கு...”
“ பாண்டா இருக்கவே இருக்கு “
“ பாட்டிலா ”
” இல்லே. தண்ணீ ஊத்தி வைத்த இரவுச் சாப்பாடு. “
“ பழைய சோறா “
“ உப்பும் மிளகாயும் சேர்த்தால் அமிர்தம். அரிசியில் செய்ய்யும் மூன், கூரம், சீரா இவையெல்லாம் கூட அமிர்தம்தா .. “
கடினமான எலும்பாக இருக்கிறதேயென்று இரவு உணவு விடுதியில் விசாரித்தேன். ” நாட்டுக்கோழி கூட சாதாரணமாக கிடைக்குமா “
“ இது நாட்டுக் கோழியில்லே. வாத்துக்கறி . நாளைக்கு ராத்திரி டின்னர்லே ஒட்டகக் கறி போட்டர்லாமா.”
பாஸ்போர்ட்டைக்காட்டி கூட வந்த நண்பர்களில் சிலர் மது பானங்களை வாங்கினர். என்னுடன் வந்தவர்களில் தொழிற்சங்கத் தலைவர்கள், தன்னார்வக்குழுவினர், சமூக ஆர்வலர்கள் என 12 பேர் கொண்ட குழு டாக்காவில் பின்னலாடையின் அபரிமித ஏற்றுமதி பற்றி தெரிந்துகொள்ளச் சென்றிருந்தோம். “ என்ன பிராண்டிக்கு இவ்வளவு பஞ்சம். ..விஸ்கியா சாப்புட வேண்டியிருக்குது. “ என்றார் கூட இருந்த ஒரு நண்பர். குரானில் “ மது சாப்பிடுவது பகைமை தரும் . பலனை விட துன்பம் அதிகம் தருவது என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே தடை” என்கிறார்கள். மதுவுக்கு இருக்கும் தடை கடுமையாகக் கடைபிடிக்கப்படுகிறது. திருட்டுச் சாராயம் ரகசியமாக ஊடுருவி விட்ட்து. கிராமப்புறங்களில் மோலோ அல்லது பங்களா என நாட்டுச் சரக்குக் கிடைக்கிறது. கிறிஸ்துவ நிகழ்ச்சிகள், திருமணங்களில் வைன் பயன்படுத்தத் தடை இல்லை. டாக்கா நகரம் முழுக்க ஆள் மிதிக்கும் லட்சக்கணக்கான ரிக்சாக்களால் நிரம்பி வழிகிறது. ரிக்சாக்களையும், வெளிநாட்டுக்கார்களின் நெரிசலையும் மீறி 10 கி மீ கடக்க 2 மணி நேரமாகிவிடுகிறது. ஒரு ரிக்சாக்காரன் சொன்னது: “ காரோ என்ற எங்க ஆதிவாசிகள் பயன்படுத்தும் மது இங்கே எனக்குக் கிடைத்துவிடுகிறது. “
மதுவை தடை செய்திருக்கும் நாட்டில் விபச்சாரம் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அங்கீகாரம் பெற்ற 20 சிவப்பு விளக்குப் பகுதிகள் டாக்காவில் உள்ளன. குழந்தைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதும் உள்ளது. 12 வயதில் பின்னலாடைத்தொழிலுக்காக பர்குனா மாவட்ட்த்திலிருந்து டாக்கா வந்த ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு ஓட்டல் ஒன்றில் சேர்க்கப்பட்டு பின் விபச்சார விடுதியில் தள்ளப்பட்டதை ஒரு விவரணப்பட்த்தில் பார்த்தேன். அவள் சரீபா: சரீபாவைப்போல 30, 000 குழந்தைகள் இத்தொழிலில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். வங்க தேச அரசியல் சட்டம் சூதாட்டமும் , மது அருந்துவதும் பெரும் குற்றங்கள் என்கிறது. இங்கு சாலையோரங்களில் விலைமகளிர் நின்று கொண்டிருப்பது தினமும் தென்படுவது. ஏழைப்பெண்களும், நகர சேரிப்பெண்களும் இதில் அதிகம். கர்ப்பமான பெண்களுடன் உறவு கொள்வதில் இருக்கும் சுவாரஸ்யம் ப்ற்றி ஒருவன் சொன்னதாக ஒரு பெண் பத்திரிக்கையாளர் சொன்னது: “ முட்டைகளோடு இருக்கிற மீனுக்கு ருசி அதிகம். அது மாதிரி கர்ப்பமான பெண்களுடன் உறவு கொள்வது சுவாரஸ்யமானது”. இலீஸ் மற்றும் சீத்தல் ஆற்று மீன் வகைகள் இங்கு கிடைக்கின்றன. ஈலிஸா, ஈலிகா, ஹில்ஸா என்றும் பெயருண்டு, இப்பெயர்களில் பெண்களும் இருக்கிறார்கள்.
ஸேக்முஜிபுர் ரகுமானின் மகள் சேக்ஹசீனா இப்போது பிரதமர். ( முஜிபுரைப் பிரதமராக்கி வங்கதேசத்திற்கு விடுதலை வாங்கித்தந்த இந்திராகாந்திக்கு சிலை இல்லை) வங்கதேச அவாமிலீக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாம் முறையாகப் பிரதமர் ஆகியிருக்கிறார். அவாமிலீக் கட்சி இட்துசாரிகளையும், மதச்சார்பற்றவர்களையும் கூட்டணியில் வைத்திருக்கிறது. தேசியக்கட்சி பிரதானக் கட்சி. இது இஸ்லாமிய கட்சிகளுடன் கூட்டு வைத்திருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. தொழிற்சங்க வாதிகளுக்கு அடக்குமுறையும் சிறையும் சுலபமாக சேக்ஹசினா ஆட்சியில் கிடைத்துவிடுகின்றன.
30 லட்சம் பனியன் தொழிலாளர்கள் உள்ள ஊரில் தினசரி சம்பளம் 52 ரூதான். டாக்கா. இது வெகுக்குறைவு. இரண்டு மாதங்கள் முன் 15000 பனியன் தொழிலாளர்கள் நட்த்தியப் போராட்ட்த்தில் காவல் துறையுனருடன் நடந்தப் போராட்டத்தில் காவல்துறையினருடன் நடந்த மோதலில் பலத்த சேதம் தொழிலாளர்களுக்கு. 12 வயது முதல் குழந்தைத்தொழிலாளியாக இருந்து பின் படித்து முன்னேறிய 30 வயது கல்பனா என்ற தொழிற்சங்கத்தலைவரை சந்தித்தோம். ” 5000 டாக்கா கேட்டோம். 3000 கொடுக்கலாம். இப்போது 1663 டாக்காதான். 5000 கொடுத்தால் எல்லா பனியன் கம்பனிகளையும் மூடவேண்டியதுதான் என்கிறார்கள். முதலாளிகள் லாபத்தைக் குறைத்துக் கொள்வதை விரும்புவதில்லை “ என்கிறார்,
காவல்துறையினருக்கு மரியாதை இல்லை. மாமா என்று கேலிச் சிரிப்புதான். நிறைய லஞ்சம் வாங்குவதால் அப்படி கேலி மரியாதை. ஊழல் மலிந்த நாடு. டாக்கா விமான நிலையத்தை விட்டு இந்தியா வரும்போது ஒரு தொழிற்சங்கத்தலைவர் டாக்கா பண நோட்டுகள் வைத்திருந்ததைப் பிடுங்கிக் கொண்டாகள். 1000 டாக்கா லஞ்சம் கொடுத்தபின் டாக்கா விமான நிலைய அதிகாரிகள் அவரை விடுவித்தனர். டாக்காபணத்தை இந்திய ரூபாயாக மாற்ற 50 சதம் கழிவு போட்டு மீதியைத்தான் தந்தார்கள். “ கல்கத்தா ஏர்போர்ட்லே போயி எறங்குனா இது செல்லாத நோட்டு. கிழிச்சுதா போடணும். எங்க்கிட்டே குடுத்தா 50 ரூபாயாச்சும் மிஞ்சும்” வேறு வழியில்லாமல் நாங்கள் எல்லோரும் கையில் இருந்த டாக்கா பணத்தைக் கொடுத்துவிட்டு பாதிப்பணமே வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.
டாக்கா திரைப்பட உலகின் பெயர் ‘ டாலிவுட் ‘ . நம்ம ஊர் கோலிவுட், பாலிவுட் போல வருடத்திற்கு 100 படங்கள் வெளிவந்த காலம் உண்டு. இப்போது சுருங்கி விட்ட்து. இந்தித் திரைப்படங்கள் திரையிட அங்கு தடை.. திருட்டு டிவிடி இந்திப்படங்கள் , பாடல்கள் சுலபமாகக் கிடைக்கின்றன. பலர் எங்களிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டது.” தயவு செய்து பங்களாதேஸ் படங்களுக்குப் போய் விடாதீர்கள். “ கபர்சிங்குகளின் ஆதிக்கம் அதிகம். “ கபர்தார்”.
எழுத்தாளர்கள் டாக்காவை பிசாசு நகரம் என்கிறார்கள். தஸ்லிமா நஸ்ரின் பாபர்மசூதி இடிக்கப்பட்டதையும் இந்துக்கள் துன்புறுத்தப்பட்டதையும் பற்றி “ லஜ்ஜா” நாவலில் எழுதிய காரணத்தால் பத்வா தண்டனை விதிக்கப்பட்டது. ஜெர்மனி, ஸ்வீடன், இந்தியா என்று தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரும் இதை சாத்தான் நகரம் என்கிறார். தினமும் 8 மணி நேரம் மின்சாரவிநியோகம் இல்லாதத் தலைநகரம். இருளில் டாக்கா பெரிய பூதமாக பயமுறுத்துகிறது. டாக்காவிலேயே 8 மணி நேர மின்வெட்டு என்றால் பிற நகரங்களிலும், கிராமங்களிலும் கேட்கவே வேண்டாம். இருட்டு சாத்தான் நிரந்தப்பிடியில் வைத்திருப்பான். அந்நிய செலவாணி அதிகம் தரும் பனியன் தொழிலே இதன் பிரகாசம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.