தீவிரமான வாசிப்பின் அடுத்த வெளிப்பாடு எழுதிப் பார்ப்பது. கவிதையின் இறுக்கம் பிடிபடாதபோது-அல்லது கவிதையிலிருந்து அடுத்த தளத்திற்குச் செல்கிறபோது சிறுகதை மனதில் வந்துவிடும். வாசிப்பு தந்த பாதிப்பில் உரைநடையில் எதையாவது எழுதிப் பார்க்கத் தோன்றும். அல்லது வாசிப்பின்போது கிடைத்த, பிடிபடுகிற விஷயத்திற்கு இணையான இன்னொரு அனுபவத்தை எழுதிப் பார்க்கத் தோன்றும். அந்த விஷயம், அனுபவம் சிறுகதைக்கான முரண் அற்றும் இருக்கலாம். முரண் அல்லது திருப்பம் சிறுகதையின் கடைசியில் வெளிப்பட்டு இருக்க வேண்டும் என்பது பல சமயங்களில் செயற்கையாகவும் அமைந்துவிடும். சமூக முரணே சிறுகதைக்கான முரண் என்று சொல்லலாம். இதை உடைத்தெறிகிற பல வடிவங்கள் நம்முன் இன்று. 'நாலு பேரும், பதினைந்து கதைகளும்' என்றொரு தொகுப்பு. நானும் நாலு நண்பர்களும் சேர்ந்து வெளியிட்டோம். (கார்த்திகா ராஜ்குமார், ப்ரியதர்ஷன், நந்தலாலா) அது எழுபதுகளில் சா. கந்தசாமி, க்ரியா ராமகிருஷ்ணன் போன்றோர் இடம் பெற்ற 'கோணல்கள்' என்ற தொகுப்பின் சாயலைக் கொண்டிருந்தது. அதில் உள்ள 'கவுண்டர் கிளப்' என்ற நீண்ட கதை என் சின்ன வயசின் கிராம வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தது. கொங்கு மண் சார்ந்த வாழ்க்கையும், அனுபவங்களும் அதனூடாக அமைந்த வாழ்க்கையின் சிக்கல்களும், முரண்களும்-அதை ஒரு சிறுகதையாக்கியிருந்தது.
சொந்த வாழ்க்கை அனுபவங்களில் திளைத்து, அதிலிருந்து ஒரு பகுதியைப் பிய்த்தெடுத்து சிறுகதையாக்குவது உவப்பாக இருந்தது. சுய அனுபவமே எழுத்தின் பிரதானம் என்ற மாயை என்னை அழுத்திக் கொண்டிருந்தது. 'அப்பா' தொகுப்பின் கதைகள் இந்த வகையில்.
நிறைய எழுதிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை, நாம் கிரகித்துக் கொள்ளும் அனுபவங்களைக் கதைகளாக்கும் முயற்சியில் ஈடுபடுத்தும். இவை எழுதிப் பார்த்து, நமக்கான மொழியை, நடையைத் தேர்வு செய்து கொள்வதற்கான உத்தியாகிவிடும். பழுதென்று பல அமைந்து விடும். ஆனால் உள் மனம் கொட்டிவிடும். அனுபவங்களைக் கொட்டித் தீர்க்க வேறு உபாயம் எதுவும் இருக்காது. இது எழுதுகிறவனை, அவனின் வாழ்க்கையின் இறுக்கத்திலிருந்து தளர்த்தி அவனை சற்றே லகுவாக்கும்.
நவீன உலகத்தில் செய்திகளும், விவரங்களும் புறங்கையால் ஒதுக்கித் தள்ளி விடாதபடிக்கு நம்மை மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றன. இச்செய்திகளில் சில கதைத்தன்மைக்கான விஷயமாக இருக்கும். அப்படியான ஒரு செய்தியைக் கருவாக எடுத்துக் கொண்டு நாம் அறிந்திருக்கும் சூழலை மையமாக வைத்து, ஒரு நடைச் சித்திரத்தை உருவாக்கலாம், அதில் செய்தி வெகு பூடகமாகவும், அச்சூழல் சம்பந்தப்பட்ட அனுபவத்தின் வீச்சு சரியான விகிதத்திலும் வெளிப்படுவதில் வெற்றி இருக்கிறது.
படிமங்களால் நிறைந்து விட்டது நம் வாழ்க்கை. வாசிப்பு மூலமும், சக மனிதர்கள் மனதில் பொதிந்து கிடக்கும் தொன்மங்களை எடுத்து மறு பரிசீலனை செய்து பார்க்கலாம். இந்தத் தொன்மங்களைச் சிறுகதையாக்கிப் பார்க்கலாம். 'எதிர்ப்பதியம்' என்ற சிறுகதையில் நான் பயன்படுத்தியிருக்கும் தொன்மை, ஒரு பிரதேசத்திலிருந்து இன்னொரு பிரதேசத்திற்கு இடம் பெயர்கிறவர்கள், தங்களின் இஷ்டதெய்வமான சிறு கல்லை எடுத்து வந்து புதுப்பிரதேசத்தில் நட்டு கோயிலாக்குவதை, நதி நீர் பிரச்சினையால் வேறு பிரதேசத்திற்கு இடம் பெயர்கிற மனிதர்களின் சூழலுக்குள் கொண்டு வந்தேன்.
வாழ்க்கை, சீட்டைக் கலைத்துப் போட்டு வேடிக்கை காட்டுகிற விளையாட்டாகத்தான் இருக்கிறது. அப்படியிருக்கையில் இலக்கியப் படைப்பு மட்டும் நேர்கோட்டுத் தன்மையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே சிக்கலான மனநிலையை வெளிப்படுத்தும் நேர்கோட்டுத் தன்மையற்ற கதையினை எழுதிப் பார்ப்பது சவாலாகவும், புதுவிதப் பரிசோதனையாகவும் அமையும்.
'ஆழம்' என்ற என் நீண்ட சிறுகதை ஆறேழு பிரிவுகளைக் கொண்டது. ஒவ்வொரு பிரிவிலும் ஒவ்வொரு வகையான கதாபாத்திரங்கள். வெளிப்படையாக அவர்களுடனான பிணைப்பு இல்லாவிட்டாலும், ஏதோவொரு பாத்திரத்தின் நீட்சியோ, அனுபவ உலகமோ இன்னொரு பாத்திரத்திற்குமென்றாகிவிடும். இதன் மூலம் இவை சிருஷ்டிக்கும் உலகின் அருகாமையை வெகுவாக உணர முடியும். தொடர்பற்ற சிக்கலான கனவைப் போன்று தோற்றமளித்தாலும், கனவு தரும் நினைவை மீட்டுருவம் செய்யும் முயற்சியை இவ்வகையான கதைகள் காட்டும்.
நம் புராணங்கள், இதிகாசங்களும்; அவற்றின் மரபான, வழித்தடத்திலான இலக்கிய வகைகளும் எண்ணற்ற பாத்திரங்களைக் கொண்டதாக இருக்கின்றன. அவற்றின் கிளைக்கதைகள் ஒவ்வொன்றும் பிரம்மாண்டமான நாவல்கள். எந்த ஒரு பகுதியையும் சிறுகதைக்கான கருவாக எடுத்துக் கொள்ளலாம். இவற்றை எழுதிப் பார்ப்பதென்பது ஒரு வகைப் பயிற்சியாகவும் கைக்கொள்ளலாம்.
எடுத்துக் கொள்ளும் அவ்விஷயத்தை விசாரணைக்குட்படுத்துவதும், கேள்வியாக்குவதும், நவீன வாழ்க்கையின் ஒரு அம்சமாக்கி எழுதிப் பார்ப்பதும் சுவாரஸ்யம் தரும். நான் படித்த ஒரு சமஸ்கிருத நூல் என்னைப் பல வருடங்கள் உறுத்திக் கொண்டே இருந்தது. அதிலிருந்த ஒரு கேள்வியும்: "ஆத்மா என்று ஒரு உண்டா? மரணத்திற்குப் பிறகு அது வேறு தேசத்தைச் சேர்கிறதா?" -நசிகேதனின் இந்தக் கேள்வி யமதர்மனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. நரகத்தின் தொனி எங்குமில்லாதபடி சொர்க்கத்தின் ராஜ்யம் பரவலாகிவிட்டது நசிகேதனால், அவனைத் தீர்த்துக் கட்ட யோசனைகள் கிளம்புகின்றன.
அப்போது பூலோகம் பற்றியும், அங்கு நடக்கும் உயிர்க் கொலைகள் பற்றியும் பேச்சு வருகிறது. அப்போது கதை நவீன உலகத்திற்கு சட்டென இடம் பெயர்ந்து மனித குண்டுகள் பற்றியும் பேசுகிறது. இது தர்க்கரீதியான முரணாகக் கூட இருக்கலாம். ஆனால் சுவாராஸ்யமான கற்பனையாகக் கொள்வதில் எவ்வித நேர்மையற்ற தன்மையும் இருக்காதே!
வெறும் உரையாடல் மூலமே கதையை முழுமையாக்கி விடலாம். உரையாடல்கள் காலத்தைச் சுலபமாகத் தள்ளிப் போட்டுக் கொண்டு விடும். உரையாடல் தவிர்த்த மற்ற இடங்களில் ஆங்கில மற்றும் பிற மொழி வார்த்தைகளைத் தவிர்த்தல் தமிழுக்குச் செய்யும் பெரிய சேவையாகக் கூட இருக்கும். கதையின் தலைப்பை, கதையின் மையத்தோடு சம்பந்தப்படுத்துகிற விதமாய் சில வார்த்தைகளுக்குள் அமைய வைக்கலாம். கதை எழுதுகிற நேரத்தைப் போலவே கதைக்கான தலைப்பைத் தீர்மானிப்பதிலும் நேரம் எடுத்துக் கொள்ளலாம்.
எந்தப் படைப்பும் எழுதி முடித்த பின்பு படைப்பாளியோடு சம்பந்தம் கொண்டதா என்பது கேள்விக்குறியே! 'புணர்ந்து முடித்த பின், தள்ளிப்படு' என்ற அலுப்பு கி.ரா. வார்த்தைகளில் படைப்பை முடித்த பின் ஏற்படலாம். படைப்பாளி அதன் பின் கழுத்தை நெறித்துக் கொண்டு மூச்சை விட்டு விலகிவிடலாம்.
பிரதி வாசிக்கிறவனின் அனுபவத்திற்கேற்ப இன்னொரு பிரதியை உருவாக்கலாம். இன்னொரு பிரதியை உருவாக்கும் சாத்யத்தை, வாசிப்பு அனுபவத்தை உயிர்ப்புள்ளதாக ஆக்குவதே ஒரு படைப்பின் வெற்றி.
கிணற்று வெடிக்காக மருந்தைத் திணித்துத் திணித்து வெடிக் குழியை நிரப்புவது போல் இறுக்கமான வடிவத்தில் சிறுகதையை எழுதுவது என்பது பெரும் வெடிச் சத்தத்தைக் கற்பனைத்து ஈடுபடுவது போலத்தான்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.