தொல்காப்பியம்

'ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியன்' எனப் போற்றப்பெறும் தொல்காப்பியனார் (கி.மு. 711) எனும் புலவர் தொல்காப்பியம் என்ற நூலை யாத்துத் தந்தனர். இந்நூல் தொன்மை, செப்பம், வளம், செழுமை, வனப்பு, நாகரிகம், பெருநிலை போன்றவற்றுடன் தோன்றிக் காலத்தால் பழமை வாய்ந்த ஓர் அரிய இலக்கண இலக்கிய உயிர் நூலாய் எம் மத்தியில் பவனி வருகின்றது. 'இடைச் சங்கத்தாருக்கும் கடைச் சங்கத்தாருக்கும் நூலாயிற்று தொல்காப்பியம்' என்பது நக்கீரனாரின் கூற்றாகும். இன்னும், 'தொல்காப்பியம் பண்டைத் தமிழர்களின் தொன்மையையும், நாகரிகச் சிறப்பையும் விளக்கும் பழம் பெருநூல்' என்று டாக்டர் மு. வரதராசன் கூறியுள்ளார். இனி, பொருளதிகாரத்தில,; அகத்திணையியல், புறத்திணையியல் ஆகிய  இரு திணைகள் பற்றித் தொல்காப்பியம் கூறுவதையும் காண்போம். 
அகத்திணையியல்- பழந்தமிழர் வாழ்வியலை அகம் எனவும், புறம் எனவும் வகுத்து இயற்கை வழி நின்று வாழ்ந்து காட்டினர். அகம் இன்ப ஒழுக்கத்தின் இணைந்த இல்வாழ்வு பற்றியதாகும். அதை மேலும் ஒருதலைக் காமம், அன்புடைக் காமம், பொருந்தாக் காமம் என மூன்று பகுதிகளாகக் காட்டி, அவற்றை முறையே கைக்கிளை, அன்பின் ஐந்திணை, பெருந்திணை எனக் கூறி, அவற்றை ஒருமித்து ஏழு திணைகளாக ஆன்றோர் எடுத்துக் காட்டுவர். இதைத் தொல்காப்பியர் சூத்திரத்தில் பின்வருமாறு அமைத்துள்ளார்.
'கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்  
 முற்படக் கிளந்த எழுதிணை என்ப.' – (பொருள் 01)
மேற்கூறிய அன்புடைக் காமம், அன்பின் ஐந்திணை என்பன ஐவகை நெறி பற்றிய கூற்றாகும். அவை ஐவகை நிலங்களான முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் ஆகியவற்றின் சூழல், சுற்றாடல் ஆகியவற்றோடு இணைந்தனவாய் நிகழ்வனவாம். இவற்றை ஐந்திணைகளான முல்லைத்திணை, குறிஞ்சித்திணை, பாலைத்திணை, மருதத்திணை, நெய்தல்திணை என்றழைப்பர். இதிற் காட்டிய ஐந்திணைகளுக்கும், ஐவகையான நிலங்களை ஒதுக்கியமை கண்டீர். ஆனால் கைக்கிளைக்கும், பெருந்திணைக்கும் நிலங்கள் ஒதுக்கப்படாதமையும் காண்பீர்.
 
ஐந்திணைகளிலும் மக்களின் ஒழுகு முறைகளும், அவர் உள்ளங்களிற் கிளர்ந்தெழும் எழுச்சிகளும் வேறுபட்டனவாய் அமைவதைக் காண்கின்றோம். இதைத் தொல்காப்பியர் சூத்திரம் கூறும் அழகினையும் பார்ப்போம்.
'புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
 ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை
 தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே.' -  (பொருள். 16)  
இனி, ஏழு திணைகளையும; மேற் காட்டிய ஐங்து எழுச்சிகளின் நிலைகளையும் ஒருங்கமைத்துக் காண்போம்.
1.    முல்லைத்திணை:- இது காடு சார்ந்த இடமாகும். முல்லைக்குத் தெய்வம் மாயோன். இத் திணையின் உரிப்பொருள் 'இருத்தல்' ஆகும். இருத்தல்- தலைமகன் வரும் வரையும்; ஆற்றியிருத்தல்.
2.    குறிஞ்சித்திணை:- முருகவேள் காக்கும் மலை சார்ந்த இடம் குறிஞ்சியாகும். குறிஞ்சியில் தலைவன் தலைவியர் ஒன்றிணைந்து 'புணர்தல்' புரிந்து இன்புறுவர். 
3.    பாலைத்திணை:-  பாலை வனாந்தரம் சார்ந்த இடமாகும். கொற்றவை என்ற தெய்வம் பாலையைக் காத்து நிற்கின்றது. தமர் ஒத்துவராவிடின், தலைவனும் தலைவியும் தனி வழி நின்று பாலை வழி செல்வர். இதைப் 'பிரிதல்' எனக் கூறுவர். 
4.    மருதத்திணை:- வயல் சார்ந்த இடம் மருதமாகும். மருதத்தை இந்திரன் காத்து நிற்பான். இங்கு தலைவன் தலைவியர் 'ஊடல்' புரிந்து நிற்பர். ஊடல் தீர அவர்கள் கூடி நிற்பர்.
5.    நெய்தல்திணை:- வருணன் காக்கும் கடல் சார்ந்த இடம் நெய்தலாகும். இங்கே தலைவன் தலைவியைப் பிரிந்து பொருள் தேடக் கடல் வழி செல்லுங்கால் தலைவியானவள் 'இரங்கல்' நிகழ்த்தி நிற்பாள். இரங்கல்- ஆற்றாமை.
6.    கைக்கிளை:- கைக்கிளை என்பதை ஒரு தலைக் காமம் என்றும், ஒவ்வாக் காமம் என்றும், தாழ்வான ஒழுக்கம் என்றும் கூறுவர். காமவுணர்ச்சி தோன்றாத சிறு பெண் தனித்திருக்கையில், தனக்கும், அவளுக்கும் ஒப்புமையுடையவைகளைச் சேர்த்து, அவள் சொற்கேளாமல் தானே சொல்லி இன்பமடைதல், பொருந்தித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பென்பர் தொல்காப்பியர்.                                                      
 'காமஞ் சாலா இளமை யோள்வயின்
 ஏமஞ் சாலா இடும்பை எய்தி 
 நன்மையும் தீமையும் என்றிரு திறத்தான்
 தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச்
 சொல்லெதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்
 புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே.'  - (பொருள். 53)
7.    பெருந்திணை:- பெருந்திணை என்பது ஒருவனும் ஒருத்தியும் ஒருவர்க்கொருவர் அன்பின்றிக் கூடி வாழும் முறையாகும். இதைப் பொருந்தாக் காமம் என்றும் கூறுவர். பெருந்திணை புணர்ந்த பின்னான நிகழ்வாம். தலைமகனுக்கே உரிய மடலேறல், இளமை நீங்கிய பின்பும் இன்பம் துய்த்தல், தெளிவற்ற நிலையில் காமத்தின்கண் நிற்றல், ஐந்திணையாகிய ஒத்த காமத்தின் மாறுபட்டு நிற்றல் ஆகிய நான்கும் பெருந்திணை எனத் தொல்பாப்பியம் கூறும்.
 'ஏறிய மடல்திறம் இளமை தீர்திறல்
 தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
 மிக்க காமத்து மிடலொடும் தொகைஇச்
 செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே.' – (பொருள். 54)
புறத்திணையியல்:- இன்ப ஒழுக்கத்தின் இயல்பைப் பற்றி அகத்திணையிலும் அறம், பொருள், ஒழுக்கங்களின் இயல்பைப் பற்றிப் புறத்திணையிலும் விரிவாகக் கூறப்படுகின்றது. அகத்திணையில் ஏழு திணைகளான முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் கைக்கிளை, பெருந்திணை என்பவை பற்றிக் கூறப்பட்டுள்ளது. இவற்றின் புறத்தே நிகழ்வனவான வஞ்சித் திணை, வெட்சித் திணை– கரந்தைத் திணை, வாகைத் திணை, உழிஞைத் திணை- நொச்சித் திணை, தும்பைத் திணை, பாடாண் திணை, காஞ்சித் திணை ஆகிய ஏழு திணைகளும் புறத்திணையில் சொல்லப்பட்டுள்ளன. இவ்வேழு திணைகளுக்கும் மிகச் சிறப்பு வாய்ந்த துறைகள் உரியனவென்று தொல்காப்பியம் கூறுகின்றது. இனி, அவற்றையும் பார்ப்போம்.
1.    காடாகிய முல்லைத் திணைக்குப் புறம்பான, மண்ணாசை கொண்ட மன்னனுடன் வேறொரு மன்னன் சென்று போர் புரிதலை வஞ்சித் திணை எனக் கூறுவர்.
 
 'வஞ்சி தானே முல்லையது புறனே
 எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன்
 அஞ்சுதகத்  தலைச்சென்று அடல்குறித் தன்றே.' – (பொருள். 64)
வஞ்சியின் துறைகள்:- படையின் பேரொலி, பகைவன் நாட்டைத் தீயிட்டுக் கொளுத்தல், படைகளின் பெருமை, அரசன் பரிசில் கொடுத்தல், பகைவரைக் கொன்ற வெற்றி, பாராட்டுப் பெற்ற வீரன் புகழ், பிறரால் புகழப்படல், படையைச் செலுத்தும் பேராண்மை, தனித்து நின்று பகைவரை எதிர்த்தல், எஞ்சிய உணவைத் தன் வீரர்களுடன் உண்டல், வென்றோர் விளக்கம்-தோற்றோர் குறை, வென்றோர் வள்ளைப் பாடல், போரில் இறந்தோர் காயமுற்றோரை விசாரித்து பொருள் கொடுத்துதவல் ஆகிய பதின்மூன்று (13) துறைகள் சிறப்பைக் கொடுக்கின்றன.- (பொருள.; 65)    
2.    மலைப் பாங்கான குறிஞ்சித் திணைக்குப் புறம்பான நிரைகோடலும், நிரை மீட்டலும் ஆகிய வேறுபாடு குறித்து வெட்சித் திணை என்றும் கரந்தைத் திணை என்றும் இரு பெயரிட்டுக் கூறுவர்.
 
 'அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர்
 புறத்திணை இலக்கணம் திறம்படக் கிளப்பின்
 வெட்சி தானே குறிஞ்கியது புறனே
 உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே.' -  (பொருள். 59)
வெட்சியின் துறைகள்:- பசுக்கள் கவர்வதில் எழும் பேரொலி, வெற்றியின் செய்தி கேட்டல், ஒற்றர் அறியாவண்ணம் செல்லல், பகைவர் அறியாது ஒற்றர் மூலம் களநிலை அறிதல், பகைவர் அறியாது உட்செல்லல், தங்கி நின்று அவ்வூரை அழித்தல், எதிரியை வெல்லல், பசுக்களைக் கவர்தல், அவற்றை வருத்தாது ஓட்டி வருதல், அவற்றைத் தம் ஊருக்குக் கொண்டு வருதல், வீரர் வீடு வந்து சேர்தல், பசுக்களை எல்லாரும் பங்கிட்டுக் கொள்ளல், வெற்றியில் மது அருந்தல், தம் பசுக்களைக் கேட்போருக்குக் கொடுத்தல் ஆகிய பதினான்கு (14) துறைகள் உள்ளன. - (பொருள். 61) 
கரந்தையின் துறைகள்:- இதற்கு இருபத்தொரு (21) துறைகள் உள்ளன. ஆவையாவன:-வேலன், காந்தள் மாலையணிந்து தெய்வமாடும் காந்தளும், பகைவன், மன்னன் படைகளுக்கிடையே வேறுபாடு காண வேண்டி அணிந்த பனம்பூ, வேப்பம்பூ, ஆத்திப்பூ ஆகிய பூக்கள், வாடும் கொடியல்லாத வள்ளியெனும் கூத்தும், வீரக்கழல் நிலையும், புறங்காட்டி ஓடாது எதிர்த்து நிற்கும் பகைமன்னனின் செயலை உன்னமரத்தோடு ஒத்துப் பார்க்கும் உன்ன நிலையும், காத்தல், படைத்தல், அழித்தல் ஆகிய புகழையும், உவமை காட்டப்படும் பூவை நிலையும், பகைவரைப் புறங்காட்டி ஓடச் செய்தலும், கவரப்பட்ட பசுக் கூட்டங்களை மீட்டலும், அரசன் சிறப்பை எடுத்துக் கூறலும், வஞ்கின மொழிகளைக் கூட்டிச் சொல்லுதலும், கொடிய படையை எதிர்த்து நிற்றலும், பகைவரை வீழ்த்தித் தானும் மடிதலும், போரில் மற்றவர்கள் செய்வதற்கு அஞ்சாமையும், பகைவரை வென்ற அரசிளங்குமரனைப் பாராட்டிப் பறை ஒலித்து அரசைக் கொடுத்துக் கொண்டாடிய ஆட்டமும், வீரர்களின் நினைவாக நிறுத்தற் கல்லைப் பார்த்தலும், அக்கல்லை எடுத்து வருதலும், அதைக் கழுவிச் சுத்தப்படுத்தலும், அதை ஓர் இடத்தில் நடுதலும், அதைக் கோயிலாக எழுப்பி அவன் பீடுகளைத் தீட்டிச் சிறப்பித்தலும், அதைத் தெய்வமாகப் போற்றி வாழ்தலும் ஆகியனவாம். – (பொருள். 63). 
3.    வாகைத் திணை  என்னும்  புறத்திணை  பாலை  என்னும்  அகத்திணைக்குப்  புறனாகும். 
 'வாகை தானே பாலையது புறனே
 தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப்
 பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப' – (பொருள். 73) 
 வாகையின் துறைகள்:- கூதிர், வேனில் பாசறைகளில் போர் விருப்பினால் புரிந்த                 
 போர்நிலை வகையும், உழவர் உழுது நெல் பெற்று அறம் செய்வதுபோல் அரசன் 
 போரில் பெற்ற பொருள்களைப் பரிசில் கொடுக்கும் சிறப்பினைப் புலவர் பாடுதலும், 
 தேர்ப்படை அரசனை வென்ற அரசன் தேரின்முன் ஆடும் குரவைக் கூத்தும்,  
 பொருந்திய மரபுடன் தேரின்பின் ஆடுகின்ற பின்தேர்க் குரவைக் கூத்தும், பெரும் 
 பகையினை எதிர்த்து நிற்கும் வேலினைப் புகழும் இடமும், பகைவரை எதிர்த்து  
 நிற்கும் ஆற்றலும், பொருந்தா வாழ்க்கையுடைய வலிய ஆண்மையினைப் பொருந்தும் 
 பகுதியும், தன் தலைவன் பற்றி முன் கூறிய உறுதிமொழியை நிரூபிக்கத் தன் 
 உயிரை வழங்கிய அவிப்பலியும், பகைவரின் இடத்தைப் பொருந்திய பகுதியும்,   
 எருது புறந்தருகின்ற வேளாளரும், பசுவினைக் காக்கும் வணிகரும் ஆகிய சான்றோர் 
 பகுதியும், பிறன்மனை விரும்பாத பகுதியும், குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை, 
 தூய்மை, நடுவு நிலைமை, அழுக்காறாமை, அவாவின்மை ஆகிய எட்டுப் 
 பகுதியினையுடைய அவையகமும், அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, நடுவு 
 நிலைமை, வெஃகாமை, புறங்கூறாமை, தீவினையச்சம், அழுக்காறாமை, 
 பொறையுடைமை ஆகிய கட்டுப்பாட்டுடனான இல்லறத்தின் பகுதியும், மிக்க 
 புகழினைத் தரும் கொடையும், பிழை செய்தோரைத் தாங்கும் பாதுகாவலும், 
 மெய்ப்பொருளோடு இணைந்த பகுதியும், அருளோடு சேர்ந்த துறவும், காமம் நீங்கிய   
 பகுதியும் ஆகிய பதினெட்டு (18) துறைகள் உள்ளன. - (பொருள். 75) 
 4.    வயல் சார்ந்த மருதத்திணைக்குப் புறம்பான, பகைவரின் மதிலைக் கைப்பற்றலும்,      
 அழித்தலுமாகிய வழக்கினை உழிஞைத் திணை என்றும் நொச்சித் திணை என்றும்  
 கூறுவர்.
 
 'உழிஞை தானே மருதத்துப் புறனே
 முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும்
 அனைநெறி மரபிற்று ஆகும் என்ப.'    -   (பொருள். 66)
 
 உழிஞையின் துறைகள்:-  இதற்கு  எட்டு  வகையான  துறைகள்  உள்ளன. 
 அவையாவன:- தன் அரசையும், ஆணையையும் ஏற்றுக் கொள்ளாத பகைவரது 
 நாட்டைக் குறித்த வெற்றியும், நினைத்ததை முடித்துக் காட்டும் அரசன் சிறப்பும், 
 எதிரியின் மதிலின்மீது ஏறி நிற்றலும்,  பகைவரால் எறியப்படும்  கருவிகளைத் 
 தடுக்கும் கிடுகு கேடயம் ஆகிய படைக்கருவிகளின் மிகுதியும், மதிலின் உட்புறத்தே
 உள்ள அரசன் செல்வ மிகுதியும், மதிலகத்திருப்போன் புறத்தே உள்ளவனைத்தன் 
 செல்வத்தைவிடப் போர்த்தொழிலால் வருத்தியதைக் கூறவும், தன் மதில் அழியத்
 தொடங்கியவிடத்து வெளியிலுள்ளோனுடன் தனித்துப் போர் புரியும் நெஞ்சுறுதியும் 
 மதிலின் வெளியேயுள்ளோன் உள்ளிருப்போனுடன் பகையினைப் பொருட்படுத்தாமை 
 ஆகியனவாம். – (பொருள். 68) 
 
 நொச்சியின் துறைகள்:- காத்தற் குடையைப்போல் பகைவரை வருத்தும் வாளையும்
 நன்னாளில் எடுக்கச் செய்தல், மதில் ஏணிமீது ஏறி நின்று அகத்தோனும் புறத்தோனும் 
 போர் புரிதல், புறத்தோன் அகத்தோனை வென்று புறமதில் உள்அதில் தன்வசமாக்கிய
 வினைமுதிர்ச்சியும், புறத்தோனால் கைக்கொள்ளப்பட்ட புறமதில், உள்மதிலிடத்தில் 
 அகத்தோன் விரும்பிய மதிற் காவலும், அகத்தோன் காத்து நின்ற இடைமதிலைப் 
 புறத்திருந்தோன் விரும்பிக் கைக்கொண்ட புதுமையும், புறத்தோனும் அகத்தோனும்
 இருகரைமதிலிலும் நின்று நீரின்கண் பாசிபோல் கிடங்கினில் போரிட்ட பாசியும், ஊரின் 
 நடுவே நடைபெறும் போரினை விரும்பிய பாசி மறனும், ஊரின் மத்தியில் அமைந்த 
 மதில், புறத்தே அமைந்த மதில், கோயில் மதில் ஆகியவற்றில் ஏறி நின்றும், போர்
 செய்தற்கு விரைந்து சென்றோன் கூறுபாடும், போரில் ஒருவனை ஒருவன் கொன்று 
 இறந்தவன் பெயரால் முடிபுனைந்து நீராடும் மங்கலமும், வென்றவன் வாளினை வெற்றி
 வுpழாவாக நீராட்டலும், வென்றவன் படைகளுக்குச் சிறப்பு விழாவெடுக்க ஒன்றுகூடுமாறு
 அழைத்தலும் ஆகிய பன்னிரண்டு (12) துறைகள் அமைகின்றன- (பொருள். 69).  
5.    தும்பைத் திணை என்னும் புறத்திணை, நெய்தல் என்னும் அகத்திணைக்குப் புறனாகும். இதில், வலிய அரசனை எதிர்த்து அவன் வீரத்தை அழிக்கும் சிறப்பெனத் தும்பையின் இயல்பு பற்றிப் பேசப்படுகின்றது.
 'தும்பை தானே நெய்தலது புறனே
 மைந்துபொரு ளாக வந்த வேந்தனைச்
 சென்றுதலை யழிக்கும் சிறப்பிற்று என்ப.' -  (பொருள். 70)
 
 தும்பையின் துறைகள்:- இதற்குப் பன்னிரண்டு (12) துறைகள் உள்ளன. காலாட்படை, 
 யானைப்படை, குதிரைப்படை ஆகிய முப்படைகளின் நிலையும், வேற்போரில் முதன்மை
 பெற்று நின்ற மன்னனைப் பகைவர் சூழ்ந்து கொண்ட பொழுது, மன்னன் படைவீரன் 
 ஒருவன் பகைவர்மீது வேல்களை வீசியெறிந்த தார்நிலையும், இரு பக்கத்தாரும் தம்முள் 
 பொருதி இறந்துபடலும்,  சிதறுண்ட படையிலுள்ள ஒருவன் தனித்து வந்து எதிர்த்த
 பெருமையும், படைக் கருவிகள் தீர்ந்த பொழுது கைப்போர் புரிந்து வெற்றி பெறலும்,
 பகைவரை எதிர்  கொண்டு அவர்  யானைகளைக்  கொன்று போரிடும் பெருமையும்,
 வென்ற அரசனுடைய வீரர்கள் கூடி அவன் புகழ் பாடி ஆடும் ஆட்டமும், இருபெரு
 வேந்தரும் அவர் படைவீரர்களும் அழிந்த தொகைநிலையும், போரில் தன் தலைவன்
 வஞ்சத்தால் கொல்லப்பட்டான்  என நினைந்து  கடும் போர்  புரிந்து புகழ் பெற்ற 
 நிலையும்,  அறம் நோக்காது வாள்  கொண்டு  பலரைக் கொன்றொழித்த வீரமும் 
 ஆகியனவாம். – (பொருள். 72) 
6.    பாடாண் திணை:- என்னும் புறத்திணை, கைக்கிளை என்னும் அகத்திணைக்குப் புறனாகும். இது, (1) கடவுள் வாழ்த்து, (2) வாழ்த்தியல், (3) மங்கலம், (4) செவியறிவுறுத்தல், (5) ஆற்றுப்படை, (6) பரிசிற்றுறை, (7) கைக்கிளை, (8) வசை ஆகிய எட்டு வகைகளைக் கொண்டனவாம்.
 'பாடாண் பகுதி கைக்கிளைப் பிறனே
 நாடுங் காலை நாலிரண் டுடைத்தே.' -  (பொருள். 78)
 பாடாணின் துறைகள்:-  இதில்  பதினொன்று  (11)  துறைகள்  பேசப்படுகின்றன.  
 அவையாவன:- கொடுப்போரைப் புகழ்தலும் கொடாதோரை இகழ்வதும், வெற்றியால்  
 குணத்தால் உயர் நிலையடைந்தோரைப் புகழ்ந்து  கூறும் வாழ்த்தும்,  வருத்தம்  தீர  
 வாயில் காத்து  நிற்போருக்கு உரைக்கும் வாயில் நிலையும், அரசன் துயில்வதைக் 
 கூறிய கண்படை நிலையும், கபிலநிறப் பசுவின் கொடையினைக் கூறுதலும், விளக்கு 
 எரியும் திறத்திற் கேற்ப வேலின் வெற்றியைக் கூறுதலும்,  நன்மையின்  பொருட்டு   
 தீங்கற்ற சொற்களால்  உண்மையைக்  கூறுதலும்,  நன்னெறி அறிவுறுத்தலான  
 செவியறிவும், அரசனைப்  பாராட்டும் புறநிலை  வாழ்த்தும்,  ஆண்பாற் கூற்றுக் 
 கைக்கிளையும், பெண்பாற் கூற்றுக் கைக்கிளையும் ஆகியனவாம். – (பொருள். 87)
 
7.    காஞ்சித் திணை என்னும் புறத்திணை, பெருந்திணை என்னும் அகத்திணைக்குப் புறனாக அமையும். நிலையில்லாத உலகத்தைப் பொருந்திய நெறியையுடையது என்றும், அதில் இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, யாக்கை நிலையாமை ஆகிய மூன்றையும் எடுத்துக் காட்டுவர் தொல்காப்பியர்.
 'காஞ்சி தானே பெருந்திணைப் புறனே
 பாங்கருஞ் சிறப்பிற் பன்னெறி யானும்
 நில்லா வுலகம் புல்லிய நெறித்தே.'  -  (பொருள். 76) 
 காஞ்சியின் துறைகள்:- இதில் பத்துத் (10) துறைகள் கூறப்பட்டுள்ளன. அவையாவன:-
 எமனைப் பற்றிச் சொல்லப்பட்ட பெருங்காஞ்சியும்,  கற்றோர்  மற்றவர்க்குக்  கூறிய     
 முதுகாஞ்சியும்,  நற்குணம் பொருந்திய பகுதியை  நோக்கித் தன்; மறப்பண்பினாலே 
 புண்ணை கிழித்துக்கொண்டு இறந்து படும் மறக்காஞ்சியும், போர்;க்களத்தில் புண்பட்ட 
 பாதுகாப்பற்ற  மறவனைப்  பேய்கள்  காக்கின்ற  பேய்க்காஞ்சியும்,  இன்னான் 
 இறந்தானென்று உலகத்தார் இரங்கும்   மன்னைக் காஞ்சியுk; இன்னது பிழைத்தால் 
 இக் கேடு வருமென்று கூறிய வஞ்சினைக் காஞ்சியும், இன்பமூட்டும் நகை அணிந்த 
 மனைவி புண்பட்ட கணவனைப் பேய்கள் தீண்டாது காத்த தொடாஅக் காஞ்சியும், 
 கணவன் உயிரைப் பறித்த வேலினால் தன் உயிரையும் போக்கிய வஞ்சிக்காஞ்சியும், 
 பெண்கொடுக்க மறுத்ததனால் பகைவனாய் பெண் கொள்ள வந்த அரசனுக்கு முதுகுடி
 வணிகரும், வேளாளரும் தம் பெண்ணைக் கொடுக்க அஞ்சிய மகட்பாற் காஞ்சியும்,தன் 
 கணவன் இறந்தவிடத்து அவன் தலையோடு தன் முலையையும் முகத்தையும் சேர்த்து 
 இறந்த நிலையும், ஆகிய துறைகள்  பத்தாகும் என்று சிலர் கூறுவர்.  வேறு  சிலர் 
 இவற்றுடன் இன்னுமொரு பத்துத் துறைகளைச் சேர்த்துக் காட்டுவர். – (பொருள்.77).  
முடிவுரை 
இதுகாறும்  தமிழன் வாழ்வியலை அறம், புறம்  என வகுத்து முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம். நெய்தல் என ஐவகை நிலங்களை அமைத்து, அவற்றில் முறையே இருத்தல், புணர்தல், பிரிதல், ஊடல், இரங்கல் என்ற இன்ப உணர்வுகளோடிணைந்து, அகத்திணையில் முல்லைத் திணை, குறிஞ்சித் திணை, பாலைத் திணை, மருதத் திணை, நெய்தல் திணை, கைக்கிளை, பெருந்திணை ஆகிய ஏழு திணைகளையும் கூறி, அவற்றிற்குப் புறனான வஞ்சித் திணை, வெட்சித் திணை- கரந்தைத் திணை, வாகைத் திணை, உழிஞைத் திணை – நொச்சித் திணை, தும்பைத் திணை, பாடாண் திணை, காஞ்சித் திணை ஆகிய ஏழு திணைகளையும் புறத்திணையில் சாற்றி, அவற்றிற்குரிய இலக்கணமும் அமைத்து, துறைகளும் வகுத்து, வஞ்சியின் துறைகள் 13 என்றும், வெட்சியின் துறைகள் 14 என்றும், கரந்தையின் துறைகள் 21 எனவும், வாகையின் துறைகள் 18 என்றும், உழிஞையின் துறைகள் 08 என்றும், நொச்சியின் துறைகள் 12 என்றும், தும்பையின் துறைகள் 12 எனவும், பாடாணின் துறைகள் 11 என்றும், காஞ்சியின் துறைகள் 10 என்றும் எடுத்துக் காட்டி, மாற்றான் ஆனிரைகளைக் கவர்ந்து, போரில் பகை மன்னரை வென்று, வெற்றி வாகை சூடி, மது அருந்திக் கூத்தும் ஆடி மகிழ்ந்து, பகை மன்னரின் மதிலைக் கைப்பற்றியும், அழித்தும், காலாட்படை, யானைப்படை, குதிரைப்படை ஆகிய முப்படைகளின் போர் நிலைச் சிறப்பும் எடுத்துக் காட்டி, கணவன் இறந்தவிடத்து மனைவியும் மூதானந்த நிலையில் நின்று அவனுடன் சேர்ந்து இறந்ததும், பாலையில் தன் கணவனை இழந்து தனியனாய் நின்று வருந்திய தலைவியின் முதுபாலை நிலையும், காதலனை இழந்த தலைவி கைம்மை பூண்ட தாபத நிலையும், மனைவியை இழந்த கணவன் படும் துயரான தபுதார நிலையும், போரில் இறந்தோரையும் காயமுற்றோரையும் சென்று பார்த்து, துக்கம் விசாரித்து, பொருள் கொடுத்து, ஆறுதல் கூறி உதவலும், பகைவரை வாட்போரில் வென்ற அரசிளங்குமரனைப் பாராட்டிப் பறை முதலிய ஒலிக்கருவிகள் முழங்கி அவனுக்கு அரசைக் கொடுத்தும், போரில் இறந்த வீரர்கiளின் நினைவாக நடுகல் நாட்டி அவர் புகழ் எழுதிக் கோயிலாக எழுப்பித் தெய்வமாக்கி வாழ்த்தியும் ஆகிய வீரதீரச் செயல்களை மேலே பேசப்பட்டுள்ளதைப் பார்த்து மகிழ்ந்தோம். 
ஏழு (07) அகத்திணைகள், ஏழு (07) புறத்திணைகள், நூற்றிப் பத்தொன்பJ (119) துறைகள் ஆகியவற்றைச் சீரிய முறையில் நுணுகி ஆராய்ந்து திறம்பட அமைத்துத் தமிழன் பெருவாழ்வுக்காகக் கொடுத்துச் சென்ற மாபெரும் புகழ்த் தொல்காப்பியனார் என்றும் போற்றிப் பாராட்டுக்குரியவர் ஆவார். அவர் விட்டுச் சென்ற எச்சங்கள் இன்றும் எம்மையும் ஆற்றுப்படுத்தி நிற்கின்றன.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



 பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்
 பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்  
 






 
 

