'கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.'
திருக்குறளுக்கு அமைய அப்துல் கலாம் கசடறக் கற்றார் கற்றபின் அவை கூறிய ஒழுக்க நெறியில் வழுவாது ஒழுகி நின்றார். அதுவும் காணாதென்று மேலும் தொடர்ந்து செயற்பட்டு உலக மேதையானார். அவர் வரலாற்றைச் சற்று விரிவு படுத்திக் காண்போம்.
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்கள் ஜைனுலாப்தீனுக்கும் ஆஷியம்மாவுக்கும், நான்கு சகோதரர்களுடனும், ஒரு சகோதரியுடனும் ஆறாவது குழந்தையாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் 15-10-1931 அன்று அவதரித்தார். இவர் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு படகோட்டியின் மகனாவார். இவர் குடும்பம் ஏழ்மையில் வாடியதால், இவர் செய்தித்தாள்களை விநியோகம் செய்தார். இவர் ஒரு பழுத்த பிரமச்சாரியாவார்.
இவர் தன் பள்ளிப்படிப்பை முடித்தபின், திருச்சினாப்பள்ளியிலுள்ள 'செயின்ட் ஜோசேப் கல்லூரியில்' இயற்பியல் பயின்று 1954-ஆம் ஆண்டு இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஆனால் இயற்பியற் துறையில் ஆர்வம் காட்டாத இவர், 1955-ஆம் ஆண்டு தன்னுடைய 'விண்வெளிப் பொறியியற் படிப்பை' சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
விஞ்ஞானியாக அப்துல் கலாம்
1960-ஆம் ஆண்டில் 'பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்' (Defence Research and Development Organisation = DRDO ) எனும் பிரிவில் விஞ்ஞானியாக ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்து இந்திய ராணுவத்துக்கு வழங்கினார். பின்னா;, 'இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்' (Indian Space Research Organisation = ISRO) எனும் பிரிவிலும் தனது ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்து, 'துணைக்கோள் ஏவுகணைக் குழுவில்' (Satalite Launch Vehicle = SLV) செயற்கைக்கோள் ஏவுதலிலும் முக்கிய பங்காற்றினார். இவர் 1980-ஆம் ஆண்டு SLV-111 ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-1 என்ற துணைக்கோளை விண்ணில் ஏவச்செய்து வெற்றியும் கண்டார். இது இந்தியாவுக்கே ஒரு பெரும் சாதனையாக அமைந்தது. இச் செயலைப் பாராட்டி இந்திய மத்திய அரசு இவருக்கு 1981-ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான 'பத்ம பூஷன்' என்ற விருதை வழங்கிக் கௌரவித்தது.
1963-ஆம் ஆண்டிலிருந்து 1983-ஆம் ஆண்டுவரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பற்பல பணிகளைச் சிறப்பாகக் கடமையாற்றிய இவர் 1999-ஆம் ஆண்டு 'பொக்ரான் அணு ஆயுத சோதனையில்' முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய அப்துல் கலாம் இதுவரை ஐந்து ஏவுகணைத் திட்டங்.களிற் பணியாற்றியுள்ளார். அவரை, 'இந்திய இராணுவ ராக்கட் படைப்பின் பிதாவாக' அனைவராலும் போற்றப்படுகின்றார்.
குடியரசுத் தலைவரானார் அப்துல் கலாம்.
2002-ஆம் ஆண்டில் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக 25-07-2002-இல் பதவியேற்றார். இவர் குடியரசுத் தலைவர் பதவியை ஏற்கமுன் இவருக்கு இந்தியாவின் மிகப் பெரிய விருதான 'பாரத ரத்னா விருது' என்பதை மத்திய அரசு இவருக்கு வழங்கிக் கௌரவித்தது. இன்னும், 'பாரத ரத்னா' விருது பெற்ற மூன்றாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார். இவர் 25-07-2007 வரை குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார். இவரை 'மக்களின் சனாதிபதி' என்று அனைவரும் அன்பாக அழைத்தனர்.
குடியரசுத் தலைவராக ஐந்து (05) ஆண்டுகளை நிறைவு செய்தபின் அப்துல் கலாம் அவர்கள் பின்வரும் சிறப்பு வாய்ந்த பொறுப்புகளை ஏற்று மதிப்புடன் செயலாற்றி இந்திய மைந்தரானார்.
1. சில்லோங் மேலாண்மை இந்திய நிறுவனத்தின் வருகைதரும் பேராசிரியர்.
2. அகமெடபாட் மேலாண்மை இந்திய நிறுவனத்தின் வருகைதரும் பேராசிரியர்.
3. இந்டோரி செயலாட்சி இந்திய நிறுவனத்தின் வருகைதரும் பேராசிரியர்.
4. பெங்கலூர் அறிவியல் இந்திய நிறுவனத்தின் மதிப்பு மிக்க பல்கலைக்கழக
ஆட்சி உறுப்பினர்.
5. திருவனந்தபுரம் விண்வெளி அறிவியல் இந்திய நிறுவனம் மற்றும் தொழில்
நுட்பம் ஆகியவற்றின் உயர்முறை மன்ற முதல்வர்.
6. அண்ணா பல்கலைக்கழக வான்வெளிப் பொறியமைப்புப் பேராசிரியர்.
7. இந்தியாவிலுள்ள வேறுபல கல்லூரிகள், ஆய்வு நிறுவனங்கள் ஆகியவற்றின்
உதவியாளர்.
8. கைதரபாட்டில் அமைந்துள்ள பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனம்,
பெனாறஸ் இந்து பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக் கழகம் ஆகியவற்றில்
தகவல்- தொழில் நுட்பம் என்ற பாடத்தைக் கற்பித்து வந்தார்.
மரணம்
அப்துல் கலாம் அவர்கள் 27-07-2015 அன்று இந்தியாவின் மேகாலயா மாநிலத் தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் மாணவர் மத்தியில் மாலை சுமார் 6.30 மணியளவில் உரையாற்றிக் கொண்டிருக்கையில் மயங்கி விழுந்தார். அவரைத் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றிக் காலமானார். அவரின் இறுதி நிகழ்ச்சிகள் அவர் பிறந்த இராமேஸ்வரத்தில் முழு இராணுவ மரியாதையுடன் 30-07-2015 அன்று மேற்கொள்ளப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதம மந்திரி மன்மோகன்சிங், உத்தரப்பிரதேஸ் முதல் மந்திரி அக்கிலேஸ் யாதவ் உட்பட்ட பல முக்கிய அரசியற் தலைவர்கள் இத் துன்பியல் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
விருதுகள்
அப்துல் கலாம் பெற்ற விருதுகளை நிரல் படுத்திக் காண்போம.;
ஆண்டு. விருதுகள்.
1981 - பத்ம பூஷன்
1990 - பத்த விபூஷன்
1997 - பாரத ரத்னா
1997 - தேசிய ஒருங்கிணைப்பு இந்திரா காந்தி விருது.
1998 - வீர் சவர்கார் விருது.
2000 - ராமானுஜன் விருது
2007 - அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்.
2007 - கிங்சார்லஸ்-11 பட்டம்
2008 - பொறியியல் டாக்டர் பட்டம்.
2009 - சர்வதேச வோன்கார்மான் விங்ஸ் விருது.
2009 - ஹீவர் மெடல் - (ஹவேர்)
2010 - பொறியியல் டாக்டர் பட்டம்.
2012 - சட்டங்களின் டாக்டர்.
2012 - சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது.
2013 - வோன் பிறவுன் விருது.
2014 - அறிவியல் டாக்டர்.
அப்துல் கலாம் எழுதிய நூல்கள்
1. அக்கினிச் சிறகுகள்
2. எதிர்கால இந்தியா-2020
3. எழுச்சித் தீபங்கள்.
4. அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை.
5. A journey through Challenges- 2012
6. Ignited minds- unleashing the power within India 2002
7. Inspiring thoughts- 2007
8. Developments in Fluid Mechanics and Space Technology- 1988
9. You Are Born To Blossom.
10. Envisioning an Empowered Nation.
அப்துல் கலாம் மறைவின் பின்னான நிகழ்வுகள்
(1) பிகார் மாநிலம் பாட்னாவில் கிஷான்கஞ்சில் உள்ள வேளான் கல்லூரி மற்றும் அறிவியல் நகரத்துக்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்தது.
(2) அவர் பிறந்த தினமான ஒக்தோபர் 15-ஆம் திகதியை வாசிப்பு நாளாகக்கொண்டாடப்படுமென்று மகாராஷ்ட்ர அரசு அறிவித்தது.
(3) உத்தரப்பிரதேச மாநிலத் தொழில் நுட்பக் கழகத்துக்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்தது.
(4) அவர் பிறந்த நாளைத் தமிழ் நாட்டின் இளைஞர் எழுச்சி நாளாகத் தமிழக அரசு அறிவித்து, அப்துல் கலாம் விருதும் ஆண்டுதோறும் வழங்கப்படும் என்றும் அறிவித்தது.
(5) புதுடில்லியில் அமைந்த அவுரங்சீப் சாலைக்கு 'எ. பி. ஜெ. ஆப்துல் கலாம் சாலை' என்று பெயர் சூட்டப்படுமென்று புதுடில்லி மாநகராட்சி ஆணையிட்டது.
(6) ஆந்திரப் பிரதேசச் சட்டப் பேரவை இவருக்குப் புகழாரம் சூட்டி, 21-ஆம் நூற்றாண்டின் சிறந்த மாமனிதர் அப்துல் கலாம் என்றும் புகழ் பாடப்பட்டது.
நிறைவாக
அப்துல் கலாம் அவர்கள் 1960-ஆம் ஆண்டிலிருந்து இறக்கும் வரையான 2015-ஆம் ஆண்டுவரை தொடர்ந்து விஞ்ஞானி, தொழில் நுட்ப வல்லுனர், இந்திய ஏவுகணை நாயகன், குடியரசுத் தலைவர், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, பேராசிரியர், அறிவியல் டாக்டர், பொறியியல் டாக்டர், சிறந்த ஆசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், கற்பிப்பவர், சிந்தனையாளர், அவர் எளிய வாழ்க்கைமுறை, அவர் பொன்மொழிகள், கவிதை, மேற்கோள் வாசகங்கள், இனிய பேச்சு ஆகியவை பற்பல துறைகளில் ஐம்பத்தைந்து ஆண்டுகளாகப் பல்வேறு முகங்களுடன் உலாவிய பெருமைக்குரியவராவார்.
அவர் மறைந்தும் மறையா மாமேதையாய், இந்தியச் சரித்திர நடுநாயகனாய், இந்திய நீண்ட வரலாறு படைத்த பண்பாளனாய், தமிழர் மனங்களில் என்றும் பவனி வரும் தெய்வமாகியுள்ளார்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.