ஒரு முளையிலையுடைய செடியானதும் ஒற்றைத்தடி மரவகையானதுமான பனை, புல்லினத்தைச் சார்ந்த ஒரு தாவரப் பேரினமாகும். பனை தானாகவே வளர்ந்து மக்களுக்குத் தேவையான நுகர்வுப் பொருட்களையும,; பாவினைப் பொருட்களையும் அதன் வாழ்நாள் முழுவதும் கொடுத்துக் கொண்டிருப்பதால் அதைக் 'கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம்' என்றும், 'கற்பகத்தரு' என்றும் போற்றுகின்றனர். பனை கூர்மையான முனைகளைக் கொண்ட ஓலைகளையும் செதில் போன்ற கருத்த தண்டுப் பகுதியையும் உடைய உயரமான மரமாகும். இது வெப்ப மண்டலப் பரப்பெல்லைகளில் வரட்சிகளைத் தாங்கி இயற்கையில் தானாகவே வளரக்கூடிய ஆற்றல் பெற்றுள்ளது. பனையை ஒரு மரம் எனப் பொதுவாக அழைக்கப்படுகிறது. ஆனால் தொல்காப்பியர் (கி.மு. 711) 'பனை புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரம்' என்று குறிப்பிட்டுள்ளார். 'புறக்கா ழனவே புல்லெனப் படுமே' (பொருள் 630) – புற வயிர்ப்பு உடையனவற்றைப் புல்லென்று சொல்வர், அவை தெங்கு, பனை, கமுகு, மூங்கில் முதலியன என்றும், 'அகக்கா ழனவே மரனெனப் படுமே' (பொருள் 631) – உள்ளுறுதி உடையன மரமென்று கூறப்படும் என்றும் குறிப்பிட்டமை நோக்கற் பாலதாகும்.
பனையின் கதை
பனங்கொட்டை முளைத்துக் கிழங்காகி நான்கு, ஐந்து (04ஃ05) ஆண்டுகளில் வடலியாய் வளர்ந்து பதினைந்து, இருபது (15/20) ஆண்டுகளில் பனை மரமாய் முதிர்ச்சியடைந்து நூறு, நூற்றியிருபது (100/120) ஆண்டுகள்வரை தொடர்ச்சியாய் நுங்கு, குரும்பை, பனம் பழம், பனங்கிழங்கு, பூரான், பதநீர், பனாட்டு, ஒடியல், புழுக்கொடியல், ஓலை, மட்டை, பன்னாடை, கங்குமட்டை போன்றவற்றை மக்களுக்கு அளித்துக் கொண்டிருக்கிறது. பனையில் ஆண், பெண் என்று இருவகை உண்டு. பெண் பனை பாளை (பூமடல்) தள்ளிக் காய்த்துப் பனம் பழம் தரும். ஆண் பனை பாளை தள்ளும் ஆனால் அது காய்க்காது. ஆண் பனை, பெண் பனை ஆகிய இரண்டிலும் பதநீர் பெற்றுக்கொள்ளலாம். பனை 36 முதல் 42 மீட்டர்வரை நீண்டு வளரக்கூடியவை. அடிப் பனை 1.8 மீட்டர் சுற்றளவு கொண்டது.
ஒரு பனையில் 30 முதல் 40 வரையான வாடாத பச்சை ஓலைகளைக் காணலாம். ஒரு பனை ஆறு (06) முதல் பன்னிரண்டு (12) வரையான பாளைகளைத் தள்ளி ஓர் ஆண்டில் 100 பனம் பழங்கள்வரை தரக்கூடியது. ஆனால் யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு பனை ஆண்டொன்றுக்கு 300 முதல் 350 வரையான பழங்களைத் தந்துதவுகின்றது.
இலங்கையில் வடமாகாணம், கிழக்கு மாகாணம், புத்தளம், கம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் 70,000 கெக்ரயர் பரப்பளவில் பனை மரங்கள் உள்ளன. யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் 'பனை அபிவிருத்திச் சபைகள்' உள்ளன. இலங்கை பூராவும் 13 கற்பக விற்பனைச் சாலைகளில் பனம் பொருட்கள் விற்பனையில் உள்ளன. மேலும் மாதிரிப் பனைப் பண்ணைகள் வவுனியாவிலும் (50 ஏக்கர்), யாழ்ப்பாணத்திலும் (50 ஏக்கர்), கம்பாந்தோட்டையிலும்; (22 ஏக்கர்) இயங்கி வருகின்றன.
ஒரு பனை ஆண்டொன்றுக்குப் பதநீர் (180 லீற்ரர்), பனை வெல்லம் (25 கிலோ), பனஞ்சீனி (16 கிலோ), தும்பு (10 கிலோ), ஈர்க்கு (25 கிலோ), விறகு (10 கிலோ), ஓலை (10 கிலோ), நார் (20 கிலோ) ஆகியவற்றைத் தந்துதவுகின்றது.
பனை மரங்கள் இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனீசியா, மியன்மார், வியட்நாம், கம்போடியா, ஆபிரிக்கா, கினியா, கொங்கோ போன்ற நாடுகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. உலகளாவில் அண்ணளவாக 140 மில்லியன் பனை மரங்கள் உள்ளதாக அறியக்கிடக்கிறது. இந்தியாவில் 60 மில்லியன், ஆபிரிக்காவில் 50 மில்லியன், இலங்கையில் 11 மில்லியன், இந்தோனேசியாவில் 10 மில்லியன், மியன்மாரில் 3 மில்லியன், கம்பூச்சியாவில் 2 மில்லியன், தாய்லாந்தில் 2 மில்லியன் ஆகிய பனை மரங்கள் உள்ளதாக அறிகின்றோம். ஆசியாவில் காணப்படும் பனைமர இனத்தை 'போரசசு பிளாபெல்லிவர்' (Borassus flabellefer) என்றும், ஆபிரிக்காவிலுள்ள பனைமர இனத்தை 'போரசசு அந்திபோம் மார்ட் (Borassus Aenthipoum Mart) என்றும் கூறுவர்.
பனையின் தோற்றுவாய்
பனை முதலில் எவ்விடத்தில்; தோன்றியது என்பது தெரியவில்லை. ஆனால் 380 மில்லியன் ஆண்டுகளுக்குமுன் பூமியில் பனை தோன்றியது என்று அறிவியல் கூறுகின்றது. அக்காலப்பகுதியை 'டிவோனியன் காலவட்டம்' (Devonian period- 417 million – 354 million) என்று கூறுவர். இது ‘பலிஒசொய்க்’ (Paleozoic era) ஊழிக்காலமாகும். அக்காலத்தில் தோன்றிய முதற் பனைமரம் 35 அடி உயரமாயிருந்ததாகவும் அறிகின்றோம்.
கிளைப் பனை
சாதாரணமாகப் பனை கிளையற்ற ஒற்றைத்தடி மரமாக வளர்வதை நாம் அறிவோம். ஆனால் அபூர்வமாய்க் கிளைகளுடன் கூடிய பனை மரம் மட்டக்களப்புக் கோட்டைப் பகுதியில் அரசின் மாவட்டத் தலைமை அலுவலகத்துக்கு அண்மையில் உள்ளதைக் காணலாம். இன்னும் கிளைப்
பனைமரங்கள் வடமாகாணத்தில் பருத்தித்துறை விஷ்ணு கோவிலுக்கு அருகாமையில் இரு இடங்களிலும் உள்ளன. இவ்வாறான கிளைப் பனை மரங்கள் வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆலந்து அல்லது பிரித்தானிய நாட்டுக் கிறித்தவ சமயப்பரப்பாளர்களால் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் இவ்வாறான கிளைப் பனைகள் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. இவ்வாறான கிளைப் பனைகளை ஆய்வறிவு சார்ந்த பெயராக 'கைவாய்னு திபாய்க்கா' (Hyphaenu Thebaica) என்றும், பொதுப் பெயராக 'டோம் பாம் ஜின்சர் பிறெட்மரம்' (Doum palm and and Gingerbread tree) என்றும் கூறுவர்.
பனை பற்றி இலக்கியங்கள்
பனை பற்றித் தமிழ் இலக்கியங்கள் பலவாறாகப் பேசும் பாங்கினையும் காண்போம். 'புல்லும் மரனும் ஓரறிவினவே, பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே'-(பொருள்- 572) என்று தொல்காப்பியமும், 'நுங்கு'- 'பாளை'- (293) , 'பனை'- (372) என்று குறுந்தொகையும், 'தீங்கண் நுங்கின்'- 'பெண்ணை' (பனை) – (392) என்று நற்றிணையும், 'கள்ளொடு காமம் கலந்து'- (வையை- 10 -69) என்று பரிபாடலும், 'உண்மின் கள்ளே!'- (இரண்டாம் பத்து-18) என்று பதிற்றுப்பத்தும், 'இரும்பனை வெண்தோடு மலைந்தோன்'- (பனம்பூச் சூடிய சேரன்)- (புறம்- 45), 'பனைக் கொடியோன்'- (பரசுராமன்)- (புறம்- 58) என்று புறநானூறும், 'இளங்கண் கமழும்' - (அகம்- 113), 'பெண்ணை (பனை) ஓங்கிய'- (அகம்- 120), 'பனைத் திரள்'- (அகம்- 148), 'இரும்பனை இதக்கை'- (நுங்கின் தோடு – பணிவில்)- (அகம்- 365) என்று அகநானூறும், 'மடல் அம் பெண்ணை'- (114)- என்று ஐங்குறுநூறும், 'பனைக் கொடி'- (முல்லைக்கலி 4-7), 'கடுங்கள்ளை'- (முல்லைக்கலி 15-1), 'போழில் (பனை ஓலை) புனைந்த வரிப்புட்டில்'- (முல்லைக்கலி 17-8) என்று கலித்தொகையும், 'கள்ளுண்ணாமை'- (அதிகாரம் 93- குறள்கள் 10) என்று திருக்குறளும், 'பனைப்பதித்து உண்ணார் பழம்'- (பழமொழி நானூறு- 187), 'பனை முதிரின் தாய்தாள்மேல் வீழ்ந்து விடும்'- (பழமொழி நானூறு- 270), 'குறைப்பர் தம் மேலே வீழப் பனை'- (பழமொழி நானூறு- 280), 'கள்ளுண்போன் சோர் வின்மை பொய்'- (முதுமொழிக் காஞ்சி- 7-3) என்று பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் பனை பற்றிப் பற்பல செய்திகளைக் கூறுகின்றன.
பனையின் சிறப்பு
பனை தொடர்ந்து அளித்துவரும் பயன்களை முன்னிலைப்படுத்தி மக்கள் பனை மரத்தைத் தங்கள் தேசிய மரமாகவுk;> சின்னமாகவும், தேசியக் கொடியாகவும் பாவித்துப் பனையின் சிறப்பினை உலகறிய வைத்துள்ளனர். இது தொடர்பில் பின்வருவன ஒரு சில உதாரணங்களாகும்.
• கம்போடியாவின் தேசிய மரவடைச் சின்னமாகப் பனை மரத்தை
அங்கீகரித்துள்ளனர்.
• கிருஷ்ண பகவானின் மூத்த சகோதரனான பலராமனின் இரதத்தில்
பனைமரம் பொறித்த கொடி பறந்த வண்ணம் உள்ளது. இதனால்
பலராமனைப் 'பனைக் கொடியோன்' என்றழைப்பர்.
• வடமாகாண சபையின் தேசியக் கொடியாகப் பனை மரம் பொறித்த கொடி
பறந்து கொண்டிருப்பதையும் நாம் காணலாம். இதை மக்கள் நன்றிக்
கடனாகவே கருதுகின்றனர்.
• தமிழ்நாடு பனை மரத்தைப் பணித்துறைக்குரிய தேசிய மரமாகப்
பிரகடனப் படுத்தியுள்ளது.
பனை தரும் உணவுப் பொருட்கள்
மக்களுக்குப் பனை அளிக்கும் உணவுப் பொருட்களையும், அவற்றின் பெயர்களையும் ஒருங்கே நிரல் படுத்திக் காண்போம்.
1. நுங்கு:- பெண் பனை உறையுள் பொதிந்த (பாளை / பூமடல்) மலர்க் கொத்துக் குலையை பனை உச்சியின் வட்டிலிருந்து தை மாதத்தில் வெளியில் தள்ளி, அதிற் பல இளங்குரும்பைகள் தோன்றும். இக் குரும்பையின் உள்ளே இருக்கும் இனிப்புச் சுவை கொண்ட வழுவழுப்பான சதைப் பகுதியை 'நுங்கு' (பனஞ்சுளை) என்று கூறுவர். நுங்கைச் சிறார்கள் விரும்பி உண்பர்.
மூன்று கண், இரு கண், ஒரு கண் கொண்ட குரும்பைகள் உள்ளன. அவற்றின் மேற்பக்கத்தை அரிந்தால் இக் கண்கள் துலாம்பரமாகத் தெரியும். குரும்பையை அரிந்து நுங்கைக் குடித்து விட்டுக் குரும்பையைச் சிறிதாக அரிந்து ஆடு, மாடுகளுக்கு உணவாகக் கொடுப்பர். அணில் குரும்பையுள்ள பனை மரத்தில் ஏறிக் குரும்பையைக் கோதி நுங்கைக் குடித்துவிடும். இக் குரும்பைகள் சில நாட்களில் மரத்திலிருந்து விழுந்துவிடும். இதையும் மக்கள் எடுத்துப் பாவிப்பர். குரும்பைகள் முதிர்ந்துவர அதிலுள்ள நுங்கு கெட்டியாகிச் 'சீக்காய்' ஆகிவிடும். அதன்பின் அதை உண்ணமுடியாது.
கோவில்களில் சித்திரை மாதத்தில் குரும்பைகள் கட்டிச் சோடித்துச் 'சித்திரைக்கதை' படித்து, கஞ்சி காய்ச்சி, பூசைகள் செய்து, தெய்வ வழிபாடு புரிந்து, மக்கள் ஒன்று கூடி உணவருந்தி மகிழ்ந்து செல்வர்.
2. பனம் பழம்:- முற்றிய குரும்பைகள் பழுத்துப் பனம் பழமாய் ஆனி, ஆடி மாதங்களில் விழத் தொடங்கிவிடும். இவற்றில் மூன்று கொட்டையுள்ள பழங்களை 'முக்காழி' என்றும், இரு கொட்டையுள்ள பழங்களை 'இருகாழி' என்றும், ஒரு கொட்டையுள்ள பழங்களை 'ஒருகாழி' என்றும், முளைக்காத தரம் குறைந்த சிறு கொட்டையுள்ள பழங்களைச் 'சொத்தை' என்றும் அழைப்பர். இக் கொட்டைகள் எல்லாம் தும்பால் மூடப்பட்டுப் பழச்சதை (களி) நிறைந்துள்ளன. களி நீக்கிய சொத்தைகளை மா, தூள் அரிக்கும் அரிப்பெட்டிகளைத் துப்பரவு செய்வதற்குப் பாவிப்பர். பனம் பழத்தின் பழச் சதையைப் பச்சையாகவும், வேகவைத்தும் உண்பர். ஒரு பனம் பழம் சாப்பிட்டால் அது ஒரு நேர உணவுக்குச் சமனாகும். ஒரு பழம் நாலு (04) முதல் ஏழு (07)அங்குலம் வரையான விட்டம் கொண்டது.
நல்ல பனம் பழக்கொட்டைகளைப் பினைந்து பழச்சதையை எடுத்துப் பந்தற் பாயிற் பரவி வெயிலிற் காயவிட்டுப் பனாட்டு என்னும் உணவுப் பொருளைச் செய்வர். அதை மக்கள் விரும்பி உண்பர். பனங்கட்டி, எள்ளு, நீர் ஆகியவற்றைப் பாத்திரத்திலிட்டு அடுப்பில் வைத்து நெருப்பில் காய்ச்சிய பாணியில் பனாட்டுத் துண்டுகளைத் தோய்த்து மண் பானையில் அடுக்கி வைத்தால் 'பாணிப் பனாட்டு' ஆகிவிடும். இதைப் பழுதுபடாமல் வைத்துச் சாப்பிடலாம்.
பனம் பழங்களை மாடுகளுக்கு உண்ணக் கொடுப்பர். அவை அதிலுள்ள களியை உண்டபின் துப்பரவான பனங்கொட்டைகள் கிடைக்கின்றன. அன்று சவர்க்காரம் கிடைப்பது அரிதாயிருந்தபொழுது அழுக்கான உடுப்புகளைப் பனங்களி போட்டுத் தோய்த்து வெயிலில் உலர விட்டால் மாடுகள் உடுப்பிலுள்ள பனங்களி வாசத்தால் ஈர்க்கப்பட்டுத் துணிகளையும் சாப்பிட்டு விடுவதும் சாதாரண நிகழ்வாகும்.
பனம் பழச்சதையிலிருந்து கூழ்ப்பதநீர், ஊக்கம் தரும் உணவுகள், பழப்பாகு, குளிர்ப் பானம், பனம் பணியாரங்கள், மாச்சேர்ந்த களி வகைகள் ஆகிய நுகர்வுப் பொருட்களைச் செய்வர். பனம் பழச்சதையை அமெரிக்கா, கனடா, யேர்மனி, அவுத்திரேலியா, பிரித்தானியா போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நியச் செலாவணியும் பெறுவர்.
3. பதநீர்- பனஞ்சாறு:- மரமேறிகள் ஆண், பெண் பனைகளின் புதுப் பாளைகளைத் தட்டிப் பதப்படுத்திப் பாளைகளின் நுனியைச் சீவி மண்முட்டிகளை அதிற் கட்டிக் காலையிலும் மாலையிலும் பதநீரைச் சேகரிப்பர். இப்பாளைகள் ஐந்து/ஆறு மாதங்களுக்குப் பதநீரைத் தொடர்ச்சியாகத் தரக்கூடியவை. ஆனால் யாழ்ப்பாணத்துப் பனை மரங்கள் ஏழு/எட்டு மாதங்கள்வரை பதநீரைத் தருகின்றன. ஆண் பனைகள் நாளொன்றுக்கு ஐந்து லீட்டர் பதநீரைத் தருகின்றபொழுது பெண் பனைகள் ஆண்பனைகளைவிட 50 சத வீதம் கூடத் தருகின்றன.
பதநீர் ஒரு சில மணிநேரத்தில் புளித்து விடும். புளித்ததும் அது 'கள்' ஆகிவிடுகின்றது. அதைக் குடித்தால் வெறிக்கும். பதநீர் புளியாதிருப்பதற்கு மரமேறிகள் சுண்ணாம்பை உள் முட்டிகளிற் தடவி விட்டுக் 'கருப்பணி' என்ற பதார்த்தத்தைச் சேகரிப்பர். இது கள்ளைப் போல் வெறிக்காது. இன்னும் கருப்பணி மிகவும் இனிமையானதால் மக்கள் அதை வாங்கி அருந்தி மகிழ்வர். மேலும் கருப்பணி குளிர்ச்சியைத் தரக்கூடிய பானமாகும்.
பதநீரிலிருந்து பனங்கட்டி, பனம்பாணி, பனஞ்சீனி, பனங்கற்கண்டு, வெல்லம், பனம் மிட்டாய், பனங்கூழ் ஆகியவற்றைச் செய்வர். உடன் கள்ளைச் சின்னமுத்து, அம்மை நோய் வந்தவர்களுக்குக் கொடுத்தால் நோயின் தாக்கம் குறைந்துவிடும். பதநீரைப் பேதி மருந்தாகவும் பாவிப்பர். கருப்பணி, பச்சையரிசி, பயறு ஆகியவற்றைச் சேர்த்துக் கருப்பணிக் கஞ்சி தயாரித்து அருந்துவர்.
4. பனம் பாத்தி:- புரட்டாசி/ ஐப்பசி மாதங்களில் மண்ணைக் கொத்தி இரண்டடி உயரத்துக்கு மண்ணைக் குவித்து எட்டடி நீளமும் ஆறடி அகலமுமான பாத்தி அமைத்துப் பனங்கொட்டைகளை அதன்மேல் அடுக்கி மண்ணால் மூடித் தண்ணீர் ஊற்றி விடக் கொட்டைகள் முளைத்து நிலத்தில் இரண்டு/மூன்று அடிகள்வரை சென்று பனங்கிழங்காய் விளைந்து முற்றியவுடன் கிழங்குகளைப் பிடுங்கிப் பாவிப்பர். மணற்பாங்கான தென்மராட்சிப் பகுதியில் விளையும் பனங்கிழங்குகள் பெரியனவாகவும், தும்பு குறைந்தனவாகவும், மிக ருசியானதாகவும் இருக்கும்.
கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படும் 'கார்த்திகை விளக்கீடு' அன்று கம்புகளின் ஒரு முனையில் துணியால் பந்தம்போல் சுற்றிக் கட்டி, அவற்றை எண்ணையில் நனைத்துப் பற்றவைத்து, அவற்றைப் படலை, வீட்டு முற்றம், வீட்டுப் பின்பக்கம், கிணற்றடி, குடங்கரை, வேம்படி, 'பனம் பாத்தி', மலசல கூடம், ஆட்டுப் பட்டி, மாட்டுப் பட்டி ஆகிய இடங்களில் பந்தங்களை நாட்டிச் சுவாமி அறையில் பூசைகள் செய்து மகிழ்ந்திருப்பர்.
5. அவித்த பனங்கிழங்கு:- அவித்த பனங்கிழங்கைப் பிளந்து வெளியில் உள்ள நார்ப் பகுதியை நீக்கி விட்டுச் சிறு சிறு துண்டுகளாக்கி யாவரும் விருப்பி உண்பார்கள். சிலர் துண்டுகளாக்கிய பனங்கிழங்கை உரலிலிட்டு உப்பும், மிளகும், தேங்காய்ப் பூவும் போட்டு இடித்துத் துவைத்து உருண்டையாக்கி உண்பர். இன்னும் பனங்கிழங்கை நெருப்புத் தணலில் வேகவைத்தும் உண்பர்.
6. ஒடியல்:- பனங்கிழங்கைப் பிளந்து வெயிலில் காயவைத்தால் அதை 'ஒடியல்' என்றழைப்பர். இதைப் பழுதுபடாமல் பல மாதங்கள் வைத்திருக்கலாம். ஒடியலைத் துண்டுகளாக்கி உரலில் இட்டு இடித்து வரும் மாவை 'ஒடியல்மா' என்று கூறுவர். இந்த மாவை நீரிட்டுக் குழைத்து அவித்தால் 'ஒடியல் பிட்டு' என்று கூறுவர். இப் பிட்டைத் தனித்தும், சோற்றுடனும் கலந்து கறிகளோடு சேர்த்துச் சாப்பிடுவர்.
ஒடியல் மாவுடன் பலவகைத் தானியங்கள் சேர்த்துf; $o; சமைத்தால் 'ஒடியற் கூழ்' ஆகிவிடும். இதைச் சைவ உணவாக விரும்பி உண்பர். ஒடியல்மா, சள்ளை மீன், நண்டு, கருவாடு, இறால் ஆகியவற்றோடு கூழ் சமைத்தால் அசைவ உணவாகி விடும். ஒடியலை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.
7. புழுக்கொடியல்:- அவித்த பனங்கிழங்கைப் பிளந்து வெயிலில் காய வைத்தால் 'புழுக்கொடியல்' ஆகிவிடுகின்றது. இதைத் துண்டு போட்டுச் சாப்பிடுவர். இது மிகக் கடினமானது. வயது முதிர்ந்தோர் இதை இடித்து மாவாக்கித் தேங்காய்ப்பூ, கருப்பட்டி சேர்த்துச் சாப்பிடுவர். புழுக்கொடியலையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
8. பனம் பூரான்:- முளை வந்த பனங்கொட்டையைப் பிளந்தால் அதன் மத்தியிலுள்ள பருப்பைப் 'பூரான்' என்று கூறுவர். இது மென்மையானதும், இனிமையானதும் ஆகும். சிறார்கள் இதை விரும்பி உண்பர். இதைப் பதப்படுத்தினால் வெளிநாடுகளுக்கும் அனுப்பலாம்
9. பனங்குருத்து:- பனைமர உச்சியின் நடுவிலுள்ள முதிராத இளங்குருத்தை யாவரும் விரும்பி உண்பர். அது மிகவும் இனிமையானது. இப்பனங்குருத்தில் 98 சத வீதமான நார்ச் சத்துள்ளது. பனை மரத்தைத் தறிக்கும் பொழுதோ அல்லது பனை முறிந்து விழும் பொழுதோதான் இக் குருத்தை எடுத்து உண்பர்.
10. பனஞ்சோறு:- பனைமர உச்சியிலுள்ள குருத்தின் அடிப்புறமாகவுள்ள மென்மையான பகுதியைத்தான் 'பனஞ்சோறு' என்றழைப்பர். இது மென்மையானதும், இனிமையானதும் என்பதனால் மக்கள் யாவரும் விரும்பி உண்பர். இதிலும் பனங்குருத்தைப்போல் கூடிய நார்ச்சத்துண்டு.
பனை தரும் உணவிலிப் பொருட்கள்
மக்களுக்குப் பனை நல்கும் உணவிலிப் பொருட்களையும் அவற்றின் பெயர்களையும் ஒருங்கமைத்துப் பார்ப்போம்.
1. பனை ஓலை:- பனை ஓலை மட்டையுடன் சேர்ந்து ஆறடியிலிருந்து எட்டடி வரையான நீளத்துடன் விசிறி வடிவான அமைப்பைக் கொண்டது. முதிர்ந்த பனை ஓலையின் ஈர்க்கு நீக்கிய ஓலையை வார்ந்து சிறிது சிறிதாக நறுக்கி மாட்டுக்கு உணவாகக் கொடுப்பர். கூரை வேய, வேலியடைக்க, தோட்டத்தில் எருவாக மண்ணில் புதைக்க, பாய், கடகம், கூடை, பெட்டி, விசிறி, தொப்பி, குடை, பிளா, பட்டை, தட்டுவம், பீலிப்பட்டை (இறை கூடை), நீத்துப் பெட்டி, திருகணை, பூக்கள், பூச்சாடிகள், ஆடு மாடுகளுக்குரிய குடில் ஆகியவை செய்வதற்குப் பனை ஓலையைப் பாவிப்பர். பனை ஓலையிற் பட்டம் இணக்கி, ஏற்றி மகிழ்வர் சிறார்கள்.
ஆதி காலத்தில் இந்தியாவிலும், இந்தோனீசியாவிலும் தாளில் எழுதுவதுபோலப் பனை ஓலையை எழுதப் பாவித்தனர். இந்தியாவில் தரமான பனை ஓலையைத் தெரிவு செய்து அதை மஞ்சள் தூள் போட்ட உப்புத் தண்ணீரில் கொதிக்க வைத்துப் பதனப்படுத்துவர். அவற்றைக் காய விட்டபின் மரக்கல்லால் தேய்த்து மெருகேற்றி ஓலைகளை இரண்டாக நறுக்கி ஒவ்வொரு துண்டுகளின் மூலையிலும் ஒவ்வொரு துளை இடுவர். அதன்பின் எழுத்தாணியால் ஓலைகளில் எழுதி ஓலைத் துளைகளில் ஒரு கயிற்றைச் செலுத்திக் கட்டி வைப்பர். இதை 'ஏடு' என்று கூறுவர். இவை பழுதடையா வண்ணம் பல்லாயிரம் ஆண்டுகளாக வைத்திருந்து பாவிக்கக் கூடிய ஆவணங்களாகும்.
2. காவோலை:- பனை ஓலைகளை மரத்திலிருந்து வெட்டாது விட்டால் அவை காய்ந்து 'காவோலை' ஆகி விழுந்து விடும். இக்காவோலையின் அடிப்பகுதியில் 'கங்கு' (இரு சிறகுகள்), நடுப்பகுதியில் 'மட்டை', நுனிப் பகுதியில் 'ஓலை' ஆகியவை அடங்கும். காவோலையை எரிக்கவும், நிலத்தில் புதைத்துப் பயளை ஆக்கவும் பாவிப்பர்.
3. பனைமரத் துண்டு:- பனைமரத் துண்டுகள் கடினமானதும், பாரமானதும், நிலைத்து நிற்கக் கூடியதுமாகும். எனவே இவற்றைக் கப்பல்துறை மேடை கட்டுவதற்குப் பாவிப்பர். வீட்டுக் கூரை அமைப்பதற்கு வேண்டிய சிலாகை, தீராந்தி வளை, பனை வரிச்சல், மரச் சட்டம் ஆகிய அனைத்தையும் பனை தந்துதவுகின்றது. பனை மரத்தைப் பிளந்து துலாவாகவும், ஆடுகாலாகவும் பாவித்துக் கிணற்றிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்வர். உயரமான கம்பங்களாக முழுப் பனையைப் பாவிப்பர்.
4. பனை மட்டை:- பனையேறிகள் பனையிலுள்ள ஓலையுடன் சேர்ந்த பனை மட்டையை வெட்டி வீழ்த்தி விடுவர். ஓலையை அரிந்து விட்டால் எஞ்சுவது பனை மட்டையாகும்.
இதனால் வேலி அடைப்பர். ஐந்து ஆண்டுகளுக்குமேல் இவை உக்காது நிலைத்திருக்கும். பழுதுபட்ட மட்டைகளைச் சிறிதாக வெட்டி விறகாக எரிப்பர். இந்த மட்டையின் வெளிப்பக்கத்தில் நீண்ட நார்கள் உள்ளன. அவற்றால் நார்க் கடகம், நார்க் கூடை, நார்ப் பெட்டி ஆகியவற்றைச் செய்து பாவிப்பர். ஓலையால் செய்யப்பட்ட கடகம், பெட்டிகளை விட, நார்க் கடகம், நார்க் கூடை, நார்ப் பெட்டிகள் அதிக காலம் பாவிக்கக் கூடியன. பனை மட்டையின் ஓரப்பகுதிகளில் உள்ள நெருக்கமான வாள் போன்ற 'பனங்கருக்குகள்' பனையேறிகளையும், மக்களையும், மற்றைய உயிரினங்களையும் வெட்டி வதைத்து விடுகிறது.
5. பனை ஈர்க்கு:- அரிந்த பனை ஓலையின;> ஓலைகளை நீக்கி விட்டால் எஞ்சும் நரம்புகளை 'ஈர்க்கு' என்று கூறுவர். பனை ஈர்க்கினால் சுளகு, இடியப்பத் தட்டு, திருகணை ஆகியவற்றைப் பின்னிச் சமையலறையில் பாவிப்பர். வீடு வேயும் பொழுது கிடுகுகளைச் சிலாகையில் கட்டுவதற்கு ஈர்க்கைப் பாவிப்பர். ஈர்க்குகளைச் சிறிய கட்டாகக் கட்டி விளக்குமாறாகவும் உபயோகிப்பர்.
6. கங்கு மட்டை:- மரமேறிகள் பனை மரத்திலுள்ள ஓலையை மட்டையுடன் வெட்டி வீழ்த்தும் பொழுது ஒரு பகுதி மட்டையோடு சேர்ந்த இரு சிறகுகள் பனை வட்டோடு இணைந்திருக்கும். அவை காய்ந்தபின் நிலத்தின்மேல் விழுந்துவிடும். அதைத்தான் 'கங்கு மட்டை' என்று கூறுவர். இக் கங்கு மட்டையிலுள்ள நாரினால் தூரிகை, துடைப்பம் ஆகிய பொருட்களைச் செய்து உபயோகிப்பர். கங்கு மட்டையை எரிப்பதற்கும் உபயோகப்படுத்துவர்.
7. பணிவில்:- பனம் பழத்தின் மேற்புறமுள்ள தோடு என்பதை 'இதக்கை' என்றும், 'பணிவில்' என்றும் கூறுவர். அதில் மூன்று பணிவில்கள் சுற்றிவர ஓர் அடுக்காகவும், அதற்குமேல் இன்னொரு அடுக்கில் மூன்று பணிவில்களுமாக ஒருமித்து ஒரு பனம் பழத்தில் ஆறு பணிவில்கள் அமைந்திருக்கும். பதார்த்த உணவைக் கரண்டியால் அள்ளிக் குடிப்பதுபோல இப் பணிவில்களால் பனங்கூழ், பனங்கஞ்சி, கருப்பணிக் கஞ்சி, பனம் பழச் சதை (களி), பழப் பாகு, பாணி, உழுத்தங்களி ஆகியவற்றை அள்ளி உண்டு மகிழ்வர்.
முடிவுரை
இதுகாறும் பனையின் கதை, தோற்றுவாய், கிளைப் பனை, இலக்கியங்கள் பேசும் பனை, பனையின் சிறப்பு, பனை தரும் உணவுப் பொருட்கள், பனை தரும் உணவிலிப் பொருட்கள் ஆகியவை பற்றி விரிவாகப் பார்த்தோம். மனிதர்களுக்குப் பனை தந்துதவும் பிரயோசனங்கள் போல் மற்றைய ஒரு விருட்சமும் தருவதில்லை. பனையை நாம் பயிரிட்டு, நீர் ஊற்றி, பண்படுத்தி வளர்க்கத் தேவையில்லை. அது தானாகவே வளர்ந்து நூறு (100) ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ச்சியான பெருமளவுப் பயனைத் தந்த வண்ணம் உள்ளது. பனை இறந்தவிடத்தும் அதன் மரம், ஓலை, மட்டை, கங்கு, நிலத்திலுள்ள பனங் குத்தி ஆகிய அனைத்தையும் மக்கள் எடுத்துப் பாவிப்பர். பனைப் பொருட்களின் பாவனைக் காலஎல்லை முடிவுற்றதும், அவைகள் மண்ணுக்கிரையாகி மண்வளத்தை மேம்படுத்தி விளைச்சலைப் பெருக்கிப் பசிப்பிணியைத் தீர்த்து வைப்பதில் முன்னின்று உதவுகின்றன.
இவ்வண்ணமுள்ள கற்பகத்தருவான பனை மரத்தை மக்கள் வீட்டுத் தெய்வமென மதிக்கின்றனர். இனி நாங்கள் பனை மரத்தை அபிவிருத்தி செய்யும் துறையில் இறங்க வேண்டும். எனவே ஒவ்வொரு ஆண்டும் பனங்கொட்டைகளை முளைக்கச் செய்து அவற்றை வளர்த்தெடுத்துப் பனைகளின் தொகையைக் கூட்ட வேண்டும். அப்பொழுது நாம் கூடிய பலனைப் பெறலாம் என்பது திண்ணம். இருந்தும் ஒரு சிலர் பனை மரத்தை வேண்டுமென்று தறித்து அழித்து விடுகின்றனர். எனவே பனை மரத்தை அழித்து விடாது காப்பாற்றுவது நம் அனைவரின் கடமையாகும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.