(குறிப்பு:- நாங்கள் இலண்டனில் ஒரு மாடி வீட்டில் வசிக்கிறோம். அந்த வீட்டின் கூரை நாலு பக்க மேற்சுவரில் அமைந்து, இரண்டு அடிகள் நீளத்துக்குக் கீழ் இறங்கி உள்ளது. மேற் சுவருக்கும் கூரைக்குமிடையில் உள்ள சிறு இடைவெளியால் பறக்கும் உயிரினங்கள் அறைக்குள் புகாதவாறு அந்த இடைவெளியைச் சுற்றிவரப் பலகையால் பெட்டி வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. பின் சுவர்ப்பக்கத்தில் தோட்டமும், பூந் தோட்டமும் உள்ளன. அன்றொருநாள் தோட்டத்தில் உலா வருகையில் பல தேனீக்கள் பறப்பதைக் கண்டு, மேலே அண்ணாந்து பார்த்த பொழுது கூரைப் பலகையில் இரண்டு துளைகள் இருப்பதையும் அதனூடாகத் தேனீக்கள் உட்புகுவதும், வெளியில் வருவதுமாய் இருப்பதை அவதானித்தேன். இதை வீட்டாரும் வந்து பார்த்தனர். இதை ஒரு கிழமைவரையில் பார்த்து வந்தோம். ஒரு கிழமை சென்றதும் தேனீக்கள் அங்கிருந்து வேறு இடத்துக்குச் சென்றுவிட்டன. தேனீக்கள் எங்களில் ஐயுறவு கொண்டு வேறொரு இடத்துக்குச் சென்று விட்டதை உணர்ந்து வருந்தினோம். இது என்னை மிகவும் தாக்கி விட்டது. அதனால் எழுந்தது இக் கட்டுரையாகும். – நுணாவிலூர் கா. விசயரத்தினம்.)
தித்திக்கும் தேன்
தேனீ வண்டினத்தைச் சார்ந்தது. இது நாலறிவு கொண்ட உயிரினம் என்று தொல்காப்பியர் 'உயிர்களின் பகுப்பும், சிறப்பும், மரபும்' என்ற பகுதியில் குறிப்பிட்டுள்ளார். தேனீக்கள் மெழுகினால் தேன்கூடுகளை அமைத்து, பூக்களிலிருந்து தேனை எடுத்து வந்து, தேன்கூட்டுக் கண்ணறைகளில் தேனைச் சேகரித்து வைக்கின்றன. இத் தேனை மக்கள் உணவாகப் பாவிக்கின்றனர். ஆயுர்வேத வைத்தியர் தேனைப் பிணி தீர்க்கும் மருந்தாகவும் உபயோகிக்கின்றனர்.
'தேன் தானும் கேடடையாது; தன்னுடன் கூடியிருக்கும் பொருளையும் கேடடைய விடாது.' எனவேதான் திருவாசகத்தைத் தேனுடன் ஒப்பிடுவர். எம் மூதாதையர் வேட்டையாடிய மிருக இறைச்சியைத் தேனில் ஊறவைத்துத் தேவையான நேரத்தில் எடுத்து உண்டு வந்தனர்.
ஓளவைப்பாட்டி யானைமுகக் கடவுளுக்கு நாலைக் கொடுத்து (பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும்) மூன்றைக் கேட்கும் (சங்கத் தமிழ் மூன்று) ஒரு பேரம் பேசும் பாங்கினை முன்வைத்துத் தேனின் பெருமை பேசுகின்றார்.
'பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்- கோலங்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா.'
‘நற்கருப்பஞ் சாற்றினிலே தேன் கலந்து, பால் கலந்து ...' என்று இராமலிங்க சுவாமிகள் அருளிச் சொன்ன முக்கலவையில் தேன் துளிகள் சிந்துவதையும் காண்கின்றோம்.
இன்னும், 'தேம்படு சிமயப் பாங்கர்ப் பம்பிய ...' (அகநானூறு 94) – தேனடைகள் பொருந்திய மலையுச்சிகளின் பக்கலிலே – என்றும், 'தேம்படு மலர்க்குழை பூந்துகில் வடிமணி ...' (பரிபாடல் 17) – தேன் துளிகள் ஒழுகிக் கொண்டிருக்கும் புது மலர்கள் - என்றும் சங்க இலக்கியங்களான நூல்களில் தேன் மகிமை பேசப்பட்டுள்ளது.
(தேம் - தேன். சிமயம் - மலையுச்சி. பம்பிய – செறிந்த.)
தேனீ வகைகளும் தோற்றுவாயும்
தேனீ, சுரும்பு, தும்பி, வண்டு, குழவி, வண்டு போன்ற பூச்சி வகைகளில் அண்ணளவாக இருபதினாயிரம் (20,000) வகைகள் உலகில் உண்டெனக் கணக்கிடப் பட்டுள்ளது. தேனீயைப் பொறுத்தமட்டில் ஏழு (07) இனங்காணப்பட்ட வகைகளும், நாற்பத்துநாலு (44) துணைவகைகளும், இதில் பதினொரு (11) வகைகள் இனங்காணப்பட்டதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.
• தேனீக்களின் பிறப்பிடமாய் பிலிப்பைன் நாடு உட்பட்ட தென், தென் கிழக்கு ஆசிய நாடுகள் அமைந்துள்ளன. தேனீக்களின் முதற் புதைபடிவங்கள் இஒசின்-ஒலிகோசின் (Eocene - Oligocene) என்ற எல்லைப் பகுதியில் ஐரோப்பியரின் படிவப் பொருளாக 23-56 மில்லியன் ஆண்டுகளுக்குமுன் (23-56 mya) பலருக்குக் காட்சியளித்தது.
• தென் ஆசியாவிலும் சில தேனீப் புதைபடிமங்கள் காணப்பட்டன. இன்னும் 14 மில்லியன் பழமை வாய்ந்த ஒரு வகைத் தேனீப் புதைபடிமம் நிவாடாவில் (Nevada) ஆவணப் படுத்தப்பட்டும் உள்ளது.
• மிகப் பழமை வாய்ந்த தேனீயின் உருமாதிரிப் படிவம் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக உள்ளதையும் அறிகின்றோம்.
• 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இயற்கைப் பண்பாடு பின்பற்றுபவரான யேன் ஸ்வாம்மேர்டம் (Jan Swammerdam) என்பவர் இராச தேனீ (King bee) என்gதற்குக் கருவறை இருந்துள்ளதைக் கண்டுபிடித்துள்ளார். எனவே இது இராணித் தேனீ ஆகிவிடுகின்றது.
• விஞ்ஞானி றுடோல்வ் ];hPdh; (Rudolf Steiner) என்பவர் இன்னும் 100 ஆண்டுகளில் செயற்கைத் தேனீக்களின் விவசாயம் வந்து விடுமென்று 1923-ஆம் ஆண்டில் எதிர்வு கூறியுள்ளார்.
தேனீ இனமும் வாழ்க்கைக் காலவட்டமும்
ஒரு தேன்கூட்டில் ஓர் இனப்பெருக்க மிக்க இராணித் தேனீ, பல ஆயிரக்கணக்கான இனப் பெருக்க மிக்க ஆண் தேனீக்கள், பல்லாயிரக் கணக்கான மலடான பெண் உழைப்பாளித் தேனீக்கள் ஆகியவை உள்ளன. ஒரு சாதாரணமான தேன்கூடு 20,000 முதல் 30,000 வரையான தேனீக்களுடன் செயல்படுகின்றது. ஒரு பெரிய தேன்கூட்டில் 60,000 உழைப்பாளித் தேனீக்கள் வரை உள்ளன.
1. இராணித் தேனீ:- இராணித் தேனீ சினைப்படுத்தப்பட்ட முட்டையிலிருந்து 16 நாட்களில் வெளியே வந்துவிடும். இது ஆண் தேனீயிலும், உழைப்பாளித் தேனீயிலும் பார்க்கப் பெரியது. ஆகவேதான் இதைப் பெரிய தேன்கூட்டுக் கண்ணறையில் வைத்துப் பராமரிக்கப்படுகிறது.
இது 18-22 மி.மீ (18-22 mm) நீளம் கொண்டது. தேன்கூட்டின் இராணியும் இதுதான்.
கன்னி இராணித் தேனீ, கூட்டை விட்டுப் பறந்து சென்று பல ஆண் தேனீக்களுடன் பல முறை கூடி இணைந்தபின் கூட்டுக்கு வந்து விடும். இவ்விணைவின் பொழுது ஆண் தேனீ பாய்ச்சும் விந்துக்களை ஓர் உறுப்பில் (Spermatheca) தேக்கி வைத்துப் பின் கருவுள்ள முட்டைகளையும், கருவற்ற முட்டைகளையும் தேன்கூட்டின் கண்ணறைகளில் ஒவ்வொன்றாக இட்டு விடும். இது நாளொன்றிற்கு 2,000 முட்டைகள் வரையில் இடுகின்றது. இந்த முட்டைகள் மூன்று அல்லது நான்கு நாட்களில் பொரித்து முட்டைப் புOவாகிவிடும்.
இராணித் தேனீக்கள் இனப்பெருக்கமுள்ள முட்டையிலிருந்து வெளிவருகின்றன. முதற்கட்டமாக முட்டைப் புழுக்களுக்குத் தேன் வடிசாறு கொடுக்கப்பட்டுப் பின் தேனும், பூந்தாதும் கொடுத்து வளர்க்கப்படுகின்றது. சில முட்டைப் புழக்களுக்குத் தேன் வடிசாறு மட்டும் கொடுத்து வளர்க்கப்படுவதினால் அவை இராணித் தேனீக்கள் ஆக்கப்படுகின்றன.
இராணித் தேனீ வேதியல் சார்ந்த சுரப்பியைப் (Pheromones) பரப்பி உழைப்பாளித் தேனீக்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது. இதற்கு, கடிக்கும் பொழுது செலுத்தும் ஆணி அம்புமுனை போன்றது இல்லை. இராணித் தேனீயின் வாழ்நாள் மூன்று முதல் ஏழு ஆண்டுகளாகும்.
2. ஆண் தேனீ:- ஆண் தேனீ சினைப்படுத்தப்படாத முட்டையிலிருந்து 24 நாட்களில் வெளியே வந்துவிடும். இது உழைப்பாளித் தேனீயிலும் பெரியது.
இது 15-17 மி.மீ. (15-17 mm) நீளமுடையது. ஆண் தேனீ தேன் சேகரித்தல், தேன்கூடு அமைத்தல் ஆகிய வேலைகள் ஒன்றும் செய்வதில்லை. இதற்குக் கடிக்கும் பொழுது செலுத்தும் ஆணியும் இல்லை. ஆண் தேனீக்குக் கண்கள் மிகப் பெரியன. எனவே இராணித் தேனீயைச் சுலபமாகப் பார்த்துச் சந்திப்பதற்கு இவை ஏதுவாய் அமைந்துள்ளது.
ஆண் தேனீ அதே கூட்டிலுள்ள கன்னி இராணித் தேனீயுடன் பாலுறவு வைத்துக் கொள்வதில்லை. ஆண் தேனீ, இராணித் தேனீயுடன் பாலீடுபாட்டுப் புணர்ச்சியின்பின் அதன் ஆண்குறியும் அதனோடு தொடர்புள்ள அடிவயிற்று இழைமங்களும் (Tissues) ஆண் தேனீயின் உடலிலிருந்து பிரிந்து போய்விடும். அதன்பின் ஆண் தேனீ இறந்து விடும். ஆண் தேனீயின் வாழ்நாள் 90 நாட்களாகும்.
3. உழைப்பாளித் தேனீ:- உழைப்பாளித் தேனீ சினைப்படுத்தப்பட்ட முட்டையிலிருந்து 21 நாட்களில் வெளியே வந்துவிடும். இது பெண்ணினத்தைச் சார்ந்த கருப்பையற்ற மலட்டுத் தேனீயாகும். இது இராணித் தேனீயிலும், ஆண் தேனீயிலும் பார்க்கச் சிறியது. இது 12-15 மி.மீ (12-15 mm) நீளம் கொண்டது.
தேன்கூட்டை அமைப்பது, அதைக் காப்பது, முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்களுக்குத் தேன்வடிசாறு கொடுத்து வளர்ப்பது, தேனையும் பூந்தாதையும் சேகரித்து வருவது போன்ற வேலைகளை உழைப்பாளித் தேனீக்கள் செய்து வருகின்றன. இவற்றின் வடிசாறுச் சுரப்பிகள் குன்றியவிடத்து, அவைகள் தேன்கூடு கட்டும் வேலையிலும், அதைக் காப்பாற்றுவதிலும் ஈடுபடுகின்றன.
உழைப்பாளித் தேனீக்களின் உடலில், தேன்கூடு அமைக்கும் மெழுகுச் சுரப்பி, குஞ்சுகளை வளர்க்கும் சுரப்பி, பூந்தாது சேகரிக்கும் பெட்டி, தற்பாதுகாப்பில் குத்திச் செலுத்தும் ஆணி போன்றவை அமைந்திருக்கும் சிறப்பினையும் காண்கின்றோம்.
இவை சீராக ஒரு தேன்கூட்டை அமைத்தபின்தான் இராணித் தேனீயைக் கூட்டுக்கு அழைத்து வருவர்.
உழைப்பாளித் தேனீக்கள் தமக்கேற்ற பெரிய உணவு நிலையங்களைக் கண்டால் அவைகள் தேனீ நடனம், குறும்பு நடனம், வட்ட நடனம், நடுக்க நடனம் ஆகிய நடனங்களை ஆடி மற்றைய தேனீக்களைக் கூவி அழைக்கின்றன.
இராணித் தேனீ முதுமை பெற்றால், இறந்து போனால், தேன்கூடு பெருத்தால் உழைப்பாளித் தேனீக்கள் புதிய ஓர் இராணித் தேனீயைத் தெரிந்தெடுப்பர். சில சூழ்நிலையில் தேன்கூட்டில் இராணித் தேனீ இல்லாதிருந்தால், உழைப்பாளித் தேனீக்குக் கருப்பை உருவாகும் வாய்ப்பும் உண்டு.
தனித்த ஒரு பயணத்தில் ஒர் உழைப்பாளித் தேனீ சுமார் 100 பூக்களைத் தொட்டுச் சென்று தன் நிறையில் அரைவாசி நிறையான பூந்தாதைச் சேகரித்து வருகின்றது. இது ஒரு றாத்தல் (0.4 kg) நிறையான தேனைச் சேகரிக்க 55,000 மைல்கள் (89,000 km) பறந்து சென்று 2,000,000 பூக்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. ஓர் உழைப்பாளித் தேனீ தன் வாழ்நாளில் ஒரு மேசைக் கரண்டியின் 1/12 பங்குத் தேனைச் சேகரிக்கும்.
விவசாயத் திட்டத்தில் இத் தேனீக்கள் அளப்பரிய சேவையை ஆற்றி வருகின்றன. இதற்காக இத் தேனீக்களை எவராவது புகழ்ந்து பாடவுமில்லை; அவைகள் ஊதியம் பெறாது செயலாற்றுவதற்காக எவரும் புகழ்மாலை தொடுக்கவுமில்லை. ஆனால் இத் தேனீக்கள் கடந்த 10 கோடி ஆண்டுகளுக்குமேல் மக்களுக்காக உழைத்து மாண்டு வருகின்றன. இச் செயல் உலக அதிசயங்களில் ஒன்றாகக் கணிக்கப்படல் வேண்டும். 20-30 நாட்களில் உழைப்பாளித் தேனீயின் வாழ்நாள் முடிந்து விடும்.
தேனீயின் உடலுறுப்பு அமைப்பியல்
தேனீயின் உடலுறுப்பு, அமைப்பு, செயற்பாடு ஆகியவற்றையும் விரிவு படுத்திக் காண்போம்.
(1) கண்கள்:- தேனீக்களுக்கு ஐந்து (05) கண்கள் அமைந்துள்ளன. அதில் இரண்டு கண்கள் பல கூறுகள் அடங்கிய பெரியனவாய் உள்ளன. மற்றைய மூன்று கண்களும் பூச்சி வகைகளின் கூட்டிணைவு இல்லாதவை. இவைகள் ஒளியின் தன்மையைக் கூர்ந்து கண்டுணர உதவுகின்றன. உழைப்பாளித் தேனீக்களின் கண்கள் சுமார் 7,000 கண்ணாடி வில்லை அளவு கொண்டவை.
(2) உறுஞ்சு குழல் (Proboscis):- தேனீ இக்குழலால் பூக்களிலுள்ள தேனை உறுஞ்சி எடுத்துத் தன் வயிற்றுப் பகுதியிற் தற்காலிகமாக ஒரு சேமிப்பு இடத்தில் வைத்திருந்து, மீண்டும் தேனீ தேன்கூட்டுக்கு வந்தபின் சேமித்து வைத்திருந்த தேனை இக்குழாய் மூலம் திருப்பி எடுத்துத் தேன்வதையில் வைத்து விடுகின்றது.
(3) தேனீ அலகு:- பூந்தாதைக் கடித்து எடுத்துச் சேகரிப்பதற்கும், மெழுகைச்
சீர்படுத்தித் தேன்கூட்டை அமைப்பதற்கும் தேனீயின் அலகு உதவி நிற்கிறது.
(4) கால்கள்:- தேனீயின் கால்களில் அமைந்த மயிர்த் தொகுப்புகள் பூந்தாதினை முன் பக்கத்திலிருந்து பின் பக்கத்துக்கு உருட்டப்பட்டுப் பின் காலில் அமைந்துள்ள பூந்தாதுப் பெட்டியில் வைக்கப்பட்டபின் இவைகள் தேன்கூட்டுக்கு மாற்றப்படுகின்றன.
(5) தேனீயின் சிறகுகள்:- தேனீக்களுக்கு இரு சோடிச் சிறகுகள் உள்ளன. தேனீக்கள் அதி வேகமாகப் பறக்கக் கூடியவை.இதற்கு இச்சிறகுகள் மிகவும் உறுதுணையாய் அமைந்துள்ளன. தேனீக்கள் வேகமாகச் சிறகடிப்பதால் வெப்பம் உண்டாகி, சேகரித்த தேனில் உள்ள நீர்த்தன்மை ஆவியாகித் தேன் பரிசுத்தமடைகிறது.
(6) மெழுகு:- உழைப்பாளித் தேனீயின் அடிவயிற்றில் அமைந்துள்ள உறுப்பொன்றில் இருந்து சுரக்கும் மெழுகினால் தேன்கூடுகள் அமைக்கப்படுகின்றன. ஒரு தேன்கூடு அமைப்பதற்கு இரண்டு றாத்தலுக்கு மேற்பட்ட மெழுகு தேவைப்படுகிறது.
(7) கொட்டும் உறுப்பு:- தேன்கூட்டுக்கு அழையாது நுழைபவரைக் கண்டால் உழைப்பாளித் தேனீக்கள் தம் கொட்டும் உறுப்பினாற் குத்தி, நஞ்சைப் பாய்ச்சிக் கலைத்து விடும். தம் பாதுகாப்புக்காக இச் செயலைச் செய்கின்றன. தேனீ குத்தியதும் அதை வெளியே இழுக்க முடியாதவாறு அதன் கொடுக்கி தடுத்து விடுகின்றது. அதன்பின் தேனீ தன் அடிவயிற்றைக் கிழித்துக் கொண்டதும் தேனீ அதிலிருந்து விடுவிக்கப்படுகிறது. அத்தோடு இத் தேனீயானது இறந்தும் விடுகின்றது. ஆனால், பல சந்தர்ப்பங்களில் தேனீ கொட்டியபின், குலைவேதும் ஏற்படாதவிடத்துத் தேனீயானது தன்னைத்தானே ஒரு சுற்று முறைப்படுத்தி, கொட்டும் உறுப்பின் திருகாணியை அகற்றிப் பிரித்தெடுத்துப் பறந்து செல்வதுk; உண்டு.
(8) நிலைமின் இயல் தாக்கம் (Electrostatic charge):- தேனீயின் மயிரில் உள்ள நிலைமின் இயல் தாக்கம் பூக்களிலுள்ள பூந்தாதுக்களை கவர்ந்து ஈர்த்துக்கொள்கின்றது. இத் தேனீ வேறொரு பூவில் தேனை உறுஞ்சும் பொழுது, மயிரில் ஒட்டி உள்ள பூந்தாதுக்கள் பூவின்மேல் படிந்துவிட அப்பூவானது கருவுற்றுக் காய், கனிகளைத் தருகின்றது.
தேனீ வளர்ப்பு
தேனீயை வளர்ப்பவர்கள், இரு வகைகளான மெல்லிவெறா, செறானா இந்டிகா (A. mollifera and A. Cerana Indica) ஆகிய தேனீக்களுக்கு உணவளித்து, பாதுகாத்து, இடம் விட்டு இடம் கொண்டு செல்கின்றனர். தற்காலத் தேனீப் பெட்டிகள், தேனீக்களுடன் கொண்டு செல்வதற்கு உதவியாய் அமைந்துள்ளன. தேனீயை வளர்ப்பவர்கள் அதிகமானோர் பண்ணையாளர்கள். இவர்கள் தோப்பு, வயல், மருத நிலம், தோட்டம், வேளாண்மை ஆகியவற்றின் செந்தக்காரர்கள்.
தேனீக்களை வளர்த்து அதில் வரும் தேனை விற்றுப் பணமும் பெறுகின்றனர். மேலும் இத் தேனீக்கள் அவர்களின் பண்ணையிலுள்ள விளைபொருட்களின் பூக்களைப் பூந்தாதினால் கருவுயிர்க்கச் செய்வதால் அதிக விளைச்சலைப் பண்ணையார் பெறுகின்றனர். இது அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தி, மக்களின் உணவுத் தட்டுப்பாட்டையும் தணிக்கின்றது.
தேனீக்கள் தாவரங்களைக் கருவுயிர்க்கச் செய்வதால் ஆண்டு தோறும் பயிர்களின் மொத்த விளைச்சல் 15 பில்லியன் அமெரிக்க டொலரால் ($ 15 billion) அதிகரிப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. உலகில் மூன்றில் ஒரு பங்கு (1/3rd) உணவுகள் தேனீக்களின் கருவுயிர்க்கச் செய்யும் முறையால் கிடைக்கின்றன. இப் பூமிப் பந்திலிருந்து தேனீக்கள் முற்றாக மறைந்து விட்டால், மனிதன் நான்கு ஆண்டுகளுக்குமேல் வாழ்தல் அரிதாகுமென்று கணக்கிடப்பட்டுள்ளது.
‘பெரும் எண்ணிக்கையில் தேனீக்களின் இறப்பு விவசாயிகளுக்கும், எங்கள் விருப்பு உணவுகளுக்கும் பேரிடரைத் தந்துவிடும்' என்பது பிறையன் வோல்ஸ் (Bryan Walsh) என்பவரின் கருத்தாகும். தற்பொழுது விளைதானியங்களுக்குத் தெளிக்கும் பூச்சி மருந்துகள்தான் தேனீக்களின் பெருந்தொகை இறப்புக்குக் காரணமாகும் என்று டோன் (Doan) என்பவர் கூறியுள்ளார்.
இன்னும், ஆசியாவில் கிராமப் பகுதிகளில் மக்கள் தேனீக்களை நெருப்பால் பொசுக்கி விட்டுத் தேனை எடுத்துப் பணம் சம்பாதிக்கின்றனர். இதனால் இறக்கும் தேனீக்கள் ஆயிரமாயிரமாகும். இவர்களும் மேல் நாட்டினரைப்போல் அதற்குரிய உடையணிந்து தேன் எடுக்கப் பயிற்சி பெறல் வேண்டும்.
'நாங்கள் தேனீக்களை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் 40 ஆண்டுகளுக்கு மேலான அனுபவமுள்ள தேனீப் பண்ணையாளர்களை மாற்றிக்கொள்ள முடியாது.' என்பது அமெரிக்கத் தேனீவளர்ப்புக் கழகத்தின் துணைத் தலைவரான ரிம் ரக்கரின் (Tim Tucker) கருத்தாகும்.
தேனீயின் பனிக்கால வாழ்வு
பனிக் காலங்களில் தட்ப வெப்பநிலை பத்து சென்ரிகிறேட் (100C – 500F) அளவுக்குக் கீழ்க் குறையும் பொழுது தேனீக்கள் வெளியில் பறவாது கூட்டில் தங்கிவிடும். அடைகாத்தல் இல்லாத பொழுது இராணித் தேனீயைச் சூழ்ந்து உழைப்பாளித் தேனீக்கள் சிறகுகளை அடித்துத் தட்ப வெப்பநிலையை
27 சென்ரிகிறேட் பாகையிலும் (270C – 810F), இராணித் தேனீ முட்டையிடுங் காலங்களில் 34 சென்ரிகிறேட் பாகையிலும் (340C – 930F) வெப்ப நிலையை வைத்துப் பேணிக் காத்து வருகின்றன.
உழைப்பாளித் தேனீக்கள் கொத்துக் கொத்தாகத் திரண்டு வெளியிலிருந்து உட்பக்கமாகச் சுழன்று வருவதினால் ஒரு தேனீயாவது குளிரால் வருந்துவதில்லை. இக் கொத்தின் வெளிப் பக்கம் 8 – 90C (46 – 480F) சென்ரிகிறேட் வெப்பநிலையில் உள்ளது. குளிர் காலத்தில் தேனீக்கள் சேமித்து வைத்திருக்கும் தேனைக் குடித்து உடல் வெப்பத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். இக் காலப்பகுதியில் ஒரு கூட்டிலுள்ள தேனீக்கள் 15 முதல் 50 கி.கி. தேனைக் குடித்து விடும்.
றொபோ தேனீ
றொபோ தேனீ (Robobee) என்பது தேனீயை ஒத்த ஒரு சிறிய செயற்கை இயந்திரப் பொறியாகும். இதைக் கார்வாட் பல்கலைக் கழகத்தின் (Harward University) புத்தாய்வில் ஈடுபடும் விஞ்ஞானிகள் தொடர்ந்து 12 ஆண்டுகள் பணியாற்றி, எதிர்கொண்ட தொழில்நுட்பச் சிக்கல்களைச் சரிசெய்து, றொபோ தேனீயை உருவாக்கினர்.
இதைப் பறக்கச் செய்யச் செயற்கையான தசைநார்களைப் பொருத்தி, ஒரு செக்கனில் 120 முறை சிறகடிக்கவும் செய்துள்ளனர். இது தானே இயங்கி ஆய்வுகள், இடர் காப்புதவி, செயற்கைக் கருவுயிர்க்கச் செய்தல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதே இப் பொறியின் நோக்கமாகும். றொபோ தேனீ முதல்முதலாக 2012 ஆம் ஆண்டில் பறக்க விடப்பட்டது. இது பற்றிய விவரம் மே மாதம், 2013-ஆம் விஞ்ஞானச் சஞ்சிகையில் பதிவாகியுள்ளது.
தேன் பசைப்பொருள் (Propolis)
தேனீக்கள் மரப் பிசின், மரச் செடிப் பால் ஆகியவற்றிலிருந்து திரட்டும் ஒரு கலவையைத்தான் தேன் பசைப்பொருள் என்பர். உழைப்பாளித் Nதனீக்கள், தேன் கூட்டில் ஏற்படும் வெடிப்புகளை இதனால் அடைத்து விடுவர் இதைத் தேன் கூடு அமைந்த மரக் கொப்பில் பூசி, ஒட்டும் தன்மையை உருவாக்கி எறும்புகளின் தொல்லையிலிருந்து தேன் கூடு காக்கப்படுகின்றது. இதை மக்களும் உணவாக உண்கின்றனர். மேலும் இதைச் சிங்காரப் (cosmetics) பொருளாகவும் பாவிக்கின்றனர்.
முடிவுரை
இது காறும் 'தித்திக்கும் தேன், தேனீ வகைகளும் தோற்றுவாயும், தேனீ இனமும் வாழ்க்கைக் காலவட்டமும் - இராணித் தேனீ, ஆண் தேனீ, உழைப்பாளித் தேனீ; தேனீயின் உடலுறுப்பு அமைப்பியல் - கண்கள், ஊறுஞ்சு குழல், தேனீ அலகு, கால்கள், தேனீயின் சிறகுகள், மெழுகு, கொட்டும் உறுப்பு, நிலைமின் இயல் தாக்கம்; தேனீ வளர்ப்பு, தேனீயின் பனிக்கால வாழ்வு, றொபோ தேனீ, தேன் பசைப்பொருள்' ஆகிய விடயங்கள் மேலே அலசப்பட்டதைப் பார்த்தோம்.
தேனீக்கள் அமைக்கும் தேன்கூடுகள் மிக நுட்பமானவை. அவற்றின் அமைப்பைப் பார்த்து வியக்காதவர்கள் இருக்கமுடியாது. மனிதனாற்கூடக் கட்ட முடியாத தேன்கூடுகள் அவை. இத் தேன்கூடுகளை ஒரு கட்டட நிபுணராற்கூட அமைக்க முடியாதென்பதையும் காண்கின்றோம். மனிதன் இதையும் ஒரு பாடமாகக் கற்க வேண்டும்.
ஒரே குடும்பமாக 30,000 க்கு மேற்பட்ட தேனீக்கள் இராணித் தேனீயின் தலைமையில் கூடி வாழ்கின்றன. தேனீக்கள் ஒரு மாற்றமுமின்றிப் பல்லாயிரம் ஆண்டுகளாக ஒரே வாழ்க்கை முறையைப் பின் பற்றி ஒற்றுமையாக ஒரே வீட்டில் வாழ்கையை நடாத்துவதை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும். இன்று இரு குடும்பங்கள் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ முடியாத நிலையில் மனிதன் உள்ளான். நாம் ஒற்றுமையாக வாழும் முறையைத் தேனீக்களிடமிருந்து கற்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
இராணித் தேனீ, ஆண் தேனீ ஆகியவை ஒரு வேலையும் செய்யாதிருந்த பொழுதிலும், உழைப்பாளித் தேனீ அவைகளுக்கு உணவளித்து, செய்ய வேண்டிய கடமைகளையும் ஆற்றி வருகின்றன. உழைப்பாளித் தேனீ இல்லையெனில் உலகில் தேனீ இனம் அழிந்து விடும். அத்தோடு மனிதனும் உண்ண உணவின்றி மறைந்து விடுவான்.
உழைப்பாளித் தேனீக்கள் முன் பின் விளைவுகளை எதிர்கொண்டு செயலாற்றும் வல்லமை கொண்டவை. இவை, இராணித் தேனீயை உருவாக்கித் தாம் அமைத்த தேன்கூட்டின் இராணியாக நியமித்து, அதற்குப் பணிவிடை புரிந்து, காலநிலைக்கேற்றவாறு தேன்கூட்டின் தட்ப வெப்ப நிலையைப் பேணிக் காத்து, தம் உறைவிடமான தேன்கூட்டுக்கு எதிர்கொள்ளும் இன்னல்களைக் களைந்து, வதிவிடத்திலிருந்து புது மனைக்குப் போக வேண்டிய தொடர்பிலான தீர்மானத்தை ஆராய்ந்து செயலாற்றி வருகின்றன.
உலகளாவிய ரீதியில் பேசப்படுவதும், சுறுசுறுப்புக்கு உலகில் உதாரணங் காட்டக் கூடியதுமான தேனீக்களை அழியவிடாது பேணிக் காப்பது மனித நேயம் கொண்ட மாந்தர்களின் தலையாய கடமையாகும். இது நிறைவேறின், உலக மக்கள் பசிப்பிணியால் வாடமாட்டார். மக்கள் மண்ணோடு சேர்ந்து செயலில் இறங்குவர். அவர்கள் பொருளாதாரம் பெருகக் குடும்ப மகிழ்ச்சி மேம்படும். இதனால் நாடு செழித்து, உலகம் ஒன்றுபட்டு, அதில் வதியும் மக்களும் நலன் பெற்று நிம்மதியாக வாழலாம் என்பது திண்ணமாகும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.