- வெங்கட் சாமிநாதன் -நினைவுகொள்வது சற்று முன் பின்னாக இருக்கும். இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன். ஒரு சாலை விபத்தில் திடீரென்று திலக் ரோடு போலீஸ் காவல் நிலையத்திலிருந்து வந்த போலீஸ் ஜீப் (ஆமாம், போலீஸ் ஜீப் தான்) மோதி என் கால் முறிந்தது. இத்தோடு இரண்டு முறை ஆயிற்று. முறிந்த கால் எலும்பு மறுபடியும் ஒன்று சேர மறுத்து வந்த சமயம். வீட்டில் படுக்கையிலேயே தான் வாசம்  படிக்கலாம். பக்கத்தில் தொலைக்காட்சிப் பெட்டி. அக்காலத்தில் தொலைக்காட்சி அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்ததில்லை. மாலை ஆறு மணிக்குத் தான் அது விழித்தெழும். எழுந்ததும் சித்ரஹாரும் காந்தான் ஹிந்தி சீரியலும் தான் கதி என்றிருக்க வேண்டும். உலகம் முழுதும் அப்போது பெட்டியின் முன் கண்கொட்டாது அமர்ந்திருக்கும். ஆதலால் டேப் ரிகார்டர் தான் வேண்டும்  சமயத்தில் எல்லாம் உயிர்த் தெழும். கிட்டப்பாவிலிருந்து குமார் கந்தர்வா வரைக்கும் எனக்கு வேண்டும் பாட்டைப் பாடுவார்கள். அந்த 1988=ம் வருடத்தில் தான், ஏதோ ஒரு மாதம். ஒரு நாள். சங்கீத் நாடக் அகாடமியிலிருந்து நண்பர் கே.எஸ் ராஜேந்திரன் வந்திருந்தார். அந்நாட்களில் அவ்வப்போது வந்து என் தனிமையை மறக்கச் செய்த நண்பர்களில் அவரும் ஒருவர். அந்த பாபா ஹிந்து ராவ் ஹாஸ்பிடலில் சிகித்சை தொடங்கிய நாட்களிலிருந்து தொடக்கம். ஹாஸ்பிடல் தில்லியின் வடக்கு ஓரம்.. என் வீடு தில்லியின் தெற்கு ஓரம். விபத்துக்கு முந்திய காலங்களில் சினிமாவோ, நாடகமோ, நாட்டியமோ விழாக்களோ எதுவானாலும் மையம் கொள்வது அந்த மண்டி ஹௌஸ் சந்திப்பில் தான். சங்கீத நாடக் அகாடமியும் அங்கு தான். ஆக, என் மாலைப் பொழுதுகள் எப்படிக் கழியும் என்பது என் எல்லா நண்பர்களைப் போல அவருக்கும் தெரியும். வந்தவர் சங்கீத நாடக் என்னும் அகாடமியின் பத்திரிகைக்காக இந்திய நடனங்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதித் தரவேண்டும் என்றார். கால் முறிவானதால் நான் நீண்ட விடுமுறையில் இருந்தேன். படிக்க எழுத நிறைய நேரம் கிடைத்த ஒரு சௌகரியம். கால் எலும்பு முறிந்து நடக்க முடியாது போனாலும் ஒரு அசௌகரியத்தை ஈடு செய்ய ஒரு சௌகரியம் பிறந்து விடுகிறது. கையெழுத்துப் பிரதியாகக் கொடுத்தாலும் எடுத்துக்கொள்ள, தெரிந்தவர்கள் தயங்குவதில்லை. அது சாஹித்ய அகாடமியின் என்சைக்ளோப்பீடியாவோ, பத்திரிகைகளோ, அல்லது பேட்ரியட் லிங்க் போன்ற தனியார் பத்திரிக்கைகளோ, எதாக இருந்தாலும், அதில் இருந்தவர்கள் என் நிலை தெரிந்தவர்கள்.

 ராஜேந்திரனுடன் அனேகமாக ஏழெட்டு வருஷங்களாகப் பழக்கம். சங்கீத நாடக அகாடமியில் அவர் சேர்ந்ததிலிருந்து. யாத்ராவில் அவரை பீட்டர் ப்ரூக்ஸ் பற்றியும், இன்னொரு டைரக்டர் ரிச்சர்ட் ஷெக்னர் தேசீய நாடகப் பள்ளியில் செகாவின் செர்ரி ஆர்ச்சர்ட்-ஐ திறந்த வெளியில் பல்வேறு இடங்களில் நடிப்புக் களத்தை மாற்றி, ஒரு புது முறையில் நாடகத்தை இயக்கியிருந்தார். அது எனக்கு புதுமையாகவும் சுவாரஸ்யம் மிகுந்ததாகவும் இருந்தது. அவர் பற்றியும் யாத்ராவுக்கு எழுதச் சொல்லி வெளியிட்டிருந்தேன் இருவருமே தம் நாடக இயக்கத்தின் புதிய பார்வைக்காக, தனித்வத்துக்காக, அறியப்படுபவர்கள்.  ராஜேந்திரனுடனான என் நட்பு விசித்திரமானது. தழுவலும் உரசலும் அடிக்கடி நிகழ்வது. அவர் உரசிக்கொண்டு செல்வார். நான் வாளாவிருந்து வேடிக்கை பார்ப்பேன். பின் மறுபடியும் எப்படியோ சேர்ந்து கொள்வோம். பகைமை என்பது என்றும் நேர்ந்ததில்லை. கடைசியாக, எனக்கு விபத்து நேர்வதற்கு சற்று முன் சங்கீத நாடக் அகாடமி அப்போது தொடங்கியிருந்த தென் பிராந்தீய நாடக விழாவுக்கான நாடகத் தேர்வுக் கூட்டத்துக்குச் சென்று முத்து சாமியின் நாடகம், (கடவுள் என்று தான் நினைவு) என் சிபாரிசில் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் என் துரதிர்ஷ்டம் அதுவும் மற்ற தென்மொழி நாடகங்களும் மேடையேறும் விழா கள்ளிக்கொட்டையில் நடக்க விருக்கும் போது கால் எலும்பு முறிந்த் நான் மருத்துவ மனையில் இருந்தேன்.

எங்கள் இருரின் நட்பு அவ்வப்போதைய சிறிய உரசல்களால் எல்லாம் உடைந்து விடுவதில்லை. நடனங்களில் என் விருப்பும் ஈடுபாடும் ராஜேந்திரனுக்குத் தெரியும். ஆனால் சங்கீத் நாடக் பத்திரிகையின் ஆசிரியராக இருக்கும் அபிஜீத் சட்டர்ஜிக்கு எப்படித் தெரியும்? அவரோடு நான் அதிகம் பழகியதில்லை. ராஜேந்திரனின் அறைக்கு அடுத்த அறை அவரது. மற்ற சிலரோடு அதிகம் பழக்கம் உண்டே தவிர அபிஜீத்தோடு, அல்ல. ராஜேந்திரன் சொல்லியிருக்கக்கூடும். என்னவாக இருந்தால் என்ன, எனக்கு சுற்றி நிலவும் நடனங்கள் பற்றி, சொல்ல கொஞ்சம் இருந்தது. அதை நானாக எழுதி அனுப்பினால் ஏற்பவரைக் காண்பது துர்லபம்.. ஆனால் சங்கீத் நாடக் பத்திரிகையின் சார்பில் கேட்கப்படும்போது எனக்கு உற்சாகம் தான். இதற்கென்றே நடத்தப்படும் பத்திரிகை ஆயிற்றே!  நான் சொல்ல விரும்பும் கருத்துக்கள் சம்பந்தப்பட்டவர்கள் பார்வையில் படும். அவர்கள் கவனிப்பும் பெறும். காட்டமான எதிரொலிகளும் எழும். நல்லது தானே.
அதற்கும் முன்னர் சொல்ல விரும்பியவற்றில் சிலவற்றை கொஞ்சம் கொஞ்சமாக வாய்க்கும் சந்தர்ப்பங்களைப் பொறுத்து சொல்லி வந்திருக்கிறேன். இப்போது என் மீது திணிக்கப்பட்டுள்ள கட்டாய விடுமுறையின் சாவகாசத்தில் கொஞ்சம் விஸ்தாரமாகவே சொல்லலாம் என்று தோன்றிற்று எழுதி அனுப்பினேன். Indian Dance traditions – Frozen in Samapada (சமபாதத்தில் உறைந்துவிட்ட இந்திய நடனங்கள்) என்ற தலைப்பில். ஒரு மாதகாலமோ என்னவோ கழிந்த பிறகு, அபிஜீத் சட்டர்ஜி அதைத் திருப்பி அனுப்பிவிட்டார். அதைப் பிரசுரிக்க முடியாதது பற்றி வருந்தி, அதற்கான காரணங்களை விரிவாக எழுதி ஒரு நீண்ட கடிதமும் எழுதினார். தான் சங்கீத் அகாடமியில் இருந்து கொண்டு, அந்த அகாடமியால் கௌரவிக்கப்பட்டு, அதில் உயர் ஸ்தானங்களில் ஆலோசகர்களாக இருக்கும் புகழ் பெற்றவர்களை விமர்சிக்கும் கட்டுரை ஒன்றை அகாடமி வெளியிடும் பத்திரிகையிலேயே வெளியிடுவது சாத்தியம் இல்லை என்று. கஷ்டப்பட்டு ஒரு வாய்ப்பு வந்தபோது எழுதியது இப்படி ஆயிற்றே என்ற வருத்தம் இருந்த போதிலும், அபிஜீத் தன் காரணங்களை விரிவாக எழுதியதும் (…some of your opinions, especially about our prominent dancers, would be misconstrued, if published in the Akademi’s journal, Sangeet Natak) அத்தோடு கிருஷ்ண சைதன்ய (என்ற பெயரில் எழுதிவர் அவரது இயற்பெயர் எம்.கே. நாயர் என்று நினைவு அந்நாளில் தில்லியில் இருந்த ஒரு கலை இலக்கிய ஜாம்பவான்) எழுதியிருந்த ஒரு கட்டுரை ஒன்றின் பிரதியையும் உடன் வைத்திருந்தார். அது மிக ஆழமான பார்வை கொண்ட ஆனால் சச்சரவு எதையும் எழுப்பாத, கட்டுரை. அந்த ஆழத்தை விரும்பாதவர்கள் பக்கங்களைப் புரட்டிச் செல்வார்கள். விரும்புபவரகள். “good, excellent piece” என்ற மனதுக்குள் சொல்லி நகர்வார்கள். கதக் நடனம் ஒரு கலையே இல்லை. என்றோ கொஞ்சம் ஸ்பஷ்டமாகச் சொல்லப் போனால் அது கிட்டத்தட்ட ஒரு சர்க்கஸ் என்று நான் சொல்லியிருந்தேன். கிருஷ்ண சைதன்யா சொல்லவில்லை; வடநாட்டில் இருக்கும் ஒன்றே ஒன்றையும் ஒன்றுமில்லாததாக அவர் ஆக்க விரும்பவில்லை. பத்மா சுப்பிரமணியம் செய்வது தமிழ்சினிமா ஆக்டிங், நடனம் இல்லை. என்றும் அவர் சொல்ல வில்லை.  இதற்கு அர்த்தம் என்னுடைய பார்வையும் அக்கறைகளும் வேறு, கிருஷ்ண சைதன்யாவினது வேறு என்பது தான். அவரது, “Naïve longings for winds of change: Indian Dance. என்னவாக இருந்தாலும் அவரது சொல்முறை வேறு. என்னது வேறு.

அபிஜீத்தின் கட்டுக்களையும் நிர்ப்பந்தங்களையும் நான் புரிந்து கொள்ள முடிந்தது. கடைசியில் சமபாதத்தில் உறைந்த இந்திய நடனங்கள் கட்டுரை அதன் முழுமையில், தமிழ் ஹிந்து இணையதளத்தில் இப்போதுதான் சில வருஷங்கள் முன் பிரசுரமானது. விருப்பமுள்ளவர்கள் அதன் ஐந்து பகுதிகளையும் இங்கு பார்க்கலாம், முடிந்தால் படிக்கவும் செய்யலாம்: (http://www.tamilhindu.com/author/vesa/page/5/
ஆனால் எனக்கு அபிஜீத்தின் பேரில் கோபம் எழவில்லை. அவர் நிலை எனக்குப் புரிந்தது. அத்தோடு அவர் நிலையை விளக்க அவர் எடுத்துக்கொண்ட பிரயாசைகள் என்னை மனம் நெகிழச் செய்தது.  அவர் நிலையை நான் நினைத்துப் பார்க்கவில்லை. அதற்கு முன்னால், முன் சொன்னபடி, இதில் சொன்ன விஷயங்களில் சில, நான் எழுதி பத்திரிகைகளில் பிரசுரமாகியிருந்தன. 1970 களில் ஞானரதம் பத்திரிகைக்காக, அம்பையைப்பேட்டிகண்டதும் அது பின்னர் யாத்ராவில் பிரசுரமானது. நண்பர் ஒருவர் இன்றைக்கு என் பொண் நாட்டியம் நடக்கிறது நீங்கள் பார்க்கணும் வாருங்கள் என்று அழைத்து, அந்தப் பெண் ஆடியது எனக்குப் பிடித்துப் போக, அதைப் பற்றி எழுதி லிங்க் பத்திரிகைக்கு அனுப்பி அது பிரசுரமானது (LINK, New Delhi, December 20, 1987) மட்டுமல்ல, அந்தப்பத்திரிகையில் கலைப் பகுதிக்கு ஆசிரியராக இருந்தவர், யாமினி கிருஷ்ணமூர்த்தியின் தீவிர ரசிகராக இருந்த போதிலும், அதில் கண்டிருந்த யாமினியைப் பற்றிய விமர்சனக் குறிப்புகளையும் பாராட்டாது, “சாமிநாதன் என்ன எழுதினாலும் கொண்டு வா, போடலாம்” என்று வேறு பேட்ரியட் பத்திரிகையில் சட்ட விவகார நிருபராக இருந்த என் நண்பர் ஆர் வெங்கட்ராமன் மூலம் சொல்லி அனுப்பியிருந்தார். இப்போது அந்தப் பெண், இந்துமதி, அமெரிக்காவில் வாசம். பள்ளி ஒன்று நடத்திக்கொண்டு நடனம் கற்றுத் தருகிறாள் என்று தென்றல் என்னும் அமெரிக்க தமிழ் பத்திரிகையிலிருந்து தெரிகிறது.

பின்னர் லிங்க், பேட்ரியட் இரண்டிலும் நிறையவே எழுதினேன். கையெழுத்துப் பிரதியாக இருந்தாலும் தடையிருந்ததில்லை. பின்னர் ஒரு நாள் என் நண்பர் ஆர் வெங்கட் ராமன் மூலம் யாமினி கிருஷ்ணமூர்த்தி கூப்பிட்டனுப்பி ஒரு Coffee Table Book ஒன்று அவரைப் பற்றி எழுத வேண்டும் என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்னைப் பற்றி தெரியுமா? நான் என்ன எழுதுகிறேன் என்று தெரியுமா? என்று கேட்டேன்.” தெரியும்” என்று சொல்லி அவரைப் பற்றி எழுதியவை அடங்கிய ஃபைலை என்னிடம் கொடுத்தார். அதில் நான் முன்னர் லிங்கில் அவரைப் பற்றிய விமர்சனக் குறிப்புகள் அடங்கிய கட்டுரையும் சேகரிக்கப் பட்டிருப்பதைக் காட்டினார்.  எழுதினேன்தான் வழக்கம் போல் என் போக்கில்.. ஆனால் அது பிரசுரமாக வில்லை. ஒரு அழகும் பலமான தொடர்புகளும் கொண்ட ஒரு பெண்மணி, தில்லி அறிந்த பத்திரிகை விமர்சனம் எழுதும் பெண்மணி எனக்குப் போட்டியாக வந்ததில் நான் தோற்றுவிட்டேன். என்னிடமும் குறை இருந்தது. Coffee Table Book படிப்பதற்கல்ல. காத்திருக்கும் சற்று நேரத்துக்கு, புரட்டிப் பார்ப்பதற்கு. சொல் எளிமையும் கவர்ச்சியும் தேவை.
இருப்பினும் யாமினி கிருஷ்ணமூர்த்தி தயாரித்த நாட்டியாஞ்சலி என்னும் நாட்டியத் தொடர் ஒன்று கோவில்களையும் அதை மையமாகக் கொண்டு எழுந்த நாட்டியம் பற்றியுமான தொலைக் காட்சி தொடரில் பாதி வேறு யாரோ எழுத, ஆறு தொடர்களுக்கு நான் ஸ்க்ரிப்ட் எழுதினேன். என் விமர்சனக் கருத்துக்கள் தடையாக இருக்கவில்லை. அதுவும் எனக்கு ஒரு புதிய அனுபவம். சந்தோஷமாக இருந்தது எழுதும் அனுபவம்.

இடையில் அபிஜீத் திருப்பி அனுப்பிய இந்திய நடனங்கள் பற்றிய அந்தக் கட்டுரை FROZEN IN TIME என்ற தலைப்பில் SUNDAY MAIL .  பத்திரிகையின்( May 14-20, 1989 இதழின் முதல் பக்கத்தில் பிரசுரமானது. ஆனால், எழுதச் சொல்லிவிட்டு, திருப்பி அனுப்பிவிட்டாரே என்ற மன வருத்தம் இருந்தது தான். ஆனால் இவர் பத்திரிகையாசிரியர் என்ற அகங்காரத்தோடு செயல்படவில்லை. வேறு இடத்தில் இருந்தால் அவர் தடுத்திருக்க மாட்டார். இருக்குமிடம் அப்படி. இவ்வளவு தூரம் தன் மனத்தைத்திறந்து எழுதுபவரிடம் என் முரட்டு அபிப்ராயங்களைப் போடச்சொல்லி வற்புறுத்த முடியாது. அந்தக் கடிதம் ஒரு வித்தியாசமான மனிதரை எனக்குக் காட்டியது. திரும்பவும் சங்கீத் நாடக் பத்திரிகைக்கு எழுத்ச் சொல்கிறார். எது பற்றி எழுதலாம் என்று நானே யோசித்து எழுதலாம் என்கிறார். ஆக, எனக்கு. அபிஜீத்துடன் ஏது மனக் கசப்பும் எழவில்லை. நான் நலம் பெற்று வந்ததும் எங்கள் சந்திப்புக்கள் ராஜேந்திரனுடனான நெருக்கத்தை அபிஜீத்துடனும் தந்தன. இடையில் தில்லிக்கு தோல்பாவைக் கூத்து, முருகனது ஒரு நிகழ்வு தில்லியின் எக்ஸிபிஷன் க்ரௌண்ட்ஸில். அது தான் நான் பார்க்கும் முதல் தோற்பாவைக் கூத்து. தமிழ் நாட்டுக் கூத்து. அதைப் பற்றி உடன் ஹிந்துஸ்தான் பத்திரிகையில் எழுதி அதை அன்றைய சங்கீத் நாடக் அகாதமியின் செக்ரடரி கேசவ் கொதாரிக்கு அனுப்பினேன். என் விருப்பம் சங்கீத் நாடக் அகாடமி நடத்தும் folk dance festival-ல் தமிழ் நாட்டு தோற்பாவைக் கூத்தையும் அகாடமி கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது. இந்த மாதிரி ஒரு விழாவில் தான் என் வாழ்வில் முதன் முறையாக தெருக்கூத்து பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. அன்று 1966-ல் ஒரு நாள் புரிசை நடேச தம்பிரானின் தெருக்கூத்து பார்த்து வியந்து தீபம் பத்திரிகையில் எழுதினேன். அதைப் படித்த பிறகு ந.முத்துசாமி தெருக்கூத்து ஆர்வலர் ஆனார் இதை ந. முத்துசாமி ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் எழுதியுமிருக்கிறார். இதன் விளைவாக, கூத்துப் பட்டறையும் பிறந்தது. அதைத் தொடர்ந்து உலக பாவைக் கூத்து விழா ஒன்று சங்கீத் நாடக் அகாடமி ஏற்பாட்டில், தில்லியில் நடந்தது. அதில் பங்கேற்க முருகன் அழைக்கப்பட்டார். அழைத்து வந்தது முனைவர் நடிகர் மு.ராமசாமி. நானும் விழாக் குழுவினரில் ஒருவன் ஆனேன். அது ஒரு பெரிய அனுபவம். அந்த விழாவின் ஒரு கருத்தரங்கில் வாசித்த கட்டுரை ஒன்று (தமிழ் நாட்டில் இன்றைய நிலை– பாவைகூத்து : இச்சூழலில் கட்டுரைத் தொகுப்பு பக்.187-194). விழா மலருக்காக எழுதிய கட்டுரையை சங்கீத் நாடக் 98, அக்டோபர்- டிஸம்பர் 1990)யில் பார்க்கலாம்.

சுமார் ஒன்றரை வருட காத்திருப்புக்குப் பின் முறிந்தகால் எலும்பு சேர்ந்து நான் அலுவலகம் சேர்ந்தேன். அத்தோடு என் பழைய சுற்றல்களும் சந்திப்புகளும் திரும்ப விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தன. எந்த கலை நிகழ்ச்சியானாலும் அது மண்டி ஹௌவுஸைச் சுற்றிய அரங்குகளிலேயே நிகழும். ஆக எது ஒரு நிகழ்ச்சிக்கு எந்த அரங்கு போனாலும் மற்ற கலை இலக்கிய நிறுவனங்களுக்குச் செல்வது என்பது திட்டமிடாமலேயே நிகழும். எல்லா அகாடமிகளிலும் நட்புகள் இருந்தன. என்ன அபூர்வமான, மனம் தோய்ந்து மகிழ்விக்கும் நட்புகள்.   இன்று அந்த காலம் அடிவானத்தை நோக்கி நகர்ந்து மறைந்து கொண்டிருக்கிறது. எப்பொழுதுமா எல்லோரும் ஒரே இடத்தில் இருக்கப் போகிறோம்.  ஓய்வு பெற்ற பிறகு தில்லியை விட்டு நகர்ந்தாயிற்று.

ஒரு நாள் ராஜேந்திரன் இருந்த அறைக்கு வந்த அபிஜீத் ஒரு புத்தகத்தைக் கொடுத்து இதற்கு 3000 வார்த்தைகளுக்குள் ஒரு ரெவ்யூ எழுதிக்கொடுங்கள் என்றார். புத்தகம் The Theater of the Mahabharata – Therukkuttu Performance in South India by Richard Armando Frasca. அமெரிக்காவின் பெர்க்லியில் இருக்கும் கலிபோர்னியா பல்கலைக் கழகத்திலிருந்து வந்து தெருக்கூத்து கலையை தானும் பயின்று அது பற்றி எழுதிய புத்தகம். எழுதிக்கொடுத்தேன். அது என்ன 3000 வார்த்தைகளுக்குள்ளா அடங்கும்? பிரசுரமானது (Sangeet Natak – 101-102, July-December, 1992) அப்போது தான் அபிஜீத் சங்கீத் நாடக் பத்திரிகைக்கு வரும் கட்டுரைகளை ஒழுங்கு செய்து அவரது லக்ஷியத்துக்கு ஏற்ப தயாரிப்பதை அடிக்கடி அங்கு செல்லும்போதெல்லாம் பார்த்தேன். உயர்ந்த மனிதர். சுமார் ஆறரை அடி உயரம். சற்று நீண்டு தொங்கும் தாடி. அப்போது இன்னம் நரை தோன்றாத காலம். மேஜையில் இருக்கும் விளக்கொளியில் குனிந்து படிக்கும் காட்சி நன்றாக இருக்கும்.  ஒருவாறாக, சாமிநாத ஐயர் ஒரு நூற்றாண்டுக்கு முன் சின்ன சிமினி விளக்கொளியில குமபகோணம் பக்த புரி அக்ரஹாரத்துத் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் ஒரு சாயலை அபிஜீத் ஐந்துக்குப் பத்து காபினில் மின்சார விளக்கொளியில் உட்கார்ந்திருக்கப் பார்ப்பதாகத் தோற்றம் தரும். ஒரு சின்ன மாற்றம். அபிஜீத் கையில் ஒரு கணேஷ் பீடி மேஜையில் ஒரு டீ கப். அதிகப் படியாகக் காட்சி தரும். இல்லையெனில் இளம் வயது தாகூர் தான்.

“அவ்வளவையும் எப்படிப் போட முடியும்? எடிட் பண்ணிய பிறகு காமிக்கிறேன் பாருங்கள். ஏதாவது விட்டுப் போயிருந்தால் சொல்லுங்கள்” என்பார். நான் அதில் தலையிடுவதில்லை. நான் எழுதி அனுப்பியதை எந்தப் பத்திரிகையும் வெட்டியதில்லை. மாற்றியதில்லை. ஹிந்துஸ்தான் டைம்ஸ், எகனாமிக் டைமிஸ், இந்தியன் எக்ஸ்ப்ரெஸ், சாஹித்ய அகாடமியின் ஹிந்தி, இங்கிலீஷ் பத்திரிகைகள் எதுவும். என்ஸைக்ளோபீடியா அலுவலகத்தில் தான் கட்டுரையை தேவைக்கு ஏற்றவாறு எடிட் செயவார்கள்.
அபிஜீத் அலுவலக காபினுக்குப் போனால் “ஒரு நிமிஷம்” என்று சொல்லி சரி பார்த்துக்கொண்டிருக்கும் கட்டுரையை ஒரு இடத்தில் நி/றுத்திப் பின் தலை நிமிர்வார். சில நிமிடங்களுக்கு மேல் அதிகம் ஆயிருக்காது.

அபிஜீத் வங்காளி. நிறையப் படித்தவர். ஹிந்தி, ஆங்கிலம், வங்காளம் எல்லாவற்றிலும். அவர் பேசும் ஹிந்தி/உருது உச்சரிப்பில் ஒரு வங்காளியின் நாக்கு செய்யும் அலங்கோலத்தைக் காண்முடியாது. அவர் படித்து வளர்ந்தது அலஹாபாதில் என்று சொல்லிக் கேட்ட நினைவு. அவர் அப்பாவும் ஒரு பெரிய படிப்பாளி. பெரிய லைப்ரரியை வீட்டில் உருவாக்கி வைத்திருப்பவர். வங்காளிகளின் தேசீய குணங்களில் ஒன்று அட்டா என்னும் ஒரு கப் டீயை மேஜையில் வைத்துக்கொண்டு மணிக்கணக்கில் பேசும் பழக்கம்.. சத்யஜித் ராயிலிருந்து கல்கட்டா ட்ராம் ஸ்ட்ரைக், வரை. ஹில்ஸா, சிங்டி மீன்கள்  கூட இடையில் துள்ளும். இதில் அபிஜீத் முழுக்க முழுக்க வங்காளி தான். எல்லா வங்காளிகளையும் போல சம்பாஷணைப் பிரியர். ஆனால் காட்டம் இராது. சண்டை இராது. வம்பு இராது.
ஆனால் அவரிடம் ஒரு விஷயம் கேட்டுவிட்டால் அதற்கு அவர் வெகு சிரத்தையுடன் ஆதியோடந்தமாக நமக்கு விளக்கம் தருவார். நாம் கேட்ட ஒரு சின்ன விஷயத்தில் சொல்ல இவ்வளவு விஷயங்கள் பொதிந்திருக்கின்றனவா என்று ஆச்சரியமாக இருக்கும். நாம் கேட்ட விவரம் ஏதோ ஒரு விஷயத்தின் ஒரு சின்ன துகளாக, அணுவாக இருக்கும் தான். அபிஜீத்துக்கு எதையும் சுருக்கமாக கேட்ட விவரத்திற்கு மாத்திரம் பதில் சொல்லி பழக்கம் கிடையாது. ஒரு சின்ன உதாரணம், புரிவதற்காக சொல்வதென்றால், பரதநாட்டியம் ஆடுபவர் வர்ணம் ஆடும்போது ஒரு வார்த்தையைப் பிடித்துக்கொண்டு சஞ்சாரி பாவம் என்று சொல்லி அந்த வார்த்தை சொல்லும் புராணக் கதை முழுவதையும் அபிநயம் பிடிக்கத் தொடங்குவது போலத் தான். எது பற்றியும் கேட்பவர் முழுதையும் விவரமாகத் தெரிந்துகொள்ளவே ஆதலால். அத்தனையையும் புரிய வைத்துவிடவேண்டும் என்பது போல அபிஜீத் மிக சாவகாசமாக நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக அழகான உச்சரிப்பில் கவனம் செலுத்தி அவர் பேச ஆரம்பித்தால் அது ஏதோ பாடம் நடத்தும் ஆசிரியத்தனமாக இராது. வெகு இயல்பான காரியத்தையே அவர் செய்வதாக இருக்கும். அது அவர் சுபாவம். நேரம் செலவாகும் தான். அவரதும் நம்மதும். ஆனால் அவர் எதையும் விளக்கக் கேட்பது மிக சுவாரஸ்யமானதும் நம் பார்வையை விசாலப்படுத்துவதாகும். அவசர அவசரமாக அவரிடம் எதையும் விசாரித்துவிடமுடியாது. விவரம் பெற்று விட முடியாது.

அவருடன் சம்பாஷித்துக்கொண்டிருப்பது ஒரு அனுபவம். அவருடனான நெருக்கமும் நட்பும் மலர்ந்தது. அதே அக்கறையும் சிரத்தையும் அவர் தமக்கு வந்தவற்றைத் திருத்துவதிலும் காட்டுவார். திருத்தியதை என்னிடம் காட்டினார். நான் எழுதியது தான். குறைத்திருந்தார் தான். சில prepositions,   சில வார்த்தைகள் சில வாக்கிய அமைப்புகள் திருத்தப்பட்டிருந்தன. படித்துப் பார்த்த போது எனக்கு ஏதும் சொல்லத் தெரியவில்லை. “ஏதும் விட்டுப் போயிற்றா? என்று கேட்டார். இல்லை தான். நான் எழுதியதைக் கிடைத்த அளவுக்கு சுருக்கத் தெரிந்திருக்கிறது. சில மொழிபெயர்ப்புகள், சில நேர் காணல்கள் இவற்றை அவர் தொட்டதில்லை. கருத்தரங்குக் கட்டுரைகளை விழாவுக்குத் தயாரிக்கும் போது அவர் எவரது எழுத்திலும் கை வைத்ததில்லை. அவருக்கு முன் இருக்கும் பொறுப்பில் அவர் காட்டும் சிரத்தையொடு அவரது படிப்பையும் அறிவு ஆழத்தையும் நான் சேர்த்துப் பார்க்க முடியவில்லை. அந்த அறிவின் ஆழத்துக்கும் விசாலத்துக்கும் கொஞ்சம் எடிட்டிங் போன்ற வேலையில் அலட்சியம் இருக்கலாம் என்று பட்டது. பின் வருடங்களில் நிறைய என் எழுத்துக்கள் அவரிடம் சங்கீத் நாடக் அகாடமிக்காக சென்றிருக்கின்றன. குறிப்பாக, புரிசை கண்ணப்ப தம்பிரான், சுப்பிரமணியத் தம்பிரான் நேர் காணல்கள் (இவற்றை விருட்சம் வெளியிட்ட உரையாடல்கள் தொகுப்பில் காணலாம்) உதய்பூர் பாவைக்கூத்து விழா தொகுப்புகள், இப்படி பல. உலகத் தமிழாராய்ச்சி மன்றம் பம்மல் சம்பந்த முதலியாரின் நாடக மேடை நினைவுகளை ஒரே தொகுப்பாக வெளியிட முன் வந்து அது சங்கீத நாடக் அகாடமிக்கு வந்தது. அதற்கு பண உதவி செய்வதற்கு ஒரு சிபாரிசு எழுதிக் கொடுக்கும்படி என்னிடம் சொன்னார். இதுவும்  இன்னும் பல மற்ற விஷயங்கள் போல, ராஜேந்திரந்தான் அபிஜீத்திடம், “இதில் யோசனை என்ன இருக்கிறது. சாமிநாதனிடம் கொடுக்கலாம்” என்று சொல்லியிருப்பார். அகாடமியின் பண உதவி கிடைத்து புத்தகமும் அச்சாகி வெளி வந்தது. மிக முக்கியமான ஒன்று திரும்பக் கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி தான். புத்தகம் வந்ததும் எனக்கு ஒரு பிரதி கொடுத்து, பம்மல் சம்பந்த முதலியார் பற்றி ஒரு சின்ன அறிமுகத்தோடு இதிலிருந்து சில அத்தியாயங்களையும் மொழிபெயர்த்துத் தாருங்களேன் என்றார். கொடுத்தேன். 1890- 1940 காலத்து நாடக மேடை பற்றி என்ன அக்கறை இருக்கமுடியும் என்று நினைத்தேன். ஆரம்ப கால முயற்சிகளுக்கு ஒரு சரித்திரார்த்த ஈர்ப்பு இருக்கலாம். அது தமிழருக்கு. இருப்பினும் இரண்டு அத்தியாயங்களை மொழிபெயர்த்து ஒரு அறிமுகமும் எழுதிக்கொடுத்தேன் அதைப் பார்த்ததும் இன்னும் இரண்டு அத்தியாயங்கள் மொழிபெயர்த்துத் தாருங்கள் என்றார். எனக்கு மிக சந்தோஷமாக இருந்தது. அவை பிரசுரமாயின. ( Over Forty Years Before the Footlights - Sangeet Natak, Nos. 121-122, July-Dec. 1996, No. 123 Jan-March 1997). பின் புத்தகம் பற்றியே, பம்மல் சம்பந்த முதலியாரின் பங்களிப்பு பற்றி, நாடக இலக்கியத்துக்கும், நாடக மேடைக் கலைக்கும், இரண்டு பற்றியும் எழுதித் தாருங்கள் என்றார். எழுதித் தந்தேன்.( Sangeet Natak No.133-134, 1999)
ஓய்வு பெற்று எட்டு வருட்கங்களுக்கு மேல் தில்லியில் தங்கியாயிற்று. நான் 1999 நவம்பர் மாத கடைசியில் சென்னை வந்துவிட்டேன். வந்த பிறகு அபிஜீத் எனக்கு ஏதோ ஒன்றை எனக்கு அனுப்பி அது அச்சுக்கு அனுப்பப்படும் முன் அதை சரி பார்க்கச் சொல்லியிருந்தார். என்னவென்று இப்போது நினைவில் இல்லை. அதில் ஏதும் மாற்றம் செய்வதற்கில்லை என்று எழுதித் தெரிவித்தேன்.
சென்னை வந்ததும் வாழ்க்கையில் ஒர் இழப்பு மிகவும் வலியதாக மனதை நோகச் செய்தது. தில்லி வாழ்க்கையோடு சில நட்புகளுடனான அன்றாட உறவாடலும் போயிற்று. என்ன செய்ய முடியும்? அபிஜீத்துடனான முதல் அறிமுகமும் சந்திப்பும் சங்கீத் நாடக் பத்திரிகைக்கு எழுதுபவனாக. ஆனால் அது அந்தத் தளத்திலும் விரிவும் ஆழமும் பெற்றதோடு, அவ்வப்போதான உறவாடலும் சம்பாஷணைகளும் ஒரு வியப்பையும் நெருக்கத்தையும் கொடுத்தன. ராஜேந்திரன், அபிஜீத்தோடு தான் காண்டீனுக்கு சாப்பிட போவோம். இப்படி பலர் சாஹித்ய அகாடமியிலும், லைப்ரரியிலும்.

இடையில் அபிஜீத் சங்கீத் நாடக் அகாடமியை விட்டு நேஷனல் புக் ட்ரஸ்ட்டுக்கு Joint Director ஆகவோ என்னவோ வேலையில் சேர்ந்தார். பெரிய பதவி. அடுத்து டைரக்டராகும் வாய்ப்பு, டைரக்டர் அரவிந்த் என்று தான் பாதி பெயர் நினைவில் இருக்கிறது. பொறுப்பு, நிர்வாகமும் புத்தகத் தேர்வும் மொழிபெயர்ப்பு மேற்பார்வையும் தான் என்று நினைக்கிறேன். ஒரு வருடம் அங்கு இருந்திருப்பாரோ என்னவோ. அங்கு அவரால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. மறுபடியும் சங்கீத் நாடக் அகாடமிக்குத் திரும்பி வந்துவிட்டார். பழைய வேலைக்கு. பழைய அதே அந்த ஒடுங்கிய காபினில் புத்தகக் குவியல்களிடையே அமர்ந்து கொள்ள. ஒரு வருத்தமும் இல்லை. பழைய நாட்களின் இழந்த நிதானம், சந்தோஷம் திரும்ப பெற. வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும்?

தந்தையாரும் தாயும் இல்லை இப்போது. தனிக்கட்டை. மணம் செய்து கொள்ளவில்லை. விருப்பமில்லை. யமுனை நதியைக் கடந்தால் பட்பட் கஞ்சில் வீடு. தந்தை விட்டுப் போன லைப்ரரி. அது மட்டுமல்ல. புத்தகங்களோடும் சிந்தனை உலகோடும். கலைப் பிரக்ஞையொடும் வாழ்வதில் தான் அர்த்தம் உண்டு என்று நினைக்கும் கலாசாரம். அகாடமிக்கு நிதானமாகத்தான் வருவார் காலை 11-க்கும் 12-க்கும் இடையில். யாரும் அவரை அவசரப்படுத்துபவர் இல்லை. ஏன் வரவில்லை என்று கேட்பவர் இல்லை. அவர் வருகைக்காகக்  காத்திருப்பார்கள். அந்த மரியாதையும் மதிப்பும் அவருக்குண்டு. படாடோபமோ, தான் என்ற நினைப்போ சற்றும் அற்றவர். அவர் எல்லோரிடமும் பேசுவதும் பழகுவதும் ஒரே போலத் தான் இருக்கும். சுற்றி இருப்பவர் அனேகமாக எல்லோரிடமும் சொந்த வாகனம் இருக்கும். அபிஜீத் தில்லி பஸ்ஸில் தான் பயணம். எனக்கு அவரைத் தெரிந்த நாளிலிருந்து. அதுவே ஒரு பெரிய ஆச்சரியம். ரவீந்திர பவனில் சுற்றியிருக்கும் தெருவோர உணவுக் கடைகள், எது புதிதாக வந்திருக்கிறது. அங்கு என்ன கிடைக்கும் என்பதிலும் அவருக்கு ஆர்வம். மகாராஷ்ட்ரா பவனுக்கு எதிரா ஒரு ரோடு போகுமே அங்கே ஒருத்தன் புதுசா கடை வச்சிருக்கான். பட்டூரே நல்லா இருக்கும் போகலாமா? என்பார். அந்தக் குழந்தைத் தனச் சிரிப்பு அதையெல்லாம் இழந்து விட்டேன் தான்.  நான் இங்கு பங்களூர் வந்த பிறகு, நண்பர் மகாலிங்கத்துடன் ஒரு வாரம் தில்லி போகலாமா என்று அவர் சொல்லக் கிளம்பினோம். அப்போது பழைய நண்பர்களோடு, ராஜேந்திரனோடு தான் பெரும்பொழுது கழிந்தது. ராஜேந்திரனோடு என்றால் அபிஜீத்தைப் பார்க்காமல் இருக்க முடியுமா என்ன? ராஜேந்திரன் இப்போது இருக்கும் தேசீய நாடகப்பள்ளிக்கு எதிரே தான் ரோடைத் தாண்டினால் சங்கீத் நாடக் அகாடமி. ஆவலோடு அபிஜீத்துக்காகக் காத்திருந்தேன். வந்தார். ஆளே மாறியாயிற்று. அந்த தாகூர் தோற்றம் தரும் நீண்டு பின் கழுத்தைத் தொடும் சிகை இல்லை. மிக முக்கியமாக தாடி இல்லை. அபிஜீத்துக்கு எப்படி இருந்ததோ என்னவோ, எனக்கு அது ஒரு இழப்பாகத் தோன்றியது. அது பற்றிப் பேசவில்லையே தவிர அபிஜீத் மற்ற விஷயங்களில் பழைய அபிஜீத் தான். எப்போதும் போல் அன்றைய மாலை அபிஜீத், ராஜேந்திரன், இன்னும் ஒன்றிரண்டு மராத்தி நாடக நடிகர்களோடு ஒரு பாரில் நான்கு மணி நேரம் கழிந்தது. மகாலிங்கம் தூரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். பழைய அபிஜீத் திரும்ப தரிசனம் தந்தார்.

பழைய அபிஜீத் என்றேன். பல அர்த்தங்களில். எண்பதுகளில் கடைசியில் பார்த்த அதே அபிஜீத். அதே அகாடமி. அதே ஐந்துக்கு எட்டோ பத்தோ உள்ள அதே ஒடுங்கிய காபின். எல்லாவற்றுக்கும் மேலாக அதே வேலை. அதே பதவி. அவரை சங்கீத் நாடக் ஆசிரியராகப் பார்த்த போது இருந்த கேஷவ் கொதாரியைத் தொடர்ந்து பலர் அபிஜீத்துடன் இருந்த சகாக்கள் செக்ரடரியாகி, கீழிருந்தவர்களும் உயர்ந்து செக்ரடரியாகி எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. நிகழ்ந்து கொண்டும் வருகின்றன ஒவ்வொரு முறையும் அந்த பெரிய நாற்காலி காலியாகும் போதும் அவருக்கு அது கொடுக்கப்பட்டு அவர் அதை மறுத்து வருகிறார்.. அபிஜீத் மாத்திரம் தன் காபினை, தன் எடிட்டர் வேலையை, தன் கட்டுரைகளைத் திருத்தும் வேலையை விட்டவரில்லை. அதிலிருந்து நகர்ந்தவரில்லை. ராஜேந்திரனிடம் கேட்டேன். ஏன் இப்படி? என்று. அபிஜீத்துக்குப் பிடிக்கவில்லை. பதவி உயர்வு என்ன பதவி உயர்வு. சள்ளை பிடித்த வேலை. அனாவசியமாக கண்டவனுக்கெல்லாம் பதில் சொல்லிக்கோண்டு யார் வேண்டுமானாலும் என்னவேண்டுமானாலும் ஆகிக்கொள்ளட்டும். மண்டிஹவுஸ் ஸ்டாப்பில் இறங்கி இங்கு நடந்து வந்தால் நிம்மதியான சந்தோஷமான மனத்துடன் வரவேண்டும். திரும்பி வீடு செல்ல ஐந்து மணிக்கு மண்டிஹவுஸ் ஸ்டாப்புக்குச் செல்லும்போது அதே மன நிம்மதி வேண்டும். எனக்கு வேண்டிய பணம் கிடைத்துவிடுகிறது. இது போதும். இதுக்கு மேல் பணம் சம்பாதித்து பதவி பெற்று என்ன ஆகவேண்டும்? எனக்கு என்ன தேவை?”

இடையில் வந்த சிலர் அதிகார துஷ்பிரயோகத்தின் காரணமாக, வீட்டுக்கு அனுப்பப் பட்டனர். இவருக்கு கீழ் நிலையில் இருந்தவர்கள் பதவி உயர்வு பெற்று ஓய்வும் பெற்று விட்டனர். இது எல்லாவற்றையும் அமைதியாக அபிஜீத் பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்போது செக்ரடரி யார்? என்று கேட்டேன். ஹெலன் ஆச்சார்யா பதில் வந்தது ராஜேந்திரனிடமிருந்து. ஹெலன் அபிஜீத்துக்கு இரண்டொரு படிகள் கீழே உள்ள பதவியில் பலரிடையே ஒருவராகக் காணப்பட்ட பெண். அமைதியான, அலட்டிக்கொள்ளாத, எல்லோரிடமும் சிரித்த முகத்துடன் பேசும் பெண். இதைத்தான் பற்றற்ற வாழ்க்கை என்பார்களோ? இதைத் தான் பகவத் கீதை நிஷ்காம கர்மி என்று சொல்கிறதோ.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்