நான் கும்பகோணம் பாணாதுரை ஹைஸ்கூலில் படித்துக் கொண்டிருந்த போது தான் (1947-49) செல்லப்பாவின் சிறுகதைத் தொகுப்பு ஒன்று, மணல் வீடு என் கையில் அகப்பட்டது. செல்லப்பா என்ற பெயரும் எனக்கு அதற்கு முன் அறிமுகம் இல்லை. அதில் சிறுகதைகள் உண்டு படிக்க வேண்டும் என்றும் அதை நான் கையிலெடுக்கவில்லை. எதாக இருந்தாலும் சுவாரஸ்யமாக இருந்தால் படிக்கத் தொடங்கிவிடும் ஆர்வமும் சுபாவமும் ஐந்தாறு வருடங்களாகவே இருந்து வந்தது. அனேகமாக அது தான் நான் படிக்கும் முதல் சிறு கதைத் தொகுப்பாக இருக்க வேண்டும். அதில் எனக்கு இப்போது நினைவில் இருப்பது ஒரே ஒரு கதை தான். ஒரு தாசில்தார் அவருடைய மனைவி, பின் வீட்டுக்கு வந்து போகும் ஒரு பண்ணையார்.. தாசில்தார் தம்பதியருக்குக் குழந்தைப் பாக்கியம் இல்லை. ஏக்கத்தில் என்னென்னவோ வேண்டுதல்கள் பிராயச்சித்தங்கள் பலன் இருக்கவில்லை. இடையே ஒரு ஜோஸ்யர் எதிர்ப்படுகிறார். அவர் சொன்ன தோஷப் பரிகாரம், ”ஒரு ஏழை பிராமணனுக்குக் கோ தானம் ஒன்று செய்தால், தோஷம் நிவர்த்தியாகும், தானம் செய்த பலன் அந்த வருஷ முடிவிற்குள் தெரியும்” என்று சொல்கிறார். வீட்டுக்கு வரும் பண்ணையாரிடம் தாசில்தார் மனைவி தன் வழக்கமான புலம்பல்களுக்கிடையில் இதையும் சொல்லி தானம் செய்ய ஒரு பசுவுக்கு ஏற்பாடு செய்யச் சொல்கிறாள். பண்ணையாரும் ஒரு பசுமாட்டை ஒட்டிவந்து தாசில்தார் வீட்டில் கட்டி விடுகிறார். பின் என்ன? பசு தானம் ஏற்க ஒரு ஏழைப் பிராமணனுக்கும் ஏற்பாடு செய்து பசுவும் தானம் செய்யப்பட்டு விடுகிறது. தாசில்தாரும் அவர் மனைவியும் அந்த நல்ல செய்திக்காகக் காத்திருக்கிறார்கள். நாட்கள், மாதங்கள் கடந்து ஒரு நாள் பண்ணையார் ஒரு தட்டில் பட்டுப்புடவை வேஷ்டி, பழம் பாக்கு வெத்திலை சகிதம் தாசில்தாரையும் அவர் மனைவியையும் பார்த்து நமஸ்கரித்துச் சொல்கிறார். “ ”ஆசீர்வாதம் செய்யுங்கள். ரொம்ப காலம் கழித்து எனக்கு புத்திர பாக்கியம் கிடைத்துள்ளது ஆண்டவனோட அனுக்கிரஹம். இப்பவாவது அவனுக்கு கண் திறந்ததே”
இதை அடுத்து, எப்போது என்று நினைவில் இல்லை, அமுதசுரபி இதழில் தான் சி.சு.செல்லப்பாவின் இன்னொரு கதையும் படித்தேன். மார்கழி மாதம், இந்த நடுக்கும் குளிரில் தூங்க முடிவதில்லை. காலம் கார்த்தாலே விடியறதுக்கு முன்னாலேயே திருப்பாவை திருவெம்பாவை பாடும் கோஷ்டி ஒன்று தினம் காலைத் தூக்கத்தைக் கெடுக்கிறது. அவர்களுக்குக் குளிராதோ. தினம் ஒரு நாளைப் பார்த்தாற்போல இந்த மாதம் பூராவுமா இந்த அவஸ்தை என்று அலுத்துப் போய் ஒரு நாள் போர்வையை போர்த்திக்கொண்டே படுக்கையை விட்டெழுந்து வாசல் கதவைத் திறந்து பார்த்தால் பஜனை சத்தம் என்னவோ கேட்கறது. பஜனைக் கோஷ்டியைத் தான் காணோம். தெருவின் ஒரு முனையிலிருந்து, மறு முனை வரை எல்லாம் பார்த்துவிட்டு கடைசியில் பார்த்தால் கோயிலுள்ளிருந்து தான் பஜனை வருகிறது. இன்னும் நெருங்கிப் பார்த்தால் உள்ளே கோஷ்டியாவது மண்ணாவது. கிராமஃபோன் ரெகார்டு தான் ஓடிக்கொண்டு இருந்தது. . அதுக்கு ஒரு ஆள். ஒரு போர்வையை முக்காடிட்டு போர்த்திக்கொண்டு. பக்கத்தில் பஜனை பண்ணிய புண்யத்துக்கு புண்யமும் ஆச்சு. தூக்கமும் கெடாமல் பார்த்துக் கொண்டாயிற்று.
இது இரண்டு கதைகளையுமே நினைவிலிருந்துதான் எழுதுகிறேன். கதைகள் சொல்லும் செய்தியில், சாரத்தில் ஒன்றும் தவறில்லை. கதை விவரங்களில் ஏதும் தவறிருக்கலாம். பண்ணையாருக்குப் பதில் கணக்குப் பிள்ளையாக இருக்கலாம். இப்படி. பழம் நம்பிக்கைகள் இப்போது நிகழ்காலத்தில் பெறும் புதிய அவதாரங்களைக் கிண்டல் செய்யும் மனம். நினைவிலிருப்பதைக் கொண்டு சொல்கிறேன். செல்லப்பா அப்போது எழுதிய கதைகள் அனைத்தும் இதே மாதிரிச் செய்தியைக் கொண்டவையா எனத் தெரியாது. பின்னர் எனக்குப் படிக்கக் கிடைத்த அவர் எழுத்துக்களும், கதைகள் மாத்திரமல்ல, தீவிரமாக முனைந்து செய்த அவரது செயல்களும் பழம் மதிப்புகளை அவற்றின் சாரத்தில் நம்பிக்கை கொண்டு தன் வாழ்க்கையையும் எழுத்தையும் தீர்மானித்துக் கொண்டவையாகவே இருந்துள்ளன.
இதற்கெல்லாம் வெகு காலம் பிறகு தான் தில்லியில் 1957-ல் கரோல் பாகில் என் சாப்பாட்டு ஹோட்டலுக்குப் பக்கத்துச் சந்தில் காலியாக இருந்த கார் ஸ்டாண்ட் ரீடிங் ரூமாக மாற்றப் பட்டிருந்தது. அங்கு தான் முதலில் சுதேசமித்திரன் தீபாவளி மலரிலும் பின்னர் அதைத் தொடர்ந்து வந்த சுதேசமித்திரன் வார இதழ்களிலும் நடந்த சர்ச்சை பிரபலமானது. சரித்திரப் பிரசித்தி பெற்றது. தமிழில் நாவலும் சிறுகதையும் வளர்ந்துள்ளதா, தேக்கம் அடைந்து விட்டதா? என்று முறையே க.நா.சுப்பிர மணியமும் சி.சு. செல்லப்பாவும் ஒரு சர்ச்சையைக் கிளப்பி வம்பு வளர்ந்து அதைத் தொடர சுதேசமித்திரனில் இடமில்லாமல் போய் செல்லப்பாவே எழுத்து பத்திரிகையைத் தொடங்கியதும். சுதேசமித்திரனில் லா.ச.ராமாமிருதத்தின் இதழ்கள் என்ற ஒரு கதையைப் பற்றி மூன்று நான்கு வாரம், “ஒரு நல்ல சிறுகதை எப்படி இருக்கும்? என்று முன்னர் நடந்த சர்ச்சையில் தன்னைச் சீண்டியவர்களுக்கு பதில் சொல்லுமுகமாக எழுதியிருந்தார் செல்லப்பா.
சீண்டியது இரண்டு பேரையும் தான். ”சும்மா இன்னார் இன்னார் தான் நாவலில் சிறுகதையில் வெற்றி பெற்றவர் என்று சும்மா சொல்லிட்டால் போதுமா? இவர்களைப் படிப்பவர்கள் யார்? எங்களைப் படிப்பவர்கள் லக்ஷக்கணக்கில் இருப்பது தெரியவில்லையா? நீங்கள் பட்டியல் இடுபவர்களைப் படிப்பவர்கள் யார்? தம் எழுத்தில் தோல்வியடைந்தவர்கள் எல்லாம் மற்றவர்களைக் குறை சொல்ல விமர்சனம் செய்யக் கிளம்பி விடுகிறார்கள்” என்ற ரீதியில் அவர்கள் கண்டனங்கள் இருந்தன. இதற்கு பதில் சொல்லத்தான், ஒரு தரமான சிறு கதை என்பது எப்படி இருக்கும் என்று அதன் தரமான அம்சங்கள் இவை என்று விரிவாக எடுத்துச் சொல்ல, லா.ச.ராமாமிருதத்தின் இதழ்கள் என்ற ஒரு கதையை எடுத்துக்கொண்டு மிக விரிவாக, தான் ரசித்ததையெல்லாம், அதில் பார்த்த அழகு அம்சங்களை யெல்லாம் அனேகமாக வரிக்கு வரி அலசி மூன்று நான்கு இதழ்களுக்கு ஒவ்வொரு இதழிலும் நான்கு ஐந்து பக்கங்களோ என்னவோ ஒரு நீண்ட கட்டுரையில் தன் ரசனையை விரித்து எழுதியிருந்தார். இது வெற்று பெயர் உதிர்ப்பல்ல, இதன் பின் மற்றவர்கள், குறை சொல்பவர்கள் காணாத, தான் கண்ட ஒரு ரசனை உண்டு என்று விளக்கி முன் வைத்திருந்தது முதன் முறை என்று தான் நான் நினைக்கிறேன்.
இம்மாதிரியான ஒரு ரசனைப் பதிவு தமிழில் முன்னர் எப்பவும் இருந்ததில்லை என்று தான் நான் நினைக்கிறேன். இப்போது மாத்திரம் இல்லை. சமீபத்திய பழங்காலம், பழம் பழங்காலம் எதிலிருந்தும் சரி, வாஸ்தவம், இடைக்காலத்தில் உரையாசிரியர்களும் வைணவ ஆச்சாரியார்களும் எழுதியிருக்கிறார்கள் மிக விரிவாக. அவை பொருள் சார்ந்தவை, இலக்கணம் சார்ந்தவை. அல்லது பக்தி சார்ந்தவை. அல்லது வழி வழியாக வந்தவற்றை ஏற்றுக்கொண்டவை. அவற்றைக் கேள்வி எழுப்பாதவை. இது மதம் சார்ந்த, வழிபாடு சார்ந்த, பழம் இலக்கியம் சார்ந்தவை.
உடன் நிகழ்கால எழுத்து பற்றியவை அல்ல. மரபார்ந்த பார்வை எழுதப்பட்டது, தரப்பட்டது, எதையும் ஏற்றுக்கொள்ளும் கலாசாரத்தில், உடன் நிகழ்காலத்தைவையும் அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டன. தரம் சார்ந்து, கவித்வம் சார்ந்து எதுவும் கண்டனம் செய்யப்படவில்லை. சில நிகழ்வுகளைப் பார்க்கலாம். 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. ஆறுமுகநாவலர் வள்ளலாரை நிராகரித்தது வள்ளலாரின் கவித்வத்தைக் கேள்வி எழுப்பி அல்ல. அன்றைய தமிழ் உலகம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடமும் தியாகராஜ செட்டியாரிடமும் பக்தி கொண்டு போற்றியது அவரகளது கவித்வத்திற்காக அல்ல. தமிழ்ப் பாண்டித்யத்திற்காக. அவர்கள் எவரது கவித்வத்தைப் பற்றியும், உ.வே.சா எங்கும் பேசியதில்லை. தம் குருவைப் பற்றி இப்படியெல்லாம் நினைப்பது பாபம், அபசாரம் என்றே நினைத்திருப்பார். மேலும் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர் காலத்தில் கம்பனுக்கு ஈடாகப் போற்றப்பட்டவர். சைவ மடங்களில் அவருக்கு இருந்த மதிப்பு அளவற்றது. இருப்பினும் அன்று போகட்டும், ஒரு கவிஞன் அவன் காலத்தில் போற்றப்பட்டதில்லை என்பார்களே. இரண்டு நூற்றாண்டு கழிந்து இன்று யாராவது அவரது கவித்வத்தைப் பற்றி மூச்சு விடுகிறார்களா?
எல்லாவற்றிற்கும் மேலாக, இப்புனைகதை எழுத்துக்கள் பொழுது போக்கிற்காக, வாசகர் கவனத்தை ஈர்க்க, அவர் மனம் குதூகலிக்க எழுதப்படுபவையே அல்லாது பிரபந்தங்கள், காவியங்கள், சங்க இலக்கியங்கள் வகையில் இன்று எழுதப் படுபவை என்ற எண்ணம் அன்றைய சூழலில் இருக்கவில்லை. என்றுமே இருந்ததில்லை என்றும்தான் தோன்றுகிறது. அன்றைய தினம் இலக்கியத் தரமான புத்தகங்களை, எழுத்தாளர்களை வெளியிட்டு வந்த கலைமகள் பத்திரிகையே தன் பிரசுரங்களின் வகைப்படுத்தலை, இலக்கியம், நாவல், சிறுகதை என்றுதான் பட்டியலிட்டு வந்தது. இலக்கியம் என்ற வகையில் அது புறநானூறு, குறுந்தொகை வகையறா சொற்பொழிவுகளை, பண்டித விளக்கங்களை வகைப்படுத்தியது. இன்று அதன் பட்டியல்கள் வகைப்படுத்தல்கள் மாறியிருக்கின்றனவா என்பது தெரியாது. கி.வா.ஜவின் தமிழ் பாண்டித்யத்தைப் பற்றியோ அவரது ஆசுகவித் திறனைப் பற்றியோ ஏதும் பேச்சில்லை. ஆசுகவியாக அவர் பாடியவை எல்லாம் புரவலர்களையும் பக்தர்களையும் மெய்சிலிர்க்க வைத்திருக்கலாம்தான். ஆனால் அவை கவிதைகளா அல்லவா என்று யாரும் யோசித்ததில்லை. ஏனெனில் அப்படியான சிந்தனைகளே நம் மனதில் உதித்த தில்லை.
இதழ்கள் என்ற தலைப்பில் லா.ச.ரா. நிறைய கதைகள் எழுதி ஒரு தொகுப்பே வெளியிட்டிருக்கிறார். செல்லப்பா தன் சிறுகதை ரசனையை விரித்து எழுதியபோது இதழ் கதைகளில் ஒன்று அவருக்கு ஒரு நல்ல உதாரணமாகப்பட்டிருக்கிறது. உண்மையில் அவர் எழுதிய அளவுக்கு சுதேசமித்திரன் பத்திரிகையில் வெளியிட இடமிருக்கவில்லை என்றும், அது கண்டு ஏமாற்ற முற்று, இனி தன் தேவைக்கும் விருப்பத்திற்கும் எழுதவும், விமர்சனத்துக்கு என்றும் தனக்கென ஒரு பத்திரிகை தேவை என்று (தன் மனைவியின் நகையை அடகு வைத்துக் கிடைத்த பணத்தில்தான் என்றும் சொல்லப்பட்டது) எழுத்து (ஜனவரி 1959) பத்திரிகை தொடங்கப்பட்டது. இது ஏதோ ஒரு வியாபாரத்துக்கோ, பிழைப்புக்கு வழி தேடவோ போட்ட முதல் அல்ல. ஆரம்ப காலங்களில் க.நா.சு. விமர்சனத்தின் தேவை பற்றிச் சொல்லிக் கொண்டிருந்த போது அதில் நம்பிக்கை கொள்ளாத செல்லப்பாவைத்தான், பின்னர் விமர்சனமே அவர் சிந்தனை, செயல் அனைத்தையும் பிடிவாதமாகப் பற்றிக்கொண்டது அதன் முதன் விளைவு எழுத்து.
எழுத்து பத்திரிகையை நான் முதலில் பார்த்தது தில்லியில் நான் முன்னர் சொன்ன ஒரு வீட்டின் காலி காரேஜில் நடத்தப்பட்ட வாசக அறையில். அந்த வீட்டின் சொந்தக்காரர். செல்லப்பாவின் ஊர் நண்பர் என்ற காரணத்தால் அவருக்கும் இலவசமாக ஒரு எழுத்து இதழ் செல்லப்பாவிடமிருந்து கிடைத்தது. அதன் முதல் இதழே க.நா.சு. செல்லப்பா, ந.சிதம்பர சுப்பிரமணியம், சிட்டி ந.பிச்சமூர்த்தி, எம்.வி. வெங்கட்ராம் என ஒரு பழைய மணிக்கொடி எழுத்தாளர்/ நண்பர்கள் கூட்டமே காட்சி தந்தது. ஒரு ஆறுமாத காலம் பழைய மணிக்கொடிக்காரர்களின் ஒத்துழைப்பு தந்த சலசலப்போடு சில புதியவர்களும் அதில் சேர்ந்தனர்.
தமிழ் இலக்கியத்தில் முதன் முறையாக, உடன் நிகழ்கால இலக்கியத்தைப் பற்றியே முழுதுமாக தன் பக்கங்கள் அனைத்திலும் ஒரு தீவிர விமர்சனப் பார்வை பார்க்கும் ஒரு பத்திரிகை கண்முன் விரிந்து கிடந்தது. இப்படி ஒரு முயற்சி தமிழ் எழுத்தில் நடந்ததில்லை. என்னால் அந்தப் பத்திரிகையில் வெளிவந்த எல்லா எழுத்துக்கள் பற்றியும் நினைவில் கொண்டு எழுத முடியாது. அறுபது வருடங்களுக்கும் மேல் பழமையான விஷயம். சிறு கதையின் உருவம் பற்றியும் அது சொல்ல வந்த பொருள் பற்றியும் அதன் தோற்ற காலத்திலிருந்து தமிழுக்கு வந்துள்ள அதன் சிறப்பான படைப்புகள் பற்றியும், சி.சு. செல்லப்பா இதழ்கள் பற்றி எழுதிய விரிவில் அல்லாது க.நா.சுவுக்கே, உரிய விரலை நீட்டி எட்டியுள்ள பொருளைச் சுட்டிக்காட்டுவது போல, தமிழுக்கு சிறுகதை வளம் சேர்த்தவர்கள் என்று தாம் கருதுபவர்களின் கதைப்பொருளின் சிறப்பையும் அது பெற்றுள்ள உருவ அமைதியையும் பற்றி க.நா.சு. தன் சுபாவத்தையும் மீறி விரிவாக எழுதியிருந்தார். சுமார் எட்டுப் பேர் என்று நினைவு. புதுமைப் பித்தனிலிருந்து தொடங்கி தி.ஜானகிராமன் கு. அழகரிசாமி வரை. அத்தோடு, குறிப்பிட்டுச் சொல்லவேண்டும், “நான் எட்டுப் பேரைச் சொல்கிறேன். ஆனால் காலம் இதிலும் ஒரு சிலரை உதறிவிடக்கூடும்”. என்றும் சொல்லியிருந்தார். புதுமைப் பித்தனுக்கு அனேக கதைகளில் கதையின் உருவ அமைதி கிட்டியதில்லை. தன் எல்லாக் கதைகளிலும் உருவம் வெற்றிகரமாக அமைந்தது என கு.ப. ராஜகோபாலனைத் தான் சொல்லவேண்டும். என்றெல்லாம் எழுதியிருந்தார். இந்த வெற்றி பெற்றோரில் தன்னையும் அவர் சேர்த்துக்கொள்ளவில்லை. காலதேவன் உதறிவிடக்கூடும் என்று தான் கணித்த பட்டியலில் கூட அவர் தன்னைச் சேர்த்துக் கொள்ளவில்லை. எழுத்து ஆசிரியர் சி.சு.செல்லப்பா மிகப் பெரிய சாதனையாளராகக் கணிக்கும் பி.எஸ் ராமையாவையும் அவர் சிறுகதை சாதனையாளராகச் சேர்க்கவில்லை. இந்த மாதிரி ஒரு பத்திரிகை வருவதும் அதில் இம்மாதிரியான மதிப்பீடுகளும் முதல் தடவையாக தமிழில் நிகழ்பவை. இதற்கு முந்திய மணிக்கொடி, தேனீ, இன்னமும் சுதேசமித்திரன் போன்ற முதன்முறையாக மேடை ஏற்படுத்திக்கொடுத்த பத்திரிகைகளையும் சேர்த்துத் தான் சொல்கிறேன். என் கருத்தில் எழுத்து தான் முதல் குரல் நவீன தமிழ் இலக்கியத்தில். உடன் நிகழ் காலத்தில்.
இன்னம் விசேஷமாக, செல்லப்பா, க.நா.சுவின் நாவல் 'பொய்த்தேவு' பற்றியும் தன் பாணியில் ஒரு நீண்ட பார்வையை எழுதியிருந்தார். ந. பிச்சமூர்த்தியின் ”பெட்டிக்கடை நாரணன்” என்ற கவிதை எப்போதோ நாற்பதுகளில் வெளியாகி மறக்கப்பட்ட கவிதை திரும்ப பிரசுரமானது. நாற்பதுகளில் எந்த விளைவையும் ஏற்படுத்தாத அந்தக் கவிதை எழுத்து பத்திரிகையில் (1959) – ல் பிரசுரமானதும் உடனே அடுத்த எழுத்து இதழ்களில் பசுவய்யா, தி.சோ வேணுகோபாலன், க.நா.சு. (அவரது மிகச் சிறந்த கவிதையான தரிசனம்) என ஏதோ இதற்காகவே காத்துக் கொண்டிருந்தது போல ஒரு கவிஞர் கூட்டமே பிச்சமூர்த்தியின் கவிதை தந்த ஆதர்சத்தில் கவிதைகள் எழுத ஆரம்பித்தனர். ஏதோ இது மாதிரி ஒரு சமிக்ஞை எப்போதடா வரும் என்று காத்திருந்தது போல. இதில் ஒவ்வொருவரின் கவிதையும் இதுகாறும் எழுதப்படாத பொருளில், எழுதப்படாத கவிதை வடிவில் எழுதினர். ஒருவரது கவிதை போல இன்னொருவரது இல்லை. க.நா.சு.வின் தரிசனம் கவிதைக்கும், பசுவய்யாவின் உன் கை நகத்துக்கும் ஏதும் ஒற்றுமையோ சம்பந்தமோ இருக்கவில்லை. அது போலத் தான் தி.சோ வேணுகோபாலனதும்.
கு.ப.ராஜகோபாலன் கதைகளைப் பற்றி செல்லப்பாவா, இல்லை சிட்டியா? யார் என்று நினைவில் இல்லை. ஒரு மதிப்பீடு வந்திருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு புதிய அம்சமாக நான் சொல்ல வேண்டும். தி.ஜானகிராமன் எழுதிய சங்கீத விமர்சனக் குறிப்புகள். எனக்கு இதை எழுதும்போதே ஒரு சிறிய சந்தேகம், தி.ஜானகிராமன் எழுதியது எழுத்து பத்திரிகையிலா இல்லை க.நா.சு.வின் இலக்கியவட்டத்திலா? என்று. இருப்பினும் வாய் திறந்து எது பற்றியும் கடுமையான வார்த்தைகளைச் சொல்ல விரும்பாத சுபாவம் கொண்ட தி.ஜானகிராமனே, அன்று சங்கீத உலகில் தன்னைப் புரட்சியாளனாக புதுமைக் கலைஞனாகக் கருதிக்கொண்டிருந்த வீணை எஸ் பாலசந்தரைப் பற்றி எழுதியிருந்தார். “இதோ பார் வீணையில் என்னென்ன வெல்லாம் என்னால் செய்ய முடியும் பார்.” என்று வெற்றிப் புன்னகை புரிந்து கொண்டு மரக்கடையில் ரம்பம் அறுக்கும் நாராசத்தையே நான் வீணையில் கொண்டு வர முடிகிறதே பார்” என்று மார்தட்டிக் கொள்ளும் வித்வானகள்” என்று எழுதியது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது. இந்த மாதிரியான அபிப்ராயங்கள் சங்கீத உலகில் பரிமாறிக்கொள்ளப்பட்டதில்லை. அதிலும் எஸ் பாலசந்தர் போன்ற முதல் வரிசை வித்வானகள் பற்றி.
இது அக்காலத்தில் எனக்கு ஒரு புதிய பூகம்ப அதிர்ச்சியா, இல்லை என்றும் காணாத ஒரு சூறாவளியா எனத் திகைக்கத் தோன்றியது. எங்கோ நாலு பேர் படிக்க எழுதிக்கொணடிருந்தவர்கள் தமிழ் உலகம் அறியாதவர்கள். சாதனையாளர்களாக முன்னிறுத்தப்பட்டு, பெரும் ஜாம்பவானகளாக பவனி வந்த கல்கி, மாயாவி, ஆர்வி, அகிலன், ஜெகசிற்பியன் லக்ஷ்மி, மு.;வ. கி.வா.ஜ என்று அத்தனை பேரும் தூக்கிக் கடாசி எறியப்பட்ட ஒரு நிகழ்வு சாதாரணமானதல்ல. ஆனால் அவர்களுக்கு அப்போது ஏதும் பாதிப்பு இல்லை தான்.
எழுத்து தொடங்கிய போது பல லட்சங்கள் என வாசகர்களைக் கொண்டிருந்த பத்திரிகைகளுக்கு எதிரான ஒரு குரல், “எழுத்து 2000 பிரதிகளுக்கு மேல் அச்சிடப்படமாட்டாது” என்று பிரகடனப் படுத்திக்கொண்டு வந்த முதல் இதழே 700 பேருக்கு மேல் சென்றடையவில்லை. 104 இதழ்களோ என்னவோ வந்த எழுத்துவின் கடைசி இதழ் 120 பேருக்கு மேல் சென்றடையவில்லை. ஆனால் அதற்குள் அது ஒரு விமர்சன மரபை தமிழ் மண்ணில் ஸ்தாபித்து விட்டது. தமிழ்க் கவிதையிலும் ஒரு புதிய மரபை ஸ்தாபித்தது. சிறு பத்திரிகை என்ற மரபையும் ஸ்தாபித்தது. இதையெல்லாம் கேட்க ஆச்சரியமாக இருக்கும். எழுத்து ஆரம்பித்த காலத்தில் இதையெல்லாம் அது சாதிக்கும் என்று யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
செல்லப்பா விமர்சகனாக அவதாரம் எடுத்ததே க.நா.சு விமர்சனத்தின் தேவையைச் சொல்லிச் சொல்லி அவரைக் குளவியாகக் கொட்டிக்கொண்டே இருந்த காரணத்தால்தான். செல்லப்பா எழுத்தின் முதல் இதழிலேயே க.நா.சுவையும் சேர்த்து தன் பழைய மணிக்கொடி சகாக்களைத் தான் நம்பி இருந்தார். ஒரு ஆறு மாத காலம்தான் அந்த உறவு நீடித்தது. க.நா.சு வே பின்னர் ஒரு ஆறு மாத காலம்தான் எழுத்து உருவாக்கிய சலசலப்பு நீடித்தது. அதற்கு மேல் அது உயிர்ப்புடன் இல்லை என்றோ என்னவோ எழுதினார். அந்த சலசலப்பு அவரும் மணிக்கொடி சகாக்களும் எழுத்துவில் எழுதிய ஆறுமாத காலம் என்பது புரிந்து கொள்ள வேண்டியது. ஆனால் வெகு ஆண்டுகள் பின்னர் எழுத்து பற்றி அவர எழுதியது, ”இந்த பண்டிதர்கள் எல்லாம் எழுத்து போன்ற ஒரு பத்திரிகை நடத்தினால் தான் அவர்கள் தமிழுக்குச் செய்த பாபங்களிலிருந்து அவர்களுக்கு விமோசனம் கிடைக்கும்,” என்று. இதை அவர் எழுதிய காலம் இருவரும் ஒருவருக்கொருவர் கசப்பு முற்றியிருந்த காலம். இன்னொரு இடத்திலும் க.நா.சு. சொல்லியிருக்கிறார். ”எந்த புத்தகம் பற்றியும் எது பற்றியும் சி.சு.செல்லப்பா என்ன சொல்லியிருக்கிறார் அவரது அபிப்ராயம் என்ன? என்று நான் படிக்க விரும்புவேன் அவரிடமிருந்து ஒரு புதிய பார்வை எது பற்றியும் கிடைக்கும்” என்று. எவ்வளவு கசப்பு இருவருக்கிடையே இருந்த போதிலும், ஒருவரை ஒருவர் மதித்தே வந்துள்ளனர் தனிப்பட்ட முறையிலும், கருத்து ரீதியிலும் என்பது தெளிவு. இது தொடர்ந்து வந்துள்ளது.
ஆனாலும் கசப்பு ஏன் என்பது புரிந்ததில்லை. அது துரதிர்ஷ்டவசமானது. எழுத்து பத்திரிகையின் மிகப் பெரிய சாதனை என்று புதுக்கவிதை என்ற முயற்சிக்கு எழுத்துவில் இடம் கொடுத்து, தமிழ்க்கவிதைக்குக் கொடுத்த ஊட்டமும் உற்சாகமும் தான். ஒவ்வொரு கால கட்டத்திலும் கவித்வம் அதன் புதிய பாடு பொருளைக் கண்டுகொண்டு, அதற்கேற்ற புதிய வடிவங்களையும் சிருஷ்டித்துக் கொள்ள வேண்டும். அப்படித் தான் தமிழ்க் கவிதை வரலாற்றில் வளர்ந்து பிரவாஹித்துள்ளது. தெள்ளத் தெளிவாகத் தெரியும் இந்த உண்மையைப் பண்டிதர்கள் ஏன் காண மறுத்தார்கள் என்பது தெரியவில்லை. ந. பிச்ச மூர்த்தியின் பெட்டிக்கடை நாரணன் அது முதலில் வெளிவந்த 40 களில் கண்டிராத உத்வேகத்தை மறுபிரசுரம் பெற்ற அறுபதுகளில் தானாகவே தேடிக்கொண்டது. அதை பிச்சமூர்த்தி உணர முடிந்திருக்கிறது. பண்டித உலகமும் பண்டித மனங்களும் காணாத கவித்வத்தை பாண்டித்யமற்ற வைதீஸ்வரனும், பசுவய்யாவும் காண முடிந்திருக்கிறது. தமிழ்க் கவிதை உலக பரிச்சயம் கொண்ட சி.மணியும் புதிய உலகங்களில் சஞ்சரிக்க முடிந்திருக்கிறது.
இதைக் கேலி செய்த முற்போக்கு முகாம்களும் தமிழ்ப் பண்டித உலகமும் அன்று பலம் கொண்ட அதிகார பீடங்களாக கோலோச்சிய போதிலும் இன்று அவர்கள் போன இடம் தெரியவில்லை. அவர்கள் மாத்திரமல்ல, சி.சு. செல்லப்பாவின் மணிக்கொடிக் கால சினேகிதரான சிட்டி கூட கேலி செய்தார். செல்லப்பா தனக்கு வழிகாட்டியாகக் கொண்டாடிய பி.எஸ் ராமையா கேலி செய்தார். இருப்பினும் செல்லப்பாவின் துணை நின்று பலம் அளித்தது அவரது நம்பிக்கையும் பிடிவாதமும். ஆறு மாத காலம் அவருடன் துணை நின்ற மணிக்கொடி அன்பர்கள் எல்லாம் ஒதுங்கிவிட்ட பிறகு செல்லப்பா தனித்துவிடப்பட்ட போதிலும் அவருக்கு நம்பிக்கையும் மன உறுதியும் தந்தது, சிவராமூ, ந.முத்துசாமி, கி.அ.சச்சிதானந்தம், நகுலன், பசுவய்யா, திசோ. வேணுகோபாலன், எஸ் வைதீஸ்வரன், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு நீண்ட அணிவகுப்பே திருவல்லிக்கேணி 19-A பிள்ளையார் கோயில் தெரு, கதவைத் திறந்து உள்ளே நுழைந்தது. அத்தோடு, தமிழ்ப் பண்டிதர் உலகிலிருந்தும் சி. கனகசபாபதி, தொடர்ந்து புதுக்கவிதையின் தோற்றத்தையும் அதன் வளர்ச்சியையும் பற்றி, சங்கப் பாடல்களின் பின்னணியில் விரிவாக எழுதத் தொடங்கினார். அவர் காரணமாக மதுரை பல்கலைக் கழகத்தில் புதுக் கவிதைக்கு தமிழ்ப் புலவர் உலக அங்கீகாரமும் கிடைத்தது.
ஒரு வேடிக்கையான திருப்பம், தமிழ் முற்போக்குகள் உலகம் நவீன சிறுகதை, நாவல் படைப்பாளிகளையும், கவிஞராக உலாவரும் புலவர்களையும் கொண்டதாக இருந்த போதிலும், வெகுஜன கவர்ச்சி எழுத்துக்களை அவர்கள் பாணியில் அவர்கள் எதிர்ப்பவர்களாகக் காட்டிக்கொண்ட போதிலும், அவர்களது குருநாதர்களான சிதம்பர ரகுநாதனும், நா. வானமாமலை என்னும் சித்தாந்தபுருஷரும் புதுக்கவிதைக்கு திவிர பகைமை பாராட்டி பிரசாரம் செய்த போதிலும், அவர்கள் முகாமிலிருந்தே ஒரு பெரும் கூட்டம் வானம்பாடி என்னும் பெயரில் கவிதைக்கே என ஒரு இதழும், இயக்கமும் தொடங்கி அவர்கள் பாணி கவிதைப் பிரசாரம் செய்யத் தொடங்கினர். அது மரபு சார்ந்தும் இருக்கவில்லை. புதுக்கவிதை சார்ந்தும் இருக்கவில்லை. கவிதை சார்ந்தும் இருக்கவில்லை. அவர்கள் தொடும் எதுவும் பெயர் ஒன்றைத் தாங்கி இருக்குமே அல்லாது அப்பெயருக்கேற்ற பொருளோ உயிர்ப்போ கொண்டிராது என்பது அவர்களது எல்லா முயற்சிகளிலும் தெளிவாகிய ஒன்று. இன்னமும் வேடிக்கை, அவர்கள் தம் கட்சிக்கென ஒரு இலக்கிய பத்திரிகை தாமரை எனத் தொடங்கி வானம்பாடிகள் செய்த காரியத்தையே செய்தனர். வானம்பாடிகளுக்கும் தாமரை கூடாரத்தில் இடம் இருந்தது. கடைசி விளைவு அவர்களிடம் கவிதை வளம் இராவிட்டாலும், புதுக்கவிதை அவர்களை அண்டாவிட்டாலும், பண்டித உலகத்துக்கு எதிர்க்குரலாகவே அவர்கள் இருந்தது, செல்லப்பாவுக்கு அது உதவியாக இருந்தது.
இவையெல்லாம் அன்றைய ஒரு மைனாரிட்டி இலக்கிய வட்டத்தின் சூழலை குணம் மாற்றி அமைத்தது. இம் மாற்றங்களையெல்லாம் அன்று செல்லப்பாவுக்கு எதிர்முனையில் நின்றிருந்து சத்தமிட்டவர்களும், உடன் இருந்து கேலி செய்தவர்களும் உணர்ந்திருக்கவில்லை. செல்லப்பாவின் பிடிவாதம் தன்னைக் கேலி செய்தவர்களையும் கண்டு கொள்ளவில்லை. கூச்சலிட்டு வாயடைக்க முயன்றவர்களையும் கண்டு கொள்ளவில்லை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.