தேவமுகுந்தன் யாழ்ப்பாணத்தின் ஒரு கிராமத்தில் 1972 –ல் பிறந்தவர் வயது 40. இப்போது கொழும்புவில் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் ஒரு விரிவுரையாளராகப் பணியாற்றுகிறவர். கொழும்புவிலும் மலேசியாவிலும் மேற்படிப்பைப் பெற்றவர். சற்றுக்காலம் கல்வி அதிகாரியாகவும் கொழும்புவில் பணியாற்றியவர். ஆக தன் சிறுவயதுப் பிராயம் தவிர, பின்னர், அவரது வாழ்க்கை பெரும்பாலும் சிங்களவர்களிடையே ஒரு தமிழராகத் தான் கடந்து வந்துள்ளது. இப்போதும். இலங்கை பிரிட்டீஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற 1949 லிருந்து தமிழரை அன்னியராக பாவிப்பது வெளிப்படையாக, அரசுக் கொள்கையாக வரித்துக்கொண்டது கடந்த முப்பது வருடங்களாக தொடர்ந்த உள்நாட்டுப் போராக வெடித்து மூன்று வருடங்களுக்கு முன் அது அரசின் சிங்கள வெற்றியாக, தமிழரின் இன அடையாளமும் ஈழ அடையாளங்களும் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வரும் கட்டத்தில் கொழும்புவில் சிங்களவரிடையே வாழும் தமிழரின், மொழி, இன உணர்வுகள் எத்தகைய வாழ்வு பெறும், எழுத்தில் வடிவம் பெறும்? அது இதுகாறும் நமக்குத் தெரியவராத ஒரு புதிய குரலாகத் தான் இருக்கும்.
கொழும்புவிலிருந்து அங்கு வாழ நேரிடும் தமிழ்க் குரலை நாம் கேட்டதில்லை. பெரும்பாலும் நமக்குப் பழக்கமானது கனன்று கொதிநிலையிலேயே இருந்த ஈழத்தில் வாழும் தமிழரின் கலகக் குரலைத் தான் கேட்டிருக்கிறோம். கலகக் குரல் ஒற்றைக் குரலாக எங்கும் எதிர் ஒலிக்க நிர்ப்பந்திக்கப் பட்டதையே நாம் ஈழக் குரலாகக் கேட்டும் பழக்கப் பட்டிருக்கிறோம். நிர்ப்பந்திக்கப்பட்டு மௌனமானதை நாம் கேட்டதில்லை. அப்படியும் சில நசுக்கப்பட்ட குரல்களும் நம் காதுகளுக்கெட்டியதுண்டு.
புங்குடுதீவு என்னும் யாழ்ப்பாணத் தீவுக்கூட்டத்தில் ஒரு தீவில் வாழ்ந்த மு தளையசிங்கத்தின் சிந்தனையில் ஈழம் ஒரு உருவகப் படிமமாக, தனிவீடு என்ற தலைப்பில் 1962-ல் எழுதப்பட்டு 1980களில் வெளியானது. ஈழம் தந்த எழுத்தாளர் சிந்தனையாளரிலேயே வித்தியாசமான மனிதர். அவர் இறந்தபிறகு தான் அது வெளியானது. தனித்த சுதந்திரக் குரலை விரும்பாத மார்க்ஸிஸம் பேசிய ஈழப் பெருந்தகைகளாலேயே அக்குரல் ஒடுக்கப் பட்டது. சிவரமணி என்று ஒரு கவிக்குரல், தனது 23- வயதில் ஓய்ந்தது. கொலையா தற்கொலையா தெரியாது. இன்னுமொரு குரல் விடுதலைப் போராளிகள் கூட்ட மொன்றிலிருந்து வெளிவந்தது. புதியதொரு உலகம் என்ற ஒரு கற்பனைப் போர்வையில் மறைத்த வரலாறு ஒன்றை எழுதியவரும் ‘கோவிந்தன்’ என்ற புனைபெயரில் மறைந்திருந்த போராளி. இருந்தும் என்ன? புத்தகமே அவர் கொல்லப்பட்ட செய்தியை முன்னுரையில் தாங்கித் தான் வெளிவந்தது. ஒரு கால கட்டத்தில், வட கொரியாவிலிருந்து வந்த கம்யூனிஸ சதிக்கு இலங்கை இரையாகும் கட்டத்தில் மார்க்ஸிஸ பெருந்தகை ஒருவர் “நான் ஒன்றும் கம்யூனிஸ்ட் இல்லைங்க. நான் மார்க்ஸிஸம் பற்றி சும்மா பாடம் சொல்லிக் கொடுப்பவன் தான். மற்றபடி அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து தப்பித்துக்கொண்டார் என்று சொல்லப் பட்டது.
எப்போதும் ஒன்றையேவா சொல்லிக்கொண்டிருப்பார்கள்? சமயத்துக்கேற்ப குரல் மாறுவது தானே ஒரு போராளியின் யுத்த தந்திரம்? தப்பித்து உயிர் வாழ்ந்தால் தானே ஐயா பாட்டாளிகள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இயலும்? சும்மா வீராப்பு பேசி உயிர் போனால் பாட்டாளிகள் போராட்டத்தைக் கைவிட்டு துரோகம் இழைத்ததாகாதா? இது போன்ற குரல் மாறாட்டங்களும் ஈழ வாழ்க்கையில் நிகழ்ந்த காட்சிகள். அதிகம் பேசப்படாதவை. அதற்கான நியாயங்கள் கைவசம் என்றுமே தயாராக இருப்பவைதான்.
அப்படி உயிர்/சிறை தப்பித்துத் தான் ஈழத் தமிழ் இலக்கியத்தையே பாட்டாளிகளின் வர்க்கக் குரலாக வழிநடத்த முடிந்திருக்கிறது. இது ஒரு கால கட்டம். ஆனாலும் இந்த சீருடை அணிந்து அணிவகுப்பில் சேர மறுத்த ஒருசிலரும் உண்டு. அவர்கள் எஸ் பொன்னுத்துரை, மு தளைய சிங்கம் போன்ற ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அவ்வளவாக வெளித்தெரியாது போனவர்கள். உதாரணமாக ரஞ்சகுமார் என்னும் பெயரை எத்தனை பேருக்குத் தெரியும். குந்தவை என்ற பெண் எழுத்தாளரை எத்தனை பேர் அறிவார்கள்? பெருந்தகை அருள்பாளித்து வளர்த்த மடத்தின் குட்டித் தம்பிரான்களை, அவர்கள் குரல் தணிந்துவிட்டாலும் தமிழ் கூறு நல்லுகம் இங்கும் இலங்கையிலும் புலம்பெயர்ந்தோரிடத்திலும் அறியும். “அவர் தானே எங்களைப் பற்றி எழுதினார். வேறே யார் எழுதினாங்க?” என்பது கைவசம் உள்ள நியாயங்களில் ஒன்று.
இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் அடைந்து வருவதற்குக் காரணங்கள் பல. ஈழத்திலிருந்து லக்ஷக் கணக்கில் தமிழர்கள் வெளியேறத் தொடங்கியதும் தம்மிடம் தஞ்சம் அடைந்தவருக்கே ஆசி அருளிய முற்போக்கு மடத் தலைவர் மறைந்ததும் மடம் காலியாகத் தொடங்கியதும்.
இது விடுதலைப் போராட்டமும், முற்போக்குச் சீருடையும் மறைந்து விட்ட காலம். தமிழரின் வாழும் மண்ணின் தமிழ் அடையாளங்களையே அழிக்க அரசு முற்படும்போது வாழ்க்கையின் சித்திரமே வேறாகித் தான் போகிறது.
அந்தச் சித்திரம் தான் தேவமுகுந்தனின் கண்ணீரினூடே தெரியும் வீதி என்னும் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பின் எழுத்துக்களில், நமக்குத் தெரிகிறது. இது கொழும்புவில் வாழும் தமிழனின் வாழ்க்கைச் சித்திரம். யாழ்ப்பாணத்தில், அம்பாரையில், மட்டக் களப்பில், மலையகத்தில் தமிழ் வாழ்க்கை வேறாகத்தான் இருக்கும். இவையெல்லாவற்றிற்கும் மேலாக கிளிநொச்சியில் வவுனியாவில் வாழும் தமிழரின் வாழ்க்கை முற்றிலும் அன்னியப்பட்ட ஒன்றாகத்தான் இருக்கும். அங்கிருந்து எழுதுபவரகள் யாரும் இருப்பார்களா என்பதும் தெரியாது.
இவ்வளவையும் எதற்காகச் சொல்ல வேண்டியிருக்கிறதென்றால், இந்த கதைகளின் குரல் நாம் இதுகாறும் கேட்காத ஒரு குரல். ஒரு புதிய குரல்.
முதன் முறையாக, வழிகாட்டும் முற்போக்குப் பெருந்தகை இல்லாது, இந்தத் தலைமுறையில் வித்தியாசமான சரித்திர கால கட்டத்தில் எழுத வந்துள்ள தேவ முகுந்தன் முதலில் எழுதத் தொடங்கியது, மாணவனாக 1992-ல் மரநாய்கள். ”என்னைப் பாதித்த உணர்வுகளையும் அனுபவங்களையும் தான் எழுதுகிறேன்.” என்று சொல்லும் குரல் புதிய குரல். கட்டாயம் அது இத்தொகுப்பில் உள்ள கதைகளில் சாட்சியம் பெறுகிறது. மரநாய்கள் ஒரு சிறுவனாக, யாழ்ப்பாண கிராமம் ஒன்றில் ராணுவம் முகாமிட்டிருக்கும் சூழலில் ராணுவ கண்காணிப்பில் பயந்து வாய் மூடி வாழும் கட்டம். சுற்றி எங்கும் வீடுகள் இடிந்தும் தரைமட்டமாகியும், கிடக்க கிராமம் திரும்பிய மக்கள் வாழ்க்கையைத் திரும்பத் தொடங்குகின்றனர். ராணுவம் எதையும் அபகரித்துச் செல்லும். கோழிப் பண்ணைகள் குறைந்த விலைக்கு கோழிகளை விற்றுவிட்டு கடை மூடுகின்றனர். அம்மா குறைந்த விலைக்கு ஒரு கோழி வாங்கி வருகிறாள். அதை மரநாய்களிடமிருந்த காப்பாற்றப் படும் பாட்டிற்கு இடையே ராணுவம் பறித்துச் செல்கிறது. வாய் மூடிப் பார்த்திருக்கத் தான் முடிகிறது. ஆனால் சிறுவன் தன் அண்ணனிடம் இதைச் சொல்ல, அண்ணன் சொல்கிறான் “மர நாய்களைத் துரத்த வேண்டும்” என்று.
இது 1992-ன் முதல் கதை. அப்போதைய இடமும் வேறு. சூழலும் வேறு. பத்து வருடங்களுக்குப் பின் தான் அடுத்த கதை கொழும்புவிலிருந்து எழுதப் படுகிறது. இது வேறு சூழல். அடக்கு முறைதான் பின்னும். ஆனால் சூழல் வேறு. அடக்கும் சக்திகள் வேறு.
அப்பா கனடாவில் இருக்கிறார். மகன் இப்போது இருப்பது கொழும்புவில். கனடாவிலிருந்து கொழும்புவிற்கு பணம் அனுப்புவதில் அதிக தொந்திரவு இருப்பதில்லை. ஆனால் கொழும்புவிலிருந்து கிளிநொச்சியில் இருக்கும் அம்மாவுக்கு பணம் அனுப்புவது தான் ஆயிரம் சந்தேகங்களுக்கு வழி வகுக்கும். கிளிநொச்சி என்ற பெயரைப் படித்ததுமே, விசாரணை தொடங்கும். இது யார், எங்கிருந்து இவ்வளவு பணம், இன்று வரை எவ்வளவு பணம் அனுப்பியிருக்கிறாய், உன் அடையாள அட்டை, போலீஸ் பதிவு, வேலை செய்யும் பல்கலைக் கழகப் பதிவு, எங்கே? என்று இவ்வளவும் ஒவ்வொரு தடவையும் விசாரணை நடக்கும். சூழ்ந்திருப்போர் முன்னிலையில் அவமானப்பட வேண்டும். கிளிநொச்சியிலிருந்து வரும் கடிதம், அங்கு போகும் கடிதம் எல்லாம் தணிக்கை செய்யப் படும். கொழும்புவில் வேலையில்லாது தனித்திருக்கும் தமிழனுக்கு இருக்க இடம் கிடைக்காது. தமிழர்களே வீடு கொடுக்க மாட்டார்கள். பொய் சொல்லவும் முடியாது. அலுவலக நேரம் பூராவும் வெளியே சுற்ற வேண்டும், அந்தப் பொய்யை நிஜம் என நிரூபிக்க.
இன்னொரு கதையில் (இடைவெளி) குழந்தைக்கு உடல் நலமில்லை என்று விடுமுறையில் இருந்தால், அப்போது கொழும்புவில் எங்கோ ஒரு இடத்தில் குண்டு வெடி சம்பவம் நடந்தால், விடுமுறை எடுத்தவன் பேரில் சந்தேகம் எழுகிறது. நேற்றுவரை சினேகத்துடன் பழகியவர்களால் இன்று பயங்கர வாதி என்று ஒதுக்கப் படுகிறான். தன்னை ஒதுக்கி, மற்றவர்கள் கூடிக் கூடி இரகசிய குரலில் தன்னை சைகை காட்டி பேசுகிறார்கள். போலீசுக்கும் தகவல் போகிறது. இரண்டு போலீஸ் காரர்கள் வந்து இவனை இழுத்துச் செல்கிறார்கள். அலுவலக சகாக்கள் அனைவரும் எதையும் காணாதது போல் முகத்தை திருப்பிக்கொள்கிறார்கள். இது 2010 கொழும்பு அலுவலகச் சூழல்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் படுவது என்பது ஒரு கொடுமை. அது தமிழன் என்ற காரணத்தாலேயே எப்போதும் வேறு எக்காரணமின்றியும் நிகழும். பின் வாழ்க்கையே முற்றிலும் மாறிவிடுகிறது. சிறை சென்று சித்திர வதைப்பட்டு மீண்ட பிறகும் சிங்கள நண்பர்களால் மட்டுமல்ல, தமிழர்களே கூட தாங்கள் பயமின்றி வாழும் நிர்ப்பந்தத்தில் நிராகரிக்கத் தொடங்கு கிறார்கள்.
”சிவா” என்னும் கதையில் சிவா சிறையிலிருந்து விடுதலை பெறுவது அதிக காலம் நீடிப்பதில்லை. எங்கும் சந்தேகக் கண்கள். தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஒதுக்கும் கண்கள். காட்டிக்கொடுக்கும் கண்கள். பின்னும் சிறை. கொழும்புவில் ஒர் அறையில் வாடகைக்கு இருந்து கொண்டு பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவனின் சுதந்திர தினம் கழிவது பயத்திலும் பட்டினியிலும் தான். உணவருந்தச் செல்லும் வழியில் சோதனை, சிங்களம் பேசும் தொனியிலிருந்தே தமிழன் என்று கண்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறான். சாப்பிடச் செல்லும் உணவகம் மூடப்பட்டிருக்கிறது. வேலைசெய்யும் மலையகத் தமிழர்கள் தம் பதிவைப் புதுப்பித்துக்கொள்ளாததால் கைது செய்யப்பட்டு கடை மூடப்படுகிறது. இனி வேறு எங்கும் சென்றலைந்தால் மறுபடியும் சோதனை விசாரணை என்று எதிர்கொள்ள வேண்டிவரும் என்று அறைக்குத் திரும்புகிறான். சிங்களவர் மத்தியில் தமிழனாக வாழ்வதே சந்தேகத்திற்கு ஆட்பட்டு அன்னியனாகவே பயந்தே வாழவேண்டியிருக்கிறது (சுதந்திர தினம்) இது ஒரு நாள் அவதி இல்லை. கொஞ்ச நேர கொஞ்ச நாள் சந்தேகம் அல்ல. வாழ்நாள் முழுதும் கறைபடிந்து அவதி தரும் சந்தேகம்.
தனி வீடு என்று தனி ஈழம் பற்றிய கனவில் மு தளைய சிங்கம் நாவல் எழுதிய 1960-களிலும் அருள் சுப்பிரமணியம் அவர்களுக்கு வயது வந்துவிட்டது எழுதிய காலத்திலும், ஒற்றுமையுடன், சினேகபாவத்துடனும் வாழ்ந்த சிங்கள-தமிழ்க் குடும்பங்களைப் பார்க்க முடிந்திருக்கிறது. சிங்கள் மேலாதிக்க மனப்பான்மைக்கு எதிர்த்துக் குரல் கொடுத்த சிங்கள எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் கூட காண முடிந்திருக்கிறது. சோ. பத்மநாபன் மொழிபெயர்த்துத் தந்துள்ள (தென்னிலங்கை கவிதைகள்} என்னும் கவிதைத் தொகுப்பில். ஆனால் ஈழத் தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களே, பல குழுக்களாகப் பிரிந்து பகைமை பாராட்டும் விடுதலைப் போராளிகளிடமிருந்தே உயிருக்கு பயந்து வாழ்ந்த கால கட்டத்தை பேசும் எழுத்துக்கள் இப்போது வரத் தொடங்கியுள்ளன கனடா வாழும் செழியனின் வானத்தைப் பிளந்த கதை அவற்றில் ஒன்று.
தம்பி விடுதலைப் போராளிகளோடு சேர்ந்துவிட்டான். சேர்ந்தானா சேர்க்கப் பட்டானா தெரியாது. அண்ணன் கொழும்புவில் ஒரு வாடகை அறையில். பல்கலைக் கழக மாணவன். தம்பி இயக்கத்தில் சேர்ந்ததால் வேளை கெட்ட வேளையில் கதவு தட்டப்பட்டால் போலீஸோ விசாரணையோ என்ற பயம். கதவு தட்டப்படுகிறது காலை ஐந்து மணிக்கு. பயந்து பயந்து கதவைத் திறந்தால் வந்திருப்பது அறை நண்பன். உள்ளே வந்து, ’வெள்ளவத்தைக்கு உடனே போகணும் கிளம்பு,’ என்று வற்புறுத்தி அழைத்துச் சென்று, “அப்பாவுக்கு டெலிபோன் பண்ணு உடனே” என்கிறான். டெலிபோனில் அப்பா அழுது கொண்டே சொல்லும் செய்தி தம்பி நகுலன் செத்துட்டான். பெரியாஸ்பத்திரியில் உடல் கிடக்கும்” என்கிறார். உடல் ஆஸ்பத்திரியில் இங்கு கிடக்க, கிளிநொச்சியில் செத்த வீடு சடங்குகள் நடக்கும். (கண்ணீரினூடே வீதி)
இது கொழும்புவில். மலேசியா போனாலும் எத்தகைய சினேகங்களினூடேயும் தமிழனை வெறுக்கும் சிங்கள வெறி உடன் செல்லும். பல சிங்கள தமிழ் நண்பர்களிடையே நட்பில் திளைத்திருக்கும் சுனில் என்னும் சிங்களன். அவனது குடும்பம் கண்டியில். சுனிலின் குழந்தை பிறந்த சில நாளில் இறந்துவிட்ட செய்தியை முரளி சொல்கிறான். அவர்களுடன் நெருங்கிப் பழகும் சுப்பிரமணியம் என்னும் மூத்தவயதினர் தம் காரில் அவர்களை விமான நிலயத்துக்கு கொண்டு சேர்த்து தாமே கொழும்புவுக்கு விமான டிக்கட்டும் வாங்கிக்கொடுக்கிறார். விமான நிலையத்தில் செய்தி சொல்லப்படுகிறது. கொழும்பு விமான நிலையம் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டுள்ளதால் கொழும்புக்குச் செல்லும் அனைத்து விமான பயணங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. இதைக் கேட்டதும் சுனிலிடமிருந்து உடன் வெளிப்பட்ட வார்த்தைகள், “பறத் தெமிளு”. என்ன சொல்றான்? என்று சுப்பிரமணியம் (மலேசியத் தமிழர்), முரளி தனக்கு சிங்களம் குறைவாகத் தான் தெரியும் என்று. சொல்லி மறைத்து விடுகிறான்.
இத்தொகுப்பில் அதிகம் கதைகள் இல்லை. இரண்டு மூன்று கதைகள் அங்குள்ள பல்கலைக் கழக கல்வியாளர் போடும் அதிகாரப் போட்டியும் சலுகைகளுக்கான ஆசையும், உத்யோக வேட்டையும், தனக்கே தானே ஏற்பாடு செய்து கொள்ளும் பாராட்டு விழாக்களும் இலங்கைத் தமிழரை மாத்திரமே அடையாளம் காட்டுவனவல்ல. இங்கும், நம்மிடையேயும் அதிக அளவில் அவர்கள் உண்டு. இன்றைய இலங்கைத் தமிழர் வாழ்வின் அவலத்திடை யேயும் அவர்கள் இருப்பார்கள் தான். மனித சமூகம் எல்லா வகையினரையும் கொண்டது தானே. அவற்றில் பரிகாசத்தைச் சொல்வதை விட கோபத்தையே அதிகம் காண்கிறோம்.
இருப்பினும், கண்ணீரினூடே தெரியும் வீதி தொகுப்பில் தேவமுகுந்தன் தன் அனுபவங்களையே உணர்வுகளையே எழுதியுள்ளது வித்தியாசமான ஒரு எழுத்தை அங்கிருந்து வந்துள்ளதைச் சொல்கிறது. பிரசாரத்தை எழுதி வந்த காலம் போய் பட்ட அனுபவங்களை உள்ளான அவதிகளைச் சொல்லும் எழுத்து வரத் தொடங்கியுள்ளது.
இதற்கு பின்னுரை எழுதியுள்ள பேராசிரியர் எம் ஏ நுஹ்மான் அவர்கள், இது தமிழர் தரப்பை மட்டும் தான் சொல்கிறது. அது உண்மையே யானாலும் சிங்களவர் தரப்பையும் சொல்வதுதான் முழுமையாகும். தமிழ் வெறி சிங்கள வெறியையும் சிங்கள வெறி தமிழ் வெறியையும் பிறப்பித்துள்ளது என்று சொல்கிறார். இப்படியும் ஒரு பார்வை இருக்கத் தான் செய்கிறது.
கண்ணீரினூடே தெரியும் வீதி: (சிறுகதைத் தொகுப்பு) தேவ முகுந்தன்:
வெளியீடு: காலச் சுவடு பதிப்பகம். 669, கே.பி.சாலை, நாகர்கோயில், 629001 விலை ரூ. 75
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.