இந்திரா பார்த்தசாரதி எழுதிய சுதந்திரபூமி நாவலை படித்திருக்கிறீர்களா?
இந்திய அரசியலை அங்கதச் சுவையோடு எழுதப்பட்ட இந்த நாவலில் வரும் முகுந்தன் என்ற பாத்திரம் முழுமையான சித்திரிப்பு. மத்திய அரசில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவரின் வீட்டுக்கு காப்பி தயாரிக்கும் வேலைக்காரனாக வரும் முகுந்தன், படிப்படியாக அங்குவரும் அரசியல் தலைவர்களின் நன்மதிப்பையும் பெற்று பின்னாளில் அவரது வாரிசாக அரசியலுக்குள் பிரவேசித்து தலைவனாகின்றான். அமைச்சராகின்றான். அந்த முகுந்தன், பிரதமர் தொடக்கம் பல தலைவர்களுக்கு தண்ணி காட்டும் கதை. அவர்களின் கண்களில் விரலைவிட்டு ஆட்டும் கதைதான் சுதந்திரபூமி.
திரைப்படங்களில் தோன்றிவிட்டு, அவற்றின் வசூல் வெற்றியை கொண்டாடும் ரசிகர்களின் மோகத்தை மூலதனமாக்கி, நாளைய முதல்வர்களாக வர முயற்சிக்கும் கனவில் மூழ்கியிருக்கின்றவர்களின் கதைகளை சமகாலத்தில் படித்து வருகின்றோம். இந்தப்பின்னணிகளுடன் பல வருடங்களுக்கு முன்னர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய சுதந்திர பூமி நாவல் இன்றும்பேசப்படுவதற்குக் காரணம் அதில் வரும் பாத்திரங்கள் இன்றும் வேறு வேறு ரூபங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பிறக்கும் எவரும் எதிர்காலத்தில் எந்தநிலைக்குச்செல்வார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லமுடியாது. அரசியலும் அப்படித்தான். இ.பா.வின் சுதந்திரபூமியில் வரும் முகுந்தன், ஒரு அரசியல் தலைவரின் வீட்டில் காப்பி தயாரிக்கும் சாதாரண வேலைக்காரன். அவன் வாழ்வில் நேர்ந்த விபத்து அவனை அரசியல் தலைவனாக்கியது.
நடிகனாக வாழ்க்கையை தொடங்கிய எம்.ஜீ.ஆர், எதிர்காலத்தில் தான் தமிழக முதல்வராவேன் என்று தான் நடித்த முதல் நாடகத்தின்போதோ அல்லது முதல் திரைப்படமான சதிலீலாவதியில் தோன்றும்போதோ நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார். அதுபோன்றுதான் ஜெயலலிதாவும், என். ரி. ராமராவும்! பின்னாளில் அரசியலில் பிரகாசிக்க முனையும் சினிமாக்கலைஞர்கள் பலரதும் ஆரம்ப கால வாழ்க்கை அரசியலுடன் எள்ளவும் சம்பந்தப்பட்டிருக்காது. அதனைத்தான் இ.பா. அவர்களும் சுதந்திரபூமி நாவலில் காப்பி தயாரிக்கவந்த முகுந்தன் மூலம் சொல்லியிருப்பார். இலங்கையிலும் ஒருவருக்கு அரசியல் பிரவேசம் விபத்தாகி, இறுதியில் அதுவே விபரீதமாகியிருக்கிறது! அவருக்கு இன்றைய தினம் ஒக்டோபர் 9 ஆம் திகதி பிறந்த தினம். அவர்தான் 1945 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி வடமேற்கிலங்கையில் சீதுவை என்ற ஊரில் பிறந்து, 1988 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி, கொழும்பின் புறநகரான பொல்ஹேன்கொடவில் தனது வீட்டு வாசலில் சில மறைகரங்களின் தூண்டுதலால் சுட்டுக்கொல்லப்பட்ட விஜயகுமாரணதுங்க. இவரது இயற்பெயர் கொவிலகே அன்டன் விஜயகுமாரணதுங்க.
இளம்வயதிலிருந்தே கலையார்வம் கொண்டிருந்தவர். பாடகரானார். இசை நிகழ்ச்சிகளில் பாடினார். வேலைதேடும் படலத்திலிருந்தபோது, சீதுவையில் அமைந்திருந்த ஒரு தியேட்டரின் வாயிலில் அனுமதிச்சீட்டு கிழித்து ரசிகர்களை அரங்கிற்குள்ளே அனுப்பும் தொழில்தான் முதலில் கிடைத்தது. பின்னாளில் அதே ரசிகர்கள் அவரை திரையில் பார்த்து கொண்டாடினர். ஆனால் , அவருக்காக ரசிகர் மன்றம் அமைக்கவில்லை! இலங்கையில் எந்தவொரு சிங்கள சினிமா நடிகருக்கோ நடிகைக்கோ ரசிகர்மன்றம் இல்லை. எந்தவொரு சிங்கள நடிகைக்கும் கோயிலும் கட்டவில்லை! அழகான தோற்றம் - இனிமையான குரல்வளம் கொண்டிருந்த இவரை சினிமா கவர்ந்தது. இவர் நடித்த முதல் படம் ஹந்தானே கத்தாவ. 1969 ஆம் ஆண்டு திரைக்கு வருகிறது. அதுவரையில் காமினி பொன்சேக்கா, டோனி ரணசிங்க, எடி ஜயமான்ன, அசோக்கா பொன்னம்பெரும, ஜோ அபேவிக்கிரம முதலானோர் சிங்கள திரைப்பட உலகை கலக்கிக்கொண்டிருந்தனர். புது முகமான விஜயவின் பிரவேசத்தையடுத்து, சிங்கள திரைப்பட இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் இவரை நாடினர். தொடர்ந்து பல வெற்றிப்படங்களை தந்தார். மேற்சொன்ன நடிகர்களுடனும் மாலினி பொன்சேக்கா, கீதா குமாரசிங்க, சிறியானி அமரசேன, சுவர்ணா மல்லவராச்சி, வசந்தி சத்துராணி முதலான நடிகைகளுடனும் மற்றும் ரவீந்திர ரந்தெணிய , விக்கிரம போகொட, விமல் குமர டீ கொஸ்தா, பிரடீ சில்வா, சிறில் விக்கிரமகே, ஹென்றி ஜயசேன முதலான நடிகர்களுடனும் நடித்தார். லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், தர்மசேன பத்திராஜ, திஸ்ஸ அபேசேகர, சுமித்ரா பீரிஸ் ஆகிய புகழ்பெற்ற இயக்குநர்களின் படங்களில் தோன்றினார். அவற்றில் பல சர்வதேச விருதுகளும் பெற்றன. இலங்கை - பிரித்தானிய கூட்டுத்தயாரிப்பான God King படமும் இவருக்கு புகழைத்தேடித்தந்தது.
இவர் பாடியிருக்கும் பாடல்களும் நூறைத்தாண்டும். அவையும் இசைத்தட்டுகளில் பதிவாகியிருக்கின்றன. வரதட்ட தண்டுவம் ( குற்றத்திற்கு தண்டனை) என்ற படத்தையும் தயாரித்தார். நூறுக்கும் மேற்பட்ட சிங்களப்படங்களில் நடித்திருக்கும் விஜயகுமராணதுங்க, ஏராளமான ரசிகர்களை சம்பாதித்தார். இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், வசனகர்த்தாக்கள், மற்றும் திரைப்படத்துறையிலிருந்த அனைவருடனும் பின்னணி பாடகர்களுடனும் நல்லுறவைப்பேணியவர்.
அவர் முதலில் சாதாரண அங்கத்தவராக இணைந்திருந்தது லங்கா சமசமாஜ கட்சியில்தான். அவரை திரையில் பார்த்திருந்தாலும், முதல் முதலில் நேரில் பார்த்துப்பேசியது 1981 ஆம் ஆண்டுதான். அந்த ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி நள்ளிரவில் யாழ்ப்பாணம் பொது நூலகம் அன்றைய ஜே.ஆர். பதவிக்காலத்தில் தீக்கிரையாக்கப்பட்டதை கண்டித்து கண்டனக்கூட்டம் நடத்துவதற்கு எங்கள் ஊரிலிருந்த முற்போக்கு சக்திகளுடன் இணைந்து ஒரு ஆலோசனைக்கூட்டத்தை எங்கள் ஊர் சமசமாஜக்கட்சியின் காரியாலயத்தில் நடத்தினோம். அதற்கு வருகை தந்திருந்த விஜயகுமாரணதுங்க, யாழ் நூலக எரிப்பை கண்டித்துப்பேசியதுடன் அதன் பின்னர் நாம் அந்தப்பிரதேசங்களில் நடத்திய கண்டன இயக்கங்களிலும் கலந்துகொண்டார். வண.பிதா திஸ்ஸ பாலசூரிய, மனித உரிமைச்செயற்பாட்டாளர் ஜி. செனவிரத்தின, லீனஸ் திஸாநாயக்கா ஆகியோரும் அந்த இயக்கத்தில் இணைந்தனர். கொழும்பு நகர மண்டபத்திலும் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. அதற்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கமும் வரவிருந்தார். எனினும் இறுதி நேரத்தில் கொழும்பு பொலிஸ் தரப்பு அரசின் அழுத்தத்தினால் அதற்கு அனுமதி தரவில்லை.
விஜயகுமராணதுங்க, மூவின மக்களினதும் அபிமானத்தை பெற்றிருந்தவர். எவருடனும் எளிமையாக பழகியவர். பல் மருத்தவரான கடும்போக்காளர் குணதாஸ அமரசேகர எழுதிய கருமக்காரயோ (1980 ) என்ற திரைப்படம் ஒரு விவசாயக்கிராமத்தில் எடுக்கப்பட்ட வேளையில், அதில் கதாநாயகனாக நடித்த விஜய, படப்பிடிப்புவேளையில் வயலில் இறங்கி விவசாயிகளுடன் வேலை செய்தார். அவர்களின் உணவை விரும்பிச்சுவைத்தார். அவர் சேற்றில் இறங்கியதனால், படப்பிடிப்பும் தாமதமடைந்தது. இயக்குநர் திஸ்ஸ அபயசேகர, அவரைக் கண்டித்தபோதும் கோபிக்காமல் , "அவர்கள் சேற்றில் கால் வைப்பதனால்தான் நாம் சோற்றில் கை வைக்கின்றோம்" என்று வாழ்க்கைத்தத்துவம் பேசி அனைவரையும் சிரிக்கவைத்தார். இவ்வாறு கூர்மையாகப்பேசி தான் இருக்கும் இடத்தை கலகலப்பாக்குவார். ஸ்கோவில் 1985 இல் நடந்த உலக மாணவர் இளைஞர் விழாவிலும் கலந்துகொண்டவர். அச்சமயம் ஒரு இந்தியப்பத்திரிகையாளர், இவரை பேட்டிகண்டபோது, " நீங்கள் முன்னாள் பிரதமர்களின் மருமகன்தானே..? " எனக்கேட்டதும், " அவர்கள் எனது மனைவியின் பெற்றோர்கள் . " என்றார். இந்தப்பயணத்தில் தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்த அ.தி.மு.க, மற்றும் தி.மு.க. , காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்களுடனும் அவர் இலங்கை இனப்பிரச்சினை குறித்து பேசினார். இந்திய மார்க்ஸிஸ்ட் கட்சியைச்சேர்ந்த சீத்தாரம யச்சூரியையும் இங்கு சந்தித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து 1970 இல் ஆட்சிக்கு வந்த சமசமாஜ மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்காவின் சகிக்கமுடியாத செயற்பாடுகளினால் அடுத்தடுத்து வெளியேறின. 1977 இல் தேர்தல் வந்தசமயம் அந்த இரண்டு கட்சிகளும் இணைந்து இடதுசாரி ஐக்கிய முன்னணியை அமைத்து போட்டியிட்டன. விஜயகுமாரணதுங்க, எங்கள் ஊருக்குச் சமீபமாகவிருக்கும் கட்டானை தொகுதியில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிட்டார். கடுமையான போட்டி. ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட விஜயபால மெண்டிஸை விட குறைந்த வாக்கு வித்தியாசத்தில் விஜயகுமாரணதுங்க தோல்வியுற்றார்.
விஜயகுமாரணதுங்கவின் திரைப்பட உலக நண்பரும் பிரபல பாடகருமான எச்.ஆர். ஜோதிபால, ஐக்கிய தேசியக்கட்சியின் தீவிர ஆதரவாளர். 1977 தேர்தல் காலத்தில் அவர் ஐ.தே. க. மேடைகளில் பாடினார். ஆனால், தனது நண்பர் விஜயகுமாரணதுங்க போட்டியிட்ட கட்டான தொகுதி பக்கம் மாத்திரம் வரமாட்டேன் என்று மறுத்துவிட்டார். மின்னேரியா, மஹர தொகுதிகளிலும் விஜேகுமாரணதுங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். மக்களிடம் அவருக்கு செல்வாக்கு பெருகியிருந்தாலும் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரசாரத்தில் " ஒரு நடிகன் எப்படி அரசியலுக்கு வரமுடியும்" என்ற எள்ளல்தான் மேலோங்கியிருந்தது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோகண விஜேவீராவும் மேடைகள் தோறும் அவரை "நடிகன் நடிகன் " என்றுதான் அவமானப்படுத்தினார். எனினும் அவரது வளர்ச்சியை அன்று ஜே.ஆரும், பிரேமதாசவும் விஜேவீராவும் குறைத்து மதிப்பிடவில்லை. 1977 இல் பதவிக்கு வந்த ஜே.ஆர். , ஶ்ரீமாவின் குடியியல் உரிமைகளை பறித்தார். அதனால் அவரால் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடவோ மேடைகளில் பேசவோ முடியாமலிருந்தது. அச்சமயத்தில் கட்சியின் பீரங்கியாக விஜயகுமாரணதுங்க விளங்கினார். கட்சியின் வளர்ச்சிக்காக மூவின மக்களுடனும் இணைந்து பாடுபட்டார். இக்காலப்பகுதியில் அவருக்கும் ஶ்ரீமாவின் இரண்டாவது புதல்வி சந்திரிக்காவுக்கும் காதல் மலர்ந்தது. இதனை சந்திரிக்காவின் தாயும் - தம்பி அநுராவும் விரும்பவில்லை. அத்தனகல்ல வளவ்வையின் மேட்டுக்குடி, ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவரை தங்கள் அரசியலுக்கு பயன்படுத்துவதற்கு மாத்திரமே விரும்பியது. அவரை " மச்சான் " என அழைப்பதற்கு அநுரா விரும்பவில்லை. கட்சிக்குள் விஜயகுமாரணதுங்கவின் பிரவேசமும் வளர்ச்சியும் மூத்த தலைவராக இருந்தவரும் ஶ்ரீமா வெளிநாடுசெல்லும் சந்தர்ப்பங்களில் பதில் பிரதமராக இருந்தவருமான மதவாச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சேனாநாயக்காவும் விரும்பவில்லை. ஶ்ரீமாவின் குடியியல் உரிமை பறிக்கப்பட்டதால் அடுத்த தலைவர் யார்? என்ற போட்டி உட்கட்சிப் போராட்டமாகியது. 1978 இல் நடந்த ஜனாதிபதித்தேர்தலில் ஶ்ரீல.சு.கட்சியின் சார்பில் ஹெக்டர் கொப்பேகடுவ போட்டியிட்டபோது அநுரா பிரசாரங்களுக்கு வரவில்லை. விஜயகுமாரணதுங்க யாழ்ப்பாணம் உட்பட நாடெங்கும் சென்று கட்சிக்காகவும் ஹெக்டர் கொப்பேகடுவவுக்காகவும் தீவிரமாக பிரசாரம் செய்தார். மைத்திரி - அநுரா வசம் கட்சி சென்றபோது, வீட்டில் அணிந்திருந்த சாரத்துடனேயே தனது ஆதரவாளர்களுடன் ஓடிவந்து மருதானை டார்லி வீதியிலிருந்த கட்சியின் தலைமையகத்திற்கு முன்னால் போராட்டம் நடத்தினார். சரிந்துகொண்டிருந்த கட்சியை நிமிர்த்துவதற்கு பாடுபட்ட விஜயகுமாரணதுங்க, இறுதியில் அக்கட்சியிலிருந்து வெளியேறி மக்கள் கட்சியை தொடங்கி தனிவழிசென்றார். சந்திரிக்காவும் ஒஸி அபேகுணசேகராவும் அவருக்கு பக்கபலமாக நின்றனர்.
அன்றைய ஜே. ஆர். தலைமையிலான ஐ.தே. கட்சி 1977 இல் பதவிக்கு வந்த காலம் முதல் 1977 - 1981 - 1983 முதலான ஆண்டுகளில் இலங்கையில் இனக்கலவரம் வந்தது. 1977 இல் நடந்த கலவரத்தின்போது " போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்" என்ற பிரகடனம் செய்த ஜே.ஆர். 1978 முதல் 1989 வரையில் ஜனாதிபதியாக பதவியில் இருந்தவர். இவரது ஆட்சிக்காலத்தில்தான் இலங்கை பாரிய நெருக்கடிகளை சந்தித்தது. 1983 இல் கொழும்பிலும் புறநகரங்களிலும் தமிழர்கள் கொல்லப்பட்டபோதும், தமிழர்களின் உடைமைகள் அழிக்கப்பட்டபோதும் விஜயகுமராணதுங்க அன்றைய ஆட்சியின் மீது கடும் கோபமுற்றிருந்தார். வத்தளை ஹெந்தளையில் அமைந்திருந்த சினிமாஸ் குணரத்தினத்தின் விஜயா ஸ்ரூடியோ எரிக்கப்படும் தகவல் அறிந்து அவ்விடத்திற்கும் ஓடிச்சென்று, திரைப்படச்சுருள்களை பாதுகாப்பதற்கு போராடினார். ஹெக்டர் கொப்பேகடுவ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது, அக்கட்சியின் ஆதரவாளர்கள் அரிசிக்கூப்பன் அச்சிட்டு விநியோகித்து பிரசாரம் செய்தனர். இதனால் ஜே.ஆரின் உத்தரவுக்கு அமைய பொலிஸார் விஜயகுமாரணதுங்கவையும் அவரது தோழர் ஒஸி அபேகுணசேகரவையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். . இரண்டுவாரங்களுக்கு மேல் தடுத்துவைக்கப்பட்டார். இதுவிடயமாக ஜே.ஆரை. நேரில் சந்தித்து கணவனின் விடுதலை பற்றி சந்திரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியபோது, அதுகுறித்து பேசுவதை தவிர்த்த ஜே.ஆர், - விஜயகுமாரணதுங்க நடித்த திரைப்படங்கள் பற்றி பேசியிருக்கிறார். இதன் மறைமுக அர்த்தம்: " உனது கணவனுக்கு ஏன் அரசியல்? சினிமாவுடன் நின்றிருக்கலாமே" என்பதுதான். பின்னாளில் சந்திரிக்கா, ஜே.ஆரை, "நரி" என வர்ணித்ததற்கும், இத்தாலிய அரசியல் மேதை "நிக்கோலோ மாக்கியாவெல்லி" க்கு ஒப்பிட்டுப்பேசியதற்கும் இதுபோன்ற காரணங்கள் அநேகம்.
விஜயகுமாரணதுங்க, இலங்கையில் சமாதானத்தை விரும்பியவர். அதற்காக எவருடனும் எந்த நிபந்தனைகளும் இன்றி பேசுவதற்கும் தயாராகவிருந்தவர். பேசியவர். சென்னைக்கு மனைவி சந்திரிக்காவுடன் சென்று, இலங்கை இனப்பிரச்சினைத்தீர்வு தொடர்பாக முதல்வர் எம்.ஜீ.ஆர், அமிர்தலிங்கம் மற்றும் புளட் உமா மகேஸ்வரன், டெலோ செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடனும் பேசினார். விடுதலைப்புலிகள் இராணுவத்திலிருந்து இரண்டுபேரை பிடித்து தடுத்துவைத்திருந்தபோது அவர்களை விடுவிப்பதற்காகவும் சென்றவர். அச்சந்தர்ப்பத்தில் கிட்டு, ரஹீம் ஆகியோருடன் பேசியவர். சிலதடவைகள் வடக்கிற்கு நல்லெண்ணத் தூதுவராகச்சென்றார். இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பரவலாக்கல்தான் சரியான அர்த்தமுள்ள தீர்வு என்று தொடர்ந்து வலியுறுத்திவந்தார். இலங்கையில் இடதுசாரிகளும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் வலுவிழந்திருந்த காலப்பகுதியில் தனது மக்கள் கட்சியின் மூலம் சகல தரப்பினரையும் கவர்ந்திருந்தார். ஜே.ஆரும் அரசியலிலிருந்து ஒதுங்கியதையடுத்து, மக்கள் விடுதலை முன்னணி தலைமறைவாகியதையடுத்து, பிரேமதாசவுக்கு சவாலாக இருந்தவர் அவரைப்போன்று சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து அரசியலுக்கு வந்திருந்த விஜயகுமாரணதுங்க மாத்திரமே. அவரது வசீகரமான முகமும் அவரது அரசியல் எதிரிகளுக்கு வெறுப்பூட்டியது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தையும் அவர் ஆதரித்தார். தமிழர் தரப்பிலும் நல்லெண்ணத்தை அவர் சம்பாதித்திருந்தமையால், இலங்கையின் எதிர்காலத்தில் புதிய அதிபராக வரக்கூடிய சாத்தியமும் அவருக்கிருந்ததை சில மறைகரங்கள் அவதானித்தன. அதன் விளைவுதான் 1988 இல் அவர் மீதான கொடூரத்தாக்குதல். அவரது வீட்டு வாசலில் அவரது பெண்குழந்தையின் முன்பாகவே கொலையாளிகள் அவரைச்சுட்டனர். அவரது வசீகரமான முகத்தை தொடர்ச்சியாகச்சுட்டு சிதைத்தனர்.
சினிமாவிலிருந்து அவர் அரசியலுக்கு வந்ததை அவரது சினிமாத்துறை நண்பர்களும் சிநேகிதிகளும் விரும்பவில்லை. தனது சினிமா விளம்பரத்தை மூலதனமாகவைத்துக்கொண்டு அவர் அரசியல் தலைவனாகவுமில்லை. அவர் இன்றில்லை! ஆனால், அவரது உறவினர்களான முன்னாள் சினிமா நடிகர்கள் ஜீவன் குமாரணதுங்க, ரஞ்சன் ராமநாயக்க, மற்றும் நடிகைகள் மாலினி பொன்சேக்கா, கீதா குமாரசிங்க ஆகியோர் நாடாளுமன்றத்திற்குள் எளிதாகப் பிரவேசித்தனர்.
சாதாரண குடும்பத்தில் பிறந்து முன்னுரை எழுதியவரின் வாழ்வு, சினிமாவிலும் பல அத்தியாயங்களை கண்டு, அரசியலிலும் பல அத்தியாயங்கள் தொடர்ந்து, வீதியில் முடிவுரையை கண்டது. அவரது உற்ற நண்பர் ஓஸி அபேகுணசேகர அவரது மறைவுக்குப்பின்னர் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து, காமினி திஸாநாயக்காவுடன் விடுதலைப்புலிகளின் தற்கொலைத்தாக்குதலில் மேல் உலகம் சென்றதும், அவரது காதல் மனைவி சந்திரிக்கா, தனது பதவிக்காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியை இணைத்ததும், பின்னாளில் ரணில் - மைத்திரி கூட்டுக்கு சூத்திரதாரியானதும் அரசியலில் நாம் காணும் முரண் நகை!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.