இலங்கைத்தேயிலையை ரஷ்யா இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்ததை அறிந்ததும், இலங்கை அரசு பதறிக்கொண்டு தனது பிரதிநிதிகளை அங்கு அனுப்புவதற்கும் தயாராகிக்கொண்டிருக்கிறது. இதற்கான அமைச்சர் செய்தியாளர் மாநாடு நடத்துகிறார். ஜனாதிபதியும் ரஷ்ய அதிபர் புடினுக்கு கடிதம் எழுதுகிறார். இலங்கை மலையக மக்களின் உதிரமும் வியர்வையும் கலந்ததுதான் நாம் அருந்தும் சுவையான தேநீர். ஏற்றுமதி செய்யப்பட்ட பொதிக்குள் வண்டு வந்துவிட்டதால் அது எந்த நாட்டின் வண்டு என்ற ஆராய்ச்சி வேறு நடக்கிறது. அஸ்பஸ்டஸ் இறக்குமதிக்கு இலங்கை அரசு தடைவிதித்தமையால்தான் ரஷ்யா இலங்கைத்தேயிலையை வாங்குவதை நிறுத்த முயற்சிக்கிறது என்றும் செய்திகள் கசிகின்றன. இந்தப்பதற்றம், நூற்றாண்டு காலமாக அந்த மலைகளில் அட்டைக்கடிகளுக்கு மத்தியில் ஒரு அறை மாத்திரமே கொண்ட லயன் காம்பராக்களில் குடித்தனம் நடத்தும், பிரசவம் பார்க்கும், வசதிக்குறைவுடன் வாழ்க்கை நடத்தும், மண்சரிவு அபாயங்களை சந்திக்கும், இலங்கைக்கான அந்நியசெலாவணியை ஈட்டித்தரும் அம்மக்கள் குறித்து, மாறி மாறி பதவிக்கு வந்த அரசுகளுக்கு என்றைக்குமே வந்ததில்லை. ஆனால், அந்த மக்களோடு மக்களாக வாழ்ந்த படைப்பாளிகளுக்கு வந்தது. அந்த பதற்றம்தான் நாம் படித்த துன்பக்கேணியும், தூரத்துப்பச்சையும், மலைக்கொழுந்தும், நாட்டற்றவனும், வீடற்றவனும், ஒரு கூடைக்கொழுந்தும், ஒப்பாரிக்கோச்சியும், உழைக்கப்பிறந்தவர்களும், பாலாயியும் இன்னும் பல கதைகளும் நாவல்களும். அம்மக்களின் பதற்றம், எத்தனை படைப்பாளிகள் எழுதிக்குவித்தும் இன்னமும் ஓயவில்லை.
நடேசய்யரிலிருந்து, சி.வி.வேலுப்பிள்ளை, தெளிவத்தை ஜோசப், என்.எஸ்.எம். ராமையா, மல்லிகை சி. குமார், மலரன்பன், மு. சிவலிங்கம், மாத்தளை வடிவேலன் உட்பட சில தலைமுறைகளின் வரிசையில், இலங்கை மலையக இலக்கியத்தின் நான்காவது தலைமுறைப்படைப்பாளியாக அறிமுகமாகி எழுதிக்கொண்டிருப்பவர்தான் சிவனு மனோஹரன். இவரது எழுத்திலும் அம்மக்களின் ஆன்மா பேசுகிறது. பதற்றம் தொனிக்கிறது. ஈழத்து இலக்கிய உலகில் சிவனு மனோஹரன், 1990 களில் மலையகப்பக்கமிருந்து அறிமுகமானவர். ஏற்கனவே ' ஒரு மணல் வீடும் சில எருமை மாடுகளும்' - 'கோடங்கி' ஆகிய தொகுப்புகளை வரவாக்கியிருப்பவர். " மலையகத் தமிழ் இலக்கியம், பாட்டாளி வர்க்கச் சிந்தனை மிகுந்த இலக்கியமாகும். அந்தச் சிந்தனையில் அனைவருமே நிலைப்பாடு கொண்டிருந்தபோது, சிவனு மனோஹரன் சற்று விலகி, அனைவருமே எழுத மறந்த... எழுதுவதற்கு அக்கறைப்படாத... சமூகவிழுமியங்களைப் பற்றி எழுத முன்வந்தவராகின்றார்." என்று மு. சிவலிங்கமும் - " அண்மைக்காலமாக மலையக சிறுகதை போக்கில் காணப்படும் வரட்சிக்கு செழுமை சேர்க்கும் விதமாக இத்தொகுப்பின் வருகை மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது. ஒரு வட்டத்தில் சுழன்று திரியும் மலையக இலக்கியத்தின் எல்லை தாண்டும் கட்டுடைப்புக்கும், அதன் செழுமைக்கும் சிவனு மனோஹரனின் இப்பயணம் தொடர வாழ்த்துவதோடு, ஒரு வாசகனாய் மிகுந்த நம்பிக்கையோடு இன்னும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்" என்று சுதர்ம மகாராஜனும்-, " சமூகம் பற்றிய பிரக்ஞையும் மானுடம் மேன்மையுறவேண்டும் என்ற உணர்வும் கொண்ட படைப்புக்களாக இவரது எழுத்துக்கள் மிளிர்கின்றன. இவை சமுதாய மாற்றத்துக்கு வேண்டிய வலிமையான இயக்க உணர்வை வாசகர் மனதில் ஏற்படுத்துகின்றன." என்று 'ஞானம்' ஆசிரியர் தி.ஞானசேகரனும் இந்த நூல் பற்றிய தமது எண்ணப்பதிவுகளை முன்வைக்கின்றனர்.
" ஒரு படைப்பாளன் சமூக அக்கறையும், அவதானமும் கொண்டு இயங்கும்போதுதான் மக்கள் இலக்கியங்களை படைக்க முடியும் என நம்புபவன் நான். ஏனெனில் தன் நமூகத்தை அக்கறையோடு, கூர்மையாக அவதானிக்கும் போதுதான் யதார்த்த பூர்வமான படைப்புகளை வெளிக்கொணர முடிகிறது என்பது உறுதி. இத்தொகுப்பில் வரும் கதை மாந்தர்கள் அதியற்புதங்களை நிகழ்த்தும் சாகசக்காரர்களாய் இல்லை. சமூக யதார்த்தங்களை மீறிக்கொண்டு, புரட்சி நெருப்பை தன் தலையில் சுமப்பவர்களாகவும் இல்லை. மாயக்கண்ணாடியும், அரிதாரமும் பூசிக்கொண்டு சமூகத்தில் உலவித்திரியும் வேடதாரிகளும் இல்லை. தன் அரசியல் உரிமைகளை புரிந்துகொள்ளும் திராணியற்றவர்களாயும், வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிகளை இதுவரையும் கண்டடையாதவர்களாயும் நெறி பிரழ்வின் காரணமாக தன் வன்மங்களை அத்துமீறி பிறர்மீது திணிப்பவர்களாயும் உள்ளனர். இத்தகைய தனிமனித உளநெருக்கீடுகளையும், அதன் சமூக விளைவுகளையுமே பேசுபொருளாக்கியிருக்கிறது இத்தொகுப்பு" என்று சிவனு மனோஹரன் தன்னிலை விளக்கமும் தருகிறார்.
" பேசாப்பொருளை பேச நான் துணிந்தேன்" என்ற வரிகளைத்தான் இவரது கதைகள் நினைவூட்டுகின்றன. பன்னிரண்டு கதைகளைக்கொண்ட தொகுப்பு: மீன்களைத்தின்ற ஆறு. ஆறு மீன்களைத்தின்னுமா..? மீன்களை உயிர்வாழவைப்பது ஆறு. வாசகர்களை ஆழ்ந்து யோசிக்கவைக்கும் தலைப்புகளை தருவது படைப்பாளிகளின் இயல்பு. சிவனுமனோஹரனும் தனது கதைகளின் தலைப்புகளின் ஊடாகவும் காட்சிப்படிமங்களிலும் வாசகரை உள்ளீர்க்கின்றார் என்றுதான் சொல்லவேண்டும்.
" ஆத்துப்பிலீக்கு குளிக்கப்போவதென்றால் உள்ளம் பூத்துவிடும். சிங்க மலையடிவாரத்தில் இருந்து கீழிறங்கும் ஆறு, அதன் சலனமின்றிப்பாயும் தனித்துவம் வார்த்தைகளில் அடங்காது. குளிர்ந்துகிடக்கும் ஆற்று நீரை அள்ளி முகத்தில் அறைந்தால் போதும் எல்லா அசதியும் இருந்த இடம்தெரியாமல் ஓடிவிடும்" எனத்தொடங்குகிறது 'மீன்களைத்தின்ற ஆறு' என்னும் கதை.
இளமைக்காலத்தில், நண்பர்கள் சிவாவும் ராசுவும் அந்தப்பீலிக்கரைக்குச்சென்றுதான் பாலியல் கதைகள் பேசுவார்கள். ராசு தனது காதலி கௌரியை இழுத்துக்கொண்டு ஓடிவிடுகிறான். காலம் கடந்து அதே ஆத்துப்பீலிக்கு செல்லும் பாதையில்தான் வரிச்சி சுவரால் ஏறிநிற்கும் ஒற்றை அறைக்குடிலை அமைத்து குடித்தனம் நடத்துகின்றான் ராசு. ஏன்...? ராசு முன்னர் வாழ்ந்த தந்தை சீனி கங்காணி வீடும் சிறியதுதான். வம்சம் தழைத்தளவு வீடு தழைக்கவில்லை. ( இதுதான் மலையகத் தோட்டங்களின் லயன்குடியிருப்புகளின் நிலை). ராசு - கௌரியின் அந்த ஒற்றை அறை அறுவடைகள்தான் அம்மாளுவும் அப்புக்குட்டியும். ஒரு காலத்தில் ராசுவும் அவன் நண்பன் சிவாவும் பாலியல் கதைகள் பேசிச் சிரித்துவிளையாடிய பீலிக்கரையிலும் - மழைக்காலத்தில் வெள்ளையடிக்கப்பட்ட வீடுபோல காட்சிதரும் அந்த ஆற்றிலும்தான் ராசுவின் குழந்தைகள் மீன் பிடித்து விளையாடுகிறார்கள். ஒருநாள் அவர்கள் ஆடிய விளையாட்டு அதுவல்ல. அந்தக்காட்சியைக்கண்டு சிவா அதிர்ந்துவிடுகின்றான். அவர்களை கண்டிக்க அவன் எத்தனித்தபோது, அந்தப்பெண்குழந்தை சொன்ன வார்த்தை மேலும் அதிர்வைத்தருகிறது. சிவாவுக்கு மட்டுமல்ல வாசகர்களுக்கும்தான். சில்லென கிடக்கும் ஆற்றுநீர் வழமைக்கு மாறாக சுடுகிறது. கதையின் தொடக்கத்தில் குளிர்ந்திருந்த அந்த ஆறு, கதையின் முடிவில் சுடுகிறது. உண்மைகள் சுடும்தான். இங்கு இந்தப்படைப்பாளியின் கட்டுடைத்தல் தன்மையை பார்க்கின்றோம். அதனால்தான் இவரது கதைகளை படித்திருக்கும் விமர்சகர்களும் " அனைவருமே எழுத மறந்த சமூகவிழுமியங்களைப்பற்றி எழுத முன்வந்தவராகின்றார்" எனச்சொல்கின்றனர். இத்தொகுப்பில் இடம்பெறும் கதைகள், பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகள் பற்றித்தான் தீவிரமாகப்பேசுகின்றன. இந்நூலை " மன அழுத்தங்களாலும் குடும்ப நெருக்கீடுகளாலும் பாதிக்கப்பட்ட மலையகக் குழந்தைகளுக்கே சமர்ப்பணம் செய்துள்ளார் சிவனு மனோஹரன்.
மலையகத்தோட்டங்களில் பணியாற்றும் கங்காணிமார், கணக்குப்பிள்ளைமார், Field Officer என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கண்டக்டர்மார், பேரேடு பதியும் கிளார்க்கர் மார், சுப்பிரீண்டன்மார், பெரியதுரைமார், சின்னதுரைமார் முதலான பதவிகளிலிருக்கும் நபர்களினால் தொழிலாளர்கள் எவ்வாறு சுரண்டப்பட்டார்கள், பெண்கள் வஞ்சிக்கப்பட்டார்கள் என்பதையெல்லாம் சித்திரிக்கும் பல கதைகளையும் நாவல்களையும் முன்னர் படித்திருக்கின்றோம். இவர்கள் போதாதென்று தோட்டப்பாடசாலைகளுக்கு பிறஊர்களிலிருந்து வரும் தமிழ் ஆசிரியர்களின் வீட்டு வேலைக்காக தோட்டத்தொழிலாளர்களின் குழந்தைகள் பயன்படுத்தப்பட்ட கதைகள், அந்தக்குழந்தைகள் அந்த ஆசிரியர்களின் சிபாரிசில் தெற்கிற்கும் வடக்கிற்கும் வேலைக்காரர்களாக சென்று அவதிப்பட்ட கதைகளையும் படித்திருக்கின்றோம். சிவனுமனோஹரன் அத்தகைய பின்னணிகளிலிருந்து முற்றாக விலகி வேறு திசையில் மலையகத்தின் பிரச்சினைகளை அலசி ஆராய்கிறார்.
அமராவதியின் ஆறாம் பிரசவம், மட்டக்குச்சி, கோகிலாவும் கோணல் வகிடும், பொட்டு, அழுக்கு முதலான கதைகள் பேதைப்பெண்களின் வாழ்வுக்கோலங்களையும் - மீன்களைத்தின்ற ஆறு, தாராவின் சப்பாத்து, கொழும்புத்தம்பி, வகுப்பறைக்காவியங்கள் என்பன குழந்தைகள் - மாணவர்களின் உணர்வுகளையும் சித்திரிக்கின்றன. மலையகத்தில் காமன்கூத்து பிரபல்யமான கலை வடிவம். சிவனுமனோஹரன், ரதி - மன்மதன் - சிவன் சம்பந்தப்பட்ட அந்தக்காமன்கூத்து நடக்கும் பொட்டலையும் அந்த ஊரில் காதலித்துக்கொண்டிருக்கும் ஆயிபுள்ளையும் - பாண்டியும் இரகசியமாக சந்திக்கும் கோயில் தோப்பையும் ஒருசேரச் சித்திரிக்கும் கதை ' காமன் பொட்டல்' . மன்மதனை எரித்துவிடும் புராணக்கதைக்கு ஒரு சிவன் இருந்ததுபோன்று, பாண்டி - ஆயிபுள்ளை காதலை எதிர்க்கும் மயிலுத்தலைவர் தனது அடியாட்கள் மூலம் பாண்டியை கொலைசெய்கிறார். புராணக்காதலையும் மலையகத்தோட்டப்புறக்காதலையும் ஒப்பீடு செய்யும் இக்கதையின் அழகியலை மேலும் மெருகூட்டியிருக்கலாம்.
கோகிலாவும் கோணல் வகிடும், கொழும்புத்தம்பி ஆகிய கதைகள் அப்பாவிப்பெண்கள் மீதான பாலியல் சுரண்டலை அம்பலப்படுத்துகிறது. " கடைமுதலாளிமார் கடவுளின் பிரதிநிதிகள்" என்ற பாடத்தை கோகிலாவின் அம்மா சொல்வது அவளுக்கு உண்மையாக இருக்கிறது. அவளுக்குத் தங்கத்தகடுபோல் ஜொலிக்கும் அவரோ தமது பல்பொருள் அங்காடியில் அவளுக்கு வேலையும் தந்து பிரத்தியேக வேலையும் தருகிறார். அவருக்கு இந்தியாவில் குடும்பம் இருப்பது தெரியாமல் தன்னைப்பலிகொடுத்த அபாக்கியசாலி அவள். சோவென வீழும் பீலித்தண்ணீரில் மனச்சுமைகளை எல்லாம் கரைத்துவிட்ட நிம்மதியில் நின்றிருந்தபோது, தலையில் வீழும் நீர் மெதுமெதுவாய் அவளின் கோணல்வகிடை நேர்வகிடாய் மாற்றிவிடுகிறது. அந்தப்பீலியில் இருந்து வழிந்தோடி தேங்கிக்கிடக்கும் அழுக்குநீரில் குழுசைகளை தொலைத்துவிட்ட கருத்தடை அட்டை மட்டும் சுற்றி சுற்றி வட்டமடிக்கிறது.
சலனங்களின்றி அமைதியாக வாழும் ஒரு தோட்டத்தை நாகரீகப்போர்வையில் குலைத்துவிடும் கொழும்புத்தம்பியால் பாதிக்கப்பட்ட மல்லிகா என்ற மாணவி தீக்குளித்து தற்கொலை செய்கிறாள். அதே தோட்டத்திலிருந்து கொழும்புக்கு ஓடிப்போய்விட்டு திருவிழாக்காலங்களில் தோட்டத்திற்கு வருபவனுக்கு தோட்டமும் அவனிடம் ஏமாறும் மல்லிகாவும் சூட்டிய பெயர்தான் கொழும்புத்தம்பி. மல்லிகாவின் தற்கொலைக்கு யார் காரணம் என்பதை தோட்டம் அறியவில்லை. ஆறுமாதங்களுக்குப்பின்னர் வந்த தீபாவளி கொண்டாட்டத்தில் தோட்டம் மீண்டும் களைகட்டுகிறது. கொழும்புத்தம்பியின் தோட்ட லயத்தின் தொங்கல் வீட்டிலிருந்து பாட்டொலி கேட்கிறது. அங்கே போனவருஷம் வீட்டுக்குத்தெரியாமல் கொழும்புக்கு ஓடிய சுகுமாரும் வந்திருந்தான் என்ற செய்தியின் ஊடாக மற்றும் ஒரு கொழும்புத்தம்பி அந்தத்தோட்டத்தில் உருவாகின்றான். அந்த வீட்டிலிருந்து ஒலிக்கும் காதல் பாட்டுக்கு அடுத்த லயத்தில் வாழும் சின்னப்பொண்ணு நாணிக்கோணி காலால் கோலமிடுகிறது. கிரங்கியபடி நிற்கிறது. கொழும்புத்தம்பி மட்டுமல்ல, மல்லிகாவும் மறுஅவதாரம் எடுக்கிறாள் இந்தக்கதையில்.
மலையகத்தில் பெரும் பிரச்சினைகளில் ஒன்றாகப்பேசப்படுவது தோட்டத்தொழிலாளர்களில் ஆண்களில் பெரும்பாலனவர்களிடமிருக்கும் மது மீதான ஈர்ப்பு. மதுவினால் சீரழியும் குடும்பங்கள் பற்றிய பல கதைகளையும் செய்திகளையும் படித்துவருகின்றோம். மது அருந்துவதற்குத்தான். குளிப்பதற்கு அல்ல!!!. அதனை அருந்தி தரையில் வீழ்ந்தால்தான் போதையில் மேன்மையிருப்பதாக மதுப்பிரியர்களில் பலர் நினைக்கிறார்கள். மதுவை தமக்கு அடிமையாக வைத்திராமல் மதுவுக்கே அடிமையாகிவிடும் மனிதர்கள் பற்றிய கதைகளையும் ஏனைய எழுத்தாளர்கள் போன்று சிவனு மனோஹரனும் எழுதியிருக்கிறார்.
தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய எத்தனிக்கும் கண்டக்குவை காதலன் தந்த மட்டக்குச்சியாலேயே தாக்கி கொலைசெய்துவிடும் புஸ்பமும் (மட்டக்குச்சி) ஜேசுமணி சித்தாப்பாவினால் வன்கொடுமைக்கு ஆளாகும் உடல் பருவமடைந்திருந்தாலும் உள்ளம் பருவமடையாத உடல் ஊனமுற்ற ஜென்ஸியும், ஏமாற்றத்தால் தன்னைத்தானே எரியூட்டிச்சாகும் மல்லிகாவும், ஏமாற்றப்பட்டாலும் புத்திசாலித்தனத்தோடு தப்பித்துக்கொள்ளும் கோகிலாவும் சிவனு மனோஹரனின் முழுமையான பாத்திர வார்ப்புகள்.
படிமங்களின் ஊடாக கதையை நகர்த்திச்செல்வதிலும் இவரது கலைச்சாமர்த்தியம் தெரிகிறது. அத்துடன் அக்கினிப்பிரவேசத்தின் பல் பரிமாணங்களும் வெளிப்படுகிறது. மட்டக்குச்சி கதையின் இறுதியில் கீரி - பாம்பு சண்டையும், ஜென்ஸியும் ஜேசுமணி சித்தப்பாவும் கதையில் வரும் பூனை, தான் ஈன்ற குட்டிகளையே சாப்பிட்டுவிடும் காட்சியும் - காமன் பொட்டலில் வரும் காமன் கூத்தும் படிமங்களை அழகாக சித்திரித்திருக்கின்றன. வகுப்பறைக்காவியங்கள் கதையில் நேர்ந்திருக்கும் படைப்பு நுட்பக்கோளாறு பற்றியும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். அதில் வரும் ரவி சேர் என்ற பாத்திரம் பற்றிய சித்திரிப்பிலும் கதையை நகர்த்திச்செல்லும்போது குறிப்பிட்ட பாத்திரத்தின் தன்னிலை சார்ந்த உரைநடையின்போதும் படைப்பு நுட்பத்தில் வரும் சேதம் தெரிகிறது.
இதில் இடம்பெற்றிருக்கும் கதைகள் சிவனு மனோஹரனால் வேறு வேறு காலப்பகுதிகளில் எழுதப்பட்டவை. அமராவதியின் ஆறாம் பிரசவம், காமன் பொட்டல் என்பன மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தினதும் தமிழ்க்கதைஞர் வட்டத்தினதும் ( தகவம்) பரிசில் பெற்ற கதைகளாகும். ஞானம், வீரகேசரி, மகுடம், 'தீ' ஆண்டு மலர், சூரியகாந்தி, வெண்கட்டி ஆண்டுமலர் ஆகியனவற்றில் வெளியான கதைகளும் இடம்பெற்றிருக்கும் இந்தத்தொகுதியின் மூலம் மலையகத்தில் மற்றும் ஒரு படைப்பூக்கம் கொண்ட எழுத்தாளராக தோன்றியிருக்கிறார் சிவனு மனோஹரன்.
மலையகத்தின் சமகால ஆத்மாவை சித்திரிக்கும் நாவல்களைப் படைக்கக்கூடிய ஆற்றலும் இவருக்குண்டு என்பதை இவர் எழுதும் கதைகளின் போக்கிலிருந்து தெரிகிறது. அதனால், ஈழத்து இலக்கியத்திற்கு குறிப்பாக மலையக இலக்கியத்திற்கு நம்பிக்கை தருகிறார் சிவனு மனோஹரன். வெவ்வேறு காலப்பகுதியில் எழுதப்படும் சிறுகதைகளை தனிநூலாகத்தொகுத்து வெளியிடுவதற்கு முன்னர் மீண்டும் ஒரு தடவை, அல்லது பல தடவைகள் படித்து செம்மைப்படுத்தவேண்டிய அவசியம் குறித்தும் படைப்பாளிகள் சிந்திக்கவேண்டும். அதனால், படைப்புத்தொழில் நுட்பக்கோளாறுகளை தவிர்க்கமுடியும். மலையகத்தில் ஆக்க இலக்கியத்துறையில் வளர்ச்சியடைந்துவரும் சிவனு மனோஹரனுக்கு எமது வாழ்த்துக்கள்.
letchumananm@gmail.com