எதிர்வினை 5 : ஸைபர் வெளியும் மனித உடல்களும்: நிழல் மிருகம் யமுனா ராஜேந்திரன்
விவாதம் தெளிவானதொரு கட்டத்தை அடைந்திருக்கிறது என்றே நினைக்கிறேன். இது தொடர்பாக நான் எழுதும் இறுதிக் கட்டுரை இதுதான். எனது கருதுகோளைத் தெளிவாக முன்வைத்துவிட்டு பிற வேளைகளுக்கு நகர்ந்து விடத் திட்டம். காரணம் : எனது நோக்கம் நிழல்மனிதர்கள் குறித்த ஒரு சித்திரத்தைப் பொதுமகனின் முன் வைப்பதன்றி வேறில்லை. மேலாக விவாதங்கள் என்றும் முற்றுப் பெறுவதில்லை என நம்புகிறவன் நான்.
1.முதலாவதாக இந்த விவாதம் புனைபெயர்கள் தொடர்பானது இல்லை. மனித உயிர்களின் உதிர்வு தொடர்பான மத,சாதிய,இன விவாதங்களை நிழல் பெயர்களில் மேற்கொள்கிறவர்கள் உருவாக்குகிற தீய விளைவுகள் தொடர்பானது. எனது அடையாளங்களை முன்வைத்து என்னைப் பற்றி ஓரு சித்திரத்தை அடைந்து விவாதங்களை வரையருக்கிற ஓருத்தரின் அடையாளங்கள் தெரியாமல் நான் விவாதிப்பது சாத்தியமில்லை. நான் ஒரு ஸ்டாலினிஸ்ட் என வரையறை செய்வதற்கான ஆதாரங்களை நான் முன்வைக்கும் எனது வாழ்வு கருத்துக்கள் போன்றவற்றிலிருந்து உருவாக்கும் ஒரு நிழல் மனிதன், குஜராத் கொலைகளில் சம்பந்தப்பட்டு விட்டு தமிழ் நாட்டுக்கு ஓடி வந்துவிட்ட ஒரு கொலைகாரன் என்றோ, கிறித்தவக் கன்னியாஸ்திரிகளை பாலியல் பலாத்காரப்படுத்திவிட்டு தப்பித்திரிகிற ஒரு கயவன் என்றோ, அல்லது மணிரத்தினம் தொடர்பாக காரசாரமாகக் கட்டுரைகள் எழுதிவிட்டு அவரிடமே உதவி இயக்குனராக வேசம் கட்டுகிற ஒரு போக்கிரி என்றோ தெரியாமல் எப்படி சம்பந்தப்பட்ட நபரோடு நான் விவாதிப்பது என்பதுதான் எனது கேள்வி.
இதுதனிப்பட்ட இருவர் தொடர்பான விவாதங்கள் குறித்த எனது கேள்வி. ஜங்க் மெயில் பில்ட்டரை உபயோகித்துவிட்டு ஒரு தனிநபராக புத்தகம் படிக்க அமர்ந்துவு¢டுவது ஒரு இதற்கான சாதாரணமான விடை என்பது எனக்குத் தெரியும். அமைப்பு பற்றி சூர்யா குறிப்பிடுகிறார். அமைப்பு என்றால் என்ன? இந்தியாவில் எந்த கம்யூனிச அமைப்பு ஆட்சியதிகாரத்தை வைத்து ஸ்டாலினிய வழிமுறைகளைக் கையாண்டு கொண்டு இருக்கிறது? எனது அமைப்பு என்று இப்போது ஒன்று இருக்குமானால் அது குஜராத்தில் தாய்மார்களின் கருவைக்கிழித்து வெளியிலெடுத்து நரவேட்டையாடியவர்களை விவரணப்பட இயக்குனர் போல உளவறிந்து மனித உரிமை அமைப்புக்கு தகவல் தருகிற அமைப்பாகத்தான் இருக்கும். பிஜேபிக்கார்கள் செயல்பட இன்று இந்தியாவில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதற்கு எதிர்விணை செய்வதுதான் இன்று ஆபத்து. பொத்தாம் பொதுவாக அமைப்பு பற்றிய பேச்சு வெற்றுப்; பிதற்றல்.
2.பிரச்சினை தனிநபர் தொடர்பானது அல்ல. ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் தொடர்பானது. ஐம்பது ஆண்டு காலம் உலகில் நடைபெற்ற பெரும்பாலுமான பெருங்கொலைகள்; மதம்,இனம் போன்றவற்றையே மையமாகக் கொண்டிருந்திருக்கிறது. இந்தியாவில் சாதியமும் இதில் சேர்ந்திருக்கிறது. இந்தியாவில் தற்போது மதமே இதனது குவி மையமாக இருக்கிறது. அரசியல் தற்போது மூன்று தளங்களில் நடக்கிறது. 1. அன்றாட அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள். 2. இலக்கியக் களத்தில் நடக்கும் அரசியல் 3. சைபர் வெளியில் நடக்கும் அரசியல். தமிழகத்தில் இலக்கியக் களத்தில் இன்று போல அரசியல் அணிகள் பிரிந்திருக்கிற காலம் முன்னெப்போதும் காணவியலாதது. பிஜேபி அரசியல் தமிழகத்தின் புதிய பரிமாணம் எனில் தமிழ் இணையத்தில் ஒரு கருத்தியல் பரப்பாக உருவாகிவரும் கலாச்சார இந்துத்துவம் இன்னொரு பரிமாணம். இந்த மூன்று நிலைகளிலும் நடக்கும் கருத்தியல் விவாதங்களில் விடுபட்ட புள்ளிகளையும், மெளன இடைவெளிகளையும் இணைப்பதுதான் எனது நோக்கம்.
3.சமகாலம் சமஇடத்தில் பற்பலர் சந்தித்து உரையாடுதென்பது ஒரு அரசியலையும் செயல்பாட்டையும் இணைக்கும் தன்மை படைத்தது. தரையிலிருந்து சைபர் வெளிக்கும் இது நகர்ந்திருக்கிறது. சியாட்டிலிலும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் உலகவயமாதல் எதிர்ப்பு அரசியல்காரர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் திரள்வதற்கான வாய்ப்பையும் தகவல் பறிமாற்றத்தையும் இணையமே சாத்தியமாக்கியது.
பிற்பாடு அது ஒரு சமூக சக்தியாகவும் ஆனது. வோர்ல்ட் சோசியல் போரம் அத்தகையதுதான். இதனை வலதுசாரிகளும் இதே வகையில் பயன்படுத்த முடியும். எங்கெங்கோ இருக்கும் சூர்யா, நேசகுமார், ஜெயமோகன் பேன்றோர் சமவேளையில் சம இடத்தில் சந்திக்கிறார்கள்.
அவர்களது சார்புகள் ஒன்றாக இருக்கிறது. அவர்கள் எதிர்க்கிற விசயங்களும் ஒன்றாக இருக்கிறது. இதில் நிஜமனிதர் விட்ட மெளன இடைவெளிகளை நிழல் மனிதர்கள் முழுமைப்படுத்தி உருவாக்குவது என்பது ஒரு கருத்தியல் உருவாக்கச் செயல்பாடு. அரவிந்தன் நீ¢லகண்டனுக்கு ஜெயமோகன் திண்ணையைக் கைகாட்டி விடுகிறார். ராம கோபாலன் போல அரவிந்தன் நீலகண்டனுக்கு நெகிழ்வு காட்டக் கூடிய மனிதராக ஜெயமோகன் இருக்கிறார். நிழல் மனிதனான சூர்யா இவர்கள் அனவரும் முன்வைக்கும் விவாதங்களை மையப்படுத்தித் தொகுக்கிற மனிதனாக இருக்கிறார். இது ஒரு கருத்தியல் உருவாக்;கச் செயல்பாடு. இந்தக் கண்ணி இன்னும் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்கிறார் சூர்யா. ஜெயமோகனும் அதையே தான் சொல்கிறார். இடைவெளிகளை இணைக்கும் வெளியாக இருக்கிற சைபர் வெளியில் இவர்களது செயல்பாடு உருவாக்க விரும்புவது இந்துத்துவம் அல்லாது வேறென்ன? வேசம் கட்ட வேண்டாம் வெளியே வாருங்கள் என ஏன் சொல்கிறேன் எனில், நிழல் மனிதர்களோடும் மெளனம் சாதிக்கிற மனிதர்களோடும் விவாதிப்பதை விட அரவிந்தன் நீலகண்டனோடு விவாதிப்பது ஆரோக்கியமானது என்கிற காரணத்துக்காகத்தான்.
4.சினிமாவில் சாதிக்க நினைக்கிற நிழல்மனிதராக சுர்யாவால் ஏன் வெளிப்படையாகப் புத்தகங்களைச் சுமக்க முடியாது வெளிப்படையாக எழுத முடியாது என்பதற்கான கேள்விக்கு நேரடியிலான பதிலே இல்லை. மாறாக சைபர் வெளி தரும் சுதந்திரத்தில்தான் நேசகுமார் பல விசயங்களை எழுத முடிகிறது என்கிறார். நேசகுமார் முன்வைக்கும் பல விசயங்கள் ஆங்கில மொழியில் திரும்பத் திரும்ப முன்வைக்கபட்டவைதான். அதில் கண்டுபிடிப்புகள் என ஏதும் இல்லை. நான் ஏற்கனவே சொன்னப இதனைவிடவும கடுமையான விசயங்களை அரவிந்தன் நீலகண்டன் நேரடியாகத் தான் எழுதி வருகிறார்.அரவிந்தன் நீலகண்டனை அடியொற்றி அதனை ஒரு திட்டமாகவே ஆசாரகீனன் செய்த வருகிறார். ஜெயமோகன் பொதுவாகச் சொந்தப் பெயரில் எழுதவியலாததற்கான தொழில்முறை சார் காரணங்கள சொல்கிறார். அரசுத் துறை தனியார் துறை எனக் காரணங்கள். இந்தக் காரணங்களைத் தாண்டித்தான் எல்வோரும்; எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அரசுத் துறையோ தனியார் துறையோ எதுவாயினும் முழுநேர எழுத்தாளனாக ஆசைப்பட்டுக்கொண்டு வேலை பார்க்க முடியாது. அரசியல் கருத்தியல் நெருக்கடிகள் ஆளுகிற அரசுகள் தனியார் முதலாளிகளின் சார்புகள் போன்றவற்றுக்கு ஏற்பத்தான் இருக்கும். இதனை மீறித்தான் எழுத்தாளன் செயல்பட வேண்டும். தமிழக அளவிலும் இந்திய அதிகார மட்டத்திலும் இன்று இந்துத்துவ அரசியலை எழுத அஞ்ச வேண்டியதில்லை. ஜெயமோகன் அரசு நிறுவனம் சார்ந்து கூட தனது சார்பு நிலைகளைச் சரியாகவே முன் வைத்திருக்கிறார். ஆகவே இது குறித்தெல்லாம் ஒரு பொறுப்புள்ள எழுத்தாளன் கவலைப்படக் கூடாது. திகசி பிரச்சினையில் ஜெயமோகன் சாகித்ய அகாதமி பற்றி மட்டும்; பேசவில்லை. அதன் பிரதியில் மார்கசிஸ்ட்டுகளின் இந்திய அதிகார மட்ட ஊடுறுவல், நிறுவனங்களில் அவர்களது ஊடுறுவல் பற்றியெல்லாம் அவர் எழுதியிருக்கிறார். பிஜேபி, இந்திய வரலாற்றுக் கழக மார்க்சிய வரலாற்றாசிரியர்களின் நூல்களைத் தடை செய்து, அவர்கள் கழகத்திலிருந்து வெளியேறிய காலத்தில்தான் ஜெமோ இவ்வாறு எழுதுகிறார்.
இந்துத்துவ வரலாறு எழுதுமுறையை பாடநூல்களில் பிஜேபியினர் நுழைத்த வேளையில்தான் ஒரு இலக்கிய விவகாரக் கட்டுரையில் ஜெமோ இவற்றையெல்லாம் எழுதுகிறார். அரசு அதிகாரம் பற்றிய காரணங்களெல்லாம் அறுதப் பழசு. அதைப்போலவே 9 பெயர்களில் ஜெமோ எழுதுகிறார் என அவர் மீது மட்டுமே ஏன் குற்றச்சாட்டு வருகிறது என அவர் யோசிக்கவில்லையா? அதுவும் இவ்வாறு குறிப்பிடப்படும் எழுத்தாளர்களில் பெரும்பலுமானவர்கள் இந்துத்துவச்சார்பு உள்ளவர்கள் என்கிற பொது உண்மை அவரது பார்வைக்குள் வரவில்லையா? ஜெமோ, சுபமங்களா, சொல்புதிது, திண்ணை என புனைபெயர்களின் சந்தையாக அவர் இருப்பது விசித்திர விளையாட்டு இல்லாமல் றேறென்ன? இலக்கியத்துடன் இணைந்த கருத்து விவாதம் எனும் பெயரில் ஜெமோ புரியும் அரசியல் சாகசத்திலுள்ள இடைவெளிகளை இவர்களது கட்டுரைகள் நிரப்புகிறது. சூர்யா ஜெமோவின் மெளன இடைவெளிகளை நிரப்புவது போல. மேலாக இலக்கியத்தடன் இணைந்த கருத்து விவாதத்தின் நீட்சியாக ஜெமோ சொல்லாதுவிட்ட அரசியலாக பிஜேபியின் அரசியல் இருப்பதுதான் துரதிருஷ்டம்.
5.ஸ்டாலினியம் தொடர்பான விவாதங்களில் தனது வகை மார்க்சிய சார்புக்கு இரு வகையான ஆளுமைகளை ஜெமோ அடிக்கடி வலிந்து வரவழைத்துக் கொள்கிறார். ஒருவர் கோவை ஞானி. பிறிதொருவர் சோவியத் யூனியன் உடைவு பற்றி எழுதிய காலஞ்சென்ற ரெறி சிறிவர்த்தனா. கோவை ஞானி இந்திய வாழக்கையும் மார்க்சியமும் நூலை எழுதியவர். நடைமுறை அரசியல் சார்ந்து அவர் ஏதும் காத்திரமாக எழுதியவர் அல்ல. தத்துவம் சார்ந்தே பல பிரச்சினைகளையும் பார்க்கிறவர் அவர். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக கண்கள் மங்கிய நிலையில் அவர் பிறரது உதவியையே தனது அறிதலுக்காக முற்றிலும் சார்ந்திருக்கிறார். அவர் மீதான அன்பும் மரியாதையும் கொண்டு எனது இந்தியப் பயணத்தின் போது பலமுறை நான் அவரைச் சந்தித்து தகவல்கள் பறிமாறியிருக்கிறேன். அவரது பத்து ஆண்டுகளுக்கும் மேலான அறிதல்கள் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாகும். குறிப்பாக இணையத்தில் நடைபெறும் விவாதங்களை அவர் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பே இல்லை. அவர் தனது இந்திய வாழக்கையும் மார்க்சியமும் நூலில் முன்வைத்த விவாதங்கள் ஜெயமோகனுக்கு ஒரு வற்றாத சுணை. நடைமுறைக்குச் சாத்தியமில்லாததான வெறும் தத்துவ மீ¢ட்டல்கள் அவை என்பது தவிர அவற்றுக்கு இப்போது ஏதும் பெறுமதியில்லை. கிறித்தவம் போலவோ இஸ்லாம் போலவோ ஏன் இந்துத்துவம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை இறையியலைத் தரமுடியவில்லை என்பதற்கான பதில் ஞானியின் தத்துவ நீட்சியில் இல்லை. ஜெமோ ஞானியைத் துணைக்கழைப்பது அவரது கருத்தியல தந்திரோபாயமன்றி வேறில்லை. றெஜி சிறவர்த்தனா ஜெமோவினால், றெஜியின் ஆளுமைக்கு எதிரான எல்லைகளுக்காக உள்வாங்கப்பட்டவர். ரெஜி ஒரு சிங்கள தேசியவாத பெளத்தவ மதமைய திட்டத்தைக் கொண்டிருந்தவரல்லர். ஸ்டாலினியச் சித்திரவதைகள் தவிர்த்த, சிங்கள பெளத்த தேசியவாதம் தவிர்த்த, ஒரு சமுத்துவ சமதாயம் ரெஜி கனவு கண்ட சமுதாயம். ஆனால் ஜெமோவின் கனவுராஜ்ஜியம். இந்துத்தவ தரிசனம் சார்ந்த இந்திய தேசியம். றெஜியை தனது திரிபார்ந்த மார்க்சிய விரோதத்திற்கே ஜெமோ பயன்படுத்தியிருக்கிறார்.
6.ஜெமோவின் அரசியல் மீதான விமர்சனங்களை அவரது படைப்புகள் அனைத்தினதும் மீதான விமர்சனமாகத் திசை திருப்புவதை அவர் ஒரு திட்டமாகக் கொண்டிருக்கிறார். ஜெமோவுடன் மார்க்சியர்கள் விவாதத்தில் ஈடுபட்ட தருணங்கள் பெரும்பாலுமானவை அவரது அரசியல் கருத்துக்கள் தொடர்பானதாகும் மார்க்சின் சொந்த வாழ்வு குறித்து, மார்க்சியர்களின் அதிகார மட்ட ஊடுறுவல்கள் குறித்து,.ஸ்டாலினியம் குறித்து, நாவாவின் நாட்டுப்பறவியல் குறித்து அவர் பேசிய தருணங்களாகும். எந்த முக்கியமான தமிழகத்து எழுத்தையும் போலவே ஜெமோவின் நாவல்கள் சிறுகதைகள் என அனைத்தையம் தேடி வாசிக்கிற வாசகன் நான். இலக்கியத்திற்கும் அரசியலுக்கும நேரடியிலான சமன்பாடு இல்லை என்பது குறித்து அதிகம் எழுதியவர்கள் மார்க்சியர்கள்தான். ஜெமோவின் எல்லாப் படைப்புகளிலும் அவர் அரசியல் செய்கிறார் என்பதல்ல எனது வாசிப்பு. ஒரு மனிதனாக மானுட வாழ்வின பல பரிமாணங்களைப் பேசுகிற படைப்பாளி எனும் அளவில் அவரது நாவல்களிலும் சிறுகதைகளிலும் மனித மனதின் சிக்கல்கள் அறபுபதமாக வெளிப்படுவதை என்னால் பல சந்தர்ப்பங்களில் உணரமுடிந்திருக்கிறது. சமீபத்தில் சுராவின் குழந்தைகள் ஆண்கள் பெண்களையடுத்து எனது துணைவிக்கு நான் தேர்ந்து வாசிக்கக் கொடுத்த நாவல் காடு. ஆனால் அவரது அரசியல் சமூகக் கருத்துக்கள் அவரது படைப்பில் உள்ளார்ந்தும் விட்டுவிலகியும் இருக்கும் என்பதனை ஒரு இயல்பான நியதியாக அவரால் ஒப்ப இயலாது இருக்கிற அகந்தையோடும் மூடுண்ட மனதோடும் ஜெமோ இருப்பதுதான் சிக்கலான பிரச்சினையாக இருக்கிறது.
7.ஜெமோ தனது கருத்துக்களை எப்போதும் தன் பெயரில்தான் எழுதிவந்திருப்பதாகச் சொல்வது கடைந்தெடுத்த பொய். தளையசிங்கம் கருத்தரங்கு சம்பந்தமான பிரச்சினையில் ராஜநாயகம் குறித்து நாஞ்சில்நாடன் பெயரில் ஜெமோ கட்டுரையை எழதிப் பிரசுரித்தது தமிழகத்தின் பிரபலமான மாறுவேச விளையாட்டு;. அந்தக் கட்டுரையைத் தான் எழதவில்லை எனப் பொதுமேடையில் நாஞ்சில்நாடன் ஒப்புக்கொண்டதும் ஒரு பிரபலமான இலக்கிய வாக்குமூலம். தன்னைப் பற்றி விமர்சிப்பவர்கள் அனைவருக்கும் உள்நோக்கம் இருப்பதாகப் பிரமையுடன் குறிப்பிடும் ஜெமோ, தான் உள்நோக்கம் இல்லாமல்தான் பிறர் பெயரில் எழுதிப் பிரசுரித்தார் என்பது வேடிக்கையாக இருக்கிறது. தான் முற்போக்காளராகத் தன்னைக் காட்டிக் கொண்டதில்லை என்று அவர் சொல்வதும் ஒரு வேடிக்கை.
தொழிற்சங்க இயக்கம் பற்றி அவ்வப்போது பேவதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குத்தான் தான் ஓட்டுப் போட்டதாகச் சொல்வதும், இ.எம்.எஸ்.பற்றி அவ்வப்போது குறிப்பிடுவதும், ஸ்டாலினிய விமர்சகராகத் தன்னை முன்னிறுத்திக் கொள்வதும், மனித உரிமை அக்கறையாளராகத் தன்னைக் காட்டிக் கொள்வதும் அவருடைய முற்போக்கு வேசம் இல்லையென எம்மை நம்பச்சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. புனைபெயர்களில் தான் நடமாடுவதும், புனைபெயர்களில் உள்ளவர்களைத் தனது கருத்துக் கடத்திகளாகப் பாவிப்பதும், பிறர் பெயரில் எழுதிப் பிரசுரிப்பதும் இலக்கியக் கலைசார்ந்த பிரச்சினை என ஜெமோ கருதுவாரானால் அது ரொம்ப ரொம்பத் துரதிருஷ்டம்.
8.பொறுப்புணர்வடனும் விவாத நாகரிகத்துடனும் பதிலளித்திருக்கும் நிழல் மனிதரான நேசகுமாருக்கு முதலில் எனது நன்றி. நிழல் மனிதர்களை ஒன்றுபடுத்தும் கருத்துரு சம்பந்தமான எனது அவதானமும், சூர்யா போன்று பிறரது அடையாளங்களை முன்னிறுத்தி, ஆனால் தன்னை மறைத்துக்கொண்டு, வைக்கும் அதிரடிப் பேத்தல்கள் தொடர்பானதே எனது கரிசனம். கருத்து விவாதங்களை முடக்குவதென்பதோ அவ்வாறான விவாதங்களை வெளியிடாதீர்கள் என வலைத்தளங்களைக் கோருவதோ அல்ல எனது நோக்கம்.
வேலை கடும்பம் ஆன்மீகம் அது தொடர்பான சுகங்கள் என்பதனை மீறாமல் கருத்து விவாதம் மேற்கொள்வதாக நேசகுமார் அப்பாவித்தனம் போல விசயங்களைக் குறிப்பிட்டாலும் கூட, அவர் எடுத்திருககும் நிலைபாடு அப்படியான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது அல்ல. நாகூர் ரூமியினுடையதும் நேசகுமாரினுடையதுமான திசைகளின் நீட்சி இரு அடிப்படைவாதங்களின் நிலை நிறுத்தலுக்கும் சமரசத்துக்கும் இட்டுச்செல்லுமேயொழிய, மதநீக்கம் பெற்ற ஒரு மனிதன் வாழமுடிகிற ஒரு சமூகத்துக்கு இட்டுச்செல்லாது. மனிதர்களை மதஜீவிகளாகவே அடையாளம் காண்பதும் அதனையே மனிதர்களுக்கிடையிலான முதல் முரணாக முன்னிறுத்துவதும் ஒரு சமூகத்திட்டம். இதனைத் தான் புஸ்சும் பின்லாடனும் சாவர்க்கரும் செய்கிறார்கள்.
9.எந்த மத சமூகத்திலும் அந்தந்த மதப்பண்பாடு மற்றும் வரலாறு சார்ந்து மதநீக்க அடிப்படையில் சிந்திக்கிற பாரவையொன்று இருக்கிறது. நிறுவனங்களிலிருந்தும் மதபீடங்களிலிருந்தும் விலகிய பார்வை இது. இந்தப் பார்வையை இந்தியாவில் இந்துத்துவ இஸ்லாமிய அமைப்புகள் சாராத சிந்;தனையாளர்கள் முன் வைத்து வருகிறார்கள். இஸ்லாமிய சமூகங்களிலும் இத்தகைய சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் ரொமிலா தாப்பர், ஹிர்பான் ஹபிப், அய்ஜஸ் அஹமது, அஸ்கர்அலி என்ஜினியர் என்றால், இஸ்லாமிய நாடுகளிலும் மேற்கிலும் இவர்கள் தாரிக் அலி, சமிர் அமின், ஜியாவுதின் சர்தார், இக்பால் அஹமது என இருக்கிறார்கள். இவர்களில் எவரும் தத்தமது மதங்களைப் பாதுகாத்து நிற்க எழுதுபவர்கள் அல்ல. இவர்களில் ஜியாவுதின் சர்தார் போன்றவர்கள் நம்பிக்கை¨யாளர்கள், விஞ்ஞான சிந்தனையைப் பற்றி நிற்பவர்கள், பயங்கரவாத்திற்கு எதிரானவர்கள். இதுவன்றி கால இடப் பிரமாணத்தில் வைத்து இஸ்லாமையும் குரானையும் பிரதியையும் விளக்குகிறவர்கள் இருக்கிறார்கள். காலம் கடந்த பிரதியாக குரானைக் கருதுகிறவர்களல்ல இவர்கள். மாற்றத்திற்குரிய. அதே வேளை ஒரு வாழ்வியல் அறநெறிசார் தொகுப்பாக குரானை விளக்குகிறவர்கள் இவர்கள். இவர்கள் சஞ்சரிக்கும் தளமல்ல நேசகுமாரும் நாகூர்ரூமியம் சஞ்சரிக்கும் தளம். இணையும் தரும் பாதுகாப்பில் ஆபத்தான பிரச்சினையை எழுதுகிற நேசகுமாரும் நாகூர்ரூமியும் இருதுருவங்களில் நிழலில் கைகுலுக்கிக் கொள்கிறபோது,
இதனைப் படிக்கிற, படித்துத் தெருவில் இறங்குகிறவர்கள்தான் பிணங்களைப் புரட்டுகிற பாமரர்கள் என்பதை இவர்கள் இருவரும்; உணரவில்லையா?
10. கோவையில் மரணமுற்ற இந்துக்கள்; நேசகுமாரிடம் குறிப்பான எண்ணிக்கையாக இருக்க இஸ்லாமிய சகோதரர்கள் அருவங்களாக இருக்கிறார்கள். இந்து முஸ்லீம்களிடம் அடிப்படையான இறையியல் புரியாமையினால் அல்ல கொலை அரசியல் அரங்கேறியது. அரசியல் அதிகாரம் நோக்கிய இந்துத் துவக் கருத்தியலை முன்நிறுத்தியவர்களால் மேற்கொள்ளப்பட்ட பாப்ரிமஜீத் தகர்ப்பைத் தொடர்ந்தே ஐம்பது ஆண்டுகளின் பின் இந்து முஸ்லீம் கொலைகள் நடைமுறையாக ஆகியிருக்கிறது. சொந்த நாட்டில் முற்றுகையிடப்பட்ட மனநிலையில் தான்; வாழ்வதாக நேசகுமார் எழுதுகிறார். ஜெயேந்திரர் விவகாரததில் பதட்டப்படுகிறார். அவர் நிற்கிற இடம்தான் அவரை ஜெமோவை நோக்கி மகாவிருட்சமென பிரமிக்க வைக்கிறது. அப்படியான பிரமிப்புகள் எனக்கில்லை. அரவிந்தன் நீலகண்டன் போன்று அமைப்புசார் பாதுகாப்பில்லாமல் தனது உயிர்பயம் கருதி இணையப் பாதுகாப்பை நாடியிருப்பதாகச் சொல்கிறார் நேசகுமார். ஏன்ன துரதிருஷ்டம் பாருங்கள், கோவையிலோ குஜராத்திலோ கொலையுண்ட மனிதர்களுக்கு இப்படியான இணையப் பாதுகாப்புகள் இல்லை. ஆனால் அவர்களைச் செலுத்திய கருத்தியலுக்கான விவாதப்பொருட்களை நேசகுமார் நாகூர்ரூமி போன்ற பாதுகாப்பு வேண்டும் நடுத்தர வர்க்கத்தினரிடம் இருந்துதான் பெற்றுக்கொண்டிருந்தார்கள். நேசகுமார் நிழலிருந்து தரும் சொந்தச் செய்திகளை நானும் அவரும் இரு தனிமனிதர்கள் எனும் அளவில் அவரது நாகரிகமான தொனி சார்ந்து நல்லெண்ணத்தின் அடிப்படையில் மட்டுமே அங்கீகரிக்க முடியும். ஆனால் சூர்யா, ஜெமோ,நேசகுமார், மற்றும் பிற இந்துத்துவச் சார்பு நிழல்மனிதர்கள் ஒரு வகையான கருத்துருவ உருவாக்கத்தைச் சைபர் வெளியில் உருவாக்குகிறார்கள் என்கிற அவதானத்தில் இந்த வெளிப்பாடு எந்தவிதமான மாற்றத்தினையும் உருவாக்கப்போவதில்லை. நிழல்மனிதர்கள் பற்றியும் மெளனங்களின் அர்த்தங்களைத் தேடுவது பற்றியுமான கட்டுரை கறுப்பு வெள்ளை போலத் தெளிவாக இருக்க வேண்டும என இவர்கள் எப்படி எதிர்ப்பார்க்க முடியும்? நிழல் வெளியிலிருந்து வெளியே அவர்கள் வருகிறபோது எனது கட்டுரை இவர்களுக்குத் தெளிவுபடும். அப்போது பிற பக்கப் பாதைகள் விரிவதையும் இவர்களால் காணவியலும்.
முற்றுப் பெறவியலாத எனது விவாதக்; கட்டுரையின் இறுதியாக இரண்டு விசயங்கள். இந்துத்துவம் உயிர்களை வேட்டையாடித் திரியும் நிழல் மிருகமாக ஸசபர் ஸ்பேசில் தன்னை ஸ்தாபித்துக் கொண்டுவிட்டது என்பது எனது ஒரு அவதானம். தமிழக அரசியலையும் மதவிவாதங்களையும் அறியாத சில அப்பாவி ஈழ இலக்கியவாதிகள் ( ஈழத்தில் ஏற்பட்ட விசேசமான இஸ்லாமியத் தமிழர்; தொடர்பான
அனர்த்தம் இதற்கொரு காரணம்) அதனது கருத்;துருவ பாதிப்புக்கு ஆட்பட்டு வருகிறார்கள் என்பது எனது இன்னொரு அவதானம். மாறாக இந்துத்துவம் ஒரு காலாச்சார சக்தியாகத் திரண்டுவிட்டது, கணிசமான எழுத்தாளர்கள் அதன் பின்பு திரண்டு வருகிறார்கள் என்பதான ஒரு சமூகவியல் உண்மையாகவும் இது இருக்கலாம். நிழல் மிருகத்தின் தொகை அதிகமாகும் போது அது நூறு றூறு கால்கள் கொண்டு தெருவில் இறங்கி பிணவெளியில் பசியாறும் என நினைக்கிறபோது மனசுக்குள் பதற்றமாக இருக்கிறது. இதிலிருந்து மீள ஜங்க் மெயில் பில்ட்டரைத் தேர்வதற்கும் மேலான பிறிதொன்றையே மனித நேசிப்பவனாக என்னால் தேற முடியும் என்று தோன்றுகிறது. அந்தப் பிறிதொன்று என்னவாக இனி இருக்கப் போகின்றது என்பதுதான் இப்போது எனக்கு முன் உள்ள கேள்வி. முற்றுப்பெறாத விவாத்தினை விட்டு தற்போது விலகுகிறேன். எங்கேனும் நண்பர்களாய் அல்லது எதிரிகளாய்ச் சந்திப்போம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.