பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர் -
பதிவுகள் மார்ச் 2005 இதழ் 63
1. நாகதோஷம்! - - சுமதி ரூபன் -
கலைந்து போன அவளின் கருங்கூந்தல் நீண்டு பரந்து அந்த அறைப் பரப்பை மூடிக்கொள்ள சாளரத்தினூடே ஊடுருவிப் புகுந்து கொண்ட மெல்லிய நீல நிலவொளி அவளின் நிர்வாண உடல்பரப்பில் பட்டுத் தெறித்து விட்டத்தில் ஏற்ற இறக்கங்களை காட்டி நின்றது. அவள் மோகித்திருந்தாள்.. அண்டத்தின் அனைத்தும் அவளின் காலடியில் என்பதாய் மமதையில் மரணத்திற்கும் வாழ்விற்குமான இடைவெளியை ரசித்தபடியே அவள் கலைந்தாள். நாகம் அசைந்தது.. மென் கறுப்புத் தோலைக் களைந்து விட்ட நாகம் தனது நுண்மையான கரும் நாக்கால் அவளின் பாதம் தொடங்கித் தலைவரை மெல்ல நகர்ந்து, முகர்ந்து, புகுந்து, நழுவ சூரியனைத் தொட்டுவந்தவள் போல் உடல்த் தணதணப்பில் அவள் சிணுங்கினாள்.. நாகத்திற்கு கோபம் தலைக்கேறியது.. என்றோ தான் ஏங்க வைக்கப்பட்டு ஏமாந்தது போல் ஆவேசம் வந்தது.. நாகம் வேகம் கொண்டு அவள் உடலை சுற்றி ஆவெசமாய் இறுக்க எலும்புகள் மெல்ல நொறுங்கத் தொடங்கின.. அவள் உச்சத்தின் வேதனையில் வாய்விட்டுக் கதறினாள்.. நாகத்தின் பார்வையில் குரோதம் தெரிந்தது.. மூடிக்கிடந்த அவள் கண்களை தனது நாக்கால் எச்சில் படுத்தி அவள் கண்விழிகளுக்குள் தனது பார்வையைச் செலுத்தியது.. அவள் வார்த்தைகளற்று வதைபட்டாள்.. அவள் வளைவுகளை அழுத்தி தனக்கான மோகத்தில் திளைத்து எழுந்தது நாகம்.. அவள் மூச்சுக்காற்று மெல்ல மெல்ல அடங்க களைப்புற்ற நாகம் விலகி அவள் கூந்தலுக்குள் நுழைந்து புரண்டு தனது தோலுக்குள் புகுந்து நகர்ந்து கொண்டது.. வரண்டு போய் அசைவின்றிக் கிடந்தாள் அவள். கண் விழித்தாள்.. தெளிவற்று குத்தி நின்றது பார்வை.. பல வருட கேள்விகளுக்கு விடைதேடிக்களைத்து இன்று பதில் கிடைப்பதாய் நம்பி மீண்டும் கலைந்து போனாள். மனதுக்குள் குரோதம் வளர்ந்தது.. ஆண்மையின் மிதப்பில் நாகம் அசைந்தது. விம்மிப்புடைந்து நிற்கும் தனது மார்புகளிளைத் தடவிக்கொடுத்து அதிசயித்தாள்.
நீள்சதுர கண்ணாடி பிம்பத்தை தனக்குள் வாங்கிப் பிரதிபலிக்க, இருப்பதால் இடையளவிலிருந்து தலைமட்டும் கண்ணாடிக்குள் அடங்கிப்போய், இடுப்பில் பிதுங்கும் தசை.. பதிவாய் தொங்கும் பருத்த மார்பகங்கள்.. உச்சியில் ஊடுருவும் வெள்ளை மயிர்;கள்.. கண்கள் உடலில் அர்த்தமின்றி மேய்ந்து வலம்வர குளிர்காற்று ஊடுருவி தலைமயிரைக் கலைத்துக் கன்னத்தில் போட்டது..
இயற்கை தனது கடமைகளைச் சளைக்காது செய்தருள, மனித மனம் மட்டும் குழப்பத்துடன் போராடிக்கொண்டிருக்கும்.. எனக்காக குழப்பம் இதுதான் என்று சபைமுன்னே எழுந்து நின்று மனம் திறந்து கொட்ட முடிவதில்லை.. இது சரி, இது தவறு என்ற எங்காவது அகராதியில் அடையாளப்படுத்தியிருந்தால் அதை வாழ்வின் கோட்பாடாய்க் கொள்ளலாம்.. நிறைவாய். மனம் திருப்தி பெறத் தவறென்று சுட்டு விரல் நீட்டும். சில, தவறோ என்று தடுமாற சரளமாக மற்றவை செய்து முன்னேறும்.. வாழ்வின் நிரந்தரமின்னையின் புரிதலால் இருக்கும் வரை இன்புற்றிருப்போம் என்றால், அது எப்படியும் வாழலாம் என்றில்லாம் இப்படித்தான் வாழவேண்டும் என்ற நியதியை இடீத்துக் கொள்ளும்..
அவள் புரண்டு படுத்தாள்.. உடைகளுக்குள் தன்னைப் புகுத்திக்கொள்ள ஏனோ பிடிக்கவில்லை.. தொலைபேசி அலறியது.. புகை மூட்டமாய் முகில்கள் அலைந்து, அலைந்து உடலைச்சிலுப்புற வைத்த வேதனையை அனுபவித்து அயர்ச்சியாய் கிடந்தாள். அவள் சிந்தனையில்..
அவளின் கூம்பிய தோற்றத்திற்கும் தோஷம் தான் காரணம் என்றார்கள்.. நாகபூசணி அம்மனுக்கு வெள்ளி தோறும் விரதம் பிடிக்கவைத்து சூரியப் பொழுதுக்கு முன்னம் குளிர்; நீரைத் தலைக்கு ஊற்றி கோவிலுக்கு நடையாய் அழைத்துச்செல்வாள் அம்மா.. தாவணி நழுவி விடும் தட்டையான மார்பு, கிள்ளிப்பார்க்க சதை இன்றி துருத்தி நிற்கும் எலும்புத் தேகம், அப்பி விட்ட கறுப்புத் தோல் துருத்திக்கொள்ளும் பற்கள்.. இருந்தும் அவள் பெண்.. திருமணம் குழந்தைகள் குடும்பம் என்ற கற்பனைகளை வளர்த்து வாழும் சாதாரண உணர்வுடைய இளம் பெண்.. அவளுக்கு அவளின் தோற்றத்தில் திருப்தியில்லை.. மாற்றமுடியுமா? மஞ்சளும் சவர்க்காரமும் கரைந்ததுதான் மிச்சம்.. திருமணங்கள் தட்டிப்போனது.. காரணம் நாகதோஷம்.. என்றார்கள்.. அம்மா எள்ளை இடித்திடித்துப் பிடித்து சாப்பிட வைப்பாள்.. அப்பிய கருப்பு மினுக்கம் காணும்.. எலும்பை மூடி சதை போடும் பற்களுக்கும் ஏதாவது நடக்கலாம். இருந்தும் எள்ளுச்சாப்பிட்டால் கர்ப்த்தைத் தாங்கும் பலம் வரும் என்றாள்.. தோஷத்தின் வேகம் அவளது சாதகத்தில் மட்டும் ஆழமாய் இருப்பதாய் புலம்புவாள்.. ஜாதகத்தை யாரிமாவது கொடுத்து மாற்றி விடலாம் என்ற அப்பாவின் ஆசை பின் வளவுக்குள் நாகம் புற்று அமைத்துக் குடிபுகுந்த போது மறந்து மறைந்து போனது.. திரைப்படங்களின் தாக்கம் அதிகமாகி அவளைப் பால் வார்த்துக் கும்பிடும் படியும் வற்புறுத்தினார்கள்.. ஜடமாய் நம்பிக்கையற்றுக் கோவிலுக்குள் வலம் வந்தவளை கோவில் பின் வீதியில் வாழ்ந்து வந்த நாகத்தின் நேரடிப்பார்வை கவர்ந்து விட.. பின்னர் கோயிலே கதியெனக்கிடந்தாள்..
மா பூசியது போல் தோல், சுருள் சுருளான தலைமயிர், அங்குமிங்கும் சுழரும் கரும் கண்கள்.. அவனின் பார்வை தன்னில் விழுந்தபோது அவள் துவண்டு போனாள். காதலுக்கு கண் இல்லை என்பதை முற்றிலும் நம்பினாள். பெரியவளான போது நிறுத்தப்பட்ட கல்வி.. ஆழமாகப் பிடித்து உலுக்கும் தோஷம்.. அவலட்டணமாக தோற்றம், முன் படலை தாண்டமுடியாத வாழ்க்கை எல்லாமே அவன் பார்வை அவள் மேல் பட்ட பின்னர் அவளை நெருடுவதில்லை.. மாலை நேரங்களில் பின் வளவிற்குள் சென்று நாகத்திற்குப் பாலூற்றும் தீவிரம் கூடியது.. மணிக்கணக்காக பாலூற்றிப் பிரார்த்தித்து இருள் மூழ்கும் போது வீடு திரும்புவாள். அவளை ஒருவரும் கேள்வி கேட்டதில்லை. நாகத்தின் வலிமை அவள் வாழ்வில் மாற்றத்தை உண்டு பண்ணுவதாகப் பெற்றோர்கள் நம்பினார்கள்.. எடை போட்டு அவள் உடலிலும் மாற்றங்கள் ஏற்பட்டது.. சந்தணம் கலந்த அவள் உடலின் மெல்லிய வியர்வை மணம். திரட்;சியற்றிருப்பினும் நாகத்திற்கு போதை தந்தது.. அவளை விழுங்கி விட தக்க சந்தர்ப்பம் ஒன்றிற்காய் காத்திருந்தது.. தினம் தினம் மாலை நேரம் பால் வைத்து இன்புற்றுப் போதை ஏற்றித் அவள் வாய் திறந்து கணீர் என்று தேவாரம் பாடும் போது நாகத்திற்கு முறுக்கேறும்.. மெல்ல எழுந்து வந்து அவள் உடல் சுற்றித் தழுவும். தட்டையான மார்புகளும்., வரண்டு போன வயிற்றுப் புறங்களும் அலுப்பைத் தர கண்மூடி அவள் தூரத்தில் இருக்கையில் மெதுவாக அவள் அடி வயிறு நகரும்.. அவள் கலகலவென்று சிரித்த படியே ஓடிவிடுவாள்..
வீட்டில் அவள் திருமணப்பேச்சை எடுத்த போது அவளை ஒருவரும் ஒரு பொருட்டாகவேனும் எண்ணவில்லை.. தோஷத்தையும் தாண்டி ஜாதகம் ஒன்று பொருந்திவந்த சந்தோஷம் அவர்களுக்கு.. வான் பிளக்க உரத்த குரல் எடுத்து நாகம் பற்றி அவள் கதறியது உதட்டோடு உறைந்து கொண்டது.. நாகத்தை தன் தொடை அமர்த்தி தலை வருடி பாலைச் சொட்ட ஊற்றிக் கண்கலங்க தன் விதியை நொந்தாள். நாகம் அவசரம் கொண்டது.. கைக் கெட்டியது வாய்கெட்டாமல் போகும் பயம் அதற்கு.. உடை தளர்த்தி உள்ளே புக முயன்றது.. அவளின் வேதனை அவளிற்கு உதறி விட்டு எழுந்து கொண்டாள்.. நாகம் பாய்ந்து அவளை வேகமாக அணைக்க அவள் திமிறினாள்.. மஞ்சள் கயிறைக் கொடுத்து கட்டி அழைத்துப் போ என்றாள்.. நாகம் தளர்ந்தது.. பின்வாங்கியது.. அவளின் உருவம் அதற்குப் பயம் கொடுத்தது.. கருந் தோலில் துருத்திக்கொண்டிருக்கும் பற்கள் நாகத்தைப் பார்த்துச் சிரித்தன.. மெல்ல மெல்லப் பின்வாங்கி ஓடி மறைந்தது நாகம்.. அவள் தனது தட்டையான மார்புகளைத் தடவிக்கொண்டாள்..
உடல் விறைக்க ஜடமாய்க் கிடந்து.. வலி எழும்ப வாந்தி எடுத்து, கண்கள் சிவக்க சாமி ஆடி முயன்று பார்த்து முடியாமல் போய் அவள் கழுத்தில் தாலி ஏறியது.. வெறுமனே கிடந்து தொடர்ந்து நான்கு குழந்தைகளை வயிற்றில் தாங்கிப் பெற்றுப் போட்டாள்.. இருந்தும் ஏங்கும் நாகத்தின் தழுவலுக்காய்.. நாகத்தை வீணே நழுவ விட்டதாய் மனம். கதறும். தன் வாழ்வின் முழுமை நாகத்துடனான புணர்விலேயே என்றும் தன் காதலைப் புனிதமானது என்றும் நம்பினாள்..
நீள்சதுர கண்ணாடி பிம்பத்தை தனக்குள் வாங்கிப் பிரதிபலிக்க இருப்பதால் இடையளவிலிருந்து தலைமட்டும் கண்ணாடிக்குள் அடங்கிப்போய் இடுப்பு இறுக, பதிவாய் தொங்கும் பருத்த மார்பகங்கள்.. வரிசையாய் மின்னும் பற்கள்.. பதினாறில் தவற விட்டது நாற்பதில் கிடைத்த சந்தோஷம் அவளிற்கு.. உச்சியில் ஊடுருவும் வெள்ளை மயிர்;களை மறைக்க மருதோண்டி போட்டுத் தலைகுளித்து தக,தகப்பாய், கண்கள் உடலில் அர்த்தத்தோடு மேய பெருமையாய் இருந்தது அவளிற்கு.. அவள் அழகாக இருந்தாள்.. இயற்கையைப் பணத்தால் வாங்கி விட்ட சந்தோஷம்.. அவளைப் புரட்டிப் புரட்டிப் போட்டு அவள் தானா என்ற சந்தேகத்தை மீண்டும் மீண்டும் தீர்த்துக்கொண்டான் அவன். கண்களில் வீணாக விட்டுவிட்டோமே என்ற ஏக்கம் தெரிந்தது.. அவள் குரூரமாகத் திருப்திப் பட்டாள்.. அவன் போய் விட்டான்.. இனி அழைப்பான், குழைவான், கெஞ்சுவான். அவளிற்குத் திருப்தியாய் இருந்தது..
அவள் மோகித்திருந்தாள்.. அண்டத்தின் அனைத்தும் அவளின் காலடியில் என்பதாய் மமதையில் மரணத்திற்கும் வாழ்விற்குமான இடைவெளியை ரசித்தபடியே அவள்.. மூலையில் தேடுவாரற்று புகை மூட்டமாய் அம்மாள்.. அருகில் பித்தளையில் நாகம்..
தொலைபேசி அலறியது. அவன் அழைத்தான் குழைந்தான்.. கொஞ்சினான்.. அவள் வெறுமனே 'ம்" கொட்ட அவன் குழைவில் தீவிரம் புகுந்தது.. அவன் செருமினாள். கண்கள் மின்ன பற்கள் புடைத்தன. எதுவோ அவளை உலுக்கி உயரத்திற்கு நகர்த்தியது.. அவள் மீண்டும் குரலைச் செருமி மெல்லிய குரலில் அவனிடம் கேட்டாள்.. 'நீ ஏதாவது மருந்து சாப்பிடலாமே.. பத்துவயதுப் பெடியன்ர போலல்லோ இருக்கு" தொலைபேசித் தொடர்பு அறுந்தது.
பதிவுகள் பெப்ருவரி 2005 இதழ் 62 -
2. வேட்கை! - சுமதி ரூபன்
காற்றின் ஓலம் அதன் வேகத்தைக் காட்டிக்கொண்டிருந்தது.. வெள்ளைப் புழுதியாய் பனிமணல் அலைந்து பறந்து ரோட்டில் கோலம் போட அதில் உருவங்கள் தேடித் தேடி நேரத்தைக் கொண்டுகொண்டிருந்தாள் வசந்தமலர்.. .வேலை முடியும் நேரத்திற்கு இன்னும் ஒருமணி நேரம் இருப்பது அலுப்பைத் தந்தது. நீண்ட நேரமாக காருக்குள் அடங்கியிருந்ததால் விறைத்துப்போன ஒற்றைக்காலை மேலே தூக்கி நீவி விட்டாள்.. முகுந்தன் சுருண்டு போய்க்கிடந்தான்.. சின்னதாய் ஒரு குறட்டை அவனிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.. காதில் வெள்ளி வளையம்.. நெல்வரம்பாய் பின்னிவிடப்பட்ட தலைமயிர் உச்சியில் தூக்கிக் கட்டப்பட்டிருந்தது.. கன்னத்தின் ஓரத்தில் ஒற்றைவரியாய் கோடாய் கச்சிதமாய் வெட்டப்பட்ட மெல்லிய மயிர் மோவாயில் ஆட்டுத்தாடியாய் முடிவுகண்டது.. கழுத்தில் வெள்ளி ஆரம் கறுத்துப்போய் நெஞ்சு மயிரோடு சிக்கி அவன் மெல்லிய மூச்சிழுப்பில் மேலும் கீழும் அசைந்துகொண்டிருந்து.. கழன்று விழுமோ என்ற அச்சத்தை தந்த காற்சட்டை... ஆமிக்காரனை நினைவிற்குக் கொண்டு வந்த காலணி.. “அம்மா இது என்ர ப்ரெண்ட்” ஆரணி இப்பிடியொருவனை எனக்கு அறிமுகப்படுத்தினால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா? நான் ஏற்றுக்கொண்டாலும் குமார் கொண்டு போட்டுவிடுவார்.. வசந்தமலர் தனக்குள் சிரித்துக்கொண்டாள்..
குமார் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து அவசர அவசரமாய்ச் சாப்பிட்டு விட்டு அடுத்த வேலைக்குப் ஓடும் நேரம் இது..மீன் குழம்பு, மீன் பொரியல், கீரை, பருப்பு குமாரிற்குப் பிடித்த உணவு வகைகள். வசந்தமலருக்குத் திருப்தியாய் இருந்தது.. “அடடா கீழ் அலுமாரிக்குள் மாமா தந்த ஊர் ஊறுகாய் இருக்கே..ச்சீ சொல்லாமல் போயிட்டேனே கீரையோடு கொஞ்சம் ஊறுகாயைப் போட்டுப் பிசைந்து சாப்பிட குமாருக்கு நல்லாப் பிடிக்கும் .ம் பரவாயில்லை இரவு வந்ததும் எடுத்துக்குடுக்கலாம்..
ஆரணி தங்கையோடு வீடு வந்து சாப்பிட்டு விட்டு, ரீவி பார்க்கத் தொடங்கிருப்பாள்.. இல்லாவிடின் குப்புறப்படுத்து கால்களை மேலும் கீழும் ஆட்டியபடியே ரெலிபோணில் யாருடனாவது அரட்டை அடித்துக்கொண்டிருப்பாள்.. ஆண்களுடன் யாருடனாவது கதைக்கிறாளா என்பதைக் கண்காணிக்க வேணும்.. குட்டிப்பெட்டை நிஷாதான் அம்மா வரும் நேரத்தை அடிக்கடி மணிக்கூட்டில் பார்ப்பதும், பின் ரீவியைப் பார்ப்பதுமாக இருப்பாள்.. இன்றைக்கு எப்படியும் எட்டாம் வாய்பாட்டைப் பாடமாக்க வைக்கவேண்டும்.. பிள்ளைகளுக்கு ஏன்தான் இவ்வளவு வீட்டு வேலையைக் கொடுக்கிறார்களோ.. பாவங்கள் தூக்க முடியாமல் புத்தகங்களை கழுதைபோல் முதுகில் பொதியாய்.. முகுந்தன் அசைந்தான்..
வேலை முடிந்து வீட்டிற்குச் செல்லும் அவசரத்தில் ரோட்டில் வேகமாகச்சென்று கொண்டிருந்த கார்களின் அதிர்வு முகுந்தனின் நித்திரையைக் கெடுத்திருக்க வேண்டும்.. மெல்லக்கண் விழித்து ஒற்றைக்கையை வசந்தமலரின் கழுத்துப் பின்புறத்துக்குள் நீட்டி முகத்தோடிழுத்து வாய்பதித்து ஈரப்படுத்தினான்.. பின்னர் சின்னச் சிணுங்கலுடன் கண்களை மூடி மூடித்திறந்து “என்ன நேரம்?”
“ நாலரையாகுது”
“ சொறியக்கா”
“ எதுக்கு”
“நித்திரையாப் போயிட்டன்”
“பரவாயில்லை”
“உடம்பு சரியான அலுப்பாயிருந்துது” சுளி விழுந்த சிரிப்போடு கண்ணடித்தான்..
வசந்தமலர் மெளனமாய் கை விரல் நுனியில் எதையோ தேடியபடியிருந்தாள்
“ போர் அடிச்சுதா?”
“ இல்லை நான் காத்தோட அள்ளுப்பட்டுப் போற ஸ்னோவைப் பாத்துக்கொண்டிருந்தன்.. பிறகு கொஞ்சம் யோசிச்சன்”
“ என்னத்தை”
“ என்னை உன்னை என்ர வாழ்க்கைய”
“ ஏதாவது கிடைச்சுதா”
இச் வசந்தமலர் முகம் சுளித்து அலுத்துக்கொண்டாள்.. பின்னர் மெளனமாக முகுந்தனைப் பார்த்தாள்.. “ நான் செய்யிறது பிழையாடா?” கேட்ட படியே நெல் வரம்பில் விரல்களை அளையவிட்டாள்.. வியர்வையோடு கலந்து எண்ணெய் பிசுபிசுப்பில் இருந்தது அவன் தலை..
“ இப்ப ரெண்டு வருஷமாச்சு எத்தின தரம் இதைக் கேட்டிட்டீங்கள்..” வசந்தமலரின் கைவிரல்களை எடுத்து எண்ணிய படியே முகுந்தன் சிரித்தான்..
“ தெரியேலை சில நேரம் என்னை நினைச்சாலே எனக்கு வெறுப்பா இருக்கு” வசந்தமலரின் பார்வை தூர வெறிக்க முகம் வாடிப்போனது..
“ அக்கா இண்டைக்கு நீங்கள் சந்தோஷமாத்தானே இருந்தனீங்கள்.. அதுதான் முக்கியம் மற்றதுகளை விடுங்கோ..” அவள் கைவிரல்களை தன்னுக்குள் அடக்கி இறுக்கிக்கொண்டான்.. வியர்த்திருக்கும் அவன் கைகளின் ஈரம் பட்டு வசந்தமலர் உடல் சிலிர்த்துக்கொண்டது..
“ இல்லேடா” என்றவளை இழுத்து அணைத்துக் கொண்டான்
“ விடடா”
“ ஏனக்கா”
“ வீட்டை போற நேரம் வருகுது”
“ இன்னும் ஒரு மணித்தியாலம் இருக்கு”
“ அதுக்கு”
அன்று அவள் சிறிதும் எதிர்பாராத விதமாக ஒரு பரந்த வெளியில் முற்றிலும் பனிபடிந்திருக்கும் ஒரு பாலைவனப்பகுதில் தனது காரை நிறுத்திவிட்டு “இண்டைக்கு இஞ்சதான் நிக்கப்போறம்” என்று அவன் சொன்னபோது ஏதோ அவன் விளையாடுகிறான் என்று முதலி;;ல் வசந்தமலர் எண்ணினாள்.. அவன் தான் இருந்த சீட்டை சரிய விட்டு கைகளைப் பின்புறமாகப் போட்டு அவளை விழுங்கி விடுவதுபோல் பார்த்த படியே “அப்புறம்” என்ற போது அவன் விளையாடவில்லை என்பதைப் புரிந்து கொண்டாள் “உனக்கென்ன விசரா இந்த வெளியில நடுவுக்க காரை நிப்பாட்டிப்போட்டு.. ஆரும் கண்டாலும்” அவள் சுற்றுமுற்றும் பார்க்க.. அவளைத் தன் மேல் இழுத்துப் போர்த்துக்கொண்டான்.. “ஏன் எல்லாத்துக்கும் பயப்படுறீங்கள்.. பாருங்கோ. எவ்வளவு வடிவா இருக்கு.. சுத்திவர வெள்ளைப் போர்வை.. தூரத்தில சின்னதா ஊருற கார்கள் காத்துச் சத்தம்.. மேல நீலமாய் மேகம்.. அதுக்குக் கீழ நானும் நீங்களும் கட்டிப்பிடிச்சபடி” அவள் தலைமயிரை குலைத்து தன் முகத்தில் பரவவிட்டான்..
“ ம்.. உனக்கு விசர் முத்திப்போச்சு.. யாராவது பார்த்தால் நான் சரி.. வேலைக்கும்; போகாமல் உன்னோட வந்து கூத்தடிச்சுக்கொண்டு.. பேசாமல் வா.. நாங்கள் வழமையாப் போற இடத்துக்கே போவம்.. நான் காசு வைச்சிருக்கிறன்.. யோசிக்காதை..” தன்னை அவனிடமிருந்து விடுவிக்க முயன்று முயன்று தோற்றுப்போய்ப் புலம்பினாள்.. அவன் அவள் புலம்பலைப் பொருட்படுத்தாமல் தனது பற்களால் அவள் தாடைஇ காதுஇ மூக்கு என்று மெல்லஇ மெல்ல கெளவ. “ இப்ப என்ன செய்யிறாய்.. ஜயோ உனக்கு உண்மையிலேயே விசர்தான் பிடிச்சிட்டுது..” கைகளால் அவன் நெஞ்சைத் தள்ளித் தன்னை அவள் விடுவிக்க முயன்றாள். “தாலிக்கொடிய கழட்டுங்கோ” அவன் பார்வையில் பாசிஇ திடுக்கிட்ட வசந்தமலர்.. “என்னடா சொல்லுறாய்.. இந்த வெளிலிய காருக்க..ஜயோ நான் மாட்டன்” அவளின் கைகளைத் தன் ஒற்றைக் கையால் இழுத்துப் பிடித்தபடியே.. மறுகையால் அவளின் உடையைக் களையத்துடங்கினான். சுற்றும் முற்றும் பயத்துடன் பார்த்தாள் வசந்தமலர்..கைகள் நடுங்கியது..இருந்தும் மறுக்கமுடியவில்லை.. நடுத்தெருவில் நிர்வாணமாய் நிற்பதான பயத்துடன் கூடிய கிளர்ச்சி அவளிற்குப் புது அனுபவமாகவும் பிடித்துமிருந்தது.. அவர்களின் அசைவினால் வினோதமாக ஒலி எழுப்பும் கார்.. இடையிடையே தவறுதலான அழுத்தத்தால் ஹோர் அடிக்க திடுக்கிட்டு பின் சிரித்து.. கோபப்பட்டுஇ வெட்கப்பட்டு.. அவன் மேல் சரிந்தாள்.. அகண்ட பரந்த வெளியில் மெல்லிய நீலத்தில் வானம்.. நிர்மலமாய் பனிப்படிவுகள்.. பொன் கீற்றாய் கதிரொளி காரின் கண்ணாடியில் தெறித்து மின்ன.. கண்கள் சொருகி, அனுங்கி குழந்தைகளும், குமாரும் கனவு போல் வந்து போக..
வசந்தமலர் முகுந்தனையே கண்வெட்டாமல் பார்த்தாள்.. இன்னும் என்னவெல்லாம் அதிசயங்கள் காட்டி என்னை திக்குமுக்காட வைக்கப்போகிறானோ..
“ சரி வா ஒரு கோப்பி வாங்கிக் குடிச்சிட்டு பஸ் கோல்ட்டில என்னை இறக்கிவிடு நான் கொஞ்சச் சாப்பாட்டுச் சாமான்கள் வாங்கவேணும்”
“ நானும் வாறன் பிறகு உங்கள வீட்டில இறக்கி விடுறன்”
“ அதெல்லாம் வேண்டாம்”
“ ம்.. உங்கட வீட்டையும் சொல்லமாட்டீங்கள், புது வேலை இடத்தையும் சொல்ல மாட்டீங்கள். நான் நினைச்சா எல்லாத்தையும் ஒரு நிமிஷத்தில கண்டு பிடிச்சிடுவன் உங்களுக்குப் பிடிக்கேலை அதுதான்..”
வசந்தமலர் முறைத்தாள்.. “ அந்தப் பக்கம் உன்ர காரைக் கண்டனோ மவனே நீ அதோட சரி..
“ கோவத்திலையும் நீங்கள் நல்ல வடிவா இருக்கிறீங்கள்”
“ வழியாதை வா போவம்” சீப்பை எடுத்து தலையைச் சரிசெய்தாள்.. முகத்தை தண்ணீர் சீலை கொண்டு ஒத்திவிட்டாள்.. கொஞ்சம் பவுடர் போட்டாள்
முகுந்தன் கண்வெட்டாமல் அவளையே பாத்துக்கொண்டிருந்தான்..“ பக்றறி வேலை முடிஞ்சு வீட்டை போகோக்கை யார் இப்பிடிக் கச்சிதமாப் போகப்போகீனம்.”
“ அதுக்கில்லை உன்ர மணம் அடிக்காமல் இருக்கவேணும்” சிரித்தாள். பின்னர் சீப்பை அவனிடம் நீட்டினாள்.. மீண்டும சிரித்தாள் “என்னடா உது கேயர் ஸ்டைல்.. கறுப்பங்களுக்குத் தலைமயிர் வளராது அதாலை அவங்கள் ஏதோ செய்யிறாங்கள்.. நீ எதுக்கு.. உனக்குத்தானே நல்ல மயிர் இருக்கு”
“ இல்லேக்கா இதுதான் இப்ப ஸ்டைல்..இது பழைய காலத்து கறுப்பங்களின்ர தலை பின்னிற முறையாம் திரும்ப வந்திட்டுது.. இப்ப எல்லாரும் செய்யீனம்..”
வசந்தமலர் கொட்டாவி விட்டாள்.. நேரத்தைப் பார்த்தாள்..” சரி என்னைக் கடையில இறக்கி விடு. வேலை முடியிற நேரமாகுது..” என்ற படியே கான்ட் பாக்கைத் திறந்து ஒரு இருபது டொலர் தாளை எடுத்து அவனிடம் நீட்டினாள்..
“ நானேல்லோ உங்களுக்கு காசு தரவேணும்”
“ உப்பிடிப் பகிடிகள் விடாதை எனக்குப் பிடிக்கேலை” கோபமாய்ச் சொன்னவள்.. “இவ்வளவு நேரமாக் கார் ஸ்டாட்டிலேயே இருந்தது போய்க் கொஞ்சம் பெட்றோல் அடி” அவன் கைக்குள் காசைத் திணித்தாள்.. பின்னர் தாலிக்கொடியை எடுத்து கழுத்தில் மாட்டி உள்ளே விட்டாள்.. மாட்டும் போது ஒரு முறை கண்ணை மூடிப்பிரார்த்தித்துக் கொண்டாள் போல் இருந்தது..
“ பதினொண்டுக்கு போன் அடிப்பீங்களே..” இந்த இரண்டு வருஷமாக முகுந்தனைச் சந்திக்காத நாட்களில் பதினொருமணிக்கு அவனுக்கு போன் அழைத்துக் சில நிமிடங்களாவது கதைப்பதை வசந்தமலர் ஒருநாளும் தவற விட்டதில்லை.. முகுந்தனின் நண்பர்கள் கூட உன்ர பதினொருமணிப் பெட்டை என்று பகிடியாகக் கதைப்பதுண்டு.. முகுந்தனும் நண்பர்கள் மத்தியில் வசந்தமலரை ஒரு பாடசாலை மாணவியாகவே பிரதிமை பண்ணி விட்டிருந்தான்..
“ பிள்ளைகள் படுத்தாப்பிறகு பாப்பம்”
“சரி பரவாயில்லை நாளைக்கு அடியுங்கோ” சொன்னபடியே காருக்குள் பாடல் ஒன்றை அதிர விட்டு ஒற்றைக் கையால் ஸ்டியரிங்கை சுளற்றிக் கோப்பிக் கடையை நோக்கி ஓட்டினான்.. வசந்தமலர் ஸ்கார்பால் தனது தலையைச் சுற்றி மூடியபடியே கார் சீட்டைப் பதித்து விட்டு தன்னை வெளி உலகத்திற்கு மறைக்க முயன்று கொண்டிருந்தாள்..
முகுந்தன் தனது தொடர் மாடிக்கட்டிடத்துக்குள் நுழைந்த போது கருவாட்டு மணம் மூக்கைத் தாக்கியது.. இரண்டு மூன்று நாளாகக் கழுவப்படாத பாத்திரங்கள்.. சப்பாத்துடன் ஒட்டி வந்து அங்கும் இங்கும் பதிந்து போயிருந்த பனிச்சேறு.. தாறு மாறாகப் போடபட்டிருந்த படக்கொப்பிகள்.. தண்ணீர் காணாமல் காய்ந்து போயிருந்த பூச்செடிகள்.. சிகரெட் துண்டுகள்.. பியர் போத்தல்கள்.. கஞ்சா உதிர்வுகள்.. தாண்டி உடைகளைக் களைந்து விட்டு சுடுநீரில் உடல் வலி தீரக்குளித்தான்.. சாரம் மாற்றிக் கட்டிலில் விழுந்த போது தொலைபேசி அனுங்கியது.. இலக்கத்தைப் பார்த்தான் சித்தன்.. எடுப்பமா விடுவமா என்று மனம் முடிவு செய்வதற்கு முன்பே கைகள் ரிசீவரை எடுக்க உதடுகள் “ ஹலோ” என்றது..
“ டேய் எங்கேடா போட்டாய்.. பகல் முழுத்தலும் அடி அடியெண்டு அடிச்சனான்..” மறுபக்கத்தில் சித்தனின் குரல் அலறியது..
“ வேலை தேடி அலைஞ்சு போட்டு வாறன் மச்சான்.. அலுப்பா இருக்கு அதுதான் படுத்துக் கிடக்கிறன் “
“ கிடச்சுதோ”
“ எங்கை மச்சான் பாப்பன்.. ஒண்டு அம்பிடாமலே போப்போகுது.. அதுசரி உனக்கு இண்டைக்கு வேலை இல்லையே..”
“அதை ஏன் மச்சான் கேக்கிறாய்.. போனனான் லேஓவ் தந்து அனுப்பிப்போட்டான்கள்.. “
“ ஏனடா”
“ என்னவோ வேசைமக்கள் பிஸ்னஸ் லொஸ்ட்டில போகிது எண்டு கனபேரை வெட்டிப்போடான்கள்.. அதுதான் உனக்கு அடிச்சனான் மனசுக்கு ஆறுதலா ஒரு சுத்து அடிப்பம் எண்டு.. “
“ சுத்து இல்லேடா.. இருந்ததை ராத்திரி அடிச்சிட்டன்.. சிகரெட்டும் இல்லை.. கையில காசும் இல்லை..” அலுத்தான்..
“ என்னை வந்து ஏத்து காருக்கு காஸ் அடிச்சுப் போட்டு சுத்து வாங்கிப் பத்துவம்..”
வசந்தமலர் தந்த இருபது டொலரைப் பத்திரப்படுத்தியபடியே சித்தனைப் பாக்கக் கிளம்பினான் முகுந்தன்.
வசந்தமலர் வீட்டிற்குள் நுழைய “அம்மா” என்று ஓடிவந்து கட்டிக்கொண்டாள் குட்டிப்பெட்டை நிஷா.. “அம்மா பிள்ளைக்கு குக்கீஸ் எல்லாம் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறன்” பெட்டியை எடுத்துக் கொடுத்துவிட்டு “ ஹாய் ஆரணி கோம் வேர்க் முடிச்சிட்டீங்களோ” மகளின் தலையை வருடி அவளுக்குப் பிடித்த சொக்லெட் பாரை எடுத்து நீட்டி உள்ளே சென்று உடைகளைக் கழைந்து துவைக்கப்போட்டு நன்றாக உடல் தேய்த்துக் குளித்தாள்.. முகுந்தனின் வியர்வையுடன் கூடிய சிகரெட் வாடை உடலில் ஒட்டி அவளை போதைக்குள்ளாக்கியது.. வெட்ட வெளியில் நிர்வாணமாய் காருக்குள் தான் இருந்ததை எண்ணி குற்ற உணர்வோடு சேர்ந்த திருப்பி மனதில் எழுந்து எழுந்து அவளை உலுக்கிப்போட்டது. குமார் அங்கும் இங்குமாகப் போட்டு வைத்த அவன் உடைகளை எடுத்து மடித்து வைத்து.. குழந்தைகளுக்குச் சாப்பிடக் குடுத்து.. பாடத்திற்கு உதவி செய்து.. குமாரிக்கு பிடித்ததை சமைத்து வைத்து.. கட்டிலில் வந்து விழுந்து கொண்டாள்..
விட்டத்தை விறைத்து மீண்டும் தன் வாழ்விற்கு அர்த்தம் காண முயன்று தோற்றுப் போனாள்..தான் யாரை ஏமாற்றுகின்றாள்.. குமாரையா? குழந்தைகளையா? முகுந்தனையா? இல்லை என்னை நானே ஏமாற்றுகின்றேனா என்பதில் பல காலமாக அவளிற்கு குழப்பம். முகுந்தனுடன் அவளுக்குண்டான உறவின் பின்னர் குழந்தைகளுடன் சிடுசிடுப்பதை..குமாருடன் குரல் உயர்த்தி அலுத்துக்கொள்வதை.. சொல்லப்போனாள் அவள் குடும்ப உறவு முன்பு இருந்ததை விட இறுக்கமாகிப்போயிருந்தது.. இது எல்லாம் தன் குற்ற உணர்விற்கு அவர்களுக்குக் கொடுக்கும் லஞ்சமா என்ற பரிதவிப்பும் இடையிடையே அவளை வாட்டுவதுண்டு.. இருந்துமென்ன எல்லோரும் சந்தோஷமாக இருப்பது தானே முக்கியம்..அவள் கண்கள் குழப்பங்களுடன் மெல்ல மெல்ல மூடிக்கொண்டது..
முதல் முதலில் முகுந்தனை வேலைத்தளத்தில் வசந்தமலர் சந்தித்தபோது அவளிற்கு வேடிக்கையாகவும் கொஞ்சம் அவமானமாகவும் இருந்தது.. ஈழத்தமிழன் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் தோற்றத்தில் அவன் இல்லை.. எப்போதும் போதையில் காரணமின்ற சண்டை போடும்.. துப்பாக்கி தூக்கும்.. பத்திரிகைகளில் அன்றாடம் அடிபடும் பலரில் ஒருவன் என்பதை பாத்த மாத்திரத்தில் அவள் உணர்ந்து கொண்டாள்.. அவனைப் பார்ப்பதை பேசுவதை இயன்ற அளவிற்குத் தவிர்த்து வந்தும் அவள் போதாத வேளை என்று எண்ணும் வண்ணம் மகள் நிஷாவிற்கு உடம்பு சுகமில்லாமல் போய் பாடசாலையில் இருந்து அழைப்பு வர கொட்டும் பனிக்குள் பஸ் பிடித்து நேரத்திற்குப் போய்ச் சேரமுடியுமா என்று தவித்தபோது தானாக வந்து உதவுவதாக முன்நின்றான் முகுந்தன் சிந்திக்க நேரமின்றி அவனின் உதவியைப் பெற்றுக்கொண்டவள்.. பின்னர் காய்ந்து போன உணவை அவன் மென்று மென்று விழுங்கும் போது தன் உணவில் கொஞ்சமாகப் பகிர்ந்து.. பின்னர் கொஞ்சமாகக் கதைத்து.. காலப்போக்கில் அவன் மென்மையான பக்கங்கள் கண்டு அதிர்ந்து.. சகஜமாகப் பழகும் நிலை வந்த போது ஒருநாள்..
சமைத்துக்கொண்டு கொண்டு நின்ற வசந்தமலரின் காதில் படிக்கட்டால் உருண்டு கதறியபடி விழுந்த நிஷவின் குரல் கேட்டு பதறித்திரும்பியவளின் கண்ளை அருகே திறந்து விட்டிருந்த கதவின் மூலை தாக்க கண்டிப்போன கண்களுடன் ஓடிப்போய் நிஷாவை அவள் அனைக்க மனைவியையும் மகளையும் படியில் கிடத்தி ஜஸ் கட்டிகளால் மாற்றி மாற்றி ஒத்தடம் பிடித்த கணவனின் நகைச்சுவையை முகுந்தனுடன் பகிர்ந்து சிரிக்க எண்ணி அவன் அருகில் போய் அவள் அமர்ந்த போது பதட்டத்துடன் அவள் கைகளைப் பற்றி அழுத்திய படியே “உங்கட மனுஷன் உங்களுக்கு அடிக்கிறவரா அக்கா” என்றவனின் கைகளின் வியர்வை உடலை சிலிர்க் வைக்க அவன் பார்வையை மிக அருகில் சந்தித்த வசந்தமலரில் உடலில் ஈரம் கசிந்தது.. அவனில் இருந்து வந்த அந்த சிகரெட்டுடன் கூடிய வியர்வை மணம் சின்னதாக அவள் உடலை நடுங்கச் செய்ய மென்று விழுங்கித் தன்நிலை மறந்து அவன் தோளில் சாய்ந்தாள்.. அவள் தலையை வருடி “அழுங்கோ அக்கா அப்பதான் உங்கட வேதனை குறையும்” வருடியவனின் குரல் கேட்டு ஏனோ விம்மினாள் வசந்தமலர்..
அதன் பின்னர் பணத்திற்காகப் பல்லைக் கடித்துக்கொண்டு வேலைத்தளத்தில் மாய்ந்தவளிற்கு வேலைக்குப் போவது பிடித்துப் போனது.. பதினைந்து வருடதிருமண வாழ்வு மீண்டும் அர்த்தத்ததைத் தந்தது.. முகுந்தனின் அணைப்பு.. தொடுகை வெட்கமற்ற பேச்சு எல்லாமே அவளிற்கு புதிய அனுபவமாய் அவள் இரத்த ஓட்டத்தை வேகப்படுத்தியது.. குமாரை அவள் வெறுக்கவில்லை.. முகுந்தனை அவள் காதலிக்கவுமில்லை.. ஆனால்..குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள் என்பதால் தன்னை வயதானவளாக உருமாற்றி உணர்வுகள் மெல்ல மெல்ல உறைந்து போய் விட்டதாக எண்ணி வாழ்ந்தவளை மீண்டும் உலுப்பி விட்டிருந்தான் முகுந்தன்..
கஞ்சா அடிச்ததில் இருவரின் கண்களும் சிவந்து போயிருந்தன.. குளிர்காய கோப்பிக்கடைக்குள் இருந்தபடியே வருவோர் போவோரை அளந்து கொண்டிருந்தார்கள்.. வசந்தமலரின் மணம் கிறக்கம் இடையிடையே முகுந்தனின் நினைவில் வந்து அலைந்து கொண்டிருந்தது.. தான் உறவு வைத்திருக்கும் அத்தனை பெண்களைப் பற்றியும் சித்தனிடம் கதை அளக்கும் முகுந்தனுக்கு ஏனோ வசந்தமலர் பற்றி வாய் திறக்க முடியவில்லை.. வசந்தமலர் மேல் தனக்கு உண்மையான காதலோ என்று அவனிற்கு அடிக்கடி பயமாக இருந்தது.. வசந்தமலரின் குரலை ஒருநாள் கேட்காவிட்டாலும் அவனிற்று எதுவோ போல் இருக்கும்.. மற்றைய பெண்களைப் போலில்லாமல் மணிக்கணக்காக அவளுடன் கதை அளக்க அவனுக்குப் பிடித்திருந்தது.. வசந்தமலருடனான தனது உறவைப் புனிதமானதாக எண்ணி வசந்தமலர் பற்றி எந்த ஒருமனிதனும் தவறாகக் கதைத்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தான்.. கணவனை இழந்தவளிற்கு வாழ்க்கை குடுத்தால் அது உத்தமம்.. கணவனால் துன்புறுத்தப்படும் ஒரு பெண்ணிற்கு வாழ்வில் சில இன்பங்களைக் காட்டினால்.. தன்னைத் தேற்றிக்கொண்டான் அவன்..
வேறு தமிழர் இல்லாததால் அக்கா அக்கா என்று வேலைதளத்தில் ஆரம்பித்த உறவு சாப்பாடு பகிர்வதில் தொடங்கி.. பஸ் தரிப்பில் இறக்கி விடுவதில் போய் ஒருநாள் கண்களுக்கு கீழே கட்டி பட்டுப்போயிருந்த இரத்தத்தைப் பார்த்தபோது நெருக்கம் கொண்டது.. கணவனிடம் காணாத அன்பு அரவணைப்பை வசந்தமலரிற்கு தான் கொடுப்பதாக எண்ணிப் பெருமை கொண்டான்.. மெல்ல மெல்ல தன்னுடன் பழகும் இளம் பெண்களிடமிருந்து விலகி நேரம் கிடைக்கும் போதெல்லாம் வசந்தமலருடன் உறவுகொள்ளத் தொடங்கினான்.. “டேய் என்னை விட்டிடாதை.. என்னை ஏமாத்திப்போடாதை.. வேற ஒரு பெட்டைகளோடையும் போகாதை..” அவள் கொஞ்சியபோது அந்த அன்புஇ காதல்இ மோகம் கண்டு விறைத்து துவண்டு குழந்தை போல் அவள் மடியில் முகம் புதைத்தான். “உன்னைக் கலியாணம் கட்டவேண்டாம் எண்டு நான் சொல்லேலை.. நீ கட்டிற நேரம் வரேக்க நானே விலகிப் போறன் ஆனால் இப்ப வேறை ஒண்டும் வேண்டாம்” அவனிடம் சத்தியம் வாங்கிக்கொண்டாள்..
மாதங்கள் நாட்களாகி மறைந்து போக..முகுந்தனின் மனதில் முற்றாக வசந்தமலர் இடம் பிடித்துக்கொண்டாள்.. சித்தன் வேறு வேலை எடுத்து பிஸியாகி விட வசந்தமலருடன் தொலைபேசியில் கதைப்பது, சந்திப்பது.. இப்படியாக..இப்படியாக..
இன்றுடன் ஒரு கிழமையாயிற்று வசந்தமலரின் குரலைக் கேட்டு.. முகுந்தனிற்கு தலையே வெடித்துவிடும் போலிருந்தது.. அவள் தொலைபேசி இலக்கம் அவனிடம் இல்லை.. ஏன் வீண் பிரச்சனை நானே ஒவ்வொருநாளும் உன்னுடன் கதைக்கிறேன் என்று தொலைபேசி இலக்கத்தை கொடுக்க மறுத்திருந்தாள் வசந்தமலர்.. சித்தனிடம் மனம் விட்டுக் கதைக்கும் துணிவு அவனுக்கில்லை.. திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகளிற்குத் தாயான ஒருத்தியுடன் தான் உறவு வைத்திருப்பது.. அதை உண்மையான காதலாக மனதுக்குள் பூஜித்து அவள் குரல் கேட்காது உடைந்து போவது பற்றி எவ்வளவுக்கு நண்பனாக இருப்பினும் சொல்ல முடியுமா? அவன் என்னைக் கேவலமாகப் பார்ப்பான் இல்லாவிட்டால் கிண்டல் அடிப்பான் இரண்டையும் தாங்கும் மனப்பக்குவம் முகுந்தனிடம் இருக்கவில்லை.. மூளை குழம்பிய நிலையில் சாப்பிட மனமின்றி கஞ்சாவைப் புகைத்துப் புகைத்துத் துவண்டு போனான். இன்றுடன் ஒரு கிழமையாயிற்று வேலையில்லை கையில் பணமில்லை.. இந்த நிலை தொடர்ந்தால் தான் மீள்ளாது போய் விடுவேனோ என்று பயந்து எழுந்து தன்னை திடப்படுத்த முயன்று தலையில் சுடுநீரை வாரி இறைத்துக் குளித்தான்.. பாவம் வசந்தமலர் வீட்டில் ஏதும் பிரச்சனையோ தெரியவில்லை.. அவள் மேல் அன்பை வைத்திருந்து என்ன பிரயோசனம்.. வேண்டிய நேரத்திற்கு ஆறதல் சொல்ல தன்னால் முடியவில்லையே..ஏக்கமாக இருந்தது அவனிற்கு.. இன்று அவள் அழைப்பாள் இன்று எப்படியும் வசந்தமலரின் குரலைத் தான் கேட்கமுடியும் என்ற நம்பிக்கையுடன் வயிறு புகைந்து போக கோப்பி;க் கடையை நோக்கிப்புறப்பட்டான்..
முகுந்தனின் கைகள் குளிர்ந்து போயின. வாய் விட்டுக்கதறுவதற்குக் கூட முடியாத நிலை.. பொங்கிப் பொங்கி வந்த அழுகையை தனக்குள்ளேயே மென்று, மென்று தோற்றுப்போய்க் கொண்டிருந்தான்.. அங்குலம், அங்குலமாகத் தான் அழகுபார்த்து முகர்ந்து, முத்தம் கொடுத்தவை எல்லாம் அடங்கிப்போயிருந்தது அவனுக்குக் கனவு போலிருந்தது.. 'முந்தி எங்களோட வேலை செய்த பிள்ளை வசந்தமலரெண்டு.. உனக்கு நினைவிருக்கோ என்னவோ.. அக்சிடென்ரில செத்திட்டுதாம்.. இண்டைக்கு பாக்கிறதுக்கு வைக்கினம் நாங்கள் வேலையாக்களெல்லாம் சேந்து போறம்.. நீ வரப்போறியே.." அந்த வயதான பெண்மணி கேட்டபோது.. முகுந்தன் சுருண்டு விட்டான்.. தலையை சுவரில் அடித்து, அடித்துக் கதறியாகி விட்டது.. கண்கள் வீங்கிப்போய் விட்டன.. ஆனால் அவன் இயல்பாக இருக்க வேணும் 'பாவம் அவ்வளவு வயசும் இல்லை.. ரெண்டு பொம்பிளப்பிள்ளைகள்.. புருஷன் தான் தனியக் கஷ்டப்படப்போகுது." என்று மற்றவர்களுடன் சேர்ந்து சப்புக்கொட்ட வேண்டும்.. தன்னால் முடியுமா.. கடைசியாக ஒருமுறை கைகளில் நடுக்கமின்றி.. பொங்கி வரும் கண்ணீர்த் துளிகளை சுரப்பிக்குள் திரும்பவும் தள்ளி தன்னால் முடியுமா? கட்டிலில் குப்புறப்புரண்டு கதறியவன்.. வசந்தமலரைக் கடைசியாகப் பார்க்கும் ஒரு சந்தர்ப்பத்தை இழக்க விரும்பாது அழுத்தி, அழுத்தி குளிர் தண்ணீரை முகத்தில் அடித்துக் கண்களின் வீக்கத்தையும் சிவப்பையும் போக்கமுயன்று மற்றவர்களுடன் கூடி வசந்தமலரின் உடல் பார்வைக்காக வைக்கப் பட்ட மண்டபத்திற்குள் நுழைந்து விட்டான்..
வசந்தமலரின் முகத்தில் புன்னகை தெரிந்தது.. மெல்லிய சிவப்பு நிறப்பட்டில் உயிர்ப்போடிருந்தாள் அவள்.. வரிசையில் நின்று மெல்ல நகர்ந்து வசந்தமலரைக் கடைசியாக ஒருமுறை சில நிமிடங்கள் பார்த்து விட்டு வாய்விட்டுக் கதறிக்கொண்டிருக்கும் குமாரையும், பிள்ளைகளையும் அணைத்து ஆறுதல் சொல்லிவிட்டுத் தமது கடமை முடிந்ததாய் போய்க்கொண்டிருந்தார்கள் பலர்.. முகுந்தன் அந்த வயதான பெண்மணியின் கைகளை இறுகப்பற்றிய படியே 'என்னைத் தனியாக விட்டுவிடாதே என்ற பாணியில் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தான்.. அவள் பார்வையில் தெரிந்த கேள்விக்குறியைப் பற்றிக் கவலைப்படும் நேரமல்ல அது.. புன்னகைக்கும் வசந்தமலரின் முகத்தில் ஒரு தெளிவு, நிம்மதி தெரிந்தது.. உடல் சிதறாமல் அழகோடிருந்தது முகுந்தனுக்கு ஆறுதலைத் தந்தது.. வயதான பெண்மணியின் கையை இறுக, இறுக அழுத்தித் வசந்தமலரிற்கு தனது கடைசி அஞ்சலியை மனதுக்குள் முணுமுணுத்தான்.. வசந்தமலரின் பெண்களை உரிமையோடு தலைவருடி ஆறுதல் சொன்னவன் குற்ற உணர்வோடு கடமைக்காக குமாரின் பக்கம் திரும்பியபோது குமாரின் கண்களின் தெரிந்த அந்தக் குரூரம் முகுந்தனை ஒருமுறை நடுங்கச் செய்தது.. கால்கள் தடுமாற பின்னே ஒரு அடி எடுத்து வைத்தனைப் பார்த்து ஏளனமாக ஒரு சிரிப்பை எவரும் பார்க்காத வகையில் வீசினான் குமார்..
ஊதல் காற்றுடன் கூடிய வெண்பனி மூடலில் வீதியோரம் விறைத்தபடியே நடந்து கொண்டிருந்தான் முகுந்தன். அவன் கண்களில் கண்ணீரில்லை எல்லாமே விறைத்துப் போயிருந்தன.
பதிவுகள் பெப்ருவரி 2005 இதழ் 62 -
3. ரெக்ஸ் எண்டொரு நாய்க்குட்டி! - சுமதி ரூபன்
“கணன் மாமாவும், மாமியும் கனடா வந்து நிக்கினம்.. ஒரு கிழமைக்கு என்னோட தங்கச் சொல்லிக் கேட்டனான்.. உன்ர அறையிலதான் விடப்போறன் நீ தம்பியோட ஷெயர் பண்ணு” அம்மா சொல்லி விட்டுப் போய் விட்டாள். தம்பி அவசரமாக தன்ரை அறைக்குள் புகுந்து கொண்டான். என்னத்தை ஒளிக்கிறான், மறைக்கிறானோ தெரியாது. அம்மா யன்னல் சீலைகளைத் தோய்கிறது, கட்டிலுக்கு புது பெட்சீட் மாத்திற தெண்டு படு பிஸியாயிட்டா. பாவம் அம்மா..அப்பா இருக்கேக்க ரெண்டு பேருமா வேலைகளை சேந்து செய்திச்சீனம்.. இப்ப ரெண்டும் பெடியள்.. அதுகளிட்ட என்னண்டு வீட்டு வேலை செய்யக் கேக்கிறதெண்டு நினைச்சுத் தானே கிடந்து முறிவா.. நான் கொஞ்மாவது ஏதாவது உதவுவன்.. ஆனால் தம்பி படிக்கிற மாதிரிப் போஸ் குடுத்துக் கொண்டு எந்த நேரம் பாத்தாலும் கொம்பியூட்டரைக் கிண்டிக்கொண்டு இருப்பான்.
கணன் மாமா.. எங்கட சொந்தாக்காறர் இல்லை.. ஊரில பக்கத்து வீடு.. மாமியும், அம்மாவும் நல்ல ப்ரெண்ஸ்.. குமுதம், ஆனந்தவிடகனில வாற தொடர்கதை பற்றிக் கதைக்கிறது, சேந்து சொப்பிங் போறது, படத்துக்குப் போறது எண்டு ஒண்டாச் சுத்தித் திரிவீனம். ஆனால் மாமாவும் அப்பாவும் பெரிசாக் கதைக்கிறதை நான் கண்டதில்லை.. சிலவேளகளில ரோட்டில எங்காவது கண்டா சும்மா சாட்டுக்கு “எப்பிடி” எண்டு ஆளையாள் கேட்டிட்டுப் போவீனம். அவ்வளவுதான்.. மாமாக்கு மூண்டு(ம்) பெட்டைகள்..
(நானும் தம்பியும் அவேலை பெட்டைகள் பெட்டைகள் எண்டு கதைக்கிறது அம்மாக்குப் பிடிக்கிறேலை.. “அதென்ன பெட்டைகள் மனேஸ் இல்லாமல்” எண்டு ஒருநாள் அம்மா சொல்லிப்போட்டுப் போக தம்பி “அதென்ன மனேஸ் இல்லாமல்” எண்டு அம்மா மாதிரி நெளிச்சுக் காட்டிச் சிரித்தான், எனக்கு அது அவ்வளவாப் பிடிக்கேலை)
நான் நடுவானைக் கொஞ்ச நாளாச் சைட் அடிச்சன். அது பிறகு வேற ஒரு பெடினோட கதைச்சுக் கொண்டு திரியிறதைக் கண்டிட்டு விலகீட்டன்.
ஒரு நாள் மாமி எங்கட வீட்டை அவசரமா ஓடி வந்து அம்மாட்ட ஏதோ ரகசியமாச் சொல்லி மூக்கைச் சீறிச் சீறி அழுதா.. அம்மா என்னைக் கடைக் கண்ணால பாத்துப் பாத்து மெல்லமா ஏதோ மாமீன்ர காதுக்க குசுகுசுத்தா. நான் விறாந்தையில் லாவகமாகக் கதிரையில சரிஞ்சு இருந்து கொண்டு ஆனந்தவிகடனில கமலகாசன் வாணி ஜெயராமைக் கலியாணம் கட்டப் போகுதாம் எண்ட கிசுகிசு வாசிச்சுக் கொண்டு இருந்தனான். சிறீதேவியைக் கட்டாதது எனக்கு நல்ல சந்தோஷம். அம்மா என்னைப் பாத்து “தம்பி பெரியாக்கள் கதைக்கேக்க நீ என்ன இஞ்ச, உள்ள போ” எண்டு என்னைக் கலைச்சுப் போட்டா.. நான் கனநேரமா மாமி அழுத விஷயத்தைச் சொல்லுவா எண்டு ஆனந்தவிகடனில முகத்தை மேஞ்சது வீணாப் போச்சுது. அம்மா இன்னும் என்னைப் பெரிய பெடியனாப் பாக்காததும் ஏமாற்றமா இருந்துது.
நான் சோம்பல் முறித்தபடி எழும்பி முன் ஒழுங்கேக்க வந்து யாரும் பெட்டைகள் சைக்கிளில வரீனமோ எண்டு பாத்துக்கொண்டு நிண்டன். (ஒண்டும் செய்ய இல்லாட்டி இதுதான் என்ர பொழுது போக்கு) மாமியின்ர கடைசிப் பெட்டைதான் ரியூசன் வகுப்புக்கு போறதுக்காக சைக்கிளோட வெளியில வந்துது. கொஞ்சம் கறுப்பா இருந்தாலும் நல்ல முகவெட்டும் வடிவும். இருந்தாலும் ரெண்டாவதை நான் மனசார விரும்பினதால கடைசிப் பெட்டையில ஒரு பிடிப்பு வரமாட்டன் எண்டிட்டிது. பெட்டைக்குப் பக்கத்தால சந்தோஷமாத் துள்ளிக் கொண்டு “ரெக்ஸ்” உம் ஓடி வந்துது. கையில இருந்த ஒரு துண்டு பிஸ்கோத்தை என்ர காலடியில போட்டு ரெக்ஸ்சை என்ர காலுக்க வரப்பண்ணிப் போட்டு ஒரு வில்லங்கமான சிரிப்போட கடந்து போச்சுது பெட்டை. நான் முகத்தை “உம்” எண்டு பிடிச்சுக் கொண்டு நிண்டன். ரெக்ஸ் பிஸ்கோத்தை திண்டிட்டு என்ர காலை நக்கீச்சு.. நான் அதின்ர தலையில தடவி விட்டன்.
வீட்டுக்கு ஒருக்கா கள்ளன் வந்த பிறகு மாமா எங்கையோ இருந்து இந்த உருண்ட வெள்ளை ரெக்ஸ்சை வீட்டை கொண்டு வந்து கட்டினார். மாமா வீட்டை ஆர் கடந்து போனாலும் அதிகமா ரெக்ஸ் குரைச்சுக் கொண்டு அவையள விட்டுக் கலைக்கும். அதால அதிகமா மாமா வீட்டைக் கடக்கிற எல்லாருமே கொஞ்சம் உசாரா விடுவிடு வெண்டுதான் நடந்து போவீனம். சைக்கிள்காறர் எண்டா பாஸ்ட்டா ஓடி வந்து வீட்டைக்கடக்கேக்க பாரில காலைத் தூக்கி வைச்சுக் கொண்டு போவினம். ஆனால் ரெக்ஸ் இதுவரைக்கும் ஒருத்தரையும் கடிச்சதெண்டு நான் கேள்விப்படேலை.. நாங்கள் பக்கத்து வீட்டில இருக்கிறதாலையும், மாமியோட சேந்து ரெக்ஸ் அடிக்கடி எங்கட வீட்டை வாறதாலையும் எங்க வீட்டில யாரைக்கண்டாலும் சந்தோஷத்தோட வாலை ஆட்டிக்கொண்டு வந்து காலை நக்கும்.
ஒருநாள் நான் வகுப்பு முடிஞ்சு வீட்ட சைக்கிள்ள வரேக்க,, மாமி வீட்டை பெரிய சத்தமா ரெண்டு மூண்டு நாய்களின்ர கத்தி குரைக்கிற சத்தம் கேட்டுது. நான் சைக்கிள மதிலோட சாய்சுப் போட்டு போய்ப் பாத்தன் ரெக்ஸ் ஒரு பெட்டை நாயோட ஒட்டிப்போய் இழுப்பட்டுக் கொண்டு நிண்டுது. மாமி வீடு பூட்டிக் கிடந்துது.. (பூட்டிக் கிடக்கோ இல்லாட்டி பெட்டைகள் வெளியில வர வெக்கப் பட்டு உள்ளுக்க நிக்கீனமோ எண்டு தெரியேலை.). நான் ஒரு தடிய எடுத்து அதுகளைக் கலைச்சன். ரெண்டும் கத்திக் கொண்டு இழுபட்ட படியே பின் வளவுக்க ஓடீற்றுதுகள்..
பிறகு கொஞ்ச நாளால ஒருநாள் நான் வெளியில வெளிக்கிட்டிக்கொண்டிருக்கேக்க அம்மா ஓடி வந்து “தம்பி நான் ஊத்தையா நிக்கிறனடா இதை ஒருக்கா மாமீட்டைக் குடுத்திட்டுப் போ” எண்டு ஒரு பெட்டிய நீட்டினா.. மங்கையர்மலரில சொன்ன “ரெசுப்பி” இப்பிடித்தான் அடிக்கடி பெட்டியோட அங்கையும் இஞ்சையும் கை மாறும். நான் சினத்தோட பெட்டிய வாங்கிக் கொண்டு மாமி வீட்டை போனன். மாமி வீட்டு விறாந்தையில சறத்தை மடிச்சுக் கட்டி, மஞ்சள் நிறத்தில நைலோன் ஆம்கட் ரீசேட் போட்ட தடிச்ச கறுப்பன் ஒருத்தன் ரெக்ஸ்சை அமத்திப்பிடிச்சுக் கொண்டு மாமாவோட ஏதோ கதைச்சுக் கொண்டு நிண்டான். ரெக்ஸ் என்னைக் கண்ட உடன மெல்லிய குரலில முனகிப் பிறகு குரைச்சுது. நான் தயங்கித் தயங்கிக் கிட்டப் போக மாமா என்ன ஒரு மாதிரிப் பாத்திட்டு உள்ள போ எண்டு தலைய ஆட்டினார். நான் பேசாமல் உள்ள போனன். மாமி மேசையில துணிய விரிச்சு வைச்சு அளந்து அளந்து ஏதோ வெட்டிக்கொண்டிருந்தா. அவவின்ர வயிறு உப்பின மாதிரி இருந்துது.
மூண்டு பெட்டைகளும் ரேடியோவில இசையும் கதையும் கேட்டுக்கொண்டு இருந்தீச்சுதுகள். நான் முகத்தை “உம்” எண்டு பிடிச்சுக் கொண்டு மாமீற்ர பெட்டிய நீட்டினன். மாமி வாங்கி மேசையில வைச்சுப் போட்டுத் துணி வெட்டிறதில கவனமா இருந்தா. இசையும் கதையுமில “காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருத்தன்” எண்டு பாட்டுப் பாடீச்சுது. நான் பெட்டைகளையும் மாமியையும் மாறி மாறி பாத்துக் கொண்டு நிக்க (நான் மூத்த பெட்டைய மட்டும்தான் அக்கா எண்டு கூப்பிடுறனான், முந்தி எனக்கு அக்காவோட நல்லா ஒத்துப் போகும். அவ சொல்லுற வேலையெல்லாம் ஓடியோடிச் செய்வன்.. ஆனால் இப்பவும் அவ என்னைச் சின்னப் பெடியன் மாதிரி கண்ட கிண்ட வேலைகள் சொல்லுறதால நான் அவேன்ர வீட்டை போறதைக் குறைச்சுப் போட்டன்.. பத்தாததுக்கு ரெண்டாவது பெட்டை அக்காட்ட என்னைப் பற்றி ஏதோ அள்ளி வைச்சிட்டுது எண்ட சந்தேகமும் எனக்கு இருக்கு) அக்கா என்னைப் பாத்து “என்ன பெட்டி வேணுமே” எண்டு கேட்டா.. நான் “இல்லை” எண்டு தலையாட்டினன். கடைசிப்பெட்டை என்னைப் பாத்துக் கண்ணால சிரிச்சுது. பிறகும் நான் போகாமல் நிக்கிறதைக் கண்ட மாமி “என்னடா” எண்டா.. “இல்லை மாமி ரெக்ஸை யாருக்கும் குடுக்கப் போறீங்களே?” எண்டன். கடைசிப் பெட்டை ஒரு மார்க்கமா சிரிச்சுக் கொண்டு அறைக்குள்ள ஓடிச்சுது. நான் வந்த கோவத்தில திரும்ப “அது ஒண்டுமில்லையடா இஞ்சதான் நிக்கும் நீ போ” எண்டு மாமி வாயுக்க ஒரு சிரிப்போட சொன்னா.. எல்லாமே எனக்கு ஒரு புதிரா இருந்துது.. ரெண்டாவது பெட்டை என்னை ஒரு பொருட்;டாவே எடுக்கிறதில்லை.. நினைச்சா நான் அவவின்ர லவ் கதைய அம்மாட்டச் சொல்லி நாறடிச்சுப் போடுவன்.. ஆனால் ஏனோ மனம் கேக்கேலை.. நான் பேசாமல் திரும்பி நடக்க, பின் முத்தத்து வேப்பமரத்தில ரெக்ஸ்சை அந்த தடியன் கட்டி வைச்சிட்டு நிலத்தில இருந்து ஏதோ செய்து கொண்டிருந்தான்.. ரெக்ஸ் அனுங்கிக் கொண்டு நிண்டுது. நான் நிண்டு கொஞ்ச நேரம் பாக்க மாமா “இதெல்லாம் நீ பாக்கக் கூடாது போ” எண்டார். தயங்கித் தயங்கி நான் வெளியில் வர ரெக்ஸ் பெரிசாக் கத்திற சத்தம் கேட்டுது. ரெக்ஸ்க்கு ஏதோ செய்யிறான் அந்த தடியன்.. ஓடிப்போய் அதைக் காப்பாற்ற வேணும் எண்டு ஆசையா இருந்திச்சு.. நான் எட்டிப் பாத்தன்..மாமான்ர தலை மதிலால இன்னும் தெரிஞ்சுது.. அதால நான் திரும்பிப் போகாமல் பேசாமல் வந்திட்டன்.
அடுத்தநாள் நான் வெளியில வெளிக்கிடேக்க ரெக்ஸ் மாமா வீட்டு வாசலில நிண்டு மெல்லமாக் குரைச்சுது. நான் “ஓடி வா” எண்டு கையக் காட்டவும் வராமல் சினுங்சிச் சினுங்கிக் குரைச்சுது.. நான் கிட்டப் போக பின்பக்கத்தை ஒரு மாதிரி உயத்திப் பிடிச்சுக் கொண்டு கால்கள் ரெண்டையும் அகட்டிக் கொண்டு முனகிய படியே மெல்ல மெல்ல என்னட்ட நடந்து வந்துது. நான் அதை மெல்லமாத் தூக்கி தடவி விட்டன். பின்பக்கமா அதுக்கு ஒரு கட்டுப் போட்டிருந்துது.
மூண்டு பெட்டைகளுக்குப் பிறகு கனகாலத்தால மாமிக்கு ஒரு பெடியன் பிறந்துது. நானும் தம்பியும் மாமிக்குப் பிள்ளை பிறந்ததை கதைச்சுச் சிரிச்சதைக் கேட்டு அம்மா “வயசுக்கு ஒரு மரியாதை இல்லாமல் உதென்ன கதையும் சிரப்பும்” எண்டு கோவிச்சா.. தம்பி என்ர காதுக்கு “எங்களுக்குத் தங்கச்சி பிறக்காட்டிச் சரி” எண்டு சொல்ல நான் சிரிப்புத் தாங்கேலாம் வெளியில ஓடீற்றன். அம்மா என்னை முறைச்சுப் பாத்துப் போட்டுப் போட்டா..
கணன்; மாமான்ர தலை நரைச்சிருந்தாலும் நடையில தளர்ச்சி இல்லை.. மாமி தலைக்கு டை அடிச்சிருந்தா. முகந்தான் சுருங்கிப் போய் இருந்துது. எங்களைக் கண்ட உடன கட்டிப் பிடிச்சு அழுதா. அப்பா செத்தாப்பிறகு இப்பதான் காணுறா.. அதுதானாம் அந்த அழுகை. பெட்டைகள் மூண்டும் கலியாணம் கட்டி லண்டனில தான் இருக்குதுகள் எண்டா. ரெண்டாவது பெட்டைக்கு எத்தின பிள்ளை எண்டு வாயில வந்த கேள்விய நான் அடக்கிக் கொண்டன். எனக்கு எப்ப கலியாணம் எண்டு கேட்டா.. “அவன் யாரையோ லவ் பண்ணிறானாம் பெட்டை யூனிவேசிட்டியில படிக்குதாம் படிப்பு முடியத்தான் கலியாணம் எண்டு இழுத்தடிக்கிறான்” எண்டு அம்மா சொன்னா. நான் பெருமையாச் சிரிச்சன். தன்ர கடைசிப் பெடியன் லண்டனில் டொக்டருக்குப் படிகிக்கிறான் எண்டு என்ர பெருமையில மண்ணை அள்ளிப் போட்டா மாமி.
லண்டனிலும் பாக்க கனடா நல்லா இருக்குது எண்டும், சாப்பாடு, இடமெல்லாம் எங்கட ஊர் போல கிடக்குது எண்டும் மாமா சொன்னார். தான் இப்ப இடியப்பம் தோசை ஒண்டும் செய்யிறேலை எல்லாம் கடையில வாங்கலாம் எண்டு அம்மா கனடாப் பெருமையக் கொஞ்சம் கூட்டிச் சொன்னா. தான் கனடாவில வாங்கின சீலைகள மாமி அம்மாக்குக் காட்டினா. அம்மா முகத்தைச் சோகமா வைச்சுக் கொண்டு தான் இப்ப பெரிசாப் பட்டு ஒண்டும் கட்டிறேலை எண்டா.. எனக்கு விசர் வந்துது. தம்பி ரூமுக்க கொம்பியூட்டரில் கிணுகிணுக்கிற சத்தம் கேட்டுது. நாளைக்கு வேலைக்கு வெள்ளணைப் போக வேணும் இருண்டிட்டுது படுக்கலாம் எண்டா வழியக் காணேலை.. (நான் மூத்த ஆம்பிளப் பிள்ளையாம் விசிற்ரேஸ் வந்திருக்கேக்க அவையளோட இருந்து கதைக்க வேணுமாம்..அம்மான்ர மனேஸ் இஞ்சையும் வேலை செய்யுது) நான் சோபாவில இருந்து தூங்கிக் கொண்டு இருந்தன். கதை கதையெண்டு கதைச்சு அலம்பி ஒரு வழியாக் கொட்டாவி விட்ட படியே ஒவ்வொருத்தரா படுக்கப் போச்சீனம். நான் பேசாமல் சோபாவில படுக்க அம்மா வந்து எழுப்பி “அவையள் கண்டாச் சரியில்லை.. போய்த் தம்பியோட படு” எண்டு பலவந்தமா அனுப்பினா. தம்பி கட்டிலில காலை விசிச்சுப் பரந்து படுத்திருந்தான். இண்டைக்கு நித்திரை கொண்ட மாதிரித்தான் எண்டு நான் ஒரு ஓரமா ஒதுங்கினன்.
கண் மூடி மூடித் திறக்க நான் அயருவதும் முழிப்பதுமாகப் புரண்டு கொண்டு கிடந்தன். மாமீன்ர ரெண்டாவது அடிக்கடி வந்து சிரிச்சிது. தம்பி சின்னதாக் குறட்டை விட்டான். நான் கையால அவன்ர வாயை மூடிப்பாத்தன் சரி வரேலை.. பெட் சீட்டை எடுத்து தலையைப் போத்து கண்களை இறுக மூடி ஒண்டு ரெண்டு எண்டு மனதுக்க எண்ணிக் கொண்டு கிடக்க, என்ர அறையில கட்டில் ஆடுற சத்தம் கேட்டுது. மாமி கிளுகிளுத்தா சின்னதாச் சிரித்தா.. பிறகு சினுங்கினா..மாமா ஏதோ ரகசிய குரலில குசுகுசுத்தார்.. மாமியின்ர குரல் இன்னும் சினுங்கியது.. பிறகு ரெண்டு பேற்ற மூச்சும் ஒரு மாதிரிக் கேட்டுது. என்னடா இது சோதினை எண்ட படி நான் தம்பியப் பாத்தன் அவன் வாய் திறந்து சொர்க்கத்தில கிடந்தான். நான் காதைப் பொத்திக் கொண்டு கிடக்க மாமியின்ர ஆ.. ஆ வெண்ட குரல் வந்து காதைப் பொத்தி அடிச்சிது.. பிறகு கொஞ்ச நேரத்தால ஓய்ஞ்சு போச்சுது. மாமா இருமுற சத்தம் கேட்டீச்சு.. எனக்கு கையெல்லாம் குளிந்து விறைச்சுப் போச்சு.. அடக்க முடியாமல் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு கிடந்த என்ர கண்களை நித்திரை வந்து மூட பின் கால்களை அகட்டிப் பிடித்த படி முனகலோடு அரக்கி அரக்கி நடக்கும் நான் மறந்து போயிருந்த “ரெக்ஸ”; என் கண்களுக்குள் வந்து போனது.
பதிவுகள் நவமபர் 2010 இதழ் 131
4. நரகத்திற்குச் செல்லும் நான்.. - கறுப்பி -
சில மணிநேரங்கள் கண்களை மூடித் தியானநிலையில் இருக்கும் போது எல்லாமே வந்து விடுகின்றது. வந்தவற்றைக் கண்களைத் திறந்து மீண்டும் ஒரு முறை மீட்டுப் பார்க்க முயல்கையில் ஒன்று மற்ற நிலையே எஞ்சியிருக்கும். சில மணிநேரங்கள் கண்களை மூடித் தியானநிலையில் இருக்கும் போது எல்லாமே வந்து விடுகின்றது. வந்தவற்றைக் கண்களைத் திறந்து மீண்டும் ஒரு முறை மீட்டுப் பார்க்க முயல்கையில் ஒன்று மற்ற நிலையே எஞ்சியிருக்கும். திட்டமிட்டுச் செயல்படுபவர்கைளப் பார்க்கையில் வெறுப்பாக வருகின்றது. முறுக்கிவிட்டது போல் ஒவ்வொருநாளையும் ஒரே மாதிரி, மூன்று நேரம் சாப்பிட்டு, அதற்கிடைப்பட்ட நேரத்தில் வேலையும், உதிரி வேலைகளையும் செய்து முடித்து கட்டிலில் “டாண்” என்று அதே நேரத்திற்குச் சரிந்து, இன்று உடலுறவு கொள்ளலாம் என்று முன் கூட்டியே குறித்து வைத்திருப்பார்களோ என்னவோகம் என்பது இவர்களை இயக்கிக்கொண்டேயிருக்கின்றது. இவர்களும் இயங்கியபடியேயிருக்கின்றார்கள். பின்னர் நான் இப்படித்தான், இப்படித்தான் இருக்கப்போகின்றேன் என்று முடிவெடுத்த பியாராவது அடையாளப்படுத்தவோ, ஒரு கட்டத்துக்குள் அடைத்து விடவோ முயல்கையில் கோபம் வேகமாக வந்து போகின்றது. (போகின்றது என்றவரை சந்தோஷம்தான்) இன்று போல் நாளை வாழ மனம் ஒப்பா என்ற நிலையில் அலைந்து கொண்டிருக்கின்றேன்.
“சுஷானி” போது இந்தியாவாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தாலும், உருவம் அதற்குப்; பொருந்தாமல் இருந்தது. நிச்சயமாக ஐரோப்பா அதிலும் குறிப்பாக லண்டனிலிருந்து வந்திருப்பாள் என்று மனதுக்குள் பட்டது. இங்கிலாந்து மக்களுக்கென என் கணிப்பில் இருக்கும் அந்தக் கச்சிதமான உடை அலங்காரம் முழுமையாக அவளிடமிருந்தது. பொன்நிறத் தலைமயிரை கட்டையாக வெட்டியிருந்தாள். மிக நாகரீகமாக உடையணியும் பல்கலாச்சாரப் பெண்கள் மத்தியில், ஒரு அலுவலகத்திற்கேயான ஒழுங்கு முறையான உடையணிந்த அவள் கதைக்கும் போது ஆங்கிலத்தைச் சிரமப்பட்டுத் விழுங்கிய போதுதான் எனக்குள் சந்தேகம் எழுந்தது. எங்கிருந்து வந்திருக்கின்றாய் என்று கேட்டேன். ரஷ்யா, கனடா வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றது என்றாள். நான் உடனேயே எழுந்து நின்று விட்டேன்.
விடுமுறைக்காக இந்தியா சென்றிருந்த போது நாங்கள் சென்ற புகையிரதவண்டி கேரளாவைக் கடந்து செல்கையில் நான் யன்னலால் எட்டி எட்டி எதையோ தேட பொறுமை இழந்த என் கணவன் என்னத்தை அப்படி ஆவலோடு தேடுகிறீர் என்று கேட்டபோது மோகன்லால் அல்லது மம்முட்டி யாராவது கண்ணில் தட்டுப் படுகின்றார்களா என்று பார்க்கின்றேன் என்று சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. இப்போது அந்தப் பட்டியலில் மீரா ஜாஸ்மீனும் சேர்ந்துகொண்டிடுள்ளார்.
நான் கலவரம் அடைந்து விட்டேன். “நீ பிறந்த ஊர் எது? யஸ்னயா போல்யனா விற்குச் சென்றிருக்கின்றாயா? “பிளேஸ் வித் த லிட்டில் கிறீன் ஸ்டிக்”; ஐப் பார்த்திருக்கின்றாயா? கேள்விகளை அடுக்கத் தொடங்கினேன். நான் எழுந்து நின்றதையும், என் விசித்திரமான கேள்விகளையும் கண்டு அவளும் கலவரம் அடைந்து என்னை வினோதமாகப் பார்த்தாள். நான் என்னை சுதாகரித்த படியே, இல்லை ட்ரோல்ஸ் ஸ்ரோய் என்றால் விசராகும் அளவிற்கு பிடிக்கும். அன்ட்ரூவையும், லெவினையும் உண்மையாக் காதலிப்பவள் நான் என்றால் நம்பவா போகிறாய்?. நான் நினைக்கிறேன் அன்ட்ரூவையும், லெவினையும் லியோ தன்னை வைச்சுத்தான் உருவகப் படுத்தியிருக்கின்றார் என்று. அப்பிடிப் பார்த்தால் உண்மையிலேயே நான் காதலிப்பது லியோவைத்தான் என்று நினைக்கின்றேன் என்றேன்.
வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே ஒரு லூசிடம் மாட்டிக்கொண்டு விட்டேனோ என்ற பாவனையில் முகத்தைத் திருப்பித் தனக்காக மேசை மேல் வைக்கப்பட்டிருந்த வேலைப் பத்திரங்களைக் கையில் எடுத்துப் புரட்டத் தொடங்கினாள் அவள். நான் அவமதிக்கப்பட்டது போல் உணர்ந்தேன். என் மேசையின் பக்கம் திரும்பி ஒரு தமிழ் பாடலை முணுமுணுத்த படியே அவள் என் கேள்விகுப் பதில் சொல்லாது திரும்பிக் கொண்டது பெரிய பாதிப்பு ஒன்றையும் எனக்குத் தரவில்லைப் போல் காட்டிக்கொண்டு எனது வேலையில் மிக மும்மரமாக ஈடுபடத் தொடங்கினேன். நான் அவளுக்கு வேலையில் மூத்தவள். வயதில் நிச்சயமாகச் சின்னவளாகத்தான் இருப்பேன் என்றொரு நம்பிக்கை. வேலையில் சந்தேகம் வந்தால் நிச்சயமாக என்னிடம் தான் கேட்க வேண்டும் அப்போது பார்த்துக் கொள்கின்றேன் என்று என் காயப்பட்ட மனதிற்கு ஆறுதல் சொன்னேன். நான் மின்கணனியின் மேல் பார்வையைச் செலுத்தும் போது அவள் என் கடைக்கண் பார்வையில் விழுந்தபடியே இருந்தாள். ஒரு பத்திரத்தை அப்படியும் இப்படியுமாகப் புரட்டிய படி என் பக்கம் திரும்புவதும் பின்னர் அதிகாரியின் அறை பக்கம் பார்வையை ஓட்டுவதுமாகத் தடுமாறிக் கொண்டிருந்தாள். ஒரு கிழமை வேலைப் பயிற்சியை முடித்துக் கொண்டு மிக ஆர்வமாக முதல் நாள் வேலையைத் தொடங்கியவளுக்கு முதல் பத்திரமே சந்தேகத்தை எழுப்பி விட்டிருந்தது. நான் மனதுக்குள் குதூகலித்துக் கொண்டிருந்தேன். வழமையாக மற்றவர்களின் துக்கத்திலோ, சிரமத்திலோ குதூகலிக்கும் வன்மமான மனம் கொண்டவளல்ல நான். இன்று அப்படி உணர்வதில் எனக்குள் சங்கடமான ஒரு சந்தோஷம். சில நிமிடங்களின் பின்னர் என் மனச்சாட்சி என்னைத் தொல்லை செய்தது. நான் மிகவும் மும்மரமாக வேலையில் ஈடுபடுவதுபோல் பாசாங்கு செய்வதால் அவள் என்னைத் தொந்தரவு செய்யத் தயங்குகின்றாள். இல்லாவிட்டால் என்னிடம் ஏதாவது கேட்கப் போய் நான் பதில் சொல்லப்படாத கேள்விகளை மீண்டும் தொடரலாம் என்ற தயக்கம் கூட அவளுக்கு இருக்கலாம். நான் என் முதல்நாள் வேலை அனுபவத்தை மனதுக்குள் ஒருமுறை மீட்டுப் பார்த்தேன். எப்போதுமே என்மேல் அபரிமிதமான நம்பிக்கை கொண்டவள் நான். அதனால் சிலவேளைகளில் அதிகப்பிரசங்கித் தனமாக நடந்து கொண்டு மூக்கை உடைத்துக்கொள்வதும் உண்டு. ஒருகிழமை வேலைப் பயிற்சியின் பின்னர் இந்த மேசைக்கு நான் அனுப்பப்பட்டு முதல்பத்திரம் என் கைகளுக்கு வந்தபோது நானும் தடுமாறித்தான் போனேன். முதல் பத்திரமே என்னை முழுசிப் பார்த்தது. முதல்கோணல் முற்றும் கோணலாய் போய்விடுமோ என்ற அச்சத்தில் நான் முழித்திருக்கையில் நான் கேட்காமலே தானாய் வந்து கைகொடுத்தவர்கள் பலர். இப்போது நான் அனுபவசாலி. பலருக்கு உதவியிருக்கின்றேன். நீ என் பக்கத்து மேசைக்காறி. உனக்கு நான் உதவுவேன் என்ற நம்பிக்கையில் உன்னை ஒருவரும் நாடிவரப் போவதில்லை. என் உதவி உனக்கு நிச்சயம் தேவை என்பது எனக்குப் புரிகிறது, ஆனால் நீயாகக் கேட்க வேண்டும் என்று என் குரூரமனம் ஏனோ என்னை உனக்கு நானான உதவுவதை இழுத்துப் பிடிக்கின்றது.
ஏதாவது ஒரு உரையாடலுடன் அவளுக்கு உதவி வேண்டுமா என்றரிந்து உதவு என்று என் நல்ல மனம் உத்தரவிட்டது. நான் ஒரு சுவிங்கத்தை எடுத்து ஒன்றை வாயிற்குள் போட்ட படியே இயல்பாக அவளின் பக்கம் ஒன்றை நீட்டினேன். இப்போதாவது அவள் இறங்கி வந்து என்னிடம் தானாக உதவி கேட்கின்றாளா என்று பார்க்கும் எண்ணத்தோடுதான் நான் அதைச் செய்தேன். அவள் சிநேகிதமாய் சிரித்த படியே ஒன்றை எடுத்துக் கொண்டு நன்றி சொன்னாள். எல்லாம் சரியாக இருக்கிறதா? சந்தேகம் ஒன்றும் இல்லையே என்று கேட்டேன். தடுமாறிய படியே பத்திரத்தை என்னிடம் காட்டித் தனக்கான சந்தேகத்தைக் கேட்டாள். நான் சந்தோஷத்துடன் அவளுக்கு விளக்கிக் கூறினேன். அவள் நட்போடு சிரித்த படியே நன்றி சொல்லி விட்டு வேலையை ஆரம்பித்தாள்.
உதவி பெற்றுவிட்டாள். இப்போது அவள் எனக்கு அடிமை. தேத்தண்ணி இடைவேளையில் போது அவளையும் அழைத்துக் கொண்டு ஓய்வு அறையின் பக்கம் சென்றேன். அவள் கண்களில் என்னுடன் உரையாடல் தொடங்குவதற்கான மிரட்சி தெரிந்தது. முதல் முதலில் ஒருவர் அறிமுகமாகும் போது இரண்டு நல்ல வார்த்தை பேச வேண்டும் என்பதை மறந்து நான் கேட்ட கேள்விகளுக்காக இப்போது வருந்தி, “உனக்கு எத்தனை பிள்ளைகள்?, என்ன பிள்ளைகள்?, எத்தனை வயது? என்ற உப்புச்சப்பில்லாத வழமையான கேள்விகளைக் கேட்டு அவளை இயல்பு நிலைக்குக் கொண்டுவந்தேன். இருந்தாலும் என் முந்தைய கேள்விகளைச் சுற்றியே என் மனம் சுழன்றுகொண்டிருந்தது. தேனீரோடு ஒரு பிஸ்கட்டையும் சாப்பிட்டு விட்டுத் திரும்பவும் எமது இருக்கைக்கு வந்தோம். இப்போது அவள் என்னோடு ஒட்டிக்கொண்டு விட்டாள். கைப்பைக்குள் இருந்து தனது குடும்பப் படத்தை எனக்கு எடுத்துக் காட்டினாள். இரண்டு பெண்பிள்ளைகள். மூத்தவள் அண்மையில்தான் திருமணம் செய்ததாகச் சொன்னாள். மருமகனைத் தனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்றாள். விட்டால் வேலை எதையும் செய்யாமல் குடும்பக் கச்சேரி நடத்தத் தொடங்கிவிடுவாளோ என்று எனக்குச் சந்தேகமாக இருக்க, எனது “சீனியோரிட்டியை” இப்போது காட்டி அவளைச் சிறிது நோகப்பண்ணலாம் என்று என் சாத்தான் மனது சொன்னது. “வேலை நேரத்தில இப்பிடி அளவுக்கு அதிகமாக் கதைக்கக் கூடாது, அதிகாரி கவனித்தால் உனக்குத்தான் பிரச்சனை” என்றேன். அவள் முகம் சுருங்கிக் கொண்டது. உடனே மன்னிப்புக் கேட்டு விட்டு தன்வேலையைத் தொடங்கினாள். எனக்குத் திருப்தியாக இருந்தது. யாரையாவது அதிகாரம் பண்ணும்போது கிடைக்கும் சந்தோஷமே அலாதிதான். என் கணவர் எதற்கு வேண்டாததற்கெல்லாம் என்னை அதிகாரம் பண்ணுகின்றார் என்பது இப்போது புரிந்தது.
தொடர்ந்து வந்து நாட்களில் அவள் தனக்கான வேலைத்தள நண்பியாக என்னை வரிந்து கொண்டாள். அவளை நான் வெறும் “தொல்லை” என்பதாய்க் காட்ட முயன்றாலும் அவள் என்னைச் சுற்றிசுற்றி வருவது எனக்கும் பிடித்திருந்தது. எங்கள் ஆங்கில அறிவு ஒருவருக்கொருவர் ஒத்துப் போவதாய் இருந்தது. அவளுடைய உச்சரிப்பு எனக்கு விளங்கவில்லை என்று நக்கலாக நான் சொல்வதுண்டு. புலிக்கு (நாலுகால் மிருகம்) வாலாய் இருப்பதை விடப் பூனைக்குத் தலையாய் இருக்கலாம் என்று மனம் சொன்னது. என் உச்சரிப்பு அவளுக்கும் நகைப்பாய் இருக்கின்றது என்று தெரிந்த போது எனக்குள் கோபம் எழுந்தது. எத்தனை வருடங்கள் கனடாவில் வாழ்ந்தாலும் று க்கும் ஏ க்குமான உச்சரிப்பு வித்தியாசம் விளங்கமாட்டேன் என்கிறது. கனேடியர்கள் முன்நிலையில் சரியாக உச்சரிக்கின்றோமா என்ற தயக்கத்தோடு கதைப்பதை விட அவளோடு கதைப்பது சுலபமாகவிருந்தது. இருந்தும் ஏதாவதொரு காரணம் கண்டுபிடித்து அவளை மட்டம் தட்டி அவள் முகம் சுருங்கிப் போவதைக் கண்டு வக்கிரமாகத் திருப்திப்படுவதுமுண்டு. சிலவேளைகளில் அவள் முகம் சுண்டிப்போவதைக் கண்டு என் மனமும் நொந்து போகும். எதற்காக நான் இப்படி நடக்கின்றேன் என்று என்னை நானே கேட்பதுமுண்டு. அவள் ஒரு பிற்போக்குவாதி முட்டாள்தனமாக எதையாவது புசத்துவாள். நான் ரோல்ஸ் ரோய், தவ்தஸ்வாக்கி, சிமோன்தி பூவா. பிரேட்ய் அது இதுவென்று வாசித்துத் தள்ளும் ஒருமுற்போக்குவாதியாக இருந்துகொண்டு எதற்காக இந்தச் சின்னத்தனம். அவள் பிற்போக்குவாதி குறை உடையவள். நான் முற்போக்குவாதி அனைத்தையும் அறிந்தவள். எனவே குறை உள்ள ஒரு உயிரினத்தை நிறைவான ஒரு மனிதன் காயப்படுத்த மாட்டான் என்று நான் கண்டுபிடித்த தத்துவத்தின் மூலம் எனக்குள்ளேயே “அவளை மனம் நோகப்பண்ண மாட்டேன்” என்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டேன்.
அவளுக்கும் எனக்கும் சின்னச்சின்ன விஷயங்களிலெல்லாம் போட்டி இருந்தது. சின்னச்சின்ன விஷயங்கள் என்று சொல்வதைவிட உப்புச்சப்பில்லாத விஷயங்கள் என்று சொல்வதுதான் சரி. எப்படிப்பட்ட விஷயங்களுக்குப் போட்டி போடுவது என்று விவஸ்தையே இல்லாமலே போட்டிபோட்டுக்கொண்டிருந்தோம். அவளிலும் பார்க்க எனக்கு சிறிது ஐ.கியூ கூடுதலாக இருக்கிறது என்றே நம்புகின்றேன். எங்கு எப்படி அவளை அடிக்கலாம் என்று புரிந்து வைத்திருந்தேன். எனது சத்யபிரமாணம் அவ்வப்போது மறந்து போகும். ஐம்பதை எட்டிக்கொண்டிருக்கும் இருவருக்கிடையிலும் யாருக்குக் குறைவாக நோய் என்பதில் போட்டி. “நாரி சரியாக நோகுது” என்று அவள் சொன்னால், “நான் நல்ல ஃபிட்” என்று நான் சொல்வேன். “எனக்கு இண்டைக்கு டொக்டரிடம் அப்பொன்ட்மென்ட்” என்று நான் சொன்னால் அவள் கண்கள் மின்ன கத்தை சோகமாக வைத்துக்கொண்டு “உடம்புக்கு என்ன என்பாள்”, அவள் உள்ளம் வேண்டுவது ஏதாவது ஒரு கொடிய நோயைத்தான் என்று எனக்குப் படும், நான் மிக இயல்பாக முகத்தை வைத்து, மார்பகத்தில் தட்டுப்படும் கட்டியால் ஒருகிழமையாகத் தொலைத்த நித்திரையையும் மறைத்து “சும்மா ஒரு செக்கப்” என்பேன். மதியநேரம் சாப்பாட்டு வேளையில் யார் என்ன சாப்பாடு என்பதிலும் போட்டி. மிளகாய்த்தூள் உடம்புக்குக் கூடாது என்பாள் அவள். எங்கள் மசாலாப் பொருட்கள் மேல் மோகம் கொண்டுதான் ஐரோப்பியர்கள் எமது நாட்டைக் கைப்பற்றி ஆண்டார்கள் அது தெரியுமா உனக்கு என்று அவளை நான் மடக்குவேன். உங்கள் உணவு எந்தவிதமான உப்புச்சப்பும் இல்லாமல் இருக்கிறதே எப்படித்தான் சாப்பிடுகின்றீர்களோ ன்று அலுத்துக் கொள்ளுவேன். என் அதிரடிகள் தாங்காது அவள் மௌனமாவாள். எனக்கும் கவலையாக இருக்கும். வாழ்க்கையில் என் கணவன், குழந்தைகளோடு செலவிடும் நேரத்தைவிட அவளோடு நான் செலவிடும் நேரமே அதிகம். அவளோடு சுமூகமான உறவு ஒன்றை மேற்கொள்வதை விடுத்து எதற்காக இத்தனை காழ்ப்புணர்வு. எங்கள் கணவர்கள் பற்றியும் எங்களுக்குள் போட்டி. இந்த விடையத்தில் நான் கொஞ்சம் “வீக்”. என் முற்போக்குப் பெண்ணியச்சிந்தனை என்பனவற்றில் உணர்ச்சிவசப்பட்டு என் கணவனின் அதிகார குணம் பற்றிப் போட்டு உடைத்து விட்டேன். அவள் நிதானமாக ஒரு சம்மனசுபோல் புன்னகைத்தபடியே “என் கணவன் மிகவும் நல்லவர். அவரைப் போல ஒரு நல்ல கணவன் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்கின்றேன். நான் வாழ்வில் மிகவும் சந்தோஷமாக உள்ளேன். நான் மிகவும் அதிஷ்டசாலி, அதிஷ்டசாலி” என்றாள் கண்களை மயங்குவது போல் மூடி மூடித் திறந்து. எனக்கு யாரோ அம்மிக்குளவியைத் தலையில் தூக்கிப் போட்டதுபோல் இருந்தது. எந்த ஒரு சூழ்நிலையிலும் உனது குடும்ப அங்கத்தவரைப் பற்றிக் குறைகூறாதே. எல்லா வீட்டின் அலுமாரியிலும் எலும்புக்கூடுகளே உள்ளன, ஆனால் ஒருவரும் கதவைத் திறந்து காட்டப் போவதில்லை. உண்மை பேசுகின்றோம், நேர்மையாக இருக்கின்றோம் என்று முட்டாள் தனமாக உன் அலுமாரியின் எலும்புக் கூடுகளை வெளியே எடுத்துப் போடாதே. எனது சகோதரியின் கூற்று என் மண்டையில் தட்டியது.
சில கிழமைகளுக்கு முன்புதான் ஒரு வெள்ளிக்கிழமை நான் தொலைபேசி மூலம் ஆங்கில நாடகம் ஒன்றிற்கான பற்றுச்சீட்டுப் பதிவு செய்த போது ஒட்டுக் கேட்டவள் போல், நான் தொலைபேசியை வைத்தவுடன் என் அருகில், மிக அருகில் வந்து “எங்கே போகின்றாய்?” என்றாள். “வேலை முடிய நாடகம் ஒன்றிற்குப் போகப் போகின்றேன் வெள்ளிக்கிழமைகளில் பத்து டொலருக்கு டிக்கெட் கிடைக்கும் நீயும் வருகின்றாயா?” என்று கேட்டேன். அதிர்ந்தவள், “தனியாகவா போகின்றாய்?” என்றாள். “ஓம்” என்ற எனது பதில் அவளுக்கு மேலும் அதிர்சியைத் தந்திருக்க வேண்டும், “உன் கணவன் இதற்கெல்லாம் சம்மதிப்பாரா?” என்றாள். “அனுமதி கேட்டால் சம்மதம் கிடைக்காது, அறிவித்து விட்டுப் போகப் போகின்றேன்” என்றேன். அவள் முகம்; சுருங்கிக் கொண்டது. “என் வீட்டில் ஒரு கொலையே விழும் என்றாள்”. அங்கொங்கும் இங்கொங்றுமாக அவளுடனான உரையாடல்களில் இருந்து சேகரித்ததகவல்களின் படி “இப்பிடி ஒரு அருiமாயன(நல்ல) கணவனை அடைய நான் கொடு;த்து வைத்திருக்க வேண்டும்” என்ற “டயலாக்” இற்குச் சிறிதும் பொருந்தாதவர் அவள் கணவன் என்பது என் அனுமானம். இன்று அனைத்தைம் மறந்து தன் கணவனை உயரே உயர்த்திச் சுழற்றுகின்றாள்.
தான் அதிஷ்டசாலி, அதிஷ்டசாலி என்று அவள் கூறியதைத் தொடர்ந்து என் முகம் போன போக்கில் நான் பெரியதொரு தாக்குதலுக்கான வார்த்தைகளைச் சேகரிக்கின்றேன் என்று அவள் ஊகித்துக் கொண்டவளாய் உடனேயே அந்த இடத்திலிருந்து விலகிக் கொண்டாள். என் மனம் பாம்புபோல் சீறிக்கொண்டிருந்தது. “ப்பிச்” வாயுக்குள் முணுமுணுத்துக் கொண்டு இனிமேல் இவளோடு நான் சேரப்போவதில்லை என்று அருவரிப் பிள்ளைகளைப் போல் முடிவெடுத்துக் கொண்டேன். அன்று மீதியிருந்த நாட்களில் வேலையில் என் மனம் ஓடவில்லை. இவளை ஏதாவதொரு வழியில் தாக்கிவிடவேண்டும் என்று என் மனம் திட்டம் போட்டது. அவ்வப்போது என்ன ஆச்சு உன் சத்தியபிரமாணம்? என்று என் சாத்தான் மனம் அடித்துக்கொள்ள, அவளைத் தாக்குவதென்று முடிவெடுத்த பின்னர் அதனைச் சரியென்று சரிப்படுத்துவதற்கான காரணத்தை என் மனம் தேடித் தேடிக் களைத்துப் போனது. கோவத்தால் கனைத்துக் கொண்டிருந்த மனதோடு அன்றைய நாள் முழுக்க அநியாயமாகிப் போக இதன் மிகுதியை வீட்டிற்கும் இழுத்துச் சென்று கணவர், குழந்தைகளிடமும் சீறப் போகின்றேன்.
அதன் பின்னர் அவளைத் தவிர்த்து ஆனால் அவளின் காதுகளில் படும்படி, என் கணவர் எனக்காகச் சாப்பாடு கட்டித்தந்திருக்கின்றார், இன்று நான் போட்டிருக்கும் உடை என் கணவர் எனக்காக வாங்கி வந்தது, நேற்று வேலையிலிருந்து வீட்டிற்குச் சென்ற போது இரவு உணவு மேசையில் மெழுகுதிரி சகிதம் இருந்தது, அருகில் பூக்கொத்து வேறு என்று இல்லாத கற்பனையில் எனது ஒண்டுக்கும் உதவாத கணவனை மற்றவர்களுக்குப் புழுகித் தள்ளிக்கொண்டிருந்தேன். அவர்களும் ஆ.. ஓ.. என்று என் சந்தோஷத்தில் பங்கெடுத்துகொண்டார்கள். “அப்படி என்ன அற்புதம் அவருக்கு நீ செய்து விட்டாய்?” என்ற கேள்வி வேறு, நான் பொய்யாக வெட்கப்பட்டுக் கொண்டேன். சுஷானிக் வாயுக்குள் சிரித்துக் கொள்கின்றாளோ என்ற சந்தேகம் அடிக்கடி எனக்குள் வந்து போகாமலில்லை. என் சின்னத் தனம் என்னைக் கேலி செய்தது. உன் பெண்ணியம் இதுதானா என்ற கேள்வி அடிக்கடி என் மனதுக்குள் எழாமலில்லை.
தொடர்ந்து வந்த நாட்களில் அவளோடு வழமைபோல் நேரத்தைச் செலவிட்டாலும் இருவருக்குமிடையில் ஒரு மௌனப்போர் நிகழ்ந்துகொண்டிருப்பது உணரமுடிந்தது. தாக்குதல் எதிர்த்தாக்குதல் என்று அகோரமாகப் போய்க்கொண்டிருந்தன நாட்கள். அவள் ஞாயிற்றுக்கிழமைப் பூசைக்குத் தவறாமல் கோயிலுக்குப் போய் வருவாள் என்பதை அறிந்து கொண்டு “நீ எதற்காகக் கோயிலுக்குத் தவறாமல் போகின்றாய்?” என்று கேட்டு வேண்டுமென்றே அவளை வம்புக்கிழுத்தேன். “என்ன நீ தெரியாத மாதிரிக் கேட்கின்றாய்? நீ எதற்காக உங்கள் கோயிலுக்குப் போய்ப் பிரார்த்தனை செய்கின்றாயோ அதே போல்த்தான் நானும் எங்கள் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்து கொள்கின்றேன்” என்றாள். “நான் கோயிலுக்குப் போய்ப் பிரார்த்தனை செய்வதாக யார் உனக்குச் சொன்னார்கள்?” என்றேன். மௌனமானாள். குழம்பியநிலையில் என்னைப் பார்த்தாள். ஒரு பெண், ஒரு மனைவி, ஒருதாய், கோயிலுக்குப் போகாமலிருப்பது எவ்வளவு சாத்தியம் என்பது அவளது கற்பனைக்கு எட்டாவிடையம். கண்கள் கொஞ்சம் பனித்திருக்க (என் கற்பனையோ என்னவோ) “நீ உங்கள் கோயிலுக்குப் போய்ப் பிரார்தனை செய்வதில்லையா?” என்றாள். இல்லை என்பதாய் நான் தலையசைத்தேன். “அப்ப வீட்டிலா பிராத்திக்கின்றாய்? கோயிலுக்குப் போய்தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லைத்தான்” என்றாள் மிகவும் புரிந்துணர்வு கொண்டவள் போல். “நான் பிரார்த்திப்பதே இல்லை, எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை, நான் ஒரு நாஸ்த்திகை” என்றேன். அதிர்ந்து போய் நம்பிக்கையின்மையோடு என்னைப் பார்த்தாள். நான் பெருமையாய்ச் சிரித்தேன். அவள் கண்கள் சாந்தமாக மிளிர்ந்தது. மீண்டும் ஒரு சம்மனசு போல்க் காட்சியளித்தாள். பாவப்பட்ட என்னை கடவுள் மன்னிப்பார் என்பது போல் அவள் பார்வை இருந்தது. “ஆண்டவன் அனைவரையும் மன்னிக்கும் அற்புதம் கொண்டவர், சொர்க்கம், நரகம் இரண்டில் எதற்குப் போகப் போகின்றோம் என்பதை நாங்கள் இப்போது பூமியில் வாழும் போதே தீர்மானித்து அதற்கேற்ப எமது வாழ்வை ஒழுங்குபடு;த்திக் கொள்ளுதல் வேண்டும், செய்யும் தவறு...” அவள் முடிக்கு முன்பே குறுக்கிட்டு “தற்போதைய வாழ்க்கையை நரகமாக்கி நான் இறந்த பின்னர் சொர்க்கம் போ வேண்டிய அவசியம் எனக்கில்லை, அதிலும் பார்க்க இப்போது சொர்க்கத்தை அனுபவித்து விட்டு, இறந்த பின்னர் நான் நரகத்திற்கே போய்க் கொள்கின்றேனே, இருந்தாலும் எனக்கு சொர்க்கம், நரகம், அதிலும் நம்பிக்கை இல்லை” என்றேன். தலையைச் சிலுப்பிக் கொண்டாள்.
அதன் பின்னர் அவள் என்னை முற்றாகத் தவிர்த்து மற்றய பெண்களோடு நெருங்கிச் செல்வது புரிந்தது. என் ஐ.கியூ மேல் எனக்கே சந்தேகம் எழுந்தது. அவள் என்னைத் தவிர்த்து, மற்றவர்களோடு சேர்ந்து கொண்டு எனது நாஸ்திகம் பற்றி வம்பு பண்ணுகின்றாள் என்று வேண்டாத கற்பனை எனக்குள் விஸ்வரூபம் எடுத்தது. நானறிந்து எனது அலுவலகத்தில் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் ஒருவருமில்லை. அந்தப் பேச்சுக்கே அங்கே இடமிருக்கவில்லை. வேண்டுமானால் உன்னுடைய கடவுளிலும் விட என்னுடைய கடவுள் மேல் என்ற விவாதத்திற்கு இடமிருக்கலாம்.
தொடர்ந்த நாட்களில் வெறும் காலை வணக்கத்தோடு எமது நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
2009ம் ஆண்டு பங்குனி மாதத்தில் ஒருநாள், குளிரோடு, சிறிது பனியும் வடிந்து கொண்ருந்தது. தொலைக்காட்சிகள், வானொலிகள், பத்திரிகைகள் அனைத்திலும் ஈழப்பிரச்சனை முக்கியத்துவம் பெற்றுக்கொண்டிருந்த நாட்கள் அவை. வேலை நேரத்தில் முடிந்தவரை மின்கணனியில் எமது நாட்டு நிலவரம் பற்றி அறிந்து கொண்டிருந்தேன். ஈழ மக்களின் நேரடிப்பாதிப்புக்கள் ஒளிநாடாக்களில் பார்க்க நேரிடுகையில் எழும் உணர்வைப் பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில் வேண்டா வெறுப்பாக அலுவலக வேலைளை அளைந்து கொண்டிருக்கும் கண்களும், கைகளும். எனது அலுவலகத்தில் இலங்கையர்கள் ஒருவரும் இல்லாததால், மனம் சோர்ந்து போகும் பொழுதுகளின் நண்பர்களுடன் தொலைபேசியில் மட்டுமே உரையாட முடிந்தது.
அன்று எனது அலுவலகம் அமைந்திருக்கும் பெருஞ்சாலையில் சிறுவர்கள் தொடக்கம் முதியவர்கள் வரை, கடுங்குளிரையும் பொருட்படுத்தாது கை கோர்த்து, பாதாகைகள் தூக்கி “எமது தலைவர் பிரபாகரன், எமக்கு வேண்டும் தமிழீழம்” என்று கோஷம் போட்டபடியிருந்தார்கள். நான் தலையைக் குனிந்த படியே அலுவலகத்திற்குள் நுழைந்து எனது இருக்கையில் இருந்த பின்பும் பல மணிநேரமாக எனது பதட்டம் குறையவில்லை. பதட்டத்திற்கான காரணம் புரியவில்லை. நான் என்றும் உணராத நெஞ்சின் நெருடல் என்னை அலைக்கழித்துக்கொண்டிருந்தது. வெட்கமா? கவலையா? இயலாமையா? அவமானமா?. மின்கணனியை அழுத்;திவிட்டு வெறுமனே இருந்தேன். சுஷானிக் வேகமாக வந்தாள். எனது தோளைத் தொட்டாள். “உனது நாட்டில் என்ன பிரச்சனை?, ஏன் உன் நாட்டு மக்கள் கோஷம் போடுகின்றார்கள்?, நீ இது பற்றி ஒருநாளும் கதைத்ததில்லையே..” அவள் கேள்வி தொடர்ந்து கொண்டேயிருந்தது. நான் அப்போதிருந்த மனநிலையில் உரையாடலைத் தவிர்க்க எண்ணி, “நீ தொலைக்காட்சிச் செய்தியைப் பார்த்து அறிந்து கொண்டிருப்பாய் என்று நினைத்தேன்” என்று கூறிவிட்டு எனது வேலையில் கவனம் செலுத்துவது போல் பாவனை செய்தேன். “நீ ஏன் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை?, மேலதிகாரியிடம் சொல்லி விட்டு ஒரு மணித்தியாலம் ஆவது போய் வரலாம் தானே” என்றாள். எனக்குள் சினம் எழுந்தது. என் அப்போதான மனநிலை அவளோடு போட்டி போடவோ, விவாதம் பண்ணவோ சுமூமாக இயங்கவில்லை. இல்லை என்பது போல் வெறுமனே தலையை அசைத்தேன். அவளும் விடுவதாயில்லை “ஏன்?” என்றாள். கண்களில் சினம் பொங்க “ உனக்கு எங்கள் நாட்டு அரசியல் பற்றி என்ன தெரியும்? என்றேன். அவள் மீண்டும் சாந்தமாகக் “கோவிக்காதே ஏதோ கொஞ்சம் விளங்குகின்றது, உன்னில் இருக்கும் அக்கறையில்தான் கேட்கின்றேன், அங்கே வெளியில் அந்தக் குளிருக்குள் நிற்பவர்கள் உன் மக்கள் தானே?, உன் இனம் தானே?, அவர்களுக்கு இருக்கும் பிரச்சனை உனக்கும் உள்ளதுதானே? கதவைத் திறந்து கொண்டு வெளியில் இறங்கினால் நீயும் அவர்களில் ஒருத்தி, பின்னர் ஏன் கலந்து கொள்ளாமல் இங்கே நிற்கின்றாய்? என்றாள். நான் என்னைச் சாந்தப் படுத்திக்கொண்டு “எனக்கு அவர்கள் அரசியலோடு ஒத்துப் போவதில்லை, அவர்கள் செய்யும் போராட்ட முறை எனக்குப் பிடிக்கவில்லை, எமது மக்களுக்கான தலைவர் என்று குறிப்பிடும் அவரை நான் ஏற்றுக்கொள்ளவில்லை” என்றேன். அவள் மௌனமானாள். காலம் நேரம் பார்க்காமல் ஒரு பெரும்தாக்குதலுக்கு அவள் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டிருந்தாள். கண்களைச் சுருக்கி என்னைச் சிறிது நேரம் பார்த்தாள். பின்னர் குரலைச் செருமிச் சரிப்படுத்திவிட்டு, நிதானமாக “நீ உனது கணவருக்குத் தெரியாமல் சிலவற்றைச் செய்யும் போது எனக்குள் சந்தேகம் இருந்தது, பின்னர் கடவுள் நம்பிக்கையில்லை என்றாய் அதையும் ஒருமாதிரித் தாங்கிக்கொண்டேன், ஆனால் இப்போது உனது மக்களுக்காக முதியவர்கள், சிறுவர்கள் என்று குளிருக்குள் நின்று வாடுகின்றார்கள் இப்போதும் உன் விதண்டாவாதத்தை நீ விடவில்லை. உனது மக்களுக்காகச் சிறிது நேரம் குளிருக்குள் நிற்க உன்னால் முடியவில்லை, உனது மக்களின் பாதுகாப்பிற்காக உன்னால் கடவுளிடம் இரங்கி வேண்ட முடியில்லை. நீயெல்லாம் ச்சீ.. நீ நரகத்திற்குப் போவது நிச்சயம்” பொரிந்து விட்டு தனது இருக்கையை இழுத்து என்னிலிருந்து மிகத் தூரத்தில் முடிந்தவரை தன்னை இருத்திக் கொண்டாள். ஒரு முழுமையான அதிர்வோடு, உடல்விறைக்க நான் அசையாது இருந்தேன்.
பதிவுகள் யூன் 2004 இதழ் 54
பெண்கள்: நான் கணிக்கின்றேன்! - சுமதி ரூபன் -
Friendsபயணம் நிச்சயமாகி விட்டது. .எப்படியாவது யன்னலருகிலுள்ள சீட்டை புக் பண்ணுங்கள் என்ற போது என்ன கடைசி நேரத்தில இப்பிடி கேக்கிறீங்கள் என்று அவன் சினப்பது தெரிந்தது.. வரேக்க ஒரு பட்டு வேட்டி சால்வை வாங்கிக்கொண்டு வருவன் என்றதும்.. வினோதமான ஒரு ஒலியுடன் அவன் சிரித்தான் அவ்வளவுதான்.. எனக்கான இருக்கை எண்ணை கத்திதமான ஒருத்தி சுட்டிக்காட்ட பட்டுவேட்டி சால்வைக்கு முழுக்குப் போட்டு உடலை நுழைத்துக்கொண்டேன்.. நெருக்கமாக இருந்தது.. இடதுபக்கத்தில் பின்னால் இருந்து யாரோ பின்னால் குத்துவதுபோல் ஒருவித ஒலியை எழுப்பியபடியே பிலிப்பீனோ தம்பதி ஒருவர். சண்டை போடுகிறார்களா? சம்பா‘¢க்கிறார்களா? புரியவில்லை.. புரிந்து என்ன பண்ணுவது.. தொடரும் ஆறுமணித்தியாலங்களிற்கு எனக்கான பின்ணணி இசை அது என்று மட்டும் புரிந்தது.. வலதுபக்கத்திலிருந்த வெள்ளப்பெண்ணிடமிருந்து வந்த விலையுயர்ந்த வாசனை தலையிடியைத் தந்தது.. சுற்றுமுற்றும் பார்த்தேன்.. கனடா பல்கலாச்சார நாடு என்பது உறுதியானது.. வடஇந்தியப் பெண்மணி ஒருத்தி கணவனின் உழைப்பில் குடும்பத்தைப் பார்க்க ஊருக்குப் போகிறாள் போலும்.. கழுத்து கைகள் எல்லாம் கணவனின் உழைப்பால் நிறைந்திருந்தது..தலையணையை அணைத்தபடி எப்போது விமானம் கிளம்பும் குறட்டை விட்டுத்து¡ங்கலாம் என்பதான நிலையில் அவள் காத்திருந்தாள்.. எடுத்துச் சென்ற புத்தகத்தைக் கூட பிரிக்க முடியாத இறுக்கத்தில் இறுகிப்போய் நான்.. என்னைத் தவிர எல்லோருமே வாழ்வில் பலமணி நேரங்களை வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணம் மீண்டும் எனக்குள் எழுந்தது.. நான் தயாரானேன்..பயணத்திற்காய்..
அவள் என்னை இறுக அணைத்துக்கொண்டாள்.. அதே நீள் சதுர முகம் வயதாகிப்போயிருந்தது.. கட்டையாய் வெட்டப்பட்ட தலைமயிரை து¡க்கிக் கட்டியிருந்தாள்.. கருகருவென்றிருந்தது.. நிச்சயம் டை அடித்திருப்பாள்.. உடல் இறுகி ஆண் தனத்தைக் காட்டியது.. மீண்டும் அணைத்துக்கொண்டோம்.. எத்தினை வருஷமாச்சு.. இப்பவாவது வந்தியே.. என்னுடைய பையைப் பறித்து கழுத்தில் மாட்டியபடியே குதிரை போல் அவள் நடந்தாள்.. நீண்ட தலைமயிரும் மெல்லிய இடையும் நாணமும்.. கூச்சமுமாக பெண்களுக்கே ஆதாரமாக இருந்தவள்.. இன்று.. என்னை நான் குனிந்து பார்த்துக்கொண்டேன்.. விதியை நொந்தபடியே அவள் பின்னால் நான்..
லண்டனின் நெளிந்த குறுகிய ரோட்டும்.. நெருப்புபெட்டி போன்ற கார்களும் வினோதமாக இருந்தது.. அவள் ஆங்கிலப் பாடல் ஒன்றைப் ஓட விட்டு என் கைகளுக்குள் தன் கையைப் பிணைத்து நல்ல குண்டா வந்திட்டாய்.. அம்மா மாதிரி இருக்கிறாய் என்றாள்.. பிள்ளைகள் கணவன் குடும்ப வாழ்க்கை எல்லாம் எப்பிடிப் போகுது என்றாள்.. என் அளவில் எனது சந்தோஷங்கள் எனக்குப் பிடித்திருந்தது.. பெருமையாயும் இருந்தது.. அவளை நோகடிக்க விரும்பாது நான் சிரித்தேன்.. அவளும்..
கச்சிதம் என்ற வார்த்தைக்கு அர்த்தத்தை அவள் இருப்பிடத்திற்குள் புகுந்த போது புரிந்துகொண்டேன்.. வீடு ஒரு பல்கலாச்சார பள்ளியாய் சீனர்களின் சிரித்த வாய் குண்டுப் புத்தாவிலிருந்து.. கறுப்பர்களின் நார்பின்னல் தலையுடனான சின்னச் சின்னச் சிலைகள் ஓவியங்களுடன் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு நாட்டவர்களின் கலையுணர்வைக் காட்டி நின்றது.. கண் விழித்து நான் வியப்போடு பார்க்க தனது வேலை அப்படிப்பட்டதென்றாள்.. கட்டிடக்கலை ஆராய்ச்சில் தான் வேலை செய்வதாகவும் பல நாட்டு நண்பர்கள் தனக்கு இருப்பதாகவும் சொல்லி என்னை நான் தங்கும் அறைக்கு அழைத்துச் சென்று காட்டினாள்.. எல்லாமே புதுமையாகவும் கொஞ்சம் அதிசயக்கக்கூடியதாகவும் இருந்தது..
நான் அவளுடன் தங்கும் அந்த ஒரு கிழமையில் எங்கெல்லாம் செல்வது என்ன சாப்பிடுவது என்பதை மிகவும் நேர்த்தியாக எழுதி வைத்து என்னிடம் காட்டி சம்மதமா என்றாள்? நான் யாரையாவது பிரத்தியேகமாகச் சந்திக்க வேண்டுமா என்றும் கேட்டாள்.. அவள் எல்லாவற்றையும் ஒழுங்கு முறையோடு எழுதி வைத்து அதன்படி நடப்பது ஒரு வித செயற்கைத் தனம் போல் இருந்தாலும் அதில் இருக்கும் கச்சிதம் அவள் எனக்காக எடுத்துக்கொண்ட பிரயத்தனம் என்னைக் கவர்ந்திருந்தது.. பதினைந்து வருட நண்பியை முதல் முதலாய் பார்ப்பது போல் வினோதமாகப் பார்த்தேன்.. இருந்தும் அந்த வீடு நிறைவற்றதாய் எனக்குள் பெருமூச்சை வெளிக்கொணர்ந்ததை தவிர்க்கமுடியவில்லை..
கால்கடுக்க லண்டன் ஹைட் பாக்கில் பொடேரோ சிப்ஸ் சாப்பிட்டபடியே பாடசாலை நாட்களை மீட்டு மீட்டு வாய்விட்டுச் சிரித்து மீண்டும் எம்மை சிறுமிகளாக்கி புளகாந்கிதம் அடைந்தோம்.. மீட்டுப்பார்க்க எமக்குள் அடங்கியிருக்கும் நினைவுகளைப்போல் புலம்பெயர்ந்து வாழும் குழந்தைகளுக்கு இல்லை என்ற படியே அவளின் கண்பார்வையைத் தவிர்த்து ஏன் இன்னும் கலியாணம் கட்டாமல் தனியா இருக்கிறாய் என்ற போது அவளின் தொலைபேசி ஒலித்தது.. என்னிடம் கண்ணால் பொறு என்பதாய் காட்டி விட்டு சிறிது து¡ரமாய் போய் சிரித்துச் சிரித்துக் கதைத்தவள்.. பின்னர் என்ர ப்ரெண்ட் மைக்கல் வெரி இன்ரறஸ்ரிங் பெலோ.. நைஐ£ரியன் யூனிவேர்சிட்டிலிய வேலை செய்யிறான்.. எப்ப பாத்தாலும் ரிசேக அது இது எண்டு உலகம் சுத்துவான்.. இப்ப பிரான்ஸ்சில நிக்கிறானாம் இன்னும் ட்ரூ வீக்ஸில இஞ்ச வந்திடுவன் எண்டான்.. நீ வாறது அவனுக்குத் தெரியும்.. உனக்கும் ஹாய் சொல்லச் சொன்னான்.. மூச்சு விடாமல் கூறியவள்.. சிறிது நிறுத்தி வந்தால் என்னோடதான் தங்கிறவன்.. என்றாள் இயல்பாய்.. என் இயல்பு களங்கப்பட்டது..
எனக்கான அந்தக் கிழமை.. அவளுடன் சேர்ந்து ஒவ்வொரு இடமாகச்செல்லும் போதும் மிகவும் அர்த்தம் பொதிந்ததாக பிரமிப்பபை ஏற்படுத்தியது.. குடும்பத்துடன் எத்தனை இடங்களுக்குச் சென்றுள்ளேன்.. எப்போதும் பதட்டமும் களைப்பும் அலுப்பும் எப்படா வீட்டிற்கு வருவோம் என்றிருக்கும்.. வீணான சிடுசிடுப்புக்கள் கோபங்கள்.. வெறிச்சிடும் வாழ்வு.. ஆனால் இப்போது.. இவள் வாழ்வின் ஒவ்வொரு விடயத்தையும் அர்த்தமாக்கி அனுபவிக்கிறாள்.. தோள் தேய்த்து நடக்க கணவன்.. காலுக்குள் இடற குழந்தைகள் அற்ற நிலையிலும்..இவளால் சிரிக்க குது¡கலிக்க முடியுமெனின்.. கணவன் குழந்தைகள்.. வீடு கார்.. அதற்கும் மேலாய் இன்னும் கொஞ்சம் போய் வாசிப்பு எழுத்து என்று என்னை மேன்மை படுத்தி பெண்ணியம் முற்போக்குத்தனம் என்று பவிசு பண்ணி.. மேதாவியாய் உலவி.. இப்போது.. என் முற்போக்குத்தனம் பெண்ணியக் கருத்துக்கள் என்னுள் முரண்டு பிடிக்கத்தொடங்கியது.. இருந்தும் எனக்குள் இவள் ஏன் இன்னும் கலியாணம் கட்டாமல்.. ஆண்களோடு இவ்வளவு க்ளோஸாக..
லண்டனில் பிரசித்தி பெற்ற சுற்றுலாப்பயணிகள் பார்க்க வேண்டிய இடங்கள் என்ற பட்டியலை முடித்து அவளது வேலைத்தளத்திற்கும் அழைத்துச் சென்றாள்.. பல இனத்து நாட்டவர்களும் அவளைக் கண்டதும் ஓடிவந்து அணைத்து என்னையும் சுகம் விசாரித்தார்கள்.. பாடசாலை நாட்களில் ஆண்களை நிமிர்ந்து பார்க்க மாட்டாள்.. ஆனால் இப்போது.. சரளமாக ஆண்களை அணைப்பது அவர்களின் கையைப் பிடித்தபடியே உரையாடுவது.. அவளின் இந்த போல்ட்நெஸ் எனக்குள் வியப்பாய்..விரிய.. அவள் இடுப்பை வளைத்துப் பிடித்திருக்கும் வெள்ளையன் ஒருத்தனை தானும் அணைத்து அவன் உதட்டில் முத்தமிட்டு ஈரப்படுத்தி எல்லோரிடமும் இருந்து விடைபெற்றுக்கொண்டாள்.. நான் என்னிலிருந்து மீண்டு வர பல மணிநேரமானது..
அவளை நான் உன்னிப்பாகக் கவனித்தேன்.. ஒருவேளை தீர்க்க முடியாத நோயினால் சாகப்போகிறாளோ? இல்லாவிட்டால் காதல் தோல்வியை மறைக்க சந்தோஷமாக இருப்பதாய் பாசாங்குபண்ணுகிறாளோ..? கர்ப்பம் கொள்ளாததால் கண்டிப்போன உடல்.. நேர்கோடாய் நிமிர்ந்து நிற்கும் விதம்.. நுனிநாக்கு ஆங்கிலம்.. காற்றில் கலைந்து நெற்றியில் வழியும் கருமயிர் கன்னத்தில் குழி விழ குழந்தைபோல் சிரிப்பு.. எனக்குள் எதுவோ எழுந்து என்னைக் கேள்வி கேட்க தலையை உலுக்கி மீள முயன்று மீண்டும் தோற்றேன்..
லெமன் ரீக்குள் கொஞ்சம் தேனை விட்டு எனக்கு ஒரு கப்பை நீட்டியவள்.. சோபாவில் இரு கால்களையும் து¡க்கிப்போட்டு தன்னை கு‘னுக்குள் புதைத்து தனது ரீ கப்பை இரு கைகளாலும் அணைத்துப் பிடித்து வெளியேறும் சூட்டை உள்ளங்கைக்குள் வாங்கி ஒரு குழந்தையைப் போல் கவனமாகக் வாயருகே கொண்டு சென்று கண்களை மூடி முகர்ந்து பார்த்துப் பின்னர் ஒரு முறை மெதுவாக உறிஞ்சி.. ச்ஆஆஆஆ.. என்றாள்.. ஒரு தேனீரைக் கூட இவளால் எப்படி இவ்வளவு அலாக்காக அனுபவிக்க முடிகிறது..
எனக்குள் எழுவது என்ன?.. புரியவில்லை..புரியவதில் சம்மதமுமில்லை.. மெளனமாக இருந்து விட்டு பின்னர் மீண்டும் கேட்டேன்.. ஏன் நீ இன்னும் கலியாணம் கட்டேலை..? நான் கேட்பதைப் பொருட்படுத்தாது மீண்டும் ஒரு முறை தேனீரை உறிஞ்சியவள்.. என்னைப் பார்த்துச் சிரித்தாள்.. எதுக்கு நீ இந்தியா போறாய் தெரியாததுபோல் கேட்டாள்.. நான் அலுத்துக்கொண்டேன்.. இவள் எதையோ மறைக்கிறாள்.. உண்மையான நட்பு என்பதற்கு இவளிற்கு அர்த்தம் தெரியவில்லை என்ற கோபமும் வந்தது.. அவள் என்னையே பார்த்தபடி இருக்க.. அதுதான் சொன்னனே.. இலக்கியச்சந்திப்பு ஒண்டு.. பெண்ணியம் எண்ட தலைப்பில நான் ஒரு கட்டுரை வாசிக்கப் போறன். எங்கட கலாச்சாரத்தில எப்பிடியெல்லாம் பெண்கள் அடக்கப்படுகிறார்கள்.. எண்ட கட்டுரை என்றேன் பெருமையாய்.. பின்னர் நான் வாசிக்கும் புத்தகங்கள்.. பற்றியும் எனது முற்போக்குச் சிந்தனை கொண்ட எழுத்து.. பெண்ணியக் கருத்துக்கள் என்பன எவ்வளவு து¡ரம் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது பேசப்படுகிறது என்பது பற்றியும் பெருமை இல்லாது சொல்லி வைத்தேன்.. குட்.. வாவ் ¥ என்று விட்டு மீண்டும் தேனீரை உறிஞ்சிய படியே உன்னை நினைக்க எனக்குப் பெருமையா இருக்கு என்றாள். எனக்குள் நான் மீண்டும் என்னைத் துளைத்தெடுத்து கேட்டேன் ஏன் இன்னும் கலியாணம் கட்டாமல் இருக்கிறாய் ஏதாவது பேர்சனல் பிரைச்சனையா?
அவள் கண்மூடி மீண்டும் தேனிரை உறிஞ்சியது எரிச்சலைத் தந்தது.. நான் கேக்கிறதை நீ இக்நோ பண்ணுறாய் எனக்கு விளங்குது.. நான் நினைச்சன் நீ என்ர உண்மையா ப்ரெண்ட் எண்டு உன்னுடைய கவலை வேதனைகளை என்னோட பகிரந்து கொள்ளாமல் நீ என்னை து¡ரத்தில வைக்கிறாய் நான் கொஞ்சம் உணர்ச்சிவசப் பட..அவள் வாய் விட்டுச்சிரித்தாள்.. பின்னர் எழுந்து வந்து என்னருகில் இருந்தவள்.. ரெண்டு பிள்ளைகளுக்கு அம்மா எண்டுறாள் இன்னும் அதே குழந்தைத்தனம் என்று என்முதுகில் தட்டி விட்டு என் ரீ கப்பையும் வாங்கிக்கொண்டு குசினியை நோக்கிச் சென்றாள்.. என்ன குழந்தைத் தனம்? நான் கேட்டதில என்ன பிழை? இந்தளவு வயதாகியும் கலியாணம் கட்டேலை.. வாரிசு எண்டு சொல்ல ஒரு பிள்ளை இல்லை.. இதில நகைச்சுவைக்கு எங்கே இடம்.. மனம் அடித்துக்கொள்ள்.. நான் மெளனமாக அவளைத் தொடர்ந்தேன்..
மீண்டும் தொலைபேசி அழைத்தது.. இப்போது எல்லாமே எனக்கு கோபத்தைத் தந்தது.. அவளின் ஒவ்வொரு அசைவும் எனக்குள் அசிங்கமாகி.. உன்னிப்பாய் நான் கண்காணிக்க.. ஆங்கிலத்தில் அவள் உரையாடலில் காதல் தெரிந்தது.. இது யார் இன்னுமொருத்தனா? முதலில் நைஐ£ரியக் கறுப்பன் தன்னுடன் வந்து தனியாகத் தங்குவான் என்றாள்.. பின்னர் வெள்ளையனை அணைத்து முத்தமிட்டாள்.. இப்போது யார் சைனாக்காறனா? கடவுளே நல்ல காலம் நான் தனியாக இங்கு வந்தது.. இவர் வந்திருந்தால் இதுதான் உம்மட க்ளோஸ் ப்ரெண்டின்ர லச்சணமோ என்று கேட்டு என்னையும் தவறாகக் கணித்திருப்பார்.. அவள் தனது தனிமையை முழுமைபெறாத தனது வாழ்க்கையைப் பற்றிக் கதைக்காதது எனக்குள் எரிச்சலை ஏற்படுத்த எப்படியும் ஏதாவது சாக்குச் சொல்லி கெதியாக இங்கிருந்து கிளம்பிவிட வேண்டும்.. இவளோடு தனித்திருந்தால் தெரிந்தவர்கள் பார்வையில் பட்டு வைத்தால்? நானும் கணிக்கப்பட்டு விடுவேன்..
வாய்க்குள் ஏதோ பாடலை முணுமுணுத்தவள்.. நான் அவளையே உற்றுப்பார்த்தபடி நிற்பதைக் கவனித்து விட்டு என்ன? என்பது போல் தலையை ஆட்டினாள்..
நீ எதையோ என்னட்ட இருந்து மறைக்கிறாய்.. நீ இன்னும் கலியாணம் கட்டாமல் இருக்கிறதுக்கு ஏதோ பெரிய காரணம் இருக்க வேணும் சொல்ல விருப்பமில்லாட்டி விடு.. நான் முகத்தை து¡க்கி வைத்துக்கொண்டேன்.. அவள் என்னைப் பார்த்து ஒரு விதமாகச் சிரித்தபடியே.. சரி சொல்லு. நீ சந்தோஷமா இருக்கிறாயா? கேட்டாள்.. ஓம் அதில என்ன சந்தேகம்.. நல்ல அண்டஸ்ராண்டிங்கான புருஷன் நல்ல வடிவான கெட்டிக்காரப் பிள்ளைகள்.. வசதிக்கும் குறைவில்லை.. அதோட என்ர வாசிப்பு எழுத்து எண்டு எவ்வளவு சந்தோஷமா இருக்கிறன்.. இதுக்கு மேல ஒரு பொம்பிளைக்கு என்ன வேணும் சொல்லு என் முகத்தில் அதி உயர்ந்த பெருமை வழிய.. அவள் என்னை உற்றுப் பார்த்தாள்.. அவள் கண்களின் தீவிர ஒளி எனைத் தாக்க நான் பார்வையைத் தாள்த்திக்கொண்டேன்.. என் கைகளைப் பற்றிய படியே அவள் சொன்னாள்.. நீ சந்தோஷமா இருக்கிறாய் எண்டதை முற்றும் முழுதாக நான் நம்பிறன்.. ஏன் கலியாணம் கட்டினனீ பிள்ளைகளைப் பெத்தனீ எண்டு நான் உன்னட்ட எப்பவாவது கேட்டனானா? என் நெற்றியில் முத்தமிட்டவள் தனது கைகளைக் கழுவி விட்டு படுப்பதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கியிருந்தாள்.. நீண்ட நேரமாக என்னால் நின்ற இடத்தை விட்டு அசையமுடியவில்லை..
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.