'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர்
-பதிவுகள் மே 2005 இதழ் 65
வாழ்வில் என்றும் மாறாதிருப்பது மாறுதலே என்றொரு சொற்றொடர் உண்டு. தாயாண்மை சமுதாயம் தொடங்கி தாயின் பின்னால் சமூகம் பயணிக்கத் துவங்கிய காலம் தொட்டு இன்று வரை எத்தனை மாறுதல்கள் வாழ்வியலில், கலாசாரத்தில், கொண்டிருக்கின்ற கருத்தியலில். ஆனால் மாறுகின்ற எல்லாவற்றிலும் பின்னும் மாறாமல் இருப்பது வாழ்வதற்கான ஆர்வம் மட்டுமே. அந்த வாழ்தலுக்கான ஆர்வமே கவிதையென்று எனக்குத் தோன்றுகின்றது. இந்த சமூகத்தில் உருவாக்கப் பட்டிருக்கின்ற வாழ்க்கை என்பது காலத்திற்கேற்ப பல்வேறு கருத்தியல்கள் விழுமியங்கள் இவற்றால் கட்டமைக்கப் படுகின்றது. மாறுகின்ற காலங்களில் கட்டமைக்கப் பட்ட நமது பலங்கள்,.., பலவீனங்களாக உருமாறும், காலாவதியாகும். அதை அடையாளம் கண்டு புணரமைப்பது காலத்தின் கட்டாயமாக சமூக பிரக்ஞை உள்ளவர்கள் உள்ளத்தில் விதையாக விழுகின்றது. அப்படியான வாழ்க்கை , இயல்பாய் இருக்கின்ற உணர்வுகளின் பேரில் முரண்படுகின்ற போது மனிதனது சிந்தனைகள் கேள்விகள் எழுப்புகின்றன. பொருளை , வணிகமயமாக்களை அடிப்படையாகக் கொண்ட இன்றைய வாழ்வில் உருவாக்கப்பட்ட வாழ்வின் பிண்ணணியில் நன்மை, தீமை , இருள் ஒளி என்று எல்லாமே விரவிக் கிடக்க நன்மைகளை இருத்த வைக்க ஒளியோடு வாழ்ந்து விட என்று இருவேறு முரண்பாடுகளின் பிண்ணணியில் நிகழும் போராட்டங்கள் உணர்வுகளுக்குள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.
அப்படிப்பட்ட உணர்வுகள் எழுப்பும் கேள்விகள் விசாரணைகள் பதிவுகள் , கட்டுரைகளக, செய்தியாக கதைகளாக நாவல்களாக வரலாம் . ஆனால் அவற்றின் சாராம்சம் மனதுக்குள் தேங்கிக் கிடந்து இதுதான் காரணம், இதுதான் தேவை என்று ஒரு மையப் புள்ளியை சுற்றிக் கடைய எங்களுக்குக் கிடைக்கின்ற தேவாம்ரிதமே கவிதை என்று எனக்குத் தோன்றுகின்றது.
அக உணர்வுப் பாடல்களிலிருந்தும் பிரிக்க முடியாது அரசியலையும் சமூகத்தையும் பிரதி பலித்து , கவிதையை காலத்தின் பதிவாக தந்து விட்டுப் போன சங்கப் பாடல்கள், கணிகையர் குல வழக்கத்திருந்து மீண்டு வர கேள்விகளும் , எத்தனையோ காலங்களின் பின்னும் காலாவதியாகாத கண்ணகி மணி மேகலை பாத்திரங்களை தந்து போன சிலம்பும், இசையை அடிப்படையாக கொண்டிருந்த கவிதை விடுதலைப் போராட்ட காலகட்டத்தில் பண்டிதர்க்கான சொத்தாக இருந்த இடமிருந்து பாமரனை வந்து சேர்ந்தடையச் செய்த பாரதி கவிதைகளும், பின்னாளில், விடுதலைக்குப் பின்னான வாழ்வியலில், மேலைத் தேயப் போக்குகள் உள் வந்த போதும், சங்க இலக்கியத்தின் மரபுத் தொடர்ச்சியே புதுக் கவிதை என அதற்கொரு அங்கீகாரம் தேடித் தந்த பிச்சமூர்த்தியின் கவிதைகள் இப்படியான ஒரு கவிதை பாரம்பரியத்திற்கு பிறகு, இன்று உத்திகளை மட்டுமல்லாது மேலைத் தேயநாடுகள் உபயோகப் படுத்தி, தேயப் பண்ணி தூர எறிந்த விடயங்கள் உள்ளே வர கவிதை பற்றி பேசி விட வேண்டிய சூழல் , விமரிசகனுக்கும், படைப்பாளிக்கும் நேர்ந்திருக்கின்றது.
என் வரையில் வெகு இயல்பாகச் சொல்லப் போனால் ஏற்கனவே இருக்கின்ற ஒன்றோடு புதிதாய் வாழ்வின் நிர்பந்தங்களின் பிண்ணணியில் வந்து நிற்கும் என் சிந்தனைகள் , முரண்படத் துவங்கும் இடத்தில் என் கவிதைபிறக்கின்றது என்றே உணர்கின்றேன்.
கவிதையென்பது என்று எழுதி விட அல்லது பகிரத்தருவதற்கான இரு வார காலமாக எனக்குள் ஒரு மோனத் தவமியற்றுதல் நிகழ்ந்திருக்கின்றது. அதில் நானே கூறிடப் பட்டு என்னவாக இருந்திருந்திருகின்றேன், இருக்கின்றேன், இருக்கப் போகின்றேன் என்னும் தேடல்களின் பேரில் தான் இதை இங்கே வழங்கத் தயாராயிருக்கின்றேன். கவிதை வேறு என் வாழ்வு வேறு அல்ல நானே கவிதை கவிதையே நான். இந்த மனநிலையில் எல்லா பரீட்சார்த்த முயற்சிகளுக்கும் சமூக நலன் கருதி எனையே முன் வைக்கும் முயற்சி இது. கவிதை குறித்த சில கேள்விகளிலிருந்து அது யாது எனும் விடை நாம் பெறலாம். வாழ்க்கை தருகின்ற அனுபவங்களே எனைப் பொறுத்த வரையில் கவிதை. வாழ்வியலில் நமக்கு முன்னால் இருக்கின்ற சூழ்நிலைகள் நிகழ்கின்ற நிகழ்வுகள், ஏற்கனவே நமக்குள் இருக்கின்ற தீர்மானங்கள். இவற்றுக் கிடையே இருக்கின்ற முரண்களின் பிண்ணனியில் எழுப்பப் படுகின்ற விசாரணைகள், விவாதங்கள் தேடல்கள் இவைதான் எழுத்தின் இலக்கியத்தின் அடிப்படை என்று நினைக்கின்றேன்.
இந்த முரண்கள் தான் எழுத்தை கையிலெடுக்க வைத்திருக்கின்றது. அதிலும் கவிதை என்பது எல்லா இலக்கிய வகைளிலும் மேம்பட்ட ஒன்று. மற்ற எழுத்துக்கள் வாசகனோடு பேசும். கவிதை ஒரு படி மேலே போய் உணர வைக்கும். . எனைப் பொறுத்தவரை கவிதை பேசக் கூடிய விடயமல்ல. உணரக் கூடிய விடயம் கவிதையில் தான் அந்த சொற்கள் சூழலாகவோ, பேசப் படுகின்ற அதே பொருளாகவோ மாறி விடக் கூடிய சாத்தியம் இருக்கின்றது.
அப்படியானால் எல்லா அநுபவங்களும் கவிதையாகி விடுமா? எனைக் கேட்டால் நிச்சயமாக இல்லை என்றே சொல்வேன் . அனுபவங்களையும் அவ்வெழுத்து எப்படி அணுகுகின்றது என்பதைப் பொறுத்தே அது கவிதையாகின்றது. இன்னும் சொல்லப் போனால் அநுபவங்களின் திரட்சி தான் கவிதை. அநுபவகங்கள் நமக்குள் எழுப்பும் கேள்விகள் தொடர்ந்த தேடல்கள் தேடல்கள் நமக்கு முன் வைக்கும் தீர்மானங்கள் என அநுபவங்களின் திரட்சியான வடிவமாகவே கவிதையை நான் பார்க்கின்றேன்
தன்னுணர்வா? சமூக சிந்தனையா?
எப்பவும் இந்த இருவேறு வெளிகளும் வேறானதாகவே பயணிக்கிறது ஒவ்வொரு மனிதனின் சுயநல மேம்பாட்டின் அடிப்படையில் பொது நலம் நிச்சயாமாக இருந்தே ஆகவேண்டும். நீங்கள் அறிந்தோ அறியாமலோ அது நிகழும் உங்களது சுய நல மேம்பாடு நேர்மையின் , உண்மையின் அடிப்படையில் இருக்குமேயானால் பொது நல மேம்பாடு அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்தே ஆக வேண்டும் அந்த நிலையில் தான் இந்த சமூகத்திலிருந்து பெற்ற உணர்வை தான் எதுவாக உணர்ந்தோமோ அந்த தன்னுணர்வு தளத்திலிருந்து கிளம்பி அதன் தொடர் பயணத்தில் , கிளை பரப்பி உலகமே அல்லாவிடினும், அது சார்ந்த நிலப் பரப்புக்கான நிழலாயாகவாவது மாறிப் போதல் நிகழ வேண்டும். அப்படியான தன்னுணர்வுக் கவிதைகளை நாம் வரவேற்க வேண்டும். ஏனெனில் அந்த ஒரு மனிதனின் கவித்துவம் மொழி, அவனுக்காக எழுதப் பட்டிருப்பினும் அது அனைவருக்குமானதான பன்முகத் தன்மையுடையதாய் இருக்கும். எனைப் பொறுத்தவரையில் என்கவிதைகளில் இருக்கின்ற நான் நானல்ல.. இது தன்னுணர்ச்சியில் ஆரம்பித்து பொது நிலைக்கு பரிமாணம் பெறும்
எந்த இலக்கிய வகையாக இருந்தபோதும் அது இலக்கியத்திற்கான இடத்தைப் பெறுவது அது கொண்டிருக்கின்ற சமூகப் பிரக்ஞையை கணக்கில் கொண்டே
பொதுவாகவே எல்லா படைப்பாளியும் தன்னைத்தான் ஒவ்வொரு படைப்பிலும் எழுதிப் பார்க்கின்றான். அப்படி தனிப்பட்ட மனிதனின் எண்ணப் பதிவுகள் எப்போ இலக்கியம் ஆகிறது என்றால்.. அதில் பேசப் படுகின்ற அநுபவம் வாசிக்கப் படுபவனுடைய அநுபவமாக மாறும் போது தனிமனிதன் சமுதாயத்துக்கு உரியவனாகின்றான். அவன் பேசுகின்ற விசயம் சமுதாயத்துக்குரியதாகின்றது
கவிதைக்கான கட்டுப் பாடுகள் இலக்கணம் கிடையாதா? எது எனும் கேள்விகள்
இசையை அடிப்படையாகக் கொண்ட மரபுக் கவிதைக்கென்று ஒரு இலக்கணம் இருந்தது . அதுவும் கூட எழுதப் பட்ட இலக்கியத்தின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட இலக்கணமே அன்றி இலக்கணத்தின் பின்னால் இலக்கியம் கைகட்டிச் செல்லவில்லை. நான்கு வரிகளுக்கான வெண்பா இலக்கணம் இருந்த கால கட்டத்தில் எழுதப் பட்ட திருக்குறளின் அடிப்படையில் குறள் வெண்பா எனும் புதிய இலக்கண வடிவம் உருவானதையும் பார்க்கிறோம்.
அழுத்தப் பட்டுக் கொண்டிருந்த மண்ணுள்ளிருந்து பீறிட்டுக் கிளம்பும் ஊற்றாய் பிரவாக மெடுக்கும் எழுத்துகளிலிருந்து புதிய இலக்கணங்கள் கண்டறியப் பட வேண்டும்.
விடுதலைக்குப் பிறகு பாரதி அடியொற்றி வெளிக் கிளம்பிய கவிதை ந. பிச்சமூர்த்தியிடம் வடிவாக்கம் பெறுகையில் ஓவியத்தை அடிப்படையாகக் கையிலெடுத்தது.
எனக்கு புதுக் கவிதை , நவீனக் கவிதை எனும் வார்த்தைகளின் மேல் நம்பிக்கையில்லை. கொஞ்ச கால அடையாளங்களாக இவை இருக்கலாமே ஒழிய அந்த வார்த்தைகளே அதுக்கான கிரீடங்களாய் மாறிவிட முடியாது.. சுயம்புவாய் வெளிப்படும் ஒவ்வொரு படைப்பாளியின் ஒவ்வொரு படைப்பும் புதியவையே நவீனமே என்றிருக்க அந்த வார்த்தைகள் அர்த்தமிழந்து வருகின்றன. புதிய பார்வைக் கோணங்கள் மூலம் புதிய கோட்பாடுகளை கட்டமைக்க முயலுகின்ற ஒவ்வொரு கவிதையுமே முற்போக்கான நவீனமே..
இதுதான் கவிதை என்று நான் அடையாளம் காண்பிப்பதை விட உங்களை உணரச் செய்வதுவே சரியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகின்றது. நமைச் சூந்திருக்கும் காற்றை எப்படி நாம் உணருகிறோமோ அது போல் கவிதையை உணருதல் அவசியம். நமக்கு உவப்பான விசயங்க¨ள் பேசும் போது கவிதைகள் சில்லென்று வீசும், சில நம்மிடையே இருக்கும் உண்மைகளை உரைக்கும் போது வெப்பக் காற்று துப்பிப் போகும்.
கவிதை இன்றைய யதார்த்தத்தை பிரதி பலிப்பதாய் இருக்க வேண்டும் யதார்த்தம் என்று சொல்லப் போகும் இரண்டு விதமான சிக்கல்கள் நமக்குள் வருகின்றன யதார்த்தம் எனும் பெயரில் செய்தித் தாள்களில் உள்ளதை எல்லாம் கவிதை யாக்கும் , போக்கும், பார்த்ததையெல்லாம் எதற்கு என்ற சிந்தனையில்லாது பதிவாக்கும் போக்கும் இருந்து வருகின்றது. அதிலிருந்து மீண்டு வரும் எந்த கவிதை களை யதார்த்தம் என்று சொல்லலாம் என்றால், இயற்கையியல் போக்கை தாண்டி அக்கவிதைகளில் நடப்பியல் போக்கு இருக்க வேண்டும், இயற்கையியல் என்பது பார்த்ததை அப்படியே பதிவு செய்வது. .நடப்பியல் என்பது ஒரு படி மேலே போய் அந்த நிகழ்வு என்ன விளைகளைத் தருகின்றது அது சரியா தவறா தவறென்றால் சரி செய்வதெப்படி இப்படியான கேள்விகளை உள்ளடக்கியதாக இருப்பதே நடப்பியல்
யாருக்கு வேண்டும் அஞ்சலிகள்?
சுடுகின்ற யதார்த்தங்கள்
சுவாரஷ்யங்களுக்கென்றே
சூடு பறக்க தின்னும் மனிதர்
எப்பவும் இரத்தமும் சதையுமாய்
உணர்வும் உயிர்ப்புமாய்
இருந்திருந்த அருந்ததிகள்
தினம் தினம்
உடல் சிதறி வீழும்
கல்பனா சாவ்லாக்களாய்
உலகம் முழுவதும்
இன்றும் கல்பனாக்களுக்கும்
அங்கீகாரங்கள் சிதறிய பிறகு தானா
பூக்களுக்கு மட்டுமேன் புகழாரங்கள்
இதழ்கள் உதிர வாழ்வைத் தொலைத்து
விதையாய்ப் புதைந்த பிறகு
சிதறினாலும் சிதறல்களும்
கோள்களாகி
வீழ்ந்தும் மீண்டும்
பிய்ந்த சதைகள் ஒட்டி
தழும்பு மறைத்துத் திரியும்
வாழும் கல்பனாக்களுக்கு
தேவையில்லை
அங்கீகாரம் தரத் தயாராயில்லாத
உங்கள் அஞ்சலிகள்
நிகழ் தான் யதார்த்தம், அதன் அடிப்படையில் நிகழை பதிவு செய்வது கவிஞனின் கட்டாயமும் கூட ஆனால் வெறும் புகைப்படமெடுத்ததைப் போல எந்திரத் தன்மையோடு பதிவாக்காது கலைஞனுக்கான சிருஷ்டி மன நிலை ஒரு தொலை நோக்குப் பார்வையை அடையாளம் காணும் விதத்தில் அந்தக் கலைப்படைப்பானது இருக்க வேண்டும்.
இந்த இடத்தில் இன்னுமொரு கேள்வி: கவிதை தீர்வு சொல்லலாமா கூடாதா!
தீர்மானத்திற்குள் வந்து விடும் படைப்பாளி தேடலை துறந்து விடக் கூடுமோ என்கின்ற பயமும் என்னளவில் பிரச்ச்னைகள், நிகழ்வுகள், சூழல்கள் மாறிய போதும் வாழ்தலுக்காய் நாம் கொண்டிருக்கின்ற நம்பிக்கை அதாவது முன் நகர்தலின் போதும் யாரையும் மிதித்து விடாத ஒரு நேச மனத்தை இருப்பாகக் கொண்டிருக்கக் கூடிய வாழ்வு பற்றிய தீர்மானம் உள்ளொயில் இருந்தால் தான் ஒரு கலைஞனது தரிசனம் , தொலை நோக்குப் பார்வை சரியாக இருக்கும், இல்லாவிடில் அதுவும் ஊசலாட்டத்தில் தான் இருக்கும். பதிவாக்குவதைத் தாண்டி கலைப் படைப்புக்கான சிருஷ்டி மனநிலை எதுவாக அந்த செய்தி உள்வாங்கப் பட வேண்டுமோ அதற்கான முன் நகர்தலைச் செய்திடும்.
அழகியல்
அழகியலை கையிலெடுக்க மறுத்து தோற்றுப் போன கவிதைகளும் உண்டு அழகியலை கையிலெடுத்து தோத்துப் போன கலை வடிவங்களும் உண்டு. அழகியல் என்பது வெறுமனே அழகாய்ச் சொல்ல விழைவதல்ல. அழகியலை ஏற்கனவே புனிதப் படுத்தப் பட்ட விசயங்களை பேசுவதையே அழகியல் என்று பலரும் நினைத்துக் கொண்டிருகின்றனர். இந்த சமுதாயத்தில் நிகழ்கின்ற மோசமான விசயங்களையும், வலிகளையும் கவிதை பேசும். ஆனால் எப்படி பேசுகின்றது என்பதும் எந்த இடத்தில் அதை கவிதையாகுகிறது என்பதும் தான் முக்கியம். அழகியல் தான் உரை நடையிலிருந்து சொற்களின் சேர்க்கையை கவிதையாக்குகின்றது
தார்மீக உலகில்
கால்கள் பதிக்க
விரும்பாத மனதுடன்
உலகை வெறுத்துப்
போதி மரத்தில்
தூக்குப் போட்டுச்
செத்தான் புத்தன்
பரி நிர்வாணமாய்
எனைப் பொறுத்தவை நான் எங்கு, என்னவாக கவிதையை அடையாளம் கண்டு கொண்டேன். வாழ்த்துக் கவிதை தோழிக்கு எழுத வார்த்தைகள் என் சொன்னபடி கேட்பதை உணந்தேன், பாட்டி பாடும் பாடல்களில் அடுத்த கவனம், ஒரு கூட்டத்தில் வார்த்தையாக உரையாக சொன்னால் மனஸ்தாபம் மேற்படும் ஒரு விசயத்தை பாடலாய் இட்டுக் கட்டி பாட கேட்பவரை அதிர்ந்து உட்கார வைத்து யோசிக்க வைப்பதைப் பார்க்க வார்த்தைகளை பாடலாக கையிலெடுத்துப் பார்த்தேன். எது எனக்கான வாழ்வு, நான் என்னவாக இருக்கப் போகிறேன், இந்த சமூகம் எனை என்னவாக இருக்கக் கோருகின்றது அப்படியான கேள்விகள் என் கவிதையின் தளத்தை மாற்றின. பாட்டி வாயிலாக வந்த கதைகளில் கற்பனை எனக்குள் தங்கி விட்டது. மொழிகளின் கூட்டமைப்பா கவிதை இல்லை மொழி என்னவாகக் கையாளப் படுகின்றது என்பதில் தான் கவிதை பிறக்கின்றது.
தொன்மங்கள்!
தொன்மங்கள் நமது இலக்கியத்தின் புதையல்கள். அதை சரியாக இன்னமும் நாம் கண்டடையவில்லை. தொன்மங்கள் தொடர்பாக ஒரு வகையான மலினப் புரிதல்களையே கொண்டிருக்கின்றோம் நாம் கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் எனும் பழமொழியை எப்படி தத்துவார்த்த ரீதியாக பார்க்கத் தவறி நாயையும் கல்லையும் காணும் போது நினைவு கூறுகிறோமோ அது போல் சில தொன்மங்கள் பொருள் மாறி குணம் மாறி போய் விட்டது.. எனக்குத் தோன்றுகிறது தொன்மங்கள் இல்லாது நாம் இல்லையென்று இன்றைய விசயங்களோடும் தொன்மங்கள் தொடர்புடையவையே. அவற்றை விட்டு விட்டு கவிதைகள் பயணிக்க இயலாது .
தாகம் தீர்க்கும் மணல்கள்!
- திலகபாமா -
விடிகின்ற பொழுதொன்றில்
சேவல்களாய் கூவிய
இந்திரன்கள் திகைக்க
கமண்டலமிருந்து கை ஊற்றிய நீர்
தெளிக்கத் தேடிய ஜடப் பொருள்
காணாது கௌதமனும் சிலையாக
தின்று விடவும்
சாபத்தினால் உறைய விடவும்
நீங்கள் தீர்மானித்திருந்த
நானென்ற
என் உடல்தனை அறுத்து கூறிட்டு
திசையெங்கும் எரிய
சூனியத்தில் திரிந்தலைகின்றன
உடலில்லா எனை
தழுவ முடியாது இந்திரன்களும்
தலை சீவ முடியாது பரசு ராமன்களும்
சாபமிட முடியாது கௌதமன்களும் இருக்க
சேவல்களால் கூவாத பொழுதிலும்
சூரியன்கள் உதிக்காத தருணங்களிலும்
எனக்கான விடியல்கள் உதயமாகின்றன
ஆறுகள்
சாபமேற்ற அகலிகைகளால் நிரம்பியும்
நீர்கள் எல்லாம்
பரசுராமன் வெட்டித் தீர்த்த
உடல்கள் மிதந்தலைய
தீரப் போவதில்லை உங்கள் தாகங்கள்
வெளியெங்கும் என் காதல்கள்
நானே தீர்மானித்தாலொழிய
பானைகளாகாது சிதறிக் கிடக்க
ஒப்பீடுகள் தொலைத்து
உணர முடிந்த கணமொன்றில்
உடலாக மட்டுமல்லாது
இயற்கையின் எல்லாமாகி
மணல்களும்
நீர் சுமக்கும் பானையாகி
தாகம் தீர்க்கும் அதிசயம் காண்பாய்
பிச்சமூர்த்தியின் கவிதை வரிகள்
கௌதமனை இராமன் நிந்திப்பதாய் வரும் கவிதை வரிகள்.
“உயிரை ஓர் உடைமையாகக்
கருதியே குற்றம் செய்தான்
என்றும்
பெண் இனம் நெஞ்சை இன்னும்
மானிடர் அறியவில்லை
கற்பெனும் நெறியைப் பெண்கள்
கொள்ளவோர் சட்டமிட்டால்
மீறுதல் ஆண்களன்றி
இயலுமா வேத ரிஷியே
அரசியல் கவிதைகள்!
ஏற்கனவே இருந்த ஒரு கருத்தியலை மறுத்து இன்னொமொரு புதிய கருத்தியலை உருவாக்க தலைப்படுமானால் அது அரசியல் கவிதை என்பேன். பொதுவாக ஒரு கருத்து பெண்கள் அரசியல் எழுத வில்லை என்று. இந்நாள் வரைக்கும் ஒவ்வொரு பெண்ணும் ஆணின் பார்வையிலேயேதான் எல்லாவற்றையும் பார்க்க படைக்க பழக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றாள் .இதிலிருந்து மாறுபட்டு சுயமாக வெளிப்பட்ட சிந்தனைகளை ஒத்துக்கொள்வது என்பது , பலருக்கும் முடியாததாயிருக்க அதை தொடர்ந்து செய்வதே ஒரு அரசியல். அது சார்ந்து ஒரு பெண் பேசுவதே அரசியல்.
எனது வெற்றிகளை
உனது பெருந்தன்மையாய்
மாற்றிப் போடும் சூழ்ச்சி என்பதிலும்
போர்க்கள விதிகளை
என் சந்ததிகளை முன்னிறுத்தி
முடிச்சுப் போடும் நீ என்பதிலும்
நீ எனை ஆக்கிரமிக்கவும்
நானுன்னை நிரப்பி வ்¢டவும்
முடியா
காலம் ஒன்ரு கைவர
ஆடப் படுகின்ற ஆட்டங்கள்
வெட்டப் படுகின்ற காய்களில்
தெறித்து விழுகின்ற ஆதிக்கங்கள்
மிஞ்சியது
கருப்பு ராஜாவும்
வெள்ளை ராணியும்
வென்றதும் தோற்றதும்
யாரென்பது மறக்க
கருப்பு வெள்ளை கட்டங்கள்
நிறமிழக்கின்றன
அரசியலாகப் பார்க்க வேண்டிய கோணங்களை என்னால் அடையாளம் காட்ட முடியும்.
நாம் விரும்பியோ விரும்பாமலோ பால் இன வர்க்க வேறுபாடுகள் இருந்து கொண்டிருகின்றன .அதை கண்டித்து எழுதப் படும் இலக்கியங்கள் அவர்களூக்கான மனித இருப்பை பேசும் கலை படைப்புகளாக அடையாளம் காண வேண்டுமே அல்லாது இலக்கியத்திலும் அப்படியான பிரிவுகள் ஏற்படுவதை, ஏற்படுத்தப் படுவதை அனுமதிக்க முடியாது என்பது என் கருத்து.
ஒடுக்கப் பட்ட எழுத்துக்களும் பொதுமைக்குள் வந்து நின்று இலக்கியமாக பேச முயல வேண்டும், வெறுமனே சலுகைகளை கோராமல், எங்களுக்கான உரிமைகளை நாங்களே உணர்ந்து எடுத்துக் கொள்வதற்கான முயற்சியை தொடங்குவதே அல்லது தொடங்கும் நினைப்பை ஊட்டுவதும் அதற்கான கருத்தியலை வடிவமைப்பதுமே உண்மையான விடுதலையாக இருக்கும்.
இறுதியாய் ஒன்று சொல்லிக் கொள்ள வேண்டும். நான் பேசுவது பெண்ணியம் அல்ல. பெண்ணுக்கான மனித இருப்பைத் தான் நிலை நிறுத்த உணர வைக்க பேச வேண்டி இருக்கின்றது.. நான் பொதுமைக்குள் வந்து விட முயலும் போதும் சாயம் பூசும் வேலைகள் தொடருகின்றன. அவற்றுக் கெதிரான குரல்களை என் எழுத்துக்கள் பதிவு செய்கின்றன. பிரதி பலிக்கின்றன. எதிர்வினை செய்கின்றன.
சி. கனகசபாபதி கட்டுரைகளை தொகுத்த போது அதில் கண்ட அவரது விமரிசன வரி ஒன்று நினைவுக்கு வருகின்றது உத்திகளின் பின்னால் பயணிக்கின்ற படைப்பு நிகழ் நிமிடத்தில் கொதி நிலையை தவற விட்டு விடுகின்றது. நிகழ் நிமிடங்களின் கொதி நிலையை கவனமெடுக்கின்ற கவிதை புதிய தனக்கான தளங்களை. பரிசோதனை முயற்சி என்றில்லாது தானே கண்டடையும் இலக்கிய மனிதனுக்குள் மேன்மையான குணங்களை கிளர்ந்தெழச் செய்து தத்துவப் பார்வையில் அவனை ஈடுபடுத்தி வரலாற்றில் அவனது இருப்பையும் கடமையையும் செய்ய தூண்டுவதாக இருக்க வேண்டும்.
கவிதை நமக்குள் வருவது
நமக்கு வசமாவது
நமக்கு அனுபவமாவது
ஆற்றலைக் கிளறுவது
- இக்கட்டுரை 30.4.05 அன்று சென்னை இலக்கிய சிந்தனை அமைப்பில் வாசித்த கட்டுரை -
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.