கீழ்கண்ட கல்வெட்டு குறும்பர் என்கிறது.
1. ஸ்வஸ்திஸ்ரீ கோவிராசகேசரி பந்மற்கியாண்டு 1.
2 ஆவது வாணகோவரையர் குணமந்தன் குறும்ப கோ
3 லாலன் வயிரமேகனார் கொடுக்கன் சிற்றண்பு(லி)
4 நாடன் திருவண்ணா நாட்டு தேவதாநப் பிரம(தே)
5 யூர் நாடி சதுர்வேதிமங்கலத்து (வா)ரிக்கு..
6 த்த பொன் முதல் இருபதின் கழஞ்சு து(ளை)..
7 ......யால்.......................
தெலுங்கில் கொடுக்கு மகனைக் குறிக்கிறது. செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி கொடுக்கு என்றால் தமிழில் மகன் என்று பொருள் கூறுகிறது. இக்கல்வெட்டில் கொடுக்கு என்றச் சொல் கொடுக்கன் என மகனைக் குறிக்க வருவது நோக்கத்தக்கது.
வாண அரசர்கள் பல்லவரோடு மணவினை செய்துகொண்டு பிள்ளைகளுக்கு பட்டான் பெயரை சூடிக்கொண்டதால் வயிரமேகன் பெயர் வாணர்களுக்கும் வழங்கலாயிற்று. இந்த வயிர மேகன் கம்பவர்ம காலத்தவன்.
விளக்கம்: வாண அரசரும், குணம் நிரம்பியவரும் (குணமந்தை > குணமந்தன்), குறும்பர் தலைவருமான (கோலாலன்) வயிரமேகனார் மகனும் ஆன சிற்றண்புலி நாட்டின் அதிபன் திருவண்ணா நாட்டு தேவதாநப் பிரம(தே) யூரை நாடிச் சென்று அங்கத்து சதுர்வேதிமங்கல குளத்திற்கு (வாரிக்கு) .. இருபது கழஞ்சு பொன் கொடையளித்தான் என்பது செய்தி. வயிரமேகன் இறந்தபின் இவன் இக்கொடை நல்கியிருக்க வேண்டும்.
வயிரமேக வாணரைசன் பற்றிய குறிப்பு கொண்ட ஒரு நடுகல் கல்வெட்டு கீழே.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் தா. வேளுர் சாவுமேட்டு வேடியப்பன் கோவிலில் ஒரு நடுகல் கல்வெட்டு உள்ளது. இதன் காலம் 9 ஆம் நூற்றாண்டு.
ஸ்வஸ்தி ஸ்ரீ கோவிசைய கம்ப பருமற்கி யாண் / டெட்டாவது வயிர மேக வாணகோவரையரா / ளத் தகடூர் நாட்டுப் பாகாற்றூர்க் கதவ / மாதேவன் மகன் காளமன் மீய்கொன் / றைநாட்டு மேல் வேளூர் இருந்து வாழாநின்ற காலத் / து முருங்கைச் சேர்ந்ததன்ற மையனார் / மகளைக் கள்ளர் / பிடிகரந்துரந / று கொண்டய/ ந் அவளை விடு / வித்துக் தா / ன்பட்டான் கா / ளமன்.
மேல் - மேற்கு; பிடி - பிடித்து; கரந்துர - மறைத்துவைத்து அச்சுறுத்த; நறு கொண்டையன் - அகல் பூ (coromandel ailango) சூடிய கொண்டையன் அல்லது மணம்வீசும் மலர்ச்சூடிய கொண்டையன்.
கம்ப வர்மப் பல்லவனுடைய எட்டாம் ஆட்சி ஆண்டில் (877 CE) அவனுக்கு அடங்கிய வாண மன்னனான வயிரமேக வாணகோவரையன் தகடூர் நாட்டை ஆண்டு வரும் காலத்தில் இவனுடைய ஆட்சிப் பகுதியான மேல் கொன்றை நாட்டு உட்பிரிவான மேல் வேளூரில் தகடூர் நாட்டு பாகற்றூரைச் சேர்ந்த கதவமாதேவன் என்பவன் மகன் காளமன் வாழ்ந்து இருந்தான். இவன் தமையன் முருங்கு எனும் ஊரைச் சேர்ந்தவன். இவனுடைய மகளைக் கள்ளர் பிடித்து மறைத்து அச்சுறுத்த நறுமணம் கமழும் கொண்டயன் காளமன் போரிட்டு அவளை விடுவித்தான். அப்போரில் காளமன் வீர சாவு எய்தினான்.
மேற்கண்ட கல்வெட்டு முதல் ஆதித்ய சோழன் காலத்தது, இதாவது 9-ம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தது. ஆனால் 13-ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் வாணரை "வன்னிய நாயன்" என்கின்றனவே. ஏன் இந்த முறண்? இரண்டுமே உண்மை. இதாவது, குறும்பர் என்பதும் வன்னியர் என்பதும் உண்மையே. எப்படி? 9-ம் நூற்றாண்டில் கோலார் பகுதியை ஆண்டு கொண்டிருந்த போது வாணர் குறும்பரே, கன்னடரே. ஆனால் அடுத்த முந்நூறு ஆண்டுகளில் இன்றைய சாதிகள் தெளிவாக உருக்கொண்ட போது பாலாற்றுக்கும் காவிரிக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியை ஆண்ட வாணர் வன்னியர் ஆகிவிட்டனர். அப்படியானால் இன்னும் தெற்கே வரை (நெல்லை, குமரி) சென்று ஆட்சி செய்த பல்லவர், வாணர் எந்த சாதியில் இருப்பார்கள்? என்றால் கள்ளர், குமரி நாடார், வெள்ளாளர் ஆகிய சாதிகளில் இருப்பார்கள். கொங்கில் கவுண்டராகவோ வெள்ளாளராகவே இருப்பார்கள். இவை இன்று வேறு வேறு சாதிகள். ஆகவே அக்னிகுல க்ஷத்திரியர், பிரம்ம க்ஷத்திரியர் என்ற பட்டத்தை மட்டுமே வைத்து ஒரு அரசகுடியினரை இன்ன சாதி தான் என்று சொல்வது ஏற்புடையது அல்ல.
மேலை ஆசியாவில் இருந்து இந்தியாவில் வந்து ஆட்சிசெய்த இந்த ஆரிய வேளிர் ஆள்குலங்களை 5-ம் நூற்றாண்டில் ஒரு வேள்வி நடத்தி இராசபுத்திரர் என அறிவித்தார்கள். ஏனென்றால் குப்தர்கள் இவர்களை வந்தேறி ஆட்சியாளர் என்று சொல்லிச் சொல்லியே ஒழித்தார்கள். அந்த அவப்பட்டத்தை ஒழித்து இந்தியக்குடிகளாக அறிவிக்கவே இந்த வேள்வி இராசத்தான் அபு மலையில் கி.பி. 5-ம் நாற்றாண்டில் நடத்தப்பட்டது. இந்த வேள்வியால் புதுப்பிறவி எடுத்தது போல் ஆனது. இதைத் தான் வேள்வியில் தோன்றியவர் என்று 6-ம் நூற்றாண்டில் மகாபாரதம் எழுதிய வியாசர் சொல்லி உள்ளார். அதனால் தான் தென்னகத்து சாளுக்கியர் பல்லவர் என பல வேளிர் அக்னிகுல க்ஷத்திரியர் ஆனார்கள். எனவே ஒரு ஆள்குலத்தை சேர்ந்தவர் தம்மை அக்னி குல க்ஷத்திரியர் என்பதாலும் மற்றவர் வன்னியர் போல் அவ்வாறு சொல்லிக் கொள்வதில்லை என்பதாலும் ஒரு சாதிமாரில் தான் அக்னி குல க்ஷத்திரியர் என்னும் எல்லா ஆள்குலத்தவரும் அடங்குவர் என்பது தவறான உரிமை கோரல் (claim) ஆகும். இதை வன்னியர் தவிர்க்க வேண்டும்.
பின் குறிப்பு: இன்றைய சாதி பட்டங்கள் பல்லவர் காலத்தில் இருந்திருக்க வில்லை. 10-ம் நூற்றாண்டில் சோழர் ஆட்சியில் ஆளும் அரசகுடிகளை மட்டும் குறிக்க வேளாண் என்ற பட்டத்தை ஏற்றார்கள். 12-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இன்றைய சாதி பட்டங்கள் வந்துவிட்டன. இது சாதிகள் உருவாகிவிட்டதற்கு சான்று. எனவே எந்த அரசக்குடியையும் இன்ன சாதி என்று சுட்டமுடியாத ஒரு காலமும் இருந்தது. அதே நேரம் சாதிகள் வந்த பின் அரசகுடிகளை எந்த சாதியையும் சேராதவர் என்று சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. அது போல எல்லா சாதியும் அரசகுலம் என்றும் சொல்லிவிட முடியாது. பல்லவர், வாணர் என்று எடுத்துக்கொண்டால் ஆந்திரத்தின் ராயலசீமையில் ரெட்டிகள், வடபெண்ணைக்கும் பாலாற்றுக்கும் இடையில் துளுவ வேளாளர், பாலாற்றுக்கும் காவிரிக்கும் இடையில் படையாட்சிகளான வன்னியர், அதற்கும் தெற்கே கள்ளர், குமரியில் நாடார், கொங்கில் கவுண்டர், இப்படித்தான். நாடு முழுவதும் பல்லவர் ஒரே சாதியில் இல்லை. அதேநேரம் எல்லா சாதியிலும் இல்லை. எல்லா அரசகுடிகளும் இப்படித்தான் சாதிகளாக ஆயின.
https://timesofindia.indiatimes.com/city/chennai/1100-year-old-inscription-unearthed-from-floor-of-tiruvannamalai-temple/articleshow/58212372.cms?fbclid=IwAR0UhPSo9FuUtobve2Ob-r1y5o2ecNuW6jwEuYvLp3285deJZuSfNG9tHas
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.