Liberty: the state of being free within society from oppressive, restrictions, imposed by authority on one's way of life, behaviour, or political views. the power or scope to act as one pleases.
மேற்கண்ட ஆங்கில விளக்கம் சுதந்திரம், தன்னுரிமை என்பதற்கு ஒருவர் வாழும் சமூகத்தில் ஒருவரது வாழ்வில், நடக்கையில், அரசியல் பார்வையில் அரசதிகாரத்தால் ஒடுக்குதல், கட்டுப்பாடுகள் ஆகியன திணிக்கப்படாத நிலை என்கின்றது. இன்னொரு விளக்கம் தான் விரும்பியவாறு செயற்படுதல் என்கின்றது.
நமது தமிழ்நாட்டு வரலாற்றில் இத்தகு விளக்கத்தின் படியான தன்னுரிமைகள் எளிய பொதுமக்களுக்கு இருந்ததில்லை என்பதையே தமிழ்க் கல்வெட்டுகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. மேற்கண்ட உரிமைகள் யாவும் வேந்தர், மன்னர், அரையர், கிழார், பெருஞ்செல்வ வணிகர் ஆகியோருக்கு மட்டுமே இருந்திருக்கும் போல் தெரிகின்றது. ஏனெனில், இப்படி இருந்ததால் தான் பின்னாளிலே அதை எளிய மக்களும் அனுபவிக்க உரிமை தரப்பட்டுள்ளது. ஏன் இப்படி உரிமை பின்னாளிலே தரப்பட்டது என்றால் அது முன்னாளிலே வழக்கத்தில் இருந்திருக்கவில்லை, இதாவது சங்க காலத்திலே இருந்திருக்கவில்லை அதனால் அதன் தொடர்ச்சியாகவே இந்த உரிமைகள் அடுத்து வந்த இடைக்காலத்தில் மக்களுக்கு தரப்பட்டிருக்கவில்லை என்பதே உண்மை நிலை. ஆனால் பலரும் சங்க காலத்தை பற்றி ஆஹா! ஒஹோ என்று கூறி புலகாங்கிதம் அடைகின்றனர். இதை நாமே கல்வெட்டில் நேரில் படித்து அறிந்து கொண்டால் தான் இலக்கியங்களை விளக்கியோர் சொன்ன பொய்மைகள் உலகுக்கு தெளியத் தெரிய வரும். உண்மையில் கல்வெட்டுகள் இத்தகையோர் கற்பனை பேச்சிற்கும் எழுத்திற்கும் வாய்ப்பூட்டாகவும் கைப்பூட்டாகவும் அமைகின்றன. இந்தப் பதிவு கம்மாளர் பற்றியது என்பதால் அது தொடர்பாக மூன்று கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன மற்ற இரண்டு கல்வெட்டுகள் துணைச் சான்றுகள்.
கோயம்பத்தூர் மாவட்டம், பேரூர் பட்டீசுவரர் கோயில் தென் சுவர் 12 வரிக் கல்வெட்டு.
ஸ்வஸ்திஸ்ரீ த்ரிபுவனச் சக்ரவத்தி கோனேரின்மேல்
கொண்டான் தெந்கொங்கில் கண்மாளர்க்கு தங்க
ளுக்கு பதினைஞ்சாவது ஆடிமாதம் முதல் னன்மைத் திந்மைக்
கு இரட்டைச் சங்கும் ஊதிப் பேரிகை யுள்ளிட்டன கொட்டி
வித்துக் கொள்ளவும் தாங்கள் புறப்படவேண்[டும்] இடங்க
[ளு]க்கு பாதரக்ஷை கோத்துக் [கொ]ள்ளவும் தங்கள் வீ
[டுக]ளுக்கு சாந்திட்டுக் கொள்ளவும் சொன்னோம் [இ]ப்[ப]
[டி]க்கு நம்மோலை பிடிபாடாக் கொண்டு ச[ந்த்ரா]தித்யவ
ரை செல்வதாகத் [த]ங்களுக்கு வேண்டும் இடங்களி[லே]
[க]ல்லிலும் செம்பிலும் வெட்[டிக் கொள்]க. இவை விழு
ப்பாதராயந் எழுத்து. யாண்டு 15 ள் 129 . இவை(க்) கலி[ங்]
கராயந் எழுத்து.
நன்மை தின்மை – நல்லது கெட்டது ஆகிய நிகழ்விற்கு; பேரிகை – முரசு; சாந்து – சுண்ணாம்பு அடித்தல்; பிடிபாடு – வழிகாட்டுநெறி, guidelines.
விளக்கம்: விழுப்பாதராயனும் கலிங்கராயனும் கொங்கு சோழ வேந்தன் கோனேரின்மை கொண்டான் வீரராஜேந்திரனின் 15 –ம் ஆட்சிஆண்டு(1222), 129 -ம் நாளில் வேந்தன் சார்பாக அரசாணை ஓலை ஒன்றை வழங்குகின்றனர். அதில் தென்கொங்கில் வாழும் கம்மாளரான பதினெண் விஷயத்தார் ஆடிமாதம் 15-ம் நாள் முதல் தமது இல்லத்து எல்லா நல்லது கெட்டதுக்கும், இதாவது நிகழ்வுகளுக்கும் இரட்டை சங்கு ஊதவும் முரசு கொட்டிக் கொள்ளவும் ஆட்களை அமர்த்திக் கொள்ளலாம். அதோடு தாம் புறப்பட்டு செல்ல வேண்டிய இடங்களுக்கு காலில் செருப்பு அணிந்து செல்லலாம். தமது வீடுகளுக்கு சுண்ணாம்பு அடித்துக் கொள்ளலாம் என்று இசைவு தந்ததாக சொல்கின்றார் வேந்தர். இந்த ஓலை ஆணையை வழிகாட்டுநெறியாகக் கொண்டு ஞாயிறும் நிலவும் நிலைக்கும் நாள் வரை நடத்திச் செல்லவேண்டும். இதைத் தாம் விரும்பும் இடங்களில் பாறையிலும் செப்பேட்டிலும் பொறித்துக் கொள்ள உரிமை தருகின்றான் வேந்தன். சுதந்திரம் என்பதன் மேற்கண்ட ஆங்கில விளக்கத்திற்கு தக்கபடி 13 ஆம் நூற்றாண்டிற்கு முன் பதினெண் விஷயத்தாரான கம்மாளருக்கு தன்னுரிமை இருந்ததில்லை என்று தெரிகின்றது. ஏன் இப்படி? இராசராசன் இராசேந்திரன் ஆகியோரது சோழப் பேரரசு காலத்தில் அதற்கு அடங்கிய கொங்கு மண்டலத்தில் இந்த உரிமைகள் இல்லாதது சோழநாட்டிலும் கம்மாளருக்கு அத்தகைய உரிமைகள் இல்லாததால் அன்றோ? அதற்கு முந்தைய பல்லவப் பேரரசு காலத்திலும் இந்த கம்மாளருக்கு சுதந்திரம் இருந்ததில்லை என்று தெரிகின்றது. தொண்டை நாட்டு கம்மாளருக்கு அத்தகு சுதந்திரம் இருந்திருந்தால் கொங்கு நாட்டிலும் கம்மாளருக்கு முன்னமே இத்தகு சுதந்திரம் வந்திருக்கும். அப்படியானால் சங்க காலத்தில் அப்படி ஒரு சுதந்திரம் இருந்திருக்கவே முடியாது என்பதன்றோ முடிவு. இத்தனைக்கும் கம்மாளர்கள் நாகரிக சமுதாயத்தில் முதுகெலும்பாகத் திகழ்ந்தவர்கள். அவர்களுக்கே இந்தநிலை என்றால் மற்றவர் நிலையும் இதே போன்றது தான் என்பது இரங்கத் தக்கதாக உள்ளது. தமிழ்நாட்டை ஆண்ட வேளிரான பல்லவர், வாணர், நுளம்பர், அதியமான்கள் போன்றோர் வடக்கே இருந்து வந்தவர். வடக்கில் இத்தகு உரிமைகள் மக்களுக்கு இருந்திருந்தால் இங்கே தமிழ்நாட்டிலும் அத்தகு உரிமை முன்னரே வந்திருக்கும். அப்படி வடநாட்டில் உரிமைகள் மக்களுக்கு இருந்தது இல்லை என்பதை இது தெளிவாக்குகிறது. பிராமணர் நிலையும் இப்படித் தான் இருந்துள்ளது என்பதை அடுத்த கல்வெட்டு உணர்த்துகின்றது.
பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 5, பக். 87, (A.R.No 562 of 1893)
கோயம்பத்தூர் மாவட்டம், திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் கோயில் முகமண்டப மேற்குச் சுவர் – வாயிலுக்குத் தெற்கு. 9 வரிக் கல்வெட்டு.
வீரசோழனேன் எமக்குச் செல்லா நின்ற யாண்டு _ _ _ _ வடபரி
சார நாட்டில் திருமுருகன்பூண்டி மகாதேவ
சிவபிராமணன் காசியபன் வெண்காடன், சிவ(ன்)
கோயில் திருமடைவிளாகத்தில் இருக்
கும் சிரி நிமந்தகாற்கும் குடுத்த உரிமைகளாவன
முற்றம் குதிரையும் பேரிகையும் செகண்டியும் கொட்டவும்
இரண்டு நிலையும் இரட்டைத் தலைக் கடையும்
கொள்ளப் பெறுவார்களாகவும். இப்படி இவ்வரிசைகள்
செம்பிலும் சிலையிலும் செய்யிது கொள்ளவும்
குடுத்தோம்.
திருமடைவிளாகம் – கோவிலைச் சூழ்ந்த தெரு; நிமந்தக்காரர் – செப்புத் திருமேனியை எழுந்தருளச் செய்ய சப்பரத்தில், வாகனத்தில் தண்டு கட்டுபவர், சாமி தூக்கும் பாதந் தாங்கியர்க்கு தலைவர்; செகண்டி - ஒலி எழுப்புத்வெண்கலத் தட்டு; இரட்டை நிலை – இரண்டு நிலைவாயிற்படி; தலைக்கடை – இரட்டை பின்வாசல்
விளக்கம்: கொங்கு வீரசோழனின் ஆட்சியில் (ஆண்டு சிதைந்துள்ளது943-1074 வரை மூன்று வீரசோழர் ஆண்டுள்ளனர்) வடபரிசார நாட்டில் அமைந்த திருமுருகன்பூண்டி மகாதேவர் கோயில் சிவபிராமணன் காசியபன் வெண்காடன் மற்றும் அக்கோயிலை சூழ்ந்த இடத்தில் வாழும் சாமி தூக்கும் நிமந்தக்காரர் ஆகியோர் வீட்டிற்கு முற்றம் அமைத்துக் கட்டவும், குதிரை ஏறி ஊர்வலம் வரவும், நல்லது கெட்டதற்கு பேரிகையும் செகண்டியும் கொட்டவும், வீட்டிற்கு இரண்டு நிலை வாசலும், இரண்டு பின் வாசலும் வைத்துக் கட்ட வேந்தர் உரிமை தருகின்றார்.
இதன் மூலம் இருவருக்கு மட்டும் இந்தச் சலுகை வழங்கப்படுகின்றது மற்ற பிராமணர்க்கு இவ்வாறான உரிமை இல்லை என்பது தானே பொருள்.
பார்வை நூல்: கொங்கு நாட்டுக் கல்வெட்டுகள்; கோயம்பத்தூர் மாவட்டம், பக். 75, ஆசிரியர்: மா. கணேசன் & இரா. ஜெகதீசன்.
தென்ஆர்க்காடு மாவட்டம், விருத்தாசலம் வட்டம், திட்டக்குடி வைத்தியநாதர் கோவில் கருவறை முன் உள்ள மண்டபத்தின் வடக்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ள 6 வரிக் கல்வெட்டு.
சு[ப]கிறி[து] ஆண்டு ஆடிமாதம் 20 – கு ஸ்ரீமது நாகம நாயக்கரய்யன் காரியத்துக்கு கடவர் வசியப்ப முத
லியார் திட்டைகுடி தாநத்தாரும், இளமங்கலம் ஊரவர் வெள்ளாழரும் தந்[தி]ரிமாரும் ந
த்தக்கேடு அடிக்கேட்டுக்காக சண்டையாய் யிரண்டு திறவரும் குடிப்போய் ஊரும்
நாலாறு வருஷ(ம்)மாகப் பாழாயிருக்கையில் யிப்பொழுது வெள்ளாழர் தந்[தி]ரிமார் கா
ணியாழ்ச்சி. பறையர் உள்பட நத்தக்கேடு அடிக்கேடு யிறுக்கடவராகவும் [யி]ந்த படிக்கு
எழுதின கோயில் கணக்கு _ _ _ _ திரு[த்தாந்தோன்றி] பிரிய[னெ]ழுத்து.
தானத்தார் – ஸ்தானத்தார், பொறுப்பாளர்; தந்திரிமார் – படைவீரரை கொண்ட சாதி ; நத்தக்கேடு – விளையாத தரிசுநில மாசு; அடிக்கேடு – தரிசுக்கு நிலத்திற்கு அண்மைநில மாசு; குடிப்போய் – ஊரைவிட்டுப் போய்; பாழ் – வெறிச்சோடிப்போய் இரு; காணியாழ்ச்சி – பரம்பரை நில உரிமை; இறுக்கக் கடவர் – தண்டம் அல்லது இழப்பீடு கட்டு.
விளக்கம்: சுபகிறிது ஆண்டு (1542 / 1602 இல் ஏற்படுகின்றது) ஆடிமாதம் 20-ம் நாள் நாகமநாயக்கரின் செயல்களை ஆற்றும் வசியப்ப முதிலியார் இசைவுப்படி திட்டக்குடி வைத்தியநாதர் கோயில் பொறுப்பாளர்களும் இளமங்கலம் ஊராரும் வெள்ளாளரும் தந்திரிமாரும் இங்கத்து விளையாத தரிசு நிலமான நத்தம் கேடு அடைந்ததால் கோயில் பொறுப்பாளர்களுக்கும் இளமங்கல ஊராருக்கும் சண்டை ஏற்பட்டு ஊர் வெள்ளாளரும் தந்திரமாரான படைச் சாதியாரும் காலிசெய்து கொண்டு போனதால் 4-6 ஆண்டுகளாக ஊரே வெறிச்சோடிப் போனது. இப்பொழுது இளமங்கலத்தில் வெள்ளாளரும் படைச்சாதிமாரும் பரம்பரை நில உரிமையை காரணம் காட்டி குடிசை போட்டும், பறவை விலங்குகளின் புலாலுக்காக அவற்றின் இறகுகளை, தோலை உறித்து போட்டும் நத்தத்தில் மாசு ஏற்படுத்துபவர்கள், நத்தத்தை அண்மித்த நிலத்தில் மாசு ஏறபட்டுத்துபவர்களான பறையர் உள்ளிட்டோர் இனி அதற்கு இழப்பீடு கட்ட வேண்டும். இப்படிக்கு எழுதினேன் கோயில் கணக்கனான திருத்தான்தோன்றிப் பிரியன்.
புதிதாக ஒரு உரிமையை ஆட்சியாளர் தரலாம் ஆனால் இருக்கின்ற உரிமையை அனுபவிக்க விடாமல் ஒரு குழு இன்னொரு குழுவைத் தடுத்தால் அதுவும் சுதந்திரத்தில் குறுக்கிடுவதாகும். இங்கே நத்தக்கேடு அடிநிலக்கேடு என்று காரணம் காட்டி வெள்ளாளரும் படைச்சாதியாரும் பறையர் உள்ளிட்டாரின் உரிமையை தடுத்தனாரா? அல்லது பறையர் உள்ளிட்டோர் வெள்ளாளர் தந்திரிமாரின் உரிமையை தடுத்தனரா? யார் மீது குற்றம் என்ற தடுமாற்றம் ஏற்படும். ஆனால் காணியாட்சி பெற்றவருக்கே நத்தம், அடிநிலப் பயன்பாட்டு உரிமை என்று நிலைநாட்டுகின்றனர். அதற்காக பறையர் உள்ளிட்டாருக்கு தண்டம் அல்லது இழப்பீடு விதிக்கப்படுகின்றது. இதனால் ஏழைகளான அவர்கள் அந்த இடத்தை காலி செய்துவிட்டுப் போய்விடுவரன்றோ?
மூன்று ஆண்டுகள் முன் மடலாடற் குழு ஒன்றில் முடியாட்சியில் விளைநிலங்கள் மட்டுமல்லாது ஆறு, ஏரி, குளம், காடு, நத்தம் ஆகியன கூட தனியாருக்குச் சொந்தமாக இருந்தன. அதனால் குடிசை போட வேண்டும் என்றாலும் உரியவரிடம் அனுமதி பெற்றால்தான் குடிசைகூட போட முடியும் என்றேன். இதை அறிஞர் திரு. கௌதம் சன்னா மறுத்து நத்தம் புறம்போக்கில் குடிசை போடலாம் என்றார். அப்பொழுது என்னால் இந்தக் கல்வெட்டை அவருக்கு சான்றாகக் காட்ட முடியவில்லை. இப்பொழுது இயன்றது. முடியாட்சி என்பது ஒருவரது செயல்களை வரையறை செய்வதாகவே அந்நாளிலே இருந்துள்ளது.
பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 8, பக். 150, (A.R.No 6 of 1903)
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், பொய்கைக்கரைப்பட்டி ஊருக்குக் கிழக்கே உள்ள தோட்டத்தில் தனிக் கல்லில் பொறித்த 51 வரிக் கல்வெட்டு.
ஸ தது ஸகல நிர்மாண / கரணாம் விஸ்வகர்மணாம் / ஸாஸநரேத காராணா / ம் ஸேஷபுவ நாந்திதம் / மப ஜீவநகர்த்யணாம் ஸ / மஸ்தபுரவாஸிநாம் அ / க்ஷ ஜாத ஜநாநாந்து ஸ / த்யமேவாதி தைவதம் / விஸ்வகர்ம்மா ஜகந்மாதா / விஸ்வகர்மா ஜகது புரு வி / ஸ்வே ச விஸ்வகர்ம்மாணம் / விஸ்வகம்மணுர வாஸதே / இப்படி யுபஸியா நின்ற / ஸ்ரீ பாண்டி மண்டலத்து / மாடக்குளக் கீழ் மாடமது / ரை மங்கலவாசல் சேரியில் மூன் / று வினைப் பள்ளி அறுவகைத் / தொழில் நால்வகை இர[த]கா / ரோமும் உலகுடைய நாயனார் / உடன் கூட்டத்து மூன்றுவினைப் / பள்ளி யறுவகைத் தொ / ழில் நால்வகை யிரதகார ரோமும் சமைய சங்கேதி / களோமும் கீழையிரணிய / முட்ட நாட்டுத் திருமாலிருஞ்சோலை / நின்றருளிய பரமஸ்வாமிகள் திரு / ப்பதி ஸ்ரீயான பவித்ர மாணிக்க பு / ரத்து மூன்று வினைப் பள்ளி அறு / வகைத் தொழில் நால்வகை / யிரதகாரோம் குறைவறக் கூ / டி நிறைந்து செய்த சமையகா / ரியமாவது இத்திருப்பதியில் தா / த நம்பிமாரில் திருவாய்கு / ல முடையான் திருமலை ஆழ்வா / ர் சாதிக்குப் பல நன்மைகள் / செய்கையாலிவற்கு பெரு / மாள் குலஸேகர தேவற்கு மு / ப்பத்தொன்பதாவது நாள் / லிலே எங்கள் சமைய வரி / சையுங் குடுத்து முழுதும் / தலத்தார் இடை எங்கள் பேரும் / குடுத்து நாங்களிவர்க்கு பண் / ணி குடுத்த சமைய சாதன / படியுள்ளவை அனைத் / தும் பெற்று மேலும் எங்கள் / சாதிக்கு வேண்டும் நன்மை / செய்து போதுவதாக இ / வர் வாசலிலே வரி[ச] / ட்டம் [பூமி] தோரணமு _ _ _ / ம் ஆக குடுத்தோம் பதிணென் / விக்ஷையத்து _ _ _ _
வினைப்பள்ளி – school of art, பாணி; இரதகாரர் – தேர் செதுக்குவோர்; சமைய சங்கேதிகளோம் – மத தொடர்பான கூட்டம் கூட்டி செய்தியைப் பரப்புவோர்;
விளக்கம்: பிற்காலப் பாண்டியரில் குலசேகரனின் 39 ஆம் ஆட்சிஆண்டில் (பொ.ஊ. 1307) வெட்டப்பட்ட கம்மாளப் பிரிவில் அடங்கும் ரதகாரரான தேர் செதுக்குவோர் பற்றிய கல்வெட்டு இது. முதல் பன்னிரெண்டு வரிகள் சமஸ்கிருத மொழியில் அமைந்த ரதகாரர்களின் மெய்கீர்த்தி ஆகும். தமிழில் சமஸ்கிருதம் கலந்தோரில் பிராமணரல்லாத பிரிவைச் சேர்ந்தவர்களில் இவர்கள் குறிப்பிடத்த்தக்கவர் என்பதை உணரமுடிகின்றது. இந்த தேர் செதுக்கும் ரதகாரரில் மூன்று பாணியில் ஆறுவகைத் தொழிலாற்றும் நாலு வகையான தேர் செதுக்குவோர் என்பது முற்றிலும் அரிய செய்தி ஆகும்.
பாண்டி மண்டலத்தில் கிழக்குமாட மதுரை மங்கலவாசல் சேரியில் வாழும் மூன்று பள்ளிகளைச் சேர்ந்த ஆறு தொழில் புரியும் நால்வகை தேர் செய்வோர் உலகுடை நாயனார் உடன் வந்த மூன்று பள்ளிகளைச் சேர்ந்த ஆறு தொழில் புரியும் நால்வகை தேர் செய்வோரும் மதத் தொடர்பான கூட்டம் கூட்டி செய்தியைப் பரப்புவோரும் இணைந்து கிழக்கு இரணிய முட்ட நாடான திருமாலிருஞ்சோலையில் தங்கி தெய்வீகப் பணிகள் ஆற்றி வரும் பரமசுவாமிகளும் பவித்ர மாணிக்கபுரத்து மூன்று பள்ளிகளைச் சேர்ந்த ஆறு தொழில் புரியும் நால்வகை தேர் செய்வோருடன் கூடிச்செய்த சமயப்பணி யாதெனில் திருமாலிருஞ்சோலை தாத பிராமணரில் திருவாய்க்குலமுடையான் என்பான் திருமலை ஆழ்வார் சாதிக்கு நன்மைகள் பல செய்ததால் இவருக்கு ரதகாரரின் மத மதிப்பை அளித்து சிறப்பு செய்தனர்.
இக்கல்வெட்டின் மூலம் ஆறு தொழில் செய்கின்ற நால் வகை தேர் செதுக்கும் தேரோரை அறிந்து கொள்ள முடிகின்றது. இக்கல்வெட்டு தீவிர சிந்தனைக்கு இட்டுச் செல்வதாக உள்ளது. அது யாதெனில் பொது மக்கள் யாரும் தேரைப் பயன்படுத்தப் போவதில்லை என்ற நிலையில் இவர்கள் செய்த தேர் கோவிலுக்கும் நாற்படைகளில் ஒன்றான தேர்ப் படைக்கும் தான் என்று புரிந்து கொள்ள முடிகின்றது. இப்படியாகப் போர்க் கருவிகளை உருவாக்குதற்கு இவர்கள் பணி முழுக்க முழுக்க அரசாள்பவருக்குத் தான் பயன்பட்டுள்ளது. இவ்வாறு கைத்திற மிக்க ( artisans and craftsman) பல ஆயிரம் பேரை அரசாள்பவர் தமக்காக ஈடுபடுத்திக் கொள்கின்றனர். இந்த கம்மாளர் ஒரு பொருளை உற்பத்தி செய்வதால் நால்வருணத்தில் வைசியர் என்ற பிரிவில் அடங்குகின்றனர். அதேபோல கோட்டை, கொத்தளம் போன்ற கட்டுமானப் பணிகளுக்காக நான்காம் நிலை உழைப்பாளிகளை அரசாள்பவர் ஈடுபடுத்திக் கொள்கின்றனர். இரண்டாம் நிலையில் சேர்க்கப்பட்டுள்ள போர்க்குணமிக்கோரை படைப்பிரிவில் ஊர்க்காவல் பிரிவில் சேர்த்து விட்டனர். முதல்நிலையில் உள்ள அறிவுத்திற மக்களை ராஜ்ய பரிபாலனம் என்ற நாடாட்சியிலும் தர்மபரிபாலனம் என்ற அற வளர்ச்சியிலும் ஈடுபடுத்தினர். மக்களைத் தன் பணிக்கு அமர்த்திக் கொள்ளும் ஆட்சியாளனுக்கு தான் வருணாசிரமம் தேவை. ஏனென்றால் மக்களின் மனஈடுபாடு எப்படியோ அதன்படி அவர்களைத் தன் பணியில் ஈடுபடுத்திக்கொண்டான் அரசாள்பவன். மக்களைப் பெருந்திரளாக வேறு யாருமே இப்படித் தம் பணிக்கு ஈடுபடுத்திக்கொண்டது இல்லை. 15% மக்கள் வாழ்க்கை அரசாள்பவனின் செலவை நம்பித்தான் நடந்தது. அந்த வகையில் பிராமணர், வைசியரை விட இந்த வருணாசிரமம் அரசாள்பவருக்குத் தான் அதிகம் தேவைப்பட்டது, பயன்பட்டது. ஆதலால் வருணாசிரமத்தை ஆட்சியாளர்கள் தாம் உருவாகிக் கொண்டார்கள். இது காலப்போக்கில் வெவ்வேறு வடிவு கொண்டது என்பதே உண்மை. இதை புரிந்து கொள்ளாத மக்கள்தாம் கடந்த 130 ஆண்டுகளாக மனுதர்மம், வருணாசிரமம் என்று சர்ச்சையை கிளப்புகிறார்கள். மதத்தையும் பிராமணரையும் பொருத்தமின்றி சாடுகிறார்கள். முதற் கல்வெட்டுப்படி 13 –ம் நூற்றாண்டில் தான் தென்கொங்கில் செருப்பு அணிய கம்மாளருக்கே உரிமை தரப்பட்டது. அதே நேரம் பிராமணர் தோல் செருப்பு அணியாமல் கட்டைசெருப்பை அணிந்தனர் என்றால் செருப்பு தைக்கும் சக்கிலியர் சாதி யாருக்காக? யாரால்? உருவாக்கப்பட்டது என்ற கேள்விக்கு அரசாள்பவரின் உற்றார், உறவு குடும்பங்களுக்கு தான் என்ற விடை தானே மேலெழுகின்றது. ஆக சாதி உருவாக்கத்திற்கும் வருணாசிரம உருவாக்கித்திற்கும் அரசாள்பவர் தான் காரணம் என்று படுகின்றது.
பார்வை நூல்: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி I, பக். 206 – 208. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.
பெரியகுளம் வட்டம் சின்னமனூர் இராசிம்மேஸ்வரர் கோவில் கருவறை வடக்கு சுவர் 6 வரிக் கல்வெட்டு.
ஸ்வஸ்திஸ்ரீ தி[ருவாய்க்கேழ்]விக்கு மேல் ஸ்ரீ கோமாறபன்மரான திரிபுவனச் சக்கரவத்திக
ள் யெம்மண்டலமு[ங்] கொண்டருளிய ஸ்ரீ குலஜேகர தேவற்கு யாண்டு 41 வது ஆனி மாத 14 தியதி பூர்வபக்ஷத்து ப்ரதமையும் புணர்
பூசமும் பெற்ற திங்கள் கிழமை நாள் அளநாட்டு அரிகேசரி நல்லூர் உடையார் திருப்பூலாந்துறை (உறை) உடையாரான ராஜஸிம்ஹசோள ஈஸுரமுடையா
ற்கு நாலுநகரம் பதினெண் வி[ஷய]த்தோமும் பதினெட்டிராச்சியத்திற் பதினெண் விஷயத்தோமும் தரகரோ[மு]ம் நாட்டுச் செட்டிகளோமும் தளச்செட்டிகளோமும்
உடையார் விக்ரமபாண்டீஸ்வரமுடைய நாயனார் திரும_ _ _தில் நிறைவற நிறைந்து _ _ _ _ நிச்சயித்த காரியமாவதுஉடையார் திருப்பூலாந்து
றையுடைய நாயனார் _ _ _ _ _ _ த்த பட்டின பகிதியாவது
விளக்கம்: பிற்காலப் பாண்டியரில் குலசேகரனின் 41 வது ஆட்சி ஆண்டில் (1309) ஆனி 14 ம் தாள் புணர்பூச நட்சத்திரம் கூடிய திங்கள் கிழமையான வளர்பிறையில் அளநாட்டு அரிகேசரி நல்லூர் திருப்பூலாந்தறை இராசசிம்ம சோளீசுரருக்கு நாலுநகரத்தை சேர்ந்த பதினெண் விஷயத்தாரும், தரகரும், நாட்டுச் செட்டிகளும், தளச் செட்டிகளும் விக்ரமபாண்டிசுரமுடைய இறைவர் கோவிலில் நிறைந்து கூடி திருப்பூலாந்துறை இறைவனுக்கு செய்ய வேண்டியது பற்றி பேசினர். கல்வெட்டு அரைகுறையாக இத்தோடு நிறுத்தப்பட்டு விட்டது.
பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள், தொகுதி 23, பக். 328 (A.R. No 431 of 1907)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.