கட்டடக்கலைஞர்கள் ஆர்.மயூரநாதன், காலஞ் சென்ற சிவபாலன் மற்றும் என்.தனபாலசிங்கம் ஆகியவர்களின் ஆய்வுக் கட்டுரைகளை அடிப்படையாகவும், இலங்கை மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலைக் கல்வியின் இரண்டாவது பகுதியைக் (MSc in Architecture) கற்றுக்கொண்டபோது சமர்ப்பிக்கப்பட்ட எனது சொந்த ஆய்வுக்கட்டுரையையும் அடிப்படையாகக்கொண்டு இக்கட்டுரையின் மூலம் என் கண்ணோட்டத்தை உங்கள் முன் வைக்கின்றேன்.
வீடமைப்புமுறை பொதுவாக ஓரினத்துடைய கலை, கலாச்சார, சமூக பொருளாதார நிலைகளின் வெளிப்பாடு எனலாம். வட இலங்கைத் தமிழர்களுடைய வீடமைப்புமுறையை இதே அடிப்படையில், எனது பார்வையில் இக்கட்டுரையை ஒரு கண்ணோட்டமாகத் தருகின்றேன்.
வட இலங்கைத் தமிழர்களின் கலை, கலாச்சார, சமூக, பொருளாதாரம் எல்லாமே அதிகளவில் தென் இந்தியர்களின் - குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா மாநிலங்களின் - வாழ்க்கை முறையோடு பெருமளவில் தொடர்புபடுத்தப்பட்டதாகவும், அதனூடான தாக்கங்களையும் , பாதிப்புகளையும் கொண்டதாகவே இருந்தன. இதற்கு வட இலங்கை, தென் இலங்கையை விட தென் இந்தியாவுக்கு அண்மையாக இருந்ததுவும், வியாபார -அடிப்படைத் தொடர்புகளைக் கொண்டிருந்ததுவும் காரணமாக இருக்கலாம்.
வட இலங்கையின் சனத்தொகை அதிகளவில் தமிழ் பேசுபவர்களையும், இந்து சமய வழிபாட்டைப் பின்பற்றியவர்களையும் கொண்டிருந்தது. தமிழ்நாடு, கேரளா போன்றே அவற்றின் தாக்கத்தினூடாக சமய, சமூக நம்பிக்கைகளும் வட இலங்கைத் தமிழர்களிடையே அன்றிலிருந்து இன்றுவரை பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன. குறிப்பாகச் சாதி அமைப்பு முறை, பெண்கள் தனிமைப்படுத்தப்படல், சாத்திரம் போன்றவை தமிழ் இந்துக்களிடையே நடைமுறைப்படுத்தப்பட்டன. இவற்றின்பாதிப்புகள் வீடமைப்பு முறையிலும் அன்றிலிருந்து இன்றுவரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள், மேற் சாதியைச்சேர்ந்தவர்களின் வீடுகளில் உட்செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. அன்றைய நாட்களில் இருந்து ஓரளவு அண்மைக்காலம்வரை பெண்கள் குறிப்பாக வயது வந்த இளம் பெண்கள் பொதுவாகத் தன்னிச்சையாக வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இளம்பெண்கள் பொதுவாக அதிகளவில் அறிமுகமில்லாத ஆண்களுடன் பேசவோ பழகவோ கூட அனுமதிக்கப்படவில்லை. சாத்திர நம்பிக்கை பல வடிவங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டது வீடமைப்பு முறை உட்பட.
வட இலங்கை பாரம்பரிய வீடமைப்பு முறை தமிழ்நாடு, கேரளா போன்றே தனிக்குடிசைக் கட்டடங்களாக ஆரம்பித்து, தேவைகள் , வசதிகளின் அடிப்படையில் வளர்ந்து, நாளடைவில் விஸ்தரிக்கப்பட்ட நாற்சார வீடுகளாக விரிவுபடுத்தப்பட்டன. வீடமைப்பு , `தனிக்குடிசை வீடு`, `இரட்டைக் குடிசை வீடு`, `இரண்டறை இரட்டைக்குடிசை வீடு`, `மூன்றறை இரட்டைக் குடிசை வீடு`, `மூன்று குடிசை வீடு, `நாற்சார் வீடு,` இறுதியாக விஸ்தரிக்கப்பட்ட நாற்சார் வீடு என வளர்ச்சியடைந்தது.
- `தனிக்குடிசை வீடு` -
அன்றைய வீடுகளில் இருந்து அண்மைக்கால நாற்சார் வீடுகள் வரை எல்லாவற்றிலுமே நடை, திண்ணை, முற்றம், வீடு, தலைவாசல், நடைகுடம், குசினி ஆகியவை முக்கிய இடம் பெற்றன. அண்மைக்கால நாற்சார் வீடுகளின் முற்றத்தின் மத்தியில் துளசிமாடம் முக்கிய அம்சமாகக் காணப்பட்டது. துளசிமாடம் தமிழ் இந்துக்களின் வழிபாட்டு முறைக்கு மாத்திரம் அன்றி சுகாதாரக் காரணங்களுக்குமாக முக்கியம் பெற்றது.
தலைவாசல் எப்போழுதுமே சராசரி மனிதரின் உயரத்தை விட குறைவாகவே காணப்பட்டது. நடையினூடாக வீட்டினுள் செல்லும் எவரும் தலை குனிந்து வணக்கத்தோடு வீட்டினுள் செல்லவேண்டும் என்ற பாரம்பரியம் வீடமைப்பு முறையில் கடைப்பிடிக்கப்பட்டது ஒரு காரணமாக இருக்கலாம்.
விளக்குமாடம் தலைவாசலின் இருபுறமும் சுவரில் இராக்காலங்களில் எண்ணெய் விளக்குகளை வைத்து வெளிச்சப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டவை. ஓரளவிற்கு சுவரின் உட்புறமாக எரியும் விளக்குகளைக் காற்று அணைக்காத வகையில் அமைக்கப்பட்டன. இவற்றின் மேலாக விளக்குமாடம் ஒரு அழகுபடுத்தும் சின்னமாகவும் வெளிப்பாடு பெற்றது. நாற்சார வீடுகளிவ் விளக்குமாடம் வெளிப்புறத் தலைவாசலில் மட்டுமின்றி உட்புற வாசல்களின் இரு மருங்குகளிலும் தேவைக்கேற்ப அமைக்கப்பட்டன.
- `இரட்டைக் குடிசை வீடு` -
முற்றம், வீடமைப்பு முறை தனிக்குடிசை வீடாக இந்தக் காலங்களில் வீட்டின் முன்றலிலும், இரட்டைக் குடிசை வீடாக இருந்த காலங்களில் இரு குடிசைகளுக்கு முன்றலிலும், மூன்று குடிசை வீடாகவும், நாற்சார வீடாக இருந்த காலங்களில் அவற்றின் மத்தியிலும் பல தேவைகளுக்காகப் பாவிக்கப்பட்ட ஒரு இடம் ஆகவே அமைந்தது.
- `இரண்டறை இரட்டைக்குடிசை வீடு` -
முற்றம் குறிப்பாகக் குடும்பத்தவர்கள் ஒன்று கூடும் இடமாகவும், பிள்ளைகள் விளையாடும் இடமாகவும், வயதில் முதிர்ந்தவர்களும், இளையவர்களும் உணர்வுப்பரிமாற்றம் நிகழும் ஒரு சிறிய மைதானமாகவும் அமைந்தது.
- `மூன்றறை இரட்டைக் குடிசை வீடு -
நாற்சார அல்லது விஸ்தரிக்கப்பட்ட நாற்சார வீடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் கூட்டுக் குடும்பங்களாக வாழும்போது முற்றம் அவர்களை இணைக்கும் ஒரு பாலமாகவும் அமைந்தது. தனிக்குடிசை வீட்டிலிருந்து விஸ்தரிக்கப்பட்ட நாற்சார் வீடுவரை ஒரு பிரதான அறை எப்பொழுதுமே வீடு என அழைக்கப்பட்டது. தனிக்குடிசை வீடுகளாக இருந்த வேளைகளில் வீடு குறிப்பாக பெண்கள் பிள்ளைகள் பாதுகாப்பாக உறங்குவதற்காக பாவிக்கப்பட்டது.
- மூன்று குடிசை வீடு -
ஆண்கள் பொதுவாக வெளியில் திண்ணைகளில் உறங்குவார்கள். நாளடைவில் வீடமைப்பு வளர்ச்சியில் வீடுகள் பொதுவாக பெறுமதிமிக்க பொருட்களை குறிப்பாக நகை , பணப்பெட்டகம் போன்றவற்றை பாதுகாப்பாக வைப்பதற்காக அமைக்கப்பட்டன. இதர அறைகள் பெண்கள், பிள்ளைகள் பாதுகாப்பாக உறங்குவதற்கும் சுவாமி அறைகளாகவும் பாவிக்கப்பட்டன. இப்பிரதான அறையின் (வீடு) முன்னே நடை, திண்ணை, விளக்குமாடம் காணப்பட்டன. வீடமைப்புமுறை விஸ்தரிக்கப்பட்ட நாற்சார் வீடுகளாக வளர்ந்த நிலையில் இன்னும் பல் விடயங்களை உள்வாங்கிக் காணப்பட்டன.
-பாரம்பரிய நாற்சார் வீடு -
வட இலங்கை தமிழர்கள் மற்றைய சமூகங்கள் போலவே தங்கள் தரத்தை சமூக - பொருளாதார அடிப்படையில் வெளிப்படுத்தும் பிரதான காரணியாக நாற்சார், விஸ்தரிக்கப்பட்ட நாற்சார் வீடுகளை அமைத்தார்கள். இவ்வீடுகளீல் பலவிதமான கலை அம்சங்களை இணைத்தார்கள். சிற்ப, சிலை வடிவங்கள் அவர்களின் அந்தஸ்தை வெளிப்படுத்துமுகமாக அறிமுகப்படுத்தப்பட்டன. இவ்வடிவங்களில் வழிபாட்டு தெய்வங்களின் வடிவங்கள் , குறியீடுகள், இயற்கையோடு ஒன்றிய பூக்கள், கொடிகள், பறவைகள் போன்றவை இணைக்கப்பட்டன. அழகுபடுத்தப்பட்ட தூண்கள், முன் திண்ணை, உள் முற்றம், பின் திண்ணை போன்ற இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டன.
- பாரம்பரிய வீடுகளின் பரிணாம வளர்ச்சி-
இருசார், முற்சார், நாற்சார் வீடுகளில் எதிலுமே முற்றம் கூரை இல்லாது வெளியாகவே இருப்பது இவ்வீடுகளின் உள்ளே காற்றோட்டத்தை ஊக்குவிப்பதாகவே அமைத்தது. வட இலங்கையின் வெட்கை அதிகமான காலநிலைக்கு இவை பொருத்தமாகவும் காணப்பட்டன. இருந்தும் இவ்வீடுகளில் குறிப்பாக அண்மைக்கால விஸ்தரிக்கப்பட்ட நாற்சார் வீடுகளில் கூரைகள் பதிவாக இருப்பதும் , மண் ஓடுகளால் அமைந்திருப்பதும் வட இலங்கை வெப்பச் சூழலுக்கு ஓரளவு பாதகமாகவே காணப்படுகின்றன. நாற்சார் கூரைகள், முற்றத்தை நோக்கி உட்சரிவோடு இருப்பதால் வெப்பக் காற்றுகள் பெருமளவில் வெளியே செல்ல முடியாமல் கூரையின் உட்புற உயர் இடங்களில் தங்குகின்றன. அத்தோடு முற்றத்தில் வெய்யிற் காலங்களில் (பகல் வேளைகளில்) நேரடியாக வெய்யில் விழுவதால் வெட்கைக் காற்று வீட்டினுள்ளே பரவுகின்றது. பொதுவாகவே வீட்டு யன்னல்கள் சிறியதாகவே இருந்து வருகின்றன. அதற்கு பெண்களின் தனிப்படுத்தப்படல், தற்பாதுகாப்பு போன்றவை காரணங்களாக இருந்திருக்கலாம்.
- பாரம்பரிய நாற்சார் வீட்டின் தரையமைப்பு -
இவை காரணமாக இங்கே சில எண்ணங்களை முன் வைக்க விரும்புகின்றேன். கூரை அமைப்பு முறை, யன்னல் வடிவங்கள் அமைப்பு முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் இதே போன்ற அர்த்தமுள்ள பாரம்பரிய வீடுகளை இன்னும் எங்கள் காலநிலைக்கு ஏற்றவையாக மாற்றலாம். வீடமைப்பு முறை என்பது கால் ஓட்டத்துக்கும், தேவைகளுக்கும் ஏற்ப மாற்றியமைக்கப்பட வேண்டியவை. வீடமைப்பின் புதிய வடிவங்கள் இயலுமானவரையில் அண்மைக்காலத்து நாற்சார் வீடுகளில் காணப்பட்ட நல்ல அம்சங்களை உட்படுத்தியதாகவும்ம் கூரை, யன்னல்கள் போன்ற அம்சங்களில் சரியான மாற்றங்களைக் கொண்டவையாகவும் அமையலாம். புதிய வடிவங்கள் உயர்ந்த கூரைகளை சூடான காற்று தானாகவே வெளி செல்லக்கூடிய வகையிலும், யன்னல்களை இயற்கையான காற்றை உள்வாங்கி, தானாகவே வெளிச்செல்லும் பாதைகளை வகுப்பனவாகவும், சூழலுக்கு ஏற்ற கட்டடப்பொருட்களைப்பாவித்தும் அமைய வேண்டும்.
தற்கால வட இலங்கை வீடமைப்பை அவதானிக்கும்போது , எங்கள் பாரம்பரிய வீடமைப்பு முறையிலிருந்த பல நல்ல அம்சங்களை விட்டு விலகிப்போகின்றோமோ என்ற அச்சம் தோன்றுகின்றது. குறிப்பாக 1960 களிற்குப் பின்னதாக இன்றுவரை கட்டப்பட்டு வரும் வீடமைப்பில் பலவற்றை நாங்கள் விளங்கிக்கொள்ளாமலே இணைத்துக்கொண்டோமோ என்று தோன்றுகின்றது. இதற்கு வீடமைப்பு முறை சம்பந்தமான தெளிவின்மையும், காலநிலைக்கும் சூழலுக்கும் ஏற்ப கட்டட அமைப்பு முறையை மாற்றி அமைக்கும் சிந்தனை இல்லாத தன்மையும், ஓரளவிற்கு சரியாக புரிந்துகொள்ளாமல் சாத்திரங்களை இறுகக் க்ட்டிப்பிடித்துக்கொண்டு திண்டாடுவதும் காரணங்களாக இருக்கலாம்.
கட்டடக்கலைஞர்கள், வீடமைப்போடு கூடிய எல்லோரும் குறிப்பாக வீட்டுச் சொந்தக்காரர் , படம் வரைஞர், பொறியியலாளர், வீடு கட்டுபவர், வீட்டு அமைப்பு அனுமதி வழங்குபவர் உட்பட எல்லோருமே வீடமைப்பு முறையில் புதிய சிந்தனைகளை கொண்டுவரும் பட்சத்தில் மாத்திரமே நாங்கள் இந்த அழகிய பாரம்பரிய வீடமைப்பு வடிவங்களை உள்வாங்கி இன்னும் முன்னே போகலாம்.