இந்த திருமுக்கூடல் என்பது பள்ளு இலக்கியங்களில் கூறப்படும் முக்கூடல் அன்று. இது 108 திவ்விய தேசமும் அல்லாத பழமைவாய்ந்த விண்ணகர். செங்கல்பட்டிற்கும் காஞ்சிபுரத்துக்கும் இடையே உள்ள வாலாசாபாத்தில் இருந்து கிழக்கே 5 கி.மீ தொலைவில் அமைந்த பழையசீவம் மலைக்கு எதிர்புறம் பாலாற்றின் தென் கரையில் அமைந்த ஊர் தான் இந்த திருமுக்கூடல். ஏன் இந்த பெயர்? இக்கோவிலுக்கு பின்புறம் உடனடியாக மேற்கே செய்யாறும் வடமேற்கே வேகவதி ஆறும் வடக்கே பாலாறும் ஆக மூன்று ஆறுகள் ஒருமிக்கும் இடம் ஆதனலின் இப்பெயர் பெற்றது. அமைதி சூழ்ந்த இந்த ஆறுகள் ஒருமிக்கும் இடத்தை தேர்ந்தெடுத்து அங்கே இந்த அப்பன் பிரசன்ன வெங்கடேச பெருமாள் விண்ணகரை அமைத்துள்ளனர். பாலத்தில் இருந்து பார்த்தல் மூன்று ஆறுகள் கூடும் தடம் நன்றாகத் தெரியும்
இக்கோயில் சோழர் கால கட்டட க் கலைப் பாணிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. உருள்வடிவ தூண்களை நிறுத்தி செவ்வையாக கற்றளி அமைத்துள்ளார்கள். இதில் வேறு எந்த கலைப்பாணியின் கலப்பும் இல்லை ஆதலின் நடுவண் தொல்லியல் துறை (ASI) இக்கோவிலைத் தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. தஞ்சைப் பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரம் போல இக் கோவிலினுள் அழகிய தோட்டம் அமைத்து நன்றாகப் பேணிக் காத்து வருகிறது. இக்கோவிலின் மேற்கு சுவரில் விக்கிரம சோழன் காலத்து கல்வெட்டு உட்பட மொத்தம் 17 கல்வெட்டுகள் கல்வெட்டுகள் உ ள்ளன. இதில் சிறப்பிற்குரியது யாதெனில் 60 பேர் தங்கிப் படிக்கின்ற .வேதபாடசாலையும், மருத்துவமனையும் இயங்கியதை குறிக்கும் 55 வரி கொண்ட நெடிய கல்வெட்டு ஆகும். இக்கோவிலில் உள்ள ஆண்டாள் சன்னதி, நாலுகால் மண்டபம், ஆகியன பிற்காலத்தில் காலத்தில் கட்டுவிக்கப்பட்டதாகத் தெரிகின்றது. ஒருவர் தம் வாழ்நாளில் ஒருமுறையாவது இதன் கட்டட அமைப்பை கண்டு வரவேண்டும்.
1. பலிபீடம்
2. வெளியே வரும் வாயில்
3. விக்கிரம சோழன் கல்வெட்டு
கோவில் குறித்த அதிக சேதிகள் தரும் ஒரு தொடுப்பு : http://www.dharsanam.com/2011/05/thirumukkoodal-sri-appan-prasanna.html
விக்கிரம சோழன் கல்வெட்டு
1 ----------------------------
2 ------------------------------
3 ------(ஸிம்) ஹாஸநத்து முக்கோக்கிழாநடிகளொடும் வீற்றிருந்தருளிய கோபரகேசரி பர்பராந சக்கரவத்திகள் ஸ்ரீ விக்கிரம சோழதேவ
4 ----சோழமண்டலத்து ஊற்றுக்காட்டுக் கோட்டத்து பாலையூர் நாட்டுப் பாலையூராந ராஜேந்த்ர சோழ நல்லூர் ஊர்க்கு (சமைந்த) -----
5 பாலையூர் கிழவந் திருநாராயண(ந்) திருப்பநங்காடுடையாநும் திருப்பாலையூர் கிழவந் சொற்றுணை அழகியாநும் திருப்பாலையூர் கிழ(வந்)..
6 --------- விக்கிரம ......த்து ........குடிதாங்கியும் குந்றத்துழாந் மஞ்சந செந்தாமரைக்கண்ணனும் குந்றத்துழாந்
7 ------------------------------- அம்மையப்பநும்.................
8 .ப்பாக்க .திருப்பெரி . மாதவநும் சாத்துவாய் வாழ் .................. நள்ளாறந் பொந்நாடைச் செல்வநுமுள்ளிட்ட ஊரோம் நில ...
9 த்து இக்கோட்டத்து ஆற்றூர் நாட்டுத் திருவிண்ணகரில் விண்ணகராழ்வார்க்குத் திருப்படிமாற்றுள்ளிட்டு வேண்டும் நிமந்தக்களுக்கு திரும(டை
10 -ள்ளிப்புறமாக இவ்வாழவார் ஸ்ரீபண்டாரத்தில் நாங்கள் விலை கொண்டு இறையிலி தேவதாநமாக விற்றுக்குடுத்த பூமியாவது எங்களூரு
11 ......யில் ஊர்ப்பொதுவாய்த் தரம் பெற்று ளும்) காடுங்களருமுடைப்புமாக கல்லு மனலுமாய்க் கிடந்த நிலம் .
12 ........... ற்கெல்லை களரிக்கு இறைக்குங் காராம்பித்துலைக்கும் எரிக்கு ரிக்கு நீர்பாயும் ஓடைக்காலுக்கு மேற்கும் தெந்பாற்கெல்லை இவ்வோடைக்கு
13 - க்கு வடக்கும் இதந் தெற்கே காரளப்பாந் குழியாய் வண்ணா(நொ)லிக்குங் க்குங் குழிக்கே3 உற்று இக்குழியிந்மேல் க.....தெந்மேற்க்கு நோக்கி (பா)
14 ---- (ய்) எல்லைக்கல்லாக நட்ட கற்களுக்கு மேற்கு (வாய்)க்கால் (லேயுறவும்) தெந்பாற்கெல்லை இவ்வாய்க்காலுக்கு வடக்கும் இக்காலையூட
15 ...... ..கரியேறப்போந பெருவழியிலேயுற்று மேற்கு நோக்கிப்போந க்குப்போந பெருவழிக்கு வடக்கும் எங்களூர் ஏரிக்கு நீர் பாயு மோடைக்கு
16 ........ லேயுற்று இதற்கு வடக்கும் மேல்பாற்கெல்லை இவ் (வா)ய்க்காலுக்கும் மாத்துழாந் (நந்தி) குடிதாங்கி காணியாந் நந்திப்பெருமாந் செறு
17 க்கும் ஒத்த வடக்கிந் புதுப்புலத்திந் கீழ்வரம்புக்குங் காரடி நங்கையாந் செறுவிந் கீழ்வரம்புக்கும் க்கும் இந்த வடக்கிற் புதுபுலத்திந் கீழ் வரம்ப்புக்கு கிழக்கு உற்றுக் (கீ)ழ்
18 ..... க்கி வடபாற்கெல்லை ஊர்க்கிழாந் காணியாய் பாத்துழாநந்தி குடிதாங்கி அநுபவித்திற் மூங்கிற் குண்டிலிந் தெந்வரம்புக்கு தெற்கும் இச்
19 ... ல்பாற்கெல்லை காஞ்சிப்பள்ளங்களிந் கீழ்வரம்புக்கு கிழக்கும் பூங்கை விளாகத்திந் தெற்கிற் குண்டிலே க்கிப்போய மணல்மேட்ட்லேயுற இதுக்குத் தெற்கும் மணல்மேட்டில்...
20 .. கத்திந் கீழ்வரம்பே பிடித்து மூங்கிலாந் ஏரி(யே) கிழக்கு நோக்கிப்போய க்கும் (இந்நம) காஞ்சிப் பள்ளங்களிந் கீழ் வரம்புக்குக் கிழக்கும் .....(கா)ஞ்சிப்ப
21 ... ற்றுக்கு மேற்கே பிடித்து காஞ்சிப்பள்ளங்களிலே ...........கிழக்கும் வழியிலே ..... துக்குத் தெற்கும் ............மேல்பாற்.....
வாசித்தவர் கோவை துரை சுந்தரம்.
விளக்கம்: கல்வெட்டில் இடம்பெறும் பாலையூர் இன்று பாலூராக ஆகிவிட்டது. ஆற்றூர் இன்று ஆத்தூராகி விட்டது. வேந்தன் விக்கிரம சோழன் நேரில் வந்து வீற்றிருந்த போது அவன் முன்னிலையில் ஆற்றூர் ஊரார் அங்குள்ள பெருமாள் கோவிலுக்கு நிலம் வாங்கி கொடையாகக் கொடுத்துள்ளனர்.அதன் எல்லை கல்வெட்டில் விவரிக்கப்படுகிறது.
வீரராஜேந்திரன் கால கல்வெட்டு பாடம்
உண்டுஉறையும் பாடசாலை மருத்துவமனை குறித்தது
ஸ்வஸ்தி ஸ்ரீ (மெய்க்கீர்த்தி உள்ளது)
வீரத்தனிக்கொடி தியாகக்கொடி மேற்பவர் வருகென்று நிற்ப கோத்தொழிலுரிமையி நெய்தி அரைசு வீற்றிருந்து மேவருமனுநெறி விளக்கிய கோவி ராஜகேசரிவர்மரான முடையார் ஸ்ரீ வீரராஜேந்திர தேவர்க்கு யாண்டு அஞ்சாவது கங்கைகொண்ட சோழபுரத்துச் சோழகேரளத் திருமாளிகையில் ராஜேந்திரச்சோழ மாவலி வாணராஜநில் எழுந்தருளியிருந்து
ஜயங்கொண்ட சோழ மண்டலத்துக் களத்தூர்க் கோட்டத்துத் தனியூர் ஸ்ரீ மதுராந்தக சதுர்வேதி மங்கலத்துத் திருமுக்கூடல் மஹாவிஷ்ணுக்கள் தேவதானமாய் வருகின்ற காலியூர்க் கோட்டத்துத் தேரோடு பருவூர் நாட்டு வயலைக்காவூர(க)கள் சாலைக்கிறுத்து வருகின்ற பொந் எழுபத்தைங் கழஞ்சும் இச்சாலைக்குச் சாலபோகமாய் வருகின்றபடி - - - - - - - - - -
மண்டபத்தில் ரி(ரு)க் வேதமோதுவிப்பாநொருவனுக்கு நாளொன்றுக்கு நெல்பதக்கும் யஜுர் வேதமோதுவிப்பாநொருவனுக்கு நாளொன்றுக் (கு நெல்) பதக்கும் இவர்களிருவற்கும் பேராற் காசு நாலாகக் காசெட்டும் வியாகரணமும் ரூபவாதா(மு)ம் வக்காணிக்கும் பட்டனொருவனுக்கு நாளொன்றுக்கு நெல் தூணியும் காசு பத்தும் ரி(க் வேதமோ) தும் பிராம்மணர் பதின்மரு(ம்) யஜுர்வேதமோதும் பிராமணர் பதின்மரும் வ்யாகரணமும் ரூபாவதாரமுங் கேட்கும் பிராமணரு(ம்) சாத்திரர் இருபதின்மரும் மஹாபாஞ்சராத்திர ரொருபதின்மரும் சிவபிராமணர் மூவரும் வைகானசர் ஐவரும் தி - - - - மார் இருவருமாக ஓதுவா(ரும்) ஓத்துக்கேள்பாருமாக அறுபதிந் மர்க்குப் பேராலரிசி நாழியுரியாக னாளொன்றுக்கரி(சி தூ)ணி முக்குறுணியிருநாழிக்கு நெல்லிருகலனே தூணியொரு நாழியும் பயறு நாநாழிக்கு நெல் குறுணியும் புழுக்குக்கறிக்கு நெல்லறு நாழியும் இலைக்கறிக்கு நெல் நாழியும் - - -
ஆது(ல)ர் சாலை வீரசோழநில் வ்யாதிபட்டுக்கிடப்பார் பதிநைவர்க்குப் பேராலரிசி நாழியாக அரிசி குறுணியெழு நாழிக்கு நெல் (தூணி ஐ) ஞ்ஞாழியுரியும் வ்யாதிபட்டுக் கிடப்பார்க்கும் பலபணி நிவந்தகாறர்க்கும் கிடைகளுக்குஞ் சாத்திரர்க்கும் வைத்தியஞ் சொல்லக் காணியாகத் தநக்குந் தந் வர்க்கத்தார் கொண்ட சோழனான க்கும் பெற்றுடைய ஆலப்பாக்கத்து சவர்ண்ணந் கோதண்டராமந் அஸ்வத்தாம பட்டனுக்கு நாள் ஒன்றுக்கு நெல் முக்குறுணியும் காசெட்டும் சல்லியக்கிரியை பண்ணுவானொருவனுக்கு நாளொன்றுக்கு நெல் குறுணியும் ஆதுலர்க்கு மருந்துகளுக்கு வேண்டும் மருந்து பறித்தும் விறகிட்டும் பரியாரம் பண்ணி மருந்தடும் பெண்டுகளிருவர்க்குப் பேரால(ரிசி நா) நாழியாக நாளொன்றுக்கு நெல் குறுணியும் பேறார் காசரையாகக் காசொன்றும் ஆதுலர்க்குங் கிடைகளுக்குஞ் சாத்திரர்க்கும் வேண்டும் பணி செய்(யும் நா)விசனொருவனுக்கு நாளொன்றுக்கு நெல் நா நாழியும் - - -
இப்படி யாண்டு ஆறாவது நிமந்தஞ் செய்தபடி இந்த - - - - - லுமிடத்து சாத்திரக் கண்காணியோடும் கிடைக் கண்காணியோடும் செல்லக்கடவதாக நிவந்தம் செய்தபடிக்கு கல்லு வெட்டுவித்தார் இன்நாடு கூறு செய்த ஆதிகாரிகள் சோழமண்டலத்து விஜையராஜேந்த்ர வளநாட்டு இடையள நாட்டு மீனிற்குடையான் பசுவதி திருவரங்க தேவநாரான ராஜேந்த்ர மூவேந்தவேளார் பாண - - - - - ஏவக் கல்லுவெட்டுவித்தான் ஜயங்கொண்ட சோழமண்டலத்துப் புழற் கோட்டத்து தாகுடிநாட்டு அயண்டம் பாக்கத்து இறைவேட்டிந் குமரபாசூர்க்கத்தநான வீரராஜேந்த்ர செம்பியதரையன் இந்த தந்மம் செய்வித்த தாமயனார் மகன் தாமயன் கங்கை கொண்ட சோழனான சேனாதிபதிகள் கங்கைகொண்ட சோழ தன்மபாலற்க்கும் இவர் தம்பியார் தா - - - - - - நான சேனாதிபதிகள் வீரராஜேந்திர தன்மபாலற்குமாய் இது கல்லுவெட்டுவித்தான் ஜயங்கொண்ட சோழமண்டலத்து புழல் கோட்டத்து - - - - - ஸதுவேதி மங்கலத்து பிராமணன் மாங்களூர் நமச்சிவாய தேவன் மகன் தழுவக் குழைந்தானான அபிமான மேரு பிரம்மாராயன். இதர்மம் ஸ்ரீ மதுராந்தகச் சதுரவேதிமங்கலத்து மஹாசபையார் ரக்ஷை ஸ்ரீ.
(பார்வை நூல்; Select Inscriptions of Tamil Nadu p. (137 - 152), Tamilnadu State Dept of Archaeology, 2006)
விளக்கம்: இக்கல்வெட்டு வீரராசேந்திரனின் ஐந்தாம் ஆட்சி ஆண்டில்(1068 AD) வெட்டப்பட்டது. ஏற்கெனவே ஊரார் கொடுத்து வந்த 75 கழஞ்சு நின்றுபோகவே அதை மீண்டும் நடைமுறைப்படுத்தினர். இக்கல்வெட்டில் ஓர் ஆண்டில் எவ்வெப்போது திருவிழா நடத்த வேண்டும் என்னென்ன திருத்தளிகை (பிரசாதம்) தரவேண்டும் உள்ளிட்ட விவரங்கள் முதலில் இடம் பெறுகின்றன. பின் இக்கோவிலில் ஜனநாத மண்டபத்தில் நடந்து வந்த வேத பாடசாலை, உண்டுஉறங்கிய மாணவர்கள், 15 படுக்கை உடைய நோயாளிகள் பண்டுவம் பெறும் மருத்துவமனையும் இயங்கி வந்துள்ளன. வேத பாடசாலையில் 14 ஆசிரியர்களும் 50 மாணவர்களும் இருந்துள்ளனர்.அவர்களுக்கு அன்றாடப்படியாக தரவேண்டிய நெல்லின் அளவு குறிக்கப்பட்டுள்ளது. தங்கிப்படிக்கும் மாணவர் 35 பேர், இரண்டு பெண் ஊழியர்கள் பற்றி குறிக்கப்பட்டுள்ளது. இக்கல்லை வெட்டியவன் சோழமண்டலத்து புழல் கோட்டத்து - - - - - ஸதுவேதி மங்கலத்து பிராமணன் மாங்களூர் நமச்சிவாய தேவன் மகன் தழுவக் குழைந்தானான அபிமான மேரு என்ற பிரம்மராயன் ஆவான்.ஆதுலர் என்பது நோயாளியைக் குறிப்பது . கிடை என்பது மாணவரை குறிப்பதாகும்.
இதேபோல் எண்ணாயிரம், திருப்புவனை ஆகிய இடங்களிலும் வேத பாடசாலைகள் இயங்கியுள்ளன என்பதற்கு இந்நூலுள் கல்வெட்டு பாடச் சான்று கொடுக்கப்பட்டுள்ளது. எண்ணாயிரம் வேத பாடசாலையில் ஆசிரியர்கள் 13 பேர், மாணவர் 330 பேர். திருபுவனை வேத பாடசாலையில் ஆசிரியர்கள் 19 பேர், மாணவர் 260 பேர்.
பெருவாரியான பெரிய கோவில்களில் அக்காலத்தே வேத பாடசாலைகள் இயங்கி வந்துள்ளன. அதே போல் சில இடங்களில் மருத்துவ மனைகளும் இருந்துள்ளன எனத் தெரிகிறது. ஒரு கோவிலில் பூசகர் 10 பேர், மடைப்பள்ளி சமையலர் 3 பேர் என்ற அளவில் கோவிலை சுற்றி உள்ள அக்கிரகாரத்தில் 15 வீடுகள் தாம் இருக்க வேண்டும் ஆனால் 60-70 பிராமணர் வீடுகள் இருக்கின்றனவே காரணம் என்ன?. வேத பாடசாலை ஆசிரியர்கள் 15-20 பேர், மருத்துவர்கள் 5 பேர், திருவாய்மொழி விண்ணப்பஞ் செய்வோர் 10 பேர் என 50 - 60 பிராமணர்கள் ஒரே கோவிலை நம்பி வாழ்ந்ததால் அவர் தம் வீடுகளும் அங்கேயே இருந்துள்ளன என்பதை மேற்கண்ட கல்வெட்டின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது..
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.