ஒரு கல்வெட்டைப் படித்து அதன் பாடத்திற்கு துலக்கமான விளக்கம் தந்து உலகிற்கு வெளிக் கொணர்வோர் மிகக்குறைவு. இப்படி வெளிவந்த கல்வெட்டு பாடத்தையும் விளக்கத்தையும் நம்பித்தான் வரலாற்று ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் தமது எழுத்தை அமைகின்றனர். இத்தகையோர் எழுத்துகளைத் தான் பல ஆயிரம் மக்கள் படிக்கின்றனர். கல்வெட்டு வாசிப்பிலும் விளக்கத்திலும் தவறு இருந்தால் அதை பின்பற்றி வரும் எழுத்தாளர் எழுத்து அனைத்தும் தவறாகவே இருக்கும். மக்களுக்கு தவறான செய்தியே சென்று சேரும்.
அயல் நாடுகளில் தனியார் தொல்லியல் முயற்சி மேற்கொண்டு அதன் அடிப்படையில் ஆய்வு முடிவுகளை சிறப்பாக வெளியிடுகின்றனர். இந்தியாவில் அவ்வாறான முயற்சி குறைவாகவே உள்ளது. ஆதலால் நடுவணரசு தொல்லியல் துறையும் (ASI), மாநில அரசுகளின் தொல்லியல் துறையும் தான் அரசு மானியத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வுநூல்களை வெளியிடுகின்றன.
கீழ்க்காணும் கல்வெட்டு பல்லவ மன்னன் கொடுத்த கொடை பற்றியது. இதில் உள்ள குழப்பம் தீர்க்க வேண்டியுள்ளது. நான் சொல்லும் கருத்தே சரி என்று சொல்ல முடியாது. மாற்று கருத்தும் ஏற்புடையதே.
ஸ்வஸ்தி ஸ்ரீ [கோவி] / [ராஜ]கேஸரி பந்மக்கு யாண் / டு 15 ஆவது அண்டாட்டு / குற்றத்து நீங்(க்)கிய -- -- / - - - த் திருப்புறம்(ப்) பியத்து ப / [ட்டா]லகர்க்கு பல்லவப் பேரரையர் / வீர[ஸி]காமணிப் பல்லவரை /- - - சந்த்ராதித்தவ(ற்) லெரிக்க / வைத்த நொந்தா விளக்கு 1 ஒ[ந்] / றி[னி]க்கு நிச[த]மு[ம்] உழக்கு னெ / [ய்]க்கு வைத்த சாவா மூவாப் / பேராடு 90 தொண்ணூ / று பந்மாஹேஸ்வர ரக்ஷை
விளக்கம்: கோவிசய என்பதன் குறுக்கமே கோவி என்பது. கோவி ராசகேசரி பன்மர் என்பது முதலாம் ஆதித்ய சோழனை குறிக்கின்றது என்றால் அந்த வகையில் இக்கல்வெட்டு அவனது 15 ஆம் ஆட்சி ஆண்டில் வெட்டப்பட்டுள்ளது என்றால் அதன் காலம் கி.பி. 885 என்று ஆகிறது. ஆதித்ய சோழன் அபராஜித்தனை கி.பி. 897 ல் போரிட்டு கொல்லும் வரை அபராஜித்த பல்லவன் தான் வேந்தன் ஆதித்ய சோழன் அவனுக்கு அடங்கிய மன்னன். கல்வெட்டு மரபுப்படி வேந்தன் பெயரும் ஆட்சி ஆண்டும் தான் முதலில் தொடங்க வேண்டும். மேலுள்ள கல்வெட்டு கோவி ராசகேசரி பன்மர் என்று குறித்துவிட்டு பல்லவனை பேரரையர் (மன்னன்) என்கிறது. இதாவது, சோழனுக்கு பல்லவன் கட்டுப்பட்டவன் என்பது போல உள்ளது.
இந்த குழப்பத்தால் தான் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை, தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி - 6 இல், கல்வெட்டு எண் 76/2014, 2015 வெளியீடு, பக்கம் 129, ஆசிரியர் ஆ.பத்மாவதி அவர்கள் இக்கல்வெட்டில் குறிக்கப் பெறும் இந்த கோவி ராசகேசரி பன்மர் முதலாம் பராந்தகனாக இருக்கலாம் என்று கருதி அவனது 15 ஆட்சி ஆண்டு கி.பி. 922 இல் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளதாக குறித்துள்ளார். இது முதற் குழப்பம்.
இரண்டாவது குழப்பம், திருப்புறம்பியம் சாட்சிநாத ஈசுவரர் அன்றாடம் ஒருவர் புரியும் குற்றங்களை நீக்கியருள்பவர் என்று பொடிவைத்து பேசி, அந்த வகையில் தன் பெயர் குறிப்பிடப்படாத பல்லவ மன்னன் தான் செய்த குற்றத்தை நீக்க வேண்டி கொண்டு அதற்காக ஒரு நொந்தா விளக்கு எரிப்பதாக எண்ணம் கொண்டு, அதற்கு நிசதமும் ஒரு உழக்கு நெய் ஊற்றத் தோதாக கிழடு தட்டாத முழுதும் வளர்ந்த (matured) 90 ஆடுகளை நெய் வழங்குவதற்காக கொடுக்கிறான். அவன் செய்த குற்றம் தான் என்ன? வீர சிகாமணி பல்லவரை (கொன்றதா?). இந்த இடத்தில் கல்வெட்டு சிதைந்து உள்ளது.
இக்கல்வெட்டில் "பல்லவப் பேரரையர் வீர[ஸி]காமணிப் பல்லவரை" என்ற சொற்றொடர் இரண்டு பல்லவரை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துவதாக நான் உணர்கிறேன். இது தான் இரண்டாவது குழப்பம். பல்லவப் பேரரையன் தான் செய்த குற்றத்திற்கு கழுவாயாக (பரிகாரம்) நுந்தா விளக்கு எரிக்கிறான் என்பதை அன்றாடம் நிகழ்த்தும் குற்றத்தை நீக்கியருளும் இறைவன் என்ற சொற்றொடர் மூலம் உறுதி செய்து கொள்ளமுடிகிறது.
நூல் ஆசிரியர் ஆ.பத்மாவதி பல்லவப் பேரரையனும் வீரசிகாமணிப் பல்லவரும் ஒருவரே என்று கொண்டு இந்த நுந்தா விளக்கை வீரசிகாமணிப் பல்லவன் எரிக்க ஏற்பாடு செய்ததாக விளக்கியுள்ளார்.
என் விளக்கத்திற்கும் நூலில் உள்ள விளக்கத்திற்கும் உள்ள கருத்து வேறுபாடு என்ன? கல்வெட்டுச் செய்தி சிறிது தான் என்றாலும் அது வெளிப்படுத்தும் செய்தி மிக்க வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. கல்வெட்டு குறிக்கும் கோவி ராசகேசரி பன்மர் ஆதித்ய சோழனுக்கு காலத்தால் பிற்பட்டவர். பல்லவர் ஆட்சி அபராஜித்தனோடு முடியவில்லை அவனுக்கு பின்னும் தொடர்ந்துள்ளது. ஒரே மாற்றம் அவனுக்கு பின் ஆட்சி புரிந்த பல்லவர் வேந்தர் நிலையை இழந்து சோழருக்கு அடங்கிய மன்னர்களாக ஆகிவிட்டனர் என்பதே.
இதற்காகத் தான் பேரரசன், சிற்றசன் என்ற சொற்களை பயன்படுத்தாமல் 4 அதிகார அடுக்குகளான வேந்தன், மன்னன், அரையன், கிழான் என்ற சொற்களை மட்டுமே பயன்படுத்தினால் இந்த 4 பதவிகளின் அதிகார நிலை பற்றிய வேற்றுமையும் கல்வெட்டின் பொருளும் தெளிவாகத் துலங்கும் என்கிறேன்.
ஒரு குழப்பம் தீர்ந்தது
இக்கல்வெட்டில் புழங்கும் பந்மக்கு என்ற சொல்லாட்சி இவன் வேந்தன் என்பதை குறிக்கிறது. அப்படியானால் பல்லவன் இரண்டாம் அதிகார நிலை மன்னன் என்பது தெளிவு. பிழை எங்குள்ளது என்றால் கோவிராஜகேசரி என்பதை ஆதித்ய சோழன் என்று கொண்டதில் தான் உள்ளது. உண்மையில், இந்த கோவிராஜகேசரி என்பது ஆதித்ய சோழன் மகன் முதலாம் பராந்தகனை குறிப்பது ஆகும். அந்த வகையில் கோவிராஜகேசரி பன்மர்க்கு (வேந்தன்) என்று தொடங்கும் அத்தனை கல்வெட்டும் ஆதித்ய சோழனின் 27ஆம் ஆட்சி ஆண்டில் அபராஜிதனை கொல்லும் வரை அவனை குறிக்காது, அவனுக்கு பொருந்தாது.அவன் கிபி. 897 இல் தான் வேந்தன் ஆகிறான்.
இக்கல்வெட்டு அச்சாகியுள்ள முன்பக்கத்தில் (p 128) இதே ஆதித்ய சோழனின் 7 ஆவது ஆட்சி ஆண்டு கல்வெட்டு (கி.பி. 878) என்று அதை குறித்துள்ளனர். அந்த கல்வெட்டு கீழே.
ஸ்வஸ்தி ஸ்ரீ கோவிராஜகேஸ / ரி வந்மக்கு யாண்டு 7 ஆ[வ]து திருப்புறம் / (ம்)பிய பட்டாலகர்க்கு இரு[மடி] சோழ[வ]ணுக்கரில் / - - - சாமநாயகன்(த்) தேவந் [சந்த்ரா]திதற் எரிக்க வைத் / த நொந்தாவி [ளக்கு] ஒன்றிநுக்கு நிசதம் உழக்கு / நெ[ய்]யாக வைத்த ஆடு [90] தொ[ண்]ணூ[று]
விளக்கம்: ஆதித்ய சோழ வேந்தனுக்கு (பன்மன்) 7 ஆவது (கி.பி.878) ஆட்சி ஆண்டில் திருப்புறம்பியம் ஈசனுக்கு இருமடி சோழனுக்கு அணுக்கர் (personal assistant) சாமநாயக்க தேவன் ஒரு நொந்தா விளக்கு எரிக்க வேண்டிய உழக்கு நெய் வழங்க 90 ஆடுகளை வழங்கியுள்ளான். அணுக்கர் விளக்கு எரிப்பது பராந்தகனே விளக்கு எரிப்பதாகக் கொள்ளலாம். இக்கல்வெட்டில் எங்கே தவறு உள்ளது என்றால் இருமடி என்று படித்துள்ளார்களே அங்கு தான். அது இருமுடி என்று இருக்க வேண்டும். இருமுடி சோழன் என்பது முதல் பராந்தக சோழனை குறிக்கும். இதாவது, சோழ பாண்டிய மகுடங்களை கொண்டவன் என்பது அதற்குப் பொருள். இதிலிருந்து வேந்தனாக இல்லாத ஆதித்ய சோழனை கோவிராஜகேசரி பன்மன் சொல்லாட்சி குறிக்காது என்பது தெளிவாகிறது.. அப்படியானால் கோவிராஜகேசரி பன்மக்கு என வரும் அத்தனை கல்வெட்டுகளும் முதல் பராந்தகனையே குறிக்கிறது என்பதே சரியாகப் படுகிறது.
இங்கேயும் இந்த நான்கு அதிகார நிலை வேற்றுமை தான் குழப்பத்தை தெளிவித்துள்ளது. பன்மன் >வர்மன், வேந்தனை குறிப்பது.
இப்படித் தவறாகப் பராந்தகனை ஆதித்ய சோழனாக கொள்வது பராந்தகன் பிள்ளைகள் பாட்டன் ஆதித்யனின் பிள்ளைகள் என்றும், பராந்தகன் மனைவியர் மாமனார் ஆதித்யனின் மனைவியர் என்றும் பொருள் கொள்ள நேரிடும். பராந்தகனின் சிறப்பும் குற்றமும் ஆதித்ய சோழனின் சிறப்பும் குற்றமுமாக ஆகிவிடும். எனவே தொல்லியல் துறைதான் இந்தப் பொருட் பிழையை திருத்த வேண்டும்.
1,100 ஆண்டுகள் முன் வாழ்ந்தவர் வாழ்வில் நிகழ்ந்தவற்றை ஒரு காவல் ஆய்வாளனைப் போல இக்கல்வெட்டில் உள்ள சொற்பொருள் குற்றத்தை காட்டி கல்வெட்டு பராந்தகனின் 15 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி. 922 லும், ஏழாம் ஆட்சியாண்டு கி.பி 914 லும் வெட்டப்பட்டுள்ளன என்பதை கண்டுபிடித்து நிறுவ முடிந்த அளவிற்கு, "பல்லவப் பேரரையர் வீர[ஸி]காமணிப் பல்லவரை" என்பதில் இரு பல்லவர் இடம்பெறுவதையும் நிறுவமுடிந்த அளவிற்கு வீர சிகாமணிப் பல்லவர் கொலையுண்ட நிகழ்வை என்னால் ஆணித்தரமாக நிறுவ இயவில்லை என்பதோடு எனது ஆய்வு அறிக்கையை முழுமை பெறாமல் அரைகுறையாக முடிக்கிறே ன்.
வேந்தர், மன்னவர் அரையர், கிழான் என்ற நான்கு அதிகார பொறுப்பினற்க்கு கொலை என்பது வாழ்வில் அன்றாடம் நடக்கும் தொழில் தர்மம் (இயல்பு). அந்நாளில் கொலை இல்லாத ஆட்சியாளர் இருக்க முடியாது. கொலை புரிந்த குற்றத்திற்கு அக்காலத்தே இப்படி நந்தாவிளக்கு எரிப்பதே தண்டனையாக இருந்தது என்பதால் குற்றத்திற்கான தண்டனையை பல்லவப் பேரரையன் நொந்தா விளக்கு ஏற்றி நிறைவேற்றி விடுகிறான். அவனை விடுவிப்பது ஈசன் பொறுப்பாகிவிட்டது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.