இசுலாமியப் படையெடுப்பினால் தமிழ் அரசர் ஆட்சி தஞ்சையிலும், மதுரையிலும் ஒழிந்தாலும் தொண்டை மண்டலத்தில் இசுலாமிய ஆட்சி ஏற்படாமல் ஒழித்தோ அல்லது ஆட்சியை மீட்டோ பல்லவ காடவர்களான சம்புவராயர்கள் வேந்தர்களாக விசயநகர படையெடுப்பு வரை வடதமிழ்நாட்டை ஆண்டுள்ளனர். இவர்களே முன்முயன்று மதுரையில் சுல்தானின் ஆட்சியை ஒழித்திருந்தால் விசயநகர கம்பண்ண படையெடுப்பு நிகழ வாய்ப்பு இருந்திருக்காது. தமிழக வரலாறு வேறு வகையாக இருந்திருக்கும். தாம் பல்லவக் காடவர் வழிவந்தோர் என்று நிறுவ தேடித் தேடி ஓடிஓடி செப்பேடு உண்டா கல்வெட்டு உண்டா என்று அலைந்து பாடுபடும் சில இளைஞர்கள் இந்தப் பல்லவர் ஈரானில் இருந்து வந்த ஆரியப் பார்தியர்கள் என்பதை பலரும் அறிந்திரா நிலையில் இவர்கள் அறிந்திருப்பாரா எனத் தெரியவில்லை. தெரிய வருங்கால் ஆரியர் அடையாளத்தை சுமக்க முன்வருவாரா என்பது ஐயமே. அந்த துணிவு உள்ள நெஞ்சங்களுக்கு காஞ்சி அருளாளப் (வரதராச) பெருமாள் திருக்கோயிலில் உள்ள இரு சம்புவராயர் காலக் கல்வெட்டுகளை கீழே. கொடுத்துள்ளேன்.
ஸ்வஸ்திஸ்ரீ கட்டாரி ஸா / ளுவன் விட்ட / திருவிடையாட்ட / ம் சிறுபுலியூர் / க்கு திருமுகபடி / ஸ்வஸ்திஸ்ரீ [II*] ஸகலலோகச் சக்ரவத்தி ஸ்ரீ இராஜநாராயணன் பலவ ஸம்வத்ஸரத்து / ப்ரதமையும் திங்கட்கிழமையும் பெற்ற ரேவதி நாள் ஜயங்கொண்ட சோழ -- - / ஞ்(ச)சிபுரத்து திருவத்தியூர் நின்றருளிய அருளாளப்பெருமாளுக்கு அமுதுப / ணி உள்ளிட்டனவற்றுக்கு விட்ட உக்கல் பற்று சிறுபுலியூர் ஊரவர்க்கு தங்களுர் பலதளி பூசைபாதியும் பட்ட ப்ர / த்தியும் நீக்கி ஆறாவது ஆடி மாதம் முதல் கடமை பொன்வரி உள்ளிட்ட பல வரிகளும் எடுத்து அளவு / விருத்துப்படி அரிசிக்கணம் - - -
விளக்கம்: பிலவ ஆண்டு (1364) 2 -ஆம் இராசநாராயண சம்புவராய வேந்தரின் ஆட்சியின் போது காஞ்சிபுரம் அருளாளப் பெருமாளுக்கு அமுதுபடி உள்ளிட்டனவற்றுக்கு உக்கல் பற்றாக சிறுபுலியூர் ஊரார்க்கு பல கோவில் பூசை பாதியில் வரிநீக்கி அந்த வரிப்பணத்தை கொண்டு என்ற வரை கல்வெட்டு நிறைவு பெறாமல் நின்று விடுகிறது. இதனை கட்டாரி சாளுவன் என்பவன் தானமாக வழங்குகிறான். இவன் பெயருக்கு முன் ஸ்வஸ்திஸ்ரீ வருவதால் இவனும் மன்னனாக இருக்க வேண்டும்
ஸ்வஸ்திஸ்ரீ ஸகலலோகச் சக்ரவத்தி ஸ்ரீ இராஜநாராயணன் சம்புவராயர்க்கு யாண்டு 7 ஆவது ஆனி மாதம் முப்பதாந்தியதி பெருமாள் அருளாளநாதன் கோயில் தானத்தார்க்கு நினைப்பு பெருமாள் திருநாள் எழுந்தருளும் அளவில் அனைநம்பிரானிலும் குதிரைநம்பிரானிலும் ஸ்ரீகருடாழ்வானிலும் நகரி சோதனைக்கும் எழுந்தருளும் நாலுநாளும் மிறங்கின திருவீதி / யிலே எழுந்தருளுவிக்ககடவார்(ர)கள் ஆகவும் திருத்தேரில் எழுந்தருளும் அளவில் திருநாள்தோறும் ஏழாந்திருநாளின் அற்றைக்கு கங்கைகொண்டான் மண்டபத்து அளவாக எழுந்தருளு னால் மீள எழுந்தருளுவிக்க கடவாராகவும் உடையார் ஏகாம்பரநாதன் திருநாமத்துக்காணி ஆன திருத்தோப்புகளில் சேரமான் திருத்தோப்பு அறப்பெருஞ்செல்வி திருத்தோப்பு செண் /பகத்தோப்பு ஈசானதேவர் திருத்தோப்பு இந்நாலு திருத்தோப்பிலும் உடையாரை எழுந்தருளுவிக்கும்படியும் இப்படிக்கு கல்லு வெட்டி நாட்டி இது ஒழிய புதுமைபண்ணிச் செய்யாதபடியும் சொல்லிவிட்ட அளவுக்கு இப்படிக்கு தாழ்வற நடத்திப்போகவும் பார்ப்பதே இவை தென்னவதரையன் எழுத்து .
விளக்கம்: 2 - ஆவது இராசநாராயணன் சம்புவராயர்க்கு 7 ஆவது ஆட்சியாண்டில் (1363) தென் னவதரையன் இட்ட ஆணை யாதெனில் "பெருமாள் கோவில் தானத்தவர் நினைவிற்கு, உற்சவ காலத்தில் பெருமாள் யானை, குதிரை , கருடன், நகர் சோதனை வாகனங்களில் எழுந்தருளும் நான்கு நாளும் இறங்கிய திருவீதியில் காட்சிப்பட எழுந்தருளச் செய்ய வேண்டும். திருத்தேரில் எழுந்தருளும் போதும் ஏழாம் திருநாளின் போதும் கங்கைகொண்டான் மண்டபத்தில் எழுந்தருளினால் மீண்டும் எழுந்தருளச்செய்ய வேண்டும். ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களான சேரமான் திருத்தோப்பு, அறப்பெருஞ்செல்வி திருத்தோப்பு, செண்பகத்தோப்பு, ஈசானதேவர் திருத்தோப்பு இந்நாலு திருத்தோப்பிலும் எழுந்தருளுவி க்க உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இதை கல்வெட்டி நட்டுநிறுத்தலாம். இந்த ஏற்பாடு இல்லாது ஒழியும்படி வேறு எந்த புது செய்கையை செய்யாதபடி குறைவின்றி நடத்திப்போக வேண்டும்" என்கிறான் அரசன் தென்னவதரையன்.
பார்வை நூல்: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி 3.
இதோ தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி IX (காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி - 5) இல் இருந்து சில கல்வெட்டுகள் கீழே:
ஸ்வஸ்தி / ஸ்ரீ சகலலோகச் சக்கரவத்தி ஸ்ரீ இராச நாராயணன் சம்புவராயர்க்கு யாண்டு 3 வது ஆவணி மா / தம் ஜயங்கொ[ண்]ட சோழ மண்டலத்து களத்தூர் கோட்டத்து களத்தூர் நாட்டு களத்தூரில் உடை / யார் திருவால கோயிலுடைய நாயனார் கோயில் கைக்கோளரில் அம்பலவர் வேனாவுடையார் தே / வாண்டை காங்கயராயன்னேன் இந்னாயனார்க்கு னான் வைத்த திருநந்தா விளக்கு அரைக்கு நான் வி[ட்]ட பசு பதின் ஐ / ஞ்சும் இக்கோயில் திருவிளக்குக்குடி மன்றாடி தளியக்கோன் மகன் எழும்போதக கோனேன் இன்த ப[த்]தின் ஐஞ் / சும் இந்நாள் முதல் கைக்கொண்டு சந்திராதித்த வரை நாள் ஒன்றுக்கு இராஜகேசரி நாழியால் ஆழாக்கு நெய் அள / க்க கடவேன் தளியக்கோன் எழும்போதக கோனேன் இது மஹேஸ்வரரக்ஷைII
விளக்கம்: செயங்கொண்ட சோழ மண்டலத்து இன்றைய பொன்விளைந்த களத்தூர் பகுதியை அண்டிய திருவானைக்கோயில் கோயிலுடைய கைக்கோளரில் (செங்குந்தரில்) அம்பலவர் வேனாவுடையார் தேவாண்டை காங்கராயன் இராச நாராயண சம்புவராயரது 3 - ஆவது ஆட்சி ஆண்டில் (1340) அரை நந்தா விளக்கிற்கு விட்ட பசு பதினைந்தையும் திருவிளக்குக்குடி சார்ந்த தளியக்கோனது மகன் எழும்போதக கோனான் பெற்றுகே கொண்டு நாள் ஒன்றுக்கு இராசகேசரி நாழியால் ஆழாக்கு நெய் அளந்து தருவதாக உறுதியளித்துள்ளான்.
இதே திருவானைக்கோயிலில் மற்றுமொரு கல்வெட்டு
ஸ்வஸ்தி[ஸ்ரீ] இராசநாராயண சம்புவராயற்க்கு மூன்றாவது களத்தூர் கோட்டத்து களத்தூர் உடையார் திருவால கோயில் உடைய நாயனார்க்கு சுரபியாக / மல்லிநாதன் இராசநாராயண சம்புவராயனேன் மல் லன் மகன் எழும்போதககோன் வசமாக வீட்ட பசு பதினஞ்சும் சந்திராதித்தவரை செலு / த்த கடவது ஆக கைக்கொடேன் மல்லன் மகன் எழும்போதாக கோனேன் II
விளக்கம்:இராசநாராயண சம்புவராயரின் 3 ஆவது ஆட்சி ஆண்டில் (கி.பி.1340) பொன்விளைந்த களத்தூர் கோட்டத்தின் களத்தூரில் அமைந்த திருவானைக்கோவில் நாயனாருக்கு பாற்பசுவாக (சுரப்பி) இளவரசன் மல்லிநாதன் இராச நாராயண சம்புவராயன் மற்போர் மறவன் (மல்லன்) மகன் எழும்போதகக் கோன் என்பானிடம் 15 பசுக்களை பேணும் பொறுப்பளித்தான். மேலுள்ள கல்வெட்டில் வரும் தளியக்கோன் மற்போர் மறவனாகவும் இருந்துள்ளான் போலும். இந்த மல்லிநாதன் சம்புவராயர் தான் இரண்டாம் இராசநாராயண சம்புவராயன் போலும்.. 15 பசுக்கள் விளக்கு எரிக்க நெ ய் தரவேண்டி கொடுக்கப்படவில்லை மாறாக பால்வழங்க கொடுக்கப்பட்டுள்ளன.
இக்கோவிலில் இன்னொரு கல்வெட்டு
ஸ்வஸ்திஸ்ரீ சகலோக சக்கரவத்திகள் ஸ்ரீஇராசநாராயணன் சம்புவராயற் / க்கு யாண்டு 12 வது ஜயங்கொண்ட சோழ மண்டலத்து களத்தூர் கோட்டத் / து களத்தூர் திருவாலகோயில் உடைய னாயனார் கோஇல் தாநத்தாற்கு திருவா / ல கோஇல் உடைய நாயனார் திருமடைவிளாகமும் திருவிருப்பு சூழ்ன்த திருநாமத்தியில் காணி / நாற்பாற் கெல்லைக்கு உள்ளிட்ட நஞ்சை புஞ்சை - - - - புறகலனையும் மற்றும் பல பட்டடையும் ஏறும் கு[டி] / யும் ஸர்வமானியம் ஆகவும் சன்திராதித்தவரை ஆக பூசை திருப்பணி தாழ்வற நடக்கும்படி / யாக குடித்தோம் இப்படி செய்வதே.
விளக்கம்: இந்த திருவானைக் கோயில் சம்புவராயரது நேரடி பார்வையில் இருந்துள்ளதை இக்கல்வெட்டால் உணர முடிகிறது. சம்புவராயரது 12 வது ஆட்சியாண்டில் (பொன்விளைந்த) களத்தூர் கோட்டத்தில் அடங்கிய களத்தூரில் அமைந்த திருவானைக் கோயில் பொறுப்பாளர்கள் (ஸ்தானத்தார்) திருவால கோயில் திரு மடைவிளாகத்தில் அதை சூழ்ந்த இடத்தில் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் நாலுபக்க எல்லைக்கு உட்பட்ட நஞ்சை புஞ்சை நத்தம் புறம்போக்கு மற்றும் பலவரி ஒழித்து சர்வ மானியமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதை வைத்து அன்றாட பூசைத் திருப்பணிகள் குறைவுபடாமல் நடத்திட அரசன் கொடுத்துள்ளான். and என்பதற்கான [ மற்றும் ] என்ற சொல் இக்கல்வெட்டில் புழங்குகிறது.
உத்திரமேரூர் வட்டம் பெருநகர் பிரம்மபுரீசுவரர் கோயில் கல்வெட்டு.
திருமுகத்துக்குப் படி சம்புவராயன் ஓலை பெருநகர் ஊரவர் கண்டு விடைத் தங்களூர் ஆளுடையர் பிரமீசுரமுடைய நாயனாற்க்கு ஸ்ரீகோராஜகேசரி பந்மற் - - - - ப்புறமாக தாங்கள் கைக்கொண் / ட பொன் பதினேழு கழஞ்சரையும் வைகாசி விசாகந் தீத்தமாக திருநாள் எழுந்தருளுவிக்க கைக்கொண்ட போ முப்பத்தின் கழஞ்சும் ஆகப்பொன் நாற்பத்[தேழு] கழஞ்சு -- - - - கல்வெட்டுப்படியாலுள்ள பொ / லிசைப் பொன்னுக்கு நேராக உபைய நடத்தாதபடியாலே தாங்களுந் தானத்தரும் நாயனார் விசையகண்ட கோபால தேவற்கு இருபத்தொன்றாவது வைகாசி மாதத் - - - - - இக்கல்வெட்டின தூண் இரண்டும் நாம் அத்தியேற அழைப்பித்துப் பாத்த இடத்து தூண் ஒன்றினால்ப் பொன் முப்பதின் கழஞ்சும் தூண் ஒன்றினால் பொன் பதினேழு கழஞ்சரையும் ஆகப் பொன் நாற்பத்தேழு [கழஞ்சரை]க்கும் ஆண்டு ஒன்றுக்கு கழஞ்சுக்கு மூன்று மஞ்சாடியால் / வந்த பலிசைப் போன் ஏழு கழஞ்சே யிரண்டு மஞ்சாடியே நாலுமாவுக்கும் நேராக உபைய நடத்தி எழுந்தருளுவியுங்கோளென்ன தங் களெழுந்தருளு விடாதபடியாலே இப்பலிசைப் பொன் ஏழு கழஞ்சே இரண்டு மஞ்சாடியே நாலுமாவும் ஆண்டு தோறுந் தானத்தார்கு நியாய / த்தார்[க்]குநியாயமுதலிகளுக்கு மே தாங்கள் குடுக்க இது கொண்டு தானத்தாருந் நியாயத்தாருந் நியாயமுதலிகளும் திருநாளுக்கு வேண்டுவன அழிந்து இத்திருநாள் எழுந்தருளுவிக்கக் கடவர்களாகவுஞ்சொன்னோம். இப்படிக்கு வீரப்பெருமாள் மகன் ஆளப்பிறந்தான் இரா[ச]ராச சம்புவராயனேன்.
விளக்கம்: ஸ்தனம் > தனம் என்று தமிழ்படுத்தியது போல ஸ்தானத்தார் (பொறுப்பாளர்) > தானத்தார் என்று தமிழ்ப்படுத்தி கல்வெட்டுகள் தோறும் குறிக்கப்படுகின்றனர். முதலி, முதலிகள் - தலைவர், chief
அரச ஓலைவழி கட்டளைப்படி (திருமுகம்) ஓலைநாயகமான சம்புவராயன் பெருநகர் ஊரார் கண்டு விடை தர வேண்டும் என்று அவர்கள் இனி செய்ய வேண்டியதை ஆணையாக வெளியிட்டான், " உங்களூர் பிரமீசுர நாயனாருக்கு இராசராச சோழன் I கொடுத்து நீங்கள் கைக்கொண்ட பொன் 17 கழஞ்சும், வைகாசி விசாகத் திருநாளில் இறைவனை எழுந்தருளுவிக்க 30 கழஞ்சும் ஆக மொத்தம் 47 கழஞ்சு பொன்னை கைக்கொண்டதாக கல்வெட்டில் உள்ளபடி அதில் வரும் வட்டியில் உபையம் நடத்தாதபடியால் ஊரார் நீங்களும் பொறுப்பாளரும் (ஸ்தானத்தர்) வேந்தர் விசைய கண்டா கோபாலரது இருபத்தொன்றாம் (கி.பி.1271) ஆட்சி ஆண்டில் கல்வெட்டின் தூண் இரண்டையும் பார்த்த போது ஒருதூணில் பொன் 30 கழஞ்சும், இன்னொரு தூணில் பொன் 17 கழஞ்சும் ஆக 47 கழஞ்சிற்கு ஆண்டு ஒன்றிற்கு ஒரு கழஞ்சிற்கு மூன்று மஞ்சாடியால் வரும் வட்டிப்பொன் 7 கழஞ்சே 2 மஞ்சாடியே நாலு மாவுக்கு ஈடாக இறைவனை எழுந்தருளுவிக்க சொன்னபடி செய்யவில்லை ஆதலால் இந்த பொன்னுக்கு வட்டியை ஊரார் ஆகிய தாங்கள் பொறுப்பாளருக்கு,, தீர்ப்பாளருக்கு, தீர்ப்பு தலைவருக்கு கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் இந்த வட்டியில் பொறுப்பாளரும், தீர்ப்பாளரும், தீர்ப்பு தலைவரும் திருநாளுக்கு வேண்டியதை செலவழிக்க வேண்டும் , திருநாள் நடந்தேறச் செய்யவேண்டும் என்று ஆணையிட்டேன். என்று வீரப்பெருமாள் மகன் ஆளப்பிறந்தான் இராசராச சம்புவராயன் கூறுகின்றன.
இக்கல்வெட்டு மூலம் வீரப்பெருமாள் நான்காம் நிலையான கிழான் நிலையில் இருந்தவன் என்று ஊகிக்க முடிகிறது. அவன் மகன் ஆளப்பிறந்த இராசராச சம்புவராயன் விசய கண்டகோபாலனிடம் ஓலைநாயகமாக பணிபுரிந்துள்ளது தெரிகிறது. இவனுக்கு பின் வந்தவர்கள் வேந்தர்களாக உயர்ந்துள்ளனர்.
seshadri sridharan <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>