விஜய் தொலைக்காட்சியின் 'ஏர்டல் சுப்பர் சிங்கர் ஜூனியர்' நிகழ்ச்சியின் மூலம் உலகத் தமிழர்களின் மத்தியில் மிகுந்த ஆதரவையும், அன்பையும் பெற்ற இளைய பாடகி மகிஷாவின் இசைப்பயணம் நிறைவு பெற்றாலும் , அந்நிகழ்ச்சியில் முதல் 12 இடங்களில் ஒருவராகத் தேர்வுசெய்யப்பட்டு தன் பாடும் ஆற்றலை வெளிப்படுத்திய மகிஷாவின் ஆற்றலும், முயற்சியும் பாராட்டுக்குரியன. அவரது இசைப்பயணம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து அங்கு எஞ்சியிருந்த ஏனைய பாடகர்களும், பெற்றோர்களும் கண்ணீர் விட்டழுதனர். அது அவர்களுக்கிடையில் நிலவிய அன்பினை வெளிப்படுத்தியது. நடுவர்களாகச் செயற்பட்ட பிரபல பாடகர்களான 'சின்னக்குயில்' சித்ரா, 'மாங்குடி' சுபா, மனோ ஆகியோர் எழுந்து நின்று தங்களது வாழ்த்தைத் தெரிவித்ததுடன், கனடாவின் சிறந்த பாடகியாக அவரை குறிப்பிட்டும் மகிழ்ந்தனர். மகிஷா தன் முயற்சியையும், திறமையையும் மூலதனமாக்கித் தமிழக மக்களை, உலகத் தமிழ் மக்களைக் கவர்ந்தார். அனைவருமே அவரைத் தம்முள் ஒருவராக இனங்கண்டார்கள். மகிஷாவின் முயற்சிக்காகவும், ஆற்றலுக்காகவும் அவரைப் பாராட்டுகின்றோம்.