-வானொலி என்றால் அது இலங்கை தான். அது போல வானொலிக் குரலுக்குச் சொந்தக்காரி மதிப்பிற்குரிய அம்மா திருமதி இராஜேஸ்வரி சண்முகம். குழல் இனிது, யாழ் இனிது, மழலைச்சொல் கேளாதவர், ஆனால் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களது குரலில் ஒரு ஈர்ப்புச் சக்தி இருக்கின்றது.எழுத்துக்கள் உச்சரிக்கும் பொழுது வார்த்தைகள் சகா வரம் பெறுகின்றன. சொல் நயம், ஒலி நயம், அதற்கெல்லாம் மேலாக இயற்கை கொடுத்த குரல் நயம் அதை உபயோகிக்கக் கூடிய "சூழ் கலை நயம்". வானொலி செய்த பாக்கியமோ, நேயர்கள் செய்த பாக்கியமோ, இலங்கைசெய்த பாக்கியமோ, எல்லாவற்றிக்கும் மேலாக நாம் கேட்கும் பாக்கியம்! மழையின் சாரல்களை அவரின் குரலில் செவிமடுக்கின்றோம். அலங்காரத்தின் அலங்காரமாய் ஜொலிக்கிறார் அவர் குரலால் கேட்கிறோம்.
16.03.1938 ம திகதி கொழும்பு கொட்டாஞ்சேனையில் இராஜேஸ்வரி பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை ஆங்கில்மொழியில் கற்ற இவர் இன்று தமிழிலே புகழ் பூத்துள்ளார் .இவரது தமிழ் கலப்பற்ற தூய தமிழாகும் .1952 ல் (தனது14 வது வயதில்) வானொலி கலைஞராக அறிமுகமானார். என்.எஸ்.எம்.ராமையா எழுதிய "விடிவெள்ளி" நாடகம் மூலமாக தன் திறமையை வெளிக்காட்டி இன்றும் வானொலி நாடகமோ ,மேடைநாடகமோ, எதுயாயினும் சரியே மங்காதே விடிவிள்ளியாகவே திகழ்கின்றார் . நூற்றுக்கணக்காண நாடகங்கள் வானொலியில் மதுரக்குரலால் ஒலித்து நடிப்புத் திறன் மிளிர்ந்தது,புகழ் சேர்த்துக் கொடுத்த சில நாடகங்களை வாசகர்களுக்கு நினைவுப்படுத்துகிறேன்.
வாடகை விடு ,திரு.சி.சண்முகம் எழுதிய மேடை நாடகம். 'ஹரே ராம் ' , நரே கோபால் எழுதிய நெஞ்சில் நிறைந்தவள்,லண்டன் கந்தையா,ஸ்ரீ மான் கைலாசம்,தேரோட்டிமகள்,(குந்தி தேவி பாத்திரம் ) முருகையனின் "விடிவை நோக்கி"போன்ற நாடகங்களில் பல்வேறு பாத்திரங்களில் முத்திரை பதித்துப் புகழ் சேர்ந்தார்.வானொலி (ஒலிபரப்புத் துறையையும்)நாடகத் துறையையும் தன் குரல் மூலமாக (தனித்துவமாக)மிளிரச் செய்த பெருமை அம்மா இராஜேஸ்வரி அவர்களுக்கே உண்டென்றால் அது மிகை அல்ல. 26 . 12 . 1952 ம் திகதி முதல் வானொலி கலைஞராக கலைத்துறையில் பாதம் பதித்த அம்மா இராஜேஸ்வரி 1969 இல் பகுதி நேர அறிவிப்பாளராகவும். 1971 இல் மாதர்,சிறுவர் பகுதி தயாரிப்பளராகவும்,1974 இல் நிரந்தரஅறிவிப்பாளராகவும்,1982 இல் தரம் - 1 அறிவிப்பாளராகவும் (முதல் தரம்) 1994 இல் மீ. உயர் அறிவிப்பாளராகவும் தன் முயற்சியினால் படிப்படியாக உயர்ந்தார்.நாடறிந்த நல்ல சிறந்த நாடகாசிரியர் திருவாளர் சண்முகம் அவர்களை தன் அன்புக் கணவராக இராஜேஸ்வரி பெற்றார்.இத்தம்பதினருக்கு மூன்று பிள்ளைகள்,மூத்தவர் வசந்தி சண்முகம் (தற்போது திருமதி சிவகுமார்) தாயைப் போலவே சிறுவயது முதல் வானொலியில் இசைப் பகுதியில் தயாரிப்பாளராக பணியாற்றினார். திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளோடு பாரதத்தில் வாழ்கின்றார்.ஆண் மகன் இருவர்.எஸ்.சந்திரமோகன் பாடகர் இவர் (காலமாகி விட்டார்) புகைப்படக் கலைஞர்.எஸ்.சந்திரகாந்தன் தனியார் வானொலியில் ஒலிபரப்புத் துறையில் பணியாற்றுகின்றார்.கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் அரச அதிகாரியாக இருந்து கொண்டு கலைப்பணி ஆற்றிய திரு சண்முகம், தனது மனைவி இராஜேஸ்வரி அவர்களின் முன்னேற்றத்துக்கு துணை நின்றவர். திருவாளர் சண்முகம் எழுதிய வானொலி தொடர்கள் ஏராளம்.விளையாட்டுத்துறை விமர்சனம் செய்வதிலும் அவர் வல்லவர்.அவர் எழுதிய புகழ்பெற்ற (வானொலி) நாடகங்கள் சில "துணிந்து விடு தூது, புழுகர் பொன்னையா, இரவில் கெட்ட குரல்"இப்படி இன்னும் பல. இராஜேஸ்வரி வானொலியில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளோ பல.அவற்றுள் பூவும் போட்டும் மங்கையர் மஞ்சரி , முத்துவிதானம், இசைச் சித்திரம், சிறுவர் நிகழ்ச்சிகள். பொதிகைத் தென்றல், வீட்டுக்கு வீடு, இசையும் கதையும்,வானொலி மலர்,ஒலி மஞ்சரி என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
1994 இல் சிறந்த அறிவிப்பாளருக்கான ஜனாதிபதி விருது (போட்டி இல்லாது பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுத் தெரிவானமை குறிப்பிடத்தக்கது. 1995 இல் முதன் முதலாக ஈழத்துப் பெண் என்ற வகையில் (டாக்டர் புரட்சித் தலைவி விருது) "ஜெயலலிதா விருது"அம்மா இராஜேஸ்வரி அவர்களுக்கே கிடைத்தது. கலாசார அமைச்சின் மூலம் முன்னால் அமைச்சர் செ.இராசதுரை அவர்களினால் "மொழிவளர் செல்வி" பட்டம் பெற்றார். பிரான்ஸ் நாட்டுக்கு அழைக்கப்பட்ட இவர் பாரிஸ், டென்மார்க், சுவிஸ், நோர்வே ,ஜெர்மனி, லண்டன், பேர்லின் போன்ற இடங்களில் கௌரவிக்கப்பட்டுள்ளனர். சுவாமி விபுலாந்தரின் நூற்றாண்டுப் பெருவிலாவினை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனா அவர்களினால் "வாகீசகலாமணி" பட்டம் பெற்றார். அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் அவர்களினால் "தொடர்பியல் வித்தகர்"பட்டம் பெற்றார். பேராசிரியர் டாக்டர் இரா.நாகு (தமிழ்த்துறைத் தலைவர் - மாநிலக் கலூரி சென்னை) பேராசிரியர் அருட்திரு சி.மணிவண்ணன் (தேர்வு ஆணையாளர் - தூயவளனார் கல்லூரி திருச்சி)ஆகிய தமிழறிஞர்கள் முன்னிலையில் தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலைய இயக்குனர் இளசை சுந்தரம் அவர்களினால் எட்டயபுரம் தென்பொதி தமிழ்ச்சங்கம் "வானொலிக் குயில்"பட்டம் வழங்கி கௌரவிக்கப் பெற்றார். அம்பாறை மாவட்டத்தில் மருதமுனை, அட்டாளைச்சேனை, கல்முனை, சாய்ந்தமருது போன்ற இடங்களில் பாராட்டும், தங்கப் பதக்கமும் பெற்றார்.சாய்ந்தமருது கலைக்குரல் "வான்மகள்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 11- 11- 2000 ஆண்டு கலைமகள் ஹிதாயா றிஸ்வி, மஸீதா புன்னியாமீன் ஆகியோர் இணைந்து எழுதிய "இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை" எனும் கவிதைத் தொகுதியின் வெளியீட்டு விழாவின் போது சிந்தனை வட்ட பேராதனை பல்கலைகழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.தில்லைநாதன், கலாநிதி துரை மனோகரன், கம்ப பாரதி ஜெயராஜ் போன்றோர் முன்னிலையில் "மதுரக் குரல்" பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். அம்மா தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் சார்பாக குருநகல் தாரிகா மர்சூக் அவர்களின் மனங்களின் ஊசல்கள் வெளிட்டு விழாவில் "கலைதீபம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இதன் சிறப்பம்சம் தனது பெறா மகளாய் கலையுலகில் உலா வரச் செய்திருக்கும் கலைமகள் ஹிதாயா றிஸ்வி தனது இலக்கிய வளர்ச்சிக்கு உரமாய் இருந்த அம்மா இராஜேஸ்வரி அவர்களை கௌரவித்தது பெருமைக்குரியது.'ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் - தன் மகளை சான்றோள் எனக் கேட்ட தாய்' அடையும் பூரிப்பை போல் இந்த விருதில் பூரிப்படைவதாக கூறிப்பிட்டார்.
இராஜேஸ்வரி பட்டங்கள் பல பெற்றாலும், பெருமைகள் பல சேர்ந்தாலும்,பாராட்டுக்களை அள்ளிக் குவித்தாலும்,ஒரு சில கலைஞர்களைப் போல இவர் தடம் மாறிவிடவில்லை.அன்று போலவே இன்றும் சுமார் 50 வருடங்களுக்கு மேலான சேவையினை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபனத்தில் செய்துள்ளார்.செய்தும் வருகின்றார்.பவளவிழா கண்ட இவர் போட்டி நிகழ்ச்சிகளை வானொலியில் நடத்தும்போது மதுரக்குரலாலும்,மொழி வளத்தாலும் தமிழ் பூக்களை தட்டுவித்துள்ளார்.தென்னகத்திலிருந்து எஸ்.பி பாலசுப்ரமணியம்,இளையராஜா,சங்கர் கணேஷ், கல்யாணிமேனன், எம்.எஸ்.வசந்தகுமாரி, கே.ஜே.ஜேசுதாஸ், ஜமுனாராணி, கங்கைஅமரன், கவிஞர் பூங்குயில், ஜிக்கி, மலேசியா வாசுதேவன், டி.எம். சௌந்தரராஜன், எஸ்.பி.சைலஜா, அசோகன், வாணி ஜெயராம், குட்டி பத்மினி, எஸ்.பி.முத்துராமன், எஸ்.வி.சேகர், கமல்ஹசன், மனோராமா, பி.சுசிலா, வாலி, ஸ்ரீகாந்த், ஜென்சி போன்ற பலரை(புகழ் பூத்த எத்தனையோ கலைஞர்களை) வானொலியூடாகப் பேட்டி கண்டுள்ளார். கவிஞர் வைரமுத்து இந்த வானொலிக் குயிலை பற்றி இப்படி கூறுகின்றார்.
வசந்தத்தில் குயில் கூவுமாம்
இந்த வானொலிக் குயிலுக்கு
வருடமெல்லாம் வசந்தமாம் என்று!
வீசும் திசைகளை காற்றுக்குப் பெயரிட்டான் தமிழன்....
வடக்கே இருந்து வருவது வாடைக்காற்று
மேற்கே இருந்து வருவது கோடைக்காற்று
கிழக்கே இருந்து வருவது கொண்டல் காற்று
தெற்கே இருந்து வருவது தென்றல் காற்று
எங்களுக்கு தெற்கேயிருந்து வீசுகிற நீங்கள் தென்றலாகத்தானே இருக்க முடியும்.இது அர்த்தமுள்ள தென்றல்,ஆனந்தத் தென்றல்,பருவம் கடந்து வீசும் பைந்தமிழ் தென்றல்.
இப்படிக் கவிஞர் வைரமுத்து சென்னையிலிருந்து அனுப்பிய மடலில் போற்றி புகழ் பாடியுள்ளார். இலட்சக் கணக்கான, மில்லியன் கணக்கான தமிழ் பேசும் உலக நேய நெஞ்சங்களில் நீங்காத இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ள அம்மா இராஜேஸ்வரி சண்முகம் வானொலி நேயர்களின் ஒரு சொத்து.எனினும் இதே போலவே நல்லிதயமுடன் உடலாலும், உளத்தாலும், குரலாலும் இளமையாய் இறவாப் புகழ் பெற்று பல்லாண்டு காலம் வாழ இதயத் தூய்மையுடன் வாழ்த்துகின்றேன். (இதை நான் எனது தடாகம்வலைத் தளத்தில் எழுதியதைப் பார்த்து மிகவும் சந்தோசப் பட்டார். தனது பெறாமகள் என்னை புகழும் பாக்கியத்தை உயிரோடு பெற்று விட்டதாக சொல்லி மகிழ்ந்தார் .இந்ரூ அவரது (அம்மாவின் ) பிரிவு என்னை மிகவும் துயரத்தில் ஆழ்த்தி விட்டது
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.