மீள்பிரசுரம்!
கொழும்பில் 60களில் நடைபெற்ற நிழல் நாடகவிழா என்னைப்போன்ற நாடக அபிமானிகளுக்கு நல்விருந்தாக அமைந்தது. பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் தினமும் ஒன்றாக புகழ்பெற்ற இயக்குனர்களின் நாடகங்கள், சிறந்த கலைஞர்களின் பங்களிப்புடன் மேடையேறின. அவற்றில்; ஒன்றுதான் நடிகவேள் லடிஸ் வீரமணி இயக்கி நடித்த :'சலோமியின் சபதம்' பைபிளில் வரும் சலோமியின் கதையை ஒஸ்கார்வைல்ட் நாடகமாக எழுதியிருந்தார். அதுவே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு லடிஸ் வீரமணியால் மேடையேற்றப்பட்டது. பார்த்தவர்கள் முற்றுமுழுதாக அந்த நாடகத்தின் தன்மையினால் கவரப்பட்டார்கள். ஆரம்பக்காட்சியில் ரோமாபுரி வீரர்கள், கலீலி வீரர்கள் கவர்ச்சியான ஆடை, அணிகலன்களுடன் மேடையில், நிரம்பியிருந்தார்கள். ஏரோது மன்னனின் மாளிகையின் முன்னுள்ள புற்றரையில் கைகளில் மதுக்கிண்ணங்களுடன் அவர்கள் பேசிக்கொள்வதும், உலாவிவருவதும் மிகச்சிறந்த நெறியாள்கையின் வெளிப்பாடாக சீருடன் இருந்தது. ஓஸ்கார் வைல்ட்டின் வசனங்களை அவர்கள் அழகு தமிழில் பேசினார்கள். நிலவைப் பார்த்து அவர்கள் பேசினார்கள். சிரியநாட்டு இளைஞன், நிலவு இளவரசி சலோமி போல இருப்பதாக சொல்லிக்கொண்டே இருக்கிறான். ஹேரோதியா அரசியின் பணியாளோ 'நிலவு மரணக்குழியிலிருந்து எழுந்து வந்ததுபோல இருக்கிறது. அது சாவின் துர்க்குறி' என்கிறான். அவர்களுக்கு நடுவே கம்பீரமாக நடந்து வரும் ஏரோது அன்ரிபாஸ் (லடிஸ் வீரமணி) என்ற குறுநிலமன்னன். அவனது பிறந்தநாளைக் குறிக்குமுகமாக நடனமாடும் அவனது பெறாமகள் சலோமி(சந்திரகலா). பாதாளச்சிறையில் இடப்பட்டபோதும், அஞ்சாமல் யேசுவின் வருகையைக்கூறும் ஜோவான் (கலைச்செல்வன்) போன்ற பாத்திரங்கள். தனது பெறாமகளின் ஆட்டத்தினால் மகிழ்வுற்ற ஏரோது அன்ரிபாஸ், 'நீ எதை விரும்புகிறாயோ.. அது உன்னதாகட்டும்' என்று சலோமிக்கு சொல்கிறான். தனது தாயின் தூண்டுதலினால், தனது ஆட்டத்திற்கு பரிசாக ஜோவானின் தலையை ஏரோதுவிடம் கேட்டுப் பெறுகிறாள் சலோமி.
ஏறக்குறைய 50 வருடகாலத்திற்கு முந்திய ஒரு தமிழ்நாடகத்தில் சலோமியின் நடனத்தை, பொருத்தமான பின்னணி இசையுடன் புதுமையாக லடிஸ்வீரமணி நிகழ்த்திக்காட்டினார். சபையில் இருந்த நாங்கள் 'கண்கள் வெட்ட மறந்து' பார்த்திருந்தோம். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அது என் மனதைவிட்டு அகலவில்லை.
லடிஸ் வீரமணி கொழும்பு ஜிந்துப்பிட்டிப் பகுதியில் இருந்த மனோரஞ்சிதகானசபா மூலமாக நாடகத்துறைக்கு வந்தவர். இவர் நடித்த முதலாவது நாடகமான 'மல்லிகா' 1945ம் ஆண்டில் மேடையேறியது. தொடர்ந்து அரைநூற்றாண்டு காலத்திற்கு மேலாக கலைத்துறையில் நின்று ஜொலித்தவர்.
'தாய்நாட்டுஎல்லையிலே', 'கங்காணியின்மகன்', 'நாடற்றவன்','சலோமியின் சபதம்', 'கலைஞனின் கனவு', 'மனிதர் எத்தனை உலகம் அத்தனை','ஊசியும் நூலும்' போன்ற பல நாடகங்களை தானே எழுதி, இயக்கி மேடையேற்றியிருக்கிறார்.
புகழ்பெற்ற இலக்கியகாரர்கள், படைப்பாளிகளின் அபிமானக்கலைஞராக லடிஸ் வீரமணி விளங்கியவர். நாடறிந்த எழுத்தாளர் அ.ந.கந்தசாமி தனது 'மதமாற்றம்' நாடகத்தை மேடையேற்ற தீர்மானித்தபொழுது, அதை இயக்கும் பொறுப்பை லடிஸ் வீரமணியிடமே ஒப்படைத்தார். இந்த நாடகத்தில் கவிஞர் சில்லையூர் செல்வராஜன் உள்ளிட்ட புகழ்பெற்ற கலைஞர்கள் நடித்தார்கள் என்பது குறிப்பிடற்குரியது.
அதேபோல கவிஞர் மகாகவி உருத்திரமூர்த்தி, தனது 'கண்மணியாள் காதையை' லடிஸ் வீரமணியே வில்லடித்துப்பாடவேண்டுமென்று விரும்பி எழுதியதாக கூறப்படுகிறது. ஆமாம். வில்லிசை நிகழ்ச்சியிலே புகழ்பெற்ற கலைஞனாகவும் லடிஸ் வீரமணி விளங்கினார்.
'உங்கள் மேடைநாடகமுன்னேற்றத்திற்கு காரணமாக இருந்தவர் யார்' என்று கேட்டபொழுது, லடிஸ் வீரமணி இப்படிப் அழகு தமிழில் பதில் சொல்லியிருக்கிறார். 'சிப்பியிலே முத்து, சேற்றிலே செந்தாமரை, குப்பையிலே குண்டுமணி, பாதையிலே வீரமணி என்றிருந்தவரை உயர்மட்டத்திற்கு கொண்டுவந்தவர் அறிஞர் அ.ந.கந்தசாமி'
'வாடைக்காற்று' திரைப்படமானபொழுது ஒரு சுவையான சம்பவம் நடைபெற்றது. லடிஸ் வீரமணி சம்பந்தப்பட்டதுதான். பேசாலையில் வெளிப்புறப் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து, கொழும்பில் சிலோன் ஸ்ரூடியோ அரங்கில் உள்ளக காட்சி ஓன்று படம்பிடிக்கப்பட இருந்தது. ஒரு இளம்பெண்ணை பிடித்திருப்பதாக நம்பப்படும் பேயை விரட்டும் காட்சி அந்தக்காட்சியில் பேயோட்டியாக லடிஸ் வீரமணியே நடிக்கவேண்டும் என்று முடிவெடுத்து, அவரை அழைப்பித்தார்கள்.
வந்தவர் விஷயத்தை விபரமாகக் கேட்டுக்கொண்டு தயாரிப்பாளரிடம், கொஞ்சப்பணம் வாங்கிக்கொண்டு காணாமல் போய்விட்டார். காட்சி எடுப்பதற்கு தயார்நிலையில் இருந்தது. 'லடிஸைக் காணவில்லை' என்பதுதான் பேச்சு. ஒரு மணித்தியாலத்தின்பின் லடிஸ், தலையை 'மொட்டை'யாக சலூனில் வழித்துக்கொண்டு வந்தார். அழகிய 'பாகவதர்' கிராப்புடன் இருந்த லடிஸ் வீரமணி, நடிப்பதற்காக இந்தக்கோலத்தில் வந்து நின்றது எல்லோருக்கும் ஆச்சர்யமாகவிருந்தது.
ஆனால் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்காமல், திருநீற்றை அள்ளி பூசிக்கொண்டு, உடுக்கெடுத்து அடித்து, ஆவேசமாகப்பாடி, லடிஸ் வீரமணி ஒரு பேயோட்டியை கண்முன்னால் கொண்டுவந்தார்.
ஒரு குறிப்பு. சிந்தாமணி பத்திரிகையில், 'வாடைக்காற்று'க்கான விமர்சனம் எழுதி, நடிகர்களுக்கு புள்ளி வழங்கியவர்கள், கதாநாயகர்களாக படம் முழுதும் வந்த நடிகர்களைவிட, அதிகப்புள்ளிகளை சில நிமிடங்களே வந்த கலைஞன் லடிஸ் வீரமணிக்கு வழங்கியிருந்தார்கள்.
'சலோமியின் சபதம்' 'கண்மணியாள் காதை' இரண்டும் மறைந்த அந்தக்கலைஞனின் புகழை என்றும் நினைவூட்டும்.
மகாகவி உருத்திரமூர்த்தி இப்படிச் சொல்கிறார், தனது கண்மணியாள் காதை தொடக்கத்தில் -
'புலவர் பெருந்தகை ஒருவர் புனைந்த
கப்பல் ஓட்டிய தமிழனின் கதையை
வீரமணி தன்வில்லடித் தோத
ஒரு நாட்கேட்டேன். உடல் சிலிர்ப்படைந்தேன்...'