“மல்லாந்த மண்ணின் கர்ப்ப
வயிறெனத் தெரிந்த கீற்றுக்
குடிசைகள் சாம்பற் காடாய்ப்
போயின.
புகையொடு விடிந்த போதில்
ஊர்க்காரர் திரண்டு வந்தார்.
குருவிகள் இவைகள் என்றார்
குழந்தைகள் இவைகள் என்றார்
பெண்களோ இவைகள்? காலி
கன்றுகள் இவைகள் என்றார்.
இரவிலே பொசுக்கப் பட்ட
அனைத்துக்கும் அஸ்தி கண்டார்
நாகரிகம் ஒன்று நீங்க”
உலக மனச்சாட்சியை, அதன் நாகரிங்களை உலுக்கும் வகையில் கீழ்வெண்மணி படுகொலைகள் குறித்து கவிஞர் ஞானக்கூத்தன் எழுதிய கவிதை இது. இந்தப் படுகொலை நிகழ்ந்து இப்போது 5௦ வருடங்களையும் கடந்துள்ள நிலையிலும் இந்தப் படுகொலைகளிற்கு எதிராக கவிஞர்களும் கலைஞர்களும் கலை இலக்கியச் செயற்பாட்டாளர்களும் எழுப்பிய உரத்த குரல்கள் இன்னமும் தொடர்ந்தும் எதிரொலித்த வண்ணமே உள்ளன. இவ்வகையில் இப்படுகொலைகளின் சாட்சியங்களாக இதுவரை வெளிவந்த படைப்புக்களில், பதிவுகளில், ஆவணங்களில் இறுதியாக வந்த பிரதியாக மீனா கந்தசாமி எழுதிய ‘The Gypsy Goddess’ என்ற நூலின் தமிழ் வடிவமாகிய ‘குறத்தியம்மன்’ நூலினைக் குறிப்பிடலாம்.
கீழ்வெண்மணி படுகொலை குறித்து இன்று அறியாதவர்கள் எவரும் எமது சமூகத்தில் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். தமிழகத்தின் கீழத்தஞ்சை பகுதிகளில் ஒன்றான கீழ்வெண்மணி கிராமத்தில் 1968 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ந்தேதியன்று நிலப்பிரபுக்களுக்கு எதிரான, ஆண்டுகளாகத் தொடர்ந்த நீண்ட நெடிய போராட்டத்தில், ஏற்றிய செங்கொடியை இறக்க மறுத்த காரணத்திற்காக அக்கிராமத்தில் உள்ள குழந்தைகளும் பெண்களுமாகச் சேர்த்து 44 பேர் ஒரு குடிசையொன்றினுள் வைத்து உயிரோடு எரித்துக் கொளுத்தப்படுகின்றனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த கோரச் சம்பவமானது இன்றளவும் பல்வேறு அரசில்வாதிகளினதும் அரசியல் கட்சிகளினதும் பல்வேறு சித்தாந்தங்களினதும் கோட்பாடுகளினதும் போலி முகங்களை எடுத்துக் காட்டிய வண்ணமே உள்ளது. பல ஆளுமைகளின் வரலாற்றில் கறுப்புப் புள்ளிகளாகவும் பக்கங்களாகவும் இடம் பிடித்துசம் சென்றுள்ளது.
தமிழகத்தின் முக்கிய மாபெரும் இயக்கங்களான திராவிட இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் காங்கிரசும் இப்படுகொலைகளுடன் நேரடியாகத் தொடர்பு படுகின்றன. காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்களும் அடக்குமுறையாளர்களுமான நிலப் பிரபுக்களுக்கெதிராக இடது சாரிக் கட்சிகளுடன் இணைந்து நடத்திய கூலித் தொழிலார்களின் போராட்டமானது ஆளும் திராவிட கட்சிகளின் காட்டிக் கொடுப்புக்களினூடே ஒரு படுகொலையில் முடிவடைகின்றது. இந்த சம்பவம் குறித்து இதுவரை வரலாற்றுப் புனைவுகளாகவும் அபுனைவுகளாகவும் பல்வேறு நூல்களும் ஆவணங்களும் வெளிவந்துள்ளன. தொடர்ந்தும் வெளிவந்த வண்ணம் உள்ளன. இவற்றில் முதலாவதாக வந்த படைப்பாக இந்திரா பார்த்த சாரதி எழுதிய ‘குருதிப்புனல்’ நாவல் விளங்குகின்றது. இதற்கு எதிராகவும் ஆதரவாகவும் அன்று பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருந்ததை நாம் மறந்து விட முடியாது. அதன் பின் செங்கொடி இயக்கத்தைச் சேர்ந்த சோலை சுந்தரம்பெருமாள் எழுதிய ‘செந்நெல்’ நாவலும் பாட்டாளி எழுதிய ‘கீழைத்தீ’ நாவலும் இவ்வரலாற்றினை மிகக் காத்திரமாக பதிவு செய்துள்ளன. ‘அரை நூற்றாண்டுக் கொடுங்கனவு – கீழ் வெண்மணிக் குறிப்புக்கள்’ என்ற செ.சண்முகசுந்தரத்தின் நூலும் இவ்வரலாற்றின் மிக முக்கியமான பதிவுகளை ஆவணங்கலாகத் தொகுத்துச் செல்கின்றது. இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னெடுப்புடன் பாரதி கிருஷ்ணகுமாரின் இயக்கத்தில் உருவாகிய ‘ராமையாவின் குடிசை’ என்ற ஆவணப்படமானது இப்பிரச்சினையை உலகெங்கிலும் எடுத்துச் சென்ற ஒரு ஆவணமாகத் திகழ்கின்றது. இது தவிர பல ஆளுமைகளின் வரலாறுகளிலும் பல்வேறு விதமான வரலாற்று ஆவணங்களிலும் கீழ்வெண்மணிச் சம்பவமானது மறைக்க முடியாதபடி உள் நுழைந்தது உலகின் மனச்சாட்சியினைத் தொடர்ந்தும் துன்புறுத்திக் கொண்டேயிருக்கின்றது. இப்பொழுது இறுதியாக மீனா கந்தசாமி எழுதிய இந்த ‘குறத்தியம்மன்’ நூலும் எமது கையில் கிடைத்து, நடந்து முடிந்த ஒரு கொடுங்கனவினை இன்னமும் எமக்கு ஞாபகம் ஊட்டிச் செல்கின்றது.
இன்று வாக்குமூலங்களின் மூலம் உருவாக்கப்படும் பிரதிகள் உலகளவில் மிகவும் பிரசித்தம் பெற்றவையாக இருக்கின்றன. இவ்வடிவில் இன்று ஆப்பிரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் எண்ணற்ற பிரதிகள் உருவாகி உள்ளன. மக்களின் வாக்கு மூலங்களை அதாவது நடைபெற்ற ஒரு சம்பவம் அல்லது ஒரு வரலாறு குறித்த அவர்களது சாட்சியங்களின் மூலமாக மட்டுமே கதையினை நகர்த்துவது என்பது ஒரு புதிய வகை உத்தி. மீனா கந்தசாமியும் இவ்வகையில் புனைவுகளிற்கு அதிக இடம் கொடாமல் கட்சி அறிக்கைகள், கடிதங்கள், பொலிஸ் றிப்போட்டுகள், வாக்கு மூலங்கள் என மிக நவீனமான முறையில் இந்நாவலினை நகர்த்திச் செல்கிறார்.
அணங்கு பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்ட இந்நூலானது நான்கு பாகங்களாக 235 பக்கங்களைக் கொண்டுள்ளது. இந்நாவலின் ஆரம்பமே இப்படுகொலைகளின் சூத்திரதாரியும் மக்கள் விரோதியுமான நெல் உற்பத்தியாளர் சங்கத் தலைவன் கோபாலகிருஷ்ண நாயுடு மாநில முதல்வருக்கு கம்யூனிஸ்ட் கட்சிக் காரரிடம் இருந்தும் விவசாய கூலித் தொழிலார்களிடமிருந்தும் பாதுகாப்புக் கோரி எழுதும் கடிதம் ஒன்றுடன் ஆரம்பமாகின்றது. அதன் பின்னர் கதை 16ம் நூற்றாண்டு போர்த்துக்கீயர் காலத்திற்கு செல்கின்றது. கூடவே கொடூரம் நிறைந்த நாட்டார் கதை ஒன்று குறுக்கிடுகின்றது. அதன் பின்பு மார்க்சிஸ்ட் கட்சியின் துண்டறிக்கை ஒன்று உள்ளே வருகின்றது. பின்பு சம்பவங்கள் வருகின்றன. அது குறித்த மக்களின் வாக்கு மூலங்கள் வருகின்றன. உண்மையில் மிகச் சிறந்த உத்திகளுடன் பின் நவீனத்துவ சாயலுடன் ஒரு எழுச்சி மிகுந்த முற்றிலும் இடதுசாரிப் பின்னணி கொண்ட ஒரு நாவலினை மீனா கந்தசாமி ஒரு உன்னதமான இலக்கியத் தளத்தில் படைப்பாக்கம் செய்துள்ளார்.
நாவலெங்கும் ஆசிரியர் திராவிட கட்சிகள மீதும் இயக்கங்கள் மேலும் மிகக் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கிறார். இக் கொடூர சம்பவம் நடக்கும் போது அப்போது முதல்வராக இருந்த அண்ணாதுரை அவர்கள் நோய் வாய்பட்டிருந்ததையும் அது நடந்த ஒரு சில மாதங்களின் பின்பு அவர் உயிர் துறந்ததினையும் ஒப்புக் கொள்ளும் ஆசிரியர், ‘மக்கள் இதனை மின்னலைக் கண்ணால கண்டது போல மறந்து விட வேண்டும்’ என்று அவர் எதுகை மோனையுடன் வெளியிட்ட கருத்தினை கேலி செய்கிறார். அத்துடன் சில வருடங்களுக்கு முன் அண்ணாதுரை அவர்கள் பல சேரி மக்களின் உயிர்களைக் காவு கொண்டவரும், பல அப்பாவிப் பெண்களை வல்லுறவு புரிந்து நாசம் செய்தவனுமாகிய வெங்கடங்கால் நாயுடுவின் சிலையைத் திறந்து வைத்த கொடுமையினைக் குறிப்பிடுகிறார். ‘கம்யூனிஸ்டுகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம்’ என்று அறைகூவல் விடுத்த கலைஞர் கருணாநிதியின் துரோகத்தினை அம்பலப்படுத்துகிறார். தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும் கொடுமைகளுக்கு எதிராகவும் பல வருடக் கணக்காக போராடி ஈற்றில் பலத்த உயிர் இழப்புக்களையும் உடைமைகளையும் மக்கள் இழந்து தவிக்கும்போது அயலூரில் எம்ஜியார் அவர்களின் ‘விவசாயி’ படம் திரையிடப் பட்டுக் கொண்டிருந்ததினை அவர் மிகவும் கேலியாக குறிப்பிடுகின்றார். விவசாயி படம் குறித்து மீனா குறிப்பிடும் கீழ் வரும் வரிகள் எம்ஜியார் சினிமாவின் கபட நாடகத் தன்மையை தோலுரித்துக் காட்டுகின்றது. “தமிழ்ப் பெண்களின் தாய்மை உணர்வைப் பொங்க வைக்கும் கதாநாயகன் இரண்டரை மணி நேரத்தில் எல்லா அதிசயங்களையும் செய்கிறார். லிப்ஸ்டிக் போட்டு குட்டை பாவாடை அணிந்த திமிர் பிடித்த பெண்ணை திருத்துகிறார். பலவிதமான நெல்லைக் கண்டு பிடிக்கும் லேபரேட்டரி நடாத்துகிறார். டிராக்டரை ரிப்பேர் செய்கிறார். சண்டைகளை தீர்த்து வைக்கிறார். தன் பண்ணையில் அதிகமாக விளைந்த நெல்லை அரசாங்கத்திடம் ஒப்படைக்கிறார். திமிர் பிடித்த ஒரு பெண்ணை கூலி விவசாயிடம் இருந்து காப்பாற்றுகிறார். அப்பாவின் உயிரைக் காப்பாற்றுகிறார். அப்பாவைக் கொலை செய்ய வந்தவனின் உயிரையும் காப்பாற்றுகிறார். தனக்கு துரோகம் செய்தவர்கள் விரோதிகள் அனைவரையும் மன்னித்து விடுகிறார். அபாரமாகச் சண்டை போடுகிறார். விவசாயிகளின் பெருமையைப் பாடலாகப் பாடுகிறார்.”. இந்தக் கொடிய துயரத்திலும் சிரிப்பினை வரவழைக்கும் விடயம் இது. எம்ஜியார் திரையில் இவையனைத்துயும் நடாத்திக் கொண்டிருக்கும்போது உள்ளூரிலோ போராட்டத்திற்கு தலைமை வகிக்கும் விவசாய கூலித் தொழிலாளி ஒருவன் அடித்துக் கொலை செய்யப்படுகிறான். கூலி உயர்வு கேட்டதற்காக அவர்கள் குடிசைகள் எரியூட்டப்படுகின்றன. அவர்கள் சட்டி பானைகள் அடித்து நொறுக்கப் படுகின்றன. பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்படுகின்றனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்கள் பட்டினி வாழ்க்கைக்கு உட்படுத்தப் படுகின்றனர். போராடுபவர்களை காவல்துறை பாய் வழக்கு போட்டு உள்ளே தள்ளுகின்றது. துப்பாக்கிச் சூடும் தடியடியும் அவர்கள் தினசரி வாழ்க்கை ஆகின்றது. இறுதியில் குடிசையோன்றினில் பூட்டி வைக்கப்பட்டு குழந்தைகளும் பெண்களுமாக உயிரோடு எரித்துக் கொலை செய்யப் படுகின்றனர். ஆனால் எம்ஜியார் இவை எதனையும் சட்டை செய்யாமல் திரையில் விவசாயிகளின் பெருமைகளை மட்டும் பாடலாகப் பாடிக் கொண்டிருக்கிறார். அப்போது நடைபெற்றுக்கொண்டிருந்த ஆளும் திமுக கட்சியின் மிக முக்கியமான ஒரு உறுப்பினர் அவர் என்பதினையும் இங்கு குறிப்பிடுவது அவசியம்.
இந்நாவல் குறித்தும் மீனா கந்த சாமி குறித்தும் எழுந்த அதிகமான விமர்சங்களும் சர்ச்சைகளும் எதிர்வினைகளும் அவர் பெரியார் குறித்து இந்நாவலில் குறிப்பிட்ட கருத்துக்களை குறித்தே வந்திருந்தன. “தொண்ணூறு வயதனா அவருக்கு நடந்ததோட பயங்கரம் புரியல. காந்தி கொலை செய்யப்பட்டதோட இந்த சம்பவத்தை இணைச்சுப் பேசினார்.” என்று குறிப்பிடும் ஆசிரியர் “நாகப்பட்டினத்திற்கு வந்த பெரியார் ஒரு பள்ளிக் கூடக் கட்டிடத்தில் மக்களைச் சந்தித்துப் பேசும்போது கோபாலகிருஷ்ண நாயுடுவும் அவரைச் சந்தித்துப்பேசிய செய்தியைக் கேட்ட பொது நாங்கள் மனமுடைந்து போனோம்” என்று குறிப்பிட்டபோது பெரியாரிஸ்டுகள் அனைவரும் வெகுண்டெழுந்தார்கள். அது பொய் என்பதாகக் கூறி இன்னமும் ஆதரங்களை தேடிய வண்ணம் உள்ளார்கள். ஆயினும் “தேர்தல் அரசியலில் இல்லாத சுயமரியாதை இயக்க கருஞ் சட்டை காரர்கள் கூட கம்யூனிசத்தைப் பல மூட நம்பிக்கைகளில் ஒன்று என்பது போலவே பார்க்கின்றனர். கிழக்குத் தஞ்சை பகுதியில் பள்ளர், பறையர் என ஒடுக்கப்பட்ட சாதி மக்கள்தான் கட்சியினைக் காத்து வந்தனர்” என்ற ஆசிரியரின் வரிகளிற்கு இன்றுவரை அவர்களிடமிருந்து காத்திரமான பதிலேதும் இல்லை.
இந்தப் போராட்டத்தை முன்னெடுத்த கம்யூனிஸ்ட் கட்சியினரையும் இவர் விட்டு வைக்கவில்லை. அவர்களது தவறுகள், துரோகங்கள் என்பனவற்றுடன் பாராளுமன்றப் பாதையைத் தெரிவு செய்த அவர்கள் போராட்டப் பாதைகளில் ஏற்படுத்திய சறுக்கல்களையும் விலாவாரியாக விபரித்துச் செல்கிறார். ஆயினும் கம்யூனிஸ்ட் கட்சி குறித்த அவரது நம்பிக்கையும் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வின் மீது ஏற்படுத்திய மறுமலர்ச்சி குறித்தும் நூலெங்கிலும் அவர் பக்கத்திற்கு பக்கம் விபரித்துச் செல்கிறார். “மக்களுக்காகப் பாடுபட்டவர்கள் யார். விடியும் முன் தொடங்கி இருட்டும் வரை வேலை செய்ய வேண்டும் என்ற பழைய வழக்கத்தை மாற்றி விவசாயத் தொழிலார்களின் வேலை நேரத்தை காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை என குறைக்கப் போராடியவர்கள் யார்? விவசாயத் தொழிலாளர்களுக்கும் விடுமுறை வேண்டும் என முதன் முதலில் போராடி வெற்றி கண்டது கம்யூனிஸ்ட் கட்சிதான்.” – மீனா கந்தசாமியின் கருத்துடன் நாமும் உடன்பட்டேயாக வேண்டும். ஏனெனில் அது மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
மிக அண்மையில் தமிழில் வெளி வந்த நாவல்களில் ஒரு முக்கியமான நாவல் இது. காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் காலா காலமாக இடம்பெற்ற நில உடைமையாளர்களின் அடக்குமுறைகளுக்கு எதிராக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் போராடிய ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரு போராட்டமானது திராவிடக் கட்சிகளின் துரோகங்களினால் எப்படி வீழ்த்தப்பட்டது என்ற ஒரு போராட்ட வரலாற்றை கூறும் இந்நாவலானது, இனி வருங் காலங்களில் வரலாற்று நாவல்கள் எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கும் எப்படி படைக்கப்பட வேண்டும் என்பதற்கும் உதாரணமாக விளங்குகின்றது. மீனா கந்தசாமி தொடர்ந்தும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் அதிகாரங்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகவும் தனது படைப்புக்களை முன் வைப்பார் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.