கவிஞனின் கால்கள் மண்ணில் நடமாடினாலும் அவன் உள்ளம் வானில் பறக்கவேண்டும் என்றார் கவிஞர் தாகூர். அதனாலேயே இலக்கியமும் உலகளாவிய பண்பு கொண்டதாக அமைந்திருக்கிறது. வட்டாரம், தேசம்; தாண்டி பல்கலாசாரத்தினது அனுபவங்களையும் அது கொண்டு வந்து சேர்க்கிறது.
கவிஞர் கவி கலியின் “பனிவிழும் தேசத்தில் எரிமலை” என்ற கவிதைத்தொகுப்பு அவரின் இரண்டாவது நூலாகும். கவிஞர் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் அவரின் உள்ளம் தாயகத்தின் மீது நம்பிக்கையுடன் சஞ்சரித்தவண்ணமே உள்ளது.
ஆறறிவு படைத்த மனிதர்களால் வியக்கத்தக்க பல செயல்களைச் செய்ய முடிந்திருக்கிறது. அச்செயல்கள் இந்த உலகெங்கும் பரந்து விரிந்து பலருக்கு அதிசயத்தையும் வியப்பையும் தருகின்றன. உலகப்போரை நிகழ்த்தி மனிதர்களை அழிவுக்குத் தள்ளியவனும் மனிதன்தான். பூமியதிர்ச்சியிலிருந்தும் கடல்கோள்களிலிருந்தும் நோய்களிலிருந்தும் அல்லற்பட்டவர்களை மீட்டெடுத்தவனும் மனிதன்தான். இவையெல்லாவற்றுக்கும் காரணம் மனிதர்களின் அகமும் புறமும் விரவிய எண்ணங்கள்தான்.
அந்த எண்ணங்களின் செயல்வடிவங்கள் இந்த உலகுக்கு, பல செய்திகளைக் கூறுகின்றன. ஒரு விதத்தில் அனுபவத்தின் தொற்றுதல்களுக்கு அவை வழிவகுக்கின்றன. கலைப்படைப்புக்களும் இவ்வாறானவையே. கலைகள் மனிதர்களின் பல்வேறு உணர்வுகளுக்கும் வெளிப்பாடுகளுக்கும் செயல்வடிவம் கொடுக்கின்றன. அழகிய பண்பாட்டுக் கருவூலமாகத் திகழும் ஒரு சிலையைச் செதுக்குபவனும் கலைஞன்தான். கவிதையை வடிப்பவனும் கலைஞன்தான்.
புராண இதிகாசங்கள் கற்பித்தவைபோல் இந்த உலகை உற்றுநோக்கும் படைப்பாளிகளும் மூன்றாவதுகண் உடையவர்கள்தான். அவர்கள் தங்கள் அகக்கண்ணால் தம்மையும், சார்ந்த சூழலையும், உலகையும்கூட உற்றுநோக்குகின்றனர். வாழ்வின் ஏற்ற இறக்கங்களையும் நோக்குகின்றனர். அப்போது அவை மொழிவடிவம் பெற்றுக் கவிதைக் கலைப்படைப்புகளாகின்றன.
கவிதைகள் எப்போதும் நான்குவிதமாக செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன. கவிதை ஒரு அனுபவத்தைத் தருகிறது. அது உலகளாவிய தன்மையைக் கொண்டிருக்கிறது. அடுத்து, அரசியற்தன்மையைக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, பண்படுத்தும் ஒருமைப்பண்பைக் கொண்டிருக்கிறது. இவை எல்லாப் படைப்புக்களிலும் ஒரே அளவில் இருக்கும் என எதிர்பார்க்கமுடியாது. கருத்தியல், மனநிலை, இரசனை ஆகியவற்றுக்கும் ஏற்ப வாசகர்களிடமும் இவற்றைப் புரிந்து கொள்வதில் வித்தியாசம் இருக்கக்கூடும்.
கவிஞர் கவி கலியும் இந்த மனிதர்களில் ஒருவராகி, தான் வாழும் வாழ்க்கையினையும் தன் வாழ்வில் எதிர்கொண்ட அனுபவங்களையும் மனித வாழ்வுக்கு முரணான கோலங்களையும் இங்கே கவிதைகளாக முன்வைத்திருக்கிறார். இக்கவிதைகளுக்குள் அவர் சமூகத்தைப் பார்க்கும் பார்வை தெரிகிறது. வாழ்வை நேசிக்கும் ஒரு மனிதனின் விருப்பம் தெரிகிறது. சாதாரண மனிதர்களின் வாழ்வைச் சீர்குலைக்கும் அதிகாரத்தின் மீதான கோபம் கொப்பளிக்கிறது.
தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து பனிவிழும் தேசத்தில் வாழும் ஒருவன் நிலம், காலநிலை, மொழி, கலாசாரம் ஆகியவற்றால் முற்றும் மாறுபட்ட வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு மற்றவர்களின் துன்பங்களையும் கண்கொண்டு பார்க்கிறான்.
இத்தொகுப்பில் சமூகத்தாலும் உலகத்தாலும் எதிர்கொள்ளும் பல்வேறு அக - புற நெருக்கடிகளையும் மாறிக்கொண்டிருக்கும் உலகத்தின் பண்பாட்டுக்கோலங்களையும் தான் கற்றுக்கொண்ட அனுபவங்களின் ஊடாக கவிஞர் எடுத்துக்காட்டுகிறார். வறுமை, இயலாமை, போலிஉறவு, போலிவாழ்வு, காழ்ப்புணர்வு, பகட்டு, எள்ளல், நம்பிக்கைத் துரோகம், ஏமாற்றுவித்தை முதலான வாழ்வின் பல்வேறு பக்கங்களையும் நோக்குகிறார்.
தமிழர்தாம் சிதைந்துபோன வாழ்வு, தமிழர்களின் சமூகவாழ்வில் சீரழிவைத்தரும் போலியான வாழ்வு, அதிகாரம் மிக்கவர்கள் மக்களை ஆட்டுவிக்கும் வாழ்க்கை நெருக்கடிகள், உலகமயமாக்கற் போக்குக்கு ஏற்ப அதற்குள் அமிழ்ந்து போகும் எம்மவரின் வாழ்வு அதிகமும் இக்கவிதைகளின் பேசுபொருள்களாகியுள்ளன.
தனிமனித வாழ்வில் மற்றவர்களின் அந்தரங்கத்தில் மூக்கை நுழைப்பவர்கள் தமது வாழ்வின் சீரழிவுக்கான காரணத்தைத் தேடாது மற்றவரைப் புறங்கூறுவதிலும் ஏளனம் செய்வதிலும் காலத்தைப் போக்கிக் கொண்டிருப்பர். அவர்கள் “நெற்றிக்கண் நக்கீரர்களாய் உற்று நோக்கியே சீற்றம் கொள்வார்.”என்று நெற்றிக்கண் என்ற கவிதையில்; கூறுகிறார்.
“தாய்ப்பரிவு இல்லாத குழந்தை
மேய்ப்பன் இல்லாத மந்தைகள்
காய்ப்பதை நிறுத்திய மரம்
தூய்மை தேடுகின்ற மொழி
வாய்மை இல்லாத் தீர்ப்பு”
என்று “மேய்ப்பன் இல்லா மந்தைகள்” என்ற கவிதையில் தமிழரின் இன்றைய அரசியற் பங்களிப்பை, திசையழிந்து போன நிலையாகப் பார்க்கிறார். மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கத் தெரியாதவர்கள் வெளிவேசம் போடுவதையும் கதிரைகளுக்குக் காத்திருப்பதையும் காட்டுகிறார். கடந்து போன அரசியல் வாழ்வில் ஏற்பட்ட தவறுகள், தொடர்ந்து கொண்டிருக்கும் ஏமாற்று வித்தைகள் எல்லாம் எங்கள் மக்களை வாழ்வின் விளிம்புக்கே நகர்த்திக் கொண்டிருக்கின்றன என்கிறார்.
“கள்ளச் சமாதானம்
கபடக் கைகுலுக்கல்
வெள்ளைப் புறாக்களைச்
சுதந்திரமாகக் பறக்கவிட்டு
சிறகுடைக்கும் சமூகம்”
என கவிதையொன்றில் எடுத்துக்காட்டுகிறார். மக்கள் தம் சமகால வாழ்க்கையில் தொலைத்துவிட்ட உண்மையான வாழ்க்கையைக் கவிஞர் தேடுகிறார். இதனை, “பற்றுள்ள பக்தி” என்ற கவிதை காட்டுகிறது, “பிரிவும் இணைவும்” என்ற கவிதை கதியற்றுக் கலங்கிய காலங்களில் பிள்ளைகளைத் தத்தெடுத்து அவர்களை ஆளாக்கிய நல்ல எண்ணத்தைச் சொல்கிறது.
“தரம்பிரித்து” என்ற கவிதையில் ஈழத்து மக்களின் சமூக வாழ்வில் புரையோடிப்போயிருக்கும் தீண்டாமைக்கு எதிரான குரலைப் பதிவுசெய்கிறார்.
“உலகமயமாக்கல்” என்ற கவிதை மனிதர்களின் சுயத்தையும் சுதேசிய இனங்களின் வாழ்வையும் கொள்ளையடிக்கும் முதலாளித்துவ உலகின் சுரண்டலைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
“உன்னால் கையெழுத்து மறந்தோம்
கணனி நீயே எம் கதி
உன்னால் மனக்கணக்கு மறந்தோம்.
பயணம் செய்யும் வாகனங்களில்
பாதை காட்டிக் கருவியால்
ஞாபகசக்தி இழந்தோம்.
கைத்தொலைபேசியால்
நடந்து செல்லும் பாதையில்
நிதானம் இழந்தோம்.
ஒருவனிடம் மட்டும்
குவிந்து கிடக்கிறது
விஞ்ஞான அறிவுத்திறன்.”
இயந்திரமயமான - அறிவியல் மயமான இன்றைய உலகில் அதிகமும் உடல் உழைப்புக் குறைந்து மூளை உழைப்பையே பலரும் வேண்டி நிற்பதால், அதிகமான மனிதர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி, குறுகிய காலத்திலேயே தம் வாழ்வில் பல துன்பங்களை எதிர்கொள்கின்றனர்.
மேலைத்தேய வாழ்க்கை முறையினையும் தனது கவிதை வரிகளில் ஒப்பிட்டுக் காட்டுகிறார். அங்கு மனிதநேயமும் இருக்கிறது, போலி வாழ்வும் இருக்கிறது, காழ்ப்புணர்வும் இருக்கிறது. இவையெல்லாம் ஒன்று சேர்ந்த மனிதர்களின் மத்தியில்தான் நாங்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.
வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் காணாமற்போன கதைகள், முரண்பாடுகளினால் ஏற்பட்ட இழப்புக்கள், அதிகாரத்தின் பேரால் ஏற்பட்ட அடக்குமுறைகள் முதலான போருக்கு முன்னரான வாழ்வு குறித்த கவிதைகளும் உள்ளடங்கியுள்ளன.
வெற்றி, மேய்ப்பன் இல்லா மந்தைகள், மனித மாமிசம், பற்றுள்ள பக்தி, பிரிவும் இணைவும், உலகமயமாக்கல், ஆடிப்பாடி வேலை செய்தால், அனர்த்தங்களுக்கான, அறிவியலும் அழிவியலும், தரம் பிரித்து முதலான தலைப்புக்களில் அமைந்தவை மேலான அனுபவங்களைத் தந்து படிப்போரை ஈர்க்கக்கூடிய கவிதைகளாக உள்ளன.
கவிதைமொழி எப்போதும் பிறரைத் தூண்டி இணங்க வைத்தலில் ஆற்றல் கொண்டதென கூறுவர். அதற்கேற்ப கவிஞரின் கவிதை மொழி அமைந்திருக்கிறது.
சாதாரண மனிதர்கள் எந்தப் பூடகங்களும் இன்றிப் புரிந்து கொள்ளக்கூடிய எளிமையான நடையில் தனது கவிதையைத் தந்தமையும், சமூகத்தின் மத்தியில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் பலவற்றைத் தனது கவிதைகளுக்குக் கருவாக எடுத்தாண்டமையும் கவிஞரின் முதன்மையான நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளன.
சொற்களின் சிக்கனத்தாலும் கட்டிறுக்கமாக மொழியினாலும் சொல்முறை நேர்த்தியாலும் கவிதையனுபவத்தை மேலும் மேலும் சாத்தியமாக்க முடியும். கவிஞரின் முயற்சிகள் தொடரவேண்டும். வாழ்த்துக்கள்.
kuneswaran@gmail.com