பூங்காவனம் கலை இலக்கிய சமூக சஞ்சிகையின் 30 ஆவது இதழ் வெளிவந்திருக்கிறது. பிரபல எழுத்தாளரும் உளவளத் துணையாளருமான திருமதி. கோகிலா மகேந்திரனின் முன் அட்டைப் படத்துடன் வெளிவந்திருக்கும் இவ்விதழில் வழமை போன்று நேர்காணல், கவிதை, சிறுகதை, கட்டுரை, நூலகப் பூங்கா போன்ற பிரதான அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
பூங்காவனம் இதழ் மூத்த எழுத்தாளர்கள், சாதனையாளர்கள் என பிரபலமானவர்களது நேர்காணலுடன் வெளிவருவது அதன் சிறப்பம்சமாகும். அந்த வகையில் இவ்விதழில் திருமதி. கோகிலா மகேந்திரன் தனது இலக்கிய அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
திருமதி. கோகிலா மகேந்திரன் யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் சிவசுப்பிரமணியம் - செல்லமுத்து தம்பதியருக்கு மகளாகப் பிறந்தவர். தந்தை தமிழாசிரியர், அதிபராகப் பணி புரிந்தவர். தனது ஆரம்பக் கல்வியை கிராம பள்ளிக்கூடத்தில் கற்ற கோகிலா மகேந்திரன் இடைநிலை மற்றும் உயர் நிலைக் கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் பெற்றுக் கொண்டார். 1974 இல் விஞ்ஞான ஆசிரியையாக நியமனம் பெற்று 1989 இல் அதிபரானார். 1999 முதல் வலிகாமம் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகக் கடமை புரிந்ததோடு இடையில் விஞ்ஞான பாடச் சேவைக் கால ஆலோசகராகவும், விரிவுரையாளராகவும், கடமையாற்றியிருக்கிறார். பாடசாலைக் காலத்திலேயே இலக்கியம் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்த இவருக்கு அக்கால அறிஞர்களும் வித்துவான்களும் பக்க பலமாக இருந்திருக்கின்றார்கள்.
இதுவரை 02 நாவல்களையும், 07 சிறுகதைத் தொகுதிகளையும், 03 நாடகத் தொகுதிகளையும், 01 விஞ்ஞானப் புனை கதை நூலையும், 04 தனிமனித ஆளுமை நூல்களையும் 11 உளவியல் நூல்களையும், 01 பெண்ணிய உளவியல் நூலையும் 01 புனைவு இலக்கிய நூலையும் வெளியிட்டுள்ளார். நீண்ட கால எழுத்தனுபவம் கொண்ட இவருக்கு இலக்கிய வித்தகர், கலைச்சுடர், சமூக திலகம், கலைப் பிரவாகம் என்ற கௌரவப் பட்டங்களும் பல விருதுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.
பூங்காவனம் இதழ் 30 இல் பதுளை பாஹிரா, மருதூர் ஜமால்தீன், எம்.எஸ்.எம். சப்ரி, எஸ். முத்துமீரான், ஆ. முல்லைதிவ்யன், சந்திரன் விவேகரன், சப்னா செய்னுல் ஆப்தீன், பூகொடையூர் அஸ்மா பேகம், வெலிப்பன்னை அத்தாஸ், என். சந்திரசேகரன், கிண்ணியா ஜெனீரா ஹைருல் அமான், தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா ஆகியோரது கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.
சூசை எட்வேர்ட், ஏ.சீ. ஜரீனா முஸ்தபா, எஸ்.ஆர். பாலசந்திரன் ஆகியோர் எழுதிய மூன்று சிறுகதைகளும், கா. தவபாலனின் குறுங்கதை ஒன்றும் காணப்படுகின்றது. கவிஞர் ஏ. இக்பால், கா. விசயரத்தினம், பேருவளை றபீக் மொஹிடீன் ஆகியோரின் கட்டுரைகளோடு காத்தன்குடி நுஸ்கி இக்பால் எழுதிய விடியல் உனக்காக என்ற நூலுக்காக ரிம்ஸா முஹம்மத் எழுதிய நூல் மதிப்பீட்டுரையும் காணப்படுகின்றது. அத்தோடு நூலகப் பூங்காவிலே பதினொரு நூல்கள் பற்றிய விபரங்கள் தரப்பட்டுள்ளன.
மொத்தத்தில் சிறப்பானதொரு பூங்காவனத்தில் உலவிய திருப்தி ஏற்படுகின்றது!!!
சஞ்சிகை - பூங்காவனம்
பிரதம ஆசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி - 0775009222
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 100 ரூபாய்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.