“கவிதை என்பது உயர்ந்த உணர்விலே தோன்ற உண்மையான அமைதியில் உண்டாவது” என்றார் வோர்ட்ஸ்வொர்த். எமது வாழ்வில் எத்தனையோ உணர்வுகள் தோன்றுகின்றன. சில சம்பவங்களுக்காகக் கோபப்படுகிறோம். சிலவேளைகளில் துக்கப்படுகிறோம். இன்னும் சிலவற்றுக்காக மகிழ்ச்சிக்கடலில் தத்தளிக்கிறோம். ஆனால் எல்லாமே கவிதையாவதில்லை. அந்த உணர்வுகள் அமைதியில் கலந்து மொழியாகும்போதே கவிதையாகின்றன. இளங்கவி சிவசேகரனும் தன் வாழ்க்கை அனுபவங்களையும் கனவுகளையும் தாங்கிக் கொண்டு “மட்டைவேலிக்குள் தாவும் மனசு” கவிதைகளோடு வந்திருக்கிறான். இக்கவிதைகளில் அவன் மகிழ்ந்த காலங்கள் உள்ளன. துக்கப்பட்ட காலங்கள் உள்ளன. இன்னமும் ஈடேறாத வாழ்க்கை முரண்கள் உள்ளன.
ஒரு சிறந்த கவிதையானது வாழ்வில் இன்பமும் துன்பமும் சேர்ந்த அனுபவங்களை மட்டுமல்லாமல் வாழ்வில் ஏற்படுகின்ற விலகல்களின் இடைவெளிகளையும் சொல்லநினைப்பது.
இளங்கவி சிவசேகரன், மக்கள் போரும் வாழ்வும் அலைக்கழிப்புமாக வாழ்ந்த காலங்களைத் தரிசித்திருக்கிறான். எப்போது இந்த வாழ்வு முழுமை பெறும் என்ற எதிர்ப்பார்ப்புடனேயே வாழ்ந்து வரும் மாந்தர்கள் போலவே அவனின் கிராம மாந்தர்களும் எப்போதும் நிரப்படாத வாழ்க்கை இடைவெளிகளுடனேயே கடந்து கொண்டிருக்கிறாhர்கள். அவ்வாறான வாழ்க்கைப் பின்னணியிலிருந்து வரும் கவிஞனிடமும் சொல்வதற்கு ஏராளம் வார்த்தைகள் உள்ளன.
இத்தொகுப்பிலும் தான் வாழ்ந்த கிராம, குடும்ப உறவின் அன்பையும் அரவணைப்பையும் மீட்டுப் பார்க்கின்ற அதேவேளை; காலம் மனிதர்களிடம் ஏற்படுத்திய வடுக்களையும் இன்னமும் தீர்க்;கப்படாத மனிதர்களின் வாழ்வின் பற்றாக்குறைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்;.
“இனிமேல் ஒன்றுமில்லை என்றெண்ணி
கண்ணீர் விடும் தருணங்களில்
ஏதோ ஒரு ரூபத்தில்
மனவயலுக்குள் முளைதள்ள
எத்தணித்துத் தோற்றுப்போகின்றன
வெட்கம் கெட்ட ஆசை விதைகள்”
(பசுமை தொலைத்த மரம்)
“ஆண்டுகள் பலவாய்
நிமிர்ந்து நிற்கத் தெம்பின்றி
கூனாகிப் போன முதுகு
கொஞ்சம் நிமிரப் பார்க்கும்”
(எழுநூற்றிமுப்பது ரூபாய் மட்டும்)
சமூக விமர்சனமும் சமூக நோக்கும், கழிந்து கொண்டிருக்கும் காலங்களில் மக்கள் எதிர்கொள்ளும் உடல் - உள நெருக்கடிகளையும், கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடிக்கப்பட்டுக் கொண்டுவரும் அன்பும் அழகும் நிறைந்த தமிழர் வாழ்வையும் எடுத்துக்காட்டுகின்றன.
என்னை அதிகம் ஈர்த்தது, இவரின் இளமைப்பராய வாழ்வில் மறக்கமுடியாது நெஞ்சில் ஒட்டிக் கொண்டிருக்கும் நினைவு மீட்டல் கவிதைகளாகும். அழகான கிராமிய வாழ்வையும் மிக எளிய சொற்களில் படம்பிடித்துக் காட்டும் அற்புதம் ரசிக்கத்தக்கது. இன்று இந்த வாழ்வு மறைந்து போய்க் கொண்டிருக்கிறது.
“இன்னமும் நாக்கிலிருந்து அகலவில்லை
பள்ளிவிட்டு வரும்போது
அப்பா வாங்கிக் கொடுக்கும்
மிட்டாய் ரொபியின் இனிப்பு”
(எப்படி மறக்கமுடியும் என்னால்)
“கிடுகு ஊறப்போடும்
சின்னக் குட்டையில்
குளியல்போட்ட காகங்கள்
மட்டைக்குள் ஒவ்வொன்றாய் அமர்ந்து
சிறகை விரித்துப் பிடித்து
ஒற்றைக் காலால் தலை துவட்டும்”
(மட்டை வேலிக்குள் தாவும் மனசு)
சிறிய கவிதைகள் ஒருவகையில் சமூக விமர்சனம் சார்ந்தவையாகவே அமைந்துள்ளன. ஹைக்கூ அமைப்பில் அமைந்த கவிதைகள், குட்டிக் கவிதைகள், தலைப்பில்லாத கவிதைகள் ஆகியவையே அவை. எம்மைச் சுற்றிய வாழ்வில் ஏற்படுகின்ற வேதனைகளும் தீர்க்கப்படாத பிரச்சினைகளும் அவ்வாறான கேள்வியை ஏற்படுத்துகின்றன.
“ஞானம் தரும்
போதி மரங்களெல்லாம்
தனிமையில் நின்று தள்ளாடியபடி
நிழல் கொடுக்கின்றன
முதியோர் இல்லங்களில்”
(தலைப்பில்லாத கவிதைகள் - 1)
“உயிரைப் பறித்தது மண்ணாசை
கலப்பையில் வெட்டுண்டது மண்புழு”
(ஹைக்கூ கவிதைகள் - 2)
பேச்சுவழக்கு மொழியை அப்படியே இரண்டு கவிதைகளில் எடுத்தாள்கிறார். அபலைத்தாயின் வேண்டுதல், மாங்காய்ச் சுண்டலும் தும்பு முட்டாசியும் ஆகிய இரண்டும் மொழிதலில் வித்தியாசத்தை வேண்டிநிற்கின்றன.
உறவுகளின் வாழ்வின் ஊடாக கடந்து வந்த நினைவுகளை மீட்டுப் பார்க்கும் வாழ்வின் ஏக்கம் தெரிகிறது. சமூகத்தில் புரையோடியிருக்கும் பாரபட்சமும் புறக்கணிப்பும் இன்றைய யதார்த்தைக் காட்டுகின்றது. கடந்து சென்ற போர்ச்சூழலின் பாதிப்பு சமகாலத்திலும் மழைவிட்டும் போகாத தூறல்போல வாழ்க்கை வடுக்களைக் காட்டுகின்றன. இவ்வாறான வாழ்க்கை அனுபங்களையும் வாழ்தலில் உள்ள விருப்பையும் சிவசேகரனின் கவிதைகள் கொண்டுள்ளன.
இயல்பாக மொழியைக் கையாளும் ஆர்வமும் வித்தியாசமான பாடுபொருள்களைக் கொண்டுவரும் தீவிரமும் ஒரு தேர்ந்த கவிஞனாகத் தன்னை நிலைநிறுத்த எடுக்கும் முயற்சிகளும் இக்கவிதைகளில் தெரிகின்றன. தேடலும் பயணமும் இன்னமும் தொடரட்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.