மொழி என்பதோர் திரவிய கூடம் தாகத்தோடும் தேடலோடும் அதன் உட்புகுந்து தெரிதல் நிகழ்த்தும் ஒருவன் மொழிசார் கலைவடிவங்கள் எதையேனும் தனது படைப்புகளைத் தரும் ஒரு ஊடகமாகக் கொள்ளுதல் இயலும். அத்தகைய ஒரு தெரிதலின்போது, அவன் தனது அனுபவங்கள் மூலம் வடிவமைத்துக் கொண்ட நுண்புலனின் திறனைப் பிரயோகிக்கிறான். அந்த நேரத்தில் அவன் தெரிவு செய்கிற சொற்கள் தேர்ந்து கொள்கிற சொல்முறை வெளிப்படுத்துகிற உணர்வுகள் எல்லாம் ஒருங்கிணைந்து அவனுக்கான கலைவடிவ உருவாக்கத்தைத் தீர்மானிக்கின்றன.
மேற்சொன்ன கிரியை கவிதை படைத்தல் குறித்து நிகழ்த்தப்படும்போது, ஒவ்வொரு படைப்பாளியும் தனது படைப்பாளுமையின் வலிமையைப் பிரயோகிக்க நேர்கிறது. அது ஒரு திட்டமிட்ட பொறிமுறையுமல்ல. கவிதை படைத்தலுக்கான கணங்கள் சம்பவிக்கையில் ஒரு நுண்மையான உட்புலனுணர்வின் உந்துகை அவனது படைப்பை வெளிக்கொணர்கிறது. ஒரு குறித்த சொல் அல்லது ஒரு தொடர், ஒரு நினைவுக்கீற்று எதுவாயினும் அந்தப் படைப்பின் அடிப்படையாக அமையமுடியும். அதனை அடியொற்றி அவன் கட்டமைக்கின்ற கவிதையின் வைப்பொழுங்கு அதில் வெளிப்படுகின்ற உணர்வு அந்த உணர்வு வெளிப்படுத்தப்படுகின்ற முறைமை என்பனவெல்லாம் இணைந்து அந்தப் படைப்பின் சிறப்பைத் தீர்மானிக்கின்றன. படைப்புக்கான உந்துதல் ஒருவனைக் கவிதையில் வழிநடத்தும்போது அவனது பார்வை அங்கு பிரதானத்துவம் கொள்கிறது.
குறித்த ஒரு விடயம் பற்றிய பார்வை அல்லது அணுகுமுறை ஆளுக்காள் வேறுபட முடியும். உதாரணத்துக்கு காகக்கூட்டில் ஜனித்து, காகங்களாலேயே போஷிக்கப்பட்டு வளர்கிற ஒரு குயிற்குஞ்சு இனங்காணப்படுகின்ற தருணம், தாயென்றும் தந்தையென்றும் எண்ணிக் கொண்டிருந்த காகங்களின் வெறுப்புக்கும் கோபத்துக்கும் ஆளாகிக் கொத்தித் துரத்தப்படுகின்ற அந்தப்போதுகள்… ஒரு கலைஞனால் பார்க்கப்படுவதற்கும் சாதாரண மனிதனால் பார்க்கப்படுவதற்கும் ஒரு கவிஞனால் பார்க்கப்படுவதற்கும் இடையில் நிறைய வித்தியாசங்களிருக்கின்றன.
இத்தகைய ஒரு தவிப்பும் துயரும் சவாலும் நிரம்பிய தருணம் குறித்துத் தனது உணர்வுகளைப் பதிவு செய்ய விழையும் ஒரு கவிஞன் அற்புதமானதோர் கவிதையைப் படைத்துவிடமுடியும்.
கவிதைக்கான பொறியொன்றினை அந்த நிகழ்வினூடாகப் பெற்றுக் கொள்கிற கவிஞன் அதனை ஒரு படைப்பாகத் தருகையில் தனது படைப்பாளுமையின் ஒர் உதாரணத்தை வாசகனிடம் ஒப்படைக்கிறான்.
குறித்த ஒரு உதாரணம் மட்டும் ஒர் ஆளுமையின் ஒட்டுமொத்த எடுத்துக்காட்டாக அமையமுடியாததெனினும் அவ்வாறானவற்றின் ஒரு தொகுப்பினூடாக ஒருவர் அப்படைப்பாளியைப் பற்றிய கணிப்பீடொன்றை ஆக்கிக் கொள்ளுதல் இயலும்.
துவாரகனின் “அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்” என்னும் அவரது இரண்டாவது தொகுதி கவிதைதேடுவோரின் கவனத்தை ஈர்க்கவல்ல பல அம்சங்களைத் தன்னகத்தே கொண்டமைந்துள்ளது. அதில் அவர் கையாளுகின்ற கவிதைமொழி அதன் தொனியினூடாகவும் சொல்முறையினூடாகவும் மீளவும் மீளவும் படித்துப் பார்க்கத் தூண்டும் ஓரு தன்மையினைக் கொண்டிருக்கிறது.
தொகுப்பின் பல கவிதைகள் இந்த வாழ்வும் உலகமும் காலமும் அவரிடத்தில் தோற்றுவிக்கிற உணர்வுகளின் விளைவுகளாய், எதிரொலியின் வடிவங்களாய் விளங்குகின்றன.
யதார்த்த வாழ்வின் பொய்ம்மை கவிஞரை முகத்திலறைகிறது. மனிதர்களிடம் காணப்படுகிற கொடூரம் அதிர்ந்து திகைக்க வைக்கிறது. உலகில் காணப்படுகிற கபடமும் வேஷதாரித்தனங்களும் சினம் கொள்ள வைக்கின்றன.
ஆவலாய் ஓடிவருகிற குழந்தையைப் புறந்தள்ளி ஒதுக்கிப்போய்விடுகிற தாய்போல் ஆகிவிட்ட இந்த வாழ்வின் ஈரமின்மை துவாரகனிடத்தில் தோற்றுவிக்கிற வலி அவரது மொழியில் விரவிக் கிடக்கிறது.
‘சுடுகாட்டில் அடக்கம் செய்ய
ஆயத்தமாகிய பிணத்தின்முன்
கொள்ளிக்குடம் சுற்றிக் கொள்ளும்
உணர்வுடனே
எங்களின் காலங்கள் கழிந்துகொள்கின்றன’
கழியும் காலங்கள் கவிஞரை விரக்தியின் விளிம்புக்குத் தள்ளிவிட கோரப்பல் காட்டி முன்னால் வந்து எக்காளமிட்டுக் கொக்கரிக்கும் மரணம் அச்சுறுத்துகிற மக்களின் நிர்க்கதிநிலை கவிஞரைத் துயருறவைக்கிறது.
இதயமிழந்துபோன மனிதர்களின் கோரமான இரத்தப்பசியைச் சாடுகிறது துவாரகனின் மொழி. எள்ளளவும் துயரும் சினமும் கொண்ட அவரது மொழிகொண்டு அவர் மனச்சாட்சியற்றவர்களின் நடவடிக்கைகளைச் சாடுகிறார்.
‘அப்போது வானம் எவ்வளவு அழகாக இருந்தது’ இழந்துபோன பொற்காலங்கள் பற்றிய அனுபவங்களை நினைவு கூருகிறது. படிக்கிற எவரிடத்திலும் இழந்துபோய்விட்ட எமது கடந்தகால வாழ்வினைப் பற்றிய ஏக்கத்தை விதைத்துப் போகும் ஒரு கவிதை அது. எளிமையும் அழகும் மிகுந்த நல்லன்பு சுரக்கும் அழகிய வாழ்வொன்றை நாம் இழந்துதான் விட்டோம். பொய்யும் இருளும் சூழ்ந்த திணறவைக்கும் இன்றையவாழ்வு அன்றைய நாளின் பேரழகை நினைவுக்குத் தருவதாகத்தான் அமைந்து கிடக்கிறது.
இந்தத் தொகுதியிலேயே என்னை மிகவும் ஈர்த்த கவியென்று ‘யானெவன் செய்கோ’ என்னும் கவிதையினையே நான் சொல்வேன். கவிதையின் கட்டிறுக்கமும் சொற்தேர்வும் காட்சியைக் கண்முன் கொண்டுவந்து நிகழ்ந்துபோன துயரினை வாசகனை உணரவைக்கும் தன்மையும் கவிதையின் வெற்றிக்குக் காரணமாகின்றன.
‘துயரமலைகளைச் சுமக்கும் மடிகள்’ கடந்தகாலத்தின் நிகழ்வொன்றில் பலியாகிப்போன ஒரு மாணவனின் குடும்பத் துயரைப் பேசுகிறது. படித்து முடித்து நிமிர்கையில் கண்கள் பனிப்பது எமக்கும்தான்.
சிலசமயங்களில் சில தொடர்கள் ஏந்திநிற்கும் அர்த்தம் நேரர்த்தம் தாண்டிய உட்பொருள் எமது மனசை ஆழ்ந்து தொடும். இந்த அனுபவத்துக்கு உட்பட்டுத்தான் அ.முத்துலிங்கத்தின் ‘யாரோ போட்டுமுடித்து தானமாகக் கிடைத்த இரவுச்சட்டை’ யைத் தனது கவிதையொன்றுக்குத் தலைப்பாக்கியிருக்கக்கூடும். தலைப்பினைப் போலவே இழந்துபோன வாழ்வொன்று குறித்த ஏக்கமாய் ஒலிக்கிறது கவிதையும்.
கண்ணீரும் இரத்த நெடியுமாய் கொடூர நிகழ்வொன்றில் காட்சிகளாய் விரியும் ‘செட்டிக்குளமும் ஒரு பிரெஞ்சு மருத்துவனும்’ மனசைப் பிழிகிற ஒர் அனுபவம். படித்து முடித்தபின் நெடுநாளாய்க் கிடந்து மனசைப்பிசைந்த ஒர் அனுபவம் அந்தக் கவிதை.
இத்தொகுப்பில் ‘யாருக்குத் தெரியும்’ கவிதை நம்மண்ணின் பல அன்னையர்களின் கதையை நினைவூட்டுவதாய் அமைந்திருக்கிறது. எத்தனை உதிரப்பூக்கள்தான் இவ்விதமாய் இருக்குமிடம் தெரியாமல் போனவிதம் தெரியாமல் ஆகிப்போயின? மேற்சொன்னவை அனைத்தும் சில உதாரணங்கள்தான். ஆழ்ந்து நோக்கும்போது பல கவிதைகள் ஒவ்வொன்றையும் பற்றித் தனித்தனியே பேசப்படும் வகையில் அமைந்திருப்பது இத்தொகுதியின் சிறப்பு.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் துவாரகனின் இத்தொகுப்பு அவரது மொழியினையும் பார்வையினையும் சொல்லும் முறையினையும் தெளிவாக்கியிருக்கிறதெனச் சொல்லத் தோன்றுகிறது.
இந்தக் காலமும் இந்த உலகமும் எமது மொழிகளை மேலும் மேலும் மௌனத்துள்ளேயே புதைப்பதால்த்தான் எமது கவிஞர்களும் கவிதைகளை சங்கேத வடிவங்களில் பேசவேண்டி வருகிறது.
தன்னிடமிருந்து அதிகமதிகமாய் எதிர்பார்க்கவைக்கும் துவாரகனிடம் நிச்சயமாய் இன்னும் நிறைய உண்டு சொல்வதற்கு என்பதுமட்டும் தெளிவாய்ப் புரிகிறது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.