ஊவா மாகாணத்தின் தியத்தலாவையை தனது சொந்த இடமாகக் கொண்ட எச்.எப். ரிஸ்னா எழுதிய மெல்லிசைத் தூறல்கள் என்ற பாடல்களடங்கிய நூல், கொடகே பதிப்பகத்தினால் 36 அழகிய பாடல்களை உள்ளடக்கியதாக 88 பக்கங்களில் வெளிவந்துள்ளது. இந்த நூல் மூலம் அவர் பாடலாசிரியராக புதுப் பிறவி எடுத்திருக்கின்றார்.
இன்னும் உன் குரல் கேட்கிறது (கவிதை), வைகறை (சிறுகதை), காக்காக் குளிப்பு (சிறுவர் கதை), வீட்டிற்குள் வெளிச்சம் (சிறுவர் கதை), இதோ பஞ்சுக் காய்கள் (சிறுவர் கதை), மரத்தில் முள்ளங்கி (சிறுவர் கதை), திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை (விமர்சனம்), நட்சத்திரம் (சிறுவர் பாடல்) ஆகிய 08 நூல்களை ஏற்கனவே ரிஸ்னா வெளியிட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிட்டுக் கூறக்கூடிய விடயமாகும். கவிதை, சிறுகதை, விமர்சனம், சிறுவர் இலக்கியம், இதழியல் ஆகிய துறைகளில் தடம்பதித்திருக்கும் இவர் பூங்காவனம் என்ற காலாண்டு இலக்கியச் சஞ்சிகையின் துணை ஆசிரியராவார்.
மெல்லிசைத் தூறல்கள் நூலுக்கான பிற்குறிப்பை வழங்கியுள்ள கவிஞர், திரைப்பட நடிகர் வ.ஐ.ச. ஜெயபாலன் அவர்கள் ``கவிதாயினி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்களது இனிய பாடல்களை மகிழ்ச்சியுடன் ஆங்காங்கு மனசுக்குள் பாடிப் பார்த்து ரசித்தபடி வாசித்தேன். இந்தப் பாடல் தொகுதியில் ஆன்மீகப் பாடல்களும், குடும்ப உறவுகள் பற்றிய பாடல்களும், ஈரம் சொட்டும் காதல் பாடல்களும், நன்நெறிப் பாடல்களும் நிறைந்துள்ளன. இவரது பாடல்களில் தன்னுணர்வு கவிதை மொழி தூக்கலாக இருப்பது போற்றத்தக்க சிறப்பு'' என்று சிலாகித்து குறிப்பிட்டுள்ளார்.
இதே போல நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள பேராதனைப் பல்கலைக் கழக பேராசிரியர் துரை மனோகரன் அவர்கள் ``மெல்லிசை இயல்பாகவே எவரையும் கவரக்கூடியது. இதுவே பல்வேறு பக்திப் பாடல்கள், திரைப்படப் பாடல்கள், சமுதாய எழுச்சிப் பாடல்கள், அரசியல் பிரசாரப் பாடல்கள் முதலியவற்றுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்தது. இலங்கையில் 1970கள் முதலாக மெல்லிசைப் பாடல்கள் பெரும் வளர்ச்சி பெறத் தொடங்கின. இத்தகைய வளர்ச்சிக்கு இலங்கை வானொலி ஒரு முக்கிய களமாக விளங்கியது. அது வழங்கிய ஊக்கத்தின் மூலம் ஏராளமான கவிஞர்களின் மெல்லிசைப் பாடல்கள் (எனது உட்பட) இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகத் தொடங்கின. தற்போது மெல்லிசைப் பாடல்கள் தொடர்பில் பெரும் உற்சாகத்தை இலங்கை வானொலியில் காண முடியாவிடினும், ஒருகாலத்தில் அதன் பங்களிப்பு உச்சநிலையில் இருந்தது. எவ்வாறாயினும், இலங்கையில் மெல்லிசைப் பாடல் வளர்ச்சியில் ஈடுபட்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். இவ்வகையில், இத்துறை தொடர்பாக தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. இலக்கியத் துறையில் இளம் படைப்பாளியான ரிஸ்னா குறிப்பிடத்தக்க பங்களிப்புக்களைச் செய்து வருகின்றார்.
மெல்லிசைத் தூறல்கள் என்னும் இந்த நூல், மெல்லிசைப் பாடல்களின் தொகுப்பாக விளங்குகிறது. இத்தொகுதியில் 36 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பல்வேறு நோக்குகளையும், போக்குகளையும் கொண்டவையாக அவை விளங்குகின்றன. ஆன்மீகம், சமுதாய விமர்சனம், இலங்கையின் இன ஒற்றுமை, காதல், அறிவுரை, தனிமனித உணர்வுகள் முதலான பல்வேறு விடயங்கள் இப்பாடல்களில் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் கணிசமானவை அகநிலை உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்களாக உள்ளன'' என்கின்றார்.
மெல்லிசைத் தூறல்கள் நூலுக்கு வாழ்த்துரை வழங்கியுள்ள கண்டி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் திருமதி ரதி தேவ சுந்தரம் அவர்கள் ``உலகின் எல்லா மொழி வடிவங்களிலும் மிகப் பழமையானது கவிதை (செய்யுள்). இவை அறிவின் அறைகூவல்கள். சிந்தனையின் சாகசங்கள். கற்பனையின் சுவடுகள். வாழ்வின் வசந்தங்கள். தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் மெல்லிசைத் தூறல்கள் என்ற தொகுதி இந்த வசந்தத்தை எமக்கு வழங்குகின்றன. இதில் முப்பத்தாறு தூறல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இஸ்லாம் மதத்தோடு தொடர்புடையதாய் சில தூறல்கள், இளமையின் துள்ளலாய் சில தூறல்கள், படிக்குந் தோறும் இதயத்தை இனிமையாக்கி குளிர்விக்கும் தூறல்கள் என இவை அமைந்துள்ளன.
பல இலக்கிய அமைப்புக்களில் அங்கத்துவம் வகிக்கும் எச்.எப். ரிஸ்னா, கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா பட்டத்தைப் பெற்றவர். உள்நாட்டில் வெளிவந்த தொகுப்புக்களில் மட்டுமல்லாது இந்தியாவில் வெளிவந்த மழையில் கரைகிறது மானம் என்ற சிறுகதைத் தொகுப்பிலும் தனது கதையைப் பதித்தவர். அத்துடன் ஊடகத் துறையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு பணியாற்றி வருபவர். இவர், பல அமைப்புக்கள் மூலம் நடத்தப்பட்ட கவிதை, சிறுகதை, பாடல் போட்டிகளில் பங்குபற்றி பரிசும் பாராட்டும் தங்கப் பதக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பணிபுரியும் ரிஸ்னா, இறைவனால் வழங்கப்பட்ட பொன்னான நேரத்தை நன்கு பயன்படுத்தியுள்ளார் என்பது அவரது இலக்கிய செயற்பாடுகளை நோக்கும் போது புரிந்துகொள்ள முடிகின்றது. வாழ்க்கையின் போராட்டத்துக்கு முகங்கொடுக்க முடியாமல் இயந்திரமாய் இயங்கிக் கொண்டிருக்கும் எம் மத்தியில், புதிய சிந்தனைகளைத் துளிர்விடச் செய்து மெல்லிசைத் தூறல்களை அகிலமெங்கும் பொழியச் செய்யும் ரிஸ்னாவின் முயற்சி பாராட்டுக்குரியது. கௌரவத்துக்குரியது'' என்று ரிஸ்னாவின் இலக்கிய முயற்சிகளைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கியுள்ளார்.
இசை என்ற கடலில் மூழ்கி முத்துக் குளிக்காதவர்கள் யாரும் இல்லை. இசை என்பது உள்ளங்களை ஈர்த்தெடுக்கும் ஒரு பலமான சக்தி. இசையுடன் கூடிய பாடல்கள் ரசனை உள்ளங்களை தன்பால் ஈர்த்துக்கொள்கின்றன. பாடல் வரிகளில் ஓசை நயமும், சந்தமும், எதுகை மோனையும் ஒரு சேர பயன்படுத்தப்படும்போது அது வாசிப்பதற்கும் இனிமையாக இருக்கின்றது. அந்த வகையில் இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்துப் பாடல்களும் வாசிப்போரை வசீகரிக்கும் என்பது திண்ணம். இதில் காணப்படும் ஆன்மீகப் பாடல்களாக அன்பை அள்ளிப் பொழியும், இன்பங்கள் பொங்கும் இரு பெருநாளிலே, மக்காவில் பிறந்த மாணிக்கமே போன்ற பாடல்களைக் குறிப்பிடலாம். இன்பங்கள் பொங்கும் இரு பெருநாளிலே என்ற பாடல் நேத்ரா தொலைக் காட்சியில் ஜனாப் டோனி ஹஸன் அவர்களினால் இசையமைத்துப் பாடப்பட்டுள்ளது. அதேபோல மக்காவில் பிறந்த மாணிக்கமே என்ற பாடல் ஈழத்து இசை முரசு பாடகர் கலைக் கமல் அவர்களால் இசையமைத்து பாடப்பட்டு மண்வாசனையில் மகரந்தப் பூக்கள் இறுவட்டிலும் வெளிவந்துள்ளது.
நூலில் உள்ள பாடல்கள் பல்லவி, சரணம் 1, சரணம் 2 என்று வகுக்கப்பட்டு பாடல் எழுதுவதற்கான உரிய முறையில் நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கின்றன.
முதலாவது பாடல் அன்பை அள்ளிப் பொழியும் இதயம் நிறைந்த அல்லாஹ்வே (பக்கம் 19) என்று இறைவன் பற்றிப் பாடியுள்ளார். இறைவனின் பேரருள் கிடைக்காவிட்டால் எமது வாழ்க்கையில் எந்தவித அர்த்தமும் கிடையாது. நாம் இம்மை வாழ்வில் செய்கின்ற நன்மைகள்தான் எமது மறுமை வாழ்வை அழகாக மாற்றுகின்றது. அதற்கு இறைவன் கற்றுத் தந்தவற்றை அணுவளவும் பிசகாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். எமக்கு உணவு தந்து, உடை, தந்து, நல் பெற்றோரைத் தந்து எம்மை சமூகத்தில் சிறந்த ஒரு அந்தஸ்தில் வைத்திருக்கின்றான் என்றால் நாம் அவனுக்கு எவ்வளவு நன்றியுடையோராக இருக்க வேண்டும்? இத்தகைய இறைவன் பற்றிய இந்தப் பாடல் மனதுக்கு நிம்மதியளிக்கின்றது.
அன்பை அள்ளிப் பொழியும்
இதயம் நிறைந்த அல்லாஹ்வே
நீ வகுத்த வழிவகையில்
வாழ்வேனே என் வாழ்வை
காடு மலை நதிகளை
கண்குளிர்ச்சியாய் தந்தாயே
சுகந்தரும் தென்றலை
சுவாசிக்க வைத்தாயே...
வெண் பகலை இரவுக்குள்
வேறாக்கி வைத்தாயே
நீரினிலும் நிலத்தினிலும்
உயிர்களைப் படைத்தாயே
பாதைகள் புதிது என்ற பாடல் ஏழை - பணக்காரன் வாழ்வை மிகத் துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது. வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் நடக்கும் ஜீவ மரணப் போராட்டம் பசி. இருப்பவனுக்கு ஒருநாள் என்பது சாதாரணம். இல்லாதவனுக்கு மூன்று வேளை உணவு கிடைக்குமா என்ற சதா ரணம். இருப்பவனுக்கு கேளிக்கையில் நாள் கழியும். இல்லாதவனுக்கு நம்பிக்கை மாத்திரமே மூலதனம். பாடல் வரிகள் தத்ரூபமாக அமைந்துள்ளமை பாராட்டுக்குரியது.
பாதைகள் புதிது
பயணங்கள் புதிது
பணக்காரப் பயலுக்கு
பசி கூட புதிது
வறுமைகள் கொடிது
வடிவங்கள் கொடிது
வறியவருக்கெல்லாம்
வயிறும்தான் கொடிது
இறைவனின் சந்நிதானத்தில்
இழிபுள்ளியா இந்த ஜீவன்கள்
எங்கே போய் அழிப்பது
ஏழைகள் என்ற நாமங்கள்
வீதி தனையே வீடு செய்து
வியக்க வைக்கும் கோலங்கள்
கடினப்பட்ட வாழ்க்கையினை
கடனாய் கொடுத்த காலங்கள்
மக்காவில் பிறந்த மாணிக்கமே (பக்கம் 24) என்ற பாடல் நபி பெருமானின் புகழ்பாடி நிற்கின்றது. அல்லாஹ் மிகவும் நேசிக்கும் மனிதப் புனிதரான நபியவர்கள் பற்றி நூலாசிரியர் கீழுள்ளவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
மக்காவில் பிறந்த
மாணிக்கமே எம் நபியே..
சொர்க்கத்துக் கனியே
சோபிதரே மஹ்மூதே...
துயர் போக்க பாரில்
தோன்றிய எம் ரசூலே..
உயிர் போன்ற இஸ்லாத்தை
உலகுக்கு தந்தவரே..
பாடலாசிரியர் ரிஸ்னா பெற்றோருக்கு சமர்ப்பணமாக தரணியில் நான் சிறப்பாய் வாழ்ந்திட (பக்கம் 26) என்ற பாடலை எழுதியிருக்கின்றார். ஒருவர் சிறந்தவராக மாறுவதும், தீயவராக ஆவதும் பெற்றோரின் கைகளில் தங்கியுள்ளது. பெற்றோர்கள் இன்றி வளரும் குழந்தைகள் தான்தோன்றித் தனமாகச் செயற்படுவது நாமறிந்த விடயம். அவ்வாறில்லாமல் பக்குவமாகவும், பாசமாகவும் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் வாய்க்கப் பெற்ற அனைவரும் பாக்கியசாலிகள் அத்தகைய பெற்றோருக்காக இவ்வாறான வரிகளால் பிரார்த்திக்கின்றார் நூலாசிரியர்.
கருவறை சுகந்தம் தரும் நிம்மதி
வாழ்க்கையில் இனிமேல் கிடைக்காது
என் முன்னேற்றத்தின் விடிவெள்ளிகளை
பார்ப்பேன் மனதை உடைக்காது
பறவையின் சிறகாக மாறி நானும்
தாய் தந்தையரை காப்பேனே
கடவுளிடம் கையேந்தியே நான்
கருணை காட்டும்படி கேட்பேனே
ஒருவனுக்கு நாட்டுப்பற்று இல்லாவிட்டால் அவன் வாழ்வதற்கே தகுதியற்றவன். தாயும் தாய் நாடும் இரு கண்கள் போன்றவை. தான் கொண்டுள்ள நாட்டுப் பற்று காரணமாக யுத்தம் நிகழ்ந்த இந்நாட்டைப் பார்த்து இந்த தேசம் நம் தேசம் (பக்கம் 77) என்ற பாடலை யாத்துள்ளார். இந்தப் பாடல் இன ஒற்றுமையை வலியுறுத்தி நிற்கின்றது. இதன் வரிகள் சில
குண்டுகள் வெடித்து சிதறியதில்
குற்றுயிர் எத்தனை மடிந்தது
சாதி மதம் பார்த்ததினால்
சாதனை என்ன நிகழ்ந்தது
ஒருதாய் வயிற்றுப் பிள்ளையென
ஒற்றுமையாய் வாழ்ந்திருப்போம்
உலகத்தை நம் உறவாக்கி
உயர்ச்சி பெற ஒன்றிணைவோம்
இந்த நூலில் உள்ளடக்கப்பட்டுள்ள ரசனை ததும்பும் காதல் பாடல்கள் உள்ளத்தை கொள்ளை கொள்கின்றன. அந்த வகையில் ஓ மேகமே ஓ மேகமே, பொன்மாலைப் பொழுதொன்றில், மாங்குருவி போல் வந்து, வானவில்லின் நிறங்கள், வானம் உடைந்து, வாலிபத் தென்றலாய் வந்து, பொல்லாத காதல் என்னை, கிளை விரித்த உன் நெஞ்சில், உயிருக்குள் நீ பாதி, தேன் ஊறும் உன் கன்னம், இதயம் இப்படி வலிக்கவில்லை, மழையில் நனைந்த சிறு புறாவாய், நிம்மதியான இந்த நிமிடங்களை, மார்புக்குள் ஒரு குடிசை செய்து, அன்பை எல்லாம், உன்னைப் பார்க்க ஓடி வந்தேன், எப்போது என் வெறுமையை, மருந்தெல்லாம் இனிக்குதடி, இந்த வாழ்க்கை, நான் தந்த மடலினை, பால்நிலா பொழியும் நேரம் ஆகிய பாடல்களைக் குறிப்பிடலாம்.
பொல்லாத காதல் என்னை (பக்கம் 44) என்ற பாடல் பிரிந்து போன காதல் பற்றி துயர் பாடுகின்றது. ஏகாந்த வெளியில் காதல் வலியைப் பாடும் ஒரு காட்சி இந்தப் பாடலை வாசிக்கும் போது ஏற்படுகின்றமை பாடலின் சிறப்பம்சமாகும். பாடலில் உள்ளடக்கட்ட விடயங்கள் அற்புதமாக காணப்படுகின்றன. ஓசை நயமும், வார்த்தை வீச்சும் புருவமுயர்த்தச் செய்கின்றன.
பொல்லாத காதல் என்னை
போர் செய்து கொல்லும்
நில்லாத காற்று எந்தன்
வாழ்க்கையைச் சொல்லும்
பூமழை தூவும் ராத்திரி நேரம்
உன் முகம் தோன்றும் கண்ணில்
அது என்றும் அகலாதிருந்து
என்னை கீறிச் செல்லும்
நீ தந்த காதல் எனக்கு
காயங்கள் கூட்டும்
என் கண்ணீர் தானே இனிமேல்
தாகங்கள் தீர்க்கும்
மார்புக்குள் ஒரு குடிசை செய்து (பக்கம் 69) என்ற பாடல் காதல் சுவையை மேலும் அதிகரிக்கச் செய்கின்றது. இப்பாடலில் வந்து விழுந்துள்ள சொற்கள் யாவும் ரசிக்கத்தக்கதாகவும், வியக்கத்தக்கதாகவும் அமைந்துள்ளன. ரசனையுடன் பாடக்கூடிய பாடலாக எழுதப்பட்டிருக்கும் இப்பாடல் சினிமாப் பாடல்களின் தரத்தில் மேலுயர்ந்து காணப்படுகின்றமை கூடுதல் சிறப்பு.
மார்புக்குள் ஒரு குடிசை செய்து
மயிலே உன்னுடன் வாழ்கிறேன்
கண்ணுக்குள் மூடி வைத்து
கண்மணியே உன்னை ஆள்கிறேன்
காதல் வழியும் கண்களைக் கொண்டு
கவிஞனாய் என்னை ஆக்கிவிட்டாய்
கனவாய் இருந்த எந்தன் திசையில்
கலங்கரை விளக்காய் ஆகிவிட்டாய்
பூமொழி கொண்டு வார்த்தைகள் செய்து
பூவே என்னிடம் பேசி விட்டாய்
எங்கோ அலைந்து தவித்திருந்த எனக்கு
நேச வலையினை வீசி விட்டாய்
ஆன்மீகம், தாய்மை, பெற்றோர் பாசம், பிரிவு, காதல் சுவை போன்ற உணர்வுகள் கலந்து செய்த ரசனை மிக்க பாடல்களை எழுதியிருக்கும் ரிஸ்னா எதிர்காலத்தில் இப்பாடல்களை இசை வடிவிலும் வாசகர்களுக்காக தர வேண்டும் என்றும் அவரது முயற்சிகள் யாவும் வெற்றியடைய வேண்டும் என்றும் வாழ்த்துகின்றேன்!!!
நூல் - மெல்லிசைத் தூறல்கள்
நூலின் வகை - பாடல்
நூலாசிரியர் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
வெளியீடு - கொடகே பதிப்பகம்
தொலைபேசி - 0775009222, 0719200580
மின்னஞ்சல் முகவரி - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
விலை - 300 ரூபாய்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.