எமது ஈலாப் [ELAB] மூத்த எழுத்தாளர் சங்கத்தின் இன்றைய இணைப்பாளர் கா.வி.யின் மேற்படி நூல் அண்மையில் அவரின் விஜய் வெளியீட்டகத்தால் சென்னை மணிமேகலைப் பிரசுரத்தின் உதவியுடனும் ஈலாப்பின் ஆசீர்வாதத்துடனும் வெளியிடப்பட்டுள்ளது. சங்ககால தமிழ் இலக்கியங்களில் வரும் 70 கதாநாயகிகளைப் பற்றி ஆழ்ந்து சுழியோடிப் பெற்ற தன் முத்தான கருத்துக்களை நூலாசிரியர் ஒளிபாய்ச்சி உலகிற்கு ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டுகிறார். அத்துடன் நம்ஆசிரியர் அந்த 70 கதாநாயகிகளின் திருநாமங்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் தன்நூலின் பின்அட்டையில் வரிசையாக அச்சிட்டும் இருக்கிறார்.
இக் காவிய அரிவையரின் அணிவகுப்பில் கங்காதேவி, சத்தியவதி, அம்பை, அம்பிகை, அம்பாலிகை, காந்தாரி, குந்தி ஆகிய மகாபாரதக் கதை-மகளிரில் தொடங்கி குண்டலகேசி, பத்தாதீசா, மாதிரி என்னும் எழுபதின்மர் இடம்பிடித்துப் பிரகாசிக்கின்றனர்.
ஆசிரியர் தன் கோதையரைத் தேடிக் கண்டுபிடித்த முக்கிய இலக்கியப் பெட்டகங்களாவன: முன்கூறிய மகாபாரதம், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, கம்பராமாயணம் ஆகும். அவற்றுள் 53 பேரையும், அதன் பின், தமிழர் வரலாற்றில் நிலைத்து மினுங்கிய பெண்-புலவர்களாகிய ஒளவையார், ஒக்கார் மாசாந்தியார் முதல்... வெறிபாடிய காமக்கண்ணியர் வரை... மிகுதி 17 பேரையும் எம் ஆசிரியர், விதைகளை மணந்து சென்று பொறுக்கித் தேர்ந்தெடுக்கும் ஓர் அணிலைப் போல் பொறுக்கி எடுத்திருக்கிறார் என்றால் மிகையாகாது.
மேலும், எம் ஆசிரியர் தனது ஆராய்ச்சிப்பணிக்கு 20 கணிசமான உசாவு-நூல்களைத் துணை கொண்டு தன் நூலுக்குப் பலமூட்டியுள்ளார். அவர் அலசி உற்றுப் பார்த்து ரசித்த காவிய நாயகிகளின் அம்சங்களில், அவர்களின் களவியற் காதலும் காமமும், கூடலும் ஊடலும், மார்பகம், இடை, தொடை, காந்த-காமக் கண்கள், இடுப்பு, கழுத்து, கூந்தலின் மணமும் நீளமும், உடலின் இயற்கை வாசம், குரல், காதலரை எண்ணி உருகி வாடுதல், அவரின் உதடுகள், முதலியன அடங்கும். மேலும் அவரின் காவியப் பெண்களின் சமூகத் தொண்டு, வீரம், தம் நாயகருக்கு வாழ்விலும் தாழ்விலும் துணை-நிற்றல், நீதி-நடுநிலை, பொறுமை, விவேகம், முகாமைத்துவம், இறைபக்தி முதலிய ஆத்மீகக் குணாதிசயங்களும் அடங்கும். ஏற்கெனவே அவரின் நூலைப் பெற்றுப் படித்த பல நண்பர்கள், கடிதங்கள், தொலைபேசி, ஈமெயில் அஞ்சல்கள் மூலம் அதன் சிறப்புகளைப் புகழ்ந்துள்ளதை நான் அறிவேன்.
இறுதியில், உலகப் பெண்ணினம் எல்லோரினதும் தாதா போன்ற நோக்குடன் அவர்களின் பெருமைகளைப் பயபக்தியுடனும் எல்லையில்லாக் காதலுடனும் எமது ஆசிரியர் விதந்து படைத்திருக்கும் பாணி, இந்நூலைப் படிக்கும் கட்டைப் பிரமச்சாரிகள் கூட, நூலைப் படித்து முடிக்கு முன்னரே கிட்டடியில் உள்ள கன்னிப் பெண்களைப் புதிதாக ஊர்ந்து பார்க்க உந்தப்பட்டு, தாம்பத்திய வாழ்வை மோகித்து ஓடிச் சென்று மணந்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.