உடலில் ஏற்படும் நோய்களுக்கு மருந்துகள் சிகிச்சையளிப்பது போன்று மனதில் தோன்றும் நோய்களுக்கு இலக்கியம் சிக்கிச்சையளிக்கின்றது. இது எழுத்தை நேசிக்கும் பெரும்பாலானவர்களின் கருத்து. அவ்வாறு குணப்படுத்துபவர்களுள் வைத்திய கலாநிதி ச. முருகானந்தன் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்.
யுத்த பிரதேசங்களில் சேவையாற்றி வந்த காலத்தில் அவரும், அவர் வாழ்ந்த சூழலில் இருந்த மக்களும் எதிர்நோக்கிய இடர்களை சிறுகதைகளாகப் பதிவு செய்திருக்கின்றார். மேலும் மலையக சமூகத்தினருடன்; வாழ்ந்த காலத்தில் தோட்டத் தொழிலாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் ச. முருகானந்தனின் பல சிறுகதைகள் காணப்படுகின்றன. அவரது கோடை மழை என்ற இத்தொகுதி 11 கதைகளை உள்ளடக்கி ஜீவநதி பதிப்பகத்தின் 48 ஆவது நூலாக வெளியிடப்பட்டிருக்கின்றது. இது 88 பக்கங்களைக் கொண்டு அமைந்திருக்கின்றது.
குழந்தை உள்ளம் எப்போதும் தூய்மையாகவே இருக்கின்றது. இதில் கறைகளைப் படியச் செய்வது பெரியவர்களின் செயற்பாடுகள்தான். பிஞ்சு மனங்களில் நஞ்சைத் தூவி அவர்களை வஞ்சம் கொண்டவர்களாக வாழச் செய்வதும் பெரியவர்களே. பெரியவர்கள் தமது செயற்பாடுகளில், பேச்சுக்களில் நல்லவற்றை மாத்திரம் வெளிப்படுத்துவார்களாயின் குழந்தைகளும் அவ்வாறே நல்ல விடயங்களைச் செய்வார்கள். ஏனெனில் ஒரு குழந்தைக்கு முதல் பள்ளிக்கூடம் வீடுதான். வீட்டில் உள்ளவர்களைப் பார்த்துத்தான் குழந்தை முதன்முதலாக கற்றுக்கொள்கின்றது. இத்தொகுதியில் காணப்படும் குழந்தைகள் உலகம் (பக்கம் 05) என்ற சிறுகதையின் கரு சிறுவர் உள்ளங்கள் மாசு மருவற்றவை என்பதையே பறைசாற்றியிருக்கின்றது.
அகல்யா என்ற சிறுமி தன் தந்தையிடம் பேச்சுப் போட்டிக்காக பேச்சு எழுதிக் கேட்கின்றாள். அதை மனப்பாடமாக்கி பாடசாலையில் முதலாமிடமும் பெற்று விடுகின்றாள். ஆனால் பாடசாலையில் உள்ள ஆசிரியர் தனது மகனான பிரவீன் அந்தப் போட்டியில் முதலாமிடம் பெறவில்லை என்ற கோபத்தை மனதில் இருத்தி வகுப்புப் பாடவேளையின்போது அகல்யாவுக்கு தழும்பு ஏற்படும் வண்ணம் அடிக்கின்றார். ஆனால் முதலாமிடம் பெற்ற அகல்யாவுக்கு பிரவீன் கண்டோஸ் சொக்லட் கொடுத்து வாழ்த்துகின்றான். அவன் பா ஓதல் போட்டியில் பரிசு பெற்றதற்காய் அகல்யா பிஸ்கட் பக்கற் வாங்கிக் கொடுக்கின்றாள். தன் தாய் அகல்யாவுக்கு அடித்ததைப் பற்றி பிரவீனுக்கு யோசிக்கத் தெரியவில்லை. பிரவீனின் தாயான டீச்சர் தனக்கு அடித்தமை பற்றி அகல்யாவுக்கு யோசிக்கத் தெரியவில்லை. பிஞ்சு உள்ளங்கள் எத்தனை அழகானவை என்பதற்கு இக்கதை சிறந்த எடுத்துக்காட்டகும்.
பேய்களுக்குப் பயமில்லை (பக்கம் 13) என்ற சிறுகதை வேடிக்கைப் பாங்கில் எழுதப்பட்டிருக்கும் சுவாரஷ்யமிக்க சிறுகதையாகும். பேய்கள் பற்றிய பிரக்ஞைப் பூர்வமான விடயங்களை முதலில் பேசிவிட்டு இறுதியில் நகைச்சுவையாக முடிந்திருக்கின்றது இக்கதை. கோசலையும் அனுவும் வெளிநாட்டுக்கு படிக்கச் செல்கின்றனர். இருவரும் ஒரே அறையில் தங்கிப் படிக்கும் நேரத்தில் கோசலை பேய் பேய் என்று கத்தி அனுவையும் பயத்தில் ஆழ்த்தி விடுகின்றாள். நாட்களின் நகர்வில் ஒருநாள் திடீரென கோசலை தன் தந்தைக்கு அறிவித்து அவரும் அவளைப் பார்க்கச் சென்ற சந்தர்ப்பத்தில் அனுதான் பேய் பற்றிக் கூறி தன்னைப் பயமுறுத்துவதாக பொய்யுரைக்கின்றாள். கோசலையின் தந்தை அனுவை பின்வருமாறு திட்டுகின்றார்.
``ஆளுக்காள் துணையாக இருப்பியள் என்று சேர்த்து அனுப்பினால் இங்க நீ மகளையும் பயப்படுத்தி வச்சிருக்கிறாய்.. இப்பவே அவளுக்கு வேற அறை ஒழுங்கு பண்ணப் போறன்''
கோசலை போன்றவர்களை நண்பர்களாக வைத்துக்கொள்வது ஆபத்து என்பதை இந்தக் கதை மூலம் வாசகர்களுக்கு புரிய வைத்திருக்கின்றார் நூலாசிரியர்.
விலகிடும் திரைகள் (பக்கம் 31) என்ற சிறுகதை கணவன் மனைவியின் ஒற்றுமை பற்றி எடுத்தியம்புகின்றது. கணேசனும் மாலாவும் அந்நியோன்னியமான தம்பதியர். சில காலமாக இருவருக்குமிடையில் இடைவெளி அதிகமாகியிருக்கின்றது. கணேசன்தான் அவளைவிட்டு ஒதுங்குகின்றான். மாலா அதற்கான காரணத்தை ஆராய்கின்றாள். கணேசனின் வியாபாரம் நஷ்டமடைந்து வருவதால் அது பற்றிய எண்ணம் அவனை வாட்டுகின்றது என்பதை அவள் உணர்ந்துகொள்கின்றாள். அதனால் அவள் தையல் வேலை செய்து குடும்பப் பாரத்தை சற்று குறைக்க எண்ணினாள். ஆனால் கணேசனுக்கு அது அவமானமாக இருக்கின்றது. மனைவியின் காசில் தான் வாழ்வதா என்ற ஈகோ எழுகின்றது. அதை அறிந்த அவள் அவனை பக்குவமாக அணுகி தன்பக்க நியாயத்தை எடுத்துக் கூறி வியாபாரம் நஷ்டமடையாதிருக்க வேறு வழிவகைகளையும் கூறுகின்றாள். கணேசனுக்கு இப்போது மனதுக்கு ஆறுதலாக இருக்கின்றது. கணவனும் மனைவியும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும். தான்தோன்றித்தனமாக தான் மட்டும் ஒரு முடிவை எடுத்துவிட்டு மற்றவரை காயப்படுத்தக் கூடாது என்பதை அழகாக சொல்கின்றது இந்தக் கதை.
கால தரிசனம் (பக்கம் 43) என்ற சிறுகதை போர் காலத்தில் வாழ்ந்தவர்களின் நிலையை எடுத்துக் கூறியிருக்கின்றது. காவியாவும் பிரசன்னாவும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றார்கள். ஆனால் அவனது சாதியைக் காரணம் காட்டி காவியாவின் பெற்றோர் அவர்களின் காதலை எதிர்க்கின்றார்கள். இந்த விரக்தியில் அவனோ போராளியாக இணைகின்றான். சில காலங்களின் பின்னர் காவியாவின் தந்தை வீதி விபத்தில் இறந்து போகின்றார். சகோதரர்கள் தமது வாழ்வைத் தேடிக்கொண்டு போய்விட்டர்கள். இவ்வாறு அடுத்தடுத்து வந்த இடர்களால் காவியாவுக்கு மனநிலை பாதிப்படைகின்றது. மரத்திலிருந்து விழுந்தவளை மாடு முட்டின கதையாக அவள் மானபங்கப்படுத்தப்படுகின்றாள். காலப் போக்கில் பிரசன்னா காவியாவைக் காண்கையில் அவள் உருமாறி கறுத்துப் போயிருப்பதைக் கண்டு துன்பமடைகின்றான். அவள் மனநிலை பாதிக்கப்பட்டதை அறிந்த அவன் பிரதேச குடும்ப நல உத்தியோகத்தர்களைச் சந்தித்து காவியாவைப் பற்றிக் கூறி அவளை குணப்படுத்த உதவுமாறு வேண்டுகின்றான். அவளது மனநிலையில் முன்னேற்றம் தெரிகின்றது. பிரசன்னாவிடம் தான் ஒரு எச்சில் கனி என்கின்றாள் காவியா.
ஆரம்பத்தில் பிரசன்னாவை அவமதித்த காவியாவின் தாய் இப்போது, `தம்பி காவியாவுக்கு உங்களை விட்டா யார் இருக்கினம்?' என்கின்றார். ஆனால் காவியா இதற்கு சம்மதிக்காமல் இருக்க பிரசன்னாவோ, `நான் உன்னை நேசித்தது உண்மை. நீ எனக்கு துரோகம் செய்யாபோது ஏன் யோசிக்கின்றாய்?' என்கின்றான். அந்தத் தூய காதல் ஏற்றுக்கொள்ளப்படுவதாய் கதை நிறைவுறுகின்றது. கோடை மழை (பக்கம் 74) என்ற சிறுகதை முன்னால் காதலியை சந்திக்கும் ஒரு ஆணின் மன உணர்வுகளை சித்தரித்துக் காட்டுகின்றது. முடிந்து போன காதல் மீண்டும் மனதில் வந்தால் புயலடிக்கும் என்பதை உணர்த்தி நிற்கின்றது.
தன் மனைவி அமராவதியோடு அன்பாக ஆதரவாக இருந்தாலும் அந்நியோன்னியம் இருக்கவில்லை. ஆனாலும் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வருபவர் தன் காதலியான செல்வியைக் கண்டதும் அந்தரப்படுகின்றார். செல்வி தங்குமிடம் தேடி அவ்வீட்டுக்கு வருகின்றாள். தன் பழைய காதலனின் வீடு அது என்பதை அவள் அறிந்திருக்கவில்லை. திடீரென இருவரும் ஒரே வீட்டில் சந்திக்கும்போது மனைவி அமராவதி இருவரையும் அறிமுகம் செய்து வைக்கின்றாள். ஏற்கனவே தாம் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தவர்கள் என்பதை அவர் தன் மனைவிக்குக் கூற அவளும் சந்தோசப்படுகின்றாள்.
செல்வியின் கணவன் இறந்துவிட்டமையும் இவரது மனைவி நோயாளியாக இருப்பதும் அவர் மனதில் வேறு விதமான எண்ணங்களை தோற்றுவிக்கின்றது. ஆனால் செல்வியோ மிகவும் உறுதியாக இருக்கின்றாள். அமராவதிக்கு நோய் முற்றிப் போக அவள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றாள். அவள் தன் கணவனிடமும் செல்வியிடமும் அவர்கள் மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என வேண்டுகின்றாள். செல்வி அதிர்ச்சியாகி மௌனமாக இருப்பதை சம்மதமாக எடுத்துக்கொண்டு கணவனிடம் கேட்க, அவரும் செல்வியை மணமுடிக்கச் சம்மதிக்கின்றார். வீட்டில் வந்து விசாரிக்கும்போது செல்வி விரும்பிச் சொல்லவில்லை என்பது தெரிய வருகின்றது. ஆனாலும் அவரது மனம் சலனமடைகின்றது. அவளைத் தொட எத்தனிக்கும் போது ஷபோங்க வெளியே| என்று காட்டமாக் கூறுகின்றாள் செல்வி. அச்சந்தர்ப்பம் பார்த்து அவரது தொலைபேசி ஒலிக்கின்றது. அமராவதி இந்துவிட்டதாக வந்த அந்தச் செய்தியில் அவரும் அதிர்ச்சியாகியிருப்பதாக கதை நிறைவடைகின்றது.
இவ்வாறான சமுதாய விடயங்களை தன் படைப்பினூடாக வெளிப்படுத்தும் ஆற்றல் ச. முருகானந்தனுக்கு இயல்பிலேயே வாய்த்திருக்கின்றது. கோடை மழை இவரது 10 ஆவது சிறுகதைத் தொகுதியாகும். இதுதவிர 02 கவிதைத் தொகுதிகளையும், குறநாவல்கள் இரண்டையும், ஒரு கட்டுரைத் தொகுதியும் மூன்று மருத்துவம் சார்ந்த நூல்களும் இவரால் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 40க்கும் மேற்பட்ட பரிசில்களையும், விருதுகளையும் பெற்றுள்ள நூலாசிரியர் தனது சிறுகதைகள் விளிம்பு நிலை மக்களின் விடிவுக்கு பயன்பட்டால் அதுவே தனக்குப் போதும் என்று கூறுகிறார். இன்னும் பல காத்திரமான படைப்புக்களை இலக்கிய உலகுக்குத்தர வேண்டுமென்று நூலாசிரியரை வாழ்த்துகிறேன்;!!!
நூலின் பெயர் - கோடை மழை
நூலின் வகை - சிறுகதை
நூலாசிரியர் - ச. முருகானந்தன்
வெளியீடு - ஜீவநதி பதிப்பகம்
விலை - 250 ரூபாய்
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.