ஒரு நாவலை வாசிக்கிற போது, அதனை ரசித்து உள்வாங்கிக் கொள்வதென்பதும் அதன் கதாபாத்திரங்களோடு ஒன்றிப்போவதென்பதும் வேறு வேறு நிலைரசனை கொண்டவை. ஆழ்ந்து அவதானித்தால் இரண்டு ரசனைகளுக்கிடையே நிரம்ப வித்தியாசங்கள் உண்டென்பதைக் கணிக்க முடியும். இவ்விரண்டு நிலையுமே வாசிப்பின் நிறைவை வெளிப்படுதும் பாங்குதான் என்றாலும், நாவலோடு ஒன்றிப்போவதென்பதையே கூடுதல் ஈடுபாடாகக் கருதயிடமுண்டு!. தோழர் பாரதிநாதனின் 'வந்தேறிகள்' நாவலை வாசித்த போது என் நிறைவை, கூடுதல் ஈடுபாடுகளுடன்தாம் உணர்ந்தேன்!பேட்டை - மந்தைத்திடல், கள்ளிப்பாளைய முதலாளிகள், அவர்களது கைத்தடிகள், அவர்கள் அழைத்துவந்திருந்த போலீஸ்களென அத்தனை பேர்களோடும் நியாயத்திற்காக முரண்பட்டு சந்துரு களத்தில் முன்நிற்க, மாதேசு, ஏழுமலை, கந்தப்பன் குடும்பம் இன்னும் இன்னும் ஏராளமான ஜனங்கள் குழுமியிருந்த மந்தைதிடல் கூட்டத்தில் நானும் இருந்தேன்! என்ன யோசிக்கின்றீர்கள்! மிகைதான். ஆனாலும் இருந்தேன்! அந்த அளவில் அந்நாவலோடு என் ஐக்கியம் இருந்தது. பேட்டைப் பகுதியில், பெரும் விசைத்தறி உற்பத்தியாளர்களாக அறியப்படும் கொழுத்த முதலாளிகள், தங்களை அண்டிவாழும் சிறு விசைதறி முதலாளிகளை வஞ்சிக்கிறார்கள். அவர்களிடம் பணிபுரிந்த தொழிலாளர்கள் வேலையற்றுப் போய், வீதிக்கு வருகிறார்கள். இச்சூழ்ச்சியில், சிறு முதலாளிகளுக்கு ஆதரவாக விசைத்தறித் தொழிலாளர்கள் களம் காண்கிறார்கள்.
பெரும் முதலாளிகளின் வர்க்கத் தில்லுமுல்லுகளை எதிர்த்தும், இன்னுமான தங்களது நியாயமான வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்தும் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்குகிறார்கள்! அவர்களுக்கு உதவுமுகமாக பிற தொழிலாளிகளும், வெகுஜன பிரிவினர்களும் கைகோர்த்து கொண்டு வீதிக்கு வரவும், அது பெரியதோர் சாலை மறியல் போராட்டமாக உக்கிரம் கொள்கிறது! போராட்டம் வலுபெற, அரசும் அதிகாரவர்க்கமும் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு செவிகொடுக்கிறார்கள். அந்தச் சாலைமறியலில், தொழிலாளர்களுக்காக உரத்து எழுந்த உரிமைக்குரலில் என் சப்தமும் உக்கிரம்!
இப்பிரச்சனைக்கு தீர்வுகாண உதவி ஆட்சியாளர் முன்னிலையில் போலீஸ் - பெரும் முதலாளிகள் - தொழிலாளர் பிரதிநிதிகள் என்று பலரும் கலந்து கொள்ளும் பஞ்சாயத்து ஒன்று, ஓர் கல்லூரி வளாகத்தில் இரவு தொடங்கி விடிய விடிய நடக்கிறது! பெரும் முதலாளிகளின் சூழ்ச்சிகொண்ட வாதங்கள் நொறுக்கப்படுகிறது. குறிப்பாக, முதலாளிகளின் முதலாளியான அண்ணாமலை சாணக்கியம் அங்கே மோதித்தெறித்தது.
சந்துரு ஒவ்வொரு வாதங்களாக முறியடிக்கவும், அடிவானம் சிவந்து தொழிலாளர்களின் கோரிக்கைள் புலர்தல் காண்கிறது. பளீச்சென்று அவர்களது பொழுதும் விடிகிறது! சந்துருவின் அருகாண்மையில் தோழரின் தர்க்கங்களை மெச்சியப்படிக்கு விடியவிடிய கண்கொட்டாமல் உடன் இருந்தேன்! கதை முழுக்க சந்துருவின் நண்பன் மாதேசு, தோழனின் குறிப்பறிந்து உடனுக்குடன் செயலில் இறங்குபவனாக இருந்தானென்றால், சமயோஜிதமாகவே என்றாலும் தீர்க்கமாக முடிவெடுக்கும் சந்துருவின் திறனில் மலைத்து, அதனை மெச்சியவனாக சந்துருடனேயே இருந்தேன்!
இங்கே, நான் பகிரும் உண்மைகள் மிகைப்பட்ட வார்த்தைகள் அல்ல. வாசிப்பில் நான் உணர்ந்த - ஐக்கியப்பட்ட - சுத்தமான அசல் வெளிப்பாடுகள்! பொதுவில், நேற்றுவரை என் தேர்வும் வாசிப்புமான நாவல்கள் பெரும்பாலும் கலை - இலக்கியம் சார்ந்ததாகவே இருந்தது. அந் நாவல்களின் கலைநேர்த்தியும் மொழி கூர்மையும், அழகியல் லாவகமும் எனக்குப் பிடித்த ஒன்று! மானிட வாழ்வின் பூடகமான சங்கதிகளை, இன்னும் பூடகமாக பேசும் அந்நாவல்களில் மலர்ந்து போகின்றவன் நான்! வந்தேறி நாவலோ அதற்கு நேர் எதிர்! உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கைப்பாட்டை - அவர்களின் தினசரி யதார்த்தத்தை அப்பட்டமான கோணத்தில் ஒளிமறைவின்றி பகிரும் நாவல் இது! இதன் பக்கங்களில் காணும் நிஜங்களின் தரிசனம் ரொம்ப ரொம்ப விசேசமானது!
இந் நாவலின் சம்பவங்கள் அத்தனையும் காலங்களில் ஆங்காங்கே நாம் கண்டதாக இருக்கும். அல்லது, பத்திரிகைகளில் வாசித்த செய்தியாகவும் இருக்கும். ஆக, வெளிப்படையான நிஜத்தின் சாயல் கொண்ட நாவல் இது! இந்த நாவலின் வெற்றியே இதன்பொருட்டு சமைந்ததுதான்! படைப்பின் அழகியல் பார்வையில், 'கலைநேர்த்தியும் மொழி லாவகமும்' இந்நாவலில் குறைவுதான். என்றாலும், இதன் ஜீவ-ஈர்ப்பு, உலக நாவல்களின் அழகியல் வரம்புகளை மிஞ்சிவிடுகிறது! உழைக்கும் வர்க்கத்தின் உயிர் பிரச்சனைகளை திரும்ப திரும்ப தீர பேசுவதாலேயே அந்த ஜீவ ஈர்ப்பு நம்மிடமும் தொற்றிகொள்கிறது.
மார்க்ஸிய-லெனினிய சித்தாந்தம் சார்ந்த ஓர் முழுமையான நாவல் தமிழில் வந்ததாக நான் அறியவில்லை. அந்தச் சித்தாந்தத்தை முன்வைக்கும் கட்டுரைகளை தமிழில் படித்திருக்கிறேன். ஏன்.., நிறையவும் படித்திருக்கிறேன். ஆனால், நாவல்..? ம்.. ஹும்...! இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் இடதுசாரி தாக்கம் கொண்ட நாவல் என்றாலும், வந்தேறிகள் மாதிரிக்கு மார்க்ஸிய-லெனினிய கோட்பாடுகளின் சுவடுகளில் அது பயணித்ததாகக் கொள்ளமுடியாது. உழைப்பாளர் வர்க்கத்தின் மேம்பாட்டுகளுக்கான இச் சித்தாந்த வழிமுறைகளை முழுமையாக கொண்டு வந்திருக்கும் முதல் தமிழ்நாவல், பாரதிநாதனின் வந்தேறிகளை பெருமையாக கூற முடியும்! அது சரியும் கூட.
இந்த நாவல், 'வந்தேறிகள்' எனும் சொல்லில் கொள்ளும் ஆத்திரத்தில்தான் தொடங்குகிறது. மனிதர்களிடையே சமத்துவமும் நாகரிகமும் தளைத்த நவீன சமூகத்தில், பிழைப்புதேடி சொந்த ஊரைவிட்டு சற்று கூடுதல் தூரம் கடந்துவந்து பணியெடுக்கும் காரணத்திற்காக, உள்ளூர்வாசிகள் தங்களை வந்தேறிகள் என்று சுட்டப்படுவதில் இந்தத் தொழிலாளர்கள் ரணம் கொள்கிறார்கள். அவர்களிடையே கிளர்தெழும் சினம் நியாயமானதும் கூட.
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் (சேலத்துப் பக்கம்) விசைதறியை தொழிலாக கொண்டு வாழும் தொழிலாளர்கள் அதிகம். இவர்களுக்கு வேலைதரும் உள்ளூர் முதலாளிகள் அவர்களை சுரண்டுவதில், மறைமுகமாக அடிமைப்படுத்துவதில் சமத்தர்களாக இருக்கிறார்கள்! இந்த முதலாளிகளிடம் மீளமுடியாத கடன்சுமை கொண்டுவிடுவதும், சொல்லமுடியாத பெண்கள் சார்ந்த இடர்பாடுகளை எதிர்கொள்ளுவதுமாக பாவப்பட்டதோர் வாழ்வை வாழும் இந்த விசைத்தறி தொழிலாளர்கள், அந்த கொடுமையில் இருந்து தப்பிக்கும் முகமாக இரவோடு இரவாக ஊரைவிட்டும் வெளியேறி, வந்தடையும் இன்னொரு விசைதறி ஸ்தலம்தான் 'பேட்டை!'
இந்தப் பேட்டை, திருத்தணிக்கும் திருப்பதிக்குமான இடைப்பட்ட இடத்தில் - ஆந்திராவின் எல்லைக்குட்பட்டு இருக்கிறது!.தமிழகத்திலிருந்து புதுவாழ்வின் கனவோடு வந்துசேரும் விசைத்தறி தொழிலாளர்கள், இங்கே வந்தேறிகளாக, இன்னும் தொல்லைகள் பலவும் எதிர்கொண்டவர்களாக, சுதந்திரமற்றவர்களாக கனத்த சோகத்தோடு காலம் கழிக்கிறார்கள். அதனால் என்னவோ இந்தப் 'பேட்டை' கிராமம் பின்னாளில் புரட்சிப் பூக்கும் பூமியாக மாறுகிறது!
ஒரு காலக்கட்டத்தில், மார்க்ஸிய-லெனினிய அடிப்படையில், தொழிலாளர்களின் மேம்பாடுகள் குறித்து மூத்த இயக்க தோழர்களோடு சந்துரு கலந்தாலோசிக்க தொடங்குகிறார். அவர்களின் வழிகாட்டலுக்கு இசைவுதரும் நேரம், சந்துரு - 'தோழர் சந்துரு'வாக மாறிபோகிறார்! தொழில் சார்ந்த நண்பர்களோடு கலந்து விசைதறி தொழிலாளிகளுக்கு சங்கங்கம் கட்டுதல்./ பேட்டையை ஒட்டி முன்பே தோற்றுவிக்கப்பட்ட விவசாயம் சார்ந்த சங்கங்களை ஒருங்கிணைத்தல் / புரட்சிக்கு தயாராகுதல் / போராட்டத்திற்கு ஏற்றதோர் சூழலை எதிர்நோக்கி காத்திருத்தல் என்று அத்தனப் படிகளிலும் சித்தாம் நழுவாது அடிமேல் அடிகளை மேலெடுக்கிறார் சந்துரு!
நாவலூடே, ஆந்திரா மாநிலத்தில் மார்க்ஸிய - லெனினிய அமைப்பு பரவலாகவும் பலமாகவும் வளர்ந்தோங்கி இருக்கிறது என்கிற சூசகத் தகவலை நாவலின் இன்னொரு அம்சமாக தோழர் பாரதிநாதன் சொல்லாமல் சொல்லியிருக்கும் அழகு மெச்சத்தகுந்தது. அவரது அசாத்திய திறமைக்கு சான்றெனவும் கொள்ளலாம்.. பொதுவில், சாதித்து இருக்கிறார் அவர்!
இந்நாவலில் ரசனையான சங்கதிகள், இதன் பக்கங்களில் வளமாகவே இருக்கினறன. இரண்டு காதல், மூன்று சமையல் குறிப்புகள், மயிலாடும் அரப்புக் காடு, ப்ரியமான பாபு, பாலியல் தொழிலாளர்கள் வசிக்கும் சாலைப்பகுதி, அவர்களோடான தோழமை, பைஃபாஸில் விரையும் விரைவு பஸ்கள், வடக்கு நோக்கியும் தெற்கு நோக்கியும் ஓடும் விரைவு ரயில், எவரையும் 'இவனே' போட்டு அழைக்கும் தோழர் ஓபுளி, சாப்பாட்டு கடை அங்கம்மாள், முதலாளி கோகிலா அம்மாள், நடந்தேற போகும் சந்துரு - சரிதா திருமணம், நடந்தேறிய மதேஸு - பொன்னி திருமணம், தோழர் வசீகரன், வசீகரன் மகள் (சின்னத் தோழியர்) நிர்மலா, தோழியர் அனுராதா... இப்படி இங்கே நான் சுட்டி இருக்கும் சம்பவங்களாகட்டும், இடமாகட்டும், பெயர்களாகட்டும் அத்தனையும் இந்நாவலில் நம் கவனத்தை முழுமையாக கவர்ந்து வியப்பூட்டுபவை!
குறையென்று ஏதேனும் சுட்டனுமெனில், நாவலின் இறுதிப் பகுதியை சொல்லலாம். தோழர் பாரதிநாதன் ரொம்பவும் 'மெனக்கட்டு இறுதி அத்தியாயங்களை சுருக்கித் தந்திருப்பதைச் சொல்லலாம். சினிமாக்களில், காட்சிப்படுத்த முடியாத கதையின் பெரும்பகுதியை, ஓரிரு பாடலூடே சின்னச் சின்ன காட்சிகளாக, 'சமத்'தாகச் சொல்லிவிடுவது மாதிரி இருக்கிறது! அந்தக் கடைசி அத்தியாயம்! எத்தனை காத்திரமாய் எழுதப்பட வேண்டியப் பகுதியது! அப்படியில்லாமல், சத்துருவை கட்டியக்காரனாக்கி, கதையை எளிதாக நகர்த்தி, எல்லோரையும் ரயிலடியில் கொண்டுவந்து நிறுத்தி, மங்களகரமாக 'சுபம்' போடுவதை ஒப்புக்கொள்ள ஏனோ மனம் உறுத்துகிறது. முழுமையான விவரணைக்கு இன்னும் கொஞ்சம் பக்கங்கள் கூடும்தான். அதற்காக நாவலின் இறுதி பகுதியை இப்படி ஏனோதானோவென செய்துவைப்பது எந்தவகையிலும் சரியென தோன்றவில்லை!
// சாதிமத பேதமற்று சகமனிதர்களோடு கூடிவாழ முடிகிறதோ அதுதானே அவனது சொந்த ஊர். அதுதானே உழைப்பாளியின் தாய்நாடு. நாம் பிறந்து வளர்ந்த மணியம்பாளையத்திலும் சரி, தற்போது பிழைக்க வந்த பேட்டையிலும் சரி அப்படி எதுவும் இல்லையே. எல்லா உழைக்கும் மக்களும் தமது சொந்த ஊர் என சொல்லப்படுவதில் எந்த உரிமைகளும் அற்று ஏதிலிகளாய் (அகதி) தான் வாழ்ந்து வருகிறார்கள். அதே சமயம், தன்னைப்போல் புலம் பெயர்ந்து வெளியூரில் பிழைக்க வந்தால் வந்தேறிகள் என்றுதான் வசை மொழியால் வதைக்கப்படுகிறார்கள். எனவேதான் தோழர் லெனின் சொன்னார்: "எங்கே பாட்டாளி அரசால் கிறானோ அதுவே அவனது சொந்த நாடு' - என்று. // - நாவலில் தோழர் பாரதிநாதன்.
ஊரை விட்டு - பிழைப்பு சார்ந்து இன்னொரு ஊர் தேடி போகின்றவர்களை அங்குள்ள மக்கள், 'வந்தேறிகள்' என அழைக்கிறார்களேயென ஆத்திரம் கொண்டு கிளைக்கும் இந்நாவலில் கடைசியில், தோழர் லெனினின் கூற்றை உரக்கப் பேசி நாவலின் செய்தியையே வேறு கோணத்திற்கு நகர்த்தி காமிக்கிறார் தோழர் பாரதிநாதன். நிஜத்தில் அவர் சொல்ல நினைத்த செய்தியும் கூட இதுவாக இருக்கலாம்!
தமிழில், நாவல் என்கிற பெயரில் இன்றைக்கு கனவுகளை விரட்டிக் கொண்டு திக்கற்று திரிகிற மொன்னைப் படைப்புகளும் - அதன் படைப்பாளிகளும் நினைவில் எழும் இந்நேரம், தோழர் பாரதிநாதனை இந் நாவல் பொருட்டு இன்னும் இன்னும் பாராட்டலாம்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.