தென்னிலங்கையின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் மிக முக்கியமான எழுத்தாளராக விளங்கும் திக்வல்லை கமால் அவர்கள் தமிழ் இலக்கிய உலகில் தனது பெயரை ஆழப்பதித்தவர். சாஹித்திய விருதுகள் உட்பட பல பரிசுகளை பெற்றுள்ள இவர், சிறுகதைகள், இலக்கியக் கட்டுரைகள், நாவல்கள், கவிதைகள், வானொலி நாடகங்கள், சிறுவர் இலக்கியங்கள் போன்ற துறைகளில் முனைப்புடன் செயல்பட்டு பல நூல்களை இலக்கிய உலகுக்கு தந்துள்ளார். அதுபோல் மொழியெர்ப்பு துறைகளிலும் ஈடுபட்டு பல நூல்களை பெயர்ப்பு செய்துள்ளார்.
திருமணம் என்பது ஆடம்பரத்துக்காகவும், புகழுக்காகவும் நிகழ்த்தப்படும் காலம் இது. யதார்த்தங்களைத் தொலைத்துவிட்டு மாயையகளுக்குள் ஒளிந்து கொள்ளவே பலரும் பிரியப்படுகின்றனர். சமகால நிகழ்வுகளின் ஓட்டத்தில் காசு பறிக்கும் ஒரு தொழிலாகவே திருமணத்தைப் பார்க்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் சராசரி ஆண்களில் இருந்தும் மாறுபட்டு பெண் வீட்டிலிருந்து ஒரு சதமும் சீதனம் எடுக்காமல் அல்லாஹ்வுக்காக என்ற எண்ணத்துடன் திருமணம் முடிக்கும் கரீம் மௌலவி பற்றிய கதைப் பிண்ணனிதான் வீடு என்ற இந்த நாவல்.
வீடு என்ற ஒற்றை வார்த்தையில் ஒரு தனிமனிதனின் போராட்ட வாழ்க்கை மிக அழகாக அற்புதமாக இந்நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளது. நமது சமூகத்தைப் பொறுத்தளவில் மௌலவி என்பவர்கள் வசதி வாய்ப்பற்றவர்கள்.. நன்றாக படிக்காதவர்கள் என்ற எண்ணப்பாடு அதிகமாக காணப்பட்ட போதிலும், அல்லாஹ்வின் தீனைக் கற்றவர்கள் என்ற அந்தஸ்து உரியவர்களுக்கு வழங்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது.
மகனுக்கு பட்டமளிப்பு விழா நடக்கவிருப்பதால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் பெற்றோரான முஜீன் நானாவும், நஜிமுன்னிஸாவும். தமது மகன் மௌலவியாகப் போகும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்கவில்லை. மௌலவி கரீம் அவர்கள் ஊருக்குள் வருகையில் ஊரே கூடி நின்று மௌலவியையும் அவரது தந்தையான முஜீன் நானாவையும் பள்ளிவாயலுக்கு அழைத்துப்போய் பாராட்டி கௌரவிக்கின்றார்கள். வேறு ஊர்களில் இருந்தெல்லாம் வந்து தங்கள் ஊர் பள்ளியில் கரீம் மௌலவி தொழில் செய்ய வேண்டும் என வினயமாக கேட்டுக்கொள்கின்றார்கள். அப்போதெல்லாம் மௌலவியின் பெற்றோருக்கு பெருமிதமாக இருந்தது. ஆனாலும் ஊர்ப் பள்ளியை விட்டுவிட்டு வேறு பள்ளிகளில் தொழில் செய்வதை நியாயமாகக் கருதாமையினால் ஊர்ப் பள்ளியிலேயே உதவி ஹஸரத்தாக கரீம் மௌலவி இருக்கின்றார்.
இருபத்தைந்து வயதான மௌலவியைக் குறிபார்த்து பல இடங்களில் இருந்தும் திருமண அம்புகள் பாய்ந்து வந்தன. ஆறுமாத சேவையில் அவரது மதிப்பு எங்கும் பரவியிருந்தது. எனவே மௌலவிக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்கின்றார்கள். மௌலவி சீதனமாக எதையும் எதிர்பார்க்காமல் திருமணம் செய்துகொண்டதை அனைவரும் பெருமையாக பேசிக்கொள்கின்றார்கள்.
முஜீன் நானாவுடைய அந்தச் சிறிய வீட்டில் தற்போது இரண்டு குடும்பங்கள் வசிக்கத் தொடங்கிவிட்டன. இடப் பற்றாக்குறை ஏற்பட்டாலும் பொறுத்துப்போக வேண்டிய நிலைமையில் அனைவரும் இருக்கின்றனர். வெளியில் சீதனம் தேவையில்லை என்று சொல்லிக்கொண்டு உள்ளுக்குள் சுளைசுளையாக வாங்குபவர்கள் மத்தியில் கரீம் மௌலவி உண்மையில் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்வதை,
'இந்த நகநட்டு எங்களயன் அம்ரிதா?' அவர் வியந்து போய்தான் கேட்டார்.
'ஏன்டதான்' அவளுக்கு அந்தக் கேள்வியே ஆச்சரியமாகவிருந்தது.
'ஒங்கடயென்டா?'
என்ன கேட்கிறாரென்று அவளுக்கு தெளிவாக விளங்கிவிட்டது.
'இது கலியாணத்துக்கு எடுத்ததில்ல. நான் தையல் வேல செஞ்சி ஒன்டொன்டா வாங்கினது'
'மெய்யா நான் பயந்த அம்ரிதா. ஒன்டும் எடுக்கியல்லயெண்டு சொல்லிப்போட்டு..'
எனும் வரிகளினூடாக விளங்கிக்கொள்ளலாம். எல்லோருக்கும் சமைத்துப்போட வேண்டிய பொறுப்பு நஜிமுன்னிஸாவுக்கு சுமத்தப்படுகின்றது. அது அவளுக்கு பிரச்சினையே இல்லை. வீட்டில் பொருட்கள் இருந்தால் சட்டியில் வேகும். ஆனால் அதுதான் இல்லையே. மௌலவி தனியாளாக இருந்தபோது கிடைத்த வருமானம் அவர் குடும்பமான பிறகு போதவில்லை. இது தொடர்பாக மகனிடம் பேசுவதில் எந்தவித பிரச்சினையும் இல்லாதிருந்தபோதும் மருமகளுக்குத் தெரியாமல் பேசுவதில்தான் சிக்கல் இருந்தது. எனவே தருணம் பார்த்து முஜீன் நானா மௌலவியிடம் இவ்வாறு கூறுகின்றார்.
'மகன் இப்ப பதினஞ்சி வருசத்துக்கு முந்தீம் ஹஸரத்துக்கு பத்தாயிரம்தான் சம்பளம் குடுத்தாங்க... ம்.. இப்பேம் அதே கணக்கா.. ஜாதியாயீக்கும். சாமான் சட்டீட வெளக்கி எப்பிடியன் காலம் போற. கூட்டிக் கேக்காம சரிவராது... நான் வாய் போடியது சரில்ல...'
இதைக் கேட்ட மௌலவியும் ஷநானும் யோசிச்சி யோசிச்சி நின்ட விசயம்தான் வாப்பா. நான் இன்டக்கி நாளெக்கே பெரிய மத்திச்சத்தப் பெய்த்து சந்திக்கியேன்| என்கிறார்.
ஆனால் மௌலவியின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமடைகின்றன. பெரிய மத்திச்சம் வெட்டொன்று துண்டிரண்டாக ஷஊர் வருமானம் இல்லாப் போனதுக்கு எங்களுக்கு ஒன்டும் செய்யேல. சம்பளம் பத்தாயிரம்தான் தரேலும்| என்கின்றார்.
இவ்வாறு நாட்கள் நகர்ந்து செல்ல மௌலவியின் மனைவி அம்ரிதா கர்ப்பமடைகின்றாள். அவளது பெற்றோரும் மௌலவியின் பெற்றோரும் மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகின்றனர். இந்தச் சந்தரப்பத்தில் நஜிமுன்னிஸா சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் சாதுரியமாக இப்படிச் சொல்லிவிடுகின்றாள்.
'ஓ இனி அல்லா லேசாக்கி வெக்கோணும். உம்ம வாப்பாமாருதான் கிட்டேக்க நின்டு பாக்கக் கேக்கோணும்'
இது அம்ரிதாவின் தாயான ஐனுள் மர்லியாவுக்கு சுள்ளென்று தைத்தது. மகளை மட்டுமா பார்க்க முடியும்? மருமகனையும் சேர்த்தல்லவா பார்க்க வேண்டும்?
'எங்கட புள்ளய நாங்க கையுடுகியல்ல' என்று அம்ரிதாவின் தந்தையான பக்கீர் நானாவும் விட்டுக்கொடுக்காமல் பேசுகின்றார்.
இதற்கிடையில் மௌலவியின் தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்கும் விடயமும் தொடங்கிவிட்டது. தாய் தந்தையரின் ஆசைப்படி தங்கைக்கு நல்லதொரு மணமகன் கிடைக்க வேண்டும். அதனால் மௌலவியோடு ஒன்றாக ஓதி, மத்ரஸா காலங்களில் சீதனமில்லாமல் திருமணம் முடிப்போம் என்று முழங்கிய அவரது தோழரான தாரிக் மௌலவியை தங்கைக்கு மணமகனாக்கும் யோசனையில் தாரிக் மௌலவியை சந்தித்துப் பேசுகின்றார் கரீம் மௌலவி. 'இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்' என்கிறார் தாரிக். ஆனால் அவருக்கு வேறொரு இடத்தில் திருமணம் நடந்துவிடுகின்றது.
இப்படியிருக்க அம்ரிதா தாய் வீட்டுக்குச் சென்று கொஞ்ச நாட்களில் அவளுக்கு குழந்தை கிடைத்துவிடுகின்றது. உறவினர்கள் வந்து பார்ப்பதும் போவதுமாக இருந்தார்கள். மகளும் மருமகனும் தங்கள் வீட்டில் தொடர்ந்து இருந்துவிடுவார்களோ என்பது பற்றி மர்லியாவும் பக்கீர் நானாவும் குசுகுசுக்கத் தொடங்கினார்கள். அதுபற்றி அம்ரிதாவின் தலையிலும் போட்டுவிடுகின்றார்கள். சீதனம் வேண்டாம் என்று அம்ரிதாவை மணமுடித்துவிட்டு அம்ரிதா தன் பெற்றோர் வீட்டில் தங்கிவிடுதல் முறையில்லை அல்லவா?
இதுபற்றி பக்குவமாக அம்ரிதா கரீம் மௌலவியிடம் கூற, அவரும் நாற்பதாம் நாள் விருந்து முடிந்த கையோடு தங்கள் வீட்டுக்கு போய்விடலாம் என்று எதுவுமறியாமல் கூறுகின்றார். காலம் நகர்கிறது. மௌலவியின் தங்கைக்கும் திருமணம் நடக்கின்றது. அதற்காக அம்ரிதா தனது நகைகளை விற்று காசு கொடுத்து உதவுமாறு கரீம் மௌலவியிடம் கூறுவதினூடாக அவளது சிறந்த பண்பு மேலோங்குகின்றது.
மௌலவிக்கும் வருமானம் போதவில்லை. ஆதலால் காலியில் இருக்கும் ஒரு பள்ளிவாசலுக்குப் போவதாக முடிவெடுக்க அனைவரும் அதை ஆமோதிக்கின்றனர். பள்ளி நிர்வாகத்தினரிடம் பேசிப் பார்த்ததில் சம்பளம் உட்பட அவரது மனைவி பிள்ளை வந்து தங்கக் கூடிய தங்குமிட வசதியும் செய்து கொடுக்கப்படுகின்றது.
திடீரென நஜிமுன்னிஸாவுக்கு உடம்புக்கு முடியாமல் போகின்றது. எனவே கரீம் மௌலவியை ஊரோடேயே தங்கிவிடுமாறு அவரது தாய் கேட்டுக்கொள்கின்றாள். அவருக்கும் அதுவே சரியாகப்பட்டது. ஆனாலும் தங்கையின் குடும்பம் அங்கிருப்பதால் தங்குவதற்கான சிக்கல்கள் ஏற்பட்டது.
தனது சம்பளம் குடும்பத்தைக் காப்பாற்ற போதவில்லை என்பதால் வியாபாரம் செய்யத் தலைப்படுகின்றார் கரீம் மௌலவி. அது ஓரளவுக்கு சுதந்திரமாகவும், வருமானம் கூடியதாகவும் இருப்பதால் அவருக்கு பிடித்துப் போகின்றது.
பக்கீர் நானா இருப்புக்கொள்ளாமல் அங்குமிங்கும் உலாவிக்கொண்டிருப்பதை ஐனுள் மர்லியா காண்கின்றாள். அவர் ஏன் அப்படி இருக்கிறார் என்று அம்ரிதாவுக்கு விளங்கவில்லை. தங்கையிடம் கேட்கிறாள். அவளுக்கும் தெரியவில்லை என்கிறாள். பிறகு தந்தை இப்படி கடுமையாக இருப்பதற்குக் காரணம் என்னவென்று ஐனுள் மர்லியா கூறும் கூற்று வாசகரை அதிர்ச்சியுறவும், சமுதாயம் பற்றி சிந்திக்கவும் வைக்கின்றது.
'இல்ல மகள்.. ஊடு தேடிக்கொண்டு போற.. ஆங்காட்டிம் இங்கேம் அங்கேமா நிக்கியென்டேன் சென்ன. இப்ப ஒரு வருசம் பிந்தீம் ஊடு தேடல்லயாண்டு வாப்பா என்னத் தின்னப் போற...'
இதைக் கேட்ட அம்ரிதாவுக்கு மிகவும் கவலையாகின்றது. கணவனிடம் பக்குவமாகக் கூறி குறைந்த கூலிக்கு, சரியாக வேலை பூரணப்படுத்தப்படாத வீடொன்றுக்கு அவசரமாக செல்கின்றார்கள்.
வருடங்கள் கழிகின்றன. கரீம் மௌலவியின் மகள் பெரிய மனுசியாகின்றாள். இப்போது அந்த சுமையும் மௌலவிக்கு கூடிவிட்டது என்றவாறு கதை முடிவடைகின்றது.
எலி வளையானாலும் தனி வளை வேண்டும் என்பது இதற்குத்தான். சொந்த பிள்ளைகளே என்றாலும் திருமணம் முடித்த பிறகு அவள் வளர்ந்த வீடு ஷதாய் வீடு| தானே தன் வீடல்ல. அதே போல ஆண் பிள்ளை என்றால் வேறொரு வீடு பார்த்துக்கொண்டு மனைவி மக்களை அழைத்துக்கொண்டு போய்விட வேண்டும். இல்லாவிட்டால் எல்லா இடமும் பிரச்சினைகள் தலை தூக்கவே செய்யும்.
வீடு இல்லாவிட்டால் எப்படியெல்லாம் மற்றவர்களிடம் தலைகுனிய வேண்டி வரும் என்பதை மிக தத்ரூபமாக விளக்கிக் காட்டுகின்றார் திக்குவல்லை கமால் அவர்கள். சமுதாய பிரச்சினைகள் தன் படைப்புக்களினூhக வெளிப்படுத்தியும், ஊர் பாஷையை அழகாக உட்செருகி இலக்கியம் படைத்தும் வரும் அவரை மனமார வாழ்த்துகிறேன்!!!
நூல் - வீடு
நூல் வகை - நாவல்
நூலாசிரியர் - திக்குவல்லை கமால்
வெளியீடு - கலாசார அலுவல்கள் திணைக்களம்
விலை - குறிப்பிடப்படவில்லை
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.