அண்மையில் நான் படித்தவற்றில் என்னை மிகவும் கவர்ந்ததும் எமது சமுதாயத்திற்கு பெரிதும் உதவக் கூடியதும் எனச் சொல்வதானால் அது பேராசிரியர் மா.சின்னத்தம்பி எழுதிய 'புதிதாகச் சிந்திப்போம்.- சமுதாயத்திற்கான கல்வி' என்ற நூலாகும். பேராசிரியர் மா.சின்னத்தம்பி பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறைப் பேராசிரியர். எமது சமூகத்திற்கு புதிய ஊற்றுக் கண்ணைத் திறந்துவிடுவது போல எமக்குத் தேவையான கல்வி முறை பற்றி, கட்டுரைகள் மற்றும் உரைகள் வாயிலாக அறியத் தருபவராவார். நூலின் அந்தத் தலையங்கமே மிகவும் அர்த்தபுஸ்டியானது. கல்வி என்பதை அறிவுக் கண்ணைத் திறப்பதற்கானது என்பதை பாரம்பரியமாகப் போற்றி வந்தவர்கள் நாம். ஆனால் கல்வியானது தனி நபரது முன்னேற்றத்திற்கு மட்டுமே ஆனதாக எல்லைப்படுத்தப்படும் துரதிஸ்டவசமான நிலைக்கு நாம் இன்று தாழ்ந்து போயிருப்பதைக் காண்கிறோம்.
பணமீட்டித் தரக் கூடிய சில பாடநெறிகளையே பெற்றோர்கள் பிள்ளைகளுக்குத் திணிக்கிறார்கள். பணம் தேவைதான். இதனால் பரீட்சையில் வெற்றி பெற முடியாத பிள்ளைகள் உயர்தரப் பரீட்சைக்கு பின் நிர்க்கதியாகி அவதிப்படுகிறார்கள். பிஞ்சு வயதான ஐந்தாம் வகுப்பிலேயே போட்டிப் பரீட்சைகளுக்கு முகம் கொடுக்க நேர்வதால் குழந்தைகளின் உடல் உள நலங்கள் பாதிப்படைகின்றன.
இவற்றால் பெற்றோர்களுக்கு நெருக்கடியான சூழ்;;நிலையும் உள நெருக்குவாரங்களும் ஏற்படுகின்றன. சில ஆசிரியர்கள் கல்வி முதலாளிப் பெருச்சாளிகளாக மாறும் அதே வேளை பெரும்பாலான ஆசிரியர்களின் நிலமை மோசமாக இருக்கிறது.
மறுபுறம் பார்க்கைளில் சமூகத்தில் தொழில் முறைப் பயிற்சி பெற்றவர்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்குக் காரணம் கல்வியானது சமூக மேம்பாட்டை இலக்காகக் கொண்டதாக இல்லை என்பதே ஆகும்.
இந்தச் சூழலில் சமூகத்திற்கு விழிப்புணர்வைத் தரக் கூடியதாக பேராசிரியரின் இந்த நூல் இருக்கிறது. பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நல்ல வழிகாட்டியாக அமைந்துள்ளது.
"பழைய சிந்தனைகள், கோட்பாடுகள் என்பவற்றிற்குள் அடைபட்டு, அவற்றை மீள் வாசிப்புச் செய்யாமல், நடைமுறை உலகில் கல்வி அமுலாக்கம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை தூரநோக்கில் சிந்திக்கின்ற ஆற்றல் பேராசிரியரின் தனிச்சிறப்பிற்கு நல்ல சான்றாதாரமாகும்". வலம்புரி பத்திரிகையில் இக் கட்டுரைத் தொடர் வெளிவர உந்து சக்தியாக இருந்த அதன் பிரதம ஆசிரியர் நல்லையா விஜயசுந்தரம் சொல்வது இதுவாகும்.
தான் எடுத்தாண்ட விடயங்களுக்கு அவர் கொடுத்த தலையங்கங்களை கூர்ந்து அவதானித்தாலே இந்த நூலின் பயன்பாட்டையும், அதன் விசாலிப்பையும் உணர்ந்து கொள்ள முடியும். 206 பக்கங்களாக நீளும் இந்த நூலில் 30 கட்டுரைகள் அடங்கியுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு
உதாரணமாகக் காட்டலாம்.
*பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்காக நீங்கள் என்ன செய்கிறீர்கள்?,
*நல்ல பெற்றோர்களாக நடந்து கொள்வது எப்படி?,
*பரீட்சைக்காக மாத்திரம் கற்பித்தால் திருப்தி அடைய முடியுமா?,
*பரீட்சைகளில் தோல்வி அடைந்தவர்களைப் பற்றிப் போசுவது அவசியமா?,
*மாணவர்கள் சுயமாகக் கற்பதற்குரிய சூழலையும் வாய்ப்புகளையும் அகலப்படுத்துவது அவசியம்தானா?,
*பாடசாலைகள் மாணவர்களிடம் சமூகத் திறன்களை வளர்க்கத் தவறிவிட்டனவா?,
*மாணவர்களே உங்களை முன்னேற்றும் நல்ல திறன்களை நன்கு அறிவீர்களா?,
*பல்கலைக்கழக மாணவர்களே நீங்கள் எவற்றையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும்,
*அரசபாடசாலை ஆசிரியர்கள் ஏன் ஊக்கம் குறைந்து விரக்தியுடன் உள்ளனர்?,
*க.பொ.த உயர் வகுப்பில் எல்லோரும் தமது காலத்தைச் செலவிடுவது நியாயமானதா?,
*தொழில் வாய்ப்புப் பெற உதவி செய்யாத பட்டப்படிப்புகளிலிருந்து விலகிவிட முடியுமா?
இவற்றைத் தவிர மொழிக் கல்வி, பிள்ளைகளின் சுயகணிப்பு, பேச்சுக் கல்வி, முன் பள்ளிகள், முறைசாராத தொழில் கல்வி, கடல்வள உயர்கல்வி, பெண்களின் ஆற்றல், முதியோர் ஆற்றல், வெளிநாட்டு பழைய மாணவர்களின் பாடசாலைகளுக்கான நன்கொடைகள் பயன்படுத்தப்படும் விதம் போன்ற கல்வி தொடர்பான வேறு பல அரிய விடங்களையும் நூலாசிரியர் சிறப்பாக ஆராய்கிறார்.
முதுகல்வி பெற்றவர்கள் பேராசிரியர்கள் போன்ற பலரும் கலைச்சொற்கள் விரவி நிற்க கடுமையான வாக்கியங்களை அமைத்து தமது அறிவாண்மையைப் பறைசாற்றி எழுதி வருகையில் பேராசிரியர் சின்னத்தம்பியின் எழுத்து நடை மிகவும் சரளமானதும் எளிமையானதும் ஆகும். சாதாரண வாசகனும் இலகுவாக வாசித்து புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. வீணான அலட்டல்கள் இல்லை. பல விடயங்களைப் புள்ளியிட்ட சிறு குறிப்புகளாகத் தருவது அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கு கைகொடுக்கிறது.
அதற்கு அப்பால் எடுத்தாளப்படும் பிரச்சனைகளுக்கான அவரது வழிகாட்டல்களும் நடைமுறையில் செயற்படுத்தக் கூடியவையே. அதனால் பயன் மிக்கது.
இந்த நூலைப் பெற்றோர்களுக்கானது என்று மட்டுப்படுத்த முடியாது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மட்டுமின்றி சமூக முன்னேற்றதில் அக்கறை உள்ள அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய நூலாகும்.
நூலின் விலை ரூபாய் 420.00 எங்கே விற்பனைக்குக் கிடைக்கும், எங்கு தொடர்பு கொள்வது போன்ற தகவல்களை நூலிலிருந்து பெற முடியவில்லை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.