ஒரு ஆசுவாசமான காலைப் பொழுதில்தான், கருணாகரனின் கவிதைகள் மீது என் பார்வை பதிந்திருந்தது. ‘ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்’ – தலைப்பைப் போலவே, கவிதைகள் தோறும், போரின் நெடில். கவிதை மற்றும் புனைவுகளை வாசிக்கும் போது, தவிர்க்க முடியாமல் ஒரு சிக்கல் எழுவதுண்டு. பின்-நவீனத்துவவாதிகள் சொல்லுவது போன்று எல்லா சந்தர்ப்பங்களிலும், படைப்பாளி இறந்துவிடுவதில்லை. கருணாகரனின் கவிதைகள் மீது பார்வை படர்ந்த போதும், கவிதையுடன் சேர்த்து கூடவே, கருணாகரன் பற்றியும் சிலதையும், மனது அசைபோட்டுக் கொண்டது. எனக்குத் தெரிந்த கருணாகரன், புலிகளின் வன்னி முற்றங்களுக்குள் விமர்சனங்களை பவுத்திரப்படுத்தியவாறு வாழப் பழிகிக்கொண்ட சிலரில், ஒருவர். கருணாகரனுக்கும் எனக்குமான முதல் சந்திப்பு நிகழ்ந்த அந்த நாட்களை எண்ணிப்பார்ப்பது, இந்தக் கவிதைத் தொகுப்பைப் பொறுத்தவரையில் கனதியானதாகும். அந்த நாட்கள் மிகவும் இனிமையானவை. இடது, வலது என்னும் கருத்து மூட்டைகளை ஒரு பக்கமாக வீசிவிட்டு, வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தமிழ்நாடு என்று, அனைத்துப்பகுதி படைப்பாளுமைகளும் சங்கமித்துக்கிடந்த ஒரு நாளில்தான், நாங்கள் நட்பாகிக் கொண்டோம். அது ‘மானுடத்தின் தமிழ் கூடல்’ என்னும் சுலோகத்தின் கீழ் அரங்கேறியிருந்தது. பின்நாட்களில், கருணாகரனின் கிளிநொச்சி முற்றத்திலிருந்து நாங்கள் பல தடைவைகள் அளவளாவியிருக்கிறோம். முரண்பட்டுமிருக்கிறோம்.
கருணாகரனை காட்டிலும் புலிகள் குறித்து என்னிடம் பிரம்மிப்பு அதிகமிருந்த காலமது. ஏனெனில் நான் வன்னிக்கு வெளியிலிருந்து புலிகளைப் பார்த்தவன். கருணாகரன், விடுதலைப்புலிகளின் எல்லைக்குள் வாழப்பழகிக் கொண்ட போதிலும்கூட, புலித்தனமற்றும் வாழப்பழகிக் கொண்ட ஒருவராகவே, எனக்கு அறிமுகமாகியிருந்தார். கருணாகரன் மட்டுமல்ல, புலிகளை ஏற்றுக்கொண்டிருந்த இன்னும் சிலரும், விமர்சனங்களை காவியவாறுதான், அப்பகுதியில் உலவிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் எவராலும் தாங்கள் விரும்பியவாறு தங்களது விமர்சனச் சுமைகளை இறக்கிவைக்க முடிந்ததில்லை. அதற்கான முயற்சிகளை அவர்கள் மேற்கொள்ளவும் விரும்பவில்லை. ஏனெனில் அது ஒரு விசப்பரிட்சை. அந்த விசப்பரிட்சையில் ஈடுபட்டால், அதன் விளைவு ஒன்றில் வெளியேற்றமாக இருக்கும் அல்லது தனிமைப்படுத்தலாக இருக்கும். சில வேளை மரணமாகவும் இருக்கலாம். எவர் இந்த விசப்பரீட்சையில் இறங்கத் துணிவார்? இதன் விளைவு, ஒரு வகையான அலையும் மனநிலையுடனேயே, இவர்களது படைப்புலக வாழ்வு கழிந்தது. ஆயினும் எப்போதாவது சில நண்பர்கள், ஏதாவதொரு முற்றத்தில் சந்தித்துக் கொள்ளும் போதெல்லாம், தங்கள் சுமைகளை சிறிது இறக்கிவைத்துக் கொள்வதில் மகிழ்ந்தனர். இப்போது அந்தச் சுமைகளை தங்கள் முற்றங்களுக்கு அப்பாலும் பேசக் கூடிய நிலைமை வாய்த்திருக்கிறது. எனவே அவர்கள் பேசுகின்றனர். ஆனால் இதிலுள்ள ஒரு சிக்கல், என்னதான் இவ்வாறானவர்கள் பேச முற்பட்டாலும், இவர்கள் தங்களுக்கும் இந்தப் பேரவலத்திற்கும் எந்தத் தொடர்புமில்லையென்று வாதிட முடியாது. எனவே தங்கள் மீதான விமர்சனத்திலிருந்தே, இவர்கள் எதையும் பேச வேண்டியிருக்கும். ஆனால் கவிதைகளின் ஊடாக, இதனை அதிகம் செய்வது கடினம் என்பது எனது அபிப்பிராயம். ஆனாலும் போர் ஓய்வுக்கு பின்னர், அந்தப் போரின் சாட்சியாக இருந்த ஒரு கவிஞன் என்னும் வகையில் கருணாகரனது குரல் நமது காலத்தின் முக்கியமான பதிவு. அந்த வகையில் கருணாகரனை இந்தத் தலைமுறை ஊன்றிக் கவனிக்க வேண்டியிருக்கிறது. அது ஒரு புதிய உரையாடலுக்கான கதவைத் திறக்கவல்லது. 2 ‘நான் நானாக இருப்பதிலும் நீ நீயாக இருப்பதிலும் ஏன் நம்மிடையே ஓயாத பிணக்கு உன்னை என்னுள் திணிப்பதையும் என்னை உன் மீது ஏற்றுவதையும் வெறுக்கின்றேன்.’ இது 1999இல் வெளிவந்த கருணாகரனின் ‘ஒரு பொழுதுக்காக காத்திருத்தல்’ தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் வரிகள். அந்தத் தொகுப்பிற்கான முன்னுரையை கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுதியிருக்கின்றார். புதுவை இரத்தினதுரை அப்போது, தமிழீழ விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டுக் கழக பொறுப்பாளராக இருந்தவர்.
ஒடுக்குமுறை, ஓடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்னும் கருத்தியலால் அனைவரும் வனையப்பட்டுக்கிடந்த ஒரு சூழலில், வன்னிக்குள் இருந்து வெளிவந்த குரலிது. எனவே இவ்வரிகள், கருணாகரன் தன்னை முன்னிறுத்திச் சொல்லியதா அல்லது, தான் கட்டுண்டு கிடந்த சூழலை முன்னிறுத்திச்; சொல்லியதா? இதற்கு விடை கருணாகரனிடம் மட்டுமே உண்டு. ஆனால் கருணாகரனின் மேற்படி கவி வரிகள் பற்றி புதுவை இவ்வாறு பதிவிட்டிருக்கின்றார்- ‘எந்த வேளையிலும் தன்னை இழக்கவும், எவர் மீதாயினும் தன்னைப்படரவிடவும் விருப்புறா மனிதனின் விலாசமிது’. ஆனால் கருணாகரன் புலிகள் தீர்மானித்த வன்னிக்குள், தன்னை இழந்தே கிடந்தார் என்பதே உண்மை, சில விமர்சனச் சுமைகளை காவியலைந்தவாறு. இது கருணாகரனுக்கு மட்டுமே உரித்தான ஒன்றா? இன்று நிமிர்ந்து பேச முற்படும் ஆளுமைகள் அனைத்தும் அன்று குனிந்தே கிடந்தனர் என்பது வரலாறு. இப்போது அந்தச் சுமைகளை கருணாகரன் இறக்கிவைக்க முயல்கின்றார். அவரே சொல்லுவது போன்று, இதனை எதுவரையில்தான் கொண்டலைவது? ‘ஒரு முள்ளில் சிக்கிக் கொண்ட வரலாற்றை எதுவரையில் கொண்டலைவது?’ 2009, மே 19 – எல்லா நம்பிக்கையினதும், எல்லா கனவுகளினதும், எல்லா ஊகங்களினதும், எல்லா அறிவீனத்தினதும் முடிவாக இருந்தது. ஒரு பேரொளியைக் காணும் மூன்று தசாப்தகால தவத்தை இருள் முழுமையாக விழுங்கிக்கொண்ட நாளது. இதன் விளைவு – அத்தவத்தின் மீது பெரும் பக்திகொண்டிருந்த மக்கள் கூட்டமொன்று, அனாதரவற்ற சந்தியொன்றில் உருக்குலைந்து கிடந்தது. இப்போதும் அவர்கள் நிமிர்ந்தெழும் வழி தேடியவாறுதான் அலைகின்றனர் – அவர்கள் முன்னால் பல மீட்பர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிற போதிலும் கூட. ஆனால் எல்லாமும் முடிந்துபோன அந்த நாளின் பின்னரும் கூட – சிலர் அந்த இருள் வாழ்விலும் சுவை இருப்பதாக கதைகள் புனைய எத்தனித்தனர். மீண்டும் சில கற்பனைகளும் அத்துடன் சில அறியாமைக் குறிப்புகளும் ஈழத் தமிழர் அரங்கை ஆக்கிரமிக்க முயன்றன. வீழ்ந்து கிடக்கும் மக்கள் எழுந்து பேசப்போவதில்லை என்பதை நன்குணர்ந்தவர்கள், மீண்டும் அப்பேரொளிக் கனவை பரப்ப முற்பட்டபோது, இன்னும் எவ்வளவு காலம்தான் இதனைச் சகித்துக்கொண்டு அமைதிகாக்க முடியுமென்னும் கேள்வி எழுந்தது. இந்தச் சூழலில்தான், சில ஆளுமைகள் பேச எத்தனித்தனர். பேசித்தான் ஆக வேண்டும் – அவர்கள் மக்களை நேசிக்கும் உண்மையான ஆளுமைகளாக இருப்பின். இந்தப் பின்புலத்தில்தான் கருணாகரனின் மறுபிரவேசம் நிகழ்கிறது.
தனது கடந்த காலத்தின் மீது காய்தல் உவத்தலற்ற விமர்சனமொன்றுடன் அவர் வெளிவந்த போது, அதுவரையான தனது மௌனவிரதத்தை கலைத்துப் போடுவதே கருணாகரன் முன்னிருந்த ஒரே தெரிவு… அந்த மௌன உடைவுதான், இத் தொகுப்பு… ‘மிஞ்சியவற்றை கணக்கிடுவதற்கிடையில் ஒரு திரை விழுகிறது எதிர்பாராமல் மீண்டும் அலங்கரிக்கப்பட்ட அரங்கத்தில் இன்னொரு நாடகத்துக்கான அழைப்பு முடியாது, இனியும்.’ கருணாகரனின் மறுபிரவேசம் என்பது, முற்றிலுமாக தன்னை புதுப்பித்துக் கொள்வதற்கான தேடலொன்றுடன் அவரைப் பிணைத்துக் கொள்கிறது. இந்த வரிகள் அதன் சான்று… வழிதவறிய ஒரு ஆட்டுடன் ஓரிடையன் தொடர்ந்தும் அலைய முடியாது உனது சொற்களிலிருந்தும் புள்ளியிலிருந்தும் விடைபெறுகின்றேன். செயலின் முகம் விரிகிறது இன்னொரு வெளியில்’ கருணாகரன் என்னும் ‘போர்க்கால பயணியின் குறிப்புக்கள்’ தோறும், போர் வலியின் நெடில் நிழலாடுகின்றது. அது வெறுப்பும், ஆவேசமும் கலந்த ஒன்று. ஒரு போர் சம்பித்துப்பிய கவிஞன் வேறு எதைத்தான் பேச முடியும்?
இது தமிழ் போர்ச் சூழலுக்கு மட்டுமல்ல, எங்கெல்லாம் போர்கள் மனிதர்களை சம்பித் துப்புகிறதோ, அங்கெல்லாம் போர் எதிர்ப்புக் குரல்கள்தான் எஞ்சிக்கிடக்கும். ஏனெனில் போரின் அரக்க இருள்வெளியில் அலையச் சபிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரிந்த வலியது. அவ்விருள் எவ்வளவு நீசத்தனமானது என்பதை அவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். போருக்கு வெளியில் இருந்தவர்கள் போரை இயக்கிய அரசியலுக்கு விளக்க உரையெழுத முடியுமே தவிர, ஒரு போதுமே போரளித்த வலியதை, விளங்கிக் கொள்ள முடியாது. ஏனெனில் அது மற்றவர்களால் விளங்கிக் கொள்ளவே முடியாதவொன்று. போரில் சிக்கிய வாழ்வு எவ்வளவு கொடுமையானது என்பதை கருணாகரன் சொல்லும் போது, மனது என்னையும் அறியாமல் பதறுகிறது. கடவுள் மீது நம்பிக்கையில்லாத நான் கூட, கடவுளை ஒரு முறை பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும் போலொரு உணர்வுக்கு ஆட்படுகிறேன். நினைத்துப் பார்க்கும்போதே அச்சம் மனதெங்கும் ஊடுருவிச் செல்கிறது. அப்படியாயின் அதற்குள் வாழ நிர்பந்திக்கப்பட்ட அந்த மக்கள் குறித்து என்னவென்பது? மலத்திற்கு மேல் மலமிருக்கும்
அலைக்கழிக்கப்பட்டவர்களின் இரவொன்றைப் பற்றியும் சொல்வதற்கு யுத்தத்தின் பிதாவை தேடுகின்றேன். ‘மலத்திற்கு மேல் மலமிருக்கும்’ – இதைவிடவும் ஒரு கவிஞன் போர் அவலத்தைச் சொல்ல வார்த்தைகள் இருக்கின்றனவா? வன்னிப் போரின் அவல வாழ்வை நம் முன் கொண்டுவரும் உச்ச வரிகள் இவை. இதனைவிட யுத்தத்தின் அவலத்தை நேர்த்தியாக சொல்லிவிட முடியுமென்று நான் நம்பவில்லை. ‘மலத்திற்கு மேல் மலமிருத்தல்’ இதனை வாசிக்க நேரும் ஒவ்வொரு மனிதனும், சில மணித்துளிகள் தடுமாறவே செய்வான். இப்படியும் ஒரு வாழ்க்கையா? கடவுளே, பிதாவே, அல்லாவே, கௌதம புத்தரே இப்படியொரு வாழ்கையை ஒரு போதுமே எனக்களித்துவிடாதீர். இப்படியொரு வாழ்வை எனக்களிப்பதென நீவீர் முடிவெடுப்பின் அதற்கு முன்னால் என் மூச்சை நிறுத்திவிடும் – என்று மன்றாடுவான். யுத்தத்தின் கொடூரத்தை இவ்வரிகள் வேறுவிதமாகச் சொல்லுகின்றன… உச்சரிக்கும் போது, அச்சவுணர்வு பாம்பாக மனதுள் நெளிகிறது. ‘தலையில்லாமல் வாழ்வதும் ஒரு வாழ்க்கைதான் அந்த வாழ்க்கையின் ருசியைப் பற்றி நான் சொல்லப் போவதில்லை அதை தெருநாய்கள் சொல்லட்டும்’ 3 ஈழத்து இலக்கிய பரப்பில் போர்க்கால இலக்கியம் குறித்து உரையாடல், அதிகம் கவிதைகளில்தான் மையங் கொண்டுள்ளது. அரச ஒடுக்குமுறையாலும் அதற்கு எதிரான குரல்களாலும், ஈழத்து கவிதை புடம்போடப்பட்ட அன்றைய நாட்களில், போர்க்கால இலக்கியம் என்பது பெருமளவிற்கு அரச ஒடுக்குமுறை சார்ந்து உருப்பெற்றதேயன்றி, போராளிகள் என்போரின் மக்கள் விரோத செயல்களை முன்னிறுத்தியதாக, அது அமைந்திருக்கவில்லை. ஆங்காங்கே ஒரு சில குரல்கள் வெளிப்பட்டதேயன்றி, அது ஒரு ஒரு இலக்கியப் போக்காக இருக்கவில்லை. ஆங்காங்கே வெளிக்கிளம்பிய சில குரல்களும் ஈழத்து இலக்கிய உரையாடல் வெளிக்குள் இடம்பிடிக்க முடியாதவொரு சூழலே அன்று நிலவியது. விடுதலைப்புலிகள் வசம் ஒரு கட்டுப்பாட்டு பகுதியிருந்த காலத்தில், ஏராளமான படைப்புக்கள் வெளிவந்திருந்தன. புலி உறுப்பினர்கள் பலரும் எழுதியிருந்தனர். அவ்வாறான படைப்புக்கள் சிலவற்றை வாசித்த அனுபவம் எனக்குமுண்டு. அவ்வாறான படைப்புக்களில் விடுதலைப்புலிகளை விமர்சிப்பதென்பது முடியாதவொரு காரியமாகவே இருந்தது. வன்னிக்கு வெளியிலிருந்து எழுதியவர்களும் கூட, தங்களது படைப்புக்களில் அரச அடக்குமுறைகள் குறித்து பேசியளவிற்கு, ஒரு சிறிதளவேனும் விடுதலைப்புலிகளின் தவறுகள் குறித்து பேசியதற்கு சான்றில்லை. ஆனால் இன்று எல்லாவற்றையும் காய்தல் உவத்தலற்ற முறையில், திரும்பிப் பார்க்குமாறு காலம் படைப்பாளுமைகளை வலியுறுத்துகின்றது. ஆனாலும் இதுவரை பேசப்பட்டவை ஒரு சிறு பகுதியென்பதே என்பது எனது அபிப்பிராயம்.
பேசவேண்டியவைகள் இன்னும் ஏராளம் உண்டு. அனைத்தும் இலக்கியப்பரப்பில் பேசப்படும் ஒரு சூழல் தோன்றும் போதுதான், ஈழத்தின் போர்க்கால இலக்கியமென்பது அதன் முழு வீச்சில் வெளிப்படும். அந்த வகையில் கருணாகரனின் ‘ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்’ முக்கியமானதொரு வருகை என்பதில் சந்தேகமில்லை. இது ஒரு உரையாடலுக்கான அழைப்பென்றே சொல்லுவேன். ஆனால் இதிலுள்ள துயரம், ஈழத்து அரசியல் பரப்பில், புனிதமென்றுரைத்த ஒன்றின் மீதான விமர்சனம், நேற்று எவ்வாறு நோக்கப்பட்டதோ, இன்றும் கூட அது அவ்வாறுதான் நோக்கப்படுகிறது. இது ஈழத்து அரசியலின் சாபக்கேடு. அது இலக்கியத்திலும் தொடர்கிறது. அரசியல் எங்கெல்லாம் ஜனநாயக மறுப்புடன் புனர்ந்து கொள்கிறதோ, அங்கெல்லாம் இலக்கியத்திலும் ஒரு அச்சுறுத்தும் அசரீரி இருக்கவே செய்யும். ஜனநாயகத்தை மற்றவர்களிடம் கோரும் சில தமிழ்தேசியவாதிகள், அதனை தங்களுக்குள் அனுமதிக்க முடியாத கோழைகளாகவும் இருப்பதன் வெளிப்பாடே இது. ஆனால் ஜனநாயகம் என்பது தரப்படுவதல்ல, அது எடுத்துக் கொள்ளப்படுவது. அந்த வகையில், கருணாகரனின் புதிய வரவு, ஈழத்து இலக்கியச் சூழலில் ஒரு திடகாஸ்தரமான உடைவாகும். அது வளர்த்துச் செல்லப்பட வேண்டிய ஒன்று. ‘இத்தலையைக் கிள்ளியெறியுங்கள் அவமானங்களைச் சகிக்க முடியாது இனியும். முட்டாள்தனங்களுக்காகவும் கோழைத்தனத்துக்காகவும் உயிரும் குருதியும் நான் தர வேண்டுமெனில் இதோ என்னுடைய தலை’
அனுப்பியவர்: நடேசன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.