ஜீவநதியின் 28 ஆவது வெளியீடாக மலர்ந்திருக்கிறது ப. விஷ்ணுவர்த்தினி எழுதிய நினைவு நல்லது வேண்டும் என்ற சிறுகதைத் தொகுதி. 93 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்நூலில் 12 சிறுகதைகள் இதில் உள்ளடங்கியிருக்கின்றன. அருள் திரு இராசேந்திரம் ஸ்ரலின் அவர்களின் வாழ்த்துச் செய்தியோடு, வி. ஜீவகுமாரனின் முன்னுரையும் இத்தொகுதியை அலங்கரிக்கின்றன எனலாம். இது நூலாசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுதியாகும். இவர் ஏற்கனவே 2010 இல் மனதில் உறுதி வேண்டும் என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். நினைவு நல்லது வேண்டும் என்ற சிறுகதைத் தொகுதி போரின் கொடுமைகள், மக்கள் அதனால் பட்ட அவதிகள், யுத்தம் அழித்துச் சென்ற செல்வங்கள் போன்ற பலதரப்பட்ட விடயங்கள் சம்பந்தப்படுத்தி எழுதப்பட்டிருப்பதானது, போர் மக்களின் மனதில் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்பதை நன்கு உணரக்கூடியதாக இருக்கின்றது. எத்தனை ஆயிரம் உயிர்கள் இந்த போரின் போது இறந்தன? எத்தனை நபர்கள் காணாமல் போயுள்ளனர்? என்ற அடிப்படைக் கேள்விகளுக்கு விடையே இல்லாத சூழலில் இந்தத் தொகுதியானது சிலருக்கு, சிறந்த ஆறுதலாகக்கூட இருக்கலாம் என்ற அளவுக்கு அதில் சித்தரிக்கப்பட்டுள்ள விடயங்கள் மனதைக் கவர்கின்றன.
சொந்தமில்லா பந்தங்கள் (பக்கம் 01) என்ற முதல் கதையின் தலைப்பே கதையை சொல்லிவிடுகின்றது. எந்த விதத்திலும் இரத்த சொந்தமே இல்லாத பிள்ளைகள் ஒரு பெண்மணியிடம் தஞ்சம் புகுகின்றன. அரக்கப்பரக்க அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் சாப்பிடுவதைக் கண்டு அப்பெண்ணின் இதயம் மிகவும் துன்பப்படுகின்றது. முகாமில் வாழ்ந்த அந்தப் பெண்ணுக்கு மீண்டும் தன் சொந்த இடத்தில் குடியேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. அவளுடன் இருக்கும் இந்த மூன்று குழந்தைகளையும் அவள் அழைத்துப் போகலாம். ஆனாலும் தனக்கு ஏதாவது நடந்தால் இந்தக் குழந்தைகளின் கதி என்ன என்று சிந்திக்கும் அவள் மூன்றாவது குழந்தையை மாத்திரம் தூக்கிக் கொண்டு மற்ற பிள்ளைகளிடமிருந்து துன்பத்துடன் விடைபெறுகிறாள். மற்ற இருவரும் அந்த அம்மம்மாவை குத்திட்டுப் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். இதுதான் கதையின் பிரதான அம்சம்.
`யாரை நொந்து என்ன பயன்? எல்லாம் என் தலைவிதி.
தலைவிதி என்றால் அதை ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் சேர்த்துத்தான் இறைவன் எழுதுவானோ?
இந்த முட்கம்பி வேலிக்குள் சிறைப்பட்டிருக்கும் அனைவருக்குமே ஒரே தலையெழுத்து தானோ?' என்று இந்தக் கதையின் தொடக்கத்தில் கதாசிரியர் எழுதியிருக்கும் வரிகள் வலியை சுமந்து நிற்கின்றன.
திருப்பம் (பக்கம் 09) என்ற கதை கணவனை இழந்த பெண்ணின் சோகத்தை சொல்லி நிற்கின்றது. சந்திரமதி என்ற பெண்ணின் கணவன் அவளது கண் முன்னிலையிலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரைவிட்ட பின் அவளது வாழ்வு எப்படி பிரச்சனைகளுடன் கழிகிறது என்பதை அழகாக எழுதியுள்ளார் கதையாசிரியர். முகாமிலிருந்து வெளியேறிய பிறகு ஊறுகாய் போத்தல் விற்று தன் வருமானத்தைப் பார்க்கிறாள் அந்தப் பெண்.
ஒரு ஆண் துணையுமின்றி சைக்கிளில் அவள் போய் அவற்றை விற்பனை செய்வதைக் கண்டு சந்திரமதியின் தாயின் உள்ளம் தவிக்கிறது. சந்திரமதிக்கு மறுமணம் செய்து வைக்க முனைகிறாள் அந்தத் தாய். ஆனாலும் சந்திரமதியின் மனது அதற்கு இடம்கொடுக்கவில்லை. அவளது கணவனோடு அவள் வாழ்ந்த நாட்களை அவள் இன்னும் மறக்கவில்லை. ஆதலால் மறுமணம் என்ற பேச்சையே பேச வேண்டாம் எனத் தாய்க்கு உறுதியுடன் கூறுகிறாள். எனினும் அவளை குறிவைத்த பல கண்களை அவள் தினமும் காண்கிறாள். அவர்களிடமிருந்து தப்பித்து தன் மூன்று குழந்தைகளையும் அவள் இனி எப்படி வளர்ப்பாள்? என்ற கேள்வி வாசகருக்கு எழுகின்றது. ஆனாலும் அந்த வாழ்க்கையை எதிர்கொள்ளத் தயாராய் அவள் துணிவுடன் செயற்படுகிறாள் என்பது பெரும் ஆறுதலைத் தருகின்றது.
நினைவு நல்லது வேண்டும் (பக்கம் 17) என்ற மகுடக் கதையானது சாந்தினி என்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகத்தை எடுத்தியம்புகின்றது. அவளது கழுத்தில் பட்ட ஷெல் துண்டொன்று காலப்போக்கில் அவளுக்கு தாங்க முடியாத வலியைக் கொடுக்கின்றது. கொழும்புக்குப் போய்த்தான், அதற்குரிய அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்று அவளுக்கு அறிவுறுத்தப்படுகின்றது. அதற்காக அவளிடம் செலவுக்குப் பணமுமில்லை. போய் வருவதற்கான துணையுமில்லை. அதனால் தமக்கென்றிருக்கும் காணியை விற்று தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு சாந்தினியும், அவளது தாயும் கொழும்புக்கு வருகின்றனர். ஆனால் மொழிப் பிரச்சனையும், ஆட்களைத் தெரியாத பயமும் அவர்களை ஆட்கொள்கிறது. இறுதியில் ஒருவாறு வைத்தியசாலையை அடைந்து சாந்தினி அங்கே அனுமதிக்கப்படுகின்றாள். அங்கு தாதியாக தொழில் புரியும் ஒரு சிங்களப் பெண் மற்றவர்களை விழுந்து விழுந்து கவனித்தாலும், சாந்தினியைக் கண்டதும் கடுகடுப்பாகவே பேசுகிறாள். சாந்தினிக்கு இதுவொரு பெரும் மனக்குழப்பத்தைக் கொடுக்கின்றது.
அதாவது அந்தத் தாதியின் கணவன் யுத்த பூமியில் இறந்துவிட்டான். அந்த கோபத்தையே அவள் சாந்தினிக்கு காட்டுகிறாள் என்று அறிந்தபோது மிகவும் வருத்தப்படுகிறாள் சாந்தினி. சாந்தினியும் தன் இரு தம்பிகளை யுத்தத்தில் இழந்தவள்தான் என்று அந்தத் தாதி பின்பு அறிகின்றாள். அதற்குப்பிறகு அவர்களுக்குள் ஒற்றுமை உண்டாகின்றது என்பதையும், யார் யாரோ செய்த தவறுகள் யார் யாரையெல்லாமோ பாதிக்கின்றது என்ற உண்மையையும் இக்கதை உணர்த்தி நிற்கின்றது.
விழித்திரு (பக்கம் 63) என்ற கதை பிருந்தா என்ற ஒரு சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வல்லுறவு பற்றிச் சொல்லுகின்றது. தனது தந்தை இறந்தவுடன், தனது தாயான மாலினியை திருமணம் செய்து கொள்வதால் பிருந்தா என்ற ஒரு சிறுமிக்கு சித்தப்பாவாகின்றார் சிவநேசன். இவர் ஆரம்பத்திலேயே போரினால் ஒரு காலை இழந்தவர். அதனால் வெளியில் சென்று வேலை செய்ய முடியாது என்பதால் வீட்டிலேயே தேங்காய் வியாபாரம் செய்து வருகின்றார். மாலினியும் தூர இடத்துக்கு கூலி வேலைக்கு செல்வதால் கணவனின் பொறுப்பிலேயே பிள்ளைகளை விட்டுச் செல்வது வழக்கம். முதலில் எந்தவித சலனங்களும் இல்லாதிருந்தபோதும், பிருந்தா பதின்மூன்று வயதில் பருவமடைந்த பின்பு சிவநேசனின் நடவடிக்கைகள் மாறிப் போகின்றது. சொந்தத் தகப்பன்களே இக்காலத்தில் பிள்ளைகளை வேட்டையாடும்போது சித்தப்பா எம்மாத்திரம்? வேலியே பயிரை மேய்கின்றது.
இது பற்றி தாயிடம் சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டுகின்றான் சித்தப்பன். சில நாட்களுக்குள் தனது மகள் கர்ப்பமான விடயத்தை மாலினி அறிந்து துடிக்கின்றாள். பின்பு இரவு முழுவதும் யோசித்துவிட்டு பிருந்தாவின் கருவைக் கலைப்பதற்காக மாலினி பிருந்தாவை அழைத்துச் செல்கின்றாள். தனக்கு என்ன நடந்தது? ஏன் தாய் இங்கே அழைத்து வந்தாள் என்றுகூட தெரியாமல் பிருந்தா யோசிக்கின்றாள். அவ்விடத்தில் பப்பாசிக்குழாய், சைக்கிள் சில்லுக்கம்பி ஆகியவற்றின் மூலம் மூடத்தனமான வைத்திய முறை நடக்கின்றது. சிறிது நேரத்தில் பிருந்தா என்ற சின்னப் பூ இறந்துவிடுகின்றது.
போர் தந்துவிட்டுப் போன காயங்கள் ஏராளம். அவற்றை சொல்லில் வடிக்க முடியாது. ஆனாலும் சமூகம் எதிர்கொண்ட சோகங்களை தன் பேனாவால் கதையாக்கித் தந்திருக்கும் ப. விஷ்ணுவர்தினி பாராட்டப்பட வேண்டியவர். அவருக்கு எனது வாழ்த்துக்கள்!!!
நூலின் பெயர் - நினைவு நல்லது வேண்டும்
நூலின் வகை - சிறுகதை
நூலாசிரியர் - ப. விஷ்ணுவர்த்தினி
விலை - 250 ரூபாய்
வெளியீடு - ஜீவநதி வெளியீடு
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.