”எனது நீண்டகால மருத்துவ பணியில் நான் பெற்ற அனுபவங்கள் பல்லாயிரம் அவற்றின் சில துளிகளின் வெளிப்பாடாகவே இந்த கருணை நதி கருக் கொண்டது” கருணை நதி குறுநாவலின் முகவுரையில் அதன் ஆசிரியர் மிதாயா கானவி (மிதிலா) இவ்வாறு குறிப்பிடுகின்றார். ”மனித வாழ்வின் வாழ்வியல் அனுபவங்களே இலக்கியமாகிறது” அந்த வகையில் கருணை நதி மருத்துவ தாதியாக கடமையாற்றும் மிதாயாகானவியின் மருத்துவ துறைசார்ந்த அனுபவங்களை உணர்வூட்டும் காதல் கதையொன்றுடன் பேசுகிறது. ஈழத்தமிழ் மக்கள் நெருக்கடியானதும் துன்பகரமானதுமான பாதையை கடந்து வந்திருக்கிறார்கள் முள்ளி வாய்க்கால் பேரவலம் ஒரு இனத்தின் பேரழிவாக பதிவாகியிருக்கிறது. இந்த அனர்த்தங்களோடு இணைந்து பயணிக்கிறது கருணை நதி இதுவே இந் நாவலை கவனத்துக்குரியதாக்குகிறது. இலங்கையில் நிகழ்ந்த போர் அவலங்கள் பல்வேறு வகையில் பதிவு செய்யப்பட்டிருக்கினறன. அந்தவகை இலக்கிய பதிவாக வெளிவந்த கருணை நதி தமிழர் துயரை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இதைவிட போர்ச்சூழலில் நின்று மக்கள் துயர் துடைத்த மருத்ததுவ பணியாளர்களின் கருணையை மறக்க முடியாது. காதலின் ஏக்கமும் தேடலுமே கதையின் கருவென விரிந்தாலும் மருத்துவ பணியின் மனிதநேய அணுகுமுறை கருணை நதியாக கதையெங்கும் பரவுகிறது. உண்மையை எழுதுதலே சிறந்த இலக்கியமாகிறது .இங்கும் வாழ்வின் யதார்த்தமே நாவலின் வெற்றியை தீர்மானித்திருக்கிறது.
கானவி போர் நிகழ்ந்த வேளைகளில் மரணத்திற்கிடையே நின்று எவ்வாறு துணிச்சலாக பணியாற்றினாரோ அதே துணிச்சலுடன் அங்கு நடந்த அவலங்களை ஆவணப்படுத்தி உலகுக்கு வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.
”வானம் கந்தகப் புகைகளால் கிழிக்கப்பட்டு பூமியெங்கணும் இரத்தத் தீட்டுக்களான அன்றைய பொழுதுகளை மீட்டும் போது இப்போது இதயம் இயங்க மறுக்கின்றது.அங்கும் நீ அதீத நம்பிக்கையுடன் என்னருகில் கிடந்த ஒரு பையனக்கு மங்கிய வெளிச்சத்தில் சேலைன் ஏற்றிக் கொண்டிருந்தாய்.
அப்போ “அம்மா ம் மா“ என்று மெதுவாய் முணுமுணுத்தாய் புரிந்து கொண்டேன் நான். நீயும் காயப்பட்டதை “அக்கா காயமா ”என்று உன்னருகில் நின்ற உதவியாளன் உன்னை தாங்கி பிடித்தான் .பதற்றத்தடன் உன் மீது டோர்ச் வெளிச்சத்தை பாச்சினான் நீ உன் கையால் பொத்தியிருந்த நெஞ்சுப்பகுதியில் சட்டைக்கு மேலால் இரத்தம் தெரிந்தது நிலைமையை புரிந்த உன் தோழர்கள் உன்னை தூக்கிக்கொண்டு சென்றுவிட்டார்கள்.
எறிகணைகள் தொடர்ந்து அதிர்ந்து கொண்டிருந்தன மருத்துவமனை முழுவதும் சிதறத்தொடங்கியது பாரிய காயங்களுடன் கிடந்தவர்கள் கூட எழுந்தோடத் தொடங்கி விட்டார்கள்” என்று முள்ளிவாய்கால் பேரவலத்தின் உச்சக்கட்டமான மருத்துவமனைத்தாக்குதலை பதிவு செய்கிறார் கானவி.
போர் முடிந்த பின்பு கூட தமிழர் பெரும் நெருக்கடியை எதிர் கொண்டார்கள்.
அகதிகளாக முகாங்களில் அடைக்கப்பட்ட மக்கள் ஒருநரக வாழ்வை எதிர் நோக்கினார்கள் .அதில் ஒரு சம்பவத்தை பின்வருமாறு பதிவு செய்கிறார் கானவி:
”மின்சாரம் நின்று போயிருக்க வேண்டும் எங்கும் ஒரே இருளாக இருந்த்து அந்தக் கொட்டிலில் தங்கியிருந்தோர் எல்லோருமே அதற்குள் படுத்திருக்க முடியாது ஆண்கள் எல்லோருமே பொதுவாக வெளியில் தான் உறங்குவார்கள் தீடிரெனப் பெய்த மழையால் ஆளாளாளுக்கு ஓடி வந்து குடிசைக்குள் நின்றார்கள் எல்லோரும் படுக்க இடம் போதாது என்ற காரணத்தால் ஆங்காங்கே குந்திக் கொண்டார்கள்
அக்கா சிறிய போத்தல் விளக்கொன்றை பற்றவைத்தார் அதன் சுவாலை ஒழுங்காக எரியாமல் காற்றில் ஆடியது அதை அணைய விடாமல் அக்காவே தன் கைகளால் மறைத்து பிடித்துகொண்டிருந்தாள். வெளியில் காற்று வேறு பலமாக வீசியது ஒரு சுழல் காற்று அடித்தால் போதும் அந்த கொட்டிலும் கூட காற்றில் பறந்து விடும் திடீரென இருந்தவர்கள் எல்லாம் மாறிமாறி எழுந்தார்கள் வெளியில் வெள்ளநீரெல்லாம் உடைத்துக்கொண்டு குடிசைக்குள் வந்தது முக்கியமான பொருட்களை எடுத்து நனையாமல் பாதுகாப்பான உயரத்தில் வைத்தார்கள் அத்தானும் திவாவும் மண்ணை அணைத்து கொட்டிலுக்குள் வெள்ளம் வராமல் தடுத்தார்கள் எனினும் தொடர்ச்சியாக மழை கொட்டித் தள்ளியதால் வெள்ளம் அதிகரித்து களி மண் சேறு குடிசைக்குள் நிறைந்தது குழந்தைகளையும் தூக்கி தோள்களில் போட்டுக் கொண்டார்கள் நித்திரைக்குழப்பத்தில் சிறுவர்களும் அழுதார்கள் அவர்களை சாமாளிப்பதும் பெரும்பாடாகிப்போனது அன்றைய இரவு ழுழுவதும் உறக்கமில்லாது மழையுடனேயே கழிந்தது."
இவ்வாறு ஈழமக்களின் வாழ்க்கையில் இக்கட்டான துயரான மறக்கமுடியாத வாழ்வின் தருணங்களை எழுதியதன் ஊடாக கானவி இலக்கிய விமர்சகர்களின் கவனத்துக்குரியவர் ஆகிறார்.. ஈழத்தின் சிறந்த விமர்சகர்களான கே எஸ் சிவகுமாரன். மு பொன்னம்பலம் ஆகியோர் இவரது நாவலுக்கானக்கான விமர்சனங்களை எழுதி உள்ளார்கள் என்பதும் இங்கு கவனிக்கவேண்டியது.
ஓய்வு நேரம் அதிகம் கிடைக்காத மருத்துவ சேவை செய்யும் கானவி ஒருநெருக்கடியான சூழலில் இக்கதையை எழுத அரம்பித்திருகிறார் இதை அவர் பின்வருமாறு முன்னுரையில் கூறுகிறார்
”இந்த நாவலை நான் எழுதத்தொடங்கிய நிமிடங்கள் இன்றும் என் நெஞ்சில் ஈரமானவை கையில் கிடைத்த ஒரு பேனாவுடன் வெற்றுத்தாளுக்காய் ஏறியிறங்கிய தறப்பாள் கொட்டில்கள் வெறுமையே தந்தன அங்கர் பால்மா பெட்டியின் மட்டையில் முதலாது பகுதியை எழுத ஆரம்பித்தேன்”
இவ்வாறு பல நெருக்கடிக்குள் நல்லதொரு படைப்பாக கருணை நதியை தந்த கானவியை இலக்கிய நெஞ்சங்கள் மறந்துவிட முடியாது இளயவர் என்பதால் இலக்கியஉலகம் இவரிடமிருந்து இன்னும் நிறையவே எதிர்பார்க்கிறது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.