புலம்பெயர்ந்த மண்ணில் இன்று அதிக தமிழர்கள் வாழும் இடமாகக் கனடா திகழ்கின்றது. புலம் பெயர்ந்த மக்களின் தாய் மொழியைக் காப்பதில் ஒன்ராறியோ அரசாங்கம் முக்கிய இடம் வகிக்கிறது. ஒன்ராறியோ கல்விச் சபைகளில் தமிழ் மொழி கற்கும் மாணவர்களுக்கான தமிழ் மொழித் திறன் காணல் போட்டி ஒன்றை ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கம் சமீபத்தில் நடத்தியிருந்தது. அவர்கள் நடத்திய தமிழ் மொழித்திறன் காணல் போட்டியில் பங்குபற்றிப் பரிசு பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா சென்ற ஞாயிற்றுக் கிழமை 17-06-2012 ஸ்காபரோ பெலாமி வீதியில் அமைந்துள்ள பெரியசிவன் ஆலயக் கலை அரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ் மொழித் திறன் காணல் போட்டியில் இவ்வருடம் கனிஷ்ட பாலர் பிரிவு தொடக்கம் தரம் 8 வரையிலான ஒன்ராறியோ கல்விச் சபைகளில் கல்வி கற்கும் சுமார் 1800 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். சென்ற வருடத்தைவிட சுமார் 300 மாணவர்கள் மேலதிகமாகப் பங்குபற்றியிருந்தனர். சுமார் 750 மேற்பட்ட மாணவர்கள் 90 புள்ளிகளுக்குமேல் பெற்று அதிசிறப்புப் பரிசு பெற்றிருந்தனர். குறிப்பாக ரொறன்ரோ கல்விச்சபை, பீல் கல்விச்சபை, நோத்ஜோர்க் கல்விச்சபை ஆகியவற்றில் இருந்து அதிக மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். தமிழ் மொழி மீது ஆர்வம் கொண்ட பல முக்கிய பிரமுகர்களும், தமிழ் மொழி கற்பிக்கும் ஆசிரியர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் ரொறன்ரோ கல்விச்சபையிலிருந்தும், ஏனைய கல்விச் சபைகளில் இருந்தும் பல பிரதிநிதிகள் கலந்து கொண்டு இவ் விழாவைச் சிறப்பித்திருந்தனர். ஆர்வத்தோடு தமிழ் மொழித் திறன் காணல் போட்டிகளில் பங்குபற்றிப் பரிசு பெற்ற மாணவர்கள் மேடையில் வைத்துப் பரிசு வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். இதைவிட இடையிடையே ஆசிரியர், மாணவர் கலந்து கொண்ட கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.
மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்ச்சியைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து, கனடா தேசியப் பண், அமைதி வணக்கம் ஆகியன இடம் பெற்றன. குமுதினி ஸ்ரீஸ்கந்தராஜாவின் மாணவர்கள் பங்கு பற்றிய வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து சங்கத்தின் உபதலைவர் பொன்னையா விவேகானந்தனின் வரவேற்புரை இடம் பெற்றது. அடுத்து சுசீலா ராஜகுலேந்திரனின் மாணவர்கள் பங்கு பற்றிய அபிநயப்பாடலும், தொடர்ந்து உசா லெட்சுமணனின் மாணவர்களின் அபிநயப்பாடலும் இடம் பெற்றன.
அடுத்து சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ரொறன்ரோ கல்விச் சபையைச் சேர்ந்த ஜொலி யங், சரோ ஜெகநாதன் ஆகியோரின் சிறப்புரைகள் இடம் பெற்றன. எங்கள் தாய்மொழியை மட்டுமல்ல எமது பண்பாடு கலாச்சாரத்தையும் புலம் பெயர்ந்த மண்ணில் தொடர்ந்தும் பேணிக்காப்பதையிட்டுத் தாங்கள் பெருமைப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டனர். அதைத் தொடர்ந்து ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத்தலைவர் எழுத்தாளர் குரு அரவிந்தனின் உரை இடம் பெற்றது. அவரது தலைமை உரையில் இனிவரும் காலங்களில் ஆசிரியர், மாணவர், பெற்றோர்கள் கலந்து கொள்ளும் ஒன்றுகூடலுடலான விளையாட்டு போட்டிகள் நடத்த சங்கம் ஆலோசித்திருப்பதாகவும், தமிழ் பெற்றோர்களின் நேரடி ஆலோசனையைப் பெறுவதற்கான பெற்றோர் சங்கம் ஒன்றை அமைத்துச் செயற்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பத்மராணி பஞ்சாட்சரத்தின் மாணவர்களின் பல்லிசை நடனம் இடம் பெற்றது. அடுத்து பாக்கியா விஜயராஜாவின் ஆக்கத்தில் அவரது மாணவர்கள் பங்கேற்ற வழிகாட்டி என்ற நாடகம் இடம் பெற்றது. அடுத்து நகுலா ரெஜினோல்ட்டின் மாணவர்கள் பங்குபற்றிய மாணவன் நாடகம் இடம் பெற்றது. தொடர்ந்து சங்கத்தின் செயலாளர் கௌசல்யா தர்மலிங்கத்தின் நன்றியுரையுடன் பரிசளிப்பு விழா இனிதே முடிவுற்றது.
மேலும் சில நிகழ்வுக் காட்சிகள் ....
தகவல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.