நீர்வை பொன்னையன் ஒரு முற்போக்காளர், தளராத கொள்கைப் பிடிப்பாளர். மூத்த எழுத்தாளர். பல தசாப்தங்களாக எழுத்துத் துறையில் தொடர்ந்து ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருப்பவர். இப்பொழுது அவர் தனது வாழ்க்கைப் பயணத்தின் அத்தியாயங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறார். ஆம் 'நினைவலைகள்' என்பது அவரது அரசியல், கலை இலக்கிய. சமூகப் பயணத்தின் பதிவாக வெளிவர இருக்கிறது. அப்படியானால் இது அவரது சுயசரிதை எனலாமா? இல்லை என்கிறார்.. " 'நினைவலைகள்' என்ற இந்த நூல் என் சுயசரிதையல்ல. நான் அரசியல்வாதியல்ல. இலக்கியவாதியுமல்ல. அரசியல் இலக்கியச் செயற்பாட்டாளன் நான். சிலர் எழுத்துத்துறையிலிருந்து அரசியலுக்குள் நுழைகிறார்கள். நான் அரசியல் களத்திலிருந்து எழுத்துத்துறைக்குள் பிரவேசித்தவன்......... எனது அரசியல், கலை இலக்கியச் செயற்பாடுகளில் என் நினைவுத்தடத்தில் உள்ளவற்றில் சிலவற்றை இந்த நூலில் தந்துள்ளேன்" என்கிறார். நிச்சயம் படிப்பதற்கு சுவார்ஸத்துடன், நிறையத் தகவல்களையும் உள்ளதாக இருக்கும் என நம்பலாம். ஏனெனில் யாழ்குடாநாட்டின் நீர்வேலியிலுள்ள ஒலிவைக் குறிச்சி எனப்படும், அக்காலத்தில் பின் தங்கியிருந்த பகுதியில் பிறந்தவர். அங்கிருந்து மட்டக்களப்பு, கல்கத்தா, மீண்டும் யாழ்ப்பாணம் கொழும்பு எனப் பல பிரதேசங்களில் வாழ்ந்ததால் கிடைத்த அனுபவங்களால் இந் நூல் சுவாரசியமானதாக இருக்கப் போதில்லை.
'பழமையும் மேட்டுக்குடிப் பிரபுத்துவமும் மேலோங்கியிருந்த' பகுதியிருந்து வந்த ஒருவர் சாதிய ஒடுக்குமுறை, சுரண்டலையும் ஒழித்து சமதர்ம சமூதாயத்தை நோக்கிய சமூக மாற்றத்தை ஏற்படுத்த வெகுஜனப் போராட்டம் ஒன்றினால்தான் முடியும் என முடிவெடுத்து இயங்கிய கதை எனப்தால் முக்கியத்துவம் பெறுகிறது.
குழந்தைப் பருவத்தில் தீட்சை பெற்று திருநீறணிந்து, தேவாரமும் திருவெம்பாவையும் பாடித் திரிந்தவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, அதன் முழுநேர ஊழியனாக பணியாற்றி, கட்சி நடத்திய தொழிலாளர் விவசாயிகள் போராட்டங்களில் நேரடியாகப் பங்கு பற்றியவராகிறார். இந்த அனுபவங்களை இலக்கியப் படைப்புகளாக புனைய ஆரம்பித்தார்.
நினைவலைகள் என்ற அந்த நூலின் வெளியீட்டு விழா அல்ல, இது. அதன் ஆய்வரங்கு ஆகும். எதிர்வரும் ஞாயிறு (24.06.2012) மாலை 4.30மணிக்கு நடைபெற இருக்கிறது. கொழும்பு வெள்ளவத்தையில், 58 தர்மராம வீதியிலுள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிலைய மண்டபத்தில் நடைபெறும்.
ஆய்வரங்கிற்கு தலைமை தாங்குபவர் செல்வி திருச்சந்திரன் ஆகும்.
தலைமை - செல்வி திருச்சந்திரன்
ஆய்வாளர்கள் -
ந.இரவீந்திரன்
எம்.கே.முருகானந்தன்
வீ.தனபாலசிங்கம்
எம்.ஆதவளொரி
சபா. ஜெயராசா
கலந்துரையாடலுடன் நிகழ்வு நிறைவுபெறும்.
இலங்கைக் கம்யூனிஸ் கட்சி, அதன் வெளியீடுகள், முற்போக்கு எழுத்தாளர் சங்கம், பிளவுபட்ட கட்சியில் புரட்சிகர முன்னணி அணி, 83 வன்முறையைத் தொடர்ந்து யாழ்மண்ணில் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக சத்துணவுத் திட்டச் செயற்பாடுகள், இடப்பெயர்வின் பி்ன் மீண்டும் கொழும்பில் விபவி மாற்றுக் கலாசார மையத்தின் ஊடாக செயற்பாடுகள், இப்பொழுது இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றச் செயற்பாடுகள் என ஓய்வின்றி அவரது பணிகள் தொடர்கின்றன.
அவற்றில் அவர் பெற்ற அனுபவக் கீற்றுகள் இந் நுலில் இடம்பெறுவதால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்பலாம்.
நிகழ்வை ஒழுங்கு செய்யும் இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தினர் அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்கள்.
தகவல்:- எம்.கே.முருகானந்தன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
http://hainallama.blogspot.com/
http://suvaithacinema.blogspot.com/
http://msvoldpupilsforum.blogspot.com/
http://www.geotamil.com/pathivukal/health.html