ஆறுமுகநாவலர் முதல் மனுஸ்ய புத்திரன் வரை எல்லா எழுத்தாளர்களையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் - குறமகள் மேற்கண்டவாறு ரொரண்ரோவில் நடைபெற்ற 27வது பெண்கள் சந்திப்பில் குறமகள் தெரிவித்திருந்தார். மனுஸ்யபுத்திரன் குஸ்பு விவாகரத்தில் பெண்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறியதற்கு மேலும் இச் சந்திப்பில் கண்டனம் தெரிவித்திருந்தார். கைலாசபதி போன்ற விமர்சக மேதைகள் புகழ்ந்த ஆறுமுக நாவலரையே குறமகள் விமர்சித்துள்ளார். “கிறிஸ்தவ அம்மையார்கள் வீடு வீடாகச் சென்று பெண்களோடு உறவாடுவதைக் கண்ட ஆறுமுகநாவலர்கள் அவர்களும், முன்பு இருந்ததை விட மோசமான நிலையில் பெண்களுக்கான விதிமுறைகளைக் கவனத்திற்கு எடுத்தார். குடும்பத்துக்கான பொறுப்புக்களை மாத்திரமல்ல அவளது உணர்வுகளை சிதறடிக்கும் வகையில் கட்டுப்பாடுகளையும் எழுதிவைத்தார். சாதியத்தைவிடக் கடும்போக்காகப் பெண்களை ஒடுக்கும் வகைகளை எடுத்தியம்பினார்.” என தனது யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி – ஓர் ஆய்வு என்ற நூலில் தெரிவித்துள்ளார். பெண்கள் மறுவாழ்விற்காக தனது எழுத்துக்களை சமர்ப்பித்த குறமகளுக்கு இவ் வருடம் 'அகேனம் (ஃ) விருது” வழங்கப்பட்டுள்ளதாக சுயாதீன கலை திரைப்பட கழகத்தின் நிறைவேற்று இயக்குனர் திரு. த. சிவசதாசன் அறிவித்துள்ளார்.
“குறமகள், பெண்ணியம், மனிதநேயத்திற்குப் புதிய பொலிவும் அர்த்தமும் ஆழமும் பாய்ச்சுதல் வேண்டும். இதனைத் துல்லியமாக உணர்ந்தவர்” என அந்தனி ஜீவா தெரிவித்துள்ளார் (புதிய பார்வை – தை 16-31 2008) “பயந்தாங்கொள்ளிகளாக வீட்டில் முடங்கிக் கல்வியறிவற்று உலக அனுபவமின்றி வாழந்த இவர்கள் ஒரு நூற்றாண்டு காலத்துள் எப்படி மாறினார்கள், இவர்களின் விலங்கொடுத்தவர்கள் யார்?, கல்வியறிவ+ட்டியவர்கள் யார்?, தன்னம்பிக்கையை வளர்த்தவர்கள் யார்? இவ் வினாக்களுக்கு விடைதேடும் முயற்சியாக யுhழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி – ஓர் ஆய்வு என்ற தனது நூலின் முன்னுரையில் குறமகள் குறிப்பிடுகின்றார். இந்த நூல் ஒன்றே இவரது பெண்கள் சமத்துவத்துக்கான ஒரு சிறந்த பங்களிப்பாக குறிப்பிடலாம். இந் நூலில் தரவுகளின் பிண்ணனி கொடுக்கப்பட்டிருப்பின் தமிழில் பெண்கள் பற்றி வெளிவந்த ஒரு சிறந்த நூல் வரிசையில் இடம் பெற்றிருக்கும். இலங்கை சட்டசபையின் முதலாவது உறுப்பினர் குமாரசாமியின் மனைவிகூட எழுத்தறிவற்றவர் என்ற அதிர்ச்சியான தகவல்களும் இந் நூலில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவற்றை விட பெண்கள் ஒடுக்கு முறை பற்றிய பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். ஏழு சிறுகதை தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.
“இலங்கையில் வெளிவந்த தமிழ்மகள் பெண்கள் சஞ்சிகையின் ஆசிரியரான மங்கம்மாள் என்பவரைப் பற்றி ஆய்வுக் கட்டுரையை குறமகள் எழுதியுள்ளார். இலங்கையில் பெண்கள் அமைப்புக்கள் எதுவும் இச் சஞ்சிகையைப் பற்றியோ அதன் ஆசிரியரைப் பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை. இவ் ஆய்வு பெண்களின் ஆரம்ப நிலை பற்றி பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளது” என கலாநிதி பார்வதி கந்தசாமி தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறையை பிறப்பிடமாகக் கொண்ட இவரது இயற் பெயர் வள்ளிநாயகி இராமலிங்கம். பெண்கள் பத்தாம் வகுப்புடன் திருமணம் செய்த காலத்தில் இவர் இந்தியா சென்று பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவியாக “நாடகக் கல்வி” பயின்றார். பெண்கள் பாடசாலைக்கு வெளியே நாடகத்தில் நடிக்க அஞ்சும் அக் காலகட்டத்தில் நாடகக் கல்வியை தேர்வு செய்தமை மிக துணிச்சலான செயலாகும். இவர் யுவதியாக இருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் கார் ஓடிய சில பெண்களில் குறமகளும் ஒருவர். கோப்பாய் ஆசிரிய பயிற்சி கல்லூரியில் விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
இவர் எழுத்துலகிற்கு வந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. கடந்த பல வருடங்களாக கனடாவில் வாழ்ந்து வருகின்றார். என்பது வயதை நெருங்கும் குறமகளை பல இலக்கய கூட்டங்களில் ஒக்சிசன் சிலிண்டருடன் காணக் கூடியாத இருக்கும். பொதுவாக இந் நிலையை அடையும் எவரும் வீட்டை விட்டே வெளியே வருவதில்லை. மிகவும் மனத்துணிச்சலுடன் எவரது உதவியுமின்றி இவர் உலா வருகின்றார். இன்றும் பல பத்திரிகைகளில் எழுதி வருகின்றார்.
இவரது பெண்ணிய அணுகு முறை இன்றைய பெண்ணிய அணுகு முறையில் இருந்து வித்தியாசப்படுகின்றது. குடும்பம் என்ற அமைப்பு உடைபடக் கூடாது என்ற கவனத்தை இவரது எழுத்துக்களில் காணலாம். எங்கல்ஸ் குறிப்பிடவது போல் “ஒடுக்குமுறையற்ற ஆணாதிக்க சிந்தனையில்லாத குடும்ப முறை” தான் இவரது தேர்வு எனலாம். குடும்ப அமைப்பு பெண் ஒடுக்குமுறைக்கு ஒரு மிக முக்கிய பிரதான காரணி.
தனது கருத்துத் தளத்தை விரிபுபடுத்தும் நோக்குடன் தேடல் அதிகமிக்கவர். மனுஸ்யபுத்திரனுக்கும், ஜெயமோகன்களுக்குமிடையில் ஒளிந்துள்ள பெண் ஒடுக்குமுறைச் சிந்தனையை வெளிப்படையாகவே விமர்ச்சிக்கும் துணிச்சலும் இவருக்குண்டு.
உமது கொடியை பறக்க விட
எம் எலும்புகள்
முறிக்கப்பட்டன
என்ற அனாரின் கவிதையைப் போல் இவரது விமர்சனங்கள் உள்ளன. அதே அனாரின் வரிகளில் வெளிப்படும்
வாழ்வை
உரிமையை
எந்த விலைக்கும்
என்னால் விற்க முடியாது
என்ற அறை கூவலும் இவரது எழுத்துக்களில் உள்ளன.
அகேனம் (ஃ) விருதைப் பெறும் குறமகளுக்கு எமது வாழ்த்துக்கள். கடந்த காலங்களில் பி.விக்கினேஸ்வரன், பாலேந்திரா, டொமினிக் ஜீவா, திருமதி வசந்தா டானியல் போன்றோர் இவ் விருதைப் பெற்றுள்ளனர்.
தகவல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.