புலம்பெயர் எழுத்தாளர்களில் தனது படைப்புக்களினால் உலகளாவிய தமிழ் வாசகர்களின் கவனத்தை ஈர்த்த மிகச்சிலரில் குறிப்பிடக்கூடிய ஒருவர், கனடாவை வாழ்விடமாகக்கொண்ட எழுத்தாளர் குரு அரவிந்தன். சென்ற ஆண்டில் இந்தியாவில் கலைமகள் சஞ்சிகை நடாத்திய குறுநாவல் போட்டியில் “தாயுமானவர்” என்ற இவரது குறுநாவல் விருது பெற்றதின் தொடர்ச்சியாக, கனடாவில் புகழ்பெற்ற “தமிழர் தகவல்” விருது அண்மையில் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எழுத்தாற்றலுக்காக இந்த விருதைப்பெற்ற மிகச்சிலரில் குரு அரவிந்தனும் இடம்பெறுவது பொருத்தமானதே. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த பின்னரே எழுத்துப்பணியில் புயலென உருவாகிய இவரது படைப்புகள் உலகின் பலபாகங்களில் வெளிவரும் சஞ்சிகைகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்து பாராட்டுக்களையும், பரிசுகளையும் பெற்றுள்ளன. தமிழகத்தில் ஏராளமான வாசகர்களைக்கொண்ட பிரபல சஞ்சிகைளில் அண்மைக்காலத்தில் இவரது படைப்புக்கள் பல வெளிவந்துள்ளன. “ஆனந்தவிகடன்” சஞ்சிகை வெளியிடும் தீபாவளி மலர்களுக்காக இவரது சிறுகதைகளை கோரிப்பெற்று பிரசுரிப்பது பெருமை தரும் சந்தர்ப்பங்களாகும். குறிப்பாக இவர் எழுதிய இருபத்துநான்கு பக்கக் கதையான “நீர் மூழ்கி நீரில் மூழ்கி” ஆனந்தவிகடனின் ஒரே இதழில் முதன்முறையாக ஐந்து புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்களுடன் வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களின் பாராட்டினைப் பெற்றது.
தமிழகத்தின் சிறந்த இலக்கியச் சஞ்சிகைகளில் ஒன்றாகக் கருதப்படும் “யுகமாயினி” இதழ் 2009ம்ஆண்டில் நடத்திய குறுநாவல் போட்டியில் இவர் எழுதிய “அம்மாவின் பிள்ளைகள்” சிறந்த குறுநாவலுக்கான பரிசைப்பெற்றது.
இவரது படைப்புக்கள் பல ஏனைய தென்னிந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு பிரசுரமாகியுள்ளன. தமிழகத்தைத்தவிர, குருஅரவிந்தனின் கதைகள், கனடா, பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி போன்ற நாடுகளில் வெளியாகும் சஞ்சிகைகளிலும், பத்திரிகைகளிலும் , இலங்கையில் தினக்குரல், வீரகேசரி நாளேடுகளிலும் வெளிவந்துள்ளன. பதிவுகள், திண்ணை, நெய்தல், வல்லினம் உட்பட பல இணையத்தளங்களில் இவரது படைப்புகள் அடிக்கடி இடம் பெறுவதுண்டு.
“மிலேனியம்” ஆண்டையொட்டி வீரகேசரி பத்திரிகை நடாத்திய போட்டியில் இவரது கதை சிறந்த கதையாக தெரிந்தெடுக்கப்பட்டு அவ்வாண்டின் சிறந்த சிறுகதையென அறிவிக்கப்பட்டது. கனடிய தமிழ் வானொலி நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசும், கனடா உதயன் பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் தங்கப்பதக்கமும் இவருக்குக் கிடைத்தது.
இவர் சிறுகதைகளோடு தன் எழுத்துப்பணியை மட்டுப்படுத்திக் கொள்ளாமல் வானொலி நாடகங்கள், மேடைநாடகங்கள், திரைப்படங்கள், சிறுவர்கல்வி போன்ற பரந்துபட்ட துறைகளிலும் நாட்டம் கொண்டு சாதனை புரிந்து வருகிறார். தமிழ்த்துறைசார் இந்த சாதனைகளுக்காக கனடாவின் “தமிழர்தகவல்” இவருக்கு தங்கப்பதக்கத்துடனான இந்த சிறப்புவிருதை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.