மூத்த எழுத்தாளர் - நண்பர் மா.பா.சி (மா.பாலசிங்கம்) கடந்த 31 - ம் திகதி (31 - 10 - 2020) சனிக்கிழமை இரவு கொழும்பில் காலமான செய்தி கவலையளிக்கிறது. அவருக்கு வயது 81. முற்போக்குச் சிந்தனையாளரான மா. பா. சி. என அறியப்படும் மா. பாலசிங்கம் யாழ்ப்பாண நகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொழும்பில் நீண்ட காலமாக வசித்து வந்தார். எழுதுவினைஞராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றவர். சிறுகதை - குறுநாவல் - நாவல் - கட்டுரைகள் எனப் படைப்புகளை வரவாக்கியுள்ளார். இவரது முதலாவது சிறுகதைத் தொகுதியான 'இப்படியும் ஒருவன்' மல்லிகைப் பந்தல் வெளியீடாக 2002 -ல் வெளிவந்தது. அடுத்த சிறுகதைத் தொகுதியான 'எதிர்க்காற்று' 2008 -ல் வெளியாகியது.
கொழும்பில் நடைபெறும் இலக்கியக் கூட்டங்களுக்குத் தவறாது சமூகமளித்து அந்நிகழ்வுகளைத் தொகுத்து எழுதித் ' தினக்குரல்' பத்திரிகைக்கு அனுப்பிவைப்பார். பத்திரிகையில் அத்தொகுப்பு முழுப்பக்கத்தில் அழகாகப் பிரசுரமாகும். பத்திரிகை வாசகர்கள் - இலக்கிய ஆர்வலர்கள் எங்கிருப்பினும் அத்தொகுப்பினை வாசிப்பதின்மூலம் கூட்ட நிகழ்வினை முழுமையாக அறிந்து திருப்திகொள்வர். மா. பா. சி.யின் இப்பணி எழுத்துலகில் - வாசகர் மத்தியில் மிகுந்த பாராட்டைப் பெற்றது.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற எனது நூல்களின் வெளியீட்டு நிகழ்வுகள் (இலக்கிய மாலை) யாவற்றையும் அவர் தொகுத்துத் தினக்குரலில் வெளிவரச் செய்தமை மனதில் நிற்கிறது.
அவர் எழுதிய தொகுப்புகள் பலவும் நூலாக்கப்பட்டு "மா. பா. சி. கேட்டவை - தினக்குரல் பதிவுகள்'' என்ற பெயரில் 2016 -ல் (488 + 26 பக்கங்கள்) வெளியிடப்பட்டது. பழகுவதற்கு இனிய நண்பர் மா. பா. சி. எங்கள் நினைவுகளில் என்றும் நிலைத்திருப்பார்..!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.