ஒரு நர்த்தகி என்பவள் தனது உடலைப் பயிற்சிகளுக்கு உட்படுத்தி குறிப்பிட்ட கலையில் அழகியல் அம்சம் நிறைந்த உடலாக மாற்றியமைக்கின்றாள். அவளது உடல் அதிகளவு அழகிய அம்சமுடைய சக்தியின் இருப்பிடமாக விளங்குகிறது. அந்த வகையில் பரணீதரி தில்லைநாதன் தன்னைப் பல்வேறு பயிற்சிகளுக்கு உட்படுத்தி விடாமுயற்சியுடன் ஒரு தாயாக நின்று அரங்கேற்றம் செய்வது என்பது மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒரு விடயமாகும்.
கொழும்பில் ஸ்ரீமதி சிவானந்தி ஹரிகாஷனிடம் பதினான்கு வருடங்களுக்கு மேலாக நாட்டியத்துறையில் கற்றுத் தேறியவர் பரணீதரி. வட இலங்கை சங்கீத சபையில் தனது 5ஆவது தராதரத்தை வெற்றிகரமாக செய்து முடித்தது மாத்திரமன்றி, இலங்கை க.பொ.த. சாதாரண, உயர்தரங்களிலும் சித்தி எய்தியிருப்பது அவரது நாட்டியத்தின் ஆர்வத்தைப் புலப்படுத்தி நிற்கின்து. இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியில் இவரது நாட்டிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிய பெருமைக்குரிய பரணீதரி லண்டனிலும் பல மேடைகளில் தனது நாட்டியத் திறமையை வெளிப்படுத்தி வந்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் லண்டன் பாரதிய வித்யா பவனில் சென்னை கலாஷேத்ரா ஆசிரியர்கள் இணைந்து நடாத்திய உயிர் - உடல் என்ற நாட்டிய நிகழ்ச்சியில்கூட அவர்களுடன் இணைந்து தனது நாட்டியத் திறமையை வெளிப்படுத்தியிருந்தமை மிகச் சிறப்பாகும்.
இவ்வண்ணம் நாட்டியத்தை விஸ்தரித்து பரவசம் அடையும் பரணீதரி 2013 ஆண்டு தொடக்கம் நாட்டியத்தாரகை ஸ்ரீமதி ருக்மணிதேவி அருண்டேலால் வளர்தெடு:க்கப்பட்ட பிரபல நாட்டியத் தாரகை ஸ்ரீமதி ஸ்ரெலா உப்பால் சுப்பையாவை குருவாகக் கொண்டு நாட்டியத்துறையில் மீண்டும் தன்னை வளர்த்;தெடுத்துக் கொண்டார். கடந்த செப்டம்பர் மாதம் லண்டன் பாரதிய வித்ய பவனில் தனது அரங்கேற்றத்தை தனது துணைவர் திரு தில்லைநானின் மிகுந்த ஒத்துழைப்போடு மிகச் சிறப்பாக நடத்தினார் என்பது அப10ர்வமாக நோக்க வேண்டிய ஒன்றாகும்.
இனிமை, லயம். பொருள் உணர்ச்சி என்பன நடனத்தின் உன்னத அம்சங்களாகத் திகழ்வன. நடனக் கலைஞரின் தொண்டையில் பாட்டு இருக்க வேண்டும். கைகளின் மூலம் ஒரு பொருளையோ, தெளிவான ஒரு கருத்தையோ அபிநயம் பிடித்துக் காட்ட வேண்டும். தாளக் கதியைக் கால்களின் மூலம் வெளிப்படுத்த வேண்டும். முகத்தில் உணர்ச்சிகளைச் சிறப்பாக வெளிப்படுத்தும் பாகங்களை கண்களாலும், புருவங்களாலும் உணர்ச்சிகளைச் சித்தரித்துக் காட்ட வேண்டும் என்பது நடன மரபாக அறிந்துள்ளோம். அந்த வகையில் நாட்டியத் தாரகை பரணீதரியின் துல்லியமான நடனத்திற்கு பிசிறற்ர கணீரென்ற குரலால் அருமையான பாடலை வழங்கிய சென்னை கே.செய்சங்கரின் பாடலும், கே.பி.ராகேஷின் நட்டுவாங்கமும் உயிர் கொடுத்தன என்றுதான் கூறவேண்டும். ஒன்பது பாரம்பரியங்களைக் கொண்ட மிருதங்க மேதை காரைக்குடி கே.கிருஷ்ணமூர்த்தியின் மிருதங்க வாத்தியத்தின் திறமையோ அபாரமாகத் தெரிந்தது. பரணீயின் பாதங்களோடு சேர்ந்து பின்னிப்பிணைந்து பரவசத்தில் ஆழ்த்தியது என்றே கூற வேண்டும். கலைக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பிரபல சிதம்பரநாதன் ஜலதரனின் வயலின் இசை, டாக்டர் அபிராம் சகாதேவனின் கெஞ்சிரா வாசிப்பு, வேணுகானமணி பிச்சையப்பா ஞானவரதனின் புல்லாங்குழல் வாசிப்பு மிக தாள லயங்களோடு இணைந்து பரணீயின் நாட்டியம் அதற்கு ஏற்றாப்போல் மக்களை அழகியல் லயிப்பில் ஆழ்த்திவிட்டிருந்தது என்பதில் ஐயமில்லை.
நடராஜ அஞ்சலி, அலாரிப்பு. ஜதீஸ்வரம் போன்ற சில உருப்படிகளை ஆரம்பத்தில் அம்மா பரணீயுடன் இணைந்து வழங்கிய அவருடை புதல்விகளான அபிஷா தில்லைநாதன், ஹரினி தில்லைநாதன் ஆகியோர் பாராட்டப்பட வேண்டியவர்கள். ரத்தினம் பவுண்டேசன் டாக்டர் நித்தியானந்தன் அவர்கள் இவர்கள் அனைவரையும் மிகவும் பாராட்டி விழாவின் இறுதியில் பேசியிருந்தமை சிறப்பான விடயம்.
பதம், தில்லானா போன்ற உருப்படிகள் சற்று வித்தியாசமான வகையில் ஸ்ரீமதி ஸ்ரெலா உப்பால் சுப்பையாவால் வடிவமைக்கப்பட்டிருந்தமை பாராட்டுக்குரிய விடயம். நடனக் கலை ரசிகர்களால் மட்டும் மண்டபம் நிறைந்;து, பரணீதரியை ரசித்து கரகோசித்து அலங்கரித்திருந்தமையை விசேடமாக இவ்வரங்கேற்றத்தில் அவதானிக்க முடிந்தது.
17.10.2019.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.