இன்று ஸ்கார்பரோவில் அமைந்துள்ள 'ஹீரோ பார்ட்டி ஹா'லில் அண்மையில் இலங்கையில் நிகழ்ந்த கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஹொட்டல்கள் ஆகியவற்றில் தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களில் பலியான, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டமும், கலந்துரையாடலும் நடைபெற்றன. தற்போதுள்ள சூழலில் மிகவும் கட்டாயமாக நடத்த வேண்டிய இந்நிகழ்வினைச் சிறப்பாகக் குறுகிய நேரத்தில் ஏற்பாடு செய்ததற்காகக் 'சமாதானத்திற்கான கனடியர்கள் அமைப்பு' பாராட்டுக்குரியது. குறிப்பாக அவ்வமைப்பினைச் சேர்ந்த ரட்ணம் கணேஷ், நேசன் & டெரென்ஸ் அந்தோனிப்பிள்ளை , சபேசன், சத்தியசீலன் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.
நிகழ்வில் கனடியக் கலை, இலக்கிய, சமூக மற்றும் அரசியல் வெளிகளில் பங்கு பற்றும் பலரைக் காண முடிந்தது. குறிப்பாக நேசன் , பாலா (கரவெட்டி), எல்லாளன், அலெக்ஸ் வர்மா, கிருபா, திலீபன், மெலிஞ்சி முத்தன், கலாநிதி சுல்ஃபிகா, பாலசுப்பிரமணியம் (கரவெட்டி), கற்சுறா, ஜெபா கற்சுறா, எஸ்.கே.விக்னேஸ்வரன், அவரது மகள் அரசி விக்னேஸ்வரன் , 'அரங்காடல்' செல்வன் , நிரூபா ஆயிலியம், சிவா கந்தையா (டெலோ),பாக்கியம் முருகேசு எனப் பலரைக் காண முடிந்தது.
நிகழ்வு அண்மையில் இலங்கையில் குண்டுத்தாக்குதல்களில் பலியாகிய மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்துவதுடன் ஆரம்பமாகியது. 'சமாதானத்திற்கான கனடியர்கள் அமைப்'பினைச் சேர்ந்த ரட்ணம் கனேஷின் ஒருங்கிணைப்பில் ஆரம்பமாகியது. நிகழ்வினை ஆரம்பித்து வைத்து அவராற்றிய உரையில் 'சமாதானத்திற்கான கனடியர்கள் அமைப்பு' நடைபெற்ற தாக்குதல்கள் பல்லின மக்களுக்கிடையிலான இணக்கத்துக்கு அபாயத்தை ஏற்படுத்தியதுடன் இலங்கையின் பொருளாதாரத்துக்கும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது என்று எடுத்துரைத்ததுடன் அரசு மேலும் எதிர்காலத்தில் இது போன்ற தாக்குதல்கள் நிகழாதவாறு நடவடிக்கைகளை எடுத்து மக்களைப் பாதுகாக்க வேண்டுமெனவும் வேண்டிக்கொண்டார். இதற்கு மக்களாகிய நாமனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் வேண்டிக்கொண்டார்.
அவரைத்தொடர்ந்து கலாநிதி ந.ரவீந்திரன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரை இலங்கையின் கடந்த கால மற்றும் தற்கால அரசியல் பற்றிய தெளிவான உரையாக அமைந்திருந்தது. இலங்கையில் மார்க்சிசக் கட்சிகளின் செயற்பாடுகள், தேசியப் பிரச்சினை , சோவியத் உடைவுக்குப்பின்னர் பண்பாட்டுத்தளத்தில் முன்னெடுக்கப்படும் சமூக, அரசியற் செயற்பாடுகள், இலங்கையில் நிலவிய சாதியை, இன, மத, மொழி மற்றும் வர்க்கத்தை மையமாக வைத்தியங்கிய அடையாள அரசியல், பயங்கரவாதத்தை ஆரம்பத்திலிருந்தே ஆதரித்த இலங்கைத்தமிழர்கள் (இவ்விதமான நடவடிக்கைகளை அவர்களது 'பையன்க'ளே செய்திருந்தாலும் வெளியில் அவர்கள் அவற்றை அவர்களது 'பையன்கள்' செய்யவில்லை என்று கூறிக்கொண்டாலும், அவர்கள் 'பையன்க'ளின் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கண்டிக்காலம் ஆதரவானதொரு நிலைப்பாட்டினையே எடுத்திருந்தார்கள் ) இவற்றைப்பற்றியெல்லாம் தொட்டுச் சென்றது அவரதுரை. அவர் தனதுரையில் முஸ்லிம் மக்கள் தம்மினத்தவர் செய்த தற்கொலைக்குண்டுத்தாக்குதல்களைக் கண்டித்ததன் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளை ஆரம்பத்திலேயே கண்டித்திருக்கின்றார்கள் என்பதையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
அவரைத்தொடர்ந்து டினித்தா (டொராண்டோப்பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவன்), , இவ்திக் ('புளூரலிசம்' மூலம் முஸ்லிம் மக்களின் மேனிலைக்காக இயங்கும் 'சைலான்' அமைப்பின் ஸ்தாபகர்) , மற்றும் 'டெரன்ஸ் அந்தோனிப்பிள்ளை'ஆகியோர் உரையாற்றினர்.
டினித்தா தனதுரையினை ஆரம்பத்தில் சிங்களத்தில் நடாத்திவிட்டுப் பின் அதனைச் சுருக்கமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சபையோருக்கு வழங்கினார். இவர் தனதுரையில் இலங்கையானது சுனாமியிலிருந்து மீண்டுள்ளது. முப்பது வருட கால யுத்தத்திலிருந்து மீண்டுள்ளது. அதுபோல் தற்போது ஏற்பட்டுள்ள நிலையிலிருந்தும் மீண்டு வரும். மக்கள் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் & கிறிஸ்தவர்கள் என்று பிரித்துப்பார்க்காமல் அனைவரும் இலங்கையர்கள் என்று எண்ணிட வேண்டும் என்றும் கூறினார்.
அடுத்துப்பேசியவர் இவ்திக். இவர் தனதுரையில் கனடிய சமூக அமைப்பில் நிலவும் 'புளூரலிச'த்தை இலங்கை மக்களும் கடைக்கொள்ளவேண்டும் என்னும் கருத்தினை மையமாக வைத்துத் தன் உரையினை ஆற்றினார்.
அடுத்துப்பேசியவர் டெரென்ஸ் அந்தோனிப்பிள்ளை (மோகன்). அவர் தனதுரையில் ஆரம்பத்தில் அவருக்கு முன் உரையாற்றிய டினித்தாவின் உரையினைச் சிலாகித்துரையாற்றினார். பின்னரே தனதுரையினைத் தொடர்ந்தார். அவர் தனதுரையில் பல்லின , பல் சமய மக்களுக்கிடையில் நிலவும் புரிந்துணர்வு தன்னைக் கவர்வதாகக் குறிப்பிட்டார். பல் சமய மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் அதுவே நாட்டின் பிரச்சினைக்கான தீர்வு என்னும் கருத்துப்படத் தனதுரையினை ஆற்றிக்கொண்டார். மேலும் தனதுரையில் உதாரணத்துக்கு யாழ் மாவட்டத்தில் இரு தேர்தற் தொகுதிகளில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தபோதும் , அத்தொகுதிகள் இந்துக்களின் முக்கியமான ஆலயங்களை உள்ளடக்கியிருந்தபோதும் , அத்தொகுதி மக்கள் கிறிஸ்தவர்கள் இருவரைப்பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்தார்கள் என்றும் அத்தொகுதிகள் நல்லூரும், காங்கேசன்துறையென்றும் , வெற்றி பெற்ற வேட்பாளர்கள் தந்தை செல்வா மற்றும் நாகநாதன் என்றும் சுட்டிக்காட்டினார். உண்மையில் மேலும் மூன்று தொகுதிகளிலும் கிறிஸ்தவ வேட்பாளர்கள் வென்றிருக்கின்றார்கள். சூசைதாசன் ( மன்னார்) , செல்லத்தம்பு (வவுனியா) மற்றும் மார்ட்டின் (யாழ்பாணம் ) ஆகியோரே அவர்கள்.
தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் சபேசன், கலாநிதி சுல்ஃபிகா , பாலசுப்பிரமணியம் (கரவெட்டி), மகேந்திரராஜா ஆகியோர் தமது கருத்துகளை முன் வைத்தனர். சுல்ஃபிகா நடந்த தாக்குதல்களுக்காக முஸ்லிம் என்ற வகையில் தான் மன்னிப்பு கேட்பதாகக் குறிப்பிட்டதுடன், தாக்குதல்களுக்குக் காரணமான உள்நாட்டு, பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகள் பற்றி மேலும் கவனத்தைச் செலுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
நிகழ்வுக்கு எழுத்தாளர் கற்சுறா தம்பதி தமது 'ஐயோ' உணவகத்திலிருந்து சிற்றுண்டி வகைகள், கோப்பி, தெநீர் ஆகியவற்றை நிகழ்வுக்கு வழங்கியிருந்தார்கள். அவர்கள்தம் நல் உள்ளங்களுக்கு வாழ்த்துகள். கூடவே குறுகிய கால அழைப்பில் இவ்விதமானதொரு நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்த 'சமாதானத்துக்கான கனேடியர்கள்' பாராட்டுக்குரியவர்கள்.
* நிகழ்வுக்கான புகைப்பட உதவி: அலெக்ஸ் வர்மா