மீண்டும் ஒரு அக்னிபார்வை நிகழ்ச்சி குறித்து. இம்முறை நிகழ்ச்சித் தொகுப்பாளர் தோழர் நடேசன் அவர்கள் புதிய திசைகள் ஒருங்கிணைப்பாளர் தோழர் மாசில் பாலன் அவர்களை நேர்காணல் செய்கிறார். தோழர் பாலன் அவர்கள் ஒரு தீவிரமான அரசியல் செயற்பாட்டாளர். புரட்சிகர குடும்பப் பின்னணியும் பின்புலமும் கொண்ட அவர் சிறு வயது முதலே தன்னை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் பிணைத்துக் கொண்டவர். 90 களின் பின்பும் பல்வேறு மக்கள் அமைப்புக்களுடன் இணைந்து பணி புரிந்தவர். இன்று முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்கு பின்னான புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனித்த பின்பு அங்கு ஏற்பட்டுள்ள ஒரு வெற்றிடத்தை நிரப்பும் முகமாக ‘புதிய திசைகள்’ என்ற அமைப்பினை ஒருங்கிணைத்து தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் பல்வேறு விதமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருபவர். இந்நிகழ்வில் அவர் தனது அமைப்பு குறித்தும் அதனது வேலைத்திட்டங்கள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார்.
“ஈழவிடுதலைப் போராட்டம் அழிந்து போய்விடவில்லை. இல்லாமல் போய் விடவில்லை. அது பின் தங்கியுள்ளது” என்று கூறிய அவர் ‘புதிய திசைகள்’ மற்றைய அமைப்புகளிடம் இருந்து எவ்வாறு வேறுபடுகின்றன என்பதினையும் போராட்டத்தை எவ்வாறு முன்னெடுக்கின்றது என்ற விளக்கத்தையும் அளித்தார். இந்நிகழ்வில் அவர் முக்கியமாக குறிப்பிட்ட விடயங்கள் ஆவன.
•இன்று தமிழீழ விடுதலை குறித்து பேசுகின்ற எந்த ஒரு அமைப்பும் தமது அரசியல் வேலைத்திட்டங்களை முன் வைக்கவில்லை.
•போரிற்கு பிந்திய சூழலில் அனைத்து கட்டுமானங்களும் சிதைவடைந்துள்ள. சமூகங்களுக்கு இடையில் அடிப்படை அலகுகள் எதுவுமே கிடையாது. அதனை கட்டி எழுப்ப வேண்டும்.
•சாதியம், வர்க்கம் போன்ற அகமுரண்பாடுகளிற்காக எமது உரிமைகளை விற்க முடியாது.
•தலித்தியம் என்பது இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கருத்தாடல்.
•வர்க்கம், சமூகங்களின் பிணைப்புக்களின் மூலம் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும்.
மேலும் “எமது போராட்டம் என்பது ஒரு வெள்ளைக் காகிதம் அல்ல” என்று எடுத்துரைத்த அவர் எமது சமூகமானது பல களங்களைக் கண்ட பல இழப்புக்களையும் வேதனைகளையும் கண்ட ஒரு வலி மிகுந்த சமூகமாக இருக்கின்றது என்பதினையும் அதிலிருந்து அடுத்த கட்டத்தை நோக்கி போராட்டத்தை நகர்த்துவதில் உள்ள சிரமத்தினையும் விளக்கிக் கூறினார்.
முஸ்லிம் – தமிழ் முரண்பாடுகள் குறித்து அவர் பேச முற்படும்போது நிகழ்ச்சியை நெறிப்படுத்தியவர் அதனை இடையிலேயே மறித்து வேறு திசைக்கு மாற்றியது கொஞ்சம் ஏமாற்றத்தை அளித்தது. அத்துடன் அவர் பஞ்சமர் என்ற சாதியக் கட்டுமானம் இப்போது இல்லை என்று கூறியது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு கருத்தாகவே எமக்குப் படுகின்றது.
உண்மையில் ஒரு காத்திரமான உரையாடல். மக்கள் போராட்டத்தை கையில் எடுத்துக்கொண்ட ஒரு அமைப்பின் ஒருங்கிணைப்பாளரின் பண்பட்ட பதில்கள். பல சிக்கல் நிறைந்த பிரச்சினைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் கேள்விகளுக்கும் தீர்வுக்களைக் காண அல்லது விடைகளை ஆராய முற்பட்டவையாக அறிவார்த்தமான உரையாடலாக இது அமைந்திருந்தது.
“நீங்கள் தொடர விரும்புவது விடுதலைப் போராட்டைத்தையா? அமைப்பையா??” என்று நிகழ்வில் கேட்கப்பட்ட கேள்வியே மாற்றி அமைக்கப்பட்டு ஐபிசி இணைய தளத்தில் “நீங்கள் தொடர விரும்புவது விடுதலைப் புலிகளின் போராட்டத்தையா?? அல்லது அமைப்பையா??” என இந்நிகழ்வின் தலைப்பாக இட்டிருப்பது ஐபிசியினரின் பொய்மையையும் பொறுப்பற்ற தன்மையையுமே எடுத்துக் காட்டுகின்றது. பொய்மை என்பது ஊடக அறத்திற்கு முற்றிலும் நேர்மாறானது. எதிர்காலத்தில் அதனை அவர்கள் கருத்தில் எடுக்க வேண்டும்.
(உரையாடல்கள் தொடரும்)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.